Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

மனம் எனும் மாய தேவதை! பாகம் 12 - தேவதை தரிசனம்

 



பாகம் 12 : தேவதை தரிசனம்


        னதில் தீய எண்ணங்கள் கீழ்த்தனமான எண்ணங்கள் தவறான எண்ணங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி கையாள வேண்டும்?

மனதில் தீய எண்ணங்கள் ஊற்று எடுக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வாழ்வை மனதை அலசியவர்கள் சொல்வது என்ன என்று பார்க்கலாம்.

அதற்கு முன்....

எந்த ஒரு கருவியையும் கையாளும் முன் அந்த கருவியின் இயல்பு பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா.

ஒருவன் இயந்திர துப்பாக்கியை எடுத்து கைத்தடி போல பயன்படுத்தி எதிரியை அடித்தால் எப்படி இருக்கும்? அந்த துப்பாக்கியின் இயல்பு அறிந்தால் அவன் அதை விட சிறப்பாக பயன்படுத்துவான் அல்லவா? மனம் ஒரு கருவி தான் அதை பயன்படுத்த அதன் இயல்புகளை குறித்த ஞானம் அவசியம்.

அதன் இயல்பை பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சர்யமாக கூட இருக்கலாம்... 

உங்களுக்கு எப்போதும் பல சிந்தனைகள் வருகிறதே (நல்லதோ கெட்டதோ) அது எதுவும் நீங்க சிந்திக்கிறதல்ல. சும்மா தேமேனு வைக்கப்பட்ட ரேடியம் எபோதும் கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ.. 'பிரவுனியின் மோஷன்' இல் துகள்கள் எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ... அப்படி மனதில் சதா எண்ணங்களின் தள்ளு முள்ளு ஓடி கொண்டே இருப்பது அதன் இயல்புஆனால் அதை எல்லாம் தங்களது சிந்தனையாக நினைத்து குழப்பி கொள்வது தான் மனிதன் செய்யும் தவறு... (வேணும்னா ஒன்னு பண்ணி பாருங்களேன் கொஞ்ச நேரம் சிந்திக்காம இருக்க முயன்று பாருங்களேன் அப்போ தெரியும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கு என)

நமது கவனம் இல்லாமலே இதயம் துடிப்பது போல... நமது கவனம் இல்லாமலே ஜீரண மண்டலம் வேலை செய்வது போல... நமது கவனம் இல்லாமலே சுவாசம் வந்து போவது போல... சொல்ல போனால் நமது கவனம் இல்லாததால் தான்... சிந்தனைகள் நமக்குள் வந்து போகின்றன. பகல் நேரம் பூராவும் உள்வாங்கிய வெப்பதை இரவில் வெளியிடும் ஒரு பாறையை போல வாழ்வில் அன்றாடம் நமது கவனதிற்கே வராமல் உள்வாங்கும் பல தரவுகளை மனம் சிந்தனைகளாக வெளிப்படுத்துகிறது. இரவில் கனவாக வெளிப்படுத்துகிறது..

"மனம் பகலில் காணும் கனவு = சிந்தனை
இரவில் சிந்திக்கும் சிந்தனை = கனவு"
என்று ஒரு கூற்று உண்டு.

இதில் நல்ல சிந்தனை கேவலமான சிந்தனை குற்ற சிந்தனை வக்கிர சிந்தனை புனித சிந்தனை எல்லாமே அடக்கம்.

இதில் இப்போது நான் சொல்ல போவது தான் மிக மிக முக்கியமானது. அந்த சிந்தனைகள் எதனுடனும் நீங்கள் தங்களை அடையாள படுத்திக் கொள்ளாதவரை... அல்லது அந்த சிந்தனைக்கு மறுவினை ஆற்றாதவரை அந்த சிந்தனை உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதற்கு நீங்கள் ஒரே ஒரு சின்ன ரெஸ்பான்ஸ் (அதை விரும்பியோ அல்லது அதற்கு எதிராகவோ) கொடுத்து விட்டால் அது உங்களை இருக பிடித்துக் கொள்கிறது.

இப்போ இதை கவனியுங்கள்...

உங்களுக்குள் ஒரு நாள் ஒரு மிக கீழ்த்தனமான சிந்தனை வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்?

அது மாதிரி சிந்தனை உள்ளே வந்த உடன் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் மிக கவனமாக அதை கவனிப்பது... ஒரு கேவலமான சிந்தனை உள்ளே ஓடி கொண்டிருக்க நீங்கள் அதை ஏதோ படம் பார்ப்பது போல என்ன எல்லாம் சிந்திக்கிறது என உற்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

'ச்சே எவ்ளோ மட்டமான சிந்தனை' என்றோ அல்லது 'ஐயோ இப்படி ஒரு எண்ணம் வருதே என்ன செய்வேன்' என்றோ அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் காலி.... அது உங்களை பற்றிக் கொள்ளும்... குறிப்பாக ஒரு விஷயத்தை வேணாம் வேணாம் என அழுத்தமாக சொல்ல சொல்ல மிக ஆழமாக பிடித்து கொள்ளும். அது மனதின் இயல்பு. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் அதை உற்று கவனித்து கொண்டே இருந்தால் ஒரு மேஜிக் நடக்கும் அது எப்படி தானாக வந்ததோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி சென்று கடைசியில் மறைந்து விடுவதை பார்க்கலாம். மனம் தேவதையாக தரிசனம் தருவது இந்த கணத்தில் தான்.

ஒரு வேலை மீண்டும் வந்தால்? மீண்டும் அதே உற்று கவனி வைத்தியம் தான்.

இந்த தனக்குள் உற்று கவனிப்பது இருக்கே இதற்கு இன்னோரு விசித்திர பயன்பாடு உண்டு. நமக்குள் வரும் கலை... அன்பு... ரசனை... ஆனந்தம்... மகிழ்ச்சி... போன்ற போன்ற நேர்மறை ஆற்றல்களை மேலும் தக்க வைக்க.

கோபம்... பொறாமை... ஆற்றாமை... வன்மம்... போன்ற எதிர்மறை ஆற்றலை மறைந்து போக செய்ய இது உதவுகிறது. எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அது ஒரு பயிற்சி...

ஒரு ரோஜாவை பார்க்கிறீர்கள் நமக்குள் அந்த அழகு ஒரு மாறுதலை உண்டாக்குகிறது... ஒரு குழந்தையின் சிரிப்பு... ஒரு சூர்யோதம்... ஒரு ஓவியம்... நமக்குள் ஒரு குதுகூலத்தை உண்டு பண்ணுகிறது. அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் நடக்கும் மாற்றத்தை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஒரு சங்கீதம் கேட்கிறீர்கள் மனதில் அது ஒரு இதத்தை கொடுகிறது.. அப்போ சட்டென்று கண்ணை மூடி மனதுக்குள் ஆழ்ந்து அந்த இதத்தை உற்று கவனித்து அதனுடன் ஒன்றி போக வேண்டும்.

இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டும். இதேபோல கோபம்.. பயம்.. வெறுப்பு.. வரும்போதும் உள்ளே உற்று கவனித்து அது செய்யும் மாறுதலை கவனிக்க வேண்டும்.

அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

தானாகவே நேர்மறை ஆற்றல் நமக்குள் தங்கும் எதிர்மறை விலகும்

அதெப்படி நடக்கிறது? அது எப்படி சரியாய் இது தங்கும் அது ஓடும் என்றால் அதான் மனதின் இயல்பு.

ஒரு பெரிய வீடு... அதில் விருந்தாளி வரும்போது வீட்டுக்காரர் சரியாய் கவனிக்கவில்லை என்றால் என்னாகும்? விருந்தாளி வருவது குறைந்து போகும்.

