மரபு மருத்துவம்: 16. பீட்ஸா, பர்கருக்கு மாற்றாகும் ‘செட் வகை’ உணவுகள்

 


ந்நிய மோகத்தால் இடைச்செருகல்களாக நுழைந்து, இன்றைக்கு நம் உணவுப் பட்டியலில் நிரந்தர இடம்பிடிக்க முயற்சிக்கும் பீட்ஸா, பர்கருக்கு மாற்று நம்மூரிலேயே இருக்கிறது.

இந்தக் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்கள், சேலம் பக்கம் சென்றால் புதிய வகை உணவொன்றை ருசிக்கலாம். சேலம் மாநகரம் முழுவதும் ‘செட் வகைதின்பண்டங்கள் கிடைக்கின்றன. சேலத்துக்கு மாம்பழம், இரும்பாலை, ஏற்காடு, மேட்டூர் அணை எனப் பல பெருமைகள் உண்டு. இந்தப் பட்டியலில் அதிகம் அறியப்படாத, உடலுக்குக் கேடு விளைவிக்காத ‘செட் வகை’ உணவும் அடக்கம்.

‘செட் வகை’ உணவு

மாலை வேலையில் சேலம் மாநகரின் பல இடங்களில் தட்டுவடை (நம்ம தட்டைதான்) செட், முறுக்கு செட், தக்காளி செட் எனப் பல வகைகளில் ஆரோக்கியமான தின்பண்ட விற்பனை களைகட்டுகிறது. அடியில் ஒரு தட்டுவடை, அதற்கு மேல் துருவிய கேரட், பீட்ரூட், வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்களை வைத்து, பின்னர் தக்காளி சட்னி, பூண்டுச் சட்னி, வெங்காயச் சட்னி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சிறிதளவு இட்டு, மிளகுத் தூள், சீரகத் தூளைச் சற்றுத் தூவி, நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு, மீண்டும் மேலே ஒரு தட்டுவடையை வைத்து மூடி ‘தட்டுவடை செட்’ என்று செய்து தருகிறார்கள். சில கடைகளில் பத்து முதல் பதினைந்து வகையான சட்னி/துவையல் வகைகள் சுவைக்கேற்ப கலக்கப்படுகின்றன.

நலம் பயக்கும் நொறுவை

பார்ப்பதற்கு ‘பர்கர்’ சாயலில் காட்சி அளித்தாலும் நிச்சயம் நோய் உண்டாக்காது. பர்கரில் இருப்பதுபோல உடலுக்குக் கேடு விளைவிக்கும் வேதியியல் பொடிகளோ, செயற்கைக் கலவைகளோ இதில் சேர்க்கப்படுவதில்லை. கலோரியை அதிகப்படுத்தி உடல் பருமன், அவற்றின் துணை நோய்களை இந்த ‘செட்’ உணவு ஏற்படுத்துவதில்லை.

‘செட்’ தின்பண்டங்களில் கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள் நிறைந்திருப்பதால் ஊட்டச்சத்துக்குப் பஞ்சமில்லை. இஞ்சி, சீரகம், மிளகின் சாரம் நிறைந்திருப்பதால் செரிமானத் தொந்தரவு குறித்துக் கவலைப்பட வேண்டியதும் இல்லை. நல்ல பசி உணர்வு உண்டாகும். பீட்ஸா, பர்கரை அதிக அளவில் சாப்பிடும்போது உண்டாகும் மலக்கட்டு பிரச்சினை இதில் ஏற்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்வதால் உடலுக்குத் தேவையான நெய்ப்புத்தன்மை கிடைக்கும். அத்துடன் தட்டுவடை, முறுக்கு போன்றவை நெடுங்காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் நொறுவைகள் என்பதால் பயம் வேண்டியதில்லை. 

‘முறுக்கு தக்காளி செட்’

தட்டுவடைக்கு பதிலாக முறுக்கு, தக்காளித் துண்டுகளை மேலும் கீழும் வைத்துத் தயாரிக்கப்பட்ட செட் வகைகளுக்கு முறையே ‘முறுக்கு, தக்காளி செட்’ என்று பெயர். இவை தவிர செட் பொரி, மசாலா பொரி, ‘நொறுக்கல்’ போன்றவையும் ‘செட்’ உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. பருவ நிலைக்கு ஏற்ப மாங்காய் துருவல், வெள்ளரி சீவல்களையும் செட் வகைகளுடன் சேர்க்கிறார்கள்.

காரத்தை விரும்புபவர்களுக்கு மிளகுத் தூளை அதிகமாகத் தூவிக் காரம் தூக்கலான செட்களும், இனிப்புப் பிரியர்களுக்கு வெல்லப்பாகு கலந்து இனிப்பு செட்களும் கொடுக்கிறார்கள். சமீபகாலமாக முட்டை செட்களும் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன.

துணை நொறுவைகள்

‘செட்’ வகையறாக்களுக்குத் துணை நொறுவைகளாக வெல்லம் சேர்த்து இடித்த கடலை உருண்டை, கடலை மிட்டாய், கறுப்பு மற்றும் வெள்ளை எள்ளு உருண்டைகளும் அனைத்துக் கடைகளிலும் பாரம்பரியத்துடன் மிளிர்கின்றன. காரமாக செட் வகைத் தின்பண்டங்களை ருசித்துவிட்டு, இனிப்பான கடலை அல்லது எள்ளு உருண்டைகளைச் சுவைப்பது பெரும்பாலோரின் வழக்கம். இவற்றில் இரும்புச் சத்து அதிகம். 

‘சிறுதானிய செட்’

சிறுதானிய உணவு வகைக்குக் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, சில கடைகளில் அரிசி மாவுக்குப் பதிலாகத் தினை அரிசி மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட முறுக்கு, தட்டுவடைகள், செட் வகைகளுக்கு ஆதாரமாக உள்ளன. இவற்றைக் கொண்டு செய்யப்படும் செட் வகைகளை ‘சிறுதானிய செட்’ என்று அழைக்கின்றனர். சிறுதானிய செட் வகைகளை உட்கொள்வதன் மூலம் ‘செட் உணவு’ தரும் பயன்களோடு தினை, சோளம், கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் மருத்துவப் பயன்களும் கூடுதலாகக் கிடைக்கும். 

மலிவான விலை

‘செட் வகை’ நொறுவையின் விலை மிகவும் குறைவே. சாமானிய மக்கள் வாங்கிச் சுவைக்கும் அளவில் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஐந்து செட் விலை இருபது முதல் முப்பது ரூபாய் மட்டுமே. ‘செட் வகை’ பண்டங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஆனால் கடைகளில் கிடைப்பதுபோலப் பல வகைச் சட்னி, துவையல் ரகங்களை ஒரே நேரத்தில் தயார் செய்வது சற்று சிரமம். ஒரு வகை சட்னி/துவையல் கொண்டு தயார் செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விருப்பமான நொறுவைப் பண்டமாக இந்த ‘செட் வகை’ நொறுவை உருவெடுத்துவருகிறது. சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த ‘செட்’ தின்பண்டங்களைச் சுவைத்துவிட்டு அதற்கு அடிமையாகாமல் இருக்கமுடியாது.

நோய் விளைவிக்கும் நவீன துரித உணவைப் புறந்தள்ளிவிட்டு, இதுபோல ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் பாரம்பரிய உணவை ருசிக்கத் தொடங்கினாலே நம் உடல்நலத்தை எளிதாக மீட்டெடுக்கலாம்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.

11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

12. மருந்தாகும் நாட்டுக்கோழி!

13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

14. நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

15. சாயம் வெளுக்கும் சமையல்!



நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 15. சாயம் வெளுக்கும் சமையல்!

  



நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நீண்டகாலமாக வரும் வடிவம், நிறத்தைப் பார்த்து மயங்கி, அதில் உள்ள கலப்படம் குறித்து சற்றும் அறியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பெருங்காயம், மிளகு, மஞ்சள், தேன் என அஞ்சறைப் பெட்டியில் அங்கம் வகிக்கும் மூலப்பொருட்களிலேயே கலப்படம் தொடங்கிவிடுகிறது. சமையலுக்குப் பயன்படும் மருத்துவக் குணம் கொண்ட பொருட்களில் இப்படிக் கலப்படம் நடப்பதால் பொருளாதார ரீதியாகவும் உடல்நிலை சார்ந்தும் மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். இவற்றைக் கண்டறிவது, தடுப்பது, மாற்றிப் பயன்படுத்துவது எப்படி?

சமையலில் சேர்க்கப்படும் சில பொருட்களால், உடலில் வாயுக்கூறு அதிகரிப்பதைத் தடுக்க, பெருங்காயம் சேர்த்துச் சமைக்கச் சொன்னது அனுபவ அறிவியல். வாயுவை மட்டுப்படுத்தும் தன்மை மட்டுமின்றி, கோழையகற்றும் திறனும் இசிவகற்றும் செய்கையும் பெருங்காயத்துக்கு இயல்பில் இருக்கிறது. இப்படிப் பல மருத்துவக் குணம் கொண்ட பெருங்காயத்தில் கற்கள், சாயங்கள், வேறு வகை பிசின்கள், மைதா மாவு போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.

