மருத்துவமனையால்... ஒழிந்தோம்




ஒரு காலத்தில் மழைக்காலங்களில் வரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் தாக்கப்பட்டு வரும் காய்ச்சல், சளித்தொல்லைகளால் வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மருத்துவமனை சென்று வந்தோம். ஆனால் இன்றோ நாளுக்கொரு புதிய வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட நோயும், வாரத்திற்கொரு புதிய மருந்து கண்டுபிடிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

பெரும்பாலும் மருத்துவமனைகளெல்லாம் நிறுவப்படும் தொடக்க காலத்தில் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே அதாவது அப்பகுதி மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக வெகுதூரம் மக்கள் செல்வதை தடுப்பதற்காகவும் போன்ற‌ பொது நலநோக்கில் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. நாளாக, நாளாக அதன் நோக்கம் படிப்படியாக திசை மாற்றப்பட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கமே தலையாய கடமை என்ற வியாபார நோக்கிற்கு தள்ளப்படுகின்றன.

இதில் போலி மருத்துவர்களின் பிரவேசம் வேறு. மக்களின் அறியாமையையே தன் வியாபார முதலாய் எண்ணி களத்தில் குதித்து கோடிகள் பார்க்கின்றனர். கடைசியில் சிலர் கம்பியும் எண்ணுகின்றனர்.

சென்னைபோன்ற பெருநகரங்களில் செல்வ,செழிப்புள்ள அரக்கட்டளைகளால் நிறுவப்படும் மருத்துவமனைகள் கூட தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பொது மக்களிடம் பணம் பறிப்பதில் கொஞ்சமும் கருணையும், இரக்கமும் காட்டுவதில்லை. என்ன தான் குடும்ப கஷ்டத்தில் தன் உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு ஒரு நம்பிக்கையுடன் வரும் நடுத்தர மற்று ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரேக்கட்டணம் தான்.

பல மருத்துவமனைகளில் உயிருக்காக போராடும் நோயாளியின் சிகிச்சைக்காக மருத்துவர்களால் நோயாளியின் குடும்பத்துடன் இரக்கமின்றி பணப்பேரம் பேசப்படுவதாக நாம் கேள்விப்படுகிறோம். அப்படியே சிகிச்சைக்கு முன் நோயாளியின் உயிர் பிரிந்து விடுமாயின் அவர் சிகிச்சைக்காக அதுவரை ஆன செலவுகள் முற்றிலும் செலுத்தப்படாதவரை அவரின் பிரேதம் என்ன தான் குடும்பத்தினர் கதறினாலும், கூக்குரலிட்டாலும் மருத்துவமனையிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.

கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டையை அடைவதற்கு நாம் பல உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நாட்கள் பல காத்திருந்து தான் நாம் அதை பெற முடியும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லோலப்படும் எத்தனையோ ஏழை, பாமர மக்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துபவர்கள் அதற்கென அரசால் அமைக்கப்பட்ட அமைப்புகள் தொலைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது தானே முன் வந்து அல்லல்படும் மக்களுக்கு உதவிடுமாயின் அது மக்களால் மட்டுமல்ல அரசின் சரித்திரம் போற்றும் ஒரு திட்டமாகத்தான் பேசப்படும். அதனால் அரசிற்கும் நல்ல பெயர் கிடைப்பதுடன் மக்களின் ஆதரவும் (ஓட்டும்) நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு காலத்தில் நம் வீட்டுப்பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சுகக்குறைவிற்கு அவர்கள் கைப்பக்குவத்தில் நாட்டு மருந்து கொண்டு (அரிசி துப்பிலி, அக்கரகரம், கண்டதுப்பிலி, புள்ளெபெத்த மருந்து, செந்தூரம்) அம்மியில் நன்கு பொடி செய்து அரைத்து பிறகு சூடாக்கி தரும் குடிநி (குடி நீ) தந்த உடனடி நிவாரணத்தை லட்சங்கள் பல செலவாகும் இக்கால அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை கூட தருவதில்லை.

இன்றைய உலகில் பிரபலமான ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், முற்றும் துறந்த முனிவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களும் தனக்கென பக்தகோடி வட்டங்களை உள்ளூரில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் உண்டாக்கி கொண்டு அவர்கள் மூலம் கணிசமான காணிக்கை தொகையை வசூல் செய்த பின் அவர்கள் அற‌க்கட்டளை என்ற பெயரில் உலக மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறி முதலில் நிறுவுவது இன்று பணம் காய்க்கும் மரங்களாய்த்திகழும் பெரும் மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையுமே. அவர்கள் நடத்தும் மருத்துவமனைகளிலும்,மருத்துவக் கல்லூரிகளிலும் அவர்களின் பக்தகோடிகள் வந்து படிப்பதற்கோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதும் கணிசமான காசு பார்த்து விடலாம் என்ற நோக்கில் தான் பெரும்பான்மையான அறக்கட்டளைச்சார்ந்த மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

நாளுக்கு நாள் பெருகி பரவிவரும் புதிய புதிய நோய்களால் மக்கள் தான் கவலையுற்றிருக்க வேண்டுமே ஒழிய மருத்துவ மனைகளல்ல.வியாபார நோக்கில் இயங்கும் பெரும்பான்மை மருத்துவமனைகளை பொருத்தவரை மக்கள் நோய்வாய்ப்பட்டு உடனே மரணிக்கவும் கூடாது.அதே சமயம் ஆரோக்கியமாக இருந்து கொண்டு வெளியில் சுற்றித்திரியவும் கூடாது.நீண்ட ஆயுளுடன் நிரப்பமான நோய்,நொடிகளைப்பெற்று அடிக்கடி தன்னிடம் வந்து சிகிச்சைகள் மூலம் பணங்காசுகளைத்தாரை வார்த்துச்செல்ல வேண்டும் (உங்கள் வரவு நல்வரவாகட்டும்..நன்றி மீண்டும் வருக..) என்பதைத்தான் விரும்புகிறது.

ஒரு காலத்தில் வரும் கடும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி பேதி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் சளித்தொல்லைகளெல்லாம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று ஒரு ஊசிப்போட்டுக்கொண்டால் சரியாகி விடும். ஆனால் இன்று ஊசிப்போட்ட தழும்பை போக்க இன்னொரு ஊசி போட வேண்டியுள்ளது.

பெரிய மருத்துவமனைக்கு கொசுக்கடிகளால் மேனியில் தடிப்புகள் உண்டாகி குழந்தைகளை சிகிச்சைக்காக எடுத்துச்சென்றால் கூட முதலில் அங்கு குழந்தையின் பெயரில் என்னமோ பெரும் சொத்து,பத்து வாங்க வந்தது போல் ஒரு ஃபைல் ஓப்பன் செய்து அக்குழந்தையை காலமெல்லாம் நீங்கள் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் அக்குழந்தையின் தகப்பனாரின் மாத வருமானம் எவ்வளவு? என்ற கச்சிதமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் காலாவதியான மருந்துகளைக்கொள்முதல் செய்து அதை மறுவிற்பனை செய்வதற்கென்றே தனிப்பட்ட முகவர்களுடன் கைகோர்த்து நாட்டின் முதுகெலும்பாகத்திகழும் பெரும் வணிக நிறுவனங்களும் பொதுஜனங்கள்மேல் எவ்வித ஈவு,இரக்கமின்றி தன் பணப்பரிவர்த்தனைக்காக மக்கள் மற்றும் அரசு விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை நாடறியும்.

ஒரு காலத்தில் மருத்துவமனைகளெல்லாம் எப்பொழுதாவது வரும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே என்றிருந்தது. ஆனால் இன்றோ மளிகைக்கடை வியாபாரம் போல் அன்றாடம் மக்கள் கூட்டம் மருத்துவமனை தோறும் அலை மோதுகின்றன.மருந்துக்கடைக்காரர்களின் வாயெல்லாம் பல்லாகத்தான் தெரிகிறது. காலப்போக்கில் திரையரங்குகளில் வைக்கப்படுவது போல் இன்று ஹவுஸ் ஃபுல் என்று போர்ட் எழுதி மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் மாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாம் நம் ஆரோக்கியம் பேணுவதில் மிகுந்த கவனம் வேண்டும். ஆரோக்கியம் சம்மந்தமாக ஆலோசனை பெற மருத்துவரிடம் சென்றால் அதற்கும் ஒரு தொகை ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் அங்கு கொடுத்தாக வேண்டும். அதற்கும் அங்கு ஒரு ஃபைல் ஒப்பன் செய்யப்படும்.

ஏன் ஆட்டு மூளையை சாப்பிடனும்,ஆஸ்பத்திரி டோக்கன் எடுக்கனும்? ஏதோ பழைய பழமொழியை (ஏன் நாயெ அடிப்பெனெ,......சுமப்பெனெ?). எனவே நாம் மற்றும் நம் குடும்பத்தினர்கள் அன்றாடம் ஆரோக்கியம் பேணி வருவோமேயானால் அனாவசியமாக ஆஸ்பத்திரி செல்வதை தடுத்து விட முடியும். அதற்காக என்ன மருத்துவ உலகம் போர்க்கொடியா தூக்கப்போகிறது?

தினம், தினம் நமக்கு அன்றாடம் கிடைக்கும் காய்கறி, கீரை, பழ உணவுகளை உண்டும், தேவையற்ற கொழுப்பு, இனிப்பு, டின் மற்றும் ரீஃபில் பேக்கில் அடைக்கப்பட்ட‌ எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்பதை விட்டு தவிர்த்தும், குறைந்தது தினந்தோறும் அரைமணி நேரமாவது நம் உடலுக்குத்தகுந்த உடற்பயிற்சியை செய்து வருவோமேயானால் குறைவற்ற செல்வம் இருப்பினும் ஆரோக்கியமாக வாழலாம் நம் கடைசி மூச்சு வரை இன்ஷா அல்லாஹ் என்று கூறி என் கட்டுரையை இங்கு நிறைவு செய்கின்றேன்.

No comments:

Post a Comment