அதே வீடு... அங்கே திருடன் வந்ததை வீட்டுக்காரர் சரியாய் கவனிக்கவில்லை என்றால் என்னாகும்? திருடன் வருவது அதிகம் ஆகும்.

இதையே தலைகீழாக சொல்வதானால். அந்த வீட்டுக்காரர் யார் வந்தாலும் கவனிபாரேயானால்... தானாக திருடன் ஓடி போவான். நல்ல விருந்தாளிகள் அதிகம் வருவார்கள். மனம் கூட இப்படி தான் செயல் படுகிறது.

நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சூட்சமம்... எப்போதும் மனதை கவனி. 

புத்தர் தங்கள் சீடருக்கு எது செய்தாலும் நாள் முழுதும் மனதை கவனித்தபடியே இரு என்று வற்புறுத்தினார். அப்படி செய்தால் தூக்கத்தில் கூட மனதை கவனிக்க முடியும்.

எண்ணங்களில் நாம் ஏன் இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?

தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது. அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

மனதை பற்றி இன்னோரு மகா ரகசியம் இப்போது சொல்கிறேன்... இந்த பிரபஞ்சம் எங்கும் மனிதர்களின் எண்ணங்கள் பரவி இருக்கிறது அதில் நல்ல.. தரமான... வலிமையான... அன்பான... சிந்தனையும் உண்டு. கேடுகெட்ட சிந்தனையும் உண்டு. உங்கள் மூளை எதை பற்றி தொடர்ந்து சிந்திக்கிறதோ... அது சம்பந்தமான தகவலை இந்த பிரபஞ்சத்தில் இருந்து அது உறிஞ்சி இழுக்கிறது.

அது உங்களுக்கே தெரியாத உங்கள் திறனுக்கு அப்பாற்பட்ட ஒரு தகவலாக கூட இருகலாம். ஆனால் அதை மூளையால் கிரகிக்க முடியும்.

மனம் ஒரு கருவியை போன்றது. எந்த ஒரு கருவியை வாங்கினாலும் அதனுடன் அந்த கருவியை கையாள அல்லது பராமரிக்க 'டிப்ஸ் ' கள் கொண்ட கையேடு கொடுக்கப்படுவதை போல இந்த பாகதில் அப்படி சில டிப்ஸ் களை மட்டும் கொடுத்து கட்டுரையை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.

ஒரு சீடன் தன் குருவை அணுகி குருவே நான் இரண்டு மாடுகளை வளர்க்கிறேன் அதில் ஒன்று நல்லது இனொன்று கெட்டது ஒரு வேளை என்றைக்காவது இரண்டிற்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்? என்று கேட்டான். அதன் பொருள் தனக்குள் நல்ல மனமும் உண்டு கெட்ட குணமும் உண்டு இரண்டிற்கும் சண்டை வந்தால் எது வெல்லும் என்பது தான்.

பொதுவாகதுவாக உலகில் நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு இல்லை. இரண்டும் கலந்தே மனங்கள் இருக்கின்றது. அது தான் மனதின் இயல்பும் கூட. ஒருவனுக்கு நல்ல மனம் நல்ல சிந்தனை மட்டுமே வரும்படி மனம் படைக்கப்பட்டு அவன் நல்லவனாக இருந்தால் அதில் சிறப்பு என்ன இருக்க முடியும். நல்லதும் கெட்டதும் கலந்து இருந்து நாம் நல்லவர்களாக இருக்கும் போது தான் அது சிறப்பு.

ஒரு ஃபுட் பால் விளையாட்டில் கோல் கீப்பர் யாரும் இல்லை என்றால் அதில் கோல் போடும் வீரன் ஒரு போதும் சிறந்தவன் அல்ல. கோல் கீப்பர் தடையாக இருந்து அதை மீறி கோல் போடுபவனே நல்ல விளையாட்டு வீரன். நீங்களும் வாழ்வில் நல்ல விளையாட்டு வீரன் ஆக வேண்டும் என்றால் தடையை ஏற்க கற்க வேண்டும்.

நமக்குள் நல்லது கெட்டது இரண்டும் இருக்கே அப்போ இரண்டில் எது வெற்றி பெறும் அதை தீர்மானிப்பது எது? அந்த சீடனுக்கு குரு சொன்ன பதில் என்ன தெரியுமா? 

எந்த மாட்டிற்கு நீ அதிக தீவனம் போட்டு அதிக ஊட்டம் கொடுத்து வைத்து இருக்கிறாயோ அதுவே ஜெயிக்கும். நமக்குள் தீய எண்ணங்கள் இருப்பது இயல்பு ஆனால் நாம் அதற்கு ஊட்டம் கொடுக்காமல் நல்லதிற்கு ஊட்டம் கொடுப்பது நமது கையில் கொடுக்கப்பட்ட சுதந்திர வாய்ப்பு.

மனம் என்பது கட்டவிழ்த்து விட்டுவிட்டால் அடக்குவதற்கு கடினமான ஒரு காளை. ஆனால் அவிழ்த்து விடாமல் இருப்பது எளிது.

மனதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எண்ணங்களை உண்டாக்கி அலைய விட்ட பின் அதை அடக்குவது கடினம் ஆனால் அந்த எண்ணம் வர ஆரம்பிக்கும் போதே அதை உற்று கவனித்து வர விடாமல் செய்வது எளிது என்கிறார் ஓஷோ.

தீய எண்ணங்களில் இருந்து தப்ப ஒரு சிறந்த வழி அது வரும் போதே கவனித்து அதை வர விடாமல் செய்வது தான்.

குற்ற உணர்வு உங்கள் மனதின் வளர்ச்சியை பாதிக்கும். ஒருபோதும் நாம் கொள்ள கூடாத ஒரு உணர்வு குற்ற உணர்வு. 

இருட்டை எதிர்க்க நாம் இருட்டை பற்றி யோசிக்க கூடாது வெளிச்சத்தை பற்றி யோசிக்க வேண்டும். தீமையை எதிர்க்க நாம் நினைக்க வேண்டியது தீமையை பற்றி அல்ல. மாறாக வலிமையான நல்லதை பற்றி என்கிறார் விவேகானந்தர்.

"உங்களால் ஒரு விஷயம் முடியும் என்று நினைத்தாலும் உங்களால் ஒரு விஷயம் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மை தான்" என்கிறார் ஒரு அறிஞர். 

எப்படி?

அவர் கொஞ்சம் குள்ளம்.. இதில் கொஞ்சம் பெண் குரல் போன்ற கீச்சு குரல் வேறு. வாழ்க்கையில் எத்தனை இடத்தில் இதனால் தலை குனிவு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை. அவரை பார்த்து அப்படி யாராவது குறைத்து பேசினால் பேசியவர் 10 பேரால் நகைக்கப்படுவார். காரணம் அவர் அப்படி ஒரு அசாத்திய மனிதர். மக்கள் பொதுவாக சாதனையாளர் என்றாலே அவரை 'ரோல் மாடலாக' காட்டும் அளவு தன்னை உயரமாக வைத்து இருக்கும் நபர் அவர். பணமும் புகழும் அவர் காலடியில். நான் சொன்ன அந்த உயரம் குறைவான கீச்சு குரல் கொண்ட நபரின் பெயர் "சச்சின் டெண்டுல்கர்"

புதிதாக நடிப்பு துறைக்கு காலடி வைத்திருக்கும் புது நடிகன் அவர். சினிமா இன்டெஸ்ட்ரி அவரை நிராகரிக்கிறது அதற்கு 2 காரணங்கள் சொல்கிறது. ஒன்று அவர் மிக உயரமான இருக்கிறார் மக்கள் அவரை ஹீரோவாக ஏற்பது கடினம். இரண்டு அவர் கண்களில் ஆண்மை இல்லை மாறாக பெண்கள் போன்ற பெண்மை சாயல் கலந்த மயக்கும் கண்கள் அவருக்கு. 

என்ன நடந்தது என்றால் தடையை மீறி படத்தில் நடித்தார். வெற்றி பெற்றதோடு இல்லாமல் மக்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக மாறினார். வெறித்தனமான ரசிகர்களை உண்டாக்கினார். அவரது ரசிகர்களிடம் ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் உயரம் இனொன்று அவரோடைய வித்யாசமான கண்கள். அந்த நடிகர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் 'அமிதாப் பச்சன்'. இதுவரை தனது மொழி தவிர வேறு மொழி படத்தில் நடித்திராமலே இந்தியா முழுதும் புகழ் அடைந்த ஒரே நடிகர்.

இவர்கள் தங்களால் முடியாது என்று நினைத்திருந்தால் அதுவும் உண்மை தான். ஆனால் தன்னால் முடியும் என்று நினைத்தார்கள் அதுவும் உண்மை தான்.

எந்த ஒரு கருவிக்கும் பராமரிப்பு கெடு இருக்கும். ஒரு இண்டஸ்ட்ரியில் தினம் பார்க்க வேண்டியவை.. வாரம் தோறும் பராமரிக்க வேண்டியவை 6 மாதத்திற்கொருமுறை பராமரிக்க வேண்டியவை... வருடம் ஒரு முறை பார்க்க வேண்டியவை என்று இருக்கும்.

மனம் தினம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு கருவி. அதை பராமரிக்கும் செயலுக்கு பெயர் சுய ஆய்வு அல்லது சுய விமர்சனம். ஒவ்வொரு நாளும் தன்னை தானே ஆய்வு செய்து இன்று நாம் செய்ததில் நல்லது என்ன கெட்டது என்ன மாற்ற வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டும். இது தவிர ஒவ்வொரு வினாடியும் தனக்குள் நிகழ்வதை கவனித்த வண்ணம் இருப்பது ஒரு நல்ல பயிற்சி.

நேர்மறை சிந்தனையும் வெற்றி மனோபாவமும் வெறும் பயிற்சிகள் மட்டுமே. மற்ற செயல்களை பழகுவதை போல இதை பழக்கத்தின் மூலம் நமது வாழ்வில் இதை கொண்டு வர முடியும்.

நண்பர்களே இந்த இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிக வலிமையானதொரு கருவி... ஒரு கொடை... ஒரு பரிசு இந்த மனம். இது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.. இதை தவறாக கையாண்டால் நம்மை அழித்தொழிக்கும் பிசாசு. இதை சரியாக புரிந்து கொண்டு சரியாக கையாண்டால் இந்த தேவதையை வசமாக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

வாழ்த்துக்கள்.

பாகம் 12 - தேவதை தரிசனம் பதிவை காணொளி வடிவில் காண 👇




இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














மனம் எனும் மாய தேவதை! பாகம் 11 - சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள்

 


பாகம் 11 : சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள்


    சிந்திக்கும் முறை என்பதை பற்றி என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா?

நாம் குழந்தைகள் வளர்ப்பில் குழந்தைக்கு சாப்பிடுவது எப்படி, உட்காருவது எப்படி, நடப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கிறோமே அவர்களுக்கு சிந்திப்பது எப்படி என்று என்றைக்காவது சொல்லி கொடுகிறோமா என்றால் இல்லை. காரணம் அப்படி ஒன்னு இருப்பது நமக்கே தெரியாது..

எந்த செயலையும் அதை சிறப்பாக செய்வதெப்படி என்ற வழிமுறைகள் உள்ளபோது சிந்திப்பது என்பதும் ஒரு செயல் தானே அதை சரியாக செய்ய வழிமுறைகள் நிச்சயம் இருக்கத் தானே வேண்டும். ஆம் நமது நாட்டில் பல ஞானிகள்... சான்றோர்கள்... மனம் ஆராய்ச்சி செய்தவர்கள்... வாழ்வை புரிந்தவர்கள் பல சூட்சமங்களை அவ்வபோது சொல்லி சென்றிருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஒரு சிறுவனுக்கு உடல் சரி இல்லை என்றால் அவனை வழக்கத்திற்கு அதிகமாக அன்பு காட்டி கவனிக்கின்றோம் அல்லவா ஆம் அது இயல்பு தான். ஆனால் அதே நேரம் ஆரோக்கியமின்மையைப் பற்றிய சிந்தனையை அந்த குழந்தைக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதாவது உடல் நிலை சரியில்லாத போது அதிக கவனிப்பு கிடைப்பதால் அவர்களின் ஆழ்மனம் நோயை மறைமுகமாக விரும்புகிறது என்கிறார்கள். எனவே அவர்களை கவனித்து கொள்ளும் அதே நேரம் அவனுக்கு நாம் "நீ இந்த மாதிரி நோய் நிலைல இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..." என்கிற ரீதியில் சொல்ல வேண்டும். நாம் குணம் ஆனா தான் நமக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் போல என்று அவனை சிந்திக்க வைக்க வேண்டும்.

எனவே நோய் பற்றி அவன் தனக்குள் சிந்திக்கும் சிந்தனை "ஏய் நோயே உன்னை நான் அறவே வெறுக்கிறேன். உன்னை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. உனக்கு இடம் கொடுபதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை" என்கிற ரீதியில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத ஆனால் பெரும்பாலும் பெற்றோர் கொடுத்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் உள்ளது. அது தான் குற்ற உணர்வு.

குற்ற உணர்வு குற்றங்களை குறைக்கும் என்று நாம் நம்புவது தான் காரணம். எனவே அவன் ஏதாவது தவறு செய்தால் அதை சொல்லி அவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருவன் பல சப்ஜெக்டில் பெயில் ஆகிவிட்டால் அவனை மட்டம் தட்டி திட்டி குற்ற உணர்வை ஏற்படுத்தினால் அவன் வளர்ச்சி அங்கேயே பாதிக்க படுகிறது. 

உனக்கு எல்லாம் கணக்கு ஜென்மத்துல வராது என்று அவன் கல்வி காலம் முடிவிற்குள் குறைந்தது 100 முறை ஒருவனை கூறும் ஆசிரியர் நிஜமாகவே அவனுக்கு கணக்கு வரும் சாத்தியத்தை குறைத்து விடுகிறார்.

அப்போ தப்பு பண்ணா கண்டிக்க கூடாதா என்றால் அப்படி இல்லை அவன் மனம் செழுமையாக வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் அவனை ஒரு போதும் குற்ற உணர்வு கொள்ள அனுமதிக்கக் கூடாது. உலகின் எவ்ளோ பெரிய குற்றத்தை செய்தாலும் நம்மால் அதில் இருந்து வெளி வர முடியும் என்று நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

'கீழ்தரமானதில் இருந்து வெளிவர நாம் கீழ்தரமானதை பற்றி யோசிக்க கூடாது அதற்கு மாறாக வலிமையானதை பற்றி யோசிக்க வேண்டும்' என்கிறார் விவேகானந்தர்.

குற்றவுணர்வு ஒருவன் மனதின் வளர்ச்சியை கொல்கிறது... நல்ல செழிப்பான மனங்களை உண்டாக்க நினைத்தால் ஒரு போதும் நீங்கள் அந்த மனதிற்கு குற்ற உணர்வை கொடுக்க கூடாது. (இருளை போக்க வேண்டும் என்றால் நீங்கள் இருளை கையாள்வதன் மூலம் இருளை போக்க முடியாது. மாறாக அதற்கு எதிரான வெளிச்சத்தை கொண்டுவருதல் எப்படி என்று யோசிப்பது தான் பலன் தரும்)

இன்றும் கூட பல இளைஞர்கள் தேவையே இல்லாத விஷயத்திற்கு குற்ற உணர்வுக்கு ஆளாகி தன்னை தானே சுருக்கி கொள்கிறார்கள். அதில் முக்கியப் பங்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் நமது சமூகத்திற்கு உண்டு என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

பள்ளி என்பது மாணவனை கல்வி கற்று கொடுத்து அவன் வாழ்க்கையில் உயர உதவும் ஒரு இடம் என்ற மட்டில் தான் நமக்கு தெரியும். ஆனால் பள்ளிகள் மாணவர்கள் மனதின் மேல் ஏற்படுத்தும் அழுத்தம் டிப்ரஷன் எவ்ளோ என்பது நம்மில் பல பேர் அறியாத உண்மை. எப்போதும் அவனை பயத்திலேயே வைத்து அவனை நசுக்கி கொண்டிருப்பதில் பள்ளிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த பிஞ்சு மனம் சுதந்திரமாக வாழ்வை அனுபவிக்க வேண்டிய வயது அது. அதில் கொண்டு போய் பயம்... கட்டுப்பாடு... மிரட்டல்... கெடுபிடி... குற்ற உணர்வு... என்று பல விஷ விதைகளை விதைகின்றோம். 

பொதுவாக நம்மை விட சிறுவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் புதிதாய் ஒன்றை கற்பது என்றால் அவர்களுக்கு மிக பிடிக்கும். பள்ளிகள் புதியவைகளை கற்பிக்கும் இடம் என்றால் அவன் அங்கே விரும்பி அல்லவா செல்ல வேண்டும். இன்று சிறுவர்கள் காலையில் உற்சாகமாக பள்ளி செல்லவேண்டிய நேரம் பாருங்கள்... போர் முடிந்து களைப்பாக வரும் போர் வீரன் போல தலையை தொங்க போட்டுகொண்டு செல்கிறார்கள். அதே பள்ளியில் நாள் முழுதும் களைத்து போய் வெளியே வரவேண்டிய நேரம் பாருங்கள்... ஏதோ காலையில் இப்போது தான் எழுந்து வருவதை போல அவ்வளவு உற்சாகமாக புத்துனர்ச்சியுடன் கத்தி கொண்டு ஓடி வருகிறார்கள். இந்த முரண்பாடு ஆச்சர்யமாக இல்லையா? நம்மை சிந்திக்க வைக்க வில்லையா?

தனது கடைசி தேர்வு முடிந்த உடன் தான் வருடம் முழுதும் படித்து வந்த புத்தகத்தை வன்மத்துடன் சுக்கு நூறாக கிழித்து காற்றில் பறக்க விட்டு மகிழும் செயல் உங்களை யோசிக்க வைக்க வில்லையா... வருடம் முழுதும் புத்தகத்தை அவன் என்ன ஒரு மன நிலையில் பார்த்து கொண்டிருந்திருப்பான் யோசியுங்கள். 

எழுதி வைத்து கொள்ளுங்கள் ஒரு மானவன் என்றைக்கு பள்ளி என்றால் மிக உற்சாகமாக துள்ளி செல்கிறானோ அன்றைக்கு தான் நாம் மனதை செழுமையாக்கும் கல்வி கொடுத்து கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.

ஒரு நாட்டையே சிறந்த மனிதர்கள் உலவும் இடமாக மாற்றும் சக்தி பள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பதால் தான் இவ்வளவு சொல்கிறேன். பள்ளிகளை குறை கூறுவது எனது நோக்கமல்ல.

பள்ளியும் சரி சமூகமும் சரி ஒருவனுக்கு குற்ற உணர்வு வளர்க்குமேயாயின் குற்ற உணர்வின் விளைவுகள் நாம் கற்பனை செய்வதை விட மிக அபாயமானவை... இன்று சமூகத்தில் நடக்கும் கொடூர பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் மீதான பலாத்காரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது ஒரு சரியாக கையாளப்படாத மனம் தான் என்பதை மறக்க கூடாது.

ஒரு "Thought Experiment" கற்பனை சோதனை செய்து பாருங்கள்... 

நாம் பண்ண வேண்டிய சோதனை என்னவென்றால். ஒரு மனிதனுக்கு வயிறு பசிப்பது மிக இயற்கையான ஒன்று அல்லவா... ஆனால் நாம் இதை தவறாக கற்பித்து ஒரு சிறுவனை வளர்க்க வேண்டும். அதாவது வயிறு பசித்தால் அது கடவுளுக்கு எதிரானது... தவறானது... என்று சொல்ல வேண்டும். எப்போதெல்லாம் அவனுக்கு பசி வந்து சாப்பாட்டை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அவனை குற்ற உணர்வுக்கு ஆளாக்க வேண்டும். அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டால் அவனை குத்தி காட்ட வேண்டும். பசி என்ற உணர்வு அவனுக்குள் வரும் போதெல்லாம் அதை வெளிப்படுத்தினால் அதை நாம் கேவலமாக பார்க்க வேண்டும்.

இப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

நிச்சயமாக சாப்பாட்டை அவன் திருட்டுத் தனமாக சாப்பிடுவான். பிறகு அதற்கு வருத்தப்பட்டு மனம் ஓடிந்து சுருங்கி போவான். எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒரு நாளைக்கு 3 முறை வர வேண்டிய உணவு பற்றிய சிந்தனை அவனை 24 மணி நேரமும் ஆட்கொள்ளும்... எப்போதும் சாப்பாட்டை பற்றிய சிந்தனையிலேயே இருப்பான்... ரசித்து உணவை உண்ணுதல் என்பது அவனுக்கு என்னவென்றே தெரியாமல் போகும். இப்படி பசி சாப்பாடு என்ற இயல்பான விஷயத்தையே அருவெறுபாக அசிங்கமாக மாற்ற முடியும். 

நல்ல வேலை சாப்பாட்டு விஷயத்தில் நாம் அப்படி செய்வதில்லை ஆனால் வேறு பல இடங்களில் இதைச் செயகிறோம். ஒரு குறிபிட்ட பருவத்தில் வரும் இயற்கையான உணர்வு பற்றி சரியாக சொல்லித்தர தவறுகிறோம். இப்படி இயற்கையில் அழகான விஷயங்கள் பல அசிங்கமாக அருவெறுபாக வக்கிரமாக பரினாமம் அடைந்திருக்கிறது.

ஒருவர் தனக்கு யூரின் வரும் போதெல்லாம் மன சோர்வும் குற்ற உணர்வும் தன்னை தாக்குவதாக சொன்னதை பற்றி சிக்மெண்ட் பிராய்ட் இன் மனோதத்துவ நூலில் படித்து இருக்கிறேன். இதனால் தனது வேலை பிஸினஸ் எல்லாமே பாதிக்கப்படுவதாக அவர் சொல்லி இருந்தார். அதிலிருந்து மீள அவருக்கு நீண்ட நாள் ஆயிற்றாம். அது உண்டான காரணம் அவர் சிறுவயதில் 'ஒண்ணுக்கு வருது சார்என்று வகுப்பில் கேட்ட போதெல்லாம் கடுமையாக கண்டித்த ஆசிரியராம். மேலும் இதற்கு பயந்து சிறுவயதில் பல நாள் வகுப்பு முடியும் வரை சிறுநீரை அடக்கியே வைத்திருப்பாராம். "சிறுநீர் கழிப்பது" என்ற மிக இயல்பான ஒரு செயல் ஒரு மனிதனை எவ்ளோ பாதிக்க முடியும் பாருங்கள்.