உண்மையான பெருங்காயத்தை நீர் விட்டு அரைத்தால் வெண்மையாக மாறும். கலப்படத்தில் வெண்ணிறத்தை எதிர்பார்க்க முடியாது. சிறிது பெருங்காயத்தை நீரில் ஊறவைக்கும்போது, வேறு நிறம் வெளிப்பட்டால் சாயம் கலந்திருப்பதை உறுதிசெய்யலாம். கலப்படமற்ற பெருங்காயம் ஊறிய நீர் பால் நிறமாகும். கற்கள் கலந்திருக்கும் பெருங்காயத்தின் பகுதிகள் நீரில் கரையாது.

ஜீரண மண்டலத்தைச் சீராக்க வேண்டிய பெருங்காயம் கலப்படம் செய்யப்படுவதால், ஜீரண மண்டலத்தை பாதிப்படைய வைக்கும். 

மிளகு

மிளகுக்கு இருக்கும் நஞ்சு முறிவு செய்கையை முன்வைத்து, ‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆனால் இன்றோ மிளகுக்குப் பதிலாக, அதே உருவ அமைப்புடைய பப்பாளி விதைகள் கலப்படம் செய்யப்படுகின்றன.

மிளகு என்று நம்பி, பப்பாளி விதைகளை எடுத்துக்கொண்டு பகைவன் வீட்டில் உணவருந்தினால், நஞ்சு அறிகுறிகள் உண்டாவது உறுதி. பல நூற்றாண்டுகளுக்கு முன், தங்கத்துக்கு நிகராக மதிக்கப்பட்ட மிளகின் மருத்துவக் குணங்களை அதில் கலப்படம் செய்யப்படும் பப்பாளி விதைகள் மறைத்துவிடுகின்றன.

பப்பாளி விதைகளில் வாசனை இருக்காது. மிளகில் காரத்தன்மை இருக்கும். மிளகுடன் ஒப்பிடும்போது, பப்பாளி விதைகள் சிறியதாகவும் சுருங்கியும் இருக்கும். மிளகில் இருக்கும் கருமை, பப்பாளி விதைகளில் இருக்காது. 

தேன்

முதல் மருந்தாகவும், வேறு மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் (Adjuvant) செயல்படும் திறன் தேனுக்கு உண்டு. கலப்படம் இல்லாத தேனில் உள்ள மருத்துவக் குணங்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் இப்போது புதிய தேனா பழைய தேனா என்ற நிலை மாறி, ‘தேன்தானா’ என்று சந்தேகப்படும் அளவுக்கு இன்றைய நிலை இருக்கிறது.

மலைத்தேன், கொம்புத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன் என வகைகளுக்கு ஏற்ப மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தி வந்த தேனில், இன்றோ ‘கலப்படத் தேன்’ என்ற ஒரு வகைதான் தூக்கலாக இருக்கிறது. இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு நாவில் வைக்கப்படுவது மருத்துவக் குணம் கொண்ட தேனா என்பது சந்தேகமே.

வெள்ளைச் சர்க்கரை நீரும் வெல்லப்பாகும்தான் தேனுக்கான கலப்படப் பொருட்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தேன் என்று நம்பி, சர்க்கரைப் பாகை அதிகம் உட்கொண்டால் விரைவில் நோய் வர வாய்ப்பிருக்கிறது. உண்மையான தேனைப் பெற, நேரிடையாக மலைப்பகுதி மக்களிடமிருந்து பெறுவதே சிறந்தது.

நீரில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால், விரைவில் கரைந்து நீர் முழுவதும் பரவினால் அது கலப்படத் தேன். உண்மையான தேன் அவ்வளவு சீக்கிரம் கரையாது, அப்படியே நீரில் கீழிறங்கும். சுத்தமான தேன் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். இனிப்புச் சுவையும், பழையத் தேனாக இருந்தால் சிறிது புளிப்புச் சுவையும் கொண்டிருக்கும். துணியில் தேனைத் தடவி எரியவிட்டால், சுத்தமான தேன் எரியும். கலப்படம் செய்யப்பட்ட தேனாக இருப்பின் அதிலிருக்கும் நீர்த்தன்மை காரணமாக எரியாது. தூயத் தேனுக்கு அடர்த்தியும் அதிகம். 

மஞ்சள்

மணம் உண்டாக்குவதோடு மிகப்பெரிய நோய்களையும் வராமல் தடுக்கும் ஆளுமை கொண்ட மஞ்சள் தூளில் மரத் தூள், சுண்ணாம்புத் தூள், மாவுப் பொருள் போன்றவற்றைக் கலப்படம் செய்துவிடுகின்றனர். செயற்கையாக மஞ்சள் நிறத்தைக் கொடுப்பதற்காக, விபரீத பாதிப்புகளைத் தரும் நிறமிகளையும் சேர்க்கின்றனர்.

