Showing posts with label பேசின் டெஸ்ட். Show all posts
Showing posts with label பேசின் டெஸ்ட். Show all posts

நலம் நலமறிய ஆவல் - 10. அதிநவீன எலிப்பொறிகள்!


   

    ன் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் இந்தியா வரும்போதெல்லாம் தனக்கும் தன் கணவருக்கும் ‘கம்ப்ளீட் மெடிக்கல் செக்-அப்’ எடுக்காமல் போகமாட்டார். அப்படிச் செய்தால்தான் அவர்களுக்குத் திருப்தி. ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு எல்லாம் ‘நார்மல்’ என்று வந்துவிட்டால் போதும். அப்பாடா என்று பெருமூச்சு விட்டுவிட்டு, நிம்மதியாக வெளிநாட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்கள் அப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்! ஆனால், பணமா முக்கியம்? ஆரோக்கியம்தானே முக்கியம்?

    அவர்கள் நினைப்பது சரிதான். ஆரோக்கியம்தான் முக்கியம். பணம் முக்கியமே அல்ல. ஆனால், ஆரோக்கியத்தை அளக்க அவர்கள் நம்பிய நிறுவனங்களும் கருவிகளும்தான் தவறானவை. ஆரோக்கியத்துக்கும் அவற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது அந்தச் சகோதரி குடும்பத்தினர் அறியாதது. அவர்கள் மட்டுமல்ல. இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கும், செயல்படுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். மனிதர்களுடைய மனநிலையை வைத்து வியாபாரம் செய்வது ரொம்ப எளிது.

    என் நண்பர் ஒருவருடைய தாயாருக்கு ஒரு பழக்கம் உள்ளது. மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், வீட்டில் பிரளயமே உருவாகிவிடும். பிரச்னை, பரிசோதனையில் இல்லை. அவர் விரும்புவதுபோல் ஒரு டாக்டரைப் பார்த்து, முழு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு, டெஸ்ட் ரிபோர்ட்டுகளையெல்லாம் பார்த்துவிட்டு, டாக்டர் புன்னகைத்துக் கொண்டே, ‘உங்களுக்கு ஒன்னுமில்லம்மா, நல்லா இருக்கீங்க’ என்று சொன்னால் போச்சு! அவன் சரியான டாக்டரில்லை என்று சொல்லித் திட்டிவிடுவார்! ‘உங்களுக்கு வயிற்றில் சின்னதாக கட்டி உள்ள மாதிரி தெரிகிறது. நான் மாத்திரைகள் தருகிறேன். ஒரு மூன்று மாதங்களுக்கு சாப்பிடுங்கள், சரியாகிவிடும்’ என்று சொன்னால், ‘பார்த்தியா, இவன்தான் நல்ல டாக்டர். இனிமே இவங்கிட்டதான் வரணும்’ என்று தன் மகனுக்கு உத்தரவுகள் போடுவார்! அவரை எக்ஸ் என்று வைத்துக்கொள்வோம்.

    லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எக்ஸ்களால் ஆன சமுதாயம்தான் நம்முடையது. இந்த எக்ஸ்களை வைத்துக் கொழுத்துக் கொண்டிருக்கும் வியாபாரத்தின் இன்னொரு பெயர்தான், மருத்துவ ஆய்வுக்கூடங்கள்! அவை, அலோபதியின் முக்கியப் பங்காளியாக இருப்பதால், அவைபற்றியும் இங்கே பார்த்துவிடலாம்.

கட்டியா கருவா?

    என் நெருங்கிய நண்பர் ஒருவர், தனது அனுபவங்களை தான் எழுதிய "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?" என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் விவரித்த ஒரு உண்மை நிகழ்ச்சி எனக்கு அதிர்ச்சியூட்டியது. உங்களுக்கும் நிச்சயம் அதிர்ச்சி கொடுக்கும். 


("மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?" கட்டுரை தொகுப்பை இணையத்தில் காண விரும்பினால் இந்த முகவரிக்குச் செல்லுங்கள் https://reghahealthcare.blogspot.com/2024/06/12.html)

    அதைப்பற்றி அவர் எழுதியதை அப்படியே தருகிறேன் –

    ‘‘நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்களுக்குப் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போதெல்லாம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்). சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பப்பை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.

    ‘‘கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளர்வதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும், ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்தக் கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்தகட்ட பரிசோதனைகளுக்குச் செல்வதற்குக்கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கர்ப்பப்பையை நீக்கிவிடலாம் என்றும் பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்குக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக்கொண்ட கணவர், அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் நண்பரும், நானும் ஸ்கேன் அறிக்கைகளையும், விசித்திரமான நோயாளிகளைப் பற்றியும் விவாதித்துக் கொள்வோம்.

    “கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை அந்தப் பெண்ணுக்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்து எறியப்பட்ட உறுப்புகளைப் பார்ப்பதற்காக, வழக்கம்போல் நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பப்பையின் ஒரு பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தது கட்டி அல்ல, அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்தச் சிசுவின் விரல்கள் அரிசி ஓவியம்போல் நேர்த்தியாக இருந்தன. அறுவை சிகிச்சை உதவியாளர்கள், மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனிதத்தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில்முறை மருத்துவரானார். அதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனைப் பணியாளர்கள், அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டிக் காத்தார்கள், சம்பளத்தோடு.


    “கருவிலே வேறறுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்துகொள்ளாத மருத்துவரா? வணிகமயமான மருத்துவமா?

    “அந்தச் சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்திருந்தேன். முழு வளர்ச்சியடையாத அந்தச் சிசுவின் கைகள், ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது. 