எனவே ஒரு வளரும் மனிதன் ஒதுக்க வேண்டிய ஒன்று இந்த குற்ற உணர்வு. அதை தூக்கி எறிந்து எப்போதும் வலிமையானதை சிறந்ததை பற்றி சிந்திக்க நாம் கற்று கொடுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து சிந்திப்போம்...

பாகம் 11 - சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள் பதிவை காணொளி வடிவில் காண 👇





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














மனம் எனும் மாய தேவதை! பாகம் 10 - தொடர்பு சூட்சமம்

 


பாகம் 10 : தொடர்பு சூட்சமம்


          ன்றைய கால கட்டத்தில் மனிதன் இயற்கை உடனான தொடர்பில் இருந்து பல வகைகளில் ஒதுங்கி இருக்கின்றான். விளைவாக இயற்கையின் அறிவை பல இடத்தில் தவற விடுகிறான். உதாரணமாக மிக இயல்பான செயல்களாகிய உட்காரும்போது, நடக்கும்போது, உறங்கும்போது கூட முந்தைய கால மனிதன் பூமியுடன் கொண்டிருந்த தொடர்பு இன்றைய மனிதன் கொண்டிருக்கவில்லை.

அன்றைக்கு ஆற்றில் ஓடையில் குளித்தபோது நீருடன் கொண்டிருந்த உறவு இன்று ஷவரில் குளிக்கும் மனிதன் கொண்டிருக்கவில்லை. 

இதனால் என்ன ஆகி விட போகிறது?

சாதாரணமாக நிலம் நீர் காற்று போன்றவற்றிற்கு நமது உடல் வேறு விதத்தில் மறுவினை ஆற்றுகிறது என்கிறார்கள். காரணம் மனித உடலே அந்த ஐம்பூதங்களின் கலவை தான். நாம் குளிக்கும் சமயம் வெறும் உடல் அழுக்கை போக்குவது மட்டும் அல்ல நீரின் வேலை. அது நமது உடலுடன் தொடர்பு கொண்டு உடலில் பல நுணுக்கமான மாறுதல்களை உண்டாக்குகிறது என்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வெவேறு நிறத்தில் உடலில் இருந்து வெளிப்படும் ஆரா என்கிற ஒளி வட்டம் கற்பனை அல்ல அதை நுணுக்கமான விஞ்ஞான கருவி கொண்டு படம் பிடித்து நிரூபித்து இருக்கிறார்கள் (அந்த கருவி பெயர் Kirlian Camera)

தைரியமானவனுக்கு ..கோழைக்கு ...நேர்மறையானவனுக்கு எதிர்மறை சிந்தனை கொண்டவனுக்கு என்று இந்த ஆரா தனி தனியாக வெவேறு நிறத்தில் வெளிப்படுகிறது. மகான்களின் ஆராகள் அவர்கள் உடலை விட்டு வெளியே வியாபித்திருக்கும் என்றும் அந்த எல்லைக்கு உள்ளே வருபவர்கள் எந்த முயற்சியுமின்றி அதை உணர முடியும் என்றும் சொல்கிறார்கள்.

புத்தர் இருந்தபோது அவர் இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் வரை சுற்றலவில் உள்ளவர்கள் சும்மா கண் மூடி அமர்ந்தாலே தியான தன்மையை உணர முடிந்ததாக சொல்கிறார்கள்.

கடவுள் மற்றும் மகானின் படத்தை வரையும் போது தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் வரைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள் அது அந்த ஆரா தான்.

அந்த ஆராவை ஒரு சாதாரண குளியல் ..நீர் உடனான தொடர்பு சுத்த படுத்துகிறது. நல்ல குளியலுக்கு பின் நாம் உணரும் புத்துணர்ச்சிக்கு காரணம் இந்த ஆராவின் சுத்திகரிப்பு தான். ஒரு நீர் நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தை கவனிக்க நமக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அது இல்லாததால் உடலில் நீர் செய்யும் ரகசியதை நம்மால் உள்வாங்க முடியாமல் போகிறது.

சரி இயற்கையை உள்வாங்குவது தான் எப்படி? அதற்கு ஏதும் நுட்பங்கள் உள்ளதா?

இயற்கையை உள்வாங்க சில வழிமுறைகள் உண்டு...

ஒரு உதாரணம் சொல்கிறேன். காலையில் ஒருநாள் ஒரு அழகிய சூர்யோதயத்தை பார்க்கிறீர்கள். ரசிக்கிறீர்கள் அடடா என்ன அழகு என்கிறீர்கள். இப்போ என்ன நடந்ததென்றால் சூரிய உதயம் கொடுக்கும் சூட்சமத்தை உங்கள் மனம் உங்கள் உடல் உள்வாங்கவில்லை. காரணம் அதை செய்ய நீங்கள் நிகழ் காலத்தில் இருந்து இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொன்ன 'ஆஹா என்ன அழகு' என்ற வார்த்தை உங்கள் கடந்த கால அனுபவத்தில் இருந்து வந்தது.

ஒரு சூரிய உதயத்தை பார்க்கும்போதே உங்கள் மனம் அதனுடன் தொடர்புடைய கடந்த கால நினைவுகளுடன் தொடர்பு கொள்கிறது. சூரிய உதயம் எப்போதும் அழகு தான் என்ற கருத்து ஏற்கனவே உங்கள் மனதில் உள்ளது. அந்த பழைய கருத்து தான் இன்று நீங்கள் பார்த்த உதயத்தின் மேல் பதிகிறது. ஆனால் இன்று நீங்கள் பார்க்கும் உதயமோ கடந்த காலத்துடன் தொடர்பு அற்றது. அது முதல் முதலாக இதோ இந்த கணத்தில் மட்டுமே நடக்கிறது. இதற்குமுன் அது நிகழ்ந்ததே இல்லை. இன்று நடக்கும் இந்த உதயம் இப்போது மட்டுமே முதல் முதலாக நடக்கும் ஒரு நிகழ்வு. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்து போகும் நிகழ்வு. இப்போது தவற விட்டால் ஒரு போதும் இதை நீங்கள் காணப் போவதில்லை. அடுத்த முறை காணப் போவது நிச்சயம் இந்த உதயமாக இருக்க போவதில்லை.

இப்போது நான் சொல்லும் இந்த விஷயம் மிக நுணுக்கமானது. இதை புரிந்து கொள்ள கொஞ்சம் கவனம் தேவை இல்லை எனில் இதில் உள்ள சூட்சமம் புரியாமல் போகும் வாய்ப்புள்ளது. ஒரு சூரிய உதயத்தை முழுமையாக உள்வாங்க நீங்கள் அங்கே முழுமையாக நிகழ் காலத்தில் இருந்தாக வேண்டும். அங்கே கடந்த கால அனுபவங்களை கொண்டு வரக்கூடாது. வாழ்க்கையில் இப்போது தான் முதல் முறையாக சூரியனை பார்க்கும் ஒருவன் என்ன மனநிலையில் பார்ப்பானோ அப்படி ஒரு மனநிலையில் மிகுந்த விழிப்போடு அதை பார்க்க வேண்டும்.

