நல்ல உடல்நலம்

நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!
காலையில் எழுந்தது முதல் சுறுசுறுப்பாக விழிப்புடன் ஒருவர் பணி புரியவேண்டும் என்றால், அவர் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இரும்புச் சத்து குறையும்போது உடல் பலவீனம் அடையும். இரும்புச் சத்துதான் ஆக்ஸிஜனை சுமந்து சென்று எல்லா உறுப்புகளுக்கும் விநியோகித்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. முக்கியமாக மூளையில் டோப்பாமைன் என்ற இரசாயனப் பொருள் சுரந்தால், மனதும் உடலும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இதற்கும் இரும்புச் சத்துதான் தேவை. மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
சோர்வை அகற்றும் பழம்!
நான்கு பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டுவிட்டு இரவில் படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் கொட்டைகளை நீக்கிவிட்டு ஊறிய பேரீச்சம் பழங்களையும் அந்தத் தண்ணீரையும் அருந்துங்கள். வாரம் இரு தினங்களில் இது போல் சாப்பிட்டு வந்தால், சோம்பல் எட்டியே பார்க்காது. மாணவ மாணவிகளுக்கு இது ஒரு சுறுசுறுப்பு டானிக்!
தலைவலியை முன்கூட்டியே தடுக்க முடியும்!
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
அழகைத் தரும் கீரைகள்!
கேரட், கீரை, முள்ளங்கிக்கீரை, டர்னிப் கீரை, உலர்ந்த திராட்சைப்பழம், பப்பாளி, சீத்தாப்பழம் முதலியன உடலுக்கும் கண்களுக்கும் அழகைத் தருகின்றன. பாதாம் பருப்பும் இந்த வகையில் உயர்வானது. தோல் சுருங்காமல், கண்கள் எரிச்சல் அடையாமல் எப்போதும் புதியனவாகக் காட்சியளிக்க இவற்றில் உள்ள ரிபோஃபிளவின் என்ற வைட்டமினே இந்தப் பணியைச் செய்கிறது.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!

No comments:

Post a Comment