தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?

ஆண்களாயினும், பெண்களாயினும் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலைக்கேசம். 
இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி உதிர்வதையும், இளநரை 
விழுவதையும் இப் பிரச்சினையின் காரணமாக பலவித விளம்பரங்களை கண்டு மயங்கி 
பலவித செயற்கை ரசாயன எண்ணெய்களையும். ஷாம்பு, ஹேர்டை போன்றவற்றை 
உபயோகப்படுத்தி மேலும் தங்கள் தலைமுடியை பாழ்படுத்திக் கொள்வதை காண்கிறோம். 
நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், உணவுப்பழக்க முறையினாலும், இயற்கையில் 
கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்துவதாலும் இப்பிரச்சினையை அறவே தடுக்க முடியும். 

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் 

தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை 
அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் 
ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை 
உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை 
வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் 
கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து 
செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் 
சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் 
என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் 
உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள 
துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் 
எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் 
கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து 
பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும். 

வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் 
சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு 
மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் 
பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது. 

தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க... 

தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் 
சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, 
முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில்
நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட 
ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். 
இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் 
தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி 
இலையை பயன்படுத்தியும் செய்யலாம். 

வியர்வை தங்கக்கூடாது 

வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்
போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து 
தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் 
செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது. 

தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு 
சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும். 

மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்
சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, 
வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை 
குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் 
பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி 
அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் 
இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் 
குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும். 

மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், 
பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், 
ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு 
பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment