மனம் எனும் மாய தேவதை! (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)

        

        னம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.

மு.வரதராசனார் எழுதிய "நலவாழ்வு" என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை, எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல் விவேக்கானதர் புத்தகங்கள் வரை, கீதையில் கண்ணன் முதல் ஓஷோவின் புத்தகங்கள் வரை இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள். 

அப்படி படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளைத்தான் நான் இந்த தொடரில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன். மனம் எனும் மாய தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.

உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

🙏

ரா.பிரபு




நண்பர்களுக்கு வணக்கம்!

   
    ந்த "மனம் எனும் மாய தேவதை" கட்டுரை தொடர் எனது வழக்கமான 'பக்கா அறிவியல்' கட்டுரைகளில் இருந்து சற்றே மாறுபட்டு சைகாலஜிக்கலான ஒரு கட்டுரை தொடர். ஆனால் மனோதத்துவம் என்பதும் அறிவியலின் பிரிவு தான் என்பதால் இதையும் அறிவியல் கட்டுரை என்றே தாராளமாக சொல்லலாம்.

எனது "மனம் எனும் மாய பிசாசு" தொடரில் மனதை சரியாக பயன்படுத்தாமல் அதை பிசாசாக மாற்றி அதன் பிடியில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர்கள் பற்றி நிறைய சொல்லி இருந்தேன்.

உண்மையில் மனம் பிசாசா அல்லது தேவதையா என்பது அதை நாம் பழகும் விதத்தில் தான் இருக்கிறது. அதை தவறாக கையாண்டால் நம்மையே அழிக்கும் பிசாசு. அதே சமயம் அதை சரியாக கையாண்டால் அது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.

வாருங்கள், இந்த முறை அந்த தேவதையை கொஞ்சம் சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவோம்.



       னம் என்பதை பற்றி சொல்லும் போது "அதை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்... நல்லதை நினை.. நல்லதை செய் நல்ல எண்ணங்களை கைகொள்" போன்ற பொதுவான அறிவுரைகள் சொல்வதில் எனக்கு அதிக உடன்பாடு இல்லை.

மாறாக மனதை பற்றி அதை கையாளுதல் பற்றி அதை புரிந்து கொள்ளுதல் பற்றி, அதன் ஆச்சரியங்களை, அதிசயங்களைப் பற்றி, அதன் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் அறிவியல் ரீதியாக பேசவே அதிகம் விரும்புகிறேன்.

உங்களிடம் ஒரு கருவி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கருவி பற்றி அது செயல்படும் விதம் பற்றி தெரிந்து வைத்து கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் செயல்படுத்த முடியும் அல்லவா... இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும்.

மனம் என்பதின் செயல்பாட்டை ஒரு கருவியோடு நாம் ஒப்பிட முடியும். அதற்கு ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீடு கொடுத்தால் அது குறிப்பிட்ட வகை வெளியீடை கொடுக்கும் ஒரு கணினி போன்று அதன் செயல் திறனை வரையறுக்க முடியும். அதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளும்முன் உங்களுக்கு ஒரு கேள்வி "மனதிற்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்?"

இவைகள் இரண்டும் இரண்டு துருவங்களாக நின்று கொண்டு நம்மை ஆளுக்கொரு திசையில் இழுப்பதை நமது அன்றாட வாழ்வில் நாம் உணர்ந்திருப்போம். இதோ சில உதாரணங்கள்....

நீங்கள் சுகர் பேஷன்ட் நீங்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் ஒரு சுவீட் உங்களை கை நீட்டி அழைக்கிறது. இப்போது 'ஒன்னு சாப்பிட்டா நல்லா இருக்கும்' என மனம் ஆசை பட்டு கொண்டு இருக்கும் போதே உங்கள் அறிவு 'எச்சரிக்கை ஏற்கனவே சுகர் அதிகம் இந்த சுவீட் உனக்கு தேவையா' என்று கேள்வி கேட்கிறது.

சொந்தக்காரன் பணம் உதவி கேட்டு உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். 'பாவம் அவன். நம்ம வீட்டில் தான் பணம் உள்ளதே அவனுக்கு கொடுத்து உதவுவோம்' என்று மனம் சொல்லி கொண்டு இருக்கும் போதே உங்கள் அறிவு 'அங்கே மனைவி முறைத்து கொண்டு இருக்கிறாள் இப்போ இவனுக்கு காசு கொடுத்தால் நீ காலி' என்கிறது.

இரவு கண்முழித்து நெட்டில் இருப்பதை மனம் விரும்பும் போது உடம்பு வீணா போகுது பார்த்துக்கோ என அறிவு சொல்லி கொண்டே இருக்கிறது.

இப்படி சில இடங்களில் மனம் நல்லதாகவும் அறிவு கெட்டதாகவும் சில இடங்களில் அறிவு நல்லதாகவும் மனம் கெட்டதாகவும் மாறி மாறி இருப்பதை பார்க்கிறோம். அப்போ இதில் யார் சொல்லும் பேச்சை கேட்பது? யார் சொல்வதை மீறுவது?

மனதிற்கான சிந்தனையும் அறிவிற்கான சிந்தனையும் நமக்கு மூளையில் இருந்து தானே வருகிறது. அப்போ சிந்தனை உடன் உணர்வுகள் கலந்தால் அதை மனம் என்றும் உணர்வுகள் கலக்காத சிந்தனையை அறிவு என்றும் ஓரளவு நாம் வரையறை செய்யலாமா?

ஆனால் மனம் எனும் போது அதில் தானாக இதயம் சம்பந்தப்படுவது எப்படி?

அதீத சந்தோஷம் அதீத சோகம் இவை வரும் போது இதயத்தில் பாரமாகவோ லேசாகவோ இருப்பதாய் உணர்வு ஏற்படுகிறதே ஏன்?

இதில் இந்த மூளையின் செயல்பாட்டை இன்னும் அறிவியல் முழுசாக அறிய முடியவில்லை... அதன் மொத்த ஆற்றலில் நாம் சிறிதளவு தான் பயன் படுத்துகிறோம். அதில் பெரும் பகுதியில் என்னென்ன சாத்தியங்கள் அடங்கி இருக்கின்றன என்பது நமக்கு தெரியாது.

தற்செயலாக விபத்தாக சில பேருக்கு அந்த மறைந்திருக்கும் ரகசியங்கள் வெளி வந்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு.

ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்து மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் அடி பட்டதை தொடர்ந்து தூரமாக நடப்பதை இங்கேயே உணர தொடங்கினார்.

ஒரு பெண்மணி தலையில் அடிபட்ட உடன் பகலிலேயே நட்சத்திரத்தை பார்க்கத் தொடங்கினார்.

அடுத்தவர் இன்னும் விசேஷம்... அவருக்கு 24 மணி நேரமும் காதுக்குள் ஏதோ ஒலி கேட்டு கொண்டே இருந்ததாம். நீண்ட ஆய்வுக்கு பின் ஆய்வாளர்கள் கண்டு சொன்னது.... அங்கிருந்து பல மைல் தொலைவில் உள்ள ரேடியோ ஒலிபரப்பு கோபுரம் ஒலிபரப்பும் அனைத்தும் இவருக்கு கேட்டபடி இருந்ததாம். பிறகு அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

அப்படி என்றால் ரேடியோ சிக்னலை வெறும் காதால் கேட்கும் ஆற்றல்...

இருட்டில் பார்க்கும் ஆற்றல்...

தூர நடப்பதை இங்கேயே உணரும் ஆற்றல்...

எதிர்காலத்தில் நடப்பதை பார்க்கும் ஆற்றல்...

இவை எல்லாம் மூளையின் ஒரு மூலையில் இன்னும் பயன்படுத்தப்படாமல் ஒளிந்து கிடக்கிறதா...? அவை ஏன் சாதாரணமாக வெளிப்படுவது இல்லை. தற்செயலாக சிலருக்கு மட்டும் அது எப்படி வெளிப்பட்டுவிடுகிறது. சில பேருக்கு இயல்பாக ESP எனப்படும் பின்னால் நடக்க போவதை சொல்லும் திறன் இருக்கிறதே அது எப்படி வந்தது?

கையால் தொடாமல் பொருளை நகர்த்த ஆற்றல் வாய்ந்த மனிதர்கள் உலகத்தில் இருப்பதாக டிஸ்கவரி டாக்குமெண்ட்ரிகள்  சொல்லுகிறது.

அப்போ மூளையின் சக்தி தான் என்ன? ஏன் அது ஒளிந்து இருக்கிறது? அல்லது மொத்த மனிதகுலமும் இன்னும் பரிமாண வளர்ச்சி எனும் பயணத்தில் உள்ளதா? இன்னும் லட்ச கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் மனிதனுக்கு கிடைக்க போகும் ஆற்றல்கள் தான் மூளையில் ஒளிந்து கிட(டை)க்கிறதா? இவைகளை பயிற்சி மூலம் வெளி கொண்டு வர முடியுமா?

பாகம் 1 : மனம் எனும் கருவி பதிவை காணொளி வடிவில் காண 👇




பாகம் 2 : மூளையின் 20 வாட்ஸ் 


              
         ந்நூற்றாண்டின் மிக பெரிய பிசிஸிஸ்ட் மிச்சியோ காக்கு (Michio Kaku) ஒரு முறை ஒரு கருத்தை சொன்னார் மனித மூளையை பற்றி. அதாவது, "மனித மூளை...இந்த பிரபஞ்சத்தின் மிக சிக்கலான அமைப்பு... ஒரு மனித மூளையின் மொத்த செயல்பாட்டை அப்படியே மிமிக் பண்ண கூடிய ஒரு சூப்பர் கம்பியூட்டர் ஒரு வேளை கண்டு பிடிக்கபட்டால் அந்த கம்பியூட்டர் பார்க்க எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் அதை இயக்க தேவைபடும் நியூக்ளியர் எனர்ஜி சோர்ஸ் மட்டும் நிச்சயம் ஒரு நகரத்தின் அளவிற்கு மிக பெரியதாக இருக்கும். ஆனால் அவ்வளவு வேலையை செய்வதற்கு நமது மூளை தற்போது வெறும் 20 வாட்ஸ் பல்ப் அளவு திறனை மட்டுமே எடுத்து கொள்கிறது" என்றார்.

மூளையின் செயல் பாட்டை பற்றி ஒன்றை சொல்லியாக வேண்டும்.

நாட்டில் பல தரப்பட்ட வேலைகளை செய்ய அந்தந்த துறை தனி தனியாக இயங்குவதை போல. ஒரு கார் தொழிற்சாலையில் தனி தனி உதிரி பாகங்கள் தயாரிக்க தனி தனி பிரிவுகள் இயங்குவதை போல மூளையில் தனி தனி விஷயங்களுக்கு தனி தனி பகுதிகள் செயல்படுகிறது. நீங்கள் மிக தர்க்கரீதியாக ஒரு கணக்கை யோசிக்கும் போதும் ஓய்வாக ஒரு கவிதையை ரசிக்கும் போதும் மூளையின் ஒரே பகுதியை நீங்கள் பயன் படுத்துவது இல்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்...

சுனாமி வந்து நூற்று கணக்கான மனித உயிர்கள் பிரிந்த போது அங்கே ஒரு ஆச்சர்யம். அதாவது அங்கே சுனாமியால் இறந்த மீன் அல்லது கால்நடைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. சில கட்ட பட்ட கால்நடைகள் தான் உயிரிழந்ததே தவிர மற்ற படி நிலத்திற்குள் வாழும் உயிரினங்கள் முதல் பறவைகள் வரை அந்த இயற்கை பேரழிவு வர போவதை உணர்ந்து முன் கூட்டியே இடத்தை காலி பண்ணி இருந்தது.

ஒன்றை யோசியுங்கள் ஒரு ஆட்டிற்கும் புறாவிற்கும் காக்காவிற்கும் பாம்பிற்கும் தெரியும் ஒரு விஷயம் மனித மூளையால் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை. மூளையின் ஆற்றலை ஒப்பிடும் போது நிச்சயம் அவைகளை விட அதிக ஆற்றல் வாய்ந்த மூளையை தான் மனிதன் கொண்டிருக்கின்றான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அவனால் உணர முடியாமல் போனது எதனால்? ஏன் அது பயன் படாமல் போனது?

இதை புரிந்து கொள்ள முதலில் மூளையின் செயல்பாட்டில் ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த உள்ளுணர்வு என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அது அதிகம் வேலை செய்வது பெண்களுக்கா அல்லது ஆண்களுக்கா?

விடை : நிச்சயம் பெண்களுக்குத்தான்.

ஊருக்கு கிளம்பும் கணவனிடம் மனைவி "என்னனு தெரிலங்க மனசு சரி இல்ல இன்னைக்கு போக வேணாம் நாளை போங்களேன்" என்று சொல்வதையோ வெளி ஊரில் தங்கி இருக்கும் மகனிடம் தாய் "ஒரு கனவு ஒன்னு கண்டேன் எதுக்கும் ஜாக்கறதையா இருப்பா" என்று சொல்வதையோ நாம் கேட்டு இருக்கலாம்.

மூளையில் முன்பு சொன்ன அந்த உள்ளுணர்வு எனும் துறை இயங்குவது எந்த பிரிவில் தெரியுமா? அது தான் நமது உணர்ச்சியை கையாளும் பிரிவு. அதாவது அதீதமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் அடிக்கடி உணர்ச்சியை கையாள்பவர்கள் இவர்களுக்கு தான் உள்ளுணர்வு அதிகம் வேலை செய்யும் காரணம் உள்ளுணர்வை தூண்டும் மூளை பகுதியை அவர்கள் தூண்டிவிடுவதால் தான். இயல்பாகவே உணர்ச்சி விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட அதிகம் முந்தியவர்கள் என்பதால் Intution எனப்படும் உள்ளுணர்வு அந்த 'ஏதோ பட்சி சொல்லுது' என்பது பெண்களுக்கு அதிகம்.

உணர்ச்சியை கையாலாத ஒருவன் அதனுடன் சேர்ந்து இருக்கும் மூளையின் மற்ற செயல்பாட்டிலும் பின் தங்கி விடுகிறான்.

பணத்தை அதிகம் செலவு செய்யாத மகா கஞ்சன் அல்லது கருமியை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அவனை பற்றி ஒரு ஆச்சர்யத்தை இப்போது சொல்கிறேன்.

அவனுக்கு நல்ல பெண் துணையை உண்டு பண்ணி பாருங்கள் மேஜிக் பண்ணியது போல அவன் கஞ்சத்தனம் மறைவதை பார்க்கலாம். பெண்கள் பொதுவாக செலவு வைப்பவர்கள் என்ற சாதாரண உலகியல் உண்மை பற்றி நான் பேச வில்லை. நான் சொல்வது மிகுந்த மனோரீதியான ஒரு விஷயம். அதாவது ஒருவனுக்கு பெண் மீது கொள்ளும் ஆசை தான் வேறு வடிவில் திரிந்து பண ஆசையாக மாறுகிறது என்று மனோத்துவம் சொல்கிறது. அப்படிப்பட்டவர்கள் தினம் இரவு பணத்தை என்னும் போது நீங்கள் பார்க்க நேர்ந்தால் இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ரூபாய் நோட்டை அவர்கள் ஒரு பெண்ணை தொடுவதை போல மிக உணர்வு பூர்வமாக தொட்டு தடவி என்னுவார்கள். நாணயம் என்றால் அதன் ஒலியை கூட ரசித்து கேட்பார்கள். தினம் அதை தடவி பார்ப்பார்கள் ஆனால் அதை செலவு செய்ய பகிர மனம் வராது.

உங்களில் யாருக்காவது மிகுந்த அச்சம் அல்லது காரணமற்ற பயம் ஆட்கொள்கிறதா? நான் சொல்வதை செய்து பாருங்கள்.

தன்னிடம் "மிகுந்த பயமா இருக்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்று வருபவர்களிடம் ஓஷோ அவர்கள் பின் பற்றிய வழி முறை இது.

அதாவது அவர்களுக்கு ஓரிரண்டு பஞ்சு தலையணையை கொடுத்து ஒரு அறைக்கு அனுப்புவார். அவர்களது வேலை அந்த பஞ்சு தலையணையை அடி அடி என அடித்து தூள் தூள் ஆக்க வேண்டும் ஒன்று முடிந்ததும் அடுத்த தலையணை. எத்தனை முடியுமோ அத்தனை. அப்படி அடித்து துவம்சம் செய்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களின் அச்சம் பயம் காணாமல் போன தலைவலி போல மாயமாகி இருந்ததை பார்த்து அதிசயித்தார்கள்.

தலையணை எப்படி அச்சத்தை போக்கியது என்றால் அதுவும் ஒரு மூளை தொடர்பு தான். அந்த தொடர்புகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதன் மூலம் தான் நாம் பல விஷயத்தை பயன் படுத்தாமல் விட்டு வருகிறோம். 

முழு மக்கா சோளத்தில் ஒரே ஒரு கடி கடித்து தூக்கி போடுவது போல மூளையில் ஒரு குறிபிட்ட பகுதி பயன்பாட்டோடு நிறுத்தி கொள்கிறோம். பயன் படுத்தாத பொருட்கள் கால போக்கில் மங்கி போகும் என்பது இயற்கை விதி. அப்படி மூளையை பல இடங்களில் சரியாக பயன் படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று மிருகங்களின் உணர்வு நிலையை விட நாம் நிறைய பின் தங்கி விட்டோம்.

ஆமாம் அவைகளை நாம் தவற விட்டது எப்போது?






பாகம் 3 : தொலைந்த தொடர்பு

   
    

     காடுகளில் சுற்றி திரிந்த ஆதி மனிதன் பல வகையில் இன்றைய மனிதனிடமிருந்து மாறு பட்டடிருந்தான் குறிப்பாக நுண் உணர்வு எனும் விஷயத்தில். 

பண்டைய மனிதன் இன்றைய மனிதன் போல பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்தவன் அல்ல. 24 மணி நேரமும் ஆபத்து சூழ்ந்து எந்நேரமும் எதிரியால் கொடிய விலங்குகளால் கொலை செய்யப்படுகின்ற பேராபத்தில் வாழ்ந்து வந்தவன் அவன். எனவே அவனது உணர்வுகள் மிக கூர்மையாக இருந்தன. குறிப்பாக நுகறும் திறன். எதிரி பல மீட்டர் தள்ளி வரும் போதே அதை வாசனை மூலம் அறிய கூடியவனாக அவன் இருந்தான். சிறு ஓசையையும் விழிப்புணர்வுடன் கவனிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தான். (அன்றைய மனிதனின் காதுகள் நாயின் காதுகள் போல சப்தம் வரும் திசை நோக்கி குவித்து திரும்ப கூடிய வகையில் இருந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இன்றும் நம்மில் சில பேர் காது மடல் ஆட்டும் திறமை கொண்டவர்கள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த பழக்கம் ஒரு பரிணாம மிச்சம் தான்.)

இன்றைய மனிதன் அளவிற்கு தர்க்க அறிவும் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு யோசிக்கும் தொலை நோக்கு பார்வையும் அவனுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் கூரிய பார்வை மற்றும் கேட்கும் திறன் முகறும் திறன் தொடு உணர்வு போன்றவற்றில் மிக சிறந்து விளங்கினான். குறிப்பாக எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழ்பவனாக இருந்தான். படிப்படியாக வளர்ச்சியடைந்து அவன் பாதுகாப்பான வீடு கட்டி கொண்டபோது உயிர் காக்க மோப்ப சக்தியை நம்பும் அவசியம் குறைந்து போனது கால போக்கில் அந்த திறன் அழிந்து போனது.

பயன் படுத்தாமல் விட்ட மூளை என்ன ஆகும் என்று சோதிக்க நீங்கள் பெரிதாக பரிணாம கோட்பாடு எல்லாம் படிக்கத் தேவையில்லை. இன்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட முயற்சி செய்து பார்த்தால் போதும். ஒரு 10... 20 ஆண்டுகளுக்கு முன் நாம் போட்ட மன கணக்கு இன்று ஏன் சாத்தியப்படவில்லை என்று புரியும்.

நமக்கு இயற்கை கொடுக்கும் ஒரு ஆறுதல் என்ன தெரியுமா? 

நம்மால் மறக்கப்பட்ட மறுக்கப்பட்ட எதுவும் முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது தான். ஆனால் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாளாக அதை பயன்படுத்த வில்லை என்பதை பொறுத்து அது புதைக்கப்பட்ட ஆழம் தீர்மானிக்கப்படுகிறது. மீண்டும் அதை தோண்டி எடுக்க அந்த ஆழம் சென்று பார்க்க தயார் என்றால் இன்றும் அதை பெறுவது சாத்தியம் தான். 

உதாரணமாக மறந்து விட்ட மன கணக்கு பயிற்சியை மீட்க சில வாரம் போதும். ஆனால் தூர வருபவனை வாசனை மூலம் அறிய? அது சாத்தியமா?

இப்போது நான் சொல்ல போகும் ஆய்வு ஒரு கற்பனை அல்ல அதை தொடர்ந்து முயன்றால் யார் வேணாலும் அதை சாதிக்க முடியக் கூடிய சாத்திய கூறு தான் அது.

ஆய்வு இது தான்...

ஒரு ரோஜா பூவை எடுத்து கொள்ளுங்கள். அதை மிக விழிப்போடு மன ஒருங்கிணைபோடு முகர்ந்து பாருங்கள். அதன் வாசனையோடு ஒன்றினையுங்கள். இதை தினம் செய்து வாருங்கள் பிறகு சில நாள் கழித்து ரோஜாவை சற்றே தூரம் பிடித்து முகர்ந்து வாசனையை உணருங்கள். இன்னும் சில நாள் இதை தொடர்ந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரித்து கண்ணை மூடி வாசனையை உணர்ந்து பாருங்கள். பின் படி படியாக தூரத்தை அதிகரியுங்கள்.

இந்த ஆய்வை அவசரப்படாமல் மிக நிதானமாக பொறுமையாக படிப்படியாக செய்து வந்தால் மிக ஆச்சர்யப்படும்படி சில மாதங்கள் கழித்து பல மீட்டர் தள்ளி எங்காவது ரோஜா பூ இருந்தால் அதன் நுண்ணிய வாசனையை உங்களால் உணர முடியும்.

இந்த பயிற்சி கேட்கும் திறனுக்கும் பொருந்தும் என்கிறார்கள். இந்த வகை பயிற்சியை நேரில் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் எங்கே பார்க்க முடியும் தெரியுமா?

சின்ன சின்ன பொருட்களை சரியாக குறி பார்த்து சுடும் துப்பாக்கி வீரர்களிடம். அவர்கள் சுட்டு பழக முதலில் வானத்தில் பெரிய பொருளை தூக்கி வீசி சுடுவார்கள். பிறகு தினம் பயிற்சி தொடர தொடர பொருளின் அளவை படி படியாக சின்னதாக்கி கொண்டே வருவார்கள். ஒரு கட்டத்தில் மிக நுண்ணிய பொருளை சுடும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். இன்றைய தேதிக்கு வானத்தில் வீச பட்ட 'வாஷர்' ஐ அதன் மையத்தில் உள்ள ஓட்டையில் இரு முறை சுடும் வல்லமை கொண்டவர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.

மனிதனின் மூளையில் ஒளிந்துள்ள ஆற்றல் மனித கற்பனைக்கும் அப்பாற் பட்டது. இதில் நாம் தேடி பெற வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதை பெற்றவர்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பார்ப்பதை காண முடிகிறது.

இந்த சம்பவம் ஒரு நிஜ சம்பவம்...

ஒரு அப்பாவும் மகனும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது மகன் அப்பாவை நோக்கி "அப்பா நான் பிறந்தது எப்போ?" என்கிறான்.

அப்பா அவன் பிறந்த தேதியை சொல்கிறார். அதற்கு அவன் "டைம் சொல்லுப்பா" என்கிறான்.

அப்பா அவன் பிறந்த நேரம் சொல்கிறார். அதற்கு அவன் "நிமிஷம் எவ்ளோ சொல்லுப்பா" என்கிறான். 

அப்பா அவன் பிறந்த நேரம் மணி மற்றும் நிமிஷம் என்ன என்பதை சொல்கிறார்.

அதை கேட்ட அந்த சிறுவன் மிக சில வினாடிகள் யோசித்து விட்டு... "அப்போ நான் பிறந்து மொத்தம் இத்தனை ஆயிரம் வினாடிகள் ஆகிறதா பா" என்று ஒரு நீண்ட நம்பரை சொல்கிறான். 

அப்பா அப்போதைக்கு விட்டுவிட்டாலும் அவன் சொன்னதை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் வீட்டிற்கு சென்றதும் உட்கார்ந்து பொறுமையாக அவன் பிறந்த நேரத்தை வைத்து அவன் கேள்வி கேட்ட நேரம் வரையில் உள்ள வினாடிகள் எத்தனை என்பதை கணக்கு போட்டு பார்க்கிறார். அதிர்ச்சி அடைகிறார். விடை அந்த சிறுவன் சொன்ன எண்ணுடன் ஒத்து போனது.

உலகம் எங்கும் இப்படிப்பட்ட கணித சூரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் டிஸ்கவரியில் "Stanly's Super Human" என்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அதில் மேலே சொன்ன அசாத்திய சுடும் திறமை கொண்டவர்களை காட்டி இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.

அந்த நிகழ்ச்சியில் இதுவரை வாழ்நாளில் நடந்த எந்த சம்பவத்தையும் மறகாதவர். (10 வருடத்திற்கு முன் ஏதோ ஒரு தேதி சொன்னால் அன்று மதியம் 3 மணிக்கு வானம் ரொம்ப மேக மூட்டமாக இருந்தது என்கிற அளவு சொல்லுவார்)

உலகின் எவ்ளோ பெரிய கணக்கையும் வினாடிக்கு குறைவான நேரத்தில் போட கூடியவர்.

விசித்திர மனிதர்களின் பெரிய பட்டியலே இருக்கிறது.

இரும்பு ஸ்பேனரை வளைக்கக் கூடியவர்..

உடலில் இரும்பை வைத்தால் ஒட்டி கொள்ளக் கூடியவர்..

மின்சாரத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டிப் பிடிப்பவர்..

பனிக்கட்டியில் வெறும் உடம்பில் ஜாலியாக படுத்து கிடப்பவர்..

ஊசியை புல்லட் போல எறிந்து ஜன்னல் கண்ணாடியை உடைப்பவர்..

மிக வேகமாக மின்னல் வேகத்தில் பேசுபவர்..

மிக சத்தமாக பேசுபவர்..

தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் ஒய்வு இல்லாமல் ஓடக் கூடியவர்..

ரப்பர் போல வளைந்து பெட்டிக்குள் அடங்கக் கூடியவர்..

உடலில் கூர்மையான பொருளால் எங்கே துளைத்தாலும் வலியை தாங்கக் கூடியவர்..

ஆணியை மண்டையை வைத்தே அடிக்கக் கூடியவர்..

இப்படி விசித்திர மனிதர்களின் பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒருவர் பற்றி இப்போது சொல்கிறேன்.

அவர் முற்றிலும் கண் தெரியாதவர். ஏன் கண் என்கிற உறுப்பே உடலில் இல்லாதவர். ஆனால் நல்ல ட்ராபிக்கில் கூட அழகாக சைக்கிள் ஓட்டி வர கூடியவர். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது கண் தெரியாதவர்கள் இப்படி அதிக திறமையோடு இருப்பதை தான்... எங்கும் பார்க்கலாமே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவரிடம் ஒரு மிக ஆச்சர்ய சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. சைக்கிள் ஓட்டி வரும் போது வாயில் நாக்கால் டிக் டிக் என்று (குதிரை ஓட்ட கொடுக்கும் ஒலி போல) சொடுக்கி கொண்டே வருகிறார். எதற்கு அந்த சப்தம் என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.

அவரை ஒரு ஹாலில் கொண்டு போய் வரிசையாக பேணா, புத்தகம், டிவி என்று பொருட்களை வைத்து விட்டு அவரை அருகில் விட்டால் அந்த அந்த பொருளின் அருகில் நின்று டக் டக் என்று நாக்கை தட்டுகிறார். பிறகு தனக்கு முன்னால் இருப்பது பேணா இது புத்தகம் இது டிவி என்கிறார்.

இன்னோரு ஆச்சர்யம் மிக சப்தமாக இருக்கும் டிராபிக் ரோட்டில் இவர் எழுப்பும் மெல்லிய ஒலி பக்கத்தில் இருப்பவருக்கே கேட்காது ஆனால் அந்த ஒலி மூலம் ரோட்டில் எங்கே கம்பம் உள்ளது எங்கே கார் உள்ளது எங்கே மனிதன் நடக்கிறான் என்று சரியாக சொல்லுகிறார். இது எப்படி இருக்கு?

அப்போ மனித மூளையில் வௌவாலுக்கு சவால் விடும் படி மீயொலி திறமையும் கூட ஒளிந்து இருக்கிறதா?

கண் தெரியாதவர்கள் சிலர் பொருளை கைகளால் தடவி பார்த்து பொருளின் நிறத்தை சொல்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களை எந்த லாஜிக்கில் அடைப்பது?

மனித மூளையில் மீயொலி திறன் ஒளிந்து இருக்கிறது என்றால் இருட்டில் பார்க்கும் பாம்பின் அக சிவப்பு கண்களை பெற கூடிய திறனும் கூட ஒளிந்து இருக்குமா?

முதல் பாகத்தில் நாம் பார்த்த படி சுனாமி மற்றும் பூகம்பத்தை உணரும் திறன்?

தூர இடத்தில்... வேற இடத்தில்... உள்ள மனம் நினைப்பதை உணரும் டெலிபதியும் எதிர்காலத்தில் நடப்பதை உணரும் E.S.P திறனும் மூளையின் சித்து வேலைகள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது.

இவற்றை எல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது. அதாவது மனிதனின் மூளையில் ஒளிந்துள்ள ஆற்றல் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

இதில் நாம் தேடி பெற வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதைப் பெற்றவர்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பார்ப்பதை காண முடிகிறது. அந்த சமாச்சாரத்தில் தான் ஆன்மீக சாரமும் அடங்கி இருக்கிறது. அதன் பெயர் விழிப்புணர்வு.

அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.


பாகம் 4 : விழிப்புணர்வு, தியானம்



    றவைகளை உற்று கவனித்து பாருங்கள். குறிப்பாக தரையில் அமர்ந்து இரையை உண்ணும்போது அவைகள் மிகுந்த விழிப்போடு இருப்பதை காண முடியும். அவைகளின் விழிப்போடு மனிதன் போட்டி போட முடியாது என்பதை காணலாம். தான் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து ஓர் கற்பனை வட்டம் அவை வரைந்து வைத்து கொள்கின்றன. அந்த வட்டத்தை யாரேனும் நெருங்கும் வரை தான் அவை அமர்ந்து இருக்கும். அந்த எல்லையை தொட்டதும் அவை பறந்து விடுகின்றன.

சரி ஒரு பறவைக்கு உயிர் வாழ விழிப்புணர்வு தேவைப்படலாம். ஆனால் மனிதனுக்கு எதுக்கு அந்தளவு விழிப்புணர்வு? அவன் கொஞ்சம் மந்தமாக இருந்தால் தான் என்ன?

வாழ்க்கையில் வாழ்க்கையை மிக தெளிவாக மயக்கம் மற்றும் மாயை இல்லாமல் வாழ்வதற்கும்... இருப்பதை இருப்பது போல பார்ப்பதற்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஆழ்ந்து பார்த்தால் இந்த விழிப்புணர்வு தான் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. (கட்டுரை ஆன்மீக கட்டுரையாக மாறிவிடுமோ என்று பயப்படாதீர்கள். இது அறிவியல் கட்டுரை தான்)

விழிப்பு கொண்ட மனிதன் தான் உலகை தெளிவாக பார்க்கிறான். விழிப்போடு இருக்கும் மனிதன் தான் வாழ்வை முழுமையாக வாழ்கிறான். விழிவுணர்வு கொண்ட மனிதன் தான் மாயையில் சிக்காமல் தப்பிக்கிறான். அந்த விழிப்பை கொடுக்கும் யுக்திக்கு பெயர் தான் "தியானம்."

ஒரு ஜென் குருவை ஒருவர் அணுகி "நான் தியானம் செய்வது எப்படி என்பதை கற்க வந்திருக்கின்றேன் எனக்கு தியானம் சொல்லி தருவீர்களா" என்கிறான்.

அதற்க்கு அந்த குரு "அப்போ நீ வேற ஆளை தான் பார்க்கணும் காரணம் நாங்க இங்க ஏதோ ஒன்றை எப்படி செய்வது என்று சொல்லித் தரவில்லை மாறாக எதையும் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை தான் கற்று கொடுகின்றோம்" என்றார்.

தியானம் என்பதை பற்றி ஒரு அடிப்படை விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பொருள் அல்லது கருத்து மீது கவனத்தை குவிப்பது "Meditation" அல்ல. அது "Concentration''. எதையோ ஒன்றை பற்றியே சிந்திப்பது தியானம் அல்ல அது "Thinking". 

தியானம் என்பது செயல் அல்ல அது ஒரு நிலை. ஏதும் செய்யாது அனைத்தையும் உள்வாங்கும் விழிப்பு நிலை. அந்த நிலையில் நாம் நம்மை வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உட்கார்ந்து கொண்டு செய்வது தான் தியானம் என்பது தவறான கருத்து. தியானம் என்ற நிலையில் நாம் நடக்கலாம் குளிக்கலாம் படலாம் ஆடலாம். எந்த செயலையும் நமது முழு விழிப்போடு நிகழ் காலத்தில் இருந்து செய்தால் அது தான் தியானம்.

இந்த தியானம் ஏன் முக்கியம்?

சுவிட்ச் போட்டால் பாடும் ரேடியோ போல நமது மனம் 24 மணி நேரமும் சிந்தனை எனும் சிதறலை ஒலி பரப்பிக்கொண்டே இருக்கிறது. சூரியனில் ஒரே ஒரு வினாடிக்கு உண்டாகும் மொத்த ஆற்றலை கொண்டு பூமிக்கு பல நூறு ஆண்டுகளுக்கு ஆற்றலை வழங்க முடியும் என்கிறார்கள். ஆனால் சூரியனின் ஒரு விநாடி ஆற்றலில் பல லட்சத்தில் ஒரு சதவீதம் தான் பூமிக்கு கிடைக்கிறது.

அதை போல மனம் அசாத்திய ஆற்றலை உள்ளடக்கிய ஒரு ஆற்றல் பெட்டகம். ஆனால் இதன் ஆற்றலை தொடர்ச்சியான சிந்தனை சிதறல்களால் வீணடிக்கப்படுவதால் அதன் ஆற்றலை நாம் முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. அதை கொஞ்ச நேரம் அணைத்து வைக்க முடிந்தால் அளப்பரிய ஆற்றலை அது சேமிக்கிறது.

ஒரு வெள்ளை காகிதத்தை வெயிலில் காட்டினால் அது பற்றி எரிவது இல்லை ஆனால் சிதறும் கதிர்கள் ஒரு லென்ஸ் மூலம் குவிக்க பட்டால், பேப்பரை எரிக்கும் ஆற்றல் கொள்கிறது. இதே போல தான் சிதறி கிடக்கும் மனதை தியானம் மூலம் ஒன்றிணைக்க முடிந்தால் அது அளப்பரிய ஆற்றல் கொண்டதாகிறது.

24 மணி நேரத்தில் நீங்கள் மனதிற்கு 5 நிமிடம் ஒய்வு கொடுத்தால் போதும். மீதி 23 மணி நேரம் 55 நிமிடங்கள் அது மிக தரம் உள்ளதாக மாற்றுகிறது. அந்த தியானம் ஒரு நிதானத்தை கொடுக்கிறது.

சரி அந்த தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?

நீங்கள் நடக்கும்போது உங்களுக்குள் என்ன சிந்தனை ஓடுகிறது என்று கவனித்து இருக்கிறீர்களா. அப்போது உலகத்தின் எல்லா சிந்தனையும் ஓடும் ஆனால் "நடக்கிறோம்" என்ற சிந்தனை மட்டும் ஓடாது. குளிக்கும் போது "குளிக்கின்றோம்" என்ற சிந்தனை தவிர மற்ற எல்லா சிந்தனையும் ஓடும்.

நாம் எதை செய்தாலும் அதை செய்கிறோம் என்ற உணர்வோடு முழுமையாக ஒன்றி விழிப்போடு நிகழ்காலதில் இருந்து செய்தால் அது தான் தியானம்.

நடக்கும்போது நடக்கிறோம் என்று கவனித்தபடி ஒவொரு அடி எடுத்து வைத்து நடந்தால் அது தான் தியானம்.

புத்தர் ஒரு முறை முகத்தருகே பறந்த ஈ ஒன்றை கையால் விரட்டினார். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் விரட்டினார். இதை கவனித்த சீடர் இரண்டாம் முறை ஏன் ஈ இல்லாமலே விரட்டினீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு புத்தர் முதல் முறை கவனம் இல்லாமல் அனிச்சை செயலாக விரட்டி விட்டேன் அதான் இரண்டாம் முறை கவனத்தோடு விரட்டினேன் என்றார். ஆதாவது ஒரு ஈ யை விரட்டினால் கூட அதை கவனத்தோடு முழு விழிப்பாக விரட்ட வேண்டும் என்று சீடர்களுக்கு வற்புறுத்தினார்.

இந்த நடக்கும் தியானம் எல்லாம் சரிபட்டு வராது உட்கார்ந்து கொண்டு செய்யும் தியானம் தான் செய்ய முடியும். ஆனால் உட்கார்ந்தாவே மனம் தாறு மாறாக ஓட ஆரம்பிக்கிறதே அதை அடக்குவது எப்படி என்று கேட்டால். மனதை அடக்க ஒரு சூத்திரம் சொல்கிறார்கள் பெரியோர்கள்.

"மனம் அது அடக்க நினைத்தால் ஆடும்.. உற்று கவனித்தால் அடங்கும்"

இதான் சூத்திரம்.

ஒரு அமைதியான இடத்தில உட்கார்ந்து கொள்ளுங்கள். தண்டு வடம் நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். பிறகு கண்ணை மூடுங்கள். ஒரு பிஸியான சாலையில் ஓரத்தில் நின்று கொன்டு நீங்கள் அந்த சாலையில் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கும் ட்ராபிக்கை கவனித்தால் எப்படி இருக்கும்? அப்படி கண்ணை மூடி மனதிற்குள் வரும் எண்ணங்களின் ட்ராப்பிக்கை உற்று கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையோடு. இது எனது எண்ணம் அல்ல என்று வேறு யாரோ 3 ஆவது மனிதனின் எண்ணத்தை கவனிப்பதை போல கவனிக்க வேண்டும். அப்போது நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் எது வந்தாலும் அதனுடன் நாம் எந்த வகையிலும் ஒட்டி கொள்ள கூடாது. தள்ளி நின்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் என்ன ஆகும்?

கவனிக்க கவனிக்க வேகமாக இயங்கி கொண்டிருத மனம் மெதுவாக வேகம் குறையும். தொடர்ந்து உற்று பார்க்க மேலும் வேகம் குறையும் பிறகு நிமிடத்திற்கு 100 எண்ணம் இருந்தால் அது நிமிடத்திற்கு 50 ஆக குறையும். இன்னும் விடாமல் உற்று கவனித்தபடியே இருந்தால் அங்கொன்று இங்கொன்றாக எண்ணம் ஒரு மெல்லிய இழை போல வந்து போகும். பிறகு ஒரு கட்டத்தில் அந்த இழை கூட அறுந்து போய்... எண்ணம் அற்ற வெறும் விழிப்பு நிலையில் சில கணம் இருப்போம். அப்படி இரண்டு வினாடி இருக்க முடிந்தால் அதுவே பெரிய மாறுதல் என்கிறார்கள் பெரியவர்கள்.

அப்படி தியானத்திற்கு பழகிய மனதை கொண்டு செய்யப்படும் எந்த வேலையும் தரத்தில் உயர்ந்து இருக்கும் என்கிறார்கள்.

மனதில் என்ன ஓடுகிறது என்பதை எப்போதுமே உற்று கவனித்தபடி இருப்பது ஒரு நல்ல பயிற்சி என்கிறார் புத்தர்.

ஒரு புத்தர் கதை.....


பொதுவாக புத்தர் ஒரு மிக சிறந்த ஆசான். புரியாத விஷயத்தை எளிமையாக புரியவைப்பதில் வல்லவர். ஒரு முறை மனதை அடக்குவதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். சீடர்களுக்கு புரிந்தபாடில்லை. 

"அய்யா மனதை எப்படி அய்யா அடக்குவது" என்கிறான் ஒரு சீடன்.

புத்தர் அவனுக்கு பதில் அளிக்காமல் "அது இருக்கட்டும் நீ ஏன் உன் கால் கட்டை விரலை ஆட்டிக் கிட்டே இருக்க ஆட்டாம பாடம் கேட்க மாட்டியா" என்கிறார்.

பிறகு மேலும் 5 நிமிடம் வேறு கதை பேசிவிட்டு பின் அந்த சீடனை பார்த்து "ஆ..மாம்..... இப்ப ஏன் நீ உன் கால் கட்டை விரலை ஆட்டாமல் இருக்க" என்று கேட்கிறார்.

"என்ன குரு... இது ஒரு விஷயம்னு இதை எடுத்து வச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க... முதல்ல நான் கவனிக்காத காரணத்தால் கால் கட்டை விரல் ஆடியது... அப்புறம் நீங்க அதை சுட்டி காட்டியதால் நான் அதை உற்று கவனித்தேன். அதனால் அது இப்போ ஆட வில்லை" என்றான்.

புத்தர் சிரித்து விட்டு "மனம் ஆடாமல் நிறுத்துவதற்கும் இதான் வழி" என்றார்.



பாகம் 5 : தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்



    ல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய கோட்பாடுகள் மிக பெரிய அதிசயங்களை ஆச்சர்யங்களை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் ஐன்ஸ்டைன் பற்றி நாம் இன்று வரை கண்டு பிடிக்காத மிக பெரிய ஆச்சர்யம் ஒன்று உண்டு. அது அவர் அந்த உண்மைகளை எல்லாம் எப்படி கண்டுபிடித்தார் என்பது.

அதாவது 'வெளியை வளைக்க... சுருட்ட முடியும்...' 'காலத்தில் பயணிக்க முடியும். காலத்தை ஆளுக்கு தகுந்தாற்போல மாற்ற முடியும்....,' 'பொருளும் ஆற்றலும் ஒண்ணுதான்...' 'வெளியும் காலமும் ஒன்னு தான்.....'

இது போன்ற உண்மைகள் சாதாரண காரண காரிய தர்க்க அறிவால் ஆழ்ந்து சிந்தித்து கண்டு பிடிக்கப்பட்டதல்ல. அப்படி கண்டு பிடிக்க சாத்தியமும் அல்ல. ஐன்ஸ்டைன் கண்டு சொன்ன உண்மைகள் இருக்கே அது பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கடினமான ஆராய்ச்சிக்கு பின் குறைந்தது இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிதிருக்கப்பட வேண்டிய உண்மைகள்.

ஆனால் அதை அவர் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் பென்சிலை வைத்து கொண்டு முந்தைய நூற்றாண்டிலேயே கண்டு பிடித்தார். இதை உங்களால் எந்த லாஜிக்கில் அடக்க முடியும் சொல்லுங்கள்?

ஐன்ஸ்டைன் தனது வாழ்நாளில் எந்த ஆய்வு கூடத்திலும் சென்று ஆய்வு செய்து உண்மைகள் சொன்னவர் அல்ல. மாறாக பிரபஞ்ச மகா உண்மைகளை முதலில் சொல்லிவிட்டு அப்புறமாக அதை ஆய்வு செய்து சரி பார்த்து கொண்டவர்.

உதாரணமாக சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சத்திர மண்டல ஒளி சூரியனின் ஈர்ப்பால் வளைந்து நதி நடுவே உள்ள பாறையை சுற்றி வளைத்து வரும் நீர் போல நம்மை வந்து சேரும் என்ற ஆய்வை அவர் செய்து பார்த்ததற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் அந்த உண்மையை அறிவித்து இருந்தார்.

இது எப்படி சாத்தியம்?

ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை கண்டு பிடிப்பது லாஜிக்காக இருக்கிறது. ஆனால் ஒருவன் உண்மையை முதலில் சொல்லிவிட்டு பிறகு ஆய்வு செய்து சரி பார்ப்பது என்ன லாஜிக்?

ஐன்ஸ்டைன் இதை வாழ்நாள் முழுதும் செய்தார். அவருக்கு பின் இன்றைய தேதி வரை அவரது கோட்பாடுகள் பல நூறு முறை பல பேரால் சோதிக்கப்பட்டு உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை எல்லாம் ஒருவர் வீட்டு அறைக்குள் உட்கார்ந்து சொல்ல முடிந்தது எப்படி?

ஒரு மிக பெரிய உண்மை....

பிரபஞ்ச மகா அறிவை உட்கிரகிக்கும் பேராற்றல் மனித மூளைக்கு உண்டு. இது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமே நடந்த அனுபவமல்ல. ரொம்ப ஆச்சர்யமான ஒரு உண்மை என்ன வென்றால் உலகில் முக்கால் வாசி கண்டுபிடிப்புகள் இப்படி யோசித்து அறியும் அறிவை தாண்டி வேறு விதத்தில் கண்டு பிடிக்கப்பட்டது தான்.

அம்மையார் மேரி கியூரி அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பாருங்கள்....

ஒரு நாள் இரவு மேரி கியூரி நீண்ட நேரம் காகிதங்களை புரட்டியபடி முழித்து இருந்தார். ஒரு விடை தெரியாத கணக்கு ஒன்று நீண்ட நேரமாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் அந்த ஆய்விற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அயற்சியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார். காலை எழுந்தபோது காத்திருந்தது அதிர்ச்சி. அவரது அணைத்து கணக்குகளும் விடை தீர்க்கப்பட்டிருந்தன.

யார் இதை செய்தது என்று அதிர்ச்சியோடு ஜன்னல்களை சரி பார்த்தார் எல்லாமே பூட்டப்பட்டிருந்தன. அப்படியே யாரும் உள்ளே வந்தாலும் மேரி கியுரியாலேயே தீர்க்க முடியாத அந்த பிரச்னையை தீர்த்து இருக்க வாய்ப்பில்லை. பிறகு நிதானமாக அந்த பேப்பர்களை ஆராய்ந்து பார்த்த கியூரி ஒரு உண்மையை கண்டு பிடித்தார்.

அதாவது அந்த கையெழுத்து... அது வேறு யாருமல்ல கியுரியின் கையெழுத்து தான். பிறகு தான் மெல்ல மெல்ல அவருக்கு நியாபகத்தில் வந்திருக்கிறது தான் தூங்கிய பின் தூக்கத்தில் எழுந்தது... அரை குறை தூக்கத்திலேயே நடந்து சென்று அந்த கணக்கை எழுதியது எல்லாம் படிப்படியாக நினைவுக்கு வந்தது. தான் மிகுந்த ஆற்றலோடு தர்க்க பூர்வமாக யோசித்தபோது கிடைக்காத விடை அரைகுறை தூக்கத்தில் எப்படி கிடைக்க முடியும் என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார் கியூரி.

ஃபாசில்கள் எனப்படும் படிவங்களை ஆராயும் ஒரு ஆய்வாளர் அவர். டைனோசர்களுக்கும் முந்திய கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மீனின் படிவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர். பிரச்சனை என்ன வென்றால் அந்த படிவம் அவருக்கு முழுதாக கிடைக்கவில்லை பல துண்டுகளாக கிடைத்தது. அதில் தலை எது வால் எது வயிறு எது என்று புரியவில்லை. புதிர் எழுத்து போல மாற்றி மாற்றி பொறுத்தி பார்த்தார் ம்ஹூம் வடிவம் பொறுந்தி வரவில்லை. சரி என்று விட்டு விட்டு தூங்கி விட்டார்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு அதிசயம் அவர் கனவில் அந்த மீன் முழு உடலமைபோடு வந்தது. உடனே எழுந்தவர் ஒரு காகிதத்தில் தான் கனவில் பார்த்த உருவத்தை வரைந்து கொண்டார். பிறகு சாவகாசமாக அடுத்த முறை அந்த படத்தில் உள்ளது போல அந்த மீன் படிவத்தை பொறுத்தி பார்த்தார். மீன் பொறுந்தி விட்டது .ஆஹா மகிழ்ச்சி என மகிழ்ந்தார்.

ஆனால் அதன் பின் ஒரு விஷயம் அவரை உறுத்தியது மிகவும் குழப்பியது. அதாவது அந்த மீன் தனது கனவில் வருவதற்கு என்ன லாஜிக் இருக்கிறது. தான் இது வரை பத்திரிக்கையிலோ அல்லது வேறு எங்காவதோ அந்த உருவத்தை பார்த்திருந்தால் அது மனதில் பதிந்து கனவில் வர வாய்பிருக்குறது அப்படி தானே? ஆனால் அந்த மீன் வாழ்ந்ததோ டைனோசருக்கும் முன்பே. அதன் வடிவத்தை கண்டுபிடித்த முதல் மனிதனே நாம் தான் அப்படி இருக்கும்போது இது எனது கனவில் வந்தது எப்படி என்று குழம்பி போனார்.

பிறகு ஒரு கருத்தை சொன்னார். அதாவது "பிரபஞ்ச அறிவு என்று ஒன்று இருக்கிறது அதற்கு எல்லாமே தெரியும். மனித மூளையால் அந்த பிரபஞ்ச அறிவை தொடர்பு கொள்ள முடியும்."

நீங்கள் தையல் மிஷினை கண்டு பிடித்தவர் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதை கண்டுபிடிக்கும் போது ஒரு சிக்கல் இருந்தது. துணிக்கு உள்ளே வெளியே போயிட்டு வரும்படி எப்படி வடிவமைப்பது என்று புரியவில்லை. நீண்ட யோசணைக்கு பின் தூங்க போனார். கனவில் ஒரு காட்சி அவரை காட்டு வாசிகள் கடத்தி சென்றார்கள். அவர்கள் வைத்திருந்த ஈட்டியில் மிக வித்தியாசமாக முனையில் ஓட்டை இருந்தது. பொறி தட்டியது போல எழுந்தவர் ஊசியில் முனையில் ஓட்டையை வைத்து மிஷினை சோதித்து பார்த்தார்... வெற்றி.

"யூரேக்கா" என்று தண்ணி தொட்டியில் இருந்து உடலில் துணி இல்லாமல் கத்தி கொண்டு ஓடிய ஆர்கிமிடிஸ் பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். மன்னன் தனது கிரீடத்தில் கலந்துள்ள தங்க கலப்பை கிரீடத்தை சிதைக்காமல் கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தார். அதை குறித்து இரவு பகலாக மண்டையை போட்டு உடைத்தபோதெல்லாம் விடையை ஆர்கிமிடிஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக எந்த சிந்தனையும் இல்லாமல் ஓய்வாக தண்ணீர் தொட்டியில் மூழ்கியபோது தனது எடைக்கு ஏற்றார் போல தண்ணீர் தொட்டியை விட்டு வெளியே வழிந்து ஊற்றியதை பார்த்தபோது தான் திடீர் என்று அவர் உண்மையை கண்டு பிடித்தார்.

எக்ஸ்ரே வை கண்டு பிடித்த ராண்டஜன் வேறு எதையோ கண்டுபிடிக்கப் போய் தற்செயலாக எக்ஸ்ரே வை கண்டு பிடித்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டு பிடித்தபோது எந்த அறிவியல் சிந்தனையும் இல்லாமல் கீழே விழும் ஆப்பிளை மரத்தடியில் உட்கார்ந்து ஆசாமி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார் என்பதை நினைத்து பாருங்கள்.

மிக தீவிரமாக தர்க்க அறிவோடு காரண காரியத்தை ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை விட மனிதன் சிந்தனை ஏதும் இல்லாத நேரத்தில் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் தான் அதிகம். இது நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் தெரிந்த அறிவு ஒன்று இருக்கிறது. மனித மூளையால் அதை தொடர்பு கொள்ள முடியும். குறிப்பிட்ட வகை சிந்தனை போக்கை கையாள்வது மூலம் அந்த பிரமாண்ட அறிவு பெட்டகத்தில் இருந்து உண்மைகளை நம்மால் இழுத்து வர முடியும்.

அது என்ன தொழில் நுட்பம்? என்ன மாதிரி செயல்பாடுகள் மூலமாக இந்த மனித அறிவை அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள செய்ய முடியும்?


பாகம் 6 : "நான்" அற்ற நொடிகள்



"1729"


    ந்த நம்பரை பற்றி தெரியுமா? கணித மாணவர்களுக்கு நன்கு தெரிந்த எண் இது. இதற்கு பெயர் ராமானுஜம் - ஹார்ட்லி எண். ஏன் அந்த பெயர்?

ஒரு முறை கணித மேதை ராமனுஜம் உடல்நிலை சரி இல்லாதபோது அவரை பார்க்க அவர் நண்பர் ஹார்ட்லி என்பவர் சென்று இருந்தார். (அவரும் ஒரு கணித மேதை தான்) அப்போது, தான் வந்த டாக்சியின் நம்பரே தனக்கு பிடிக்கவில்லை என்றும் ராசியே இல்லை என்றும் ரொம்ப 'டல்' நம்பர் அது என்றும் குறிபிட்டார்.

அதை கேட்ட ராமானுஜம் உடனே மறுத்து இது ஒரு விசேஷமான நம்பர் என்றார்.

"இரண்டு கியூப் நம்பர்களை இருவேறு வழிமுறையில் கூட்டினால் ஒரே விடை வர கூடிய எண்களில் மிக சிறிய எண் இது தான்" என்றார்.

அவர் சொன்ன அந்த இரண்டு வழிமுறை :

1729 = 1³ + 12³ மற்றும் 9³ + 10³ இது தான்.

இப்படி இரண்டு வழிமுறைகளில் கியூப் எண்களை ஒரே விடை வர கூடிய வகையில் கூட்டும் படி நிறைய எண்கள் உண்டு. ஆனால் அதில் மிக சிறியது இந்த 1729 தான்.

ராமானுஜன் இதை சொன்னபோது அவர் என்ன சொன்னார் எதை சொன்னார் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிக்க ஹார்ட்லி எனும் கணித மேதைக்கே சில வாரம் பிடித்தது என்கிறார்கள். இப்படிப்பட்ட ஓரு விஷயத்தை அந்த நம்பரை பார்த்த மட்டில் ராமனுஜனால் சொல்ல முடிந்தது எப்படி? இதை தர்க்க ரீதியாக யோசித்து காரண காரிய அறிவை பயன்படுத்தி சொல்ல சாத்தியமே இல்லை.

ஐன்ஸ்டைன் சாதாரண மனித மூளைக்கு அப்பாற்பட்டு பல உண்மைகளை வீட்டு அறைகளில் உட்கார்ந்து கொண்டே சொன்னார் என்று சொன்னேனல்லவா அவரைப் போல இன்னோரு வி்சித்திர மனிதன் தான் இந்த ராமானுஜன். காரணம் இவர் கண்டு சொன்ன கணித உண்மைகள் சாதாரன மனித மூளையின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஐன்ஸ்டைனின் சார்பியலை இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருப்பதை போலத் தான் இவர் விட்டு விட்டு போன பல கணக்குகளை இன்னும் அறிஞர்கள் எடுத்து வைத்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல விஷயங்கள் இன்றளவும் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. 

போன பாகத்தில் நான் சொன்ன சில எடுத்துக் காட்டுகள் மற்றும் இந்த ராமானுஜன் இவர்களை எல்லாம் பார்த்து 'அப்போ எதையும் யோசிக்காம இருந்தா பல உண்மை அறியலாம் போல' என நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறு இல்லை.

அப்படியென்றால் அதிகம் சிந்திக்காதபோது தான் அதிக உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்ற கருத்துப்படி அதிகம் போதை வஸ்து பயன்படுத்துபவன் அதிக பிரபஞ்ச அறிவை அடைவதாக அல்லவா இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பது இல்லையே.

காரணம் மனம் சஞ்சலம் அற்ற கீற்றாக.. காற்று வீசாத இடத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்கு சுடர் போல அசைவற்று ஒருங்கிணைந்து இருப்பதற்கும்..... ஒருவன் யோசிக்கவே முயற்சிக்காமல் சோம்பேறியாக இருப்பது அல்லது யோசிக்கவே முடியாத ஒரு நிலையில் மனம் மயங்கிய நிலையில் அல்லது போதை நிலையில் இருப்பதற்கும் வித்யாசம் உண்டு.

ஒரு விதை பார்க்க கல் போல தான் இருக்கும் ஆனால் கல்லும் விதையும் ஒன்று அல்ல. ஒரு விதை தனக்குள் உயிரையும் ஏகப்பட்ட சாத்தியங்களையும் மேலும் லட்ச கணக்கான மரங்களையும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு. எனவே நாம் பார்த்த சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் அறிந்த ஒரு மாபெரும் தகவல் பெட்டகம் உள்ளது அதில் பிரபஞ்சத்தின் அணைத்து பதிவுகளும் உள்ளன. நாம் குறிப்பிட்ட முறையில் முயன்றால் அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடியும். 

பிரபஞ்ச மகா அறிவு ஒரு பண்பலை அலைவரிசை போல நம்மை சூழ்ந்து இருக்கிறது என்றால் சரியாக பயன் படுத்த தெரிந்தால் நமது மூளை தான் ரேடியோ ரிசிவர்.

அந்த ரேடியோவை டியூன் பண்ண தெரிந்தவர்ளை தான் நாம் ஞானிகள் அல்லது விஞ்ஞானிகள் என்கிறோம். இவர்களை போன்றவர்களை பார்க்கும் போது அவர்களை சுற்றி இருந்தவர்கள் ஆச்சரயத்தில் மூழ்கி போய் 'இதை எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீங்க' என்று கேட்டிருக்க மாட்டார்களா?

இந்த கேள்விக்கு ஐஸ்டைன் சொன்ன பதில்

"நான் மற்றவர்களை விட எந்த விதத்திலும் அதிகம் புத்திசாலியாக இருப்பதாய் நினைக்க வில்லை ஆனால் மற்றவர்களை விட நான் அதிகம் ஆர்வம் கொண்டு இருக்கின்றேன் அது தான் ஒரே வித்தியாசம்" என்றார். 

ராமனுஜரிடம் நீங்கள் எப்படி இந்த விடைகளை கண்டு பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு விசித்திரமான பதிலை சொன்னார். 

"நான் கண்ணை மூடினால் நான் வணங்கும் அம்மன் கை தோன்றுகிறது. அது விடையை எழுதுகிறது அதை தான் நான் பார்த்து சொல்கிறேன்" என்றார்.

ராமானுஜன் அதிகம் ஆழமாக யோசித்து போட்ட கணக்கை விட ஓய்வாக இருக்கும்போது போட்ட கணக்குகள் தான் அதிகம்.

இப்படி பிரபஞ்சத்துக்கும் மனித மனதிற்கும் ஒரு தொடர்பு நூல் கயிறு இருப்பதை வரலாறு முழுதும் உள்ள அறிஞர்கள் வாழ்வில் பார்க்கலாம்.

நீங்கள் 'வான்கோ' என்ற ஓவியரை பற்றி கேள்வி பட்டிருக்கலாம். அவரது ஓவியங்களில் மரங்கள் மிக உயரமாக வானத்தை முட்டுவதை போல இருக்கும். குறிப்பாக நட்சத்திரங்களை வரையும் போது அவர் வானில் சுருள் சுருள் வடிவில் மட்டுமே வரைந்தார்.

"நட்சத்திரங்கள் என்ன சுருள் வடிவிலா இருக்கிறது? வானத்தை பாருங்கள் அது சில்லறையை இறைத்தத்து போல அல்லவா இருக்கிறது பிறகு ஏன் எப்போ பார்த்தாலும் இப்படியே வரைகிறீர்கள்?" என்று பல பேர் அவரை கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை என் மனதிற்கு நட்சத்திரதிரத்திற்கு இந்த வடிவம் தான் சரி என்று தோன்றுகிறது" என்றார்.

பிற்காலத்தில் கேலக்சியின் வடிவம் சுருள் தான் என்பதை நாம் கண்டு பிடித்தோம். ஆனால் அந்த உண்மையை அந்த ஓவியரின் மூளை எப்படி உள்வாங்கியது?

அவர் தனது கடைசி காலத்தில் நமது சூரியனை வரைந்தார். அதற்காக தினம் சூரியனை மணிக்கணக்கில் உற்று பார்ப்பார். அவரது நண்பர் அவரிடம் "இதை ஏன் தினம் உற்று பார்த்துகிட்டு இருக்கீங்க ஒரு நாள் பார்த்தது தானே அடுத்த நாளும் இருக்க போகுது" என்று கேட்டதற்கு அவர்..

"அடுத்த நாளா.... நீங்க வேற ஒரு கணத்தில் இருக்கும் இது அடுத்த கணத்திலேயே இருப்பது இல்லை தெரியுமா... இது கணத்திற்கு கணம் மாறி கொண்டே இருக்கிறது இதன் தன்மை என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அதனால் தான் தினம் தினம் இதை உற்று பார்த்து கொண்டு இருக்கின்றேன்" என்றார்.

பாதி படம் வரைந்த போதே சூரியனை தொடர்ந்து பார்த்து வந்ததால் அவர் பார்வை பறி போனது. மிகுந்த ஆச்சர்ய பட தக்க வகையில் மீதி படத்தை பார்வை இல்லாமலே வரைந்து முடித்தார் வான்கோ. நிச்சயமாக சூரியனை நமது மூளை உள்வாங்கியது போல அவர் மூளை உள்வாங்கி இருக்க வில்லை. அது வேற தளத்தில் சூரியனை உள்வாங்கி கொண்டிருந்தது. அதனால் தான் மீதி ஓவியத்தை வரைய அவருக்கு கண்களின் உதவி தேவை பட்டிருக்கவில்லை.

"கண்ணை வித்து ஓவியம் வாங்கின கதையா" என்று ஒரு பழ மொழியே உண்டு. இவர் வாங்க வில்லை... வரைந்தே இருக்கிறார். 

சரி ...'மனித மனதை பிரபஞ்ச அறிவுடன் இணைக்க இவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு ஏதும் வழிமுறை உண்டா? நாம் முயன்றால் அதை செய்ய முடியுமா?'

இந்நேரத்திற்கு இந்த கேள்வி தான் உங்களுக்குள் நிச்சயமாக ஓட தொடங்கி இருக்கும் அல்லவா..?

முடியும் என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.

இது போன்ற கண்டுபிடிப்புகள் மனித மனதில் உதித்த தருணங்களை எல்லாம் உற்று கவனித்த அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார்.

அதாவது ஒரு விஷயத்தை பற்றி மிக மிக ஆழமாக யோசித்து விட்டு பிறகு அதை பற்றி யோசிக்காமல் விட்டு விடுகிறபோது இந்த உண்மைகள் தோன்றுகின்றன என்றார் அவர்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஏதாவது பெயர் நினைவு வராமல் தவித்து இருக்கிறீர்களா? அப்போது மிக கடினப்பட்டு முயன்ற போதும் நினைவுக்கு அந்த பெயர் வராமல் போகும். பிறகு சீ போ என்று விட்டு விட்டு வேறு வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அந்த பெயர் திடீர் என்று நியாபகத்திற்கு வரும்.

அது தற்செயலாக வந்தது அல்ல. முன்பு நீங்க கொடுத்த அழுத்தம் இவ்ளோ நேரம் உள்ளுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்துள்ளது.

எனவே நாம் எந்த வேலை செய்தாலும் எந்த துறையாக இருந்தாலும் அது சம்பந்தமான உண்மைகளை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க ஆலன் நமக்கு ஒரு வழிமுறையை சொல்லி தருகிறார்.

நீங்கள் எந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்களோ அதை பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தொடர்ந்து மிக அழுத்தமாக அந்த சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு மேல் அதை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிற எல்லை வரை நீங்கள் அதை பற்றி பல கோணங்களில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். உங்கள் முயற்சியின் எல்லைக்கு அதை கொண்டு போக வேண்டும்.

பிறகு... திடீரென்று அதை பற்றி மறந்து விட வேண்டும். ஆம் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் வேறு வேலை பார்க்க வேண்டும். திடீரென்று அந்த உண்மை உங்களுக்குள் உதிக்கும் என்கிறார் ஆலன். 

எனவே நாம் பார்த்த விஞானிகள் உண்மை அறிய முயலாமல் வெறும் ஓய்வில் இருந்தவர்கள் அல்ல. அதை அறியும் ஆவலை அதன் எல்லைவரை கொண்டவர்கள். அந்த உண்மை மேல் தீரா தாகம் மற்றும் முடிவில்லா காதல் கொண்டவர்கள்.

இப்போது இந்த விஷயத்தை வேறு வகையில் சொல்கிறேன். அதாவது எந்த ஒரு மனிதனுக்கும் "நான்" என்கிற உணர்வு நிலை இருக்கும். அந்த நான் என்கிற உணர்வு தான் நம்மை எப்போதும் இயக்கி கொண்டு இருக்கும் ஒரு உள் உந்துதல். பல ராஜ்யங்களை சண்டையிட்டு வெல்வது முதல் பக்கத்து வீட்டு காரனை விட நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறாமை வரை உள்ளீடாக இருப்பது அந்த நான் தான். அந்த நான் ஐ தவறானது என்றும் சொல்லி விட முடியாது இந்த உலகில் நாம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள.. நாம் இயங்க அந்த "நான்" மிக தேவையாக உள்ளது.

மனிதன் மிக மிக சில கணங்களில் தான் அந்த 'நான்' அற்ற நிலையிலும் இருக்கின்றான்.

அந்த சில கணங்களில் மட்டும் தான் அந்த பிரபஞ்ச உண்மைகள் இவன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த நேரத்தில் மனிதன் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறான்.

நமது நாட்டின் வேதங்களை இயற்றிவர்கள் யார் என்று பெயர்கள் உள்ளது. அதை கவனித்து பார்த்தால் அதை இயற்றியவர்கள் என்று குறிப்பிடாமல் அதை 'கண்டவர்கள்' என்று பொருள் படும் படி பதிவு செய்து இருக்கிறார்கள். காரணம் அந்த வேத அறிவு தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி உண்மைகளை தன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டது என்றும் அந்த அறிவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் நம்பினார்கள்.

நீங்கள் கோவில்களில் எல்லாம் சென்றால் அங்கே டியூப் லைட் வாங்கி போட்டவர் பெயர் 'உபயம்' என்று பெரிய கொட்டை எழுத்தில் இருப்பதையும் ஆனால் அதே கோவிலில் அசாத்தியமான சிற்பங்களை செதுக்கிய கலைஞன் தனது பெயரை எங்கேயும் போட்டு கொள்ளாததையும் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய கண்டுபிடிப்புகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டவை தான் என்பதன் ரகசியம் இது தான்.

ஆர்கிமிடிஸ் நிச்சயம் அந்த ஊரில் ஒரு நல்ல மதிப்பு மிக்க ஆளாக தான் இருந்து இருப்பார். அவர் தெருவில் துணி இல்லாமல் தண்ணீர் தொட்டியில் இருந்து எழுந்து ஓடினார் என்பது இயல்பான நிகழ்வு அல்ல. சாதாரண நிலையில் அவர் நிச்சயம் அந்த காரியத்தை செய்து இருக்க வாய்ப்பில்லை. அந்த கணத்தில் அவர் 'தான் ஆர்கிமிடிஸ்' என்ற உணர்வு நிலையில் இல்லை என்பது தான் உண்மை.

மேரி கியூரி ஆழ்ந்த தூக்கத்தில் கணக்கை பூர்த்தி செய்ததும். ஐன்ஸ்டைன் வீட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு பிரபஞ்ச அறிவியல்களை புட்டு புட்டு வைத்ததும் ராமானுஜன் சாதாரண மனித அறிவிற்கு அப்பார்பட்ட கணக்குகளை உலகிற்கு வழங்கியதும் இப்படித்தான்.

மனிதனை அந்த மாதிரி சிந்தனை அற்ற... 'தான்' அற்ற நிலையில் வைக்கும் செயலுக்கு பெயர் தான் தியானம்.

மேல் சொன்ன விஷயங்களை பற்றி அறிவியல் மிக குறைவாகத்தான் சிந்தித்து இருக்கிறது. இதை அதிகம் பேசியது ஆன்மிகம் தான்.

ஐஸ்டைனின் கோட்பாடுகளில் அக்கறை கொண்ட அறிவியல் அவை வெளி வந்த மூலம் என்ன என்பதை ஆராய்வதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் உலகில் உள்ள எல்லா ஆன்மீக கோட்பாடுகளும் இந்த 'நான்' என்பது அழிந்தால் தனக்குள் வேறு ஏதோ ஒன்று பாய்ந்தோடும் என்ற கருத்தை வலியுறுத்துவதை பார்க்கலாம்.

"குழந்தை போல இருப்பவர்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் சாத்தியம்" என்கிறார் இயேசு. அவர் சொன்ன 'குழந்தை போல' என்பதற்கு பொருள் 'நான்' என்கிற ஈகோ அழிந்த நிலை தான். குழந்தைகளுக்கு தான் ஈகோ இருப்பதில்லை.

தன்னை உணர்தல் என்பதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பவர்களிடம் "நான் யார் என்பதை உற்று கவனி" என்ற ஒரு வரி உபதேசத்தை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தார் ரமணர்.

அந்த நான் அற்ற நிலையில் தான் ஞானம் வருவதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். ஞானம் வருகிறதோ இல்லையோ ஆனால் உலகின் மிக பெரிய அறிவியல் கருத்துக்கள் பிறந்தது விஞ்ஞானிகள் தாங்கள் "நான்" அற்ற நிலையில் இருந்த போது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகை புரட்டும் மிக பெரிய விஞ்ஞானத்தை விட்டு விட்டு இப்போது நமது கட்டுரை வாழ்வை புரட்டும் அன்றாட வாழ்க்கை பக்கம் திரும்புகிறது... அதாவது முதல் பாகத்தில் நான் சொன்ன மூளை மற்றும் மனம். இதில் மூளை பற்றிய அலசலை முடித்துவிட்டு இப்போது கொஞ்சம் மனம் பற்றி பேசப்போகிறது.

நாம் நமது வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ விரும்புகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறோம். புகழ் அடைய நினைக்கின்றனர். சாதிக்க நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் நமது மூளையின் அற்புத ஆற்றலை மிக சரியாக தான் நாம் பயன் படுத்துகிறோமா?

பிரபஞ்ச உண்மைகளை மூளை உட்கிரகிக்க சிந்தனை அற்ற ...'நான்' அற்ற நிலை உதவியது போல இதற்க்கு உதவ வழி முறை ஏதும் உள்ளதா? அப்படி பயன்படுத்தி வாழ்கையை செழுமையாக வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களா?

அடுத்த வரும் பாகங்களில் தொடர்ந்து சிந்திப்போம்...




பாகம் 7 : இவன் அசாதாரணன்



        னதை சரியாக கையாள்வது எப்படி... சரியாக சிந்திப்பது எப்படி... சிந்திக்கும் முறை என்பது என்ன... மனதை பயன்படுத்தி மனதை வளமாகுவது எப்படி என்பதை எல்லாம் பார்க்க போகிறோம்.

ஆனால் அதற்கு முன் இந்த மனதை பயன்படுத்தினால் அதை கட்டுப்படுத்த ஒருமுகப்படுத்த தெரிந்தால். வேறு விதமாக வாழலாம் என்பது வெறும் கற்பனை கூற்றா அல்லது அப்படி பயன்படுத்தி நம்மை விட சக்திவாய்ந்த மனதிற்கு சொந்தக்காரராக யாரும் நிஜத்தில் வாழ்ந்து இருக்கிறார்களா என்பதை பார்க்க போகிறோம்.

அப்படி நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவு வலிமையான மனதையும் அறிவையும் கொண்ட ஒரு இந்திய நாட்டு அசாதாரணன் பற்றி தான் இப்போது நான் சொல்ல போகிறேன்.

அவர் பெயர் சுவாமி விவேகானந்தர்.

அவர் அமேரிக்கா சென்றார். அங்கு உலகமே வியக்கும் அளவு ஆன்மிகம் பரப்பினார். குழந்தைக்கும் புரியும்படி எளிமையாக ஆன்மிகத்தை விளக்கினார் என்பதை பற்றி எல்லாம் நான் இப்போது பேச போவதில்லை. மாறாக அவர் வாழ்வில் சில விசித்திரங்களை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மனதின் ஆற்றலில் நம்மை போல சாமான்யனாக வாழ்ந்தவர் அல்ல அந்த வீர துறவி. அந்த ஆச்சர்யங்களை பற்றி தான் நான் இப்போது சொல்ல போகிறேன்.

நாம் பொதுவாக கேள்விப்பட்ட கதை ஒன்று உள்ளது. அது அவரது புத்தகம் படிக்கும் ஆற்றல் பற்றிய கதை. சாதாரணமாக நூலகத்தில் இருந்து தலையணை சைசில் பல புத்தங்களை வாங்கி செல்வார் அவர். மிக ஆச்சர்யமாக அடுத்த நாளே அவை எல்லா வற்றையும் கொடுத்து விட்டு வேறு வாங்கி செல்வார். 

ஒரு சாமான்ய மனிதன் அந்த புத்தகங்களை படிக்க குறைந்தது மாதக் கணக்கில் ஆகும். இவர் ஓரிரு நாளில் அதை திருப்பி கொடுப்பது எப்படி? பொறுத்து பார்த்த நூலகத்தார் ஒரு நாள் கேட்டே விட்டார். "அய்யா நீங்க என்ன எதுனா சீன் போடரதுக்குனே வாங்கிட்டு போறீங்களா ...இல்ல தெரியாம தான் கேக்கறேன் ஒரே நாளைல இத்தனை புத்தகங்களை எப்படிங்க படிக்க முடியும்"

அவனை பார்த்த விவேக்கானதார். அந்த புத்தகத்தில் தாம் விரும்பிய எந்த பக்கத்தில் இருந்து எந்த சந்தேகம் வேணாலும் கேளு என்றார். அவன் கேள்வி கேட்ட போது... அவன் குறிபிடும் வரிகளை அப்படியே சொன்னதோடு இல்லாமல் அந்த பக்கத்தின் நம்பரையும் சேர்த்து சொன்னார்.

இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்க வேண்டும் என்று நினைத்த நூலக பொறுப்பாளர் மீண்டும் மீண்டும் சோதித்து பார்க்க அனைத்தையும் அப்படியே இதே போல விடை சொன்னார். கேள்வி கேட்டவர் வாயை பிளந்தார். இது எப்படி சாத்தியம் இது ஒரு சாமான்ய மனிதனுக்கு மிக அந்நியப்பட்டு இருக்கே இந்த ஆற்றல் என வியந்தார். அய்யா இது எப்படி சாத்தியம் என தயவு செய்து சொல்லுங்கள் என்று அவரை வேண்டி கேட்டார். 

அதற்கு அவர் சொன்ன பதில் "இது அப்படி ஒன்னும் ஆச்சர்யமான விஷயம் அல்லவே மனதை சரியாக ஒருமுகப்படுத்த தெரிந்து கொண்டால். அதன் ஆற்றல் முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை யார் வேணா தாராளமா செய்யலாம்" என்றார்.

அவரது இந்த ஆச்சர்யமான திறமை அவர் வாழ்க்கையில் பல இடங்களில் வெளிப்பட்டு இருப்பதை நாம் அவர் வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஒரு முறை வெளிநாட்டில் ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்திக்க சென்று இருந்தார். அப்போது அவர் வர கொஞ்சம் தாமதம் ஆனது. சரி என்று அதுவரை அங்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார். அடடே இது நண்பர் சிலாகித்து சொல்லும் புத்தகமல்லவா.

சில நிமிடங்கள் கழித்து அவர் நண்பர் வந்த போது விவேகானந்தர் "நண்பரே நீங்கள் சொன்னது போல் அப்படி ஒன்றும் இது விசேஷமாய் இல்லையே" என்றார்.

வந்த நண்பர் அதிர்ந்து போய் "நீங்க எப்போ இதை படித்தீர்கள்" என்று கேட்டார்.

"இதோ இப்போ காத்திருந்த நேரத்தில் தான்" என்றார் விவேக்கானதார்.

அதை கேட்டு நம்ப மறுத்த நண்பரிடம் விவேகானந்தர் சந்தேகம் என்றால் தன்னை பரிசோதித்து பார்த்து கொள்ளும் படி சொன்னார். அவர் அந்த புத்தகத்தில் எதேச்சையாக ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து கேட்க அந்த பக்கதில் என்ன உள்ளது என்று அப்படியே சொன்னதோடு இல்லாமல் "நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்தின் எண் ஐ சொல்லுங்கங்கள் போதும் என்னால் அதில் என்ன இருக்கிறது என சொல்ல முடியும்" என்றார்.

அந்த நண்பருக்கு மயக்கமே வந்து விட்டது. நமக்கு இப்போது திகைப்பாக இருபதை விட அந்த நண்பர் இன்னும் கூடுதலாக திகைத்தார். அவர் திகைத்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

பொதுவாகவே விவேக்கானதர் சிறு வயதிலேயே மனம் ஒருங்கினைவு தியானம் போன்ற சமாச்சாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் சிறு வயதில் விளையாட போனால்... தெரு முனையில் எங்காவது ஒரு ஓரமாய் போய் தியானத்தில் அமர்ந்து கொள்வாராம். அப்படி அமர்ந்து விட்டால் தன்னையும் வெளி புறத்தையும் காலத்தையும் அவர் மறந்து போவாராம். அவர் தாய் அவரை தேடி செல்லும் போது உடல் முழுக்க கொசுகளால் மூட பட்டு ஆனால் அதை குறித்த எந்த பிரகஞ்ஞையும் இல்லாத நரேந்திரனை காண்பாராம்.

பொதுவாக ஆன்மீகத்தில் ஒரு விஷயம் உண்டு அதில் ஆழ்ந்து செல்ல செல்ல மனதின் அளப்பரிய சக்தி பல சித்து வேலைகளை செய்ய வைக்கும். அந்த சித்து வேலைக்கு மயங்கி தனது ஆன்மீக பாதையை கோட்டை விட்டவர்கள் பலர். அவர்கள் கடைசி வரை நம்மை விட சற்று மாறுபட்டு ஏதேனும் சித்து வேலை செய்பவர்களாகவே கடைசி வரை வாழும் படி ஆகிவிடும். எனவே அந்த கவர்ச்சிக்கு இவர் ஆளாகிவிட கூடாது என்பதில் அவர் குரு ராமகிருஷ்ணன் மிக கவனமாக இருந்தார். மூளை செய்யும் சித்து வேளையில் அதிகம் நாட்டம் செலுத்தாதே என்று அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஒரு இலக்கு நோக்கிய பயணதில் வழியில் வரும் மலை... ஆறு.. காடுகளை ரசிக்கலாம் ஆனால் அதில் மயங்கி அங்கேயே இறங்கி கொண்டால். இலக்கை சென்று சேர முடியாது என்று அவருக்கு எடுத்து சொல்லி கொண்டே இருந்தார்.

பொதுவாக சிறந்த ஞானிகள் அதிசயங்கள் அற்புதங்களை செய்ய பிரியபடுவதில்லை (சில விதி விலக்குகள் உண்டு) அதற்கு காரணம் இரண்டு. 

ஒன்று இந்த மந்திர வேலைகளில் நாட்டம் சென்றால் தன்னை முழுதாக அறியும் ஒரு பயணமாகிய ஆன்மீக இலக்கை தவற விட நேரும்.

இரண்டாவது காரணம் மிக நுட்பமானது. அதாவது வாழ்வை ..ஆழமாக புரிய புரிய அவர்களுக்கு அற்புத செயல் சாதா செயல் என்று இரண்டு இல்லை என்று புரிதல் உண்டாகிறது. நாம் பார்க்கும் அனைத்திலும் அற்புதம் அடங்கி உள்ளது. ஒரே ஒரு மணல் துளியில் உள்ள அனைத்து ரகசியத்தையும் இன்று வரை அறிவியல் விளக்க முடியவில்லை.

பிரபஞ்சத்தில் அற்புதம் அல்லாதது என்று எதுமே இல்லை. சாதா செயல் என்று ஒன்று கூட இல்லை. நமக்கு நன்கு புரிவதை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். நமக்கு புரிபடாததை அற்புதம் என்கிறோம் அவ்ளோதான். சில நூறு ஆண்டுகளுக்கு முன் யாராவது பூமியின் அடுத்த முனையில் உள்ளவர்களை இங்கேயே தொடர்பு கொள்ள முடியும் என்று சொன்னால் அதை அற்புதம் என்று தான் சொல்லி இருப்போம் ஆனால் இன்று அது அற்புதம் அல்ல.

எனவே ஞானிகளைப் பொறுத்தவரை இரண்டே பார்வை தான். ஒன்று ...எதுவுமே அற்புதம் அல்ல எல்லாம் இயல்பானது. அல்லது எல்லாமே அற்புதம் தான் எதுவுமே சாமான்யமானது அல்ல. எனவே ராமகிருஷ்ணர் அற்புதம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

ஒரு முறை அவர் சீடர்களிடம் உரையாடி கொண்டிருந்த போது. ஒரு சீடர் ஓடி வந்தார். சுவாமி ஒரு அற்புதம்... "நம்ம ஊருக்கு தண்ணீரில் நடக்கும் யோகி ஒருவர் வந்து இருக்கார். ஆற்றில் இங்கே இருந்து அடுத்த கரை நடந்தே செல்கிறார். 30 வருட கடும் யோக பயிற்சியால் இது சாத்தியப்பட்டது என்கிறார்" என்று ஆச்சர்யபட்டு பேசினான்.

ராம கிருஷ்ணர் சிரித்து விட்டு "நம்ம ஓட காரன் ஆற்றில் இங்கே இருந்து அங்கே கொண்டு போய் விட எவ்ளோ வங்கரான்" என்று கேட்டார்.

"3 பைசா சாமி " என்றார் சீடர்.

அதற்கு ராம கிருஷ்ணர்...

"ஒருத்தன் 3 பைசா பெருமானமுள்ள வித்தையை 30 ஆண்டுகளா கத்துகிட்டு வந்திருக்கான் முட்டாள் அந்த நேரத்துக்கு வேற எதுனா உருப்படியா பன்னி இருக்கலாம். இந்த வித்தையால யாருக்கு என்ன பயன்" என்றார்.

மிக சில ஞானிகளே மக்களுக்காக அற்புதம் செய்ய பிரியப்பட்டவர்களாக இருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள் அப்படி ஒன்று இருப்பதையே வெளிக்காட்டாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

உதாரணமாக புத்தர். அவர் மனம் செய்யும் மந்திரத்தில் யாரும் மயங்க கூடாது என்பதில் மிக குறியாக இருந்தார். ஆனால் அவரை மீறி ஒரு இடத்தில் மக்கள் இடம் மாட்டி கொண்டார்.

புத்தர் வாழ்வில் அவர் வரலாறு பதிவு செய்துள்ள ஒரே இயல்புக்கு மாறான நிகழ்வு இது தான். அதாவது ஆற்றில் வெள்ளம் வந்தபோது பக்கத்து கிராமத்திற்கு போக முடியாமல் அனைவரும் தவித்தனர். புத்தருக்கோ அவர் போதனைக்கு கண்டிப்பாக செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே பல பேர் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஒரு காரியத்தை செய்தார். தீடீரென டிரான்ஸ்மிட் ஆகி போனார். இக்கரையில் மறைந்து அக்கரையில் அவர் தோன்றியதை பல பேர் சாட்சியாக பார்க்க நேர்ந்தது. (டிஸ்கவரியில் வெளியான Ancient Alien நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை பற்றி பதிவு செய்திருக்கிறார்கள்)

எனவே மனதின் சக்தி அது தரும் அசாத்திய ஆற்றல் இதில் தனது சீடன் அதிகம் கவனம் செலுத்த கூடாது என்று ராமகிருஷ்ணர் ஒரு காரியம் செய்தார். ஒரு முறை விவேகானந்தரை அவர் நண்பர்களுடன் அழைத்தார். தனது மனம் பற்றிய ஆற்றலில் அதிகம் கர்வம் கொண்டிருந்த விவேகானந்தரிடம் ஒரு சாதுவின் முகவரி கொடுத்து அவரை போய் பாரு. உன் மனதில் இருப்பதை அவர் படிக்க முடியும் என்று சொல்லி அனுபினார். அற்புதங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட விவேகானந்தர் அதிக ஆர்வதோடு நண்பர்களுடன் அவரை பார்க்க சென்றார். இவர்களை வரவேற்ற அந்த பாபா இவர்கள் சென்ற உடன் ஒரு விசித்திர காரியம் செய்தார். ஆளுக்கு ஒரு துண்டு சீட்டு எழுதி இதை இப்ப படிக்க வேணாம் என்று கூறி அவர்கள் பாக்கெட்டில் வைக்க சொன்னார்.

பிறகு ஒரு அரைமணி நேர உரையாடலுக்கு பின் விவேகானந்தர் விஷயத்துக்கு வந்தார். "மனதை படிக்கும் அற்புதங்கள் உங்களிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு பார்க்க வந்தோம்" என்றார்.

அந்த பாபா அவர்கள் அனைவரையும் மனதில் எதையாவது ஒன்றை நினைத்து கொள்ளச் சொன்னார். நண்பர்கள் தங்களுக்குள் திட்டமிட்டு அவர் கொஞ்ச கூட கணிக்க முடியாதபடி ஒரு நண்பர் தனக்கு தெரிந்த வேறு மொழியில் ஒரு வார்த்தை நினைத்து கொண்டார்கள். விவேகானந்தர் தனக்கு தெரிந்த மிக கடினமான சமஸ்கிருத சுலோகம் ஒன்றை நினைத்து கொண்டார். இப்படி ஆளாளுக்கு ஒன்றை நினைத்து கொண்டு "நாங்க என்ன நினைத்தோம் சொல்லுங்க பார்போம்" என்றார்கள்.

அதற்கு அந்த பாபா நான் அரைமணி நேரம் முன்பு உங்களுக்கு எழுதி கொடுத்த சீட்டை இப்போ எடுத்து பாருங்க என்றார். எடுத்து பார்த்த நண்பர்கள் அதிர்ந்தார்கள். இவர்கள் நினைத்ததைத்தான் அங்கே அவர் அரைமணி நேரம் முன்னவே எழுதி கொடுத்திருந்தார்.

இதை லாஜிக் இல் அடக்கமுடியாமல் விவேகானந்தர் தவித்தார். ஆனால் மனதின் சித்து வேளையில் கர்வமும் ஆர்வமும் கொள்ள கூடாது இந்த விஷயத்தில் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றும் இது வெறும் ஒரு வித்தை என்றும் குரு நமக்கு உணர்த்த தான் இங்கே அனுப்பி உள்ளார் என்றும் புரிந்து கொண்டார்.

ஒரு முறை தேம்ஸ் நதிக்கரையில் விவேகானந்தர் உலாவிக் கொண்டிருந்த போது அங்கே இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள்.

"நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர்.

அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.

வேகமாக செல்லும் ஒரு ரயிலில் இருந்து கொண்டு வெளியில் உள்ள ஒரு பெயர் பலகையை ஒரு அப்பாவும் பையனும் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். நீண்ட பெயர்களை பைய்யன் படிக்க முடியாமல் கஷ்டப்படுவான். ஆனால் அந்த ஒரு வினாடி பார்வையில் கடந்து செல்லும் பெயர்களை அப்பாவின் மூளை உள்வாங்கி இருக்கும் அல்லவா. அப்படி அந்த திறன் நம்மை விட மிக அதிக அளவில் கொண்டிருந்தவர் விவேக்கானதார். எந்தளவு என்றால் ஒரு புத்தகத்தின் பக்கத்தை சும்மா பார்த்த மட்டில் அதில் உள்ள அனைத்து தகவலையும் அவர் கண்கள் வாயிலாக மூளை உள்வாங்கும் அளவு.

விவேகானந்தரின் இந்த திறமை எதோ ஒரு அற்புதம் அது தெய்வ சக்தியால் தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் நான் இக்காலத்து ஆட்கள் ஒரு மூணு பேரை அறிமுகம் செய்கிறேன்.

1) "Anne Jones" ஹரி பாட்டரின் Deathly Hallows புத்தகத்தை வெறும் 47 நிமிடத்தில் படித்தவர். (சாதாரண ஆட்களுக்கு மாத கணக்கில் ஆகும்)

2) "Stephen Wiltshire" இவர் ஒரு ஓவியர். சிக்கலான தெருக்கள்.. ரயில்வே ஸ்டேஷன்கள்...அல்லது இயற்கை காட்சியை ஒரு முறை பார்ப்பார் அவளோதான் அதன் அனைத்து தகவல்களும் மூளையால் படம் பிடிக்கப்பட்டு அதை அப்படியே படம் வரைந்து விடுவார்.

3) "Kim Peek" அசாதாரண முறையில் புத்தகம் படிபவர். இவரது இடது கண் புத்தகத்தின் இடது பக்கத்தையும். வலது கண் வலது பக்கத்தையும் தனி தனியாக உள்வாங்கி மூளை அதை ஒரே நேரத்தில் உணர கூடியது.

இவர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. படித்து பாருங்கள்.

இப்போது விவேகானந்தரின் புத்தகம் படிக்கும் தன்மை பற்றி நமக்கு ஓரளவு புரிகிறதல்லவா... சரி அந்த வெளிநாட்டு நண்பர் விவேக்கானதர் அந்த புத்தகம் படித்ததை பார்த்து திகைத்ததற்கு வேறு ஒரு காரணம் இருந்தது என்று சொல்லி நிறுத்தினேன் அல்லவா. அது என்ன என்று இப்போது சொல்கிறேன். அந்த புத்தகம் விவேகானந்தர் சற்றும் அறியாத ஜெர்மன் மொழி புத்தகம்.

"இதை எப்படி நீங்கள் படித்தீர்கள் உங்களுக்கு தான் ஜெர்மன் மொழி தெரியாதே" என்று கேட்டதற்கு "இந்த புத்தகம் வாயிலாக நான் இதை எழுதியவனின் மனதை படித்து கொண்டிருந்தேன்" என்றார் விவேகானந்தர்.

நண்பர் மேலும் திகைத்து "அது எப்படி முடியும்" என்று கேட்டதற்கு...

"அது ஒன்னும் பெரிய அற்புதம் இல்ல.. மனதை ஒருங்கிணைக்க முடிந்தால் இதை யார் வேண்டுமானாலும்... ஏன் நீங்களே கூட பண்ணலாம்" என்றார்.

சரி விவேக்கானதர் அளவு எல்லாம் நாம் போக வேண்டாம். மனதை பயன்படுத்தி நமது அன்றாட வாழ்வை மாற்றி அற்புதம் செய்ய வைக்க முடியுமா... அதற்கென ஏதும் சிந்திக்கும் வழிமுறைகள் உள்ளனவா?

ஆம் உண்டு நாமே செய்ய முடிய கூடிய அற்புதம் அதை பற்றி அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திப்போம்...



பாகம் 8 : நீர் இல்லாத கிணறு



        மது எண்ணங்களின் வேலை என்ன? நமது எண்ணங்களின் வலிமை என்ன? நமது சிந்தனைகளுக்கும் நமது செயல்பாட்டிற்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? 

இது போன்ற பல விஷயங்களை மிக ஆழமாக சிந்தித்து ஆராய்ந்தார் ஜேம்ஸ் ஆலன் என்கிற தத்துவ ஆய்வாளர்.

ஜேம்ஸ் ஆலன் தனது 15 ஆவது வயதில் பள்ளியை விட்டு சென்றார். ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையை குறித்து குறிப்பாக மனித சிந்தனையை குறித்து மிக ஆழமாக சிந்தித்தார். ஓரு பொருளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு அதை தொடர்ந்து ஆறாயும் ஒரு விஞ்ஞானி போல ஜேம்ஸ் ஆலன் எடுத்து மிக தீவிரமாக ஆராய்ந்த பொருள் மனித மனம். இதன் விளைவாக மனித மனம் பற்றிய பல அரிய உண்மைகளை உலகிற்கு கண்டு சொன்னார் ஆலன்.

அவரது முதல் புத்தகமான "ஏழ்மையில் இருந்து வளமைக்கு" (From Poverty to Power) அவரது வித்யாசமான ஆழமான சிந்தனைகளை உலகிற்கு காட்டியது.

ஆலன் நிறைய புத்தகங்களை வெளியிட்டவர் ஆனால் அவரது 3 ஆவது புத்தகமான "As a Man Thinketh" இன்று வரை பதிப்புகளில் சாதனை படைத்த புத்தகம்.

மனித மனம் பற்றிய மிக ஆழமான பல உண்மைகளை எடுத்து சொன்ன ஒரு புத்தகம். பைபிள் வாசகமான "மனிதன் சந்தித்ததை போல அவன் இருக்கின்றான்" (As a man thinketh in his heart, so is he) என்கிற வாசகத்தில் இருந்து தனது புத்தகத்துக்கு "As a man thinketh" என்ற பெயரை வைத்து இருந்தார்.

அந்த புத்தகத்தில் அவர் மனித மனதை சரியாக பயன்படுத்துவது எப்படி? சரியாக சிந்திக்கும் முறைகள் என்பது என்ன? நமது எண்ணங்களை கையாள்வதன் மூலம் நமது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது எப்படி போன்ற பல விஷயங்களை எடுத்து சொன்னார். 

நம்மூரில் இருந்து ஒருவர் அதை படித்து பார்த்து மிக ரசித்து ஆழ்ந்தார். அடடே இவைகள் வாழ்க்கையையே மாற்றும் சிந்தனைகள் ஆயிற்றே என்று ஆச்சர்யப்பட்டார். நல்ல அறிஞர்களில் தேச பாகுபாடு பார்க்க கூடாது என்று எண்ணம் கொண்டார். இவைகளை நமது நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதன் விளைவாக நிறைய புத்தகங்களை எழுதினார். அந்த மனிதரின் பெயர் M. S உதய மூர்த்தி. (இப்போது அவர் இவ்வுலகில் இல்லை )

அவரது, 

"எண்ணங்கள்" 

"மனம் பிராத்தனை மந்திரம்" 

"சாதனைக்கோர் பாதை" 

"நெஞ்சமே அஞ்சாதே நீ"

"உலகால் அறிய படாத ரகசியம்"

"உயர் மனிதன் உண்டாக்கும் எண்ணங்கள்"

"ஆத்ம தரிசனம்"

"தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்"

"உன்னால் முடியும்"

போன்ற பல புத்தகங்களில் உள்ளீடாக இருப்பது ஜேம்ஸ் ஆலன் அவர்களின் கருத்துகள் தான்.

இயக்குனர் பாலசந்தர் "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்த போது "உன்னால் முடியும்" எனும் தலைப்பில் புத்தகம் எழுதி இளைஞர்களிடையே எழுச்சியை உண்டு பண்ணி இருந்த உதய மூர்த்தி அவர்களின் பெயரை தான் கதாநாயகனின் பெயராக வைத்தார்.

ஜேம்ஸ் ஆலன் கருத்துகளை பகிர்ந்து கொள்ள MS உதயமூர்த்தி அவர்கள் விரும்பியது போல MS உதயமூர்த்தியின் கருத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவரது மற்றும் ஆலன் அவர்களது மனம் குறித்த சில சிந்தனைகள் மிக ஆழமானவை. ஒரு வரி கருத்து கூட நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைத்து புரிதலை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணமாக அவரது ஒரு கருத்தில் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை மாறாக அவனை அடையாளம் காட்டுகின்றன" என்கிறார்.

நமக்குள் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் மந்திர வாக்கியம் இது. ஒரு உதாரணத்திற்காக கிராமத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்த ஒருவன் நகரத்திற்கு மேல் படிப்பிற்கு சென்ற மாணவன் அங்கே பல தீய பழக்கத்திற்கு ஆளாகிறான் என்று வைத்து கொள்வோம். "ஏன் இப்படி கெட்டு போய்ட்ட" என்று கேட்டால் "நான் என்ன பண்றது நான் சேர்ந்த நண்பர்களும் இப்போ இருக்கும் சூழ்நிலைகளும் அப்படி" என்று சொல்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அது சுத்த பொய் என்கிறார் ஆலன்.

"தான் விரும்பாத வரை... தான் இடம் கொடுக்காத வரை எப்படிப்பட்ட சூழ்நிலையும் ஒரு மனிதனை கெடுக்க முடியாது" என்கிறார் ஆலன். சூழ்நிலை தான் மனிதனை உண்டாக்குகிறது என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதை மிக உறுதியாக மறுக்கிறார் ஆலன். 

"சூழ்நிலையால் மனிதனை உண்டாக்க முடியாது ஆனால் அவனுக்குள் இருக்கும் நிஜ மனிதன் என்ன என்பதை அடையாளம் காட்ட முடியும்" என்கிறார். ஒருவன் நகரத்திற்கு வந்து கெட்டவன் ஆகிவிட்டான் என்றால் அவனுக்குள் கெட்டவன் ஏற்கனவே இருந்து இருக்கின்றான் என்கிறார். அப்படி இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிறார்.

இதே கருத்தை புத்தர் பல இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றார். தண்ணீர் இல்லாத கிணற்றில் நீங்கள் எத்தனை முறை இறைத்தாலும் வெறும் காலி பாத்திரம் தான் திரும்பி வரும் நீர் வராது என்கிறார்.

ஒரு முறை ஒரு கிராமத்தின் வழியாக கடந்து செல்கிறார் புத்தர். வழக்கமாக தானம் கேட்டு வாங்கி சாப்பிடுவது தான் அவர் வழக்கம். அந்த ஊரிலும் அப்படி கேட்கிறார். அப்போது அவர் மேல் கடுப்பான ஒருவர் "கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு பிச்சை எடுத்து சாப்பிடற வெக்கமா இல்ல தூ" என்று முகத்தில் உமிழ்கிறார்.

புத்தர் அதற்கு எந்த மறுவினையும் ஆற்றாமல் மிக சாந்தமாக "வேறு ஏதும் தர வேண்டி இருந்தால் சீக்கிரம் தாருங்கள் அய்யா நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல வேண்டும்" என்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அவர் சீடர் ஒருவர் கொஞ்சம் நேரம் கழித்து அவரிடம் "எப்படி குருவே இவ்ளோ பொறுமையா இருக்கீங்க? அவன் காரி துப்பறான் உங்களுக்கு கோபமே வரலையா?" என்று கேட்கிறான்.

அதற்கு புத்தர், "அந்த மனிதன் மிக கால தாமதமாக வந்து விட்டான்" என்கிறார்.

"இதில் பொறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர் செய்ததற்கு மறுவினை ஆற்ற எனக்குள் அங்கே யாருமே இல்லை என்பது தான் உண்மை. வெறும் சூனியத்தில் எச்சில் துப்பினால் அது எப்படி கடந்து போய் கீழே விழுமோ அப்படி அவன் துப்பியது என்னை கடந்து சென்று விட்டது. சூழ்நிலைக்கு மறுமொழி ஆற்றும் ஒருவன் எனக்குள்ளிருந்து அழிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அந்த மனிதன் என்னை கோபப்படுத்த மிக தாமதமாக வந்து விட்டான்" என்றார்.

"நீர் இல்லாத வெற்று கினற்றில் எத்தனை முறை இறைத்தாலும் நீர் எடுக்க முடியாது... உள்ளுக்குள் கோபம் என்ற ஒன்று முற்றிலும் அழிந்து போன ஒருவனை எந்த சூழ்நிலையும் கோபப்படுத்த முடியாது" என்கிறார் புத்தர்.

புத்தர் சொன்ன மிக சக்தி வாய்ந்த வாசகம் ஒன்று உண்டு. 

"உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சல் மூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான்"

நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.

ஜேம்ஸ் ஆலனின் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை, அடையாளம் காட்டுகின்றன" என்ற வாசகம் நமக்குள் தலைகீழ் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. சூழ்நிலை தன்னை மாற்றி விடுமோ என்று அஞ்சும் நபர்கள் ஆலனின் கருத்தை நம்புவார்கள் எனில் சூழ்நிலை நமது கையில் தான் உள்ளது. எனவே அதற்கு அஞ்ச வேண்டிய தேவை இல்லை என்று தன்னம்பிக்கை கொள்ளலாம்.

தொடர்ந்து சிந்திப்போம்...

பாகம் 9 : இயற்கையுடன் இயைந்து



மனிதனின் எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்குமா?


      நீங்கள் சாபம் விடுவது அல்லது 'கண் வைப்பது' என்ற விஷயங்களை அவ்வப்போது கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா? அவைகள் எல்லாம் வேறு ஒன்றும் இல்லை நமது தீவிர எண்ணம் மூலமாக பிறரை பாதிப்பது தான். ஒருவர் "வயிறு எரிஞ்சி சொல்றன் நீ நாசமா போயிடுவ" எனும் போது அவர் எண்ணங்களின் தீவிரதை நாம் புரிந்து கொள்ளலாம். தீவிர எண்ணத்துடன் சொல்லப்பட்ட சாப வார்த்தைகள் எண்ணங்களின் சக்தியால் பலிக்கிறது... பாதிக்கிறது என்கிறார்கள்.

மிக தீவிர எண்ணத்துடன் ஒருவனை பொறாமையாக பார்க்கும் போது அந்த தீவிர தீய எண்ணம் அவனுக்கு ஏதேனும் கேடு விளைவிக்கிறது.

பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் பழக்கம் இருக்கிறதே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது வேறு ஒன்னுமல்ல மேலே பார்த்ததுக்கு நேர் எதிரான செயல். அதாவது நமது நல்ல எண்ணங்களை பிறர் மேல் செலுத்துவது... 'மனம் குளிர்ந்து சொல்ரேன் நல்லா இருப்பா' எனும்போது உண்டாகும் ஒரு நேர்மறை சக்தி அந்த சம்பந்தப்பட்டவர்களை அரண் போல காக்கிறது.

இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞான விளக்கம் தேடினால் கிடைபது கடினம் தான். சரி இப்போது விஞ்ஞான ரீதியான ஒன்றை பற்றி பார்க்கலாம்.

சில விலங்குகளிடம் உள்ள அசாத்திய திறமை இருக்கிறதே... சொல்ல போனால் இதை விஞ்ஞானத்தை கடந்தது என்றும் கூட சொல்லலாம்.

நீங்கள் புறா வளர்த்திருக்கிறீர்களா? புறாக்கள் பொதுவாக ஊரின் வரைபடத்தை நினைவில் வைத்து கொள்ளுவதில் கில்லாடிகள். அதாவது புறாவை நாம் திறந்து விடும் போது அவை பறந்து முழு நகரத்தை நினைவில் வைத்து கொள்கின்றன. எனவே தான் எங்காவது தூரமாக கொண்டு போய் விட்டால் மீண்டும் சரியாக நம் வீட்டை தேடி அதனால் வர முடிகிறது.

சரி இது எவ்ளோ தூரம் வரை இப்படி சாதிக்கிறது என்பதை அறிய அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தி அதை தூரமான இடத்தில் கொண்டுபோய் விட்டு சில ஆய்வாளர்கள் சோதித்து பார்த்தார்கள். ஆய்வு முடிவு மிக அதிசயமாக இருந்தது. சென்னையில் வளர்க்கப்பட்ட ஒரு புறாவை கொண்டு போய் டெல்லியில் விட்டால் கூட அது தன் வீட்டை தேடி வந்து விடுகிறது.

இது எப்படி சாத்தியம்? டெல்லி வரையா பறந்து சென்று ரூட்டை அது மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும்? நிச்சயம் இல்லை. அதன் உடலில் இயற்கையாக பூமியின் எந்த பகுதியில் தாம் இருக்கிறோம் என்பதை உணரும் ஒரு GPS சிஸ்டம் இருக்கிறது.

நாம் சம்மருக்கு ஊட்டி கொடைக்கானல் செல்வது போல சீதோஷன மாறுதலை தாக்கு பிடிக்க ஒரு துருவத்தில் இருந்து அடுத்த துருவத்திற்கு செல்லும் பறவைகள் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அவைகள் கிட்டத்தட்ட 20,000 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்புகின்றன.

இளம் சிங்கங்கள் கூட்டமாக வேட்டை ஆடும் போது கவனித்து பாருங்கள். "மைக் ஒன் நீ அங்க நில்லு... மைக் டூ நீ பின்னாடி நில்லு... மைக் த்ரி நீ சைட் ல நில்லு... நான் அட்டாக் பண்ணும்போது நீங்க ரெண்டு பேர் சைட்ல வந்து அட்டாக் பண்ணுங்க மீறி தப்பினால் மைக் ஒன் நீ அடிச்சிட்டு..." என்று திட்டமிட்டு பேசி கொண்டதை போல மிக நேர்த்தியாக அவைகள் தனக்கான இடம் என்ன வேலை என்ன என்பதை சட்டென்று முடிவு செய்து செயல்படுவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

எறும்புகளின் கூட்டத்தை உற்று பாருங்கள் அந்த மொத்த கூட்டமும் ஒற்றை உயிரினத்தை போல செயல்படும். அவைகளுக்கு மொத்தமாக ஒரு கூட்டு மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் 100 எறும்பு இருக்கும் ஒரு கூட்டத்தை நினைத்து பாருங்கள் ஒவொன்றும் ஒரு திசையில் போக பார்க்க அவற்றை கட்டுப்படுத்துவது சாத்தியமா?

ஆக அறிவியல் ரீதியாக கவனித்து பார்த்தால் இவைகள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு ஒன்றி இருக்கின்றன. அப்படி ஒன்றி இருபவர்களுக்கு தான் இயற்கை தனது ரகசியங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.

ஒரு பூகம்பம் வர போவதை 7 மாதத்திற்கு முன்பே பாம்புகளால் உணர முடியும் என்கிறார்கள். அதுவும் இங்க இருக்கிற பாம்புக்கு மலேசியாவில் வரும் பூகம்பம்... இது எப்படி இருக்கு?

புதிய ஊரில் ஒரு 5 கிலோ மீட்டர் கொண்டு போய் விட்டால் கூட மனிதன் குழம்பி போவான்.,. பறவைகள் கிட்ட தட்ட 20,000 கி.மி சரியாக பறப்பது எப்படி? 

ஒரு சாதாரண தேனீ பல கிலோ மீட்டர் தூரம் பறந்து உணவு தேடி கொண்டு சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. அதற்கு இருக்கும் சின்ன கண்ணை வைத்து கொண்டு வழியை பார்த்து சின்ன மூளையை வைத்து கொண்டு இவ்ளோ தூரம் சரியாக பறப்பது எப்படி?

ஒரு யானை தனது வாழ்நாள் முழுதும் பார்க்கும் எந்த நிகழ்ச்சியையும் மறப்பது இல்லை என்கிறார்கள். அதன் மூளை என்ன தான் சிறந்த மூளை என்றாலும் மனிதன் மூளை அளவு வளர்ச்சி கொண்டது அல்ல. ஆனால் மனிதனுக்கு அந்த நினைவு திறன் சாத்தியம் இல்லையே எப்படி?

ஒரு பாம்பு தனது நாக்கை நீட்டினால் போதும் தனக்கு பின்னால் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சி எவ்ளோ தூரத்தில் இருக்கிறது அதன் பரிமாணம் என்ன சைஸ் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். (பாம்புகள் அடிக்கடி நாக்கை நீட்டுவது மோப்பம் பிடிக்கத்தான். நாக்கின் மூலம் தான் அவை மோப்பம் பிடிக்கின்றன)

விலங்குகள் பலவகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. 

மனிதன் தனது உடல் உள்வாங்கும் உடல் உணர்வுகளையும் மூளை உள்வாங்கும் உள்ளுணர்வுகளையும் பயன்படுத்துவதை குறைத்துவிட்டு தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன்படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.

இயற்கையுடன் இணைத்து செல்ல முடிந்தால் சில ஆச்சர்யமான அளவில் இயற்கையுடன் சேர்ந்து மனிதனால் பயணிக்க முடியும்.

ஒரு காட்டுக்குள் ஆய்வு செய்ய போன ஆய்வாளர் அவர். ஒரு முறை ஒரு அருவியை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு தள்ளாடும் முதியவரை கண்டார். அந்த முதியவர் அந்த அருவியின் உச்சியில் சென்று தண்ணீருடன் சேர்ந்து குதித்ததை பார்த்து அதிர்ந்தார். பதறி போய் அந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டாரே என ஓடி போய் பார்த்தார். அந்த முதியவர் சிரித்தபடி அருவியில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆய்வாளருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. மிரட்டும் மரண அருவியில் விழுந்து சிரித்து கொண்டு வரும் இந்த முதியவர் ஒரு மனிதன் தானா என்றே சந்தேகம் வந்து விட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட போது... 'நான் தண்ணீரை எதிர்ப்பது இல்லை அவ்ளோ தான்' என்றாராம். நீருடன் 100 சதம் ஒன்றி போய் விழ முடிந்தால் அருவியின் ஆழம் மனிதனை பாதிப்பது இல்லை என்று ஆய்வாளர் கண்டார்.

இந்த சம்பவம் நாம் நம்புவதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் கடினமான ஒன்று. ஆனால் அடுத்து சொல்ல போவதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வண்டியில் 4 பேர் செல்கிறார்கள் அதில் ஒருவர் பயங்கர குடிபோதையில் உள்ளார் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த வண்டியின் அச்சு முறிந்து விட்டது எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது அந்த வண்டி குடை சாய்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

என்ன நடக்கும் தெரியுமா? வண்டி விழ போவதை முன்னாடியே அறிந்து விழும் போது முடிந்தளவு தப்பிக்க முயன்றவர்களுக்கு பலத்த அடிபடும். ஆனால் என்ன நடக்கிறது என்று கான்ஷியஸே இல்லாத அந்த குடிகாரருக்கு மிக குறைவான அளவே அடிபடும்.

காரணம் புவி ஈர்ப்பை எதிர்க்காமல் அப்படியே முழுக்க முழுக்க அதனுடன் அவர் ஒன்றி போவது தான். சாதாரணமாகவே குடிகாரர்கள் பல முறை கீழே விழுவதை நாம் பார்க்கலாம். அவர்களுக்கு அதிகம் அடிபடுவதில்லை. ஆனால் சாதாரணமாக நிற்கும் மனிதன் கீழே விழுந்தால் அடி படுகிறது. (இதை படித்து விட்டு யாராவது குடித்தால் இயற்கையுடன் ஒத்து போகலாம் என்று தவறாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி... இயற்கையை முழுமையாக உள்வாங்க விழிபுணர்வு மிக அவசியம் போதை மனிதனுக்கு அது சாத்தியம் இல்லை)

இதை வேறு ஒரு இடத்தில் மிக அழகாக பார்க்கலாம். அதாவது குழந்தைகளிடத்தில். குழந்தைகள் ஒரு நாளைக்கு பலமுறை கீழே விழுகிறார்கள். நம்மை விட நிச்சயம் குழந்தைகள் எலும்பு பலவீனமானது தான். பார்க்கப்போனால் குழந்தைகளுக்கு பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பதில்லை. காரணம் குழந்தைகள் விழும்போது புவி ஈர்ப்பை எதிர்க்காமல் ஏற்று கொள்கின்றன. அதனுடன் முழுமையாக ஒன்றிணைத்து செல்கின்றன.

குறிப்பாக காட்டில் வாழம் காட்டு வாசிகள் நம்மை விட இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். அவர்கள் இனத்தில் இதய நோய்.. ஹார்ட் அட்டாக் புற்று நோய் போன்றவைகள் இல்லை. மிக இயல்பானவர்களாக அவர்கள் இருகிறார்கள் ஆனால் மிக விசித்திரமானவர்களாக இருகிறார்கள்.

இன்றளவும் ஒரு ஆதிவாசி இனத்தில் நடந்து கொண்டிருக்கும் மர்ம விசித்திரம் ஒன்று சொல்கிறேன். அந்த காட்டில் வாழ்பவர்கள் பக்கத்து கிராமத்தில் இருப்பவர்களிடம் எப்படி தகவல் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தங்கள் அதிர்ச்சியை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் தகவல் தொடர்புக்கு அங்கே உள்ள ஒரு வகை மரத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறார்கள். யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல வேண்டும் என்றால் அந்த மரத்திடம் சென்று சொல்வார்கள் அவ்ளோ தான் சம்பந்தப்பட்டவர் அவர் ஊரில் இன்னோரு மரத்திடம் அந்த தகவலை பெற்று கொள்வார். இது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வரும் விடை தெரியா மர்மம். ஆனால் நமக்கு தான் இது மர்மம் அவர்களுக்கு அல்ல. ஒரு தொலை பேசியை பார்த்து அவர்கள் வியக்கலாம் ஆனால் நாம் வியப்பதில்லை. அதுபோல அந்த மரம் மர்மம் பார்த்து நாம் வியகிறோம் அவர்கள் வியப்பதில்லை. அவர்களுக்கு அது பல வருடமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொலை தொடர்பு சாதனம் அவ்ளோ தான்.

இவைகள் எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது? இந்த விசித்திரங்களுக்கு எல்லாம் ஒரே காரணம் இயற்கையுடன் ஒன்றி போதல் தான்.

சரி இயற்கையுடன் எப்படி இனைந்து பயணிப்பது? அதெப்படி இயற்கையை உள்வாங்குவது? ஏதும் வழிமுறைகள் உள்ளதா?

அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்...


பாகம் 10 : தொடர்பு சூட்சமம்



          ன்றைய கால கட்டத்தில் மனிதன் இயற்கை உடனான தொடர்பில் இருந்து பல வகைகளில் ஒதுங்கி இருக்கின்றான். விளைவாக இயற்கையின் அறிவை பல இடத்தில் தவற விடுகிறான். உதாரணமாக மிக இயல்பான செயல்களாகிய உட்காரும்போது, நடக்கும்போது, உறங்கும்போது கூட முந்தைய கால மனிதன் பூமியுடன் கொண்டிருந்த தொடர்பு இன்றைய மனிதன் கொண்டிருக்கவில்லை.

அன்றைக்கு ஆற்றில் ஓடையில் குளித்தபோது நீருடன் கொண்டிருந்த உறவு இன்று ஷவரில் குளிக்கும் மனிதன் கொண்டிருக்கவில்லை. 

இதனால் என்ன ஆகி விட போகிறது?

சாதாரணமாக நிலம் நீர் காற்று போன்றவற்றிற்கு நமது உடல் வேறு விதத்தில் மறுவினை ஆற்றுகிறது என்கிறார்கள். காரணம் மனித உடலே அந்த ஐம்பூதங்களின் கலவை தான். நாம் குளிக்கும் சமயம் வெறும் உடல் அழுக்கை போக்குவது மட்டும் அல்ல நீரின் வேலை. அது நமது உடலுடன் தொடர்பு கொண்டு உடலில் பல நுணுக்கமான மாறுதல்களை உண்டாக்குகிறது என்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வெவேறு நிறத்தில் உடலில் இருந்து வெளிப்படும் ஆரா என்கிற ஒளி வட்டம் கற்பனை அல்ல அதை நுணுக்கமான விஞ்ஞான கருவி கொண்டு படம் பிடித்து நிரூபித்து இருக்கிறார்கள் (அந்த கருவி பெயர் Kirlian Camera)

தைரியமானவனுக்கு ..கோழைக்கு ...நேர்மறையானவனுக்கு எதிர்மறை சிந்தனை கொண்டவனுக்கு என்று இந்த ஆரா தனி தனியாக வெவேறு நிறத்தில் வெளிப்படுகிறது. மகான்களின் ஆராகள் அவர்கள் உடலை விட்டு வெளியே வியாபித்திருக்கும் என்றும் அந்த எல்லைக்கு உள்ளே வருபவர்கள் எந்த முயற்சியுமின்றி அதை உணர முடியும் என்றும் சொல்கிறார்கள்.

புத்தர் இருந்தபோது அவர் இருக்கும் இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் வரை சுற்றலவில் உள்ளவர்கள் சும்மா கண் மூடி அமர்ந்தாலே தியான தன்மையை உணர முடிந்ததாக சொல்கிறார்கள்.

கடவுள் மற்றும் மகானின் படத்தை வரையும் போது தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் வரைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள் அது அந்த ஆரா தான்.

அந்த ஆராவை ஒரு சாதாரண குளியல் ..நீர் உடனான தொடர்பு சுத்த படுத்துகிறது. நல்ல குளியலுக்கு பின் நாம் உணரும் புத்துணர்ச்சிக்கு காரணம் இந்த ஆராவின் சுத்திகரிப்பு தான். ஒரு நீர் நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தை கவனிக்க நமக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அது இல்லாததால் உடலில் நீர் செய்யும் ரகசியதை நம்மால் உள்வாங்க முடியாமல் போகிறது.

சரி இயற்கையை உள்வாங்குவது தான் எப்படி? அதற்கு ஏதும் நுட்பங்கள் உள்ளதா?

இயற்கையை உள்வாங்க சில வழிமுறைகள் உண்டு...

ஒரு உதாரணம் சொல்கிறேன். காலையில் ஒருநாள் ஒரு அழகிய சூர்யோதயத்தை பார்க்கிறீர்கள். ரசிக்கிறீர்கள் அடடா என்ன அழகு என்கிறீர்கள். இப்போ என்ன நடந்ததென்றால் சூரிய உதயம் கொடுக்கும் சூட்சமத்தை உங்கள் மனம் உங்கள் உடல் உள்வாங்கவில்லை. காரணம் அதை செய்ய நீங்கள் நிகழ் காலத்தில் இருந்து இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொன்ன 'ஆஹா என்ன அழகு' என்ற வார்த்தை உங்கள் கடந்த கால அனுபவத்தில் இருந்து வந்தது.

ஒரு சூரிய உதயத்தை பார்க்கும்போதே உங்கள் மனம் அதனுடன் தொடர்புடைய கடந்த கால நினைவுகளுடன் தொடர்பு கொள்கிறது. சூரிய உதயம் எப்போதும் அழகு தான் என்ற கருத்து ஏற்கனவே உங்கள் மனதில் உள்ளது. அந்த பழைய கருத்து தான் இன்று நீங்கள் பார்த்த உதயத்தின் மேல் பதிகிறது. ஆனால் இன்று நீங்கள் பார்க்கும் உதயமோ கடந்த காலத்துடன் தொடர்பு அற்றது. அது முதல் முதலாக இதோ இந்த கணத்தில் மட்டுமே நடக்கிறது. இதற்குமுன் அது நிகழ்ந்ததே இல்லை. இன்று நடக்கும் இந்த உதயம் இப்போது மட்டுமே முதல் முதலாக நடக்கும் ஒரு நிகழ்வு. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்து போகும் நிகழ்வு. இப்போது தவற விட்டால் ஒரு போதும் இதை நீங்கள் காணப் போவதில்லை. அடுத்த முறை காணப் போவது நிச்சயம் இந்த உதயமாக இருக்க போவதில்லை.

இப்போது நான் சொல்லும் இந்த விஷயம் மிக நுணுக்கமானது. இதை புரிந்து கொள்ள கொஞ்சம் கவனம் தேவை இல்லை எனில் இதில் உள்ள சூட்சமம் புரியாமல் போகும் வாய்ப்புள்ளது. ஒரு சூரிய உதயத்தை முழுமையாக உள்வாங்க நீங்கள் அங்கே முழுமையாக நிகழ் காலத்தில் இருந்தாக வேண்டும். அங்கே கடந்த கால அனுபவங்களை கொண்டு வரக்கூடாது. வாழ்க்கையில் இப்போது தான் முதல் முறையாக சூரியனை பார்க்கும் ஒருவன் என்ன மனநிலையில் பார்ப்பானோ அப்படி ஒரு மனநிலையில் மிகுந்த விழிப்போடு அதை பார்க்க வேண்டும்.

அப்போது அங்கே சிந்தனைக்கு இடம் இருப்பதில்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் முழுமையாக சூரிய உதயத்தை உள்வாங்கி பாருங்கள். அது நமக்குள் நிகழ்த்தும் மாற்றத்தை உணரலாம். அந்நிலையில் நீங்கள் இருப்பது வேறு ஒன்றும் இல்லை அது தான் தியான நிலை. அதாவது இங்கேயே இப்போதே இருப்பது. அந்த நேரத்தில் உங்களுக்குள் 'ஆஹா அழகு' என்று ஒரு வரி ஓடினால் போதும் உங்கள் அந்த நிலை களைந்து போகும். காரணம் அந்த நிலையில் நீங்கள் உண்மையில் இருந்தால் அங்கே அந்த கணத்தில் உங்களுக்குள் ஆஹா அழகு என்று சொல்ல யாரும் இருப்பது இல்லை. எங்கே இருப்பது நீங்கள் அல்லாத வெறும் அனுபவம் மட்டும் தான்.

ஒரு நல்ல தூக்கத்தை ஒரு போதும் தூக்கத்தில் உணர முடியாது. விழித்து எழுந்த பின் தான் ஆஹா அருமையான தூக்கம் என்று சொல்ல முடியும். அதே போல தான் ஒரு விஷயத்தை முழு விழிப்புடன் உள்வாங்கும் போது அங்கே வார்த்தைகள் உலா வர முடியாது. அந்த செயல் முடிந்த பின் மட்டுமே உங்களால் அதை வார்த்தை வர்ணனை செய்ய முடியும். இந்த வார்த்தை அற்ற அனுபவத்தை சரியாக புரிந்து கொண்டால் நீங்கள் தியானம் என்றால் என்ன.. இயற்கையுடன் ஒன்றினைதல் என்றால் என்ன போன்றவற்றை புரிந்து கொண்டவராவீர்கள்.

மேலே சொன்ன இந்த சூட்சமத்தை பற்றி நமக்கு எடுத்து சொன்னவர் ஓஷோ.

சரி இதனால் என்ன ஆகும்?

இந்த மாதிரி உள்வாங்களோடு நீங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகினால். நீங்கள் குளிக்கும்போது நடக்கும்போது சாப்பிடும்போது படுக்கும்போது அமரும்போது உங்களை சுற்றி உள்ளதை இதை போல உள்வாங்கினால் இயற்கையுடன் அறுந்து போன தொடர்பை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்கிறார் ஓஷோ.

நடக்கும் போது நிலத்தை பாதத்தின் அடியில் உணர்ந்தபடி ஒவ்வொரு அடியையும் மிகுந்த விழிப்போடு உணர்ந்து நடந்தால் அந்த நடையே உங்களுக்குள் பல மாறுதலை உண்டாகும் என்கிறார் அவர். 

இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.

இந்த தியானம் விழிப்புணர்வு இப்படிப்பட்ட பெரிய பெரிய புரியாத வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், வாழ்க்கையை செழுமையாக வைத்து கொள்ள எளிதில் புரியும்படி எளிமையான சூட்சமம் ஏதும் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ...இருக்கிறது. அந்த சூட்சம வார்த்தைக்கு பெயர் "மனோ பாவம்."

"மனோ பாவம்" என்பது தெரிந்த எளிய விஷயம் தானே என்று விட்டுவிட முடியாது. நமக்குள் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தும் வலிமை இந்த மனோபாவங்களுக்கு உண்டு...

'மனோபாவங்கள்' என்பது கேட்பதற்கு எளிமையானது. ஆனால் அதன் செயல்கள் அதன் விளைவுகள் வலிமையானது. மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான். அந்த மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்...

உங்களை நல்ல வெய்யிலில் கொண்டு போய் விட்டு ஒரு 2 மணிநேரம் இப்படியும் அப்படியும் ஓடிக்கிட்டே இரு என்று சொன்னால் அது எவ்வளவு வேதனையான தண்டனையாக இருக்கும்? ஆனால் வெய்யிலில் கிரிக்கெட் ஆடும்போது மிக மகிழ்ச்சியாக நீங்கள் அதை தான் செய்கிறீர்கள். 

வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியும் என்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறி போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம்.

இது மனதை ஏமாற்றும் முறை அல்ல இது மனதை சரியாக பயன்படுத்தும் முறை. இந்த மனோபாவத்திற்கு விஷயங்களை தலைகீழாக புரட்டி போடும் வலிமை உண்டு.

இந்த நிஜ கதையை கவனியுங்கள்..

டாக்டரால் கைவிடப்பட்ட புற்று நோய் சிறுவன் அவன். சில காலம் கழித்து சோதனைக்கு வந்திருந்த அவனை சோதித்த டாக்டர்கள் மிக ஆச்சர்யபடத்தக்க வகையில் அவன் நோய் செல்கள் குணமாகி விட்டதை பார்த்து வியந்தார்கள். அவன் தாயிடம் எங்கே போய் என்ன மருத்துவம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு. அவன் தாய்...

"அவன் எப்பவும் வீடியோ கேம் ஆடிகிட்டே இருப்பான். அவன் கிட்ட உன் கேம்ல வர மாதிரி எதிரிங்க உன் ரத்ததுல வந்து இருக்காங்க. அவங்கள நீ கண்ணை மூடி கற்பனையில் ஷூட் பண்ணிட்டே இரு என்று சொன்னேன்" என்றார்.

தாய் சொல்லை வேதவாக்காக கொண்டு தொடர்ச்சியாக நோய் எனும் எதிரியை சுட்டு வீழ்த்தி கொண்டே இருந்தான் சிறுவன். அப்படி செய்வது தனது ரத்தத்தில் கலந்துள்ள எதிரியை விரட்டும் என்று நம்பினான். தொடர்ந்து மன துப்பாக்கியால் சுட்டு கொண்டே இருந்தான். நிஜத்தில் நோய் குணமானது.

இது எப்படி நடக்கிறது என்று அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால்...

உலகின் எல்லா டாக்டரும் அறிந்த அவர்களே ஒத்துக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. அதாவது எந்த மருந்தும் மாத்திரையும் மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவது இல்லை. நோயை எதிர்க்கும் சக்தி என்பது இயற்கையாக நமது உடலில் இருக்கும் வலிமை. மருந்துகள் செய்வது எல்லாம் அந்த சக்தியை உசுப்பி அதை செயலாற்ற வைக்கும் வேலை தான். மனதை சரியாக பயன்படுத்த தெரிந்தால் அந்த மருந்துகள் உதவி இன்றி உடலின் இயற்கை சக்தியை கையாள முடியும்.

எம்.எஸ் உதயமூர்த்தி தனது புத்தகத்தில் 'எமிலி கியூ' எனும் டாக்டரை பற்றி அடிக்கடி குறிபிடுவார். அவர் தங்களிடம் வரும் நோயாளிக்கு ஒரு விசித்திர மருத்துவம் செய்தவர். நோயாளிகளிடம் அவர் தினம் மனதுக்குள், 'நான் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாறி வருகிறேன். என் நோய் என்னை விட்டு மிக வேகமாக போய் கொண்டு உள்ளது' என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். காலையில் எழுந்ததும் 10 முறை.. தூங்கப் போகும் முன் 10 முறை எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் இதை சொல்லுங்கள்" என்றார்.

மிக ஆச்சர்யப்படத்தக்க வகையில் தங்களிடம் வெவ்வேறு காரணத்துக்காக வந்த நூற்றுக் கணக்கான நோயாளிகளை இந்த வைத்தியம் மூலம் குணமாக்கிக் காட்டினார்.

பொதுவாக இந்த விஷயத்தை பற்றி ஆராய்ந்த பல பேர் சொன்ன விஷயம் ஒன்று மிக முக்கியமானது.

அதாவது தனக்குள் கட்டளை கொடுக்கும் போது எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தி கொடுக்கக் கூடாது என்கிறார்கள். உதாரணமாக "எனக்கு இருக்கும் முடி கொட்டும் பிரச்னை வேகமாக குணமாகிறது" என்று சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் நான் முடி கொட்டும் பிரச்னை கொண்டவன் என்பதை தான் மனது முதலில் பதிய வைக்கும். மாறாக "நான் மிக ஆரோக்கியமான தலைமுடி கொண்டவனாக நாளுக்கு நாள் மாறி வருகிறேன்" என்று அழுத்தமாக சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

இன்னும் சில பேர் இந்த சுய கட்டளைகளை சொல்லும் போது கால இலக்கணத்தை கொஞ்சம் தவறாக சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

அதாவது "நான் வளமானவனாக மாறுவேன்" என்று எதிர்காலதில் நினைக்காமல்... "நான் வளமானவனாக இருக்கிறேன்" என்று நிகழ் காலத்தில் அதை சொல்ல வேண்டும் என்கிறார்கள். கால இலக்கணம் தவறாக இருந்தாலும் இந்த வழிமுறை தான் பலனளிக்கும் என்கிறார்கள்.

அன்பர்களே மனம் எனும் கருவியை சரியாக கையாள.. சரியாக சிந்திக்கும் முறை என்று பல சான்றோர்கள் நமக்கு சில சூட்சமங்களை பல தொழில் நுட்பங்களை சொல்லி கொடுத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.

அந்த சூட்சமங்களை பற்றி அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திக்கலாம்...

பாகம் 11 : சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள்



    சிந்திக்கும் முறை என்பதை பற்றி என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா?

நாம் குழந்தைகள் வளர்ப்பில் குழந்தைக்கு சாப்பிடுவது எப்படி, உட்காருவது எப்படி, நடப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கிறோமே அவர்களுக்கு சிந்திப்பது எப்படி என்று என்றைக்காவது சொல்லி கொடுகிறோமா என்றால் இல்லை. காரணம் அப்படி ஒன்னு இருப்பது நமக்கே தெரியாது..

எந்த செயலையும் அதை சிறப்பாக செய்வதெப்படி என்ற வழிமுறைகள் உள்ளபோது சிந்திப்பது என்பதும் ஒரு செயல் தானே அதை சரியாக செய்ய வழிமுறைகள் நிச்சயம் இருக்கத் தானே வேண்டும். ஆம் நமது நாட்டில் பல ஞானிகள்... சான்றோர்கள்... மனம் ஆராய்ச்சி செய்தவர்கள்... வாழ்வை புரிந்தவர்கள் பல சூட்சமங்களை அவ்வபோது சொல்லி சென்றிருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஒரு சிறுவனுக்கு உடல் சரி இல்லை என்றால் அவனை வழக்கத்திற்கு அதிகமாக அன்பு காட்டி கவனிக்கின்றோம் அல்லவா ஆம் அது இயல்பு தான். ஆனால் அதே நேரம் ஆரோக்கியமின்மையைப் பற்றிய சிந்தனையை அந்த குழந்தைக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதாவது உடல் நிலை சரியில்லாத போது அதிக கவனிப்பு கிடைப்பதால் அவர்களின் ஆழ்மனம் நோயை மறைமுகமாக விரும்புகிறது என்கிறார்கள். எனவே அவர்களை கவனித்து கொள்ளும் அதே நேரம் அவனுக்கு நாம் "நீ இந்த மாதிரி நோய் நிலைல இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..." என்கிற ரீதியில் சொல்ல வேண்டும். நாம் குணம் ஆனா தான் நமக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் போல என்று அவனை சிந்திக்க வைக்க வேண்டும்.

எனவே நோய் பற்றி அவன் தனக்குள் சிந்திக்கும் சிந்தனை "ஏய் நோயே உன்னை நான் அறவே வெறுக்கிறேன். உன்னை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. உனக்கு இடம் கொடுபதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை" என்கிற ரீதியில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத ஆனால் பெரும்பாலும் பெற்றோர் கொடுத்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் உள்ளது. அது தான் குற்ற உணர்வு.

குற்ற உணர்வு குற்றங்களை குறைக்கும் என்று நாம் நம்புவது தான் காரணம். எனவே அவன் ஏதாவது தவறு செய்தால் அதை சொல்லி அவனுக்கு குற்ற உணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருவன் பல சப்ஜெக்டில் பெயில் ஆகிவிட்டால் அவனை மட்டம் தட்டி திட்டி குற்ற உணர்வை ஏற்படுத்தினால் அவன் வளர்ச்சி அங்கேயே பாதிக்க படுகிறது. 

உனக்கு எல்லாம் கணக்கு ஜென்மத்துல வராது என்று அவன் கல்வி காலம் முடிவிற்குள் குறைந்தது 100 முறை ஒருவனை கூறும் ஆசிரியர் நிஜமாகவே அவனுக்கு கணக்கு வரும் சாத்தியத்தை குறைத்து விடுகிறார்.

அப்போ தப்பு பண்ணா கண்டிக்க கூடாதா என்றால் அப்படி இல்லை அவன் மனம் செழுமையாக வளர்ச்சி கொள்ள வேண்டும் என்றால் அவனை ஒரு போதும் குற்ற உணர்வு கொள்ள அனுமதிக்கக் கூடாது. உலகின் எவ்ளோ பெரிய குற்றத்தை செய்தாலும் நம்மால் அதில் இருந்து வெளி வர முடியும் என்று நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

'கீழ்தரமானதில் இருந்து வெளிவர நாம் கீழ்தரமானதை பற்றி யோசிக்க கூடாது அதற்கு மாறாக வலிமையானதை பற்றி யோசிக்க வேண்டும்' என்கிறார் விவேகானந்தர்.

குற்றவுணர்வு ஒருவன் மனதின் வளர்ச்சியை கொல்கிறது... நல்ல செழிப்பான மனங்களை உண்டாக்க நினைத்தால் ஒரு போதும் நீங்கள் அந்த மனதிற்கு குற்ற உணர்வை கொடுக்க கூடாது. (இருளை போக்க வேண்டும் என்றால் நீங்கள் இருளை கையாள்வதன் மூலம் இருளை போக்க முடியாது. மாறாக அதற்கு எதிரான வெளிச்சத்தை கொண்டுவருதல் எப்படி என்று யோசிப்பது தான் பலன் தரும்)

இன்றும் கூட பல இளைஞர்கள் தேவையே இல்லாத விஷயத்திற்கு குற்ற உணர்வுக்கு ஆளாகி தன்னை தானே சுருக்கி கொள்கிறார்கள். அதில் முக்கியப் பங்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் நமது சமூகத்திற்கு உண்டு என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

பள்ளி என்பது மாணவனை கல்வி கற்று கொடுத்து அவன் வாழ்க்கையில் உயர உதவும் ஒரு இடம் என்ற மட்டில் தான் நமக்கு தெரியும். ஆனால் பள்ளிகள் மாணவர்கள் மனதின் மேல் ஏற்படுத்தும் அழுத்தம் டிப்ரஷன் எவ்ளோ என்பது நம்மில் பல பேர் அறியாத உண்மை. எப்போதும் அவனை பயத்திலேயே வைத்து அவனை நசுக்கி கொண்டிருப்பதில் பள்ளிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அந்த பிஞ்சு மனம் சுதந்திரமாக வாழ்வை அனுபவிக்க வேண்டிய வயது அது. அதில் கொண்டு போய் பயம்... கட்டுப்பாடு... மிரட்டல்... கெடுபிடி... குற்ற உணர்வு... என்று பல விஷ விதைகளை விதைகின்றோம். 

பொதுவாக நம்மை விட சிறுவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள் புதிதாய் ஒன்றை கற்பது என்றால் அவர்களுக்கு மிக பிடிக்கும். பள்ளிகள் புதியவைகளை கற்பிக்கும் இடம் என்றால் அவன் அங்கே விரும்பி அல்லவா செல்ல வேண்டும். இன்று சிறுவர்கள் காலையில் உற்சாகமாக பள்ளி செல்லவேண்டிய நேரம் பாருங்கள்... போர் முடிந்து களைப்பாக வரும் போர் வீரன் போல தலையை தொங்க போட்டுகொண்டு செல்கிறார்கள். அதே பள்ளியில் நாள் முழுதும் களைத்து போய் வெளியே வரவேண்டிய நேரம் பாருங்கள்... ஏதோ காலையில் இப்போது தான் எழுந்து வருவதை போல அவ்வளவு உற்சாகமாக புத்துனர்ச்சியுடன் கத்தி கொண்டு ஓடி வருகிறார்கள். இந்த முரண்பாடு ஆச்சர்யமாக இல்லையா? நம்மை சிந்திக்க வைக்க வில்லையா?

தனது கடைசி தேர்வு முடிந்த உடன் தான் வருடம் முழுதும் படித்து வந்த புத்தகத்தை வன்மத்துடன் சுக்கு நூறாக கிழித்து காற்றில் பறக்க விட்டு மகிழும் செயல் உங்களை யோசிக்க வைக்க வில்லையா... வருடம் முழுதும் புத்தகத்தை அவன் என்ன ஒரு மன நிலையில் பார்த்து கொண்டிருந்திருப்பான் யோசியுங்கள். 

எழுதி வைத்து கொள்ளுங்கள் ஒரு மானவன் என்றைக்கு பள்ளி என்றால் மிக உற்சாகமாக துள்ளி செல்கிறானோ அன்றைக்கு தான் நாம் மனதை செழுமையாக்கும் கல்வி கொடுத்து கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.

ஒரு நாட்டையே சிறந்த மனிதர்கள் உலவும் இடமாக மாற்றும் சக்தி பள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பதால் தான் இவ்வளவு சொல்கிறேன். பள்ளிகளை குறை கூறுவது எனது நோக்கமல்ல.

பள்ளியும் சரி சமூகமும் சரி ஒருவனுக்கு குற்ற உணர்வு வளர்க்குமேயாயின் குற்ற உணர்வின் விளைவுகள் நாம் கற்பனை செய்வதை விட மிக அபாயமானவை... இன்று சமூகத்தில் நடக்கும் கொடூர பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் மீதான பலாத்காரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது ஒரு சரியாக கையாளப்படாத மனம் தான் என்பதை மறக்க கூடாது.

ஒரு "Thought Experiment" கற்பனை சோதனை செய்து பாருங்கள்... 

நாம் பண்ண வேண்டிய சோதனை என்னவென்றால். ஒரு மனிதனுக்கு வயிறு பசிப்பது மிக இயற்கையான ஒன்று அல்லவா... ஆனால் நாம் இதை தவறாக கற்பித்து ஒரு சிறுவனை வளர்க்க வேண்டும். அதாவது வயிறு பசித்தால் அது கடவுளுக்கு எதிரானது... தவறானது... என்று சொல்ல வேண்டும். எப்போதெல்லாம் அவனுக்கு பசி வந்து சாப்பாட்டை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அவனை குற்ற உணர்வுக்கு ஆளாக்க வேண்டும். அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டால் அவனை குத்தி காட்ட வேண்டும். பசி என்ற உணர்வு அவனுக்குள் வரும் போதெல்லாம் அதை வெளிப்படுத்தினால் அதை நாம் கேவலமாக பார்க்க வேண்டும்.

இப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

நிச்சயமாக சாப்பாட்டை அவன் திருட்டுத் தனமாக சாப்பிடுவான். பிறகு அதற்கு வருத்தப்பட்டு மனம் ஓடிந்து சுருங்கி போவான். எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒரு நாளைக்கு 3 முறை வர வேண்டிய உணவு பற்றிய சிந்தனை அவனை 24 மணி நேரமும் ஆட்கொள்ளும்... எப்போதும் சாப்பாட்டை பற்றிய சிந்தனையிலேயே இருப்பான்... ரசித்து உணவை உண்ணுதல் என்பது அவனுக்கு என்னவென்றே தெரியாமல் போகும். இப்படி பசி சாப்பாடு என்ற இயல்பான விஷயத்தையே அருவெறுபாக அசிங்கமாக மாற்ற முடியும். 

நல்ல வேலை சாப்பாட்டு விஷயத்தில் நாம் அப்படி செய்வதில்லை ஆனால் வேறு பல இடங்களில் இதைச் செயகிறோம். ஒரு குறிபிட்ட பருவத்தில் வரும் இயற்கையான உணர்வு பற்றி சரியாக சொல்லித்தர தவறுகிறோம். இப்படி இயற்கையில் அழகான விஷயங்கள் பல அசிங்கமாக அருவெறுபாக வக்கிரமாக பரினாமம் அடைந்திருக்கிறது.

ஒருவர் தனக்கு யூரின் வரும் போதெல்லாம் மன சோர்வும் குற்ற உணர்வும் தன்னை தாக்குவதாக சொன்னதை பற்றி சிக்மெண்ட் பிராய்ட் இன் மனோதத்துவ நூலில் படித்து இருக்கிறேன். இதனால் தனது வேலை பிஸினஸ் எல்லாமே பாதிக்கப்படுவதாக அவர் சொல்லி இருந்தார். அதிலிருந்து மீள அவருக்கு நீண்ட நாள் ஆயிற்றாம். அது உண்டான காரணம் அவர் சிறுவயதில் 'ஒண்ணுக்கு வருது சார்' என்று வகுப்பில் கேட்ட போதெல்லாம் கடுமையாக கண்டித்த ஆசிரியராம். மேலும் இதற்கு பயந்து சிறுவயதில் பல நாள் வகுப்பு முடியும் வரை சிறுநீரை அடக்கியே வைத்திருப்பாராம். "சிறுநீர் கழிப்பது" என்ற மிக இயல்பான ஒரு செயல் ஒரு மனிதனை எவ்ளோ பாதிக்க முடியும் பாருங்கள்.

எனவே ஒரு வளரும் மனிதன் ஒதுக்க வேண்டிய ஒன்று இந்த குற்ற உணர்வு. அதை தூக்கி எறிந்து எப்போதும் வலிமையானதை சிறந்ததை பற்றி சிந்திக்க நாம் கற்று கொடுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து சிந்திப்போம்...


பாகம் 12 : தேவதை தரிசனம்



        னதில் தீய எண்ணங்கள் கீழ்த்தனமான எண்ணங்கள் தவறான எண்ணங்கள் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி கையாள வேண்டும்?

மனதில் தீய எண்ணங்கள் ஊற்று எடுக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வாழ்வை மனதை அலசியவர்கள் சொல்வது என்ன என்று பார்க்கலாம்.

அதற்கு முன்....

எந்த ஒரு கருவியையும் கையாளும் முன் அந்த கருவியின் இயல்பு பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா.

ஒருவன் இயந்திர துப்பாக்கியை எடுத்து கைத்தடி போல பயன்படுத்தி எதிரியை அடித்தால் எப்படி இருக்கும்? அந்த துப்பாக்கியின் இயல்பு அறிந்தால் அவன் அதை விட சிறப்பாக பயன்படுத்துவான் அல்லவா? மனம் ஒரு கருவி தான் அதை பயன்படுத்த அதன் இயல்புகளை குறித்த ஞானம் அவசியம்.

அதன் இயல்பை பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சர்யமாக கூட இருக்கலாம்... 

உங்களுக்கு எப்போதும் பல சிந்தனைகள் வருகிறதே (நல்லதோ கெட்டதோ) அது எதுவும் நீங்க சிந்திக்கிறதல்ல. சும்மா தேமேனு வைக்கப்பட்ட ரேடியம் எபோதும் கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ.. 'பிரவுனியின் மோஷன்' இல் துகள்கள் எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருப்பது எப்படி ஒரு அறிவியல் உண்மையோ... அப்படி மனதில் சதா எண்ணங்களின் தள்ளு முள்ளு ஓடி கொண்டே இருப்பது அதன் இயல்பு. ஆனால் அதை எல்லாம் தங்களது சிந்தனையாக நினைத்து குழப்பி கொள்வது தான் மனிதன் செய்யும் தவறு... (வேணும்னா ஒன்னு பண்ணி பாருங்களேன் கொஞ்ச நேரம் சிந்திக்காம இருக்க முயன்று பாருங்களேன் அப்போ தெரியும் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கு என)

நமது கவனம் இல்லாமலே இதயம் துடிப்பது போல... நமது கவனம் இல்லாமலே ஜீரண மண்டலம் வேலை செய்வது போல... நமது கவனம் இல்லாமலே சுவாசம் வந்து போவது போல... சொல்ல போனால் நமது கவனம் இல்லாததால் தான்... சிந்தனைகள் நமக்குள் வந்து போகின்றன. பகல் நேரம் பூராவும் உள்வாங்கிய வெப்பதை இரவில் வெளியிடும் ஒரு பாறையை போல வாழ்வில் அன்றாடம் நமது கவனதிற்கே வராமல் உள்வாங்கும் பல தரவுகளை மனம் சிந்தனைகளாக வெளிப்படுத்துகிறது. இரவில் கனவாக வெளிப்படுத்துகிறது..

"மனம் பகலில் காணும் கனவு = சிந்தனை
இரவில் சிந்திக்கும் சிந்தனை = கனவு"
என்று ஒரு கூற்று உண்டு.

இதில் நல்ல சிந்தனை கேவலமான சிந்தனை குற்ற சிந்தனை வக்கிர சிந்தனை புனித சிந்தனை எல்லாமே அடக்கம்.

இதில் இப்போது நான் சொல்ல போவது தான் மிக மிக முக்கியமானது. அந்த சிந்தனைகள் எதனுடனும் நீங்கள் தங்களை அடையாள படுத்திக் கொள்ளாதவரை... அல்லது அந்த சிந்தனைக்கு மறுவினை ஆற்றாதவரை அந்த சிந்தனை உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதற்கு நீங்கள் ஒரே ஒரு சின்ன ரெஸ்பான்ஸ் (அதை விரும்பியோ அல்லது அதற்கு எதிராகவோ) கொடுத்து விட்டால் அது உங்களை இருக பிடித்துக் கொள்கிறது.

இப்போ இதை கவனியுங்கள்...

உங்களுக்குள் ஒரு நாள் ஒரு மிக கீழ்த்தனமான சிந்தனை வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி கையாள வேண்டும்?

அது மாதிரி சிந்தனை உள்ளே வந்த உடன் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் மிக கவனமாக அதை கவனிப்பது... ஒரு கேவலமான சிந்தனை உள்ளே ஓடி கொண்டிருக்க நீங்கள் அதை ஏதோ படம் பார்ப்பது போல என்ன எல்லாம் சிந்திக்கிறது என உற்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

'ச்சே எவ்ளோ மட்டமான சிந்தனை' என்றோ அல்லது 'ஐயோ இப்படி ஒரு எண்ணம் வருதே என்ன செய்வேன்' என்றோ அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் காலி.... அது உங்களை பற்றிக் கொள்ளும்... குறிப்பாக ஒரு விஷயத்தை வேணாம் வேணாம் என அழுத்தமாக சொல்ல சொல்ல மிக ஆழமாக பிடித்து கொள்ளும். அது மனதின் இயல்பு. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் அதை உற்று கவனித்து கொண்டே இருந்தால் ஒரு மேஜிக் நடக்கும் அது எப்படி தானாக வந்ததோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி சென்று கடைசியில் மறைந்து விடுவதை பார்க்கலாம். மனம் தேவதையாக தரிசனம் தருவது இந்த கணத்தில் தான்.

ஒரு வேலை மீண்டும் வந்தால்? மீண்டும் அதே உற்று கவனி வைத்தியம் தான்.

இந்த தனக்குள் உற்று கவனிப்பது இருக்கே இதற்கு இன்னோரு விசித்திர பயன்பாடு உண்டு. நமக்குள் வரும் கலை... அன்பு... ரசனை... ஆனந்தம்... மகிழ்ச்சி... போன்ற போன்ற நேர்மறை ஆற்றல்களை மேலும் தக்க வைக்க.

கோபம்... பொறாமை... ஆற்றாமை... வன்மம்... போன்ற எதிர்மறை ஆற்றலை மறைந்து போக செய்ய இது உதவுகிறது. எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அது ஒரு பயிற்சி...

ஒரு ரோஜாவை பார்க்கிறீர்கள் நமக்குள் அந்த அழகு ஒரு மாறுதலை உண்டாக்குகிறது... ஒரு குழந்தையின் சிரிப்பு... ஒரு சூர்யோதம்... ஒரு ஓவியம்... நமக்குள் ஒரு குதுகூலத்தை உண்டு பண்ணுகிறது. அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் நடக்கும் மாற்றத்தை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஒரு சங்கீதம் கேட்கிறீர்கள் மனதில் அது ஒரு இதத்தை கொடுகிறது.. அப்போ சட்டென்று கண்ணை மூடி மனதுக்குள் ஆழ்ந்து அந்த இதத்தை உற்று கவனித்து அதனுடன் ஒன்றி போக வேண்டும்.

இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டும். இதேபோல கோபம்.. பயம்.. வெறுப்பு.. வரும்போதும் உள்ளே உற்று கவனித்து அது செய்யும் மாறுதலை கவனிக்க வேண்டும்.

அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

தானாகவே நேர்மறை ஆற்றல் நமக்குள் தங்கும் எதிர்மறை விலகும்

அதெப்படி நடக்கிறது? அது எப்படி சரியாய் இது தங்கும் அது ஓடும் என்றால் அதான் மனதின் இயல்பு.

ஒரு பெரிய வீடு... அதில் விருந்தாளி வரும்போது வீட்டுக்காரர் சரியாய் கவனிக்கவில்லை என்றால் என்னாகும்? விருந்தாளி வருவது குறைந்து போகும்.

அதே வீடு... அங்கே திருடன் வந்ததை வீட்டுக்காரர் சரியாய் கவனிக்கவில்லை என்றால் என்னாகும்? திருடன் வருவது அதிகம் ஆகும்.

இதையே தலைகீழாக சொல்வதானால். அந்த வீட்டுக்காரர் யார் வந்தாலும் கவனிபாரேயானால்... தானாக திருடன் ஓடி போவான். நல்ல விருந்தாளிகள் அதிகம் வருவார்கள். மனம் கூட இப்படி தான் செயல் படுகிறது.

நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சூட்சமம்... எப்போதும் மனதை கவனி. 

புத்தர் தங்கள் சீடருக்கு எது செய்தாலும் நாள் முழுதும் மனதை கவனித்தபடியே இரு என்று வற்புறுத்தினார். அப்படி செய்தால் தூக்கத்தில் கூட மனதை கவனிக்க முடியும்.

எண்ணங்களில் நாம் ஏன் இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?

தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது. அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

மனதை பற்றி இன்னோரு மகா ரகசியம் இப்போது சொல்கிறேன்... இந்த பிரபஞ்சம் எங்கும் மனிதர்களின் எண்ணங்கள் பரவி இருக்கிறது அதில் நல்ல.. தரமான... வலிமையான... அன்பான... சிந்தனையும் உண்டு. கேடுகெட்ட சிந்தனையும் உண்டு. உங்கள் மூளை எதை பற்றி தொடர்ந்து சிந்திக்கிறதோ... அது சம்பந்தமான தகவலை இந்த பிரபஞ்சத்தில் இருந்து அது உறிஞ்சி இழுக்கிறது.

அது உங்களுக்கே தெரியாத உங்கள் திறனுக்கு அப்பாற்பட்ட ஒரு தகவலாக கூட இருகலாம். ஆனால் அதை மூளையால் கிரகிக்க முடியும்.

மனம் ஒரு கருவியை போன்றது. எந்த ஒரு கருவியை வாங்கினாலும் அதனுடன் அந்த கருவியை கையாள அல்லது பராமரிக்க 'டிப்ஸ் ' கள் கொண்ட கையேடு கொடுக்கப்படுவதை போல இந்த பாகதில் அப்படி சில டிப்ஸ் களை மட்டும் கொடுத்து கட்டுரையை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.

ஒரு சீடன் தன் குருவை அணுகி குருவே நான் இரண்டு மாடுகளை வளர்க்கிறேன் அதில் ஒன்று நல்லது இனொன்று கெட்டது ஒரு வேளை என்றைக்காவது இரண்டிற்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்? என்று கேட்டான். அதன் பொருள் தனக்குள் நல்ல மனமும் உண்டு கெட்ட குணமும் உண்டு இரண்டிற்கும் சண்டை வந்தால் எது வெல்லும் என்பது தான்.

பொதுவாகதுவாக உலகில் நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு இல்லை. இரண்டும் கலந்தே மனங்கள் இருக்கின்றது. அது தான் மனதின் இயல்பும் கூட. ஒருவனுக்கு நல்ல மனம் நல்ல சிந்தனை மட்டுமே வரும்படி மனம் படைக்கப்பட்டு அவன் நல்லவனாக இருந்தால் அதில் சிறப்பு என்ன இருக்க முடியும். நல்லதும் கெட்டதும் கலந்து இருந்து நாம் நல்லவர்களாக இருக்கும் போது தான் அது சிறப்பு.

ஒரு ஃபுட் பால் விளையாட்டில் கோல் கீப்பர் யாரும் இல்லை என்றால் அதில் கோல் போடும் வீரன் ஒரு போதும் சிறந்தவன் அல்ல. கோல் கீப்பர் தடையாக இருந்து அதை மீறி கோல் போடுபவனே நல்ல விளையாட்டு வீரன். நீங்களும் வாழ்வில் நல்ல விளையாட்டு வீரன் ஆக வேண்டும் என்றால் தடையை ஏற்க கற்க வேண்டும்.

நமக்குள் நல்லது கெட்டது இரண்டும் இருக்கே அப்போ இரண்டில் எது வெற்றி பெறும் அதை தீர்மானிப்பது எது? அந்த சீடனுக்கு குரு சொன்ன பதில் என்ன தெரியுமா? 

எந்த மாட்டிற்கு நீ அதிக தீவனம் போட்டு அதிக ஊட்டம் கொடுத்து வைத்து இருக்கிறாயோ அதுவே ஜெயிக்கும். நமக்குள் தீய எண்ணங்கள் இருப்பது இயல்பு ஆனால் நாம் அதற்கு ஊட்டம் கொடுக்காமல் நல்லதிற்கு ஊட்டம் கொடுப்பது நமது கையில் கொடுக்கப்பட்ட சுதந்திர வாய்ப்பு.

மனம் என்பது கட்டவிழ்த்து விட்டுவிட்டால் அடக்குவதற்கு கடினமான ஒரு காளை. ஆனால் அவிழ்த்து விடாமல் இருப்பது எளிது.

மனதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எண்ணங்களை உண்டாக்கி அலைய விட்ட பின் அதை அடக்குவது கடினம் ஆனால் அந்த எண்ணம் வர ஆரம்பிக்கும் போதே அதை உற்று கவனித்து வர விடாமல் செய்வது எளிது என்கிறார் ஓஷோ.

தீய எண்ணங்களில் இருந்து தப்ப ஒரு சிறந்த வழி அது வரும் போதே கவனித்து அதை வர விடாமல் செய்வது தான்.

குற்ற உணர்வு உங்கள் மனதின் வளர்ச்சியை பாதிக்கும். ஒருபோதும் நாம் கொள்ள கூடாத ஒரு உணர்வு குற்ற உணர்வு. 

இருட்டை எதிர்க்க நாம் இருட்டை பற்றி யோசிக்க கூடாது வெளிச்சத்தை பற்றி யோசிக்க வேண்டும். தீமையை எதிர்க்க நாம் நினைக்க வேண்டியது தீமையை பற்றி அல்ல. மாறாக வலிமையான நல்லதை பற்றி என்கிறார் விவேகானந்தர்.

"உங்களால் ஒரு விஷயம் முடியும் என்று நினைத்தாலும் உங்களால் ஒரு விஷயம் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மை தான்" என்கிறார் ஒரு அறிஞர். 

எப்படி?

அவர் கொஞ்சம் குள்ளம்.. இதில் கொஞ்சம் பெண் குரல் போன்ற கீச்சு குரல் வேறு. வாழ்க்கையில் எத்தனை இடத்தில் இதனால் தலை குனிவு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை. அவரை பார்த்து அப்படி யாராவது குறைத்து பேசினால் பேசியவர் 10 பேரால் நகைக்கப்படுவார். காரணம் அவர் அப்படி ஒரு அசாத்திய மனிதர். மக்கள் பொதுவாக சாதனையாளர் என்றாலே அவரை 'ரோல் மாடலாக' காட்டும் அளவு தன்னை உயரமாக வைத்து இருக்கும் நபர் அவர். பணமும் புகழும் அவர் காலடியில். நான் சொன்ன அந்த உயரம் குறைவான கீச்சு குரல் கொண்ட நபரின் பெயர் "சச்சின் டெண்டுல்கர்"

புதிதாக நடிப்பு துறைக்கு காலடி வைத்திருக்கும் புது நடிகன் அவர். சினிமா இன்டெஸ்ட்ரி அவரை நிராகரிக்கிறது அதற்கு 2 காரணங்கள் சொல்கிறது. ஒன்று அவர் மிக உயரமான இருக்கிறார் மக்கள் அவரை ஹீரோவாக ஏற்பது கடினம். இரண்டு அவர் கண்களில் ஆண்மை இல்லை மாறாக பெண்கள் போன்ற பெண்மை சாயல் கலந்த மயக்கும் கண்கள் அவருக்கு. 

என்ன நடந்தது என்றால் தடையை மீறி படத்தில் நடித்தார். வெற்றி பெற்றதோடு இல்லாமல் மக்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக மாறினார். வெறித்தனமான ரசிகர்களை உண்டாக்கினார். அவரது ரசிகர்களிடம் ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் உயரம் இனொன்று அவரோடைய வித்யாசமான கண்கள். அந்த நடிகர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் 'அமிதாப் பச்சன்'. இதுவரை தனது மொழி தவிர வேறு மொழி படத்தில் நடித்திராமலே இந்தியா முழுதும் புகழ் அடைந்த ஒரே நடிகர்.

இவர்கள் தங்களால் முடியாது என்று நினைத்திருந்தால் அதுவும் உண்மை தான். ஆனால் தன்னால் முடியும் என்று நினைத்தார்கள் அதுவும் உண்மை தான்.

எந்த ஒரு கருவிக்கும் பராமரிப்பு கெடு இருக்கும். ஒரு இண்டஸ்ட்ரியில் தினம் பார்க்க வேண்டியவை.. வாரம் தோறும் பராமரிக்க வேண்டியவை 6 மாதத்திற்கொருமுறை பராமரிக்க வேண்டியவை... வருடம் ஒரு முறை பார்க்க வேண்டியவை என்று இருக்கும்.

மனம் தினம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு கருவி. அதை பராமரிக்கும் செயலுக்கு பெயர் சுய ஆய்வு அல்லது சுய விமர்சனம். ஒவ்வொரு நாளும் தன்னை தானே ஆய்வு செய்து இன்று நாம் செய்ததில் நல்லது என்ன கெட்டது என்ன மாற்ற வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டும். இது தவிர ஒவ்வொரு வினாடியும் தனக்குள் நிகழ்வதை கவனித்த வண்ணம் இருப்பது ஒரு நல்ல பயிற்சி.

நேர்மறை சிந்தனையும் வெற்றி மனோபாவமும் வெறும் பயிற்சிகள் மட்டுமே. மற்ற செயல்களை பழகுவதை போல இதை பழக்கத்தின் மூலம் நமது வாழ்வில் இதை கொண்டு வர முடியும்.

நண்பர்களே இந்த இயற்கை நமக்கு கொடுத்துள்ள மிக வலிமையானதொரு கருவி... ஒரு கொடை... ஒரு பரிசு இந்த மனம். இது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.. இதை தவறாக கையாண்டால் நம்மை அழித்தொழிக்கும் பிசாசு. இதை சரியாக புரிந்து கொண்டு சரியாக கையாண்டால் இந்த தேவதையை வசமாக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

வாழ்த்துக்கள்.

பாகம் 12 - தேவதை தரிசனம் பதிவை காணொளி வடிவில் காண 👇




    இந்த புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.


https://www.facebook.com/share/p/CWZETui4SHsDcipo/?mibextid=oFDknk



https://t.me/LetUsThinkPositiveeBooks/1675



    இதுவரை நான் ஆரோக்கியம் தொடர்பாக எழுதிய / வெளியிட்ட பகிர்ந்துகொண்ட அனைத்து இ-புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த 👇Google Drive லிங்கிற்கு செல்லுங்கள்.

https://goo.gl/GBKHAb



இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்


கற்போம் கற்பிப்போம்!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!