மொபைல் அடிமைத்தனம். மீள்வது எப்படி?

 


1

ஏன் இந்த நூல்?

து, கஞ்சா, போதை மருந்துகள் போல மொபைல் போனும், சமூக வலைதளங்களும் தீவிர அடிமைத்தனத்தை உருவாக்குபவையே. நமது நேரம், கல்வி, வேலை, வாழ்க்கையை பாதிக்கக் கூடியவையே. ஆனால் மது, கஞ்சா, போதை மருந்துகளை தீய பழக்கம் என பரப்புரை செய்து ஒழிக்க முடியும். மொபைலை, சமூக வலைதளங்களை அப்படி செய்ய முடியாது. எவ்வளவு பாதிப்புகளை தருகிறதோ, அதே அளவு நன்மைகளையும் தருவதால் அவற்றுக்கு அடிமையாகி விடாமல், ஒரு கட்டுப்பாட்டுக்குள் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

சமூகத்தில் மொபைல் அடிமைத்தனமும், சமூக வலைதள அடிமைத்தனமும் எங்கும் பெருகிய நிலையில், அதிலிருந்து விடுபடுவது எப்படி, கட்டுப்பாடோடு பயன்படுத்துவது எப்படி என்பதற்கான வழிகளை உளவியல் அணுகுமுறையில் சொல்வதே இந்நூல்.

 

2

முக்கிய குறிப்பு

ந்நூலில்,

மொபைல் அடிமைத்தனம், முகநூல் அடிமைத்தனம், சமூக வலைதள அடிமைத்தனம் இந்த சொற்களை எல்லாம் ஒரே பொருளை பேசும் வகையிலே எழுதி உள்ளேன்.

அடிமைத்தனத்திற்கு உதாரணமாக சில வலைதளங்களை சொல்லி விளக்கியுள்ளேன். ஒரு வலைதளம் பெயரை சொன்னால், அது நாம் பயன்படுத்துவது இல்லையே என கடந்து விடாதீர்கள்.

முகநூல், வாட்சப், டிக்டாக், ட்விட்டர், மொபைல் கேம் அனைத்து அடிமைத்தனத்திற்கும் அடிப்படை பொதுவானதே. விடுபடும் வழிமுறைகள் பொதுவானதே.

உங்களுக்கு ஏற்றதுபோல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

3

மொபைல் - அதன் இன்னொரு பக்கம்

மொபைல் உங்களுக்கு கட்டற்ற தகவல்கள், தொடர்புகள், பொழுதுபோக்குகளை தருகிறது. ஆனால் அதன் இன்னொரு பக்கம்?

மொபைலிலேயே மூழ்கி கிடப்பது, சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடப்பது. இதனால், உங்களை அறியாமலே உங்களின் உழைப்பு நேரம், பயன்பாட்டு நேரம் குறைகிறது. உங்களது நேரம் மொபைலில், சமூகவலைத்தளங்களில் திசை திரும்புவதால் நீங்கள் கல்வி கற்கும் நேரம் குறைகிறது. உங்களை அறிவார்ந்தவராக்குவது குறைகிறது. தேர்வில் திறன் குறைகிறது. போட்டி நிறைந்த உலகில் நீங்கள் தோற்பவர் ஆகிறீர்கள்.

வேலையில் இருப்பவரானால், வேலை செய்வதற்கான நேரம் மொபைலிலும், சமூகவலைத்தளங்களிலும் திசை திரும்புகிறது. உங்கள் வேலைத்திறன் குறைகிறது. வேலைத்திறன் குறைந்த நீங்கள் போட்டி நிறைந்த உலகில் தோற்று போகிறீர்கள்.


ஆய்வுகளின்படி, 

*      தொடர்ந்து மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பது முடிவெடுக்கும் திறனை பாதிக்கிறது. முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள் வாழ்க்கை போராட்டத்தில் தோற்றுப் போகிறார்கள்.

*      தொடர்ந்து மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பது, ஒருவரின் நினைவுத்திறனை பாதிக்கிறது. நினைவுத்திறன் குறைந்தவர்கள் புதிதாக கற்பதில் தோல்வியுறுகிறார்கள். சமூக போராட்டத்தில் தோற்றுப் போகிறார்கள்.

*      தொடர்ந்து மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பவர்கள் தன் சொந்த குடும்பத்தில் தொடர்பு குறைந்தவர்களாக, பேசுவதும் அன்பை வெளிப்படுத்த நேரம் இல்லாதவர்களாக போகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளும், உறவு சிக்கல்களும் அதிகமாகிறது.

*      மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்போர் இரவு உறங்கும் நேரம் தள்ளி போகிறது. இரவு 10 மணிக்கு உறங்க வேண்டியது மாறி 12, 1 மணிக்கு தள்ளி வைக்கிறார்கள். சர்காடியன் ரிதம் என்ற இந்த இயற்கை சுழற்சி மாறி நள்ளிரவு 12 மணிக்கு உறங்கும்போது மனசோர்வு, மன பதட்டம், மூளை செயல்திறன் குறைவு என பாதிக்கப்படுகிறார்கள்.

*      தொடர்ந்து மொபைலில், சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது ஒருவரின் திறனை குறைகிறது, வெற்றியை பாதிக்கிறது. தோல்விகளை தருகிறது. மூளை செயல்படும் திறனை குறைத்து மன சோர்விலும், மன பதட்டத்திலும் கொண்டு போய்விடுகிறது. என்ன சிக்கல் என்றால் மன சோர்வு, மன பதட்டம் அடைந்த நபர் அதிலிலிருந்து விடுபட, போதை மருந்து போல சந்தோசம் அளிக்கும் மொபைலில் மூழ்குவதும் சமூக வலைதளங்களில் மூழ்குவதையுமே செய்கிறார்.

*      மொபைலில் மூழ்குவதால் மீண்டும் அதிக மன சோர்வும் மன பதட்டமுமே அடைகிறார். அவர் வாழ்க்கை போராட்டத்தில் தோல்வியை அடைகிறார்.

*      மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்குவது உங்களை எந்நேரமும் மொபைலில் கட்டிப்போட்டு வருகிறது. தொடர்ந்து அதை பார்க்கும்படி அடிமைப்படுத்தி விடுகிறது. நீங்கள் நடந்து செல்லும்போதும், வாகனங்கள் ஓட்டும்போதும் மொபைலை பார்ப்பது என்ற கட்டாயத்தை உருவாக்கி வருகிறது. வாகனம் ஓட்டும்போது மொபைலை, சமூக வலைதளங்களை பார்க்கும் நீங்கள் விபத்தை உருவாக்கி விடுகிறீர்கள். மொபைல் அடிமைத்தனம் ஒரு விபத்தால் உங்கள் வாழ்வை சின்னாபின்னமாகி விடுகிறது.

*      குழந்தைகள், சிறுவர்களின் மொபைல் பழக்கமோ வளரும் மூளையை பாதிக்கிறது. அவர்களின் பண்புகளை மாற்றுகிறது. அறிவு, ஆற்றலை பெருக்க வேண்டிய வளர் பருவ காலத்தை சிதைத்து விடுகிறது.

 

  

4

மொபைல் அடிமைத்தனம் எங்கு உருவாகிறது?

ங்கள் மூளையை பற்றி சிறிய அறிமுகம்.

படத்தில் உள்ளபடி, மூளையை பக்கவாட்டிலிருந்து பார்த்தால், முன்னிலிருந்து பின்னாக, முன் மூளை, அக்கும்பென்சு செல் ஆகியவை இருக்கும்.

இவற்றிற்கு கீழே தண்டு பகுதியில் நடுமூளை இருக்கும்.

கீழே உள்ள நடுமூளையில் டோபமைன் என்கிற வேதிப்பொருள் சுரக்கும் செல்கள் இருக்கும். இந்த டோபமைன் சுரக்கும் செல்கள் தனது வாலை மேல்நோக்கி மூளையின் பல பகுதிகளுக்கும் அனுப்பும். வால் எங்கு முடிகிறதோ அங்கெல்லாம் டோபமைன் வெளியாகும்.

சுருக்கமாக,

நடுமூளையிலிருந்து > முன்மூளை

நடுமூளையிலிருந்து > அக்கும்பென்சு செல்.

இவற்றுக்கு டோபமைன் சுரக்கும் செல்களின் வால்கள் போய் முடியும். அதாவது, நடுமூளையிலிருந்து, முன்மூளை மற்றும் அக்கும்பென்சு செல்லுக்கு டோபமைன் செலுத்தப்படும்.

 

 

5

டோபமைன் முக்கியத்துவம் என்ன?

னிதர்கள் உயிர் வாழ உணவு, தன் இனத்தை பெருக்கிக்கொள்ள காமம் இரு ஆசைகளும் மிக முக்கியமானது.

நமக்கு உணவு மீதும், காமம் மீதும் தீராத ஆசையை தர, உணவையும் காமத்தையும் அனுபவிக்கும் போது அது நம்மை சந்தோசப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த சந்தோசத்தை டோபமைன் தருகிறது.

உணவு, காமம் செயல்களின் போது மூளையில் அதிக டோபமைன் சுரக்கிறது. அது முன்மூளை, அக்கும்பென்சு செல்லுக்கு செலுத்தப்பட்டு, ஒரு சந்தோச உணர்வை தருகிறது. குறிப்பாக, நடுமூளையிலிருந்து அக்கும்பென்சு செல் என்னும் பகுதிக்கு அதிக டோபமைன் செல்கிறது.

அக்கும்பென்சு செல்லில் அதிக டோபமைன் சுரக்க நமக்கு அதிக சந்தோசம், அதிக போதை கிடைக்கிறது. அதை தரும் செயல்களை நாம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வோம். இது இயற்கை உருவாக்கிய அமைப்பு.

 

 

6

அடிமைத்தனம் எப்படி உருவாகிறது?  

ணவு, காமம் செயல்களில் டோபமைன் சுரக்கும். நமக்கு சந்தோசத்தை தரும். அதை மீண்டும் மீண்டும் தேடும் ஆசையை தரும். இதுவரை சிக்கல் இல்லை. ஆனால் மது, கஞ்சா, போதை மருந்துகளும் நம் மூளையில் அதிக டோபமைன் சுரப்பை தரும். அதிக சந்தோசம் தரும்.

காமம் போலவே மது, கஞ்சா, போதை மருந்துகளும் டோபமைன் சுரப்பை அதிகப்படுத்தி சந்தோசத்தை தருவதால், அதை மீண்டும் மீண்டும் தேடி செல்லும் அடிமைத்தனத்தை உருவாக்கி விடுகின்றன.

 

 

7

மொபைல் அடிமைத்தனம் எப்படி உருவாகிறது?  

து, கஞ்சா, போதை மருந்து, காமத்தின் போது டோபமைன் அதிகமாக சுரக்கும். சந்தோசம் தரும். இந்த சந்தோசத்தை தொடர்ந்து பெற மீண்டும் மீண்டும் அவற்றை தேடி செல்வோம், அவை அடிமைப்படுத்தும் என பார்த்தோம்.

அதே போல் பொழுதுபோக்காக துவங்கிய மொபைல் பார்ப்பதும், சமூக வலைதளங்களை பார்ப்பதும் உங்களுக்கு சந்தோசத்தை அளிக்கிறது. உங்கள் மூளையில் டோபமைன் சுரப்பை அதிகரித்து, சந்தோசத்தை அளிக்கிறது. மீண்டும் மீண்டும் அந்த சந்தோசத்தை அனுபவிக்க உங்களை அறியாமலே மொபைலில், சமூகவலைத்தளங்களில் மூழ்க வைக்கிறது.

எவ்வளவு நாள் முழ்கினீர்களோ, அவ்வளவு இறுக்கமாக உங்களை மொபைலிலும் சமூகவலைத்தளங்களிலும் கட்டிப்போட்டு விடுகிறது. நீங்களாகத்தான் மொபைலை பார்க்கிறோம், சமூக வலைதளங்களை பார்க்கிறோம் என நீங்கள் நினைத்தாலும் உங்களுக்குள் உருவாகியுள்ள மொபைல், சமூக வலைதளம் பார்ப்பது > டோபமைன் சுரப்பு > சந்தோசம் என்பது உங்களை மொபைலை அடிமையாக, சமூக வலைதள அடிமையாக மாற்றி விடுகிறது.

 

 

8

நீங்கள் விட நினைத்தால் என்ன ஆகும்?  

மொபைல் பார்ப்பதை குறைக்க நினைத்தால், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை குறைக்க நினைத்தால் என்ன ஆகும்?

மது, கஞ்சா, போதை பொருள்களை எப்படி விட நினைத்தாலும் விட முடியாதோ, அதேபோல மொபைல் பார்ப்பதை குறைக்க நினைத்தாலும், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை குறைக்க நினைத்தாலும் விட முடியாது. ஏன்?

மது, கஞ்சா, போதை பொருள்களால் டோபமைன் தரும் சந்தோசம், அந்த பழக்கங்களை விட முடியாத அடிமைத்தனத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல நீங்கள் மொபைல் பார்ப்பதும், சமூக வலைதளங்களை பார்ப்பதும் உங்களுக்குள் மொபைலில், சமூகவலைத்தளங்களில் மூழ்குவது > மூளையில் டோபமைன் சுரப்பு > சந்தோசம் என்ற அடிமை சங்கிலியை உருவாக்குகிறது. நீங்கள் மொபைல் பார்ப்பதை குறைக்க முயன்றால், உங்கள் மூளையில் இதுநாள் வரை மொபைல், சமூக வலைதள பழக்கம் உருவாக்கிய டோபமைன் குறையும். டோபமைன் குறைவது நேரடியாக நீங்கள் இதுநாள்வரை அனுபவித்த சந்தோசத்தை குறைக்கும்.

இந்த சந்தோச குறைவு உங்கள் மனதில் ஒரு சோகத்தை உருவாக்கும். ஒரு எரிச்சல் உணர்வு வரும். மனம் சந்தோசத்திற்கு ஏங்கும். மொபைல், சமூக வலைதளம் தரும் சந்தோசத்திற்கு ஏங்கும். உங்கள் கட்டுப்பாட்டு வலிமை குறையும். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி மீண்டும் மொபைலை திறப்பது, சமூக வலைதளங்களை திறப்பது என உங்களை தள்ளும்.

டோபமைன் சந்தோசத்தை தேடும் நீங்கள் மீண்டும் மொபைலை அதிகமாக பார்ப்பதும், சமூக வலைதளங்களை அதிகமாக பார்ப்பதும் துவங்கும். பழையபடி மொபைலில் மூழ்க வைத்து, சமூக வலைதளங்களில் மூழ்க வைத்து, அது தரும் டோபமைன் சந்தோசத்தை அனுபவித்தபடியே, உங்களை மீண்டும் மொபைல் அடிமையாக, சமூக வலைதள அடிமையாக மாற்றும்.

 


9

முகநூல் அடிமைத்தனம் எப்படி இருக்கும்?  

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக முகநூலை பார்ப்பது.

·      பகலில் கல்வி, வேலை என இருக்கும்போதும் இடையிடையே முகநூலை பார்ப்பது.

·      இரவு தூங்குவதற்கு முன்வரை முகநூலில் முழ்கிவிட்டு தூங்குவது.

·      முகநூலில் பதிவுகள் போடுவதை பற்றி நடுநடுவே சிந்தித்து கொண்டிருப்பது. பதிவுக்கான லைக்குகள் பற்றி சிந்தித்து கொண்டிருப்பது. பின்னூட்டங்கள் பற்றி சிந்தித்து கொண்டிருப்பது.

·      முகநூலால் நேரம் பாதிப்பு, கல்வி பாதிப்பு, வேலை பாதிப்பு, உறவுகள் பாதிப்பு ஏற்படுவது. பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை உணராது முகநூலில் மூழ்கி இருப்பது.

·      முகநூலால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குடும்பத்தினர், நண்பர் சுட்டிக் காட்டும் போது அவர்கள் மீது கோபம் அடைந்திருப்பது.

·      முகநூலால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி நீங்களே வருத்தப்பட்டிருப்பது. முகநூலை விட்டுவிடவேண்டும் என நினைப்பது, நினைத்தும் முடியாமலிருப்பது.

·      முதலில் ஒரு நாளைக்கு 1/2 மணி நேரம், ஒரு மணி நேரம் என முகநூலில் இருந்தது போய், நாள்பூராவும் 5 மணி நேரம், 6 மணி நேரம் என முகநூலில் மூழ்கியிருப்பது.

·      முகநூலை விடவேண்டும் என நினைத்து, விட முயலும்போது முகநூலில் இல்லாத நேரத்தில் வெறுமை, சோர்வு, மகிழ்ச்சி இன்மை என உணர்வது.