அப்போது அங்கே சிந்தனைக்கு இடம் இருப்பதில்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் முழுமையாக சூரிய உதயத்தை உள்வாங்கி பாருங்கள். அது நமக்குள் நிகழ்த்தும் மாற்றத்தை உணரலாம். அந்நிலையில் நீங்கள் இருப்பது வேறு ஒன்றும் இல்லை அது தான் தியான நிலை. அதாவது இங்கேயே இப்போதே இருப்பது. அந்த நேரத்தில் உங்களுக்குள் 'ஆஹா அழகு' என்று ஒரு வரி ஓடினால் போதும் உங்கள் அந்த நிலை களைந்து போகும். காரணம் அந்த நிலையில் நீங்கள் உண்மையில் இருந்தால் அங்கே அந்த கணத்தில் உங்களுக்குள் ஆஹா அழகு என்று சொல்ல யாரும் இருப்பது இல்லை. எங்கே இருப்பது நீங்கள் அல்லாத வெறும் அனுபவம் மட்டும் தான்.

ஒரு நல்ல தூக்கத்தை ஒரு போதும் தூக்கத்தில் உணர முடியாது. விழித்து எழுந்த பின் தான் ஆஹா அருமையான தூக்கம் என்று சொல்ல முடியும். அதே போல தான் ஒரு விஷயத்தை முழு விழிப்புடன் உள்வாங்கும் போது அங்கே வார்த்தைகள் உலா வர முடியாது. அந்த செயல் முடிந்த பின் மட்டுமே உங்களால் அதை வார்த்தை வர்ணனை செய்ய முடியும். இந்த வார்த்தை அற்ற அனுபவத்தை சரியாக புரிந்து கொண்டால் நீங்கள் தியானம் என்றால் என்ன.. இயற்கையுடன் ஒன்றினைதல் என்றால் என்ன போன்றவற்றை புரிந்து கொண்டவராவீர்கள்.

மேலே சொன்ன இந்த சூட்சமத்தை பற்றி நமக்கு எடுத்து சொன்னவர் ஓஷோ.

சரி இதனால் என்ன ஆகும்?

இந்த மாதிரி உள்வாங்களோடு நீங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகினால். நீங்கள் குளிக்கும்போது நடக்கும்போது சாப்பிடும்போது படுக்கும்போது அமரும்போது உங்களை சுற்றி உள்ளதை இதை போல உள்வாங்கினால் இயற்கையுடன் அறுந்து போன தொடர்பை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்கிறார் ஓஷோ.

நடக்கும் போது நிலத்தை பாதத்தின் அடியில் உணர்ந்தபடி ஒவ்வொரு அடியையும் மிகுந்த விழிப்போடு உணர்ந்து நடந்தால் அந்த நடையே உங்களுக்குள் பல மாறுதலை உண்டாகும் என்கிறார் அவர். 

இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.

இந்த தியானம் விழிப்புணர்வு இப்படிப்பட்ட பெரிய பெரிய புரியாத வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், வாழ்க்கையை செழுமையாக வைத்து கொள்ள எளிதில் புரியும்படி எளிமையான சூட்சமம் ஏதும் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ...இருக்கிறது. அந்த சூட்சம வார்த்தைக்கு பெயர் "மனோ பாவம்."

"மனோ பாவம்" என்பது தெரிந்த எளிய விஷயம் தானே என்று விட்டுவிட முடியாது. நமக்குள் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தும் வலிமை இந்த மனோபாவங்களுக்கு உண்டு...

'மனோபாவங்கள்' என்பது கேட்பதற்கு எளிமையானது. ஆனால் அதன் செயல்கள் அதன் விளைவுகள் வலிமையானது. மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான். அந்த மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்...

உங்களை நல்ல வெய்யிலில் கொண்டு போய் விட்டு ஒரு 2 மணிநேரம் இப்படியும் அப்படியும் ஓடிக்கிட்டே இரு என்று சொன்னால் அது எவ்வளவு வேதனையான தண்டனையாக இருக்கும்? ஆனால் வெய்யிலில் கிரிக்கெட் ஆடும்போது மிக மகிழ்ச்சியாக நீங்கள் அதை தான் செய்கிறீர்கள். 

வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியும் என்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறி போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம்.

இது மனதை ஏமாற்றும் முறை அல்ல இது மனதை சரியாக பயன்படுத்தும் முறை. இந்த மனோபாவத்திற்கு விஷயங்களை தலைகீழாக புரட்டி போடும் வலிமை உண்டு.

இந்த நிஜ கதையை கவனியுங்கள்..

டாக்டரால் கைவிடப்பட்ட புற்று நோய் சிறுவன் அவன். சில காலம் கழித்து சோதனைக்கு வந்திருந்த அவனை சோதித்த டாக்டர்கள் மிக ஆச்சர்யபடத்தக்க வகையில் அவன் நோய் செல்கள் குணமாகி விட்டதை பார்த்து வியந்தார்கள். அவன் தாயிடம் எங்கே போய் என்ன மருத்துவம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு. அவன் தாய்...

"அவன் எப்பவும் வீடியோ கேம் ஆடிகிட்டே இருப்பான். அவன் கிட்ட உன் கேம்ல வர மாதிரி எதிரிங்க உன் ரத்ததுல வந்து இருக்காங்க. அவங்கள நீ கண்ணை மூடி கற்பனையில் ஷூட் பண்ணிட்டே இரு என்று சொன்னேன்" என்றார்.

தாய் சொல்லை வேதவாக்காக கொண்டு தொடர்ச்சியாக நோய் எனும் எதிரியை சுட்டு வீழ்த்தி கொண்டே இருந்தான் சிறுவன். அப்படி செய்வது தனது ரத்தத்தில் கலந்துள்ள எதிரியை விரட்டும் என்று நம்பினான். தொடர்ந்து மன துப்பாக்கியால் சுட்டு கொண்டே இருந்தான். நிஜத்தில் நோய் குணமானது.

இது எப்படி நடக்கிறது என்று அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால்...

உலகின் எல்லா டாக்டரும் அறிந்த அவர்களே ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. அதாவது எந்த மருந்தும் மாத்திரையும் மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவது இல்லை. நோயை எதிர்க்கும் சக்தி என்பது இயற்கையாக நமது உடலில் இருக்கும் வலிமை. மருந்துகள் செய்வது எல்லாம் அந்த சக்தியை உசுப்பி அதை செயலாற்ற வைக்கும் வேலை தான். மனதை சரியாக பயன்படுத்த தெரிந்தால் அந்த மருந்துகள் உதவி இன்றி உடலின் இயற்கை சக்தியை கையாள முடியும்.

எம்.எஸ் உதயமூர்த்தி தனது புத்தகத்தில் 'எமிலி கியூ' எனும் டாக்டரை பற்றி அடிக்கடி குறிபிடுவார். அவர் தங்களிடம் வரும் நோயாளிக்கு ஒரு விசித்திர மருத்துவம் செய்தவர். நோயாளிகளிடம் அவர் தினம் மனதுக்குள், 'நான் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாறி வருகிறேன். என் நோய் என்னை விட்டு மிக வேகமாக போய் கொண்டு உள்ளது' என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். காலையில் எழுந்ததும் 10 முறை.. தூங்கப் போகும் முன் 10 முறை எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் இதை சொல்லுங்கள்" என்றார்.

மிக ஆச்சர்யப்படத்தக்க வகையில் தங்களிடம் வெவ்வேறு காரணத்துக்காக வந்த நூற்றுக் கணக்கான நோயாளிகளை இந்த வைத்தியம் மூலம் குணமாக்கிக் காட்டினார்.

பொதுவாக இந்த விஷயத்தை பற்றி ஆராய்ந்த பல பேர் சொன்ன விஷயம் ஒன்று மிக முக்கியமானது.

