இயற்கை உணவும் ஆரோக்கியமும்

நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!
பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. ‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன. இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை
‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்’
என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர். ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம் என்பதில்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் என்பதினால்தான் - நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கம் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களான புகைத்தல் மது மற்றும் கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருட்களை பாவித்து நமது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம். உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி, சக்திகளும் அமையும்.
நாம அனைவரும் பெரும்பாலான உணவு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். எனினும் பலவித காய்கனி வகைகளை அப்படியே சுத்தம் செய்து பச்சையாகவே சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாம் சமையல் செய்யும்போது பலவித ஊட்டச்சத்துகள் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது, எதனால் அழிகிறது என்பதை பார்க்கலாமா?
முதலாவதாக அரிசியை எடுத்துக் கொள்வோம். முன்காலம் போல் கைக்குத்தல் அரிசி கிடையாது. நாம் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக தீட்டி அரைத்து விடுவதால் அரிசியில் இருக்கும் தயாமின் பீ வைட்டமின் வீணாக்கப்படுகிறது. இந்த வைட்டமின் தானியத்தின் அடிப்பகுதியில்தான் இருக்கும். இவ்வாறு தீட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது நமக்கு மாவுச் சத்துதான் கிடைக்கும். உயிர்ச்சத்தும் வைட்டமின்களும் காய்கறி பழங்களிலிருந்து கிடைக்கின்றது. இந்த சத்து நீரினாலும் வெப்பத்தாலும் சுலபமாக அழியக்கூடியவை. சத்துகள் அழியாமலிருக்க சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவுப் பொருட்களை சமையல் செய்யும் பொழுது, பாதுகாத்து வைக்கும்பொழுது, காற்றில் வைக்கும்பொழுது, சூடாக்கும்பொழுது, கழுவும் பொழுது என பல சமயங்களில் அதன் சத்துகள் வீணாக்கப்படுகிறது. சமைக்கும் விதமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்து முறை கழுவுகின்ற தண்ணீரைச் சமையலில் வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேக வைத்துக் கஞ்சியை வடித்துவிடும்போது இருக்கும் சத்தும் போய் விடுகின்றது. அதனால் குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்தும் குறையும். நீரில் கரையும் வைட்டமின்கள் சமைக்கும்போது அதிக அளவில் அழிக்கபடுகின்றன. பொதுவாகவே எந்தவித காய்கறிகளாக இருந்தாலும் கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். அதிலும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது காயின் அத்தனை பரப்புகளும் காற்றில் பட்டு அதில் உள்ள சத்துகளை இழக்கின்றன.
காய்கறிகளை எப்போதுமே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தான் போட வேண்டும். உருளைக் கிழங்கு போன்றவற்றை தோலுரிக்காமல் வேக வைத்ததிற்குப் பின் தான் தோல் நீக்க வேண்டும். இலைக் காய்கறிகளில் நிறையை கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன என்பதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்த பலன்களைத் தரும். காய்கனி வகைகளை பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சத்துகள் பாதுகாக்கப் படுகின்றன. முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அவிட்டின் என்ற புரதம் பயோடின் என்கிற உயிர்ச்சத்தை இழக்கிறது. எனவே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்ல நோக்குடன் நமது அன்றாட உணவு வகைகளை சரியான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ருசியும் மணமும் குணமும் நிறைந்ததாக சாப்பிடும்போது, கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் அழிந்துவிடுவதோடு, எளிதாக ஜீரணம் ஆகும் தன்மையுடன் நல்ல ஆரோக்கியம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
நம்மில் சிலர் செய்வதைப் போல் அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சாதாரணமாகவே எந்தவித காய்கறிகளாய் இருந்தாலும், முதலில் அவற்றை நல்ல நீரில் அலசி சுத்தப்படுத்தித் தான் சமையலுக்கு உபயோகிக்க வேண்டும். பிரசர் குக்கர் சமையல் நேரத்தை குறைப்பதோடு சமைக்கும் காய்கறிகள் அனைத்தின் சத்துகள் அழிவதை தடுக்கிறது. பழங்களை நறுக்கி வைத்தால் சில நிமிடங்களில் நிறம் மாறி விடுகின்றன. இதைத் தடுக்க சிறிதளவு சர்க்கரை போட்டால் போதும். சில அரிசியைத் தண்ணீரில் கழுவும்போது 40 சதவீதம் தயாமின் சத்து தண்ணீரில் கரைந்து போய் விடுகிறது. குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்தமுறை கழுவுகின்ற தண்ணீரை சமையலில் வேறு பொருட்களுடன் உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேகவைத்துக் கஞ்சியை வடிப்பதால் இருக்கும் சத்தும் போய்விடுகிறது. பருப்புகளை வேக வைக்கும்போது சமையல் சோடாவை சேர்ப்பதால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்தும் போது அதிலுள்ள சுண்ணாம்பு சத்து பாத்திரங்களின் ஓரங்களில் படிந்துவிடுகிறது. அதனால் பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதத்தின் தரமும் குறைகிறது. காய்கறிகளை கழுவிய பிறகுதான் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதாக நறுக்கப்பட்டு நீரில் கழுவும்போது அதன் சக்திகள் கரைந்துவிடும். இலைக்காய்கறிகள் நிறைய காரோட்டின் கொண்டவையாக இருக்கின்றன. அது வைட்டமின் ஏ ஆக உடலில் மாறுகிறது. ஆதலால் காய்கறிகளை வறுப்பதை காட்டிலும் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