புற்றுநோய் செல்களைத் தடுக்கும் அளவுக்கு மகிமை கொண்ட மஞ்சள், அதில் கலப்படம் செய்யப்படும் நிறமிகளால் புற்றுநோய் செல்களைத் தூண்டும் காரணியாகிவிடுகிறது. மஞ்சளில் கலக்கப்படும் ‘Lead chromate’, ‘Metanil yellowகாரணமாக கேன்சர் வருவதற்கான சாத்தியம் அதிகம் என எச்சரிக்கிறது உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை.

மஞ்சள் தூளில் சுண்ணாம்புத் தூள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிய, கண்ணாடிக் குவளையில் நீர் நிரப்பி அதன் மேற்பரப்பில் மஞ்சள் தூளைப் போட்டு, அரை மணி நேரம் அசையாமல் வைத்திருந்தால் நீர் மஞ்சள் நிறமாக மாறுவதோடு, மஞ்சள் துகள்கள் அடியில் தங்கியிருந்தால் அது கலப்படம் அற்றது. அதுவே சுண்ணாம்புத் தூள் கலப்படம் இருந்தால், நீரில் வெண்மை நிறக் கலக்கம் தெரியும். மஞ்சளில் இருக்கும் நிறமிக் கலப்படங்களை அறிய சிறிய ஆய்வகப் பரிசோதனை தேவைப்படுகிறது (HCL Test, Sulphuric acid Test). அனைவராலும் ஆய்வக சோதனை செய்ய முடியாது. எனவே இவற்றிலிருந்து தப்பிக்க நேரடியாக மஞ்சள் கிழங்குகளை வாங்கி, உலர வைத்துப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. 

நெய்

வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்ட நெய்யை அதிகளவில் பயன்படுத்தும்போது, கெட்ட கொழுப்பு (Bad cholesterol) அதிகரிக்கும். மேலும், இதய நோய் வருவதற்கும் பல மடங்கு வாய்ப்பிருக்கிறது. வனஸ்பதியில் எந்தவிதச் சத்துக்கூறுகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நொறுக்குத் தீனி கவர்களில் அச்சிடப்பட்டிருக்கும் உட்பொருட்களைக் கவனித்தால், பெரும்பாலும் அதில் ‘Hydrogenated oil’ அல்லது ‘Trans fat’ என்று இடம்பெற்றிருக்கும். அதுதான் வனஸ்பதி. சரி கடைகளில் வெண்ணெயை வாங்கி காய்ச்சி நேரடியாக நெய் தயாரிக்கலாம் என்றால், அதிலும் பிரச்சினை இருக்கிறது. வெண்ணெயிலும் வனஸ்பதி கலப்படம் செய்யப்படுவதுதான் அந்தப் பிரச்சினை. 

மேலும் சில கலப்படங்கள்

துவரம் பருப்பில் கலப்படம் செய்யப்படும் சாயம், கேசரி பருப்பு காரணமாக ‘லதைரிஸம்’ (Lathyrism) எனும் ஒரு வகையான தசைவாத நோய் உண்டாகலாம்.

காரம், இனிப்பு வகைகளில் சேர்க்கப்படுவதற்காக கடைகளில் விற்கப்படும் கவர்ச்சித் தோற்றமளிக்கும் நிறமிகள் உணவில் சேர்க்க அனுமதிக்கப்படாதவை.

காபி, டீத் தூளில் சேர்க்கப்படும் புளியங்கொட்டைத் தூள், சாயம், செரிமானத் தொந்தரவுகளை உண்டாக்கும்.

மெழுகு பூசிய பழங்கள், கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்படும் பழங்கள் போன்றவையும்கூட ஒரு வகையில் கலப்படமே.

 நமது செரிமான மண்டலத்தில் கட்டிடம் கட்டும் அளவுக்கு, செங்கல் தூளும் மரத்தூளுமாகக் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய்ப் பொடிதான் சந்தையில் அதிகம் கிடைக்கிறது.

சமைத்து முடித்தவுடன் அற்புதமான மணம் மூலம் நம்மை வசப்படுத்த வேண்டிய உணவு வகைகள், கலப்படப் பொருட்களின் தாக்கத்தால் மணமின்றி, மருத்துவக் குணமுமின்றி சக்கை உணவாக மாறிவிட்டன. நம் உடல்நலனைக் காக்க நாம்தான் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.

11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

12. மருந்தாகும் நாட்டுக்கோழி!