·      மீண்டும் முகநூலில் இறங்கியவுடன் பழைய மகிழ்ச்சியை அடைவது.

 

இவையெல்லாம் முகநூல் அடிமைத்தனத்தின் பண்புகள் ஆகும்.

இவற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு முகநூல் அடிமை என முடிவு கட்டிவிடலாம்.

முகநூலில் மூழ்கி இருக்கும் ஒருவருக்கு தன் அடிமை நிலையே உணராத நிலையில் இந்த அடிமைத்தன பண்புகளை மறுப்பதும் உண்டு. அந்த நிலையில் அவரை சுற்றியுள்ளவர்கள் தான் இந்த பண்புகள் அவருக்கு உள்ளதா என சொல்ல வேண்டும்.

 

 பின் குறிப்பு:

முகநூல் என்பது ஒரு உதாரணம் மட்டுமே. இந்த இடத்தில் வாட்சப், டிக்டாக், ட்விட்டர், மொபைல் கேம், யு ட்யுப் என நீங்கள் பார்க்கும் எதை வேண்டுமாலும் போட்டுக்கொள்ளுங்கள். சமூக வலைதளங்கள் அனைத்திற்கும் அடிமைத்தனம் உருவாவதும், அதன் பண்புகளும் அடிப்படை ஒன்றே. விடுபடும் வழிமுறைகளும் பொதுவானதே.

 

இன்னொரு பின் குறிப்பு

இந்த நினைவூட்டலை இனி போட மாட்டேன். நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும்.

 

 

10

முகநூல் தீவிர அடிமைத்தனத்தின்  நான்கு பண்புகள்

னநலத் துறையில் போதை பொருள்களின் தீவிர அடிமைத்தனத்தை நான்கு பண்புகளாக காட்டுவார்கள். அது சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும்.

அவை,

·      காலை எழுந்தவுடனேயே முகநூலை திறந்து பார்ப்பது.

·      முகநூலில் அதிக நேரம் செலவிடுவதாக குடும்பத்தினர் சொல்ல, நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டிருப்பது.

·      முகநூலில் மூழ்கியதால் நிறைய இழந்தோம் என நீங்களே வருத்தப்படுவது.

·      முகநூலை குறைக்கவேண்டும் என நீங்களே சிந்தித்து கொண்டிருப்பது.

 

இந்த நான்கு பண்புகள் முகநூல் தீவிர அடிமைத்தனத்தை காட்டும்.

இதில் முக்கியமாக காலை எழுந்தவுடனேயே, தூங்கி எழுந்தவுடனேயே முகநூலை பார்ப்பது என்ற ஒன்றே நீங்கள் தீவிர முகநூல் அடிமை என்பதை காட்டிவிடும்.

 


11

முகநூல் அடிமையின் ஒரு நாள் வாழ்வு

காலை எழுந்தவுடன் அவர் மனது பரபரக்கிறது. முகநூலை திறந்து என்ன நடக்கிறது என பார்க்கிறார்.

பின் பல் துலக்குவது, காபி குடிப்பது, காலைக் கடன்கள். இவைகளுக்கு நடுவேயும் முகநூலில் உலவுகிறார். பள்ளி, கல்லூரிக்கு கிளம்புகிறார். வேலைக்கு கிளம்புகிறார். பயணத்தின் போது முகநூலில் முழ்குகிறார்.

கல்லுரியில் இருக்கும்போது, வேலையில் இருக்கும் போது இடையிடையே முகநூலில் மூழ்குகிறார். நண்பர்களோடு பேசும்போது, வீடு திரும்பும்போது முகநூலில் மூழ்குகிறார்.

வீட்டில் குடும்பத்தில் உள்ளவர்களோடு பேசாமல் தனியே முகநூலில் மூழ்குகிறார். இரவு தூங்கும் முன் வரை முகநூலை பார்த்தபடியே தூங்குகிறார். தூக்கம் நடுவே எழுந்தாலும் முகநூலை ஒரு எட்டு எட்டி பார்த்து விடுகிறார்.

 அவரின் முழுநாளும் முகநூலுக்குள் மூழ்கிய நாளாகவே இருக்கிறது.

 

 

12

வேலைக்காரன் முதலாளியாவது

ரு பழக்கம் வேலைக்காரனாக வந்து முதலாளியாக மாறுகிறது.

நீங்கள் பொழுது போகாமல் இருக்கும்போது ஒரு பொழுது போக்காக பார்ப்பதாக, வெட்டியாக இருக்கும்போது பார்ப்பதாக.

ஒரு தகவலை தெரிந்து கொள்ள பார்ப்பதாக, டைம் பாசாக என துவங்கிய முகநூல் உங்கள் வாழ்வின் முழு நேரத்தையும் கைப்பற்றும் அடிமைத்தனமாக மாறுகிறது.

முகநூல் பழக்கம் உங்களிடம் ஒரு வேலைக்காரனாக வந்து முதலாளியாக மாறுகிறது.

 

 

13

முகநூல் எப்படி உங்கள் வாழ்வின் அங்கமாகிறது?

சைக்கிள், பைக் ஓட்டுகிறீர்கள். கார் ஓட்டுகிறீர்கள். இந்த பழக்கங்கள் முதலில் உங்கள் கவனத்துடன் நடக்கிறது.

கவனமாக பெடலை மிதிக்கிறீர்கள், ப்ரேக்கை அழுத்துகிறீர்கள், ஆக்சிலேட்டரை அழுத்துகிறீர்கள். இதை தொடர்ந்து செய்ய செய்ய தன்னிச்சையாக நடக்கும் செயலாகிறது. உங்கள் கவனம் இல்லாமல் உங்களை அறியாமல் நீங்களே செய்யும் செயலாகிறது.

முகநூல் பழக்கமும் அப்படியே. முதலில் சாதாரணமாக துவங்கினாலும் தொடர்ந்து பார்க்க, எல்லா நேரங்களிலும் கட்டுப்பாடின்றி பார்க்க பார்க்க, அது உங்கள் மூளையில் ஒரு ப்ரொக்ராம் செய்யப்பட்ட பழக்கமாகிறது.

உங்கள் உணர்வின்றி தன்னிச்சையாக முகநூலை பார்ப்பது, முகநூலில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கி விடுவது, முகநூலை விட்டு விலகி படிக்கும்போதும், வேறு வேலையை செய்யும்போதும் உங்களை அறியாமலே முகநூலை திறப்பது, அதில் மூழ்குவது என, முகநூல் என்பது உங்கள் மூளையில் ப்ரொக்ராம் செய்யப்பட்ட ஒன்றாகவே ஆகிவிடுகிறது.

 

 

14

முகநூல் என்னும் போதை

காமம், பணம், புகழ், அதிகாரம் இவை சந்தோசத்தை தருகின்றன. நாம் அனுபவிக்கும் இந்த சந்தோசத்தின் இன்னொரு தன்மை, இதை மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் போதையை நமக்குள் ஏற்படுவதாகும். எனவே இவற்றை மீண்டும் மீண்டும் தேடி ஓடுவோம்.

இதே தன்மைகள் மது, கஞ்சா, போதை பொருட்களுக்கும் உண்டு. அது முகநூல் போன்ற சமூக வலைதள பழக்கங்களுக்கும் உண்டு.

சமூக வலைதளங்களில் மூழ்கும்போது நாம் பெறும் சந்தோசம் மீண்டும் மீண்டும் அதை தேடக்கூடிய போதையை உருவாக்குகிறது. சமூக வலைதள போதையில் மூழ்கும் நாம் ஒரு கட்டத்தில் சமூக வலைதள அடிமைத்தனத்தில் சிக்கிக்கொள்கிறோம்.

  

 

15

லைக் என்னும் போதை

முகநூலில், டிக்டாக்கில், யுட்யுபில் ஒரு பதிவை போடுகிறோம். காணொளி போடுகிறோம். அதற்கு எல்லோரும் லைக்குகள் போடுகிறார்கள். 20, 30 என்பது 100, 150 என அதிக லைக் விழுகிறது. சிலசமயம் ஆயிரக்கணக்கில்.

இந்த லைக்குகள் நமக்குள் சந்தோசத்தை தருகிறது. பிறர் நம்மை அங்கீகரிப்பதாக பாராட்டுவதாக புகழ்வதாக சந்தோசத்தை தருகிறது. இந்த லைக்குகள் நம்மை அறியாது ஒரு போதையை தருகிறது.

மது, கஞ்சா, போதை மருந்துகள் போல இந்த லைக்குகள் நமக்குள் சந்தோச போதையை, புகழ் போதையை, அங்கீகார போதையை தருகிறது.

மனம் இந்த லைக்குகள் போதையை விரும்புகிறது. இந்த லைக்குகளை பெறுவதற்காக மீண்டும் பதிவுகளை போடுகிறோம். காணொளிகளை போடுகிறோம். இன்னும் லைக் அதிகமாகிறது. அதிக லைக்குகள், அதிக சந்தோசம், அதிக போதை. இன்னும் தீவிரமாக இறங்குகிறோம்.

இந்த லைக் போதை அபாயமான புதைகுழியாக உள்ளது. பிறரின் அங்கீகாரம், பாராட்டு, புகழ் என்னும் லைக்குகள் நம் பண்பை மாற்றி விடுகிறது. லைக்குகள் போதை நம்மை முழுமையாக சமூக வலைதளங்களில் முழ்க வைத்து சமூக வலைதள அடிமையாக மாற்றி விடுகிறது.

 

 

16

லைக்குகள் போதையில் விழுவது யார்?

பிறரின் அங்கீகாரம், பிறரின் பாராட்டு, பிறரின் புகழ் என்கிற லைக்குகள் போதையை விரும்புபவர்கள்,

 

§  தன்னம்பிக்கை இல்லாதவராக,

§  தன் மீது தன்மதிப்பு இல்லாதவராக,

§  பிறரின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பவராக,

§  பிறரின் பாராட்டை எதிர்பார்ப்பவராக,

§  சாதிக்கும் இலக்கு எதுவும் இல்லாதவராக,

§  மனதில் வெறுமை,

§  சோர்வு உடையவராக இருப்பர்.

 

லைக்குகள் அவர்களுக்கு போலி சந்தோசத்தை தருகிறது. போதையை தருகிறது. அதற்கு ஏங்கி பதிவுகளும், காணொளிகளையும் போட்டுக்கொண்டு மொபைல் அடிமையாக, சமூக வலைதள அடிமையாக கிடப்பர்.

லைக்குகள் போதையிலிருந்து விடுபட நம் மீது தன்மதிப்பை கொண்டும், தன்னம்பிக்கை கொண்டும், தன் மீது பிறரின் மதிப்பை எதிர்பார்க்காதும், தன் செயலுக்கு பிறரின் அங்கீகாரத்தை எதிர் பார்க்காதவராகவும் நம்மை வளர்த்து கொள்ள வேண்டும்.

இதுவே அதிக லைக்குகள், அதிக போதை என்னும் லைக்குகள் போதைக்காக சமூக வலைதள அடிமையாக இருப்பதிலிருந்து விடுவிக்கும்.

 

 

17

உள்முகப் பார்வை

ந்த ஒரு நோயும், ஒரு அடிமைத்தனமும் குணமாக உள்முகப்பார்வை அவசியம். அதாவது நமது நிலை என்ன, நமக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்கிற உள்முகப்பார்வை அவசியம்.

 

ஒரு குடி நோயாளியுடன் உரையாடல்.

தண்ணி அடிப்பீங்களா?

ரொம்ப இல்லங்க. அப்பப்ப

எப்பப்ப

பணம், காசு கிடைக்கும்போது

எப்பலாம் கிடைக்கும்?

வாரத்துல மூணுவாட்டி

எவ்வளவு அடிப்பீங்க?

சும்மா கொஞ்சம்

அப்டினா எவ்வளவு?

காலை ஒரு கட்டிங், மத்தியானம் ஒன்னு, நைட் ஒன்னு

மூணு குவார்ட்டர் ஆகுமா?

ஆமா

இதனால ஏதாச்சும் பிரச்சனை வந்திருக்கா?

ஒன்னும் இல்ல சார்

(அவர் மனைவி குறுக்கிட்டு) தண்ணி அடிச்சிட்டு பைக்ல போய் விழுந்துருக்காரு., மண்டைல நாலு தையல் போட்டிருக்கு. மஞ்சள் காமாலை வந்து ஆசுபத்திரில சேர்த்திருக்கோம், கீழ விழுந்து வலிப்பு வந்துருக்கு.

ஏம்பா அப்படியா?

சார். அதுலாம் பெரிய விசயமே இல்ல சார்

ம். நீங்களே தண்ணி அடிக்கிறத நிறுத்திடுவீங்களா?

நிறுத்திடுவேன் சார். நெனைச்சா உடனே நிறுத்திடுவேன்

(அவர் மனைவி மீண்டும்)

எங்க சார். மூணு வாட்டி பிரைவேட்ல வச்சிருந்தோம். வெளிய வந்து ஒரு மாசத்துலயே குடிக்க ஆரம்பிச்சிட்டாரு

இவர் தீவிர குடி அடிமை. ஆனால், குடியின் பாதிப்புகள் பற்றியோ தனக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றியோ எந்தளவு குடிப் பழக்கத்திற்கு அடிமையாய் இருக்கிறோம் என்பதோ, தன்னால் பயிற்சி, சிகிச்சை இன்றி குடி பழக்கத்தை விட முடியாது என்ற சிந்தனையோ இல்லை.

இதைத்தான் நோய் பற்றிய உள்முகப்பார்வை அற்ற நிலை என்கிறோம்.

 

 

18

முகநூல் அடிமைத்தனத்தில்      உள்முகப்பார்வை

ப்படி ஒரு குடி அடிமைக்கு உள்முகப்பார்வை அற்ற நிலை உள்ளதோ, அதே போல் முகநூல் அடிமைக்கும் உள்முக பார்வை அற்ற நிலை உருவாகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் முகநூலில் உள்ளோம். எந்த அளவு நம் கல்வி, வேலை பாதிக்கப்படுகிறது. எவ்வளவு நேர இழப்பு, உறவுகள் தொடர்பு குறைவு ஏற்படுகிறது. இந்த முகநூலை எளிதாக விட முடியுமா, கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமா?

காலை முதல் இரவு வரை இது நம் வாழ்வை ஆக்கிரமித்திருக்கிறதா என்பதை சிந்திக்க முடியாத, இது பெரிய விசயமில்லை, பாதிப்பு இல்லை என சொல்லக்கூடிய, நமது முகநூல் அடிமைத்தனத்தை பற்றிய உள்முக பார்வை அற்ற நிலையே இதிலும் உருவாகிறது.

  

 

19

சூழல் அழுத்தம் - புறச்சூழல் அழுத்தம்

மொபைல் அடிமைத்தனத்தை தூண்டும் காரணி உங்களை சுற்றியுள்ள சூழல் அழுத்தமாகும். சூழல் அழுத்தத்தை புறச்சூழல் அழுத்தம், அகச்சூழல் அழுத்தம் என இருவகையாக சொல்லலாம்.

 

புறச்சூழல் அழுத்தம்

நீங்கள் வெளியே பயணம் செய்கிறீர்கள். எதிரே மனிதர்கள் மொபைலில் மூழ்கி நடந்து கொண்டு இருக்கிறார்கள். கல்லூரியில், அலுவலகத்தில் இருக்கிறீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள் மொபைலை நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களை அறியாமல் உங்களையும் மொபைலை எடுக்க சொல்கிறது. இது புறச்சூழல் அழுத்தம். நீங்களும் மொபைலை எடுக்கிறீர்கள். அதில் மூழ்கிப் போகிறீர்கள். ஒரு மொபைல் அடிமையாய், சமூக வலைதள அடிமையாய் மாறி போகிறீர்கள்.

 

என்ன செய்வது?

அடுத்தமுறை வெளியே செல்லும்போது, கல்லூரியில் இருக்கும் போது, அலுவலகத்தில் இருக்கும் போது, உங்களை சுற்றி உள்ள அனைவரும் மொபைலில் மூழ்கி இருக்கும் சூழலில், உங்களிடம் மொபைலை எடுக்க தூண்டும் தன்னிச்சை செயலில் கவனமாய் இருங்கள். சுய உணர்வோடு சொல்லிக் கொள்ளுங்கள்.

இது புறச்சூழல் அழுத்தம். இந்த புறச் சூழல் அழுத்தத்தால் மொபைலை எடுத்தால் மொபைல் அடிமைத்தனத்தில் விழுவோம். சமூக வலைதள அடிமைத்தனத்தில் விழுவோம்.

நமது நேரத்தை, திறமையை சரியாக பயன்படுத்த வேண்டும். மொபைல் அடிமைத்தனத்திலிருந்து, சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். நாம் முற்றிலும் புதிய மனிதர், ஆக்கப்பூர்வமான மனிதர் என்று.

 

 

20

சூழல் அழுத்தம் - அகச்சூழல் அழுத்தம்

ங்கள் மன அழுத்தமே உங்களை அறியாமல் மொபைலை எடுக்கத் தூண்டும். இது அகச்சூழல் அழுத்தம்.

பிறரோடு ஒரு பிரச்சனை, குடும்பத்தில் தகராறு, வாழ்க்கையில் சிக்கல், தோல்வி, அல்லது எந்த வேலையுமே இல்லாமல் இருப்பது. இதனால் உங்களுக்குள் ஒரு மன அழுத்தம் உருவாகிறது. இது அகச்சூழல் அழுத்தம்.

இதிலிருந்து தப்ப உங்கள் மனம் ஒரு வழியை தேடுகிறது. உங்கள் அருகிலேயே இருக்கும் மொபைலை நோக்கி உங்கள் கைகள் நீள்கிறது. வெறுமையாக மொபைலின் திரையை உருட்ட ஆரம்பிக்கிறீர்கள் சமூக வலைதளங்களை பார்க்கிறீர்கள். தொடர்ச்சியாக அதில் மூழ்குகிறீர்கள்.

தற்காலிக வழியாக உருவான இந்த சமூக வலைதள முழ்குதல் அதோடு நிற்பதில்லை. அது உங்கள் முழு நாளிலும் தொடர்கிறது. முழு வாழ்க்கையிலும் தொடர்கிறது.

  

என்ன செய்வது?

ஒரு பிரச்சனை, ஒரு தோல்வி, ஒரு வெறுமை, ஒரு அழுத்தம் வரும்போதெல்லாம் அதற்கு வடிகாலாக மொபைலில், சமூக வலைதளங்களில் மூழ்குவது ஒரு தீர்வல்ல என சொல்லிக் கொள்ளுங்கள்.

உங்கள் மனதை அமைதியாக ஓய்வாக வைத்திருங்கள். பிடித்த பாடல்களை கேளுங்கள். பிடித்த புத்தகத்தை படியுங்கள். உறவினர்களுடன், நண்பர்களுடன் பேசுங்கள். காலார வெளியே நடந்து செல்லுங்கள். இவை உங்களை அமைதியாக்கும்.

மன அழுத்தத்தில், மன வெறுமையில் மொபைலில் மூழ்குவது என்பது எந்த தீர்வும் தராது, மாறாக மொபைல் அடிமை, சமூக வலைதள அடிமை என இன்னொரு புது சிக்கலையும் உங்களுக்கு கொண்டுவரும் என சொல்லிக் கொள்ளுங்கள். அதன்படி சுய உணர்வோடு மொபைலை தவிருங்கள்.

 

 

21

உங்களை சீரழிக்கும் இலவச டேட்டா

மொபைல் அடிமைத்தனத்திற்கு இன்னொரு காரணம் உங்களுக்கு தரப்படும் மிக குறைந்த மொபைல் கட்டணங்கள். இலவச டேட்டாக்கள்.

சாலையில், அலுவலகத்தில் எந்த மனிதரையும் பாருங்கள். மொபைலில் எதோ ஒன்றை எப்போதும் செய்து கொண்டிருக்கிறார். ஒன்று பேசிக் கொண்டு இருக்கிறார் அல்லது குனிந்த நிலையில் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்.

இவ்வளவு பேச்சிலும், இவ்வளவு சமூக வலைதளங்களிலும் மூழ்கி கிடக்கும் அளவு அவர் பிசியாக உள்ளாரா? நெருங்கி பார்த்தால் வெறும் அரட்டை, பொழுது போக்கிற்காகவே இருக்கும்.

இலவசமாக தரப்படும் இணையதள தொடர்புகள், அழைப்புகள் மனிதர்களை மொபைலை அதிகமாக பயன்படுத்துவதாக, கடைசியில் மொபைல் அடிமைத்தனத்தில் தள்ளுவதாக அமைகின்றன.

அழைப்பு கட்டணங்களும், இணையதள தொடர்புகளும் இனி மலிவு, இலவசம் தான். ஏனெனில் முதலாளிகள் தங்கள் பொருள்களை உங்களிடம் விற்பதற்கும், ஆதிக்க சக்திகள் தங்கள் கருத்துக்களை உங்களிடம் திணிப்பதற்கும் உங்கள் கையிலுள்ள மொபைலே அவர்களுக்கு வழி. அதன் வழியாகவே நீங்கள் வாங்கும் பொருள்களையும், நீங்கள் சிந்திக்கும் கருத்துக்களையும் அவர்கள் முடிவு செய்வார்கள்.

ஆனால் மலிவாக இலவசமாக தரப்படுகின்றன என நீங்கள் அதிகம் பயன்படுத்துவது மொபைல் அடிமைத்தனத்திலும், சமூக வலைதள அடிமைத்தனத்திலுமே உங்களை கொண்டு போய் முடித்துவிடுகிறது. சீரழித்து விடுகிறது.

இலவசம், மலிவு என்றாலும் மொபைலை கட்டுப்பாடோடு பயன்படுத்த வேண்டும் என உறுதி கொள்ளுங்கள்.

 

 

22

கட்டற்ற சமூக வலைதள தொடர்புகள்  ஒரு ஆபத்து

னிதன் விலங்குகளிடமிருந்து வேறுபட காரணம் அவனது மொழித்திறனும், அதனால் உருவான சிந்தனையும். சிந்தனை பெற்ற மனிதன் இயல்பிலேயே சக மனிதர்களோடு அதிகம் உரையாட, அதிகம் தொடர்பு கொள்ள விரும்புவனாய் இருப்பான்.

ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்து, தொலை தொடர்பு துறை வளர்ந்தது அவனுக்கு இன்னொரு சிக்கலையும் கொண்டு வந்து விடுகிறது. அது இயல்பிலேயே அதிகம் உரையாட ஆசைப்படும் மனிதனுக்கு கட்டற்ற தொடர்பு வசதியை தந்துவிடுகிறது.

எந்தநேரமும் செய்திகள், எந்நேரமும் தகவல்கள், எந்நேரமும் அனைத்து மக்களிடம் தொடர்புகள், உரையாடல் என்பது மனிதனை சமூக வலை தளங்களிலேயே மூழ்கிவிட தள்ளுகிறது.

தனக்கென கட்டுப்பாடோ, உள்முகப் பார்வையோ இல்லாத மனிதன் இந்த கட்டற்ற சமூக வலைதள தொடர்புகளில் தன்னை இழக்கிறான்.

ஒரு மனிதனின் முன்னேற்றம் உழைப்பை சார்ந்தது. உழைப்பு அவன் உழைக்கும் நேரத்தை சார்ந்தது. கட்டுப்பாடற்ற சமூக வலைதள தொடர்புகளில் மூழ்கி கிடக்கும் மனிதன், தன் நேரத்தை இழந்து, கல்வி, வேலையில் கவனத்தை இழந்து திறனற்றவனாகிறான். வாழ்வில் தோல்வியை அடைகிறான்.

 

 

23

மொபைல் - முன்னேற்றத்திற்கா? அடிமைத்தனத்திற்கா?

மொபைலை புறக்கணித்து வாழ முடியாது. தொழில்நுட்பம், தொலை தொடர்புகள் பெருகிய காலத்தில் தகவல்கள், தொடர்புகள் மிக அவசியமானவை. அதே சமயம் தகவல்களை, தொடர்புகளை தன்னுள்ளே வைத்துள்ள மொபைல், ஆபத்தான பக்க விளைவாக சமூக வலைதளங்களில் உங்களை அடிமைப்படுத்தி சீரழிப்பதாயும் அமைந்து விடுகிறது.

எனில் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி, இப்போது மொபைலை பயன்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், தகவல்கள், தொடர்புகள், முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்களா அல்லது வெறும் அரட்டை, பொழுதுபோக்கு என மொபைல் அடிமைத்தனத்தில் மூழ்கி இருக்கிறீர்களா?

எப்போதும் உங்கள் சுய உணர்வில் நீங்கள் எழுப்பிக் கொள்ளும் கேள்வி, இரண்டில் எது?

மொபைல் - உங்கள் முன்னேற்றத்திற்கா? அடிமைத் தனத்திற்கா?

 

24

இலக்கற்ற நாள் - சமூக வலைதளங்களின் கூடாரம்

முகநூல் அடிமைத்தனத்தின் இன்னொரு அடிப்படை காரணம் இலக்கற்ற நாள் ஆகும்.

ஒரு நாள் என்றால் அதில் நமக்கு சில இலக்குகள், சில பணிகள் இருக்க வேண்டும். அந்த இலக்குகள், பணிகளை எந்தெந்த நேரத்தில் செய்வது என்ற திட்டம் இருக்க வேண்டும்.

எந்த இலக்குமே இல்லாத, எந்த வேலையுமே இல்லாத, நம்மை முன்னேற்றி கொள்ளும் எந்த செயலுமே இல்லாத ஒரு நாள் இலக்கற்ற நாள், வெறுமையான நாள் ஆகும்.

வெறுமையான மனம் பேய்களின் கூடாரம். வெறுமையான நாள், இலக்கற்ற நாள் சமூக வலைத்தளங்களின் கூடாரம்.

சமூக வலை தளங்களில் கட்டுப்பாடோடு இருக்க, ஒவ்வொரு நாள் இரவும், அடுத்த நாள் செய்ய வேண்டிய இலக்குகள், வேலையை திட்டமிட வேண்டும். மறுநாள் அன்றைய வேலைகள், இலக்குகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலைகள், இலக்குகளை நோக்கி நீங்கள் செயல்படும்போது சமூக வலைதளங்களில் முழ்குவதை நீங்களே தவிர்த்து விடுவீர்கள்.

 

  

25

அதற்கென ஒரு நேரம்

ரு நாளில் உணவு உண்பதற்காக ஒரு நேரம் ஒதுக்குகிறோம். பள்ளி, கல்லூரி செல்ல ஒரு நேரம் ஒதுக்குகிறோம். வேலைக்கு செல்ல ஒரு நேரம் ஒதுக்குகிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உள்ளது. சமூக வலைதளங்களுக்கென்று ஒரு நேரம் ஒதுக்குகிறோமா?

இல்லை.

சமூக வலை தளங்களுக்கு என்று நேரம் ஒதுக்கவில்லை. மாறாக முழுநாளும் சமூக வலைதளங்களுக்கென்று திறந்து விடுகிறோம். அதில் மூழ்கி இருக்கிறோம்.

தீர்வு, வேலை அட்டவணையை மனதில் உருவாக்குங்கள்.

ஒரு நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களை என்ன நேரத்தில் பார்ப்பது, எவ்வளவு நேரம் பார்ப்பது என வரையறுங்கள்.

வரையறுக்கும் போது உங்களால் முடியாத வரையறையை போடாதீர்கள். உங்களுக்கேற்ற வரையறையை போடுங்கள். அது தான் முக்கியம்.

 

 

26

நீங்கள் தான் மொபைல் விதிகளை உருவாக்குபவர்

காலையில் இன்ன நேரத்தில் எழ வேண்டும். இன்ன நேரத்தில் சாப்பிட வேண்டும். இன்ன நேரத்தில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்ல வேண்டும். இன்னாரை இன்ன நேரத்தில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். சமூக வலைதளங்களை இன்ன நேரத்தில் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

இதற்கு மொபைல் விதிகளை உருவாக்க வேண்டும்.

உதாரணமாக

*      காலை எழுந்தவுடன் மொபைலை பார்க்கக்கூடாது.

*      காலை 9.00 மணி வரை மொபைலை பார்க்கக் கூடாது.

*      பயண நேரத்தில் சமூக வலை தளங்களில் முழ்க கூடாது.

*      உணவு அருந்தும்போது, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது மொபைலை பார்க்கக்கூடாது.

*      போரடிக்கிறது என மொபைலை பார்க்கக்கூடாது.

*      மொபைலை தொடர்ச்சியாக 1/2 மணி நேரம் மேல் பார்க்கக்கூடாது.

*      மொபைலை இன்னன்ன நேரத்தில் பார்க்க வேண்டும்.

*      உறங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பே மொபைலை மூடிவிட வேண்டும்.

இது போன்ற மொபைல் விதிகளை உருவாக்க வேண்டும். யார் உருவாக்கி தருவார்? நீங்களேதான். உங்களை கட்டுப்படுத்த நீங்களேதான் மொபைல் விதிகளை உருவாக்க வேண்டும்.

மொபைல் விதிகளை உருவாக்கினால் மட்டும் போதாது. அதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்களே விதிகளை உருவாக்கிவிட்டு, நீங்களே உடைப்பவராயும் இருக்க கூடாது.

உங்களுக்கென மொபைல் விதிகளை உருவாக்கியபின், உயிரே போனாலும் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று நினைத்து பாருங்கள். மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள துவங்கி விடுவீர்கள்.

 

 

27

அருகாமையை தவிருங்கள்

மொபைல் அடிமைத்தனத்தின் முக்கிய காரணி என்ன? மொபைலே தான். மொபைலே தான் உங்களை தன்னிச்சையாக எடுக்க வைக்கிறது. மொபைல் அடிமைத்தனத்தில் மூழ்க வைக்கிறது. சமூக வலைதள அடிமையாக்குகிறது.

ஆய்வுகள் சொல்வது, மனிதர்கள் மொபைலை எப்போதும் 5 அடி தொலைவுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்று. சரிதான், பெரும்பாலானோரை பார்த்தீர்களேயானால் மொபைலை அருகிலேயே வைத்திருப்பர். எப்போதும் கையிலேயே வைத்திருப்பர், சட்டைப் பையிலே வைத்திருப்பர். வீட்டில் இருந்தாலும் கைக்கு எட்டும் தூரத்திலேயே வைத்திருப்பர்.

இந்த அருகாமையே மொபைல் அடிமைத்தனத்தின் முக்கிய காரணி. மொபைல் அருகாமை உங்களை தன்னிச்சையாக மொபைலை எடுக்கத் தூண்டுகிறது. எப்போதும் அதில் மூழ்கி இருக்க செய்கிறது.

முதல் வேலையாக மொபைல் அருகாமையை குறையுங்கள்.

மொபைலை எப்போதும் கையில் வைத்திருக்கும் பழக்கத்தை விடுங்கள். சட்டைப்பையில் வைத்திருப்பதை விடுங்கள்.

பைக்குள்ளோ அல்லது பேண்ட் பாக்கெட்டுக்குள்ளோ, சிறிது தள்ளியோ வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அருகில் வைத்தாலும் எடுக்க கொஞ்சம் கடினமாக வையுங்கள். வீட்டில் தரைவழி தொலைபேசியை, தொலைக்காட்சியை, அதற்கென ஒரு இடத்தில் வைத்திருப்போம் அல்லவா? அதே போல மொபைலுக்கென்று ஒரு இடத்தில் வையுங்கள்.

மொபைலை வெகு அருகில் வைத்திருப்பதே மொபைல் அடிமைத்தனத்தின் முக்கிய காரணம். மொபைல் அருகாமையை தவிருங்கள்.

 

 

28

பார்வையிலிருந்தே அகற்றுங்கள்

ரு குடிகாரருடன் பேசுவோம்.

ஏம்பா. இப்படி குடிகாரனா இருக்கியே. எது உன்ன குடிக்க தூண்டுது?

சார். நான் வீட்டுலதான் இருப்பேன். டிவில சாராய பாட்டில காமிச்சாலே குடிக்கிற எண்ணம் வந்துரும். டிவில ரெண்டு பேரு குடிக்கிறமாரி காமிச்சாலே குடிக்கிற எண்ணம் வந்துரும். அவ்வளவு ஏன் சார், ரோட்டுல பாட்டில் கீழ கிடந்தத பார்த்தாலே குடிக்கிற எண்ணம் வந்துரும்.

இவர் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது.

மது பாட்டிலை பார்ப்பது > வாங்குவது > குடிப்பது > போதை அடைவது என்ற தொடர்ந்த மதுப் பழக்கத்தால், மது அடிமைத்தனத்தில் உள்ளவர்களுக்கு, மது பாட்டிலை பார்த்தாலே அடுத்து போதை வரப்போகிறது என மூளையை தூண்டிவிடுகிறது. இது மது பாட்டிலை பார்த்தாலே, ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல, அடுத்து குடிக்க அவரை தூண்டுகிறது.

மொபைல் அடிமைத்தனத்திலும் முக்கிய தூண்டல் காரணி மொபைலேதான். உங்கள் பார்வையிலுள்ள மொபைல் உங்களை மறைமுகமாக தூண்டிக் கொண்டே இருக்கும்.

மொபைல் உங்கள் அருகிலே இருக்கிறது. உங்களை மறைமுகமாக தூண்டுகிறது. ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல உங்கள் கைகள் நீள்கிறது. மொபைலை எடுக்கிறீர்கள். அதில் முழ்குகிறீர்கள். சந்தோசம் அடைகிறீர்கள்.

உங்கள் மூளையில் மொபைல் அடிமைத்தனம், மொபைலை பார்ப்பது > எடுப்பது > முழ்குவது என பதிந்து விடுகிறது.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள எளிய வழி, அதன் முதல் நிலையான, பார்ப்பதிலிருந்தே மொபைலை அகற்றிவிடுவது தான்.

பார்ப்பதிலிருந்து அகற்றுவது எப்படி? எளிது. நம் கண் பார்வையிலிருந்து அகற்றிவிடுவது.

மொபைல் உங்கள் கண் பார்வையிலேயே எப்போதும் உள்ளது. அதை அருகிலுள்ள பை, மேசை அறையில் மறைவாக வையுங்கள். ஒரு தாள் அல்லது நோட்டாவது அதன் மேல் வையுங்கள். உங்கள் கண் பார்வையிலிருந்து அகற்றுங்கள்.

கண் பார்வையிலிருந்து அகற்றுதல் எளிய வழிதான்.

ஆனால் உங்கள் மொபைல் தூண்டலின் முதல் படியிலேயே மொபைல் அடிமைத்தன சங்கிலியை அறுத்து விடுவது அதுதான்.

 


29

மொபைலை சிறை வையுங்கள்

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளும் துவக்க காலத்தில் நீங்கள் செய்யும் பயிற்சி.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொபைலை வைத்துவிடுங்கள். இத்தனை மணி நேரம் மொபைலை எடுக்க மாட்டேன் என உறுதி எடுங்கள். முடிந்தால் எழுதி அருகிலேயே வைத்துவிடுங்கள்.

அல்லது, உங்கள் நண்பர், வீட்டில் உள்ளவர்களிடம் மொபைலை கொடுத்து விடுங்கள். இத்தனை மணி நேரம் கழித்து வாங்கி கொள்கிறேன் என சொல்லுங்கள்.

இது மொபைலை சிறை வைத்தல்.

முதலில் மொபைல் இல்லாமல், உங்கள் மனம் மொபைலை எடுக்க அலை பாயும். மொபைலை பார்க்க எண்ணங்கள் கொந்தளிக்கும். ஆனால் பின் அடங்கிவிடும். மொபைல் இன்றியும் இயல்பாக இருப்பீர்கள். இது தற்காலிக கட்டுபாடு மட்டுமே ஆகும்.

துவக்க காலத்தில் இந்த பயிற்சியை செய்தாலும், மொபைல் மீது உங்களுக்கு கட்டுப்பாடு வரவர, பின் நீங்கள் மொபைலை ஏதோ ஒரு இடத்திலோ, பிறரிடமோ சிறை வைக்க தேவையில்லை. உங்களிடம் இருந்தாலும் கட்டுப்பாடாய் இருக்க பழகி விடுவீர்கள்.

 

 

30

தன் உணர்வோடு மொபைலை  தொடுங்கள்

நீங்கள் மொபைலை எடுக்கிறீர்கள். முகநூல், வாட்சப், டிக்டாக் என சமூக வலைதளங்களில் உலவ துவங்குகிறீர்கள். சிறிது நேரத்தில் அதில் மூழ்கி விடுகிறீர்கள். ஒரு மணி நேரம் ஓடி விடுகிறது. மீள்கிறீர்கள். மீண்டும் சிறிது நேரம் கழித்து மொபைலை எடுக்கிறீர்கள். உலவ ஆரம்பிக்கிறீர்கள். மூழ்குகிறீர்கள்.

தன்னுணர்வற்று மொபைலில் முழ்குவது மொபைல் அடிமைத்தனத்தின் முக்கிய பண்பாகும்.

மொபைல் பார்ப்பதில் தன் உணர்வை வளர்த்துக் கொள்வது எப்படி?

அமைதியான சூழலில் மனதை தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைலை எடுங்கள். அதன் வடிவத்தை பாருங்கள். அதன் திரை, அதன் பின் அமைப்பை பாருங்கள். பொறுமையாக பாருங்கள்.

நீங்கள் பயன்படுத்தாதபோது சாதாரணமாக இருக்கும் இது தான் உங்களை எளிதில் அடிமைப்படுத்தி, சமூக வலைதளங்களில் மூழ்கடித்து விடுகிறது என சொல்லிக் கொள்ளுங்கள். இப்போது சமூக வலைதளங்களை திறங்கள். அதில் கவனம் செலுத்தாமல் வெறுமனே பாருங்கள். மனதை அதில் மூழ்கடிக்காமல் வெறுமனே பாருங்கள்.

இந்த சமூக வலைத்தளங்கள் தான் உங்களை அடிமைப்படுத்தி, உங்கள் வாழ்வை ஆக்கிரமித்து இருக்கிறது என சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் நேரம், கல்வி, வேலை, கவனத்தை பாதித்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என சொல்லிக் கொள்ளுங்கள்.

தன்னுணர்வற்று இதில் மூழ்கும் நிலை மாறி, மொபைலை எடுக்கும்போது தன்னுணர்வோடு பயன்படுத்துவேன், சமூக வலைதளங்களை தன்னுணர்வோடு பயன்படுத்துவேன் என சொல்லிக் கொள்ளுங்கள். தன்னுணர்வோடு மொபைலை பயன்படுத்துவதன் மூலம் மொபைல் அடிமைத்தனத்தில் இருந்து மீள்வேன் என சொல்லிக் கொள்ளுங்கள்.

ஒருநாளை காலை, மதியம், மாலை மூன்று முறையும் சில நிமிடங்கள் இப்படி செய்து பாருங்கள்.

மொபைலில் மூழ்கி விடாமல் தன்னுணர்வோடு பயன்படுத்தும் மனிதராக மாறி விடுவீர்கள்.

 

 

31

உங்களுக்கு தேவை - உள் உரையாடல்

ள் உரையாடல் என்பது தினமும் நாமே நம் மனதுக்குள் பேசிக்கொள்வதாகும். இதில் நாம் நம் சிக்கல்களை ஆழ்ந்து ஆராய்கிறோம். எப்படி சமூக வலைதளங்கள் நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் அன்றாட வாழ்வு எப்படி பாதிக்கப்படுகிறது. கல்வி, வேலை எப்படி பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து விடுபட என்ன முயற்சிகள் எடுக்கிறோம். பயனளித்ததா என உள்முகமாக நமக்குள் நாமே பேசிக் கொள்கிறோம்.

 

ஒரு உள் உரையாடல் - உதாரணம்

சமூக வலைத்தளங்களை நம்மை பாதிக்கிறதா?

ஆம். பாதிக்கிறது. காலையில் எழுந்தவுடன் அதன் முகத்தில்தான் விழிக்கிறேன். முதல் வேலையாக மொபைலைத் தான் தேடுகிறேன்.

அப்புறம்?

கிளம்பும் முன்வரை அதில் தான் மூழ்கி கிடக்கிறேன். காலை 9 மணி ஆவதற்குள் 1 மணி நேரமாவது அதில் செலவிடுகிறேன்.

அதோடு விட்டாச்சா?

பயணம் செய்யும்போதும் சமூக வலைதளங்களில்தான் மூழ்கியிருக்கிறேன். கல்லூரியில் இருந்தாலும் அடிக்கடி அதை பார்ப்பதே கட்டாயமாக உள்ளது.

வேலை பார்க்கிற இடத்தில்?

தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்லை. நடுநடுவே மொபைலை திறக்கிறேன். மொபைலில் மூழ்குவது வழக்கமாகி விட்டது. இதில் மூழ்கி கிடைப்பதால் என் வேலையும் பாதிக்கப்படுகிறது.

சரி. குடும்பத்தோடு நேரம் செலவு பண்ண முடியுதா?

அவர்கள் பேச வந்தாலும் எனக்கு இந்த மொபைலில் அரட்டை அடிப்பதே பிடித்திருக்கிறது. குடும்பத்தோடு பேசுவது, வெளியே செல்வது இல்லை. சமூக வலைதளங்கள் தான் கதியாக இருக்கிறேன்.

ஒருநாள் எப்படித்தான் முடியுது?

இரவு 12 மணிக்கு தூங்குகிறேன். தூங்கும்முன் வரை மொபைலில் மூழ்கிவிட்டுதான் தூங்குகிறேன்.

இப்படி தொடர்ந்து உள் உரையாடல் மூலம் நம் பிரச்சனைகளின் தீவிரத்தை நமக்குள்ளே பேசிக் கொள்கிறோம். ஆராய்கிறோம். விடுபட வழி தேடுகிறோம்.

  

 

32

பதுங்கும் புலி

மூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடிவு செய்து விட்டீர்கள். உறுதிமொழி எடுக்கிறீர்கள். முகநூலை விட்டு விலகியும் இருக்கிறீர்கள். சமூக வலைதளங்களை கட்டுப்பாடோடு பயன்படுத்துகிறீர்கள்.

இப்போது சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் எனலாமா? இல்லை. உங்கள் மன ஆழத்தில் இதுநாள் வரை நீங்கள் தொடர்ந்து வந்த பழக்கத்தின் தீவிரம் மறைந்திருக்கும். ஏக்கம் இருக்கும். சிலநேரம் கவனக் குறைவாக இருக்கும்போது, மீண்டும் நீங்கள் சமூக வலைதளங்களை ஆர்வமாக பார்க்க துவங்குவீர்கள். உங்களை அறியாமல் மூழ்கி போவீர்கள்.

இம்முறை சமூக வலைதளங்களில் முன்னைவிட தீவிரமாக மூழ்கி போவீர்கள். உங்கள் மனம் தீவிர ஆசையோடு சமூக வலைதளங்களில் மூழ்கி போகும்.

ஒரு அடிமைத்தன பழக்கம் சிலநாள் தடைபட்டால் அது முன்னைவிட இன்னும் தீவிரமாக பற்றிக் கொள்ளும். இதன் பெயர் மீண்டும் தீவிரமாக பற்றும் பண்பாகும்.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த ஆரம்பிக்கும் போது, அது பதுங்கும் புலியாகிறது. நீங்கள் கவனக் குறைவாக இருக்கும்போது மீண்டும் பாய்ந்து முன்னை விட அதிகமாக உங்களைப் பற்றி விடுகிறது.

இதை உணர்ந்து, தொடர்ந்து கட்டுப்பாடோடு இருப்பது சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபட முக்கியமானதாகும்.

 

 

33

மது அடிமையும், சமூக வலைதள அடிமையும்

குடி வாழ்வை, குடும்பத்தை அழிப்பது தெரியும். குடிகாரர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பது தெரியும். ஆனால் சமூக வலைதள அடிமையும் அதே போல் அடிமையாக இருப்பது தெரியுமா?

குடிகாரர் முதலில் கட்டிங், 90 மில்லி என துவங்குவார். அது பின் குவார்ட்டர் ஆஃப், ஃபுல் என அதிகமாகும். சமூக வலைதள அடிமை முதலில் 15 நிமிடம், அரை மணி நேரம் என துவங்குவார். அது அதிகரித்து நாள் முழுதும் என அதிகமாகும்.

குடிகாரர் முதலில் இரவு மட்டும் குடிப்பார். பின் பகலில் இடையிடையே குடிப்பார். சமூக வலைதள அடிமையும் முதலில் மாலை, இரவு என துவங்குவார். பின் அதிகமாகி பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாள் முழுதும் சமூக வலைதள அடிமையாக முழ்கி கிடப்பார்.

குடிகாரர் நள்ளிரவு உறக்கத்தில் இருந்து விழித்தால், அப்போதும் ஒரு கட்டிங் போட்டுவிட்டு படுப்பார். சமூக வலைதள அடிமையும் இரவு தூக்கத்தில் விழித்தால் மொபைலை திறந்து சமூக வலைதளங்களில் எட்டி பார்த்துவிட்டு படுப்பார்.

குடிகாரருக்கு காலை எழுந்தவுடன் சரக்கை உள்ளே தள்ளியாக வேண்டும். சமூக வலைதள அடிமையும் காலை எழுந்த முதல் வேலை சமூக வலைதளங்களை திறந்து பார்த்தே ஆக வேண்டும்.

குடிகாரருக்கு மஞ்சள் காமாலை, இதய நோய், பக்கவாதம், விபத்து என எல்லா ஆபத்தையும் விளக்கினாலும் குடியை விட முடியாமல் குடித்துக் கொண்டே இருப்பார். சமூக வலைதள அடிமையும் நேர இழப்பு, கல்வி பாதிப்பு, வேலை பாதிப்பு, உடல்நல குறைவு என எதை விளக்கினாலும் விட முடியாமல் தொடர்ந்து மொபைல் அடிமையாகவே இருப்பார்.

குடிகாரர் இனி குடியை தொடமாட்டேன் என சத்தியம் செய்வார். ஒரு நாள், இரு நாள் தாக்கு பிடிப்பார். மீண்டும் குடியில் முழ்கி விடுவார். சமூக வலைதள அடிமையும் இனி மொபைலை தொட மாட்டேன் என சத்தியம் செய்வார். ஓரிரு நாள் தான். மீண்டும் மொபைல் அடிமையாகி விடுவார். சமூக வலைதளங்களில் மூழ்கி விடுவார்.

குடிகாரர் சாலையில் தள்ளாடி வருவார். ஓரமாக விழுந்து கிடப்பார். சமூக வலைதள அடிமையும் சாலையில் சமூக வலைதளங்களில் முழ்கி நடப்பார். சாலை ஓரமாக நிற்கும் இடங்களிலும் மொபைலில் மூழ்கி நிற்பார்.

குடிகாரர் குடி போதையில் வண்டி ஓட்டுவார். விபத்தை உண்டாக்குவார். சமூக வலைதள அடிமையும் வண்டி ஓட்டும்போதும் சமூக வலைதளங்ளை பார்த்துக் கொண்டு வருவார். விபத்தை உண்டாக்கி விடுவார்.

குடிகாரரும் தன் குடி அடிமை பற்றி உள்முகப்பார்வை பெறுவதில்லை.. குடி அடிமை என ஒத்து கொள்ளவதில்லை. சமூக வலைதள அடிமையும் உள்முகப்பார்வை பெறுவதில்லை. ஒரு சமூக வலைதள அடிமை என ஒத்துக் கொள்ளுவதில்லை.

குடி அடிமையும், சமூக வலைதள அடிமையும் ஒரே தன்மை கொண்டவர்களே. ஒற்றுமை கொண்டவர்களே

 

 

34

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விலகிய ஒரு வாழ்க்கை

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விலகுவது எப்படி? மொபைல் உங்கள் வாழ்க்கையின் எத்தனை இடங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது என பாருங்கள். அதிலிருந்து வெளியேறுங்கள்.

தூங்கி எழுந்த முதல் வேலையாக மொபைலை திறப்பீர்கள். நிறுத்துங்கள். காலை 9 மணி வரை மொபைலை திறக்க மாட்டேன். சமூக வலைதளங்களை பார்க்க மாட்டேன் என உறுதி எடுங்கள்.

பயணம் செல்லும்போது மொபைலில் மூழ்கியபடியே செல்வீர்கள். நிறுத்துங்கள். பயண நேரத்தில் உங்களை சுற்றி பாருங்கள். சக மனிதர்களுடன் பேசுங்கள். உங்களை சுற்றியுள்ள சமூகத்தை கவனியுங்கள். எதுவும் இல்லையா, மனதை ஓய்வாக வைத்து கொள்ளுங்கள்.

கல்லூரியில் இருப்பீர்கள். பாடத்தில் கவனம் இல்லாமல் மொபைலில் மூழ்கி இருப்பீர்கள். நிறுத்துங்கள். பள்ளி, கல்லூரி கல்வி கற்கும் இடம். கல்வியை கற்போம். மொபைலை மூடுவோம் என உறுதி கூறுங்கள்.

அலுவலகத்தில் வேலையில் இருப்பீர்கள். வேலை நேரத்தில் மொபைலில் மூழ்கி இருப்பீர்கள். நிறுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் வேலையை தரமாக செய்ய வேண்டும் என உறுதி கூறுங்கள்.

மாலைப் பொழுதுகளில் குடும்பத்துடன் பேச மாட்டீர்கள். நண்பர்களோடு பேச மாட்டீர்கள். உங்களை முன்னேற்றிக் கொள்ளும் செயல்களை செய்ய மாட்டீர்கள். வெளியே நடை பயிற்சி செல்ல மாட்டீர்கள். மொபைலில் மூழ்கி இருப்பீர்கள். நிறுத்துங்கள். குடும்பத்தினரோடு பேசுங்கள். நண்பர்களோடு பேசுங்கள். சமூக வலைதளங்களின் மாய உலகை விட்டு, மெய் உலகில் உங்கள் உறவுகளோடு பேசுங்கள். அவர்களோடு வெளியே செல்லுங்கள்.

எந்த வேலையும் செய்யாமல் மொபைலில் முழ்கி இருப்பீர்கள். நிறுத்துங்கள். மொபைலை தவிர்த்துவிட்டு உங்களுக்கு பிடித்த செயல்களை திட்டமிடுங்கள். செய்யுங்கள்.

இரவு உறங்குவதை தள்ளிப்போட்டு வெகுநேரம் மொபைலில் மூழ்கி இருப்பீர்கள். 12 மணி, 1 மணி என நள்ளிரவு வரை விழித்து கொண்டிருப்பீர்கள். நிறுத்துங்கள். 9 மணியோடு மொபைலை மூடி விடுவேன். நேரத்திற்கு உறங்குவேன் என உறுதி கூறுங்கள்.

  

 

35

ஒரு நோட்டு, ஒரு பேனா

மூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டோம். ஆனால் அதை செயல்படுத்துவது எப்படி?

வெறுமனே உறுதிமொழி மட்டும் எடுத்தால், ஒரு 3 மணி நேரம் அல்லது ஒரு நாள் இருப்போம். அடுத்தநாள் சமூக வலை தளங்களில் எட்டிப் பார்ப்போம். மீண்டும் அதில் மூழ்கி விடுவோம்.

அப்புறம் மீண்டும் ஒரு உறுதிமொழி. மீண்டும் எட்டிப் பார்த்தல். முழ்குதல். பின் உறுதி மொழியையே மறந்து விடுவோம்.

ஆக, சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல் ஒரு அறிவியல் பூர்வமாக நாம் மேற்கொள்ளும் பயிற்சியே ஆகும்.

இதற்கு ஒரு நோட்டு, ஒரு பேனா தேவை. ஒரு நோட்டு, ஒரு பேனா அதை வைத்து நாம் செய்யும் தொடர்ச்சியான பயிற்சிகளே சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும்.

  

 

36

முகநூல் நேர அட்டவணை பதிவேடு

ரு நோட்டு, ஒரு பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை முதல் எந்தெந்த நேரம் சமூக வலைதளத்தில் நுழைகிறீர்கள். எத்தனை முறை நுழைகிறீர்கள். ஒவ்வொரு முறையும் எவ்வளவு நேரம் அதில் மூழ்கி இருக்கிறீர்கள் என தொடர்ச்சியாக குறியுங்கள்.

 

முகநூல் நேர அட்டவணை

வரிசை

நேரம்

அளவு

1

6.30 AM

30 நிமிடம்

2

8.30 AM

20 நிமிடம்

3

10 AM

1 மணி நேரம்

4

1 PM

1 மணி நேரம்

 

ஒரே ஒரு நாள் இதை செய்தாலே ஒரு நாளில் நூறு முறை சமூக வலைதளங்களில் நுழைவதை உணரலாம். எவ்வளவு நேர இழப்பை சந்திக்கிறீர்கள் என உணரலாம்.

சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் மீளும்போது, இதில் முன்னேற்றத்தையும் உணரலாம்.

தொடர்ச்சியாக இந்த பயிற்சியை செய்வது சமூக வலைதள அடிமைத்தனத்தின் தீவிரத்தை உணர்த்தும். அதிலிருந்து உங்களை விடுவிக்கும்.

 

 

 

37

தானே தோன்றும் சிந்தனைகள்

நீங்கள் முகநூலில் அடிமையாய் இருக்க காரணம் நீங்கள் அல்ல, உங்கள் மனதில் தோன்றும், தானே தோன்றும் சிந்தனைகள் தான். குழப்பமாக இருக்கிறதா?

சிந்தனைகள் ஒன்று நீங்களே சிந்திக்கும் சிந்தனைகள். இன்னொன்று உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானே தோன்றும் சிந்தனைகள்.

உதாரணமாக ஒரு இடத்தில் அமைதியாக உட்காருங்கள். கண்களை மூடி ஐந்து நிமிடம் இருங்கள். இப்போது மனதில் உங்கள் கட்டுப்பாடில் இல்லாமல், நீங்கள் நினைக்காமல், தானே சிந்தனைகள் தோன்றி தோன்றி மறைவதை காணலாம். இவை தானே தோன்றும் சிந்தனைகள்.

முகநூல் அடிமைத்தனத்தில் உள்ளவர்களுக்கு, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவர்களை மீறி, இந்த தானே தோன்றும் சிந்தனைகள் முகநூல் தொடர்பாக வரும். படிக்கும்போது, சும்மா இருக்கும்போது இப்போது முகநூலில் என்ன நடக்கும், வாட்சப்பில் என்ன இருக்கும் என முகநூல், வாட்சப் பற்றிய சிந்தனைகள் தோன்றும் பார்க்க தூண்டும். தன்னிச்சையாக நீங்கள் முகநூல், வாட்சப்பை திறந்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

தானே தோன்றும் சிந்தனைகள் > முகநூல் பார்த்தல் > முகநூலில் மூழ்குதல் > மீளுதல். மீண்டும் தானே தோன்றும் சிந்தனைகள் > முகநூல் பார்த்தல் > முகநூலில் மூழ்குதல், மீளுதல். இப்படி தொடர்ந்து முகநூலை பார்க்க வேண்டும் என அலைகள் போல் மீண்டும் மீண்டும் வருபவை இந்த தானே தோன்றும் சிந்தனைகள்.

இந்த தானே தோன்றும் சிந்தனைகளே உங்களை தொடர்ந்து முகநூல் அடிமைத்தனத்தில் வைத்திருக்கின்றன.

 

 

38

தானே தோன்றும் சிந்தனைகளை கவனித்தல்

மொபைல் அடிமைத்தனம், சமூக வலை தளங்களில் மூழ்குவது எப்படி துவங்குகிறது? அது நம்மை அறியாது தானே தோன்றும் சிந்தனைகளிலிருந்து துவங்குகிறது. மொபைலை எடுக்க வேண்டும் என நம்மை அறியாது உருவாகும் தானே தோன்றும் சிந்தனைகளிலிருந்து துவங்குகிறது.

நம் சுய உணர்வு என்பது, உள்முகப்பார்வை என்பது நம்முள் உருவாகும் தானே தோன்றும் சிந்தனைகளை கவனிப்பதே ஆகும்.

நாம் சும்மா இருப்பதிலிருந்து மொபைலை எடுப்பதற்கு முன், சமூக வலைதளங்களில் நுழைவதற்கு முன், இந்த தானே தோன்றும் சிந்தனைகளை கவனித்து எதிர்வினை ஆற்ற வேண்டும். இந்த தானே தோன்றும் சிந்தனைகளே நம்மை மொபைல் அடிமைத்தனத்தில் தள்ளுகின்றன, சமூக வலை தளங்களுக்குள் தள்ளுகின்றன என நம் மனதுக்குள் எதிர் சிந்தனைகளாக சொல்லிக் கொள்ள வேண்டும்.

இந்த தானே தோன்றும் சிந்தனைகளுக்கு பலியானால் நாம் மீண்டும் மொபைல் அடிமையாவோம், சமூக வலைதள அடிமையாவோம் என சொல்லிக் கொள்ள வேண்டும்.

மொபைலை எடுக்க வேண்டும், சமூக வலை தளங்களை பார்க்க வேண்டும் என்கிற இந்த தானே தோன்றும் சிந்தனைகளுக்கு பலி ஆகாததன் மூலம் நாம் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோம் என சொல்லிக் கொள்ள வேண்டும்.

 

 

39

தானே தோன்றும் சிந்தனைகளை தோற்கடித்தல்

எதிர் சிந்தனைகளின் வலிமை

நாம் சொல்லிக் கொள்ளும் எதிர் சிந்தனைகளே நம்மில் தோன்றும், தானே தோன்றும் சிந்தனைகளை தோற்கடிக்கும். மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும். சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்.


 

40

முகநூல் சிந்தனை பதிவேடு

முகநூல் சிந்தனை பதிவேடு மிக முக்கியமானது. இது உங்கள் சிந்தனைகளை, எதிர் சிந்தனைகளை பதிய உதவுகிறது. முகநூல் அடிமைத்தனத்தில் இருந்து மீளும் பயிற்சியாக உதவுகிறது.

நேரம், சிந்தனை, எதிர் சிந்தனை, விளைவு, குறிப்பு என ஐந்து வரிசைகளை வையுங்கள்.

நேரம் - ஒரு நாளில் எந்த நேரம்.

சிந்தனை - உங்கள் மனதில் தோன்றும் முகநூலை பார்க்க வேண்டும் என்கிற சிந்தனை.

எதிர் சிந்தனை - அப்போது நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் அறிவுரைகள்.

விளைவு - முகநூல் பார்த்தீர்கள் (அல்லது) முகநூல் பார்க்கவில்லை.

குறிப்பு - உங்கள் எதிர் சிந்தனைகளால் நீங்கள் முகநூலை பார்க்கவில்லை. வெற்றி (அல்லது) எதிர் சிந்தனைகளை சொல்லவில்லை. முகநூலில் மூழ்கிவிட்டீர்கள். தோல்வி

 

41

முகநூல் சிந்தனை பதிவேடு - உதாரணம்

 

 

 

42

முகநூல் சிந்தனை பதிவேடு சொல்வதென்ன?

ங்கள் சிந்தனை, எதிர் சிந்தனைகளை தொடர்ந்து பதிவு செய்வதன் மூலம், முகநூல் பற்றிய சிந்தனைகள் எத்தனை முறை தீவிரமாக உங்களை அறியாமல் வருகின்றன, அதை கவனித்து அடிமைத்தனத்திலிருந்து விடுபட எதிர் சிந்தனைகளை நீங்கள் எத்தனை முறை சொல்லிக் கொள்கிறீர்கள், உங்கள் முகநூல் பார்க்க தூண்டும் சிந்தனைகளை கட்டுப்பாடோடு இரு, நேரம் வீணாகும், படிப்பு கெடும், வேலைத்திறன் குறையும், முன்னேற்றம் பாதிக்கும் என எதிர் சிந்தனைகளை சொல்லி எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதை சிந்தனை பதிவேடு வெளிப்படுத்தும்.

நீங்கள் எதிர் சிந்தனைகளை சொல்லாததால், எத்தனை முறை முகநூல் பார்க்க தூண்டும் சிந்தனைகள் உங்களை வீழ்த்தி முகநூலை பார்க்க வைத்தது. சமூக வலை தளங்களில் மூழ்கடித்தது என்பதையும் சிந்தனை பதிவேடு வெளிப்படுத்தும்.

இந்த சிந்தனை பதிவேட்டை நீங்கள் தொடர்ந்து எழுதுவதன் மூலம், முகநூல் பார்க்க தூண்டும் சிந்தனைகளை கட்டுப்படுத்தும் எதிர் சிந்தனைகளை சொல்ல பயற்சி பெறுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டை சொல்லும் எதிர் சிந்தனைகள் வலிமை ஆகின்றன.

சிந்தனை பதிவேடை சிந்தனை, எதிர் சிந்தனை என எழுதி வந்தாலும், சில காலத்தில் சிந்தனை பதிவேடு இன்றி, உங்கள் மனத்திற்குள்ளேயே எதிர் சிந்தனைகளை வலிமையாக சொல்லிக்கொண்டு முகநூல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட கற்று விடுவீர்கள். எதிர் சிந்தனைகள் ஒரு பயிற்சியாகவே மாறிவிடும். உங்கள் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடும்.

 

 

43

நீங்கள் அறியாத கட்டாய உணர்வு

மொபைல் அடிமைத்தனத்தில் நாம் அறியாத ஒரு உணர்வு இந்த கட்டாய உணர்வு.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள நாம் முயற்சிகள் எடுக்கும் நிலையில், எதிர் சிந்தனைகளால் மொபைலை எடுக்காமல் கட்டுப்படுத்திக் கொள்வோம்.

ஆனால் இத்தனை நாள் மொபைலில் மூழ்கிய நம் மனம், சமூக வலைதளங்களில் மூழ்கிய நம் மனம் எதிர்வினையாக நம்மை மீறி மொபைலை எடுக்க, சமூக வலைதளங்களை பார்க்க, ஒரு கட்டாய உணர்வை, அழுத்தத்தை தூண்டும்.

இது தொடர்ச்சியாக பல மாதங்கள், பல ஆண்டுகள் மொபைலில் மூழ்கியதால், அதை கட்டுப்படுத்துவதை மனம் ஏற்காது வரும் உணர்வாகும்.

நம்முள் ஏற்படும் இந்த கட்டாய உணர்வை கவனித்து அதற்கு பலியாகாமல், மொபைலை எடுக்காமல் இருப்பதும், சமூக வலைதளங்களை திறக்காமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள நம்முள் எழும் கட்டாய உணர்வை வெல்ல வேண்டும்.

 

 

44

கட்டாய உணர்வை வெல்வது எப்படி?

ட்டாய உணர்வு பதிவேடை பின்பற்றுவது மூலம் கட்டாய உணர்வை வெல்லலாம்.

கட்டாய உணர்வு பதிவேடு

மொபைலை பார்க்க வேண்டும் என்ற சிந்தனைகள் எழும்போது, முகநூல் பார்க்கவேண்டும் என்ற கட்டாய உணர்வு எழும்போது, நமக்குள்ளே நம்மை கட்டுப்படுத்திக்கொள்ள எதிர் சிந்தனைகளை சொன்னால், முகநூல் பார்க்கவேண்டும் என்ற கட்டாய உணர்வின் தீவிரம் குறைவதை காணலாம்.

நம்மை மொபைல் பார்க்க தூண்டும் கட்டாய உணர்வின் அழுத்தம், அதை நம் அறிவதன் மூலமும், நமக்குள் நாம் சொல்லிக் கொள்ளும் எதிர் சிந்தனைகள் மூலமும் தோற்கடிக்கப்படுகிறது.

 

 

45

மொபைல் அடிமைத்தனம் மீளுதல்   நாள் காட்டி

ரவு தூங்கும் முன் இந்த நாள்காட்டியை பாருங்கள்.

 இந்த வரைபடத்தில் கிடைமட்ட அச்சில் தேதிகளை குறித்து கொள்ளுங்கள். செங்குத்து அச்சில் மொபைல் அடிமை நிலை, மீண்ட நிலை என இரு நிலைகளை குறித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளின் முடிவில்,

இன்று மொபைல் அடிமையாக இருந்தீர்களா அல்லது மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நிலையில் இருந்தீர்களா என புள்ளிகளால் குறியுங்கள்.

மொபைல் அடிமை நிலை என்றால்,

காலை எழுந்தவுடன் மொபைலை பார்த்திருப்பது, கிளம்பும்வரை மொபைலில் முழ்கியிருப்பது, பயணத்தின் போது மொபைலில் முழ்கியிருப்பது, கல்லுரியில், வேலை பார்க்கும் இடங்களில் இடை இடையே சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது, இரவு உறங்கும் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது. தன் உணர்வின்றி சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது, மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளும் பயிற்சிகளை செய்யாமல் இருப்பது ஆகியவை.

 

மொபைலை அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நிலை என்றால்,

 இதற்கு மாறாக, மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் பயிற்சிகள் செய்திருப்பது, சுய உணர்வோடு மொபைலை பயன்படுத்தி இருப்பது, சுய உணர்வோடு சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருப்பது, பயணிக்கும்போது, கல்வி பயிலும்போது, வேலையை செய்யும்போது சமூக வலைதளங்களில் முழ்காதிருப்பது, சமூக வலைதளங்களை விட்டுவிட்டு உங்கள் முனேற்றத்திற்காக உங்கள் நேரத்தை, ஆற்றலை செயல்படுத்தி இருப்பது ஆகியவை.

தினமும் இரவு அடிமை நிலையா, மீண்ட நிலையா என குறிக்க நிமிட நேரம்தான் தேவை. ஆனால் அன்று நீங்கள் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட பயிற்சிகள் செய்தீர்களா, சுய உணர்வோடு மொபைலை, சமூக வலைதளங்களை பயன்படுத்தினீர்களா, சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீண்டீர்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் முறை இதுவே ஆகும்.

 

 

46

மொபைல் கட்டுப்பாடு செயலிகள் - ஒரு எளிய தீர்வு

ங்கள் மொபைல் பயன்பாட்டை அளவிடும், உங்களுக்கு சொல்லும் செயலிகள் வந்து விட்டன. அதை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது. இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த செயலிகள், ஒரு நாளில் எவ்வளவு நேரம் மொபைலை பயன்படுத்தினீர்கள். என்னென்ன வகைகளில் மொபைலை பயன்படுத்தினீர்கள்.

அதாவது,

முகநூலில் எவ்வளவு நேரம்,

டிக்டாக்கில் எவ்வளவு நேரம்,

வாட்சப்பில் எவ்வளவு நேரம்,

மொபைல் கேமில் எவ்வளவு நேரம்,

இதர வகைகளில் எவ்வளவு நேரம்,

என வகைவாரியாக நீங்கள் மொபைலில் மூழ்கி கிடந்ததை சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் இதை சொல்வதோடு கடந்த ஒரு வார தரவுகளையும் சொல்கின்றன. நீங்கள் செய்யவேண்டியது இந்த செயலிகளை அவ்வப்போது திறந்து, அன்றைய நாளில், எவ்வளவு நேரம் மொபைலில் செலவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்வதுதான்.

மொபைலில் மூழ்கி கிடக்கிறோம் என பொத்தாம்பொதுவாக நினைப்பதை விட இந்த செயலிகள் மூலம், எவ்வளவு நேரம் மூழ்கி கிடந்தோம் என்பதையும், என்னென்ன வகைகளில் மூழ்கி கிடந்தோம் என்பதையும் அறிந்தால், உங்கள் மொபைல் அடிமைத்தனத்தின் தீவிரம் புரியும். அதிலிருந்து விடுபட உணர்வு வரும். முயற்சிகளை தொடங்குவீர்கள்.

நீங்கள் இந்த செயலிகளை தினமும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இவ்வளவு நேரத்திற்கு மேல் மொபைலை பார்க்கக் கூடாது. முகநூல் இவ்வளவு நேரம், வாட்சப் இவ்வளவு நேரம், டிக்டாக் இவ்வளவு நேரம், இதர வகைகள் இவ்வளவு நேரம், மொத்தத்தில் இவ்வளவு நேரம் என உங்களுக்கு எல்லைகள் வகுக்க வேண்டும். அதை இந்த செயலிகள் மூலம் கவனிக்க வேண்டும்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து, சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து விடுபட இந்த செயலிகள் எளிய வழியாக உதவுகின்றன.

 

 

47

மொபைல் கட்டுப்பாடு செயலிகள்

மொபைல் கட்டுப்பாடு செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் சமூக வலைதள செயல்பாடுகளை கவனிக்கலாம். எவ்வளவு நேரம் மொபைலில் மூழ்கி இருக்கிறோம். என்னென்ன சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் முழ்கி இருக்கிறோம் என கவனிக்கலாம். எப்படி குறைக்கலாம் என திட்டமிட்டு கண்காணிக்கலாம்..

 

 

48

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளும் நிகழ்வுகள் - சரிபார்த்தல் அட்டவணை

12 கேள்விகள் அட்டவணை. தினமும் இந்த அட்டவணையை எழுதிக் கொள்ளுங்கள்.

இந்த 12 கேள்விகளும் உங்கள் மொபைல் அடிமைத் தனத்தை பற்றிய கேள்விகளாகும்.

மொபைல் அடிமைத்தனத்தில் உள்ள நிலை.

முதல் 7 கேள்விகள் - ஆம்.

கடைசி 5 கேள்விகள் - இல்லை.

மொபைல் அடிமைத்தனத்தில் மீளும் நிலை.

முதல் 7 கேள்விகள் - இல்லை.

கடைசி 5 கேள்விகள் - ஆம்.

ஒவ்வொரு நாள் இரவும் இதை கவனியுங்கள். பதிலளியுங்கள். மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதில் எந்த நிலையில் உள்ளீர்கள். எந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என தெரியும்.

 

 

49

சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீளும் பயிற்சிகள்

தினமும் இந்த பயிற்சிகள் தொகுப்பை படியுங்கள். நினைவில் ஏற்றுங்கள்.

 

பயிற்சிகள்:

·      மொபைல் அருகாமையை குறைத்தல்.

·      மொபைலை பார்வையிலிருந்தே அப்புறப்படுத்தல்.

·      நம் சமூக வலைதள செயல்பாடுகளை சுய உணர்வோடு கவனித்தல்.

·      உள் உரையாடல்.

·      தானே தோன்றும் சிந்தனைகளை கவனித்தல், தோற்கடித்தல் பயிற்சி.

·      முகநூல் நேர அட்டவணை பதிவேடு எழுதுதல்.

·      சிந்தனை, எதிர் சிந்தனை பயிற்சி செய்தல் & முகநூல் சிந்தனை பதிவேட்டை எழுதுதல்.

·      கட்டாய உணர்வை தோற்கடித்தல் & கட்டாய உணர்வு பதிவேட்டை எழுதுதல்.

·      இரவு - சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீளும் நிகழ்வுகளை சரிபார்த்தல்.

·      இரவு - சமூக வலைதள அடிமைநிலையா, மீண்டநிலையா - புள்ளியை குறித்தல்.

·      மொபைல் கட்டுப்பாடு செயலிகளை கவனித்தல்.

சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீளும் இந்த பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தால், நீங்கள் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது உறுதி.

 

 

50

மொபைல் அடிமைத்தனம் குழந்தைகள்

ன்று இரண்டு வயது குழந்தை மொபைல் போனோடு உட்கார்ந்திருப்பதை பார்க்கிறோம். சிறுவர்கள் மொபைலில் வீடியோ கேம், Youtube என மூழ்கி இருப்பதை பார்க்கிறோம். மொபைலை பிடுங்கினால் கதறி கதறி அழும் குழந்தைகள் ஏராளம். பெற்றோர் ஒருபுறம் மொபைலில் மூழ்கி இருக்க, குழந்தைகள் இன்னொரு புறம் மொபைலில் மூழ்கி இருப்பது இன்று எங்கும் காணும் காட்சியே.

பெரியவர்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளின் மொபைல் பழக்கம் வித்தியாசமானது. ஆபத்தானது.

20 வயதில் மொபைலை பயன்படுத்தும் ஒருவர், 30 வயதில் 10 வருட மொபைல் அடிமைத்தனத்தை பெற்று சிக்கியிருப்பார். 2 வயதில் மொபைலை எடுக்கும் குழந்தையோ, 12 வயதிலேயே 10 வருட மொபைல் அடிமைத்தனத்தை பெற்று வருகிறது. 12 வயதிலேயே தீவிர அடிமைத்தனத்தில் சிக்கி விடுகிறது.

சிறுவயதில் துவங்கும் மொபைல் பழக்கமானது வளரும் குழந்தையின் மூளையின் ஒரு அங்கமாகவே ஆகிறது.

2 வயதிலிருந்து 18 வயது வரை, மூளை வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி என்கிற முக்கிய வளர்ச்சி கட்டத்தில், மொபைல் குழந்தைகள், சிறுவர்களின் ஆற்றலை சீரழித்து விடுகிறது. பண்பை மாற்றி அமைத்து விடுகிறது. தீவிர அடிமைத்தனத்தை உருவாக்கி விடுகிறது. எதிர் காலத்தை துவக்கத்திலேயே சிதைத்து விடுகிறது.

குழந்தைகள் மொபைல் அடிமைத்தனத்தில் விழ முக்கிய காரணம் அந்த குழந்தையின் பெற்றோரே மொபைல் அடிமையாய் இருப்பதாகும். அந்த வீட்டில் உள்ளவர்களே மொபைல் அடிமைகளாய் இருப்பதாகும்.

தன்னை சுற்றியுள்ளவர்கள் மொபைலில் மூழ்கிருப்பதை கவனிக்கும் குழந்தை தானும் அப்படியே பின்பற்றுகிறது. மொபைல் அடிமை பெற்றோர்கள் மொபைல் அடிமை குழந்தைகளை உருவாக்குகிறார்கள்.

குழந்தைகளை மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதில், அறிவுரை என்பது இரண்டாம் பட்சமே.

பழக்கத்தை மாற்றுவதே வெற்றி அளிக்கும். குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதை கண்டிப்போடு தடுப்பதே தேவை.

மொபைல் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க, அதனை கண்டிப்பது அவசியம். ஆனால் எந்த விதத்தில்?

குழந்தையை அடிப்பது, திட்டுவது என்பது தவறான அணுகுமுறை.

மாறாக குழந்தைகள் மொபைல் பார்ப்பதை கண்டிப்போடு கட்டுப்படுத்துங்கள். உங்கள் கண்டிப்பை மீறி மொபைலை எடுத்தால், அது கேட்கும் பொருளை வாங்கித்தர முடியாது என்று சொல்லுங்கள். அதற்கு பிடித்ததை செய்து தர முடியாது என சொல்லுங்கள். உங்கள் சொல்படி கேட்டாலே, அது கேட்பதை செய்வேன் என சொல்லுங்கள்.

மொபைல் பழக்கத்தில் உங்கள் சொல்படி கேட்கும் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். பாராட்டுங்கள்.

குழந்தைகள் சிறுவர்கள் மொபைல் பார்ப்பதை உங்கள் மேற்பார்வையில், உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற மென்மையான அணுகுமுறையே குழுந்தைகள், சிறுவர்களுக்கான அணுகுமுறையாகும்.

 

 

51

மொபைல் அடிமைத்தனமும் பெண்களும்

பெண்களில் மொபைல் அடிமைத்தனம் நம் உணர்வை பாதித்து உணர்வை மையப்படுத்தி தான் உருவாகிறது. பெண்கள் இயல்பிலேயே அதிக உணர்வு வழிபட்டவர்கள். பெண்களிடம் மொபைல் அடிமைத்தனம் இன்னும் தீவிரமாகவும், எளிதில் மீள முடியாததாகவும் உருவாகிறது.

அதிக உணர்வு வழிபட்டவர்களாய் இருப்பதால், உணர்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லாத சமூக வலைதளங்களில் இன்னும் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். தன் மொபைல் அடிமைத்தனத்தை பொதுவெளியில் பேசும் வாய்ப்பும் இல்லாததால் தீவிர அடிமைத்தனத்திலும் சிக்கி விடுகிறார்கள்.

முகநூல், டிக்டாக் அடிமைகளான பெண்கள், நாமே எதிர்பார்க்காத அளவில், ஒரு கட்டத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்துக் கொள்வதன் காரணம், அவர்கள் இயல்பிலேயே அதிக உணர்வு வழிப்பட்டவர்களாக இருப்பது தான்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள பெண்கள் அதிக கவனமும், கட்டுப்பாடும் கொண்டு மீளும் பயிற்சிகளை செய்வது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்பும், ஆதரவும், கண்காணிப்பும் பெண்கள் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள மிக தேவையாகின்றன.


 

52

மொபைல் அடிமைத்தனமும் முதியோர்களும்

முதியோர்களில் மொபைல் அடிமைத்தனம் நம் கவனத்தை ஈர்க்காத ஒன்று. வீட்டில் உள்ள முதியவர்கள் நம் அன்றாட வாழ்வை பாதிப்பதில்லை. அவர்கள் உழைத்து முடித்து விட்டார்கள் என கவனிக்க தவறுகிறோம். ஆனால் மொபைலால் முதியவர்களுக்கு பாதிப்பில்லாமல் உள்ளதா?

யாரும் கவனிப்பதாக இல்லாத நிலையில் முதியவர்கள் மொபைலில் தனிமையில் முழ்கி விடுகிறார்கள். வயதான மூளையில் இது சோர்வை எளிதில் ஏற்படுத்தி விடுகிறது. நினைவுத்திறன் இழப்பை எளிதில் ஏற்படுத்துகிறது.

பேரன் பேத்தி என பேசுவதை, விளையாடுவதை விட்டு மொபைலுக்குள் தனிமைப்பட்டு போவதால் குடும்பத்திலிருந்து விலகி போகிறார்கள். விளைவாக குடும்ப இளைய தலைமுறையினரும் அவர்களிடமிருந்து விலகி போகிறார்கள்.

முதியவர்கள் தன்னைவிட வயது குறைந்தவர்கள் அறிவுரையை கேட்கும் மனநிலையில் இல்லா திருந்தால், இது பிறரால் சொல்லப்பட முடியாத நிலைக்கும் போய்விடுகிறது.

குடும்பத்தோடு, நட்புகளோடு பேசுவதை தவிர்த்து, வெளியே செல்வதை தவிர்த்து மொபைலுக்குள் முழ்குவதால் புத்துணர்வை இழக்கிறார்கள். உடல் நோய்களுக்கும் உள்ளாகிறார்கள்.

அண்மைய ஆய்வுகள் சிறுவர்களுக்கு அடுத்த படியாக முதியவர்களில் மொபைல் அடிமைத்தனம் தீவிரமாக உள்ளதென கூறுகிறது.

முதியவர்களில் மொபைல் அடிமைத்தனம் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றும், சரி செய்யப்பட வேண்டிய ஒன்றும் ஆகும்.

 


53

புது சூழல்களுக்கு அஞ்சுபவர்கள்

ன சோர்வு, மன பதட்டம் உள்ளவர்கள் புதிய சந்தர்ப்பங்களில் பிறரோடு பழக தயங்குவர். புது சூழல்களை எதிர்கொள்ள தயங்குவர். மொபைலில் மூழ்குவது இவர்களுக்கு புது சூழல்களை தவிர்க்க நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

புதிய இடங்களிலும், புதிய மனிதர்களை சந்திக்கும் நேரங்களிலும் மொபைலை எடுத்துக் கொண்டு தனிமைப்படுத்திக் கொள்வார்கள். மொபைலில் பரபரப்பாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் புது சூழல்கள், புது மனிதர்களை எதிர்கொள்வதால் வரும் மனப் பதட்டத்தை தவிர்க்கவே இவர்கள் மொபைலில் மூழ்கி தனிமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

இதனால் இவர்கள் புது மனிதர்கள், புது சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள்.

புது மனிதர்கள், சந்தர்ப்பங்களை எதிர் கொள்ளும் போது தொடர்ந்து மனப்பதட்டம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். புது சூழல்களில், நம்மை தனிமைப்படுத்தி கொள்ளாமல் நாமாகவே முந்திக்கொண்டு உரையாடும் பழக்கத்தை துவங்க வேண்டும். முதலில் பதட்டமிருந்தாலும் தொடர்ந்து செய்ய செய்ய திறன் பெற்று விடுவோம்.

 


54

மெய் உலகமும், மொபைல் உலகமும்

நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது ஒருவர் வருகிறார். ஒரு தகவலை சொல்கிறார். இன்னொருவர் வருகிறார். இன்னொரு தகவலை சொல்கிறார். இன்னும் பலர் வருகிறார்கள். பல தகவலை சொல்கிறார்கள். அனைவரும் உங்களை சுற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்களுக்கு இடையூறாக உங்களை சுற்றி பேசிக் கொண்டிருந்தால் உங்கள் படிப்பு என்னாகும்? உங்கள் வேலை என்னாகும்? இதை நீங்கள் விரும்புவீர்களா? அந்த இடத்தை விட்டு விலகி விடுவீர்கள்.

ஆனால் நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள். வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தன்னிச்சையாக மொபைலை திறந்து பார்க்கிறீர்கள். சமூக வலைதளங்களில் யாரோ பதிவு போட்டிருக்கிறார்கள். யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பின்னூட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

உங்களை அறியாமல் நீங்களும் சமூக வலைதள கடலில் குதிக்கிறீர்கள். யாருக்கோ பதில் சொல்கிறீர்கள். ஆர்வமாக பல பதிவுகளை பார்த்துக் கொண்டே வருகிறீர்கள். பல காணொளிகள், பல பரபரப்பு செய்திகள், பல உரையாடல்கள் என சமூக வலைத்தளங்களில் மூழ்கி போகிறீர்கள். நீங்கள் படித்துக் கொண்டிருந்ததை, வேலை செய்து கொண்டிருந்ததை தற்காலிகமாக மறந்து விட்டீர்கள்.

மெய் உலகில் பலர் சூழ்ந்து பேசிக் கொண்டிருப்பது உங்கள் நேரத்தை கெடுக்கும், படிப்பு, வேலையை பாதிக்கும் என உணரும் நீங்கள் மொபைல் உலகில், சமூக வலைதளங்களில் நீங்களாகவே மூழ்கி போகிறீர்கள். உங்கள் நேரம், கல்வி, வேலையை மறந்து மூழ்கி போகிறீர்கள்.

இது மொபைல் உலகம் உருவாக்கும் வினோதம் ஆகும். சீரழிவு ஆகும். மெய் உலக இடையூறுகளை உணர்வது போலவே, மொபைல் உலக இடையூறுகளையும் சுய உணர்வோடு உணருங்கள். மொபைல் உலகம் உங்களை உள்ளிழுப்பதில் கவனமாய் இருங்கள்.

 

 

55

மொபைல் அடிமைத்தனம், பிற நோய்கள்  - முக்கிய வேறுபாடு

நோய் என்றால் அதற்கு ஒரு சிகிச்சை இருக்கும். சிகிச்சைக்கு பின் நோயிலிருந்து மீண்ட நிலை இருக்கும். இது நோய் உங்களை விட்டு போய்விட்டது என அர்த்தம். ஆனால் மொபைல் அடிமைத்தனம் அப்படி அல்ல.

 

அடிமைத்தனத்தின் நிலைகள்

*    மொபைல் அடிமைத்தன நிலை

*    அதிலிருந்து மீளும் நிலை

*    முழுதாக மீண்ட நிலை

 

மொபைல் அடிமைத்தன நிலை

இதில் நீங்கள் மொபைலை உங்களை அறியாமல், சுய உணர்வற்று, அதிக நேரம் பயன்படுத்துவீர்கள். அதிக நேரம் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் நேரம், படிப்பு, வேலை என எல்லாவற்றிலும் பாதிப்புகள் இருக்கும். ஆனாலும் மொபைல் அடிமையாய் மூழ்கி இருப்பீர்கள்.

 

மீளும் நிலை

இந்நிலையில் நீங்கள் மொபைல் அடிமை என உணர்வீர்கள். பயிற்சிகள் மூலம் அதிலிருந்து வெளியே வர முயற்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள்.

 

மீண்ட நிலை

உங்கள் தொடர்ந்த பயிற்சிகளால் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருப்பீர்கள். சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருப்பீர்கள். மொபைலை ஆக்கப்பூர்வமாக மட்டும் பயன்படுத்துவீர்கள்.

 

மீண்ட நிலைக்கு பிந்தைய நிலை

இதுதான் மொபைல் அடிமைத்தனத்திற்கும், பிற நோய்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. பிறநோய்களில் சிகிச்சை முடிந்தால் அந்நோய் உங்களை விட்டு முழுதாக விலகி விட்டது என பொருள்.

ஆனால் மொபைல் அடிமைத்தனத்திலோ அதிலிருந்து நீங்கள் மீண்டுவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அதில் விழுந்து மொபைல் அடிமையாகும் வாய்ப்பு உண்டு. உங்களை அறியாமல் மீண்டும் மொபைலில் முழ்குவது அதிகரிக்கும். சமூக வலைதளங்களில் முழ்குவது அதிகரிக்கும். கல்வி, வேலையில் திறன் மீண்டும் குறையும். உங்களை அறியாமல் நீங்கள் மொபைல் அடிமையாய், சமூக வலைதள அடிமையாய் மாறி போவீர்கள்.

  

 

56

ஏன் மீண்டும் மொபைல் அடிமையாய்  மாறி போனீர்கள்?

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நீங்கள் ஏன் மீண்டும் மொபைல் அடிமையாய் மாறி போனீர்கள்?

காரணம், மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டாலும், மீண்டும் அதில் விழுந்து விடுவோம் என அறியாத அறியாமை.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளும் போது செய்கின்ற பயிற்சிகளை எல்லாம், அதிலிருந்து மீண்ட பின் நீங்கள் அலட்சியமாக கைவிடுவது.

இவையே மீண்டும் மொபைல் அடிமைத்தனத்தில் விழுவதற்கு காரணம்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது பெரிய விசயமே அல்ல. அந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து, அடிமைத்தனத்திலிருந்து மீண்டதை தக்க வைத்து கொள்வதே முக்கியமாகும்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளுதல் ஒரு தொடர் பயிற்சியே.

 

 

57

மொபைல் அடிமைத்தனம் ஒரு நோய்

நோய் என்றால் கிருமி தாக்கி நமது உடல் நலம் கெடுவது மட்டுமே என்று நினைக்கிறோம். ஆனால் நம் வாழ்வை ஆக்கிரமித்து நம் இயல்பை சீரழிக்கும் மொபைல் அடிமைத்தனமும் ஒரு நோய் தான்.

மொபைல் அடிமைத்தனம் என்பது வெகு நாளாக உங்களை பாதிக்கும், நாளுக்கு நாள் தீவிரம் அதிகரிக்கும், மீண்டு வந்தாலும் திரும்பவும் அடிமைத்தனத்துக்குள் தள்ளும் ஒரு நோயே.

தினமும் காலை முதல் இரவு வரை பார்ததே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை தூண்டுவது, அதனால் கல்வி பாதிக்கப்பட்டாலும், வேலைத்திறன் பாதிக்கப்பட்டாலும், நேரம் பாதிக்கப்பட்டாலும், உறவுகள் பாதிக்கப்பட்டாலும் அதை, விட முடியாது தொடர்வது என மொபைல் அடிமைத்தனம் ஒரு நோயே ஆகும்.

  

 

58

நீங்கள் ஒரு மொபைல் அடிமை

காலையில் எழுந்தவுடன் மொபைலை திறப்பது, கிளம்பும் வரை மொபைலில் உலாவுவது, பயண நேரத்தில் மொபைலில் மூழ்குவது, படிக்கும் இடத்தில், வேலை பார்க்கும் இடத்தில் இடை இடையே மொபைலில் மூழ்குவது, உங்கள் கல்வி பாதிக்கப்பட்டாலும், வேலை பாதிக்கப்பட்டாலும், மொபைலை பார்க்காமல் இருக்க முடியாதது, இரவு தூங்கும்வரை மொபைலில் மூழ்கியபடியே இருப்பது என்றால் நீங்கள் ஒரு மொபைல் அடிமை என்ற உண்மையை ஏற்க வேண்டும். இதை ஏற்காது அடுத்த முன்னேற்றம் இல்லை.

முறையான பயிற்சிகளும், சுய உணர்வோடு உங்களை நீங்களே கண்காணித்து கொள்வதுமே மொபைல் அடிமைத்தன நோயிலிருந்து உங்களை மீட்கும். அது மட்டுமல்ல. மீண்டும் அடிமைத்தனத்தில் விழாமல் இருக்க, தொடர்ந்து உங்களை கண்காணித்து கொள்ளவும் வேண்டும்.

ஆனால் அதற்குமுன் நீங்கள் ஒரு மொபைல் அடிமை என்ற உண்மையை ஏற்க வேண்டும்.

 

 

59

யார் கட்டுப்பாட்டில் யார்?

ரு கற்பனை.

ஒரு குதிரை மீது ஏறுகிறீர்கள். குதிரை ஓடுகிறது. உங்கள் கட்டுப்பாட்டில் குதிரை ஓடினால் சரி. மாறாக உங்களை மீறி தன் போக்கில் உங்களை இழுத்துக் கொண்டு ஓடினால்? அதன் மேலே உட்கார்ந்திருப்பதை தவிர வேறொன்றும் நீங்கள் செய்யவில்லை என்றால்?

உங்கள் கட்டுப்பாட்டில் குதிரை இருக்கிறதா அல்லது குதிரை கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்களா?

மொபைல் வைத்திருக்கிறீர்கள். தேவையான போது திறக்கிறீர்கள். தகவல்களை பார்க்கிறீர்கள். தொடர்பு கொள்கிறீர்கள். மூடிவிடுகிறீர்கள். சரி.

மொபைல் வைத்திருக்கிறீர்கள். உங்களை அறியாமலே மொபைலை திறக்கிறீர்கள். சமூக வலைதளங்கள், காணொளிகள். மணிக்கணக்கில் முழ்கிப் போகிறீர்கள். நாள்கணக்கில் தொடர்கிறது. மொபைலில் முழ்கியிருப்பது பற்றி எந்த சுய உணர்வும் உங்களுக்கு இல்லை எனில், உங்கள் கட்டுப்பாட்டில் மொபைல் இருக்கிறதா? அல்லது மொபைல் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்களா?

யார் கட்டுபாட்டில் யார் இருக்கிறீர்கள்?

 

 

60

சும்மா இருக்கும் நேரத்தில்     சும்மாவே இருங்கள்

இது ஓசோ, சக்கி, நித்தி போல சாமியார்கள் சொல்லும் விசயம் இல்லை. தத்துவம் சொல்லி குழப்பும் விசயமும் இல்லை.

சும்மா இருக்கும் நேரத்தில் சும்மாவே இருப்பது என்றால், மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதில், நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மொபைலை எடுக்காமல் சும்மாவே இருப்பதுதான்.

எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறீர்கள். பேருந்திற்காக காத்திருக்கிறீர்கள். நண்பர்களோடு இருக்கிறீர்கள். கல்லூரியில் இருக்கிறீர்கள். அலுவலகத்தில் இருக்கிறீர்கள். கடைக்கு செல்கிறீர்கள். காத்திருக்கிறீர்கள். ஒரு இடைவெளி கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு இடைவெளி நேரம் கிடைக்கும் போதெல்லாம் சும்மா இருப்பதாக உணர்கிறீர்கள்.

சும்மா இருக்கும்போது மொபைலை எடுத்துக் கொள்கிறீர்கள். மொபைலை நோண்ட ஆரம்பிக்கிறீர்கள். முழ்குகிறீர்கள்.

சும்மா இருக்கும்போது மொபைலை பார்ப்பது, சும்மா இல்லாத போதும் மொபைலை பார்க்கும் பழக்கமாகிறது. அடிமைத்தனத்தில் கொண்டு போய் விடுகிறது.

இனி சும்மா இருக்கும்போது, சும்மா இருங்கள். மொபைலை எடுக்காமல் வேறுமனே உங்களை சுற்றி நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருங்கள். அதுவே சும்மா இருப்பது தான். அதிலேயே ஆயிரம் அனுபவம் வரும். சிந்தனை வரும். மனம் புத்துணர்ச்சி பெறும்.

குறைந்தது அந்த நேரத்தில் மொபைலிலும், சமூக வலைதளங்களிலும் விழாமல் இருக்கவாவது உதவும்.

ஒருநாளில் மொபைலில் முழ்கும் நேரம் குறையும். மொபைல் அடிமைத்தனத்தில் விழுவதை தடுக்கும்.

 

 

61

இன்று ஒரு நாள் கட்டுப்பாடு

மொபைல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், சமூக வலைதளங்கள் பார்ப்பதை குறைக்க வேண்டும் என உறுதி எடுப்பீர்கள்.

இனி நிரந்தரமாக மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வேன், எத்தனை வருடங்களானாலும் இதில் உறுதியாய் இருப்பேன் என்பீர்கள்.

சரிதான். ஆனால் பல மாதம், பல வருடம் கட்டுப்பாடாய் இருப்பேன் என பெரிதாக சத்தியம் செய்யாமல், இன்று ஒரு நாளில் கட்டுப்பாடாய் இருப்பேன் என உறுதி எடுங்கள். இன்று ஒரு நாளில் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள பயிற்சி செய்வோம், இன்று ஒரு நாளில் கட்டுப்பாடாய் இருப்போம் என உறுதி எடுங்கள்.

ஒருநாள் துவங்குகிறது. காலையிலிருந்து இரவு வரை கவனமாக கட்டுப்பாடாக இருங்கள். இன்று ஒரு நாள் கட்டுப்பாடாய் இருந்தால் அது வெற்றிகரமான நாள்.

நிரந்தர கட்டுப்பாடாய் இருப்பேன், எத்தனை ஆண்டுகளானாலும் கட்டுப்பாடாய் இருப்பேன் என்பது உங்கள் இலக்கை எங்கோ தொலைவில் வைக்கும். இன்று ஒருநாள் கட்டுப்பாடு என்பது உங்கள் இலக்கு இன்று செய்ய வேண்டியது என கவனத்தை கூர்மையாக்கும்.

ஒவ்வொரு நாளும் அன்றைய ஒரு நாளில் கட்டுப்பாடாய் இருப்பது என்று உறுதி எடுங்கள்.

 

 

62

இப்போது நேரம் என்ன?

ம் தாத்தா, ஆயா காலத்தில் இப்போது நேரம் என்ன இருக்கும் என்றால் காலை, பகல், மத்தியானம், சாயங்காலம் என்பார்கள். அது கடிகாரம் பரவலாக இல்லாத காலம். இப்போதோ கைகளில் கைக்கடிகாரம் வந்துவிட்டது. மொபைல் வந்துவிட்டது. ஆனாலும் நாம் நேரத்தை அறிவதில்லை. நேரத்தை பற்றி கவலைப்படுவதில்லை. காலை, மதியம், மாலை, இரவு என குத்துமதிப்பாகத்தான் உணர்கிறோம்.

மொபைலை எடுக்கிறோம். தொடர்ந்து பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் முழ்குகிறோம். எத்தனை மணிக்கு பார்க்க ஆரம்பித்தோம். எவ்வளவு நேரம் பார்த்தோம் என உணர்வதில்லை.

ஒரு வேலையை இன்ன நேரத்தில் ஆரம்பித்து இன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என நினைப்பதில்லை.

நேரத்தை உணருங்கள். படிக்க துவங்குகிறீர்கள். நேரம் இப்போது காலை 10.30 மணி. இன்னும் ஒரு மணி நேரம். 11.30 வரை படிக்க வேண்டும் என திட்டமிடுங்கள். வேலையை துவங்குகிறீர்கள். இன்னும் இவ்வளவு நேரத்தில் முடிக்க வேண்டும் என நினையுங்கள். இடையில் மொபைலில் இறங்க வேண்டாம் என சொல்லி கொள்ளுங்கள்.

மொபைலை எப்போது திறக்கும் போதும் நேரத்தை பாருங்கள். இன்னும் இவ்வளவு நேரத்தில் மொபைலை மூட வேண்டும் என நினையுங்கள்.

இன்று ஒரு நாள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என நினைப்பது போல், அந்த ஒருநாளில் நேரத்தை கவனமாக கவனியுங்கள். ஒவ்வொரு நேரத்திலும் நீங்கள் செய்வதை கவனியுங்கள். ஒருநாளில் நேரம் உங்களை மொன்னையாக கடந்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நேரப்படி செய்வதை வழக்கமாக்குங்கள்.

 

 

63

அந்த நேரத்தில் எதை செய்வது?

மொபைலில் நேரம் வீணாகிறது. மொபைலை விட வேண்டும். மொபைலை விட வேண்டும். இப்படி சொன்னால் போதுமா? அந்த நேரத்தில் எதை செய்யவேண்டும்?

நடைப்பயிற்சி செய்யலாம். செய்தித்தாள்கள் படிக்கலாம். பயணம் செய்யும் போது சமூகத்தில் நம்மை சுற்றி நடப்பதை பார்க்கலாம்.

பள்ளி, கல்லூரிகளில் படிப்பில் கவனம் செலுத்தலாம். பணியிடங்களில் வேலையை திறமையாக செய்யலாம். நண்பர்களோடு நேரடியாக பேசலாம். குடும்பத்தோடு பேசலாம். வெளியே செல்லலாம்.

உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் உள்ள புத்தகங்களை படிக்கலாம்.

இரவில் நேரத்திற்கு உறங்கி காலையில் நேரத்தில் எழலாம்.

வெறுமனே மொபைலை விட வேண்டும் என சொல்லாமல், ஆர்வமுள்ள வேறு செயல்களை செய்தாலே மொபைலில் மூழ்குவது குறையும். வெறுமனே மொபைலை விட வேண்டும் என்பது வெறும் வாய்வீச்சாகவே இருக்கும்.

 


64

குழந்தை மனதை விடுங்கள். பெற்றோர் மனதில் வாழுங்கள்

மக்கு இரு மனங்கள் உண்டு. குழந்தை மனம். பெற்றோர் மனம்.

குழந்தை மனம் எல்லாவற்றுக்கும் ஆசைப்படும். ஆசைப்படுவது மட்டுமல்ல, ஆசைப்படுவது உடனே வேண்டும் என துடிக்கும். உடனே கிடைத்துவிட்டால் சந்தோசப்படும். பெற்றோர் மனமோ கண்டிப்போடு இருக்கும். ஆசைப்படுவது தேவையா என கேட்கும். உடனே அடைய ஆசைப்படாதே, பொறுத்திரு, தள்ளிப்போடு என கண்டிக்கும்.

நாம் சந்தோசப்படும் விசயங்களில், உடனே செய்யவேண்டும் என்ற குழந்தை மனதில் இயங்குகிறோம். குழந்தை மனதை விட வேண்டும். அதை தள்ளிப்போடும் பெற்றோர் மனதில் வாழ வேண்டும்.

மொபைல் பார்க்க வேண்டும். முகநூல் பார்க்க வேண்டும். டிக்டாக் பார்க்க வேண்டும், மொபைல் கேம்களை விளையாட வேண்டும் என தோன்றும் போது, உடனே அதை செய்துவிட நம் மனம் ஆசைப்படும். துடிக்கும். அது குழந்தை மனம். குழந்தை மனதோடு நாம் இறங்கினால் தோன்றும் போதெல்லாம் மொபைலை திறப்போம். மொபைலிலேயே முழ்கி கிடப்போம்.

மொபைலை பார்க்க தோன்றும் போது, கண்டிப்போடு தள்ளிப் போடும் பெற்றோர் மனதில் வாழ வேண்டும்.

மொபைல் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், அதை தள்ளிப்போட கற்றுக் கொண்டால், தோன்றியவுடன் திறக்கும் நிகழ்வுகள் குறையும். மொபைல் பார்ப்பதில் ஒரு கட்டுப்பாட்டை கற்றுக் கொள்வோம். கட்டுப்பாட்டை கற்றுக் கொண்டாலே மொபைலில் முழ்கும் அடிமைத்தனத்திலிருந்து மீள தயாராகி விடுவோம்.

 

 

65

சுய உணர்வோடு வாழுங்கள்

சாதாரணமாக வாழ்வதற்கும், சுய உணர்வோடு வாழ்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நாம் என்ன செய்கிறோம், என்ன சிந்திக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் வாழ்வது சாதாரணமாக வாழ்வது.

நிகழ்காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம், என்ன சிந்தித்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வோடு வாழ்வது சுய உணர்வோடு வாழ்வது.

விலங்குகள் சுய உணர்வின்றி சூழலுக்கு எதிர் செயல் ஆற்றுவதாக வாழ்வது போல, நாமும் சூழலுக்கு எதிர் செயல்களை செய்வது, சிந்திப்பது என்று வாழ்கிறோம்.

மொபைல் அடிமைத்தனம், சமூக வலைதள அடிமைத்தனம் எல்லாம் நாம் நிகழ்காலத்தில் சுய உணர்வின்றி வாழ்வதால் வருவது.

நமது செயல்கள், சிந்தனைகளை கவனித்து வாழ்ந்தால், நம் நேரம், படிப்பு, வேலை, வாழ்வை பாதிக்கும் மொபைலில் மூழ்கி இருக்க மாட்டோம். சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்க மாட்டோம்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள நிகழ்காலத்தில் சுய உணர்வோடு வாழுங்கள்.

 


66

மொபைலுக்கு விடுங்கள் விடுமுறை

நீங்கள் கல்லூரியில் படிப்பவரானாலும், வேலைக்கு செல்பவரானாலும் வாரம் ஒரு நாளாவது விடுமுறை விடுகிறார்கள். மருத்துவத் துறையில் கூட சில மருந்துகள் பாதிப்பை குறைக்க, வாரம் ஒரு நாள் மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுமுறை விடுவது உண்டு.

மொபைலில் ஓயாமல் இயங்குகிறீர்கள். உங்கள் மொபைலுக்கு விடுமுறை அளித்துள்ளீர்களா? வாரம் ஒரு நாள் விடுமுறை விடுங்கள். முடியாவிட்டால் வாரம் ஒரு 8 மணி நேரமாவது விடுங்கள்.

நான் ரொம்ப ரொம்ப பிசி என்போர், அந்த விடுமுறை நேரத்தில் முக்கிய அழைப்புக்கு மட்டுமே பதில் சொல்வேன் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒரு நாள், 8 மணி நேரம் மொபைலுக்கு விடுமுறை விடுவதால் என்ன பயன்?

ஓயாத மொபைல் தூண்டலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த உங்கள் மனம் ஓய்வு அடையும். அமைதி அடையும். புத்துணர்ச்சி பெறும். அன்று தான் உங்களை சுற்றி உள்ள மனிதர்கள், சமூகத்தையே கவனித்திருப்போம். மொபைல் தூண்டல் இல்லாத அமைதியான நேரங்களில்தான் புது சிந்தனைகள், திட்டங்கள் உருவாவதையும் காணலாம்.

மொபைலில் மூழ்குவதை தினமும் குறைக்கலாம் என்ற உணர்வும் பெற துவங்கி இருப்போம்.

மொபைலுக்கு கட்டாயம் விடுங்கள் வாரம் ஒரு நாள் விடுமுறை.

 

 

67

நல்ல மரம் வெட்டியாக இருங்கள்

ரு மரம் வெட்டி நாள் பூராவும் கோடாரியால் மரத்தை வெட்டிக்கொன்டே இருந்தான். ஆனால் அவனால் வெட்டி முடிக்க முடியவில்லை. இன்னொரு மரம் வெட்டியோ அதே நாளில் பல மரங்களை வெட்டி முடித்திருந்தான். நீ எப்படி இவ்வளவு மரங்களை வெட்டினாய், என்னால் முடியவில்லையே என்ற போது, அந்த மரம்வெட்டி சொன்னான், நீ நாள் பூராவும் மரத்தை வெட்டிக் கொண்டே இருந்தாய். ஆனால் உன் கோடாரியைக் கூராக்கினாயா? மழுங்கிய கோடாரியை வைத்து வெட்டினாய். நானோ இடை இடையே என் கோடாரியைக் கூராக்கி கொண்டு வெட்டினேன் என்றான்.

இது பழைய கதை. உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரிந்தது தான், நாம் மறந்து விடுகிறோம்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டும். சமூக வலைதள அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டும் என்றால் போதுமா?

தினமும் மரம் வெட்டி தன் கோடாரியை கூராக்கி கொள்வது போல, தினமும் இடையிடையே மொபைல் அடிமைத் தனத்திலிருந்து மீள வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இடையிடையே மொபைல் அடிமைத் தனத்திலிருந்து மீளும் பயிற்சிகளை செய்யுங்கள். மொபைல் கட்டுப்பாடு செயலிகளை கவனியுங்கள். அன்றைய தினம் அப்போதைய நேரத்தில், எவ்வளவு நேரம் மொபைலில் செலவழித்தீர்கள். முகநூல், வாட்சப், யூட்யுப், டிக்டாக் என எத்தனை வகைகளில் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள் என கவனியுங்கள்.

ஒவ்வொரு நாளும், இடையிடையே கவனியுங்கள். மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளும் செயல்களை கூராக்கி கொள்ளுங்கள். நல்ல மரம் வெட்டியாக இருங்கள்.

 

 

68

தினமும் 20 - 20 மேட்ச்.          நீங்கள் ஒரு வெற்றிகரமான பவுலர்

கிரிக்கெட் பார்த்திருப்பிர்கள். பலர் கிரிக்கெட் வெறியர்களாக கூட இருப்பீர்கள். முதலில் மட்டை பிடிக்கும் அணி 20 ஓவரில் 180 ரன் அடிக்கிறது. அடுத்த அணி மட்டை பிடிக்க வருகிறது. இப்போது பவுலர் என்ன செய்கிறார்? எதிர் அணியை 180 ரன்னுக்குள் சுருட்ட வேண்டும் என நினைக்கிறார். 10 ஓவருக்கு இன்ன ரன், 15 ஓவருக்கு இன்ன ரன் என கட்டுப்படுத்தி இறுதியில், 180 ரன்னுக்குள் சுருட்டி விடுகிறார்.

உங்களுக்கும் தினமும் 20 - 20 மேட்ச்தான். ஒருநாளில் மொபைலில் இவ்வளவு நேரத்துக்குள், உதாரணமாக, மொபைல் பார்க்கும் மொத்த நேரத்தை 6 மணி நேரத்துக்குள் முடித்து விட வேண்டும் என்பது தான் இலக்கு.

காலையிலிருந்து இரவு உறங்கும்வரை உள்ள நாள்தான் 20/20 மேட்ச். மொபைல் கட்டுபாடு செயலி உள்ளதல்லவா, அதுதான் ரன் ரேட் காட்டும் உங்கள் ஸ்கோர் போர்டு.

இரவு தூங்குவதற்கு முன் 6 மணி நேரத்துக்குள் மொபைல் பார்க்கும் நேரத்தை சுருக்கி விடவேண்டும் என ஆட துவங்குங்கள்.

மதியம் ஒரு மணி வரை, 2 மணி நேரம் பார்த்துள்ளீர்கள். மாலை 5 மணி வரை, 4 மணி நேரம். இரவு 8 மணி, 5 மணி நேரம். பாருங்கள் நீங்கள் தூங்குவது 11 மணிக்கு. அதற்குள் மொபைல் பார்ப்பதை 6 மணி நேரத்திற்குள்ளாக கட்டுப்படுத்த வேண்டும். இதுவரை 5 மணி நேரம் பார்த்துள்ளீர்கள். இப்போது கவனமாகி விட்டீர்கள். அடுத்து 8 மணியிலிருந்து 11 மணி வரை. இதில் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே மொபைல் பார்த்தீர்கள்.

இன்றைய நாளில் இலக்கு 6 மணி நேரத்துக்குள் சுருக்கி விடுவது. நீங்கள் 5 மணி 45 நிமிடங்கள் மட்டுமே மொபைல் பார்த்தீர்கள்.

நீங்கள் வெற்றிகரமான பவுலர். எதிர் அணியை ஐந்தே முக்கால் மணி நேரத்துக்குள் சுருட்டி விட்டீர்கள்.

தினமும் மொபைல் பார்க்கும் நேரத்தை 6 மணி நேரம், 5 மணி நேரம், 4 மணி நேரம் என சுருக்குவதாக இலக்கை நிர்ணயித்து ஆடுங்கள்.

தினமும் 20 - 20 மேட்ச். நீங்கள் ஒரு வெற்றிகரமான பவுலர்.

  

 

69

உங்களுக்கு நீங்களே உளவியல்  வல்லுநர்

மொபைல் அடிமைத்தனத்தின் தன்மை, அதன் தீவிரம், அதிலிருந்து வெளியேற பயிற்சிகள் என பார்த்தாயிற்று. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்துவது?

ஒரு நோட்டு போட வேண்டும். தினசரி நீங்கள் செய்கிற பயிற்சிகளை தினமும் எழுத வேண்டும்.

*    மொபைல் அருகாமையை குறைத்தல்.

*    மொபைலை பார்வையிலிருந்தே அப்புறப்படுத்துதல்.

*    சமூக வலைதளங்களை சுய உணர்வோடு பயன்படுத்துதல்.

*    முகநூல் நேர அட்டவணை.

*    தானே தோன்றும் சிந்தனைகளை தோற்கடித்தல்.

*    முகநூல் சிந்தனை பதிவேடு.

*    கட்டாய உணர்வு பதிவேடு

*    மொபைல் கட்டுபாடு செயலிகளை கவனித்தல்.

*    மொபைலின் அடிமைத்தனத்திலிருந்து மீளும் நிகழ்வுகளை சரி பார்த்தல்.

*    இரவு - மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நிலையா, அடிமை நிலையா - புள்ளிகளால் குறித்தல்

இந்த பயிற்சிகளை நோட்டில் தினமும் செய்து எழுத வேண்டும். குறிப்பாக அட்டவணைகளை தினமும் எழுத வேண்டும்.

வாரம் முடிவில், ஒரு மணி நேரம் இதை மீளாய்வு செய்ய வேண்டும்.

மீளாய்வு முடிவில் நீங்கள் செய்ய தவறியது என்ன, மொபைல் அடிமைத்தனத்திலிருந்து முன்னேற்றமா, பின்னடைவா, எந்த இடத்தில் சரி செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும்.

அதை மேம்படுத்துவதை, அடுத்த வார இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாரத்தின் முடிவில் ஒரு மணி நேரம் மீளாய்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் இலக்குகளை அடைந்தீர்களா, சரி செய்தீர்களா என பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு வாரமும், வாரம் ஒரு மணி நேரம் மீளாய்வு என 12 வாரங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இந்த மூன்று மாத முடிவில் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து நீங்கள் விடுபட்டிருப்பதை காணலாம்.

மனநலத்துறையில் இந்த சிகிச்சைக்கு பெயர் சிந்தனை செயல் மாற்ற சிகிச்சை என்பதாகும். உங்களுக்கு எளியமுறையில் விளக்கியுள்ளேன். உங்களுக்கு நீங்களே உளவியல் வல்லுநர். செயல்படுங்கள்.

 

 

70

மாறுவதற்கான நாள் எது?

நாம் இத்தனை நாள் மொபைலில் மூழ்கி விட்டோம், சமூக வவலதளங்களில் மூழ்கிவிட்டோம், கல்வியில் தோற்றுவிட்டோம், வேலைத்திறனில் தோற்றுவிட்டோம், காலத்தை இழந்து விட்டோம், முன்னேற்றத்தை இழந்து விட்டோம். மீளமுடியாத இழப்பை சந்தித்து விட்டோம் என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இது முற்றிலும் தவறு. ஏனெனில் நீங்கள் இழந்தது அனைத்தும் இறந்த காலம். நீங்கள் சாதிக்க வேண்டியதும், அடைய வேண்டியதும் அனைத்தும் நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலுமே பேரளவில் உள்ளன. நிகழ் காலமும் எதிர் காலமுமே நம் கையில்.

நாம் அடைய வேண்டிய மாற்றமும், சாதனைகளும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலுமே உள்ளன.

நீங்கள் மொபைல் அடிமைத்தனத்தை உணர்ந்து, சமூகவலைதள அடிமைத்தனத்தை உணர்ந்து, அதிலிருந்து மீளவேண்டும் என நினைத்ததே பெரும் மாற்றமாகும். அந்த மாற்றம் வேண்டும் என்கிற உங்கள் சிந்தனைகளே, முயற்சிகளே உங்கள் நிகழ்காலத்தில் எதிர்காலத்திலும் வெற்றியாளராக்கும்.

இன்றைய நிகழ்காலமே மாறுவதற்கான நாள்.

 


71

செய்திகள் குவியலில் கரைந்து  விடாதீர்கள்

ன்று உங்கள் மீது செய்திகள் மலை போல் குவிகின்றன.

ஒரு செய்தியை படித்து முடிக்கும் முன் அடுத்த செய்தி. அடுத்த செய்தியை படித்து முடிக்கும் முன் அதற்கடுத்த செய்தி.

ஒவ்வொரு செய்தியும் வேகமாக உங்களை கடந்து விடுகிறது. பல உங்கள் மனதில் பதிவதேயில்லை.

நீங்கள் மொபைல் திரையில் உருட்டும் வேகத்தில், அவை வேகமாக உங்கள் மீது விழுகின்றன. அதே வேகத்தில் உங்கள் மனதில் ஏறாமல் காணாமல் போகின்றன.

காலையில் அதிர வைக்கும் செய்தி மதியம் காணாமல் போகிறது. மதியம் அதிர வைக்கும் செய்தி இரவு காணாமல் போகிறது. இரவு அதிர வைக்கும் செய்தி மறுநாள் பழசாகிறது.

எல்லா பரபரப்பு செய்திகளும் ஒரே நாளில் தன் ஆயுளை முடித்துக் கொள்கின்றன.

இந்த பரபரப்பு சூழல் நீங்கள் கற்பதற்கு, மாறுவதற்கு எதிராகவும் உள்ளது. நீங்கள் மனதில் உள்வாங்க வேண்டியவைகளும் மனதில் ஏறாமல் வேகமாக கடந்து போய் விடுகிறது.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீளுதலும் அதே போல் வேகமாக படித்து கடந்து விடுவதல்ல.

இது மனதில் உள்வாங்க வேண்டியது. அதை செயல்படுத்த வேண்டியது.

 

 

72

மீள்வது உறுதி

ரு கதை படிப்பது போல ஒரே மூச்சில் படித்து மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு விடலாம் என எண்ணாதீர்கள்.

இதில் மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள குறிப்புகளும், பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இதை மனதில் உள்வாங்க வேண்டும். மீண்டும் படித்து மனதில் நிறுத்த வேண்டும்.

அதற்கேற்ப எளிமையாகவே எழுதியுள்ளேன். வழக்கமாக, விரிவாக எழுதப்படும் புத்தகமாக அல்லாமல், சோர்வு தரும் நெடிய புத்தகமாக அல்லாமல் மிக சுருக்கமாகவே எழுதி உள்ளேன்.

படிக்க நேரம் குறைவாக ஆகும். மனதில் உள்வாங்க எளிமையாகவே இருக்கும். எனவே,

*    படியுங்கள்.

*    உள்வாங்குங்கள்.

*    செயல்படுங்கள்.

மொபைல் அடிமைத்தனத்திலிருந்து மீள்வது உறுதி.