சில காய்கறிகளில் புளி சேர்க்கப்படும் போது, அதன் அமிலத் தன்மை வைட்டமின் அழிவை தடுக்கிறது. முட்டையை வேக வைக்காமல் சாப்பிடுதல் கூடாது. தானியங்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லா தானியங்களும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிகுந்தும் குறைந்தும் உள்ளவையாகும். முக்கியமாக பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும், அன்றாடம் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதையும் பழக்கமாகக் கொள்ள வேண்டும். முக்கியமாக சிறார்களுக்கு பிடித்த மாதிரி விதவிதமான உணவு வகைகளை, முக்கியமாக கீரை, பருப்பு கலந்த சாதம், பழம் ஜூஸ், பால் போன்றவற்றை அவர்களின் பசிக்கேற்ப உட்கொள்ள வைத்து, விளையாட வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயல வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, ஜலதோசம், ஜுரம் போன்றவற்றிற்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து மற்றும் உணவு வகைகளை தர வேண்டும்.
இப்படியாக நமது உணவு வகைகள் என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து, இராசயனச் சத்து மற்றும் அமிலச்சத்து போன்றவற்றை இயற்கையே அமையப் பெற்ற அனைத்து காய், கனிகள், தானியங்கள் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக் சுவைபட சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தவறான பழக்கவழக்கங்களான போதை மருந்து உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவற்றை மேற்கொண்டால் அதன் விளைவு என்ன என்பதைப் பற்றி கூறத் தேவையில்லை.
அதுபோன்றே பாலியல் சம்பந்தமான ஒழுக்கங்களும் நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும். எனவே இவற்றையெல்லாமம் எளிதில் பெற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருகின்ற பக்குவத்தோடு, நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் என இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உடல் அழிவதற்கு காரணமாய் விளங்குவது ஐந்தில் நான்கு பங்கு ஆகாரமே என்றும், ஒரு பங்கு அளவுக்கு மீறிய தூக்கமும் பயமும் போன்ற தீய உணர்வுகளும் என்கிறார் வள்ளலார்.
இவ்வுண்மையை காட்டும் வகையில், ஒருவன் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பாகம் அவனது உடம்பிலும், மற்ற இரண்டு பாகங்களினால் வியாதி ஏற்பட்டு மருத்துவ செலவிற்குத்தான் உட்படுத்துகின்றன. ‘இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்’ என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப ஒரு மனிதன் பட்டினியால் இறப்பதற்கு முன்பாக நூறு பேர் விருப்பம் போல் உண்டு இறந்துவிடுகிறார்கள். கொழுத்த உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொல்கிறது என்றார் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். ஒரு வியாதிக்கு எது மூல காரணமாயினும் முறை கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையாகும்.
உடல் ஆரோக்கியமாக வளர, உணவில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒருவன் மூன்று வேளைக்குமேல் சாப்பிடக்கூடாது. “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி (இல்லறத்தில் உள்ளவன்); மூன்று வேளை உண்பவன் நோயாளி; நான்கு வேளை உண்பவனின் உயிர் உடலை விட்டு விரைவில் போய்விடும்” என சித்தர் பாடல் கூறுகிறது. ஆனால் இக்காலத்தில் பெரும்பான்மையோர் நான்கு முறை என்ன, ஆறுமுறைகள் கூட உண்கிறார்கள். காலை பெட் காபியோ தேனீரோ, பின காலை டிபன், மதிய சாப்பாட்டிற்கு முன்பு ஏதாவது நொறுக்குத் தீனி, மாலை சிற்றுண்டி, இரவு உணவிற்கு முன்பு மது அருந்துதல், இரவு டின்னர் என இப்படி பல தடவை உண்பவர்களை நாம் இங்கு காணாததா? வசதி படைத்தவர்கள் சத்து மிகுதியான கனி வகைகளான ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பழரசங்கள், விலை உயர்ந்த பலவிதமான உணவு வகைகள், டானிக்குகள் முதலியவற்றை அருந்தியும் கூட சாதாரண ஏழை மக்களை விட இருதய நோய், இரத்த அழுத்தம், சுகர் கம்பெளையின்ட், கொலஸ்டரால், கொழுபுச் சத்து கூடுதல், புற்று நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்னை, கூடுதல் எடை என்று எண்ணற்ற வியாதிகளால் அவதிப்படுவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. இது தவிர போதை வஸ்துக்கள் பாவித்தல், முக்கியமாக புகைப்பிடித்தல் போன்றவையும் காரணமாகும். சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது ஏன் அகால மரணம் அடைகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கின்றன நம் முன்னோர்கள் வகுத்த எளியமுறை உணவுப் பழக்க வழக்கங்கள்.
அதாவது ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்கு காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இந்தக் காலத்திற்கு இடையிடையே ஏதாவது பழமோ, சிற்றுண்டியோ அருந்தினால் ஜீரணம் ஆவதற்கு 8 மணி நேரம் 9 மணி நேரம் கூட ஆகிறது என்று வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலிருந்து அறிந்து இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் தனது திருக்குறளில்
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்று காட்டியுள்ளார் போலும்.
பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப் பொருள் செரிமானமாவதற்கு உமிழ் நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும். சாப்பிடும்போது அவரச அவசரமாக உட்கொள்ளாது, நிதானமும், மனதில் எந்த வித சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காது மகிழ்ச்சியுடன் உணவு அருந்துதல் வேண்டும். இரவு சாப்பாடு என்பதில் மிகவும்.
அக்கறையும் கவனமும் தேவை. மதிய உணவை விட ஒரு பிடி குறைத்தே சாப்பிடுதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவு, சப்பாத்தி போன்றவையும், ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால் போன்றவற்றை அருந்தி விட்டு சுமார் 15 நிமிடங்களாவது உலாவுதல் வேண்டும். அவ்வாறு நடப்பதால் அருந்திய உணவு நன்றாய் ஜீரணம் ஆவதோடு, இரவு நித்திரையும் நன்றாக அமையும்.

No comments:

Post a Comment