13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

14. நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

16. பீட்ஸா, பர்கருக்கு மாற்றாகும் ‘செட் வகை’ உணவுகள்


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 14. நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

 


னக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும்! இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே!” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்’ எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.

உணவே அடிப்படை

ஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், ‘லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா?

ஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை? இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி. 

எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது எப்படி?

நோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும்.

ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Mental Stress) ஏற்படும்போது, ‘Cortisolஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 

‘நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

கருப்பட்டி

சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.

‘சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது. 

சுக்குக் காபி, இஞ்சி டீ

“குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல ‘சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல்! எனவே இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்! 

மஞ்சள் மகிமை

மஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cell membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது. 

வண்ண வண்ணப் பழங்கள்

பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

பிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம். 

தீனிகளுக்கு விடை கொடுப்போம்

மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்! 

யந்திரங்கள் பழுதானால் அவை தாமாகவே சரிசெய்து கொள்ள முடியாது. ஆனால், நம் உடல் என்னும் இயந்திரம் பழுதானால், அது தன்னைத்தானே பழுது பார்த்துக்கொள்வதுடன் மீண்டும் அந்தப் பிரச்னை வராமல் பாதுகாக்கும் ஆற்றல் நிறைந்தது. அத்தகைய பேராற்றலைத்தான் ‘நோய் எதிர்ப்பு சக்தி’ என்கிறோம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எந்தெந்த உணவுப்பொருள்களை உண்ணலாம், என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பதைப் பட்டியலிடுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வெங்கடேஷ்வரன்.

மனித உடலில் வைட்டமின் சி சத்து குறைந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அப்போது வைட்டமின் சி அதிகமாக உள்ள பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. இவை சளி முதல் புற்றுநோய் வரை வராமல் பாதுகாக்கும் திறன் பெற்றவை.

வைட்டமின் ஏ சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சத்தானது அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக் கீரை, பசுநெய், வெண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே, அவற்றை அவ்வப்போது உண்ணவேண்டும்.

வைட்டமின் பி6 நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு (Biochemical reactions) உதவுகிறது. சிறுதானியங்கள், முட்டை, பால், பாதாம், புரோக்கோலி, கீரை வகைகளில் வைட்டமின் பி அதிகரித்துக் காணப்படும்.

நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நோய்க்கிருமிகளை எதிர்த்து அவற்றால் செயல்பட முடியும். அதற்கு, துத்தநாகம் அவசியம். கடலைப்பருப்பு, உலர்ந்த தேங்காய், எள் போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது.

மக்னீசியம் சத்து இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாது. சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் செயல்பாட்டுக்கும் இது அவசியம், கோதுமைப் புல், நட்ஸ், விதைகள், கீரைகள் போன்றவற்றில் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஒன்றே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும். குழந்தை பிறந்த முதல் ஓராண்டு வரை சின்னம்மை, தட்டம்மை உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டு. வளர்ந்த குழந்தைகளுக்கு, தயிர், யோகர்ட் கொடுக்கலாம். இதிலுள்ள புரோபயாட்டிக் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், கொழுப்பு, நார்ச்சத்து, தாதுஉப்புகள், நீர்ச்சத்து, நுண்ணூட்டங்கள் நிறைந்த உணவை உண்ணவேண்டும்.

உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் இதயம், நுரையீரலை மேம்படுத்தும். மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும். அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

உடலுக்கு ஓய்வும் முக்கியம். ஓய்வின்போதுதான் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கி வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். உறக்கம் கெடும்போது, வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை ஆரோக்கியம் காக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும், பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது, மண் பாத்திரங்களில் சமையல் செய்வது, ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெயிலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி உள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி இருப்பது மிகவும் நல்லது.

புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எமன். இவற்றைத் தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் ஆரோக்கிய வாழ்வு அமையவும் மிகவும் முக்கியம். 

ஃப்ரிட்ஜில் பதப்படுத்திய உணவைத் திரும்பத் திரும்ப சூடாக்கி உண்பதைத் தவிர்க்கவேண்டும். அப்படிச் சாப்பிடுவதால் உணவுப்பொருள்களில் வேதிமாற்றம் ஏற்பட்டு உடலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும்.


நன்றி - ஆயுர்வேத மருத்துவர் வெங்கடேஷ்வரன் மற்றும் விகடன்


தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.

11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

12. மருந்தாகும் நாட்டுக்கோழி!

13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

15. சாயம் வெளுக்கும் சமையல்!

16. பீட்ஸா, பர்கருக்கு மாற்றாகும் ‘செட் வகை’ உணவுகள்


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!