.png)
‘சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா?’ என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ‘நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம் (உண்ட பிறகு குறுநடை கொள்வோம்)…’ இந்த சித்த மருத்துவச் சொற்றொடரில் உணவியலோடு அறிவியல் எந்த அளவிற்குப் பிணைந்திருக்கிறது தெரியுமா! சாப்பிட்டு முடித்த பின்பு சிறிது தூரத்திற்கு மெல்லிய நடை மேற்கொள்ளச் சொல்கிறது சித்த மருத்துவம். ‘சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக நடக்கலாமா… அப்படி நடப்பதால் செரிமானம் பாதிக்கப்படுமா… அல்லது செரிமானத் திறன் அதிகரிக்குமா…’ போன்ற சந்தேகங்களுக்கான விளக்கம் தான் என்ன!
உணவியல் ஒழுக்கங்களுள் மிக முக்கியமானது...‘அசுர வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கோம்… சாப்பிடுறதுக்கே நேரமில்ல… இதுல சாப்பிட்ட பிறகு நடக்கறதுக்கு எங்க நேரம்…’ என அங்கலாய்ப்பவர்களுக்கு, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற திட்டமிடல் இருப்பின், உடனடியாக உங்கள் அங்கலாய்ப்பை ஓரம் கட்டுங்கள்! ஒருவகையில் உண்மை தான்… சாப்பிடுவதற்கே நேரமின்றி துரித கதியில் பலரும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலத்திற்கு செரிமானம் சிக்கலின்றி நடைபெற வேண்டும் என்றால் சில உணவியல் ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அதில் உண்டபிறகு குறுநடை மேற்கொள்வது முக்கியமானதோர் ஒழுக்கம்!
அலுவல் நிமித்தமாக காலையிலும் மதிய வேளையிலும் சாப்பிட்டவுடன் குறுநடை போட யாருக்கும் வாய்ப்பில்லை. ஆனால் இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகாவது, வீட்டுத் தெருக்களில் அல்லது வீட்டு மாடியில் ரிலாக்ஸாக குடும்பத்தோடு மெல்லிய நடை போடலாமே! அதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இரவு உணவைச் சாப்பிட வேண்டும். அப்படியான சூழலும் இப்போது குறைந்துவிட்டது. ஒரே இரவு உணவு… ஒரே குடும்ப உறுப்பினர்கள் தான்… ஆனால் உணவைச் சாப்பிடும் நேரத்திலோ ஒவ்வொருவருக்கும் மிகப்பெரும் இரவு நேர கால இடைவெளி!
ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக நடப்போம்...
வட்டமாக அமர்ந்து ஒற்றுமையாக உணவுகளைப் பகிர்ந்து சாப்பிட்ட கூட்டம் தானே நாம்! ஆனால் காலவோட்டத்தில் எப்படியோ அந்த அழகிய பழக்கத்தைத் தவற விட்டுவிட்டோம். கூட்டாக அனைவரும் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிடும் சூழலைக் குடும்பத்தில் மீண்டும் ஏற்படுத்த முயல வேண்டும். சில குடும்பங்களில் வேலை நாள்களில் சாத்தியமே இல்லை எனில், வார இறுதி நாள்களிலாவது ஒன்றாக இரவு உணவைச் சாப்பிட்ட பின் குடும்பம் சகிதமாக ஒரு குறுநடையைப் போடுங்கள்! செரிமானத்தோடு சேர்ந்து அன்பும், ஒற்றுமையும் பல மடங்கு அதிகரிக்கும். பத்து அல்லது பதினைந்து நிமிட குறுநடை குடும்ப உறுப்பினர்களிடம் இணக்கமான சூழலை உருவாக்கும்.
எது சரி?
உணவு உண்ட பின்பு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக நடப்பது ஆரோக்கியத்தைத் தரும். உணவுக்குப் பின் குறுநடை போடுவதால், உணவு செரிப்பதற்குத் தேவையான சுரப்புகளின் செயல்பாடுகள் சிறப்படையும் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.