    மேலே விவரிக்கப்பட்ட அதிர்ச்சியான நிகழ்ச்சியை விவரித்த நண்பர் வேறுயாருமல்ல. கம்பம் அகாடமி ஆஃப் அக்குபஞ்சர் கல்லூரியின் முதல்வர் ஹீலர் உமர் ஃபாரூக்தான். ஏற்கெனவே ரத்தவியல் (Hematology) துறையில் பணியாற்றியவர் அவர். நிறைய ஆய்வுக்கூட அனுபவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அவர் இங்கே குறிப்பிட்ட அவரது அனுபவம். 
    மேலே சொன்ன நிகழ்ச்சி, மருத்துவ ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட ஒரு தவறு. ஆனால், மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகள் எதுவுமே என்றைக்குமே உண்மையைச் சொல்வதற்கான சாத்தியமே இல்லை என்பதுதான் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும்! என்ன குழப்பமாக உள்ளதா?

    ஆய்வுக்கூடங்களில் உடலைப் பரிசோதிப்பதே தவறு என்று சொல்கிறேன். ஏன்? ஏனெனில், அந்தப் பரிசோதனைகளின் மூலம் உண்மை தெரியவர வாய்ப்பே இல்லை! அதுவல்லாமல், உமர் குறிப்பிட்டுள்ளதைப்போல, ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்துவிடும் அபாயமும் உள்ளது.

    ஆங்கிலத்தில் Fact என்றொரு சொல்லும் Truth என்றொரு சொல்லும் உள்ளது. முன்னதை நிஜம் என்றும் பின்னதை உண்மை என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், முன்னது மாறக்கூடியது; பின்னது மாறாதது. எனக்குத் தொப்பை இருக்கிறது என்பது ஒரு Fact-ஆக இருக்கலாம். அதாவது, இப்போதைய நிஜம் அது. ஆனால், அது என்னைப் பற்றிய உண்மையல்ல. நாளைக்கே நான் என் உடல் உழைப்பின் மூலம் தொப்பையை குறைத்து த்ரிஷா மாதிரி ஸ்லிம்-மாக மாறிவிடலாம்! நிஜம் என்றால், ‘இப்போதைக்கு இது நிஜம்’ என்று அர்த்தம். ஆய்வுக்கூட அறிக்கைகளும் இப்படிப்பட்டவையே.

    ரத்தத்தில் ஹீமோகுளோபின் 9 தான் இருக்கிறது என்று இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு அறிக்கை சொன்னால், டெஸ்ட் ரிபோர்ட் வந்த அடுத்த சில மணி நேரங்களிலோ, சில நிமிடங்களிலோ அது மாறலாம். மாறலாம் என்ன, நிச்சயம் மாறும். மாறிக்கொண்டே இருப்பதுதான் உடலின் இயல்பு. எனவே, எல்லா ஆய்வுக்கூட அறிக்கைகளும் கடந்த காலத்தின் அறிக்கைகளே! இன்றின், இப்பொழுதின் அறிக்கையை நாம் பெறவே முடியாது. கடந்த காலத்தை எடுத்து நிகழ்காலத்தில் திணித்து வைத்துக்கொண்டு, அது பற்றிய கவலையில் எதிர்காலத்தை வீணடிக்கும் வேலைக்குப் பெயர்தான் ஆய்வுக்கூட அறிக்கைகள் என்று சொன்னால் அது மிகையே அல்ல!

    இதை விளக்க இன்னொரு உதாரணம் கொடுக்கலாம். ஆய்வுக்கூட அறிக்கைகள் நம்மைப்பற்றிய நிஜத்தைச் சொல்லலாம் என்று சொன்னேனல்லவா? அதுபற்றிய ஒருவரின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவத்தை இங்கே பார்க்கலாம்.

    ஒருவர் தன் ரத்தத்தில் எவ்வளவு ஹீமோகுளோபின் மற்றும் வெள்ளை அணுக்கள் உள்ளன என்று அறிந்துகொள்வதற்காக, வேண்டுமென்றே ஐந்து மருத்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்குச் சென்று அறிக்கைகளையும் பெற்றுள்ளார். அதுவும் ஒரே நாளில்! அவர் சென்றது 18.10.2012 அன்று. உண்மையாகவே பரிசோதனைக்கூடங்களின் சோதனைகள் மூலம் உண்மை தெரியவரும் என்பது உண்மையானால் – ஆஹா, எத்தனை உண்மைகள்! - எல்லா அறிக்கைகளும் ஒன்றைத்தானே சொல்ல வேண்டும்? ஆனால், அதுதான் நடக்கவில்லை. அவருக்கான அறிக்கைகள் என்ன சொல்லின? கீழே பாருங்கள் -

பரிசோதனை எடுக்கப்பட்டவரின் பெயர்: அ. தமீம் அன்சாரி

பரிசோதிக்கப்பட்ட தேதி: 18.10.2012

இப்பரிசோதனைகள் ஒரே நாளில்சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டவை. இதில் எவ்வளவு வேறுபாடு?


    வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 5,600 அணுக்கள் முதல் 10,100 வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஹீமோகுளோபின் 11.9 முதல் 14.5 கிராம் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

    உண்மையில் அவருக்கு எவ்வளவுதான் இருக்கிறது? இதில் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட அளவு 14.5 கிராம். குறைந்த பட்ச அளவு – 11.9 கிராம். சுமார் 2.6 கிராம் அளவிற்கு வேறுபாடு உள்ளது.

    இந்த அறிக்கைகளில் எதை நம்புவது? எதை நம்பினாலும் மோசம்தான்! அறிக்கைகளையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து, சராசரியாக இவ்வளவு ஹீமோகுளோபின் உள்ளது, இன்னும் இவ்வளவு தேவை, சராசரியாக இவ்வளவு வெள்ளை அணுக்கள் உள்ளன, இன்னும் இவ்வளவு தேவை என்ற முடிவுக்கெல்லாம் வர முடியாது. அப்படியெல்லாம் யோசித்தால், எதிர்ப்பு சக்தி போய்விட்டது, அல்லது குறைந்துவிட்டது என்று கூறி, மேலும் பல புதிய வேதனைக்கூடங்களுக்கு, ஐ மீன், சோதனைக்கூடங்களுக்கு அனுப்பிவிடுவார்கள்.

    "இந்த ஆய்வுக்கூட அறிக்கைகள் நோயாளிகளுக்கு உதவுவதற்காகவா? அல்லது நோயாளிகளை உருவாக்குவதற்காகவா?" என்று கேட்கிறார் ஹீலர் உமர். நெத்தியடிக் கேள்வி. இதற்கு சோதனைக்கூடங்களை நடத்துபவர்கள் மனசாட்சியோடு பதில் சொல்வார்களா?

    அவர்கள் பதில் சொல்வது இருக்கட்டும். ஒரு டாக்டர் நம்மை ஒரு சோதனைக்கூடத்துக்கு அனுப்பி எதற்காக சில பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்கிறார்? யோசித்தால், இரண்டு காரணங்கள் நமக்குத் தெரியவரும். ஒன்று, டாக்டருக்கு நம் உடலின் உண்மையான நிலை பற்றி சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நம்மை அவர் அனுப்புவார்.


    ஆனால், இதைவிட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட சோதனைக்கூடத்துக்குச் சென்று ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று அவர் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம், இல்லை சார், என் நண்பரின் ஸ்கேன் சென்டர் ஒன்று உள்ளது, அங்கே போய் எடுத்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அவர் என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார். கண்ட கண்ட சென்டர்களில் எடுத்த ரிப்போர்ட்டையெல்லாம் நான் பார்க்கமாட்டேன். நான் சொல்லும் இடத்தில் எடுத்துக்கொண்டு வா, இல்லையென்றால் என்னைப் பார்க்க வராதே என்று திட்டவும் செய்யலாம். நான் சிபாரிசு செய்யும் மையம் இந்த மாநகரத்திலேயே மிகச்சிறந்தது என்றும் சொல்லலாம்.

    என்னை ஒருமுறை அப்படித்தான் ஒரு சி.டி. ஸ்கேன் எடுக்கச்சொல்லி டாக்டர் அனுப்பினார். இதயத்தில் ஸ்டெத்-தை வைத்துப் பரிசோதித்துவிட்டு, வழக்கம்போல இசிஜியும் எடுத்துவிட்டு, இதயத்தில் ஏதோ பிரச்னை உள்ளது என்று சொல்லி அங்கே அனுப்பிவிட்டார். அடிமுட்டாளாகிய நானும், என் மீது அபரிமிதமான பாசம் கொண்ட முட்டாளாகிய என் மனைவியும் அங்கே சென்றோம். ரொம்ப தயக்கத்துப் பிறகு நான் அந்த டெஸ்ட்டை எடுக்க என்னை அனுமதித்தேன். முக்கியமாக, என் மனைவியை திருப்திப்படுத்தத்தான் அது.

    என் வலது மணிக்கட்டில் ஒரு ஊசியை ஏற்றி ஒரு குளிர் படுக்கையில் என்னைப் படுக்கவைத்து, சினிமாவில் வருவதுபோல என்னை எதற்குள்ளோ அனுப்பினார்கள். எனக்கு எடுத்த குளிரில், என் உடம்புக்குள் இருந்த பஞ்சபூதங்களும் உறைந்துபோயின. ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு ஒரு காரில் ஏறி வீட்டுக்குப் போகும் வழியில் வந்ததே ஒரு உதறல்! அதை இன்று நினைத்தால்கூட உதறுகிறது! என்னை யாரோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஜீனீ அல்லது விஸ்வரூபி அநாயாசமாக உறுப்பு உறுப்பாக தூக்கித் தூக்கிப் போட்ட மாதிரி ஒரு உதறல். என் வாழ்க்கையில் எனக்கு அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் அப்படி ஒரு உதறல் வந்ததில்லை. வீட்டு மாடியில் என்னைக் கைப்பிடித்து ஏற்றிய குண்டு டிரைவர்கூட பயந்துபோனார். டாக்டருக்கு ஃபோன் செய்து சொன்னபோது, ‘அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் மோர் குடிக்க வையுங்கள்’ என்று காஷுவலாகச் சொன்னாராம். மோர் குடித்த கொஞ்ச நேரத்தில் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்களின் வன்முறையான உதறல் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்றது.

    அந்த உதறல் டெஸ்ட்டுக்கு நான் கொடுத்த பணம் பதினோறாயிரம் ரூபாய்! விஷயம் அதுவல்ல. ரிபோர்ட்டை டாக்டரிடம் காட்டியபோது அவர், ‘நல்லவேளை இதயத்தில் ஒன்றும் பிரச்னை இல்லை’ என்று சொன்னார்! அடப்பாவி, இதயத்தில் ஒரு பிரச்னையும் இல்லை என்று சொல்வதற்கு எனக்கு 11,000 ரூபாய் செலவு வைத்து, என்னை ஏழாவது வானத்துக்கு கொஞ்ச நேரம் ஏன் அனுப்பிவைத்தாய் என்ற கேள்விக்கு விடையை டாக்டர் ஹெக்டேயும் ஹீலரும் உமரும்தான் எனக்குச் சொன்னார்கள்!

    அந்த விடையின் பெயர் கமிஷன்!


    நூறு ரூபாய்க்கு நீங்கள் டெஸ்ட் எடுத்தால், கிராமமாக அல்லது சிறு நகரமாக இருந்தால், குறைந்தது நாற்பது ரூபாய் மருத்துவருக்குப் போகிறது. அதுவே பெருநகரமாக இருந்தால் எழுபது ரூபாய் வரை போகும் என்கிறார் ஹீலர் உமர். 90 விழுக்காடு மருத்துவருக்குப் போகிறது என்கிறார் ஹெக்டே! நான் இந்த விஷயத்தில் டாக்டர் ஹெக்டே சொல்வதையே ஏற்றுக்கொள்கிறேன்! ஒருநாளைக்கு பத்து பேருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்க அனுப்பிவிட்டால் போதும். ஒருநாள் வருமானம் ஒரு லட்ச ரூபாய்! ஆஹா, மருத்துவ சோதனைக்கூடங்கள் வாழ்க! எம்.பி.பி.எஸ். படிக்க ஏன் கோடிகோடியாகக் கொட்டி செலவு செய்ய அலைகிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது!

    இப்போது ஒரு கேள்வி வருகிறது. இவ்வளவு சதவீதத்தை மருத்துவருக்கே கொடுத்துவிட்டால், சோதனைக் கூடங்களுக்கு என்னதான் கிடைக்கும்? அப்படியானால் அவர்கள் உண்மையில் சோதனை செய்வார்களா மாட்டார்களா?

    சுவாரஸ்யமான பதில்கள் காத்திருக்கின்றன.


    கிடைக்கும் பணத்தில் முக்கால்வாசியை கமிஷனாக டாக்டர்களுக்கே கொடுத்துவிட்டால், விலையுயர்ந்த உபகரணங்களையெல்லாம் வாங்கிப்போட்டிருக்கும் மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கு என்ன கிடைக்கும்? அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் எப்படிக் கொடுக்க முடியும்? மாநகரங்களில் அவை இருக்குமானால், மின்சாரத்திலிருந்து சம்சாரம் வரைக்குமான செலவுகளை எப்படி சமாளிப்பது? செலவுக்கு வழியில்லை என்றால், சம்சாரமே மின்சாரமாக மாறிவிடுமே! வெறும் சேவை மட்டும் செய்துகொண்டிருந்தால், சோறு யார் போடுவார்கள்? அப்படியானால், ஆய்வுக்கூடங்களில் உண்மையில் சோதனை செய்வார்களா, மாட்டார்களா?  இந்த கேள்வியோடு நிறுத்தியிருந்தோம். அதற்கான பதில்களை இனி பார்க்க இருக்கிறோம்.

பதில் 1

    நிச்சயம் சோதனை செய்வார்கள். ஆனால் மூன்று செய்ய வேண்டுமானால், முப்பதாக அதை மாற்றிக்கொள்வார்கள். அப்போதுதானே அநியாயமான கமிஷன்களைத் தாண்டி செலவுகளை சமாளிக்க முடியும்?! 27.05.2012-ல் நடந்த ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில், டாக்டர் குலாட்டி என்பவர்கூட இதுபற்றிக் கூறுகிறார் (இந்த யூட்யூப் முகவரியில் https://youtu.be/MasKaabFFvU காணக் கிடைக்கிறது). குணமடைந்துவிடலாம் என்று நம்பி மருத்துவமனைகளுக்கும் ஆய்வுக்கூடங்களுக்கும் செல்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. சுருக்கமாகச் சொல்வதானால், நாம் எல்லோருமே பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!



டாக்டர் குலாட்டி

    மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். ஆனால் சரியாகச் செய்வார்களா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. கட்டி என்று நினைத்துக் கருவை அறுத்து எறிந்துவிடலாம்(இந்த முகவரியில் https://reghahealthcare.blogspot.com/2024/06/12.html 'இரத்தக் கறையோடு எழுதுகிறேன்' என்னும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது). உமர் தன் நூலில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சியூட்டிய அனுபவம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். எனவே, செய்யப்படும் சோதனைகள் மிகமிகத் தவறானவையாகப் போய்விடும் சாத்தியம் எப்போதுமே உள்ளது.

பதில் 2

    எவ்வளவு சரியாகச் செய்தாலும் அது தவறான பரிசோதனைதான். இதுபற்றி ஏற்கெனவே பார்த்தோம். இங்கே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். உதாரணமாக, ரத்தப் பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம்.

    விரல் நுனிகள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களிலிலிருந்து நமக்கு ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கப்படுகிறது. தசைகளில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது என்றும் இதைச் சொல்லலாம். ‘நரம்புல ஊசி போட்டார்’ என்று பேச்சுவழக்கில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். நம் உடலுக்குள் சிரைகள், தமனிகள் என்று இரண்டு சமாச்சாரங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை முறையே வெய்ன் (Vein) என்றும் ஆர்ட்டரி (Artery) என்றும் குறிப்பிடுவார்கள். சிரையைத்தான் நாம் ‘நரம்பு’ என்று குறிப்பிடுகிறோம். சரி, இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்கிறீர்களா? இதோ, சொல்லத்தானே போகிறேன்.

    நாம் நம் வீட்டில் இருக்கும் தண்ணீர் சுத்தமானதா அசுத்தமானதா என்று பரிசோதிக்க வேண்டுமென்றால், எந்தத் தண்ணீரை எடுத்துக்கொள்வோம்? குடிப்பதற்கான தண்ணீரைத்தானே? நம் வீட்டு சாக்கடை நீரையோ, கழிவறை நீரையோ பரிசோதிப்போமா? இல்லைதானே? ஏன்? இது என்ன முட்டாள்தனமான கேள்வி, அவை குடிநீருமல்ல, சுத்தமான நீருமல்ல என்பதுதானே உங்கள் பதில்? சரிதான். ஆனால், ரத்தப் பரிசோதனைக்கு மட்டும் ஏன் எல்லோரும் அசுத்த ரத்தத்தையே பரிசோதனைக்குக் கொடுக்கிறீர்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

    என்னது, அசுத்த ரத்தமா? இல்லையே, என் உடம்பிலிருந்து, என் நரம்பிலிருந்து, என் தசையிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம்தானே என்றுதானே சொல்வீர்கள். அங்கேதான் பிரச்னையே. என்ன பிரச்னை என்கிறீர்களா? சொல்கிறேன்.

    நம் உடலில் எந்நேரமும் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. அவை அவ்வப்போது நீக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. நம் உடலின் முக்கிய உள்ளுறுப்புகளான கல்லீரல், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளின் துணைகொண்டு இக்காரியங்கள் நடந்தேறுகின்றன. நீக்கப்பட்ட கழிவுகள் ரத்தத்தில் கலந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன. எனவே, சதாகாலமும் கழிவுகள் சேருவதும், அவை நீக்கப்படுவதுமான இரண்டு காரியங்களும் இரவு பகல் மாதிரி, மாறி மாறி நம் உடலுக்குள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதற்கேற்றவாறு கழிவுகளைச் சுமந்து செல்லும் ரத்தம் அசுத்த ரத்தமாகவும், கழிவுகள் நீக்கப்பட்ட ரத்தம் தூய்மையான ரத்தமாகவும் மாறி மாறி இருந்துகொண்டே இருக்கும்.

    எனவே, நச்சுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் சுத்த ரத்தம். கழிவுகளைச் சுமந்து செல்லும் ரத்தம் அசுத்த ரத்தம் என்று இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம். தமனிகளில் சுத்த ரத்தம் இருக்குமென்றும், சிரைகளில் அசுத்த ரத்தம் இருக்குமென்றும் அலோபதி கூறுகிறது. அதோடு, ஆக்ஸிஜன் கலக்கப்பட்ட ரத்தமே சுத்த ரத்தம் என்றும் கூறுகிறது. அது உண்மைதான். ஆனாம் முழு உண்மையல்ல. எல்லா நச்சுகளும் நீக்கப்பட்ட ரத்தமே சுத்த ரத்தம். அதற்கு ஆக்ஸிஜனின் சேர்க்கை உதவலாம். அது வேறு விஷயம். சரி, இப்போது மிக முக்கியமான விஷயத்துக்கு வரலாம். அது என்ன?

    நமக்கு எங்கிருந்து ரத்தம் எடுக்கிறார்கள் என்று பார்த்தோம்? விரல் நுனிகள், முழங்கைப் பகுதி, மணிக்கட்டு இப்படித்தானே? அவையாவும் சிரைகளில் இருக்கும் அசுத்த ரத்தம்தான்! நம் “தசையின் மேற்பகுதியில் இருந்து எங்கு எடுத்தாலும் அசுத்த ரத்தம்தான் கிடைக்கும்” என்கிறார் ஹீலர் உமர்.

    தமனிகள் தசைக்குக் கீழே, ஆழத்தில் உள்ளன. அவற்றில் சுத்த ரத்தம் இருக்கும் (என்றே வைத்துக் கொள்வோம்). ஏனெனில், மிகச்சரியாக இங்கே, இதோ இந்தப் புள்ளியிலிருந்து சுத்த ரத்தம் ஆரம்பமாகிறது என்றோ, இங்குதான் அசுத்த ரத்தம் இருக்கிறது என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், உடல் தனித்தனி பாகங்களாக இயங்குவதில்லை. அது ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்படும் அற்புத அமைப்பு. அலோபதி சொல்வதுபோல, ஒரு பேச்சுக்காக தமனிகளில்தான் சுத்த ரத்தம் உள்ளதாக வைத்துக்கொண்டாலும், தமனிகளை நெருங்க தசையை ஆழமாகக் கிழிக்கவேண்டி இருக்கும்! அப்படிச் செய்தால், அதுவரை உள்ள சிரைகளும் சேர்ந்துதான் கிழியும். எனவே, ஒன்றிருந்து நூறுக்குச் செல்வதற்குள் தொன்னூற்று ஒன்பதும் வருவதுபோல, தமனிகளை நெருங்குவதற்குள் பல சிரைகளைக் கிழித்துத் தாண்டவேண்டி இருக்கும்.

    அப்படியானால் என்ன அர்த்தம்? ஒரே அர்த்தம்தான். சுத்த ரத்தத்தை மட்டும் எடுத்தல் சாத்தியமே இல்லை! ஏனெனில், தமனியை நெருங்கி அதை எடுப்பதற்குள் கிழிபட்ட சிரைகள் வழியாக அசுத்த ரத்தமும் சுத்த ரத்தத்தோடு கலந்துவிடும்!

    அப்படியானால்?  பரிசோதனைக்காக எடுத்து அனுப்பப்படும் எல்லா ரத்தமும், எல்லாருடைய ரத்தமும், அது கோட்சேயுடையதானாலும் சரி, காந்தியுடையதானாலும் சரி, அசுத்த ரத்தம்தான்!  கழிவுகள் அதில் இருக்கத்தான் செய்யும். எனவே, அதைப் பரிசோதித்து இன்னின்ன கழிவுகள் இருக்கின்றன என்று சொன்னால் அதில் அர்த்தமே இல்லை. ஏனெனில், அக்கழிவுகள் யாவும் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியவை. நீங்கள் லேப் ரிபோர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் டாக்டரைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கும் போதுகூட அவை சுத்தப்படுத்தப்பட்டு விடலாம்!

    எனவே, எல்லா மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகளும் பழைய செய்திகளாகும்! இன்றின் செய்தி, இப்பொழுதின் செய்தி அதில் இருக்க வாய்ப்பே இல்லை!

பதில் 3

    இதுதான் மிக மோசமானது. கல்லூரிக்குப் போகாமலே சில மாணவர்கள், அப்படிப் போகாத பல நாட்களுக்கும் ‘அட்டெண்டன்ஸ்’ வாங்கிவிடுவார்கள்! ஆமாம், கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கை வேண்டியதைக் கொடுத்து ‘வாங்கிவிடுவார்கள்’!. அதேமாதிரி, டெஸ்ட் எதுவும் எடுக்காமலே, எதையும் நுண்ணோக்கி வழியே பார்க்காமலே, எதையும் அலசி ஆராயாமலே, எல்லாமே நார்மலாக இருக்கிறது என்று ‘ரிசல்ட்’ கொடுத்துவிடுவதும் உண்டு! சில உதாரணங்கள் தருகிறேன்.

பேசின் டெஸ்ட் அல்லது சிங்க் டெஸ்ட்

    இதுபற்றி 27.05.2012-ல் நடந்த ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியிலும் சொல்லப்பட்டது. 40 - 50% கமிசன் கேட்கும் மருத்துவர்கள் குறித்த தகவல்களைக் காண இந்தக் காநோளியைப் பாருங்கள்.


    இதுபற்றியும் இன்னும் பல மருத்துவ நிறுவனங்களின் மோசடிகள் பற்றியும் மனசாட்சியுள்ள இரண்டு மருத்துவர்கள், டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் ஷுக்லா இருவரும் இணைந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். “Dissenting Diagnosis”  என்பது அதன் தலைப்பு. அதில் மனசாட்சியுள்ள 78 டாக்டர்கள், மருத்துவ நிறுவனங்களைத் தோலுரித்துக் காட்டுவதை அவர்கள் இருவரும் பதிவு செய்துள்ளனர். (இந்த புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள். https://t.me/generalelibrary/937). அந்த நூல் பற்றி சற்று விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதிலும் பேசின் டெஸ்ட் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அது என்ன பேசின் டெஸ்ட்?

    ரொம்ப சிம்பிள். ‘டெஸ்ட்’ என்ற பெயர் இருந்தாலும் அது ஒரு ‘டெஸ்ட்’டே அல்ல. ஆமிர்கான் சொல்வதுபோல, உங்களது ரத்தம் அல்லது சிறுநீர் இவற்றைப் பரிசோதனைக்காக எடுத்து வாங்கி, அப்படியே எடுத்துக் கொண்டுபோய் கைகழுவும் வாஷ் பேசினில் கொட்டிவிடுவார்கள்! அல்லது ‘சிங்க்’கில் கொட்டிவிடுவார்கள்! ஆனால், எல்லாம் நார்மலாக இருப்பதாக அறிக்கை கொடுப்பார்கள்! ஏனெனில், அந்த நோயாளியை ஏற்கெனவே பரிசோதித்த மருத்துவர், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டுதான் அவரை ஏகப்பட்ட ‘டெஸ்ட்’டுகள் எடுத்துவரும்படி அனுப்புவார்!

    இதுதான் ‘பேசின் டெஸ்ட்’ அல்லது ‘சிங்க் டெஸ்ட்’. இதில் நோயாளிகளுக்குதான் மனஉளைச்சல். என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு ‘டெஸ்ட்’டுக்கு ரத்தம் கொடுப்பதென்பதெல்லாம் பயங்கர பிரச்னை. ஊசியைக் கண்டாலே நான் ஊரைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவேன். என்னைப் போன்ற ஒருவரைப் பிடித்து, கையை இறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, அதில் ஏதோ ஒன்றைச் சுற்றி, ஏதோ ஒரு திரவத்தைக் கொஞ்சம் என் நரம்பு மேலே தேய்த்து, ஊசியை எடுத்து என் நரம்புக்குள் செலுத்தும்போது… அப்பப்பா, அது நரகவேதனை!

    என் நண்பர் ஒருவருக்கு சிறுநீருக்குப் பதிலாக ரத்தம் வந்தது. அவரை நானும் இன்னொரு நண்பரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ‘டெஸ்ட்’டெல்லாம் முடிந்து என் நண்பர் மெல்ல மெல்ல முனகிக்கொண்டே வந்தபோது, அந்த இன்னொரு நண்பர் சொன்னார்: ‘டேய் உனக்கு ப்ளட் டெஸ்ட் எடுக்குறது ரொம்ப ஈஸிடா. யூரின் டெஸ்ட் எடுக்குறதுதான் கஷ்டம்’ என்றார்!

    ஒருமுறை, அப்போதைய பம்பாயில் நான் மெடிக்கல் செக்கப்புக்காக ரத்தம் கொடுத்தேன். (வெளிநாட்டு செல்ல முயற்சி). கொஞ்ச நேரத்தில் என் முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது. ரத்தம் எடுத்த பெண் டாக்டர் அல்லது நர்ஸ் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஹிந்தியில், ‘க்யா தும்கொ ச்சக்கர் ஆகயா?’ என்றாள். எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ரத்தம் எடுத்தபோது மயங்கி விழுந்திருக்கிறேன்! காலையில் சாப்பிடாதது மட்டும் அதற்குக் காரணமல்ல. ஊசியைப் பார்த்ததுதான் முக்கியமான காரணம். அது மாட்டு ஊசி மாதிரி வேறு இருந்து தொலைத்தது!   

    இப்படியெல்லாம் பயப்படுபவர்களை சித்திரவதை செய்து ரத்தம் எடுத்து, அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு, அந்த ரத்தத்தை வாஷ்பேசினில் கொட்டிவிட்டு, நார்மல் என்று அறிக்கை கொடுக்கிறார்களே, இதில் என்ன தர்மம் இருக்கிறது? என் பாட்டி இப்போது உயிருடன் இருந்தால், ‘அவன்லாம் ரத்த வாந்தி எடுத்து சாகணும்’ என்று சாபம் கொடுத்திருப்பாள்!

    நாம் சாபம் கொடுக்க வேண்டாம். ஆனால், அவர்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பாவம் செய்யாமலாவது இருக்கலாமல்லவா?

    இன்னொரு முக்கியமான விஷயத்தை உமர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன் “நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்ட எல்லா ரசாயன மருந்துகளும் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் விளைவாக ரத்தத்திலுள்ள பொருட்களின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்” என்கிறார்.  ஆனால், இப்போது அந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதனால், மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகள் குழப்பங்கள் மிகுந்ததாக இருக்கின்றன என்றும் அவர் மிகச்சரியாகக் கணிக்கிறார்.

ரத்தப் பரிசோதனை ரகசியம் ஒன்று

    ஒரே ஒரு துளி ரத்தத்தை எடுத்து அதில் உள்ள கோடிக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான வெள்ளை அணுக்களை எண்ணி மிகச்சரியாகச் சொல்ல முடியுமா? ஏன் முடியாது? ஒரு கால்குலேட்டர் இருந்தால் சொல்லிவிடலாம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? மருத்துத் துறையின் மோசடி ஆச்சரியங்கள் இன்னும் நிறைய உண்டு. பார்க்கலாம்.


    நம்மிடமிருந்து ஆய்வுக்கூடத்தில் (குத்தி) எடுக்கப்பட்ட ஒரு துளி ரத்தத்தோடு சில வேதிப்பொருள்களைக் கலப்பார்கள். அதன் விளைவாக வெள்ளை அணுக்களைத் தவிர்த்த வேறு அணுக்களையெல்லாம் கொன்றுவிடுவார்கள். கொலைகாரர்கள்! கௌன்டிங் சேம்பர் (Counting Chamber) என்று ஒரு கண்ணாடிக் கருவி அல்லது தட்டு இருக்கும். அதன் மீது மற்ற அணுக்கள் கொல்லப்பட்ட, வெள்ளை அணுக்கள் மட்டும் உள்ள நம் ரத்தத்தின் துளியைச் செலுத்துவார்கள். அந்தக் கண்ணாடிக் கருவி, சதுரம் சதுரமான அமைப்பை கொண்டது. அந்தச் சதுரங்களில் போய் நம் வெள்ளை அணுக்கள் தங்கிவிடும். தனக்கான அறை என்று நினைத்துக்கொள்ளுமோ என்னவோ! இப்படி வெள்ளை அணுக்கள் போய் அதில் படிந்தபின் மைக்ராஸ்கோப் மூலம் பார்ப்பார்கள்.

    வெள்ளை அணுக்களை மட்டும் பிரித்தெடுப்பது சாத்தியமா என்ற கேள்வி நியாயமானதே. ஆனால், இதற்குப் பதில் எனக்குத் தெரியாது. அப்படித்தான் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் இருக்கிறது. இங்கே முக்கியம் நம்முடைய அறிவார்ந்த கேள்வி அல்லது சந்தேகம் அல்ல. WBC Count எப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்வதுதான் இங்கே முக்கியம்.

    கண்ணாடிக் கருவியின் நான்கு மூலைகளிலும் தங்கி இருக்கு வெள்ளை அணுக்களைக் கூட்டுவார்கள். உதாரணமாக 115 வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை 50-ஆல் பெருக்கிவிடுவார்கள். 5750 வரும். அதுதான் ஒரு சதுர மில்லி மீட்டர் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் அளவு என்கிறார் உமர்! கூட்டல் ப்ளஸ் பெருக்கல்! தட்ஸ் ஆல்!

    எல்லா சதுர மில்லி மீட்டர் ரத்தத்திலும் இதே அளவுதான் இருக்குமா? சொல்ல முடியாது. ஆம்பூர் பாஷையில் சொல்வதானால், கொஞ்சம் ‘கம்மி ஜாஸ்தி’ இருக்கலாம்! வெள்ளை அணுக்களுக்கு மட்டுமல்ல. சிவப்பு அணுக்கள், பச்சை அணுக்கள், கருப்பு அணுக்கள் என்று எத்தனை இருந்தாலும், எல்லாவற்றுக்கும் இதே கணக்குதான். இந்தக் கணக்கை மில்லியன் கணக்கிலும் போட்டுச் சொல்லலாம். எண்களை ஒழுங்காக அழுத்தினால், கால்குலேட்டர் என்ன தவறாகவா சொல்லப்போகிறது!

    நம் ரத்தத்தில் ப்ளேட்லெட்டுகள் என்று சொல்லப்படும் ரத்தத்தட்டுகளும் உண்டு. அதை இதே பாணியில் லட்சக்கணக்கில் அளந்து சொன்னால், நமக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யலாம்!