அதாவது தனக்குள் கட்டளை கொடுக்கும் போது எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தி கொடுக்கக் கூடாது என்கிறார்கள். உதாரணமாக "எனக்கு இருக்கும் முடி கொட்டும் பிரச்னை வேகமாக குணமாகிறது" என்று சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் நான் முடி கொட்டும் பிரச்னை கொண்டவன் என்பதை தான் மனது முதலில் பதிய வைக்கும். மாறாக "நான் மிக ஆரோக்கியமான தலைமுடி கொண்டவனாக நாளுக்கு நாள் மாறி வருகிறேன்" என்று அழுத்தமாக சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

இன்னும் சில பேர் இந்த சுய கட்டளைகளை சொல்லும் போது கால இலக்கணத்தை கொஞ்சம் தவறாக சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

அதாவது "நான் வளமானவனாக மாறுவேன்" என்று எதிர்காலதில் நினைக்காமல்... "நான் வளமானவனாக இருக்கிறேன்" என்று நிகழ் காலத்தில் அதை சொல்ல வேண்டும் என்கிறார்கள். கால இலக்கணம் தவறாக இருந்தாலும் இந்த வழிமுறை தான் பலனளிக்கும் என்கிறார்கள்.

அன்பர்களே மனம் எனும் கருவியை சரியாக கையாள.. சரியாக சிந்திக்கும் முறை என்று பல சான்றோர்கள் நமக்கு சில சூட்சமங்களை பல தொழில் நுட்பங்களை சொல்லி கொடுத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.

அந்த சூட்சமங்களை பற்றி அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்...

பாகம் 10 - தொடர்பு சூட்சமம் பதிவை காணொளி வடிவில் காண 👇





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














மனம் எனும் மாய தேவதை! பாகம் 9 - இயற்கையுடன் இயைந்து

 




பாகம் 9 : இயற்கையுடன் இயைந்து


மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா?


      நீங்கள் சாபம் விடுவது அல்லது 'கண் வைப்பது' என்ற விஷயங்களை அவ்வப்போது கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா? அவைகள் எல்லாம் வேறு ஒன்றும் இல்லை நமது தீவிர எண்ணம் மூலமாக பிறரை பாதிப்பது தான். ஒருவர் "வயிறு எரிஞ்சி சொல்றன் நீ நாசமா போயிடுவ" எனும் போது அவர் எண்ணங்களின் தீவிரதை நாம் புரிந்து கொள்ளலாம். தீவிர எண்ணத்துடன் சொல்லப்பட்ட சாப வார்த்தைகள் எண்ணங்களின் சக்தியால் பலிக்கிறது... பாதிக்கிறது என்கிறார்கள்.

மிக தீவிர எண்ணத்துடன் ஒருவனை பொறாமையாக பார்க்கும் போது அந்த தீவிர தீய எண்ணம் அவனுக்கு ஏதேனும் கேடு விளைவிக்கிறது.

பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் பழக்கம் இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது வேறு ஒன்னுமல்ல மேலே பார்த்ததுக்கு நேர் எதிரான செயல். அதாவது நமது நல்ல எண்ணங்களை பிறர் மேல் செலுத்துவது... 'மனம் குளிர்ந்து சொல்ரேன் நல்லா இருப்பா' எனும்போது உண்டாகும் ஒரு நேர்மறை சக்தி அந்த சம்பந்தப்பட்டவர்களை அரண் போல காக்கிறது.

இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞான விளக்கம் தேடினால் கிடைபது கடினம் தான். சரி இப்போது விஞ்ஞான ரீதியான ஒன்றை பற்றி பார்க்கலாம்.

சில விலங்குகளிடம் உள்ள அசாத்திய திறமை இருக்கிறதே... சொல்ல போனால் இதை விஞ்ஞானத்தை கடந்தது என்றும் கூட சொல்லலாம்.

நீங்கள் புறா வளர்த்திருக்கிறீர்களா? புறாக்கள் பொதுவாக ஊரின் வரைபடத்தை நினைவில் வைத்து கொள்ளுவதில் கில்லாடிகள். அதாவது புறாவை நாம் திறந்து விடும் போது அவை பறந்து முழு நகரத்தை நினைவில் வைத்து கொள்கின்றன. எனவே தான் எங்காவது தூரமாக கொண்டு போய் விட்டால் மீண்டும் சரியாக நம் வீட்டை தேடி அதனால் வர முடிகிறது.

சரி இது எவ்ளோ தூரம் வரை இப்படி சாதிக்கிறது என்பதை அறிய அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தி அதை தூரமான இடத்தில் கொண்டுபோய் விட்டு சில ஆய்வாளர்கள் சோதித்து பார்த்தார்கள். ஆய்வு முடிவு மிக அதிசயமாக இருந்தது. சென்னையில் வளர்க்கப்பட்ட ஒரு புறாவை கொண்டு போய் டெல்லியில் விட்டால் கூட அது தன் வீட்டை தேடி வந்து விடுகிறது.

இது எப்படி சாத்தியம்? டெல்லி வரையா பறந்து சென்று ரூட்டை அது மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும்? நிச்சயம் இல்லை. அதன் உடலில் இயற்கையாக பூமியின் எந்த பகுதியில் தாம் இருக்கிறோம் என்பதை உணரும் ஒரு GPS சிஸ்டம் இருக்கிறது.

நாம் சம்மருக்கு ஊட்டி கொடைக்கானல் செல்வது போல சீதோஷன மாறுதலை தாக்கு பிடிக்க ஒரு துருவத்தில் இருந்து அடுத்த துருவத்திற்கு செல்லும் பறவைகள் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அவைகள் கிட்டத்தட்ட 20,000 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்புகின்றன.

இளம் சிங்கங்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது கவனித்து பாருங்கள். "மைக் ஒன் நீ அங்க நில்லு... மைக் டூ நீ பின்னாடி நில்லு... மைக் த்ரி நீ சைட் ல நில்லு... நான் அட்டாக் பண்ணும்போது நீங்க ரெண்டு பேர் சைட்ல வந்து அட்டாக் பண்ணுங்க மீறி தப்பினால் மைக் ஒன் நீ அடிச்சிட்டு..." என்று திட்டமிட்டு பேசி கொண்டதை போல மிக நேர்த்தியாக அவைகள் தனக்கான இடம் என்ன வேலை என்ன என்பதை சட்டென்று முடிவு செய்து செயல்படுவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

எறும்புகளின் கூட்டத்தை உற்று பாருங்கள் அந்த மொத்த கூட்டமும் ஒற்றை உயிரினத்தை போல செயல்படும். அவைகளுக்கு மொத்தமாக ஒரு கூட்டு மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் 100 எறும்பு இருக்கும் ஒரு கூட்டத்தை நினைத்து பாருங்கள் ஒவொன்றும் ஒரு திசையில் போக பார்க்க அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமா?

ஆக அறிவியல் ரீதியாக கவனித்து பார்த்தால் இவைகள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு ஒன்றி இருக்கின்றன. அப்படி ஒன்றி இருபவர்களுக்கு தான் இயற்கை தனது ரகசியங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.

ஒரு பூகம்பம் வர போவதை 7 மாதத்திற்கு முன்பே பாம்புகளால் உணர முடியும் என்கிறார்கள். அதுவும் இங்க இருக்கிற பாம்புக்கு மலேசியாவில் வரும் பூகம்பம்... இது எப்படி இருக்கு?