அதென்ன குறுநடை என்கிறீர்களா? எவ்வித அவசரமோ பதற்றமோ இன்றி சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு, மிகக் குறைந்த வேகத்தில் நடப்பது. சாப்பிட்டவுடன் நடக்க வேண்டும் என்பதற்காக வேகநடை கூடாது. காலை மற்றும் மாலை வேளைகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் நடைபோடுவதைப் போல வேகநடை போடக்கூடாது. வேகநடையால் கிடைக்கும் பலன்கள் வேறு, மெதுநடையின் மூலம் கிடைக்கும் பலன்கள் வேறு! இரண்டுக்குமான காரணங்களும் வேறு.
சாப்பிட்டவுடன் வேகநடை எடுத்தால், செரிமானம் நிச்சயம் பெருமளவில் பாதிக்கப்படும். உணவு எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். நேரமின்மை காரணமாகச் சிலர் தங்களின் உற்சாகமான நடைப்பயிற்சியை இரவு உணவு முடித்த பிறகு தொடங்குவார்கள். அந்தப் பழக்கம் வேண்டவே வேண்டாம். ‘உணவை முடித்த பிறகு குறுநடை மட்டுமே’ எனும் வாசகத்தை ஆழமாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
இரவு உணவைச் சாப்பிட்டவுடன் உறக்கத்தைத் தழுவ ஆசைப்படுபவர்கள், உணவை முடித்த மறுநொடியே கணினி முன்பு அடைக்கலமாகும் சூழலில் பணிபுரிபவர்கள், நிச்சயம் உண்ட பிறகு குறுநடை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்தை மேற்கொண்ட பிறகு உங்கள் உடலில் நடக்கும் ஆரோக்கிய மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!
அலுவலகங்களில் மதிய நேரத்தில் மெலிதான நடைபோட வாய்ப்பு இருப்பவர்கள் முயற்சி செய்யலாம். அலுவலகத்தில் உள்ள அனைவரும் இதை புதுப் பழக்கமாக எடுத்து மதிய உணவை முடித்த அடுத்த பத்து நிமிடங்களுக்கு குறுநடை போடலாம். விடுமுறை நாள்களில் காலை உணவை முடித்த பிறகும் தாராளமாகக் குறுநடை எடுக்கலாமே!
மேலும் சாப்பிட்டவுடன் உறங்குவதால் மண்ணீரலின் செயல்பாட்டில் பாதிப்பு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். பாதிக்கப்பட்ட ரத்தச் சிவப்பணுக்களை அகற்றுவது, தொற்றுகளை எதிர்க்க வெள்ளை அணுக்களை உருவாக்குவது என மண்ணீரலின் பணி அதி நுணுக்கமானது! ஆகையால், மண்ணீரலைப் பாதுகாப்பதற்காக சாப்பிட்ட உடன் உறங்கச் செல்லாமல் குறுநடை செல்லுங்கள்.
நிலவின் வெளிச்சத்தில் இரவின் அழகை ரசித்துக்கொண்டே நடப்பதில் தான் எத்தனை மருத்துவப் பயன்கள்! சாப்பிட்டவுடன் மெதுவான நடை பயில்வதால், செரிமானப் பகுதியில் சேர்ந்த உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை (Gastric emptying) அதிகரிக்கிறதாம்! செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரித்து மலச்சிக்கல், உணவு எதுக்களித்தல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இடையூறு அற்ற உறக்கத்தைத் தேடுபவர்கள் குறுநடை போகலாம். மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். மொத்தத்தில் உண்ட பிறகு நாம் போட வேண்டியது வேகநடை அல்ல, குறுநடை…
குறுநடை தான்… ஆனால் பெரும் பலன்கள்!...
தொடரும்...
13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’
No comments:
Post a Comment