ஹார்மோன் பொய்கள்

    வெள்ளை அணுக்களை அளந்த மாதிரி நம் உடலில் உள்ள ஹார்மோன்களையும் எண்ணாமலே எண்ணிச் சொல்ல முடியும்! ஹார்மோன் பரிசோதனைகளின் மூலம்தான் ஒரு நோயாளிக்கு என்ன நோய் அல்லது என்னென்ன நோய்கள் வந்துள்ளன என்று சொல்ல முடியுமாம்!



    ஹார்மோன் என்றதும் எனக்கு மீண்டும் ஆமிர் கானின் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு அப்பாவையும் மகளையும் அவர் பேட்டி காண்பார். அன்பு மனைவியை ஆபரேஷன் என்ற பெயரில் நடந்த கொலைக்குப் பலி கொடுத்த குடும்பம் அது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி அவர் மனைவியை ‘அட்மிட்’ செய்து ஆபரேஷனுக்கு முதல் நாள், உங்கள் மனைவிக்கு பாங்க்ரியாஸைக்கூட (கணையம்) மாற்றிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்! ஏனென்றால், அவர்களிடம் ஒரு எக்ஸ்ட்ரா கணையம் இருந்திருக்கிறது! கணையம்தான் இன்சுலின் என்ற மிகமுக்கியமான ஹார்மோனைச் சுரக்கும் உறுப்பாகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றிவிட முடியாது என்பதையும், அவ்வாறு மாற்று உறுப்பு பெற்றுக் கொண்டவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்ததாக சரித்திரம் கிடையாது என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். சரி, மீண்டும் ஹார்மோன் பரிசோதனைக்கு வருவோம். 

    நம் உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் பல இடங்களில் அமைந்துள்ளன. அவைதான் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. பின் அவை ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த ஹார்மோனைத்தான் பரிசோதனை என்ற பெயரில் ஏதோ செய்து உங்களுக்கு இன்னின்ன நோய்கள் இருக்கின்றன அல்லது வரப்போகிறன என்கிறார்கள்! அது சரியா?

    கேள்விக்கான பதில் இல்லை என்பதுதான். ஏன்? ஏனென்றால், ஹார்மோன்களின் தன்மைதான் காரணம். வெப்பமும் காற்றும் இருந்தால் ஹார்மோன்கள் குஷியாகிவிடும். அந்த ‘ரொமான்டிக்’கான சூழலில் அவற்றோடு வினைபுரிய ஆரம்பிக்கும். அப்போது மாறுதல்கள் ஏற்படும். ஆனால், பரிசோதனை செய்யப்படும் ஹார்மோன்களில் இப்படி நடக்காது. ஏன்?

    ஹார்மோன் பரிசோதனைக்காக ரத்தத்தை எடுத்து, பத்திரமாக பாட்டில்களில் ‘பேக்’ செய்து கூரியரில் மும்பைக்கு அனுப்பிவிடுவார்கள். மூன்று நான்கு நாட்கள் கழித்து அது ஹார்மோன் பிணமாகப் போய்ச்சேரும். அப்படிப் பரிசோதிக்கப்படும் ரத்தத்தில் ஹார்மோனின் அளவு எப்படி சரியாக இருக்கும்?

    அதுமட்டுமல்ல. ஹார்மோன்கள் தான்தோன்றித்தனமாக இயங்குபவை அல்ல. மற்ற ஹார்மோன்களோடு இணைந்து, விட்டுக்கொடுத்து செயல்படுபவை. அட்ரீனலின் சுரக்கும்போது இன்சுலின் சுரக்காது, இன்சுலின் வெளியே வந்தால், அட்ரீனலின் கல்லீரலுக்கு உள்ளே போய்விடும் என்பதையெல்லாம் ஏற்கெனவே பார்த்தோம்.

    அதுமட்டுமல்ல. ஹார்மோன்கள் நம் உணர்ச்சிகளோடு தொடர்புகொண்டவை. உணர்ச்சி என்றாலே, உடலுக்குள் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் என்றுதான் அர்த்தம். ரொம்ப குஷியாக உணர்கிறீர்களா?  உங்கள் ‘மூடு’ மாறிக்கொண்டே இருக்கிறதா? செரடோனின் என்ற ஹார்மோனின் வேலை அது.  செரடோனினுக்கு ‘சந்தோஷ ஹார்மோன்’ என்று இன்னொரு பெயர்கூட உண்டு. பசி அதிகமானால், அது ஆரக்ஸின் என்ற ஹார்மோனில் வேலை. அச்சம் வந்துவிட்டால், ஓடு என்று சொல்வது அட்ரீனலினின் வேலை. உடலுறவில் உச்சகட்டத்தை உணர வேண்டுமா? ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் வேலை செய்ய வேண்டும்! தாய்ப்பால் சுரக்கவும் அதுதான். பகலில் தூக்கம் தூக்கமாக வருகிறதா? மெலடோனின் ஹார்மோன் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம்.

    நிலைமை இப்படி இருக்கும்போது, ஆறப்போட்ட ஹார்மோன்களை வைத்து சரியான முடிவுகளை எப்படிச் சொல்ல முடியும்?

    மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைகளைவிட கால்குலேட்டர்களே முக்கியமானவை. அவற்றின் கணக்கீடுகளின் அடிப்படையில்தான் நாம் நம் உடல் நலத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று ஹீலர் உமர் சொல்வது சரிதானே?

    நன்றி: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? அ. உமர் பாரூக். எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 2014.