புதிய ஊரில் ஒரு 5 கிலோ மீட்டர் கொண்டு போய் விட்டால் கூட மனிதன் குழம்பி போவான்.,. பறவைகள் கிட்ட தட்ட 20,000 கி.மி சரியாக பறப்பது எப்படி? 

ஒரு சாதாரண தேனீ பல கிலோ மீட்டர் தூரம் பறந்து உணவு தேடி கொண்டு சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. அதற்கு இருக்கும் சின்ன கண்ணை வைத்து கொண்டு வழியை பார்த்து சின்ன மூளையை வைத்து கொண்டு இவ்ளோ தூரம் சரியாக பறப்பது எப்படி?

ஒரு யானை தனது வாழ்நாள் முழுதும் பார்க்கும் எந்த நிகழ்ச்சியையும் மறப்பது இல்லை என்கிறார்கள். அதன் மூளை என்ன தான் சிறந்த மூளை என்றாலும் மனிதன் மூளை அளவு வளர்ச்சி கொண்டது அல்ல. ஆனால் மனிதனுக்கு அந்த நினைவு திறன் சாத்தியம் இல்லையே எப்படி?

ஒரு பாம்பு தனது நாக்கை நீட்டினால் போதும் தனக்கு பின்னால் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சி எவ்ளோ தூரத்தில் இருக்கிறது அதன் பரிமாணம் என்ன சைஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். (பாம்புகள் அடிக்கடி நாக்கை நீட்டுவது மோப்பம் பிடிக்கத்தான். நாக்கின் மூலம் தான் அவை மோப்பம் பிடிக்கின்றன)

விலங்குகள் பலவகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. 

மனிதன் தனது உடல் உள்வாங்கும் உடல் உணர்வுகளையும் மூளை உள்வாங்கும் உள்ளுணர்வுகளையும் பயன்படுத்துவதை குறைத்துவிட்டு தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன்படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.

இயற்கையுடன் இணைத்து செல்ல முடிந்தால் சில ஆச்சர்யமான அளவில் இயற்கையுடன் சேர்ந்து மனிதனால் பயணிக்க முடியும்.

ஒரு காட்டுக்குள் ஆய்வு செய்ய போன ஆய்வாளர் அவர். ஒரு முறை ஒரு அருவியை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு தள்ளாடும் முதியவரை கண்டார். அந்த முதியவர் அந்த அருவியின் உச்சியில் சென்று தண்ணீருடன் சேர்ந்து குதித்ததை பார்த்து அதிர்ந்தார். பதறி போய் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டாரே என ஓடி போய் பார்த்தார். அந்த முதியவர் சிரித்தபடி அருவியில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆய்வாளருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. மிரட்டும் மரண அருவியில் விழுந்து சிரித்து கொண்டு வரும் இந்த முதியவர் ஒரு மனிதன் தானா என்றே சந்தேகம் வந்து விட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது... 'நான் தண்ணீரை எதிர்ப்பது இல்லை அவ்ளோ தான்' என்றாராம். நீருடன் 100 சதம் ஒன்றி போய் விழ முடிந்தால் அருவியின் ஆழம் மனிதனை பாதிப்பது இல்லை என்று ஆய்வாளர் கண்டார்.

இந்த சம்பவம் நாம் நம்புவதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் கடினமான ஒன்று. ஆனால் அடுத்து சொல்ல போவதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வண்டியில் 4 பேர் செல்கிறார்கள் அதில் ஒருவர் பயங்கர குடிபோதையில் உள்ளார் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த வண்டியின் அச்சு முறிந்து விட்டது எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது அந்த வண்டி குடை சாய்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

என்ன நடக்கும் தெரியுமா? வண்டி விழ போவதை முன்னாடியே அறிந்து விழும் போது முடிந்தளவு தப்பிக்க முயன்றவர்களுக்கு பலத்த அடிபடும். ஆனால் என்ன நடக்கிறது என்று கான்ஷியஸே இல்லாத அந்த குடிகாரருக்கு மிக குறைவான அளவே அடிபடும்.

காரணம் புவி ஈர்ப்பை எதிர்க்காமல் அப்படியே முழுக்க முழுக்க அதனுடன் அவர் ஒன்றி போவது தான். சாதாரணமாகவே குடிகாரர்கள் பல முறை கீழே விழுவதை நாம் பார்க்கலாம். அவர்களுக்கு அதிகம் அடிபடுவதில்லை. ஆனால் சாதாரணமாக நிற்கும் மனிதன் கீழே விழுந்தால் அடி படுகிறது. (இதை படித்து விட்டு யாராவது குடித்தால் இயற்கையுடன் ஒத்து போகலாம் என்று தவறாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி... இயற்கையை முழுமையாக உள்வாங்க விழிபுணர்வு மிக அவசியம் போதை மனிதனுக்கு அது சாத்தியம் இல்லை)

இதை வேறு ஒரு இடத்தில் மிக அழகாக பார்க்கலாம். அதாவது குழந்தைகளிடத்தில். குழந்தைகள் ஒரு நாளைக்கு பலமுறை கீழே விழுகிறார்கள். நம்மை விட நிச்சயம் குழந்தைகள் எலும்பு பலவீனமானது தான். பார்க்கப்போனால் குழந்தைகளுக்கு பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பதில்லை. காரணம் குழந்தைகள் விழும்போது புவி ஈர்ப்பை எதிர்க்காமல் ஏற்று கொள்கின்றன. அதனுடன் முழுமையாக ஒன்றிணைத்து செல்கின்றன.

குறிப்பாக காட்டில் வாழம் காட்டு வாசிகள் நம்மை விட இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். அவர்கள் இனத்தில் இதய நோய்.. ஹார்ட் அட்டாக் புற்று நோய் போன்றவைகள் இல்லை. மிக இயல்பானவர்களாக அவர்கள் இருகிறார்கள் ஆனால் மிக விசித்திரமானவர்களாக இருகிறார்கள்.

இன்றளவும் ஒரு ஆதிவாசி இனத்தில் நடந்து கொண்டிருக்கும் மர்ம விசித்திரம் ஒன்று சொல்கிறேன். அந்த காட்டில் வாழ்பவர்கள் பக்கத்து கிராமத்தில் இருப்பவர்களிடம் எப்படி தகவல் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் தகவல் தொடர்புக்கு அங்கே உள்ள ஒரு வகை மரத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறார்கள். யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல வேண்டும் என்றால் அந்த மரத்திடம் சென்று சொல்வார்கள் அவ்ளோ தான் சம்பந்தப்பட்டவர் அவர் ஊரில் இன்னோரு மரத்திடம் அந்த தகவலை பெற்று கொள்வார். இது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வரும் விடை தெரியா மர்மம். ஆனால் நமக்கு தான் இது மர்மம் அவர்களுக்கு அல்ல. ஒரு தொலை பேசியை பார்த்து அவர்கள் வியக்கலாம் ஆனால் நாம் வியப்பதில்லை. அதுபோல அந்த மரம் மர்மம் பார்த்து நாம் வியகிறோம் அவர்கள் வியப்பதில்லை. அவர்களுக்கு அது பல வருடமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொலை தொடர்பு சாதனம் அவ்ளோ தான்.

இவைகள் எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது? இந்த விசித்திரங்களுக்கு எல்லாம் ஒரே காரணம் இயற்கையுடன் ஒன்றி போதல் தான்.

சரி இயற்கையுடன் எப்படி இனைந்து பயணிப்பது? அதெப்படி இயற்கையை உள்வாங்குவது? ஏதும் வழிமுறைகள் உள்ளதா?

அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்...

பாகம் 9 - இயற்கையுடன் இயைந்து பதிவை காணொளி வடிவில் காண 👇





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண