நலம் நலமறிய ஆவல் - 07. எவ்வளவு கொழுப்பு?

 

   



    ரு புதிரில் தொடங்கிக் கொள்ளலாமா? ஒரு பொய்யை ரொம்ப அழகாக, ‘ஆதாரங்களுடன்’, ஏற்றுக் கொள்ளும்படியாக உங்களால் சொல்ல முடியும் என்றால், உங்கள் பெயர் என்ன?

நீங்கள் நினைத்த பதில் தவறு. நான் சொல்கிறேன். உங்களது மிகச்சரியான பெயர் விஞ்ஞானம்! ஆமாம். விஞ்ஞானத்தின் வரலாறு அழகான, முக்கியமான தவறுகளின் வரலாறுதான். வரலாற்றை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு இது இந்நேரம் புரிந்திருக்கும்.

விஞ்ஞானத்தையே குறை சொல்கிறாயா? நீ என்ன பெரிய ஞானியா? என்று நீங்கள் கேட்கலாம். நான் ஞானியுமல்ல, விஞ்ஞானியுமல்ல. ஆனால், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன். யார் சொன்னாலும், என்ன சொன்னாலும் அதிலுள்ள உண்மை பற்றிச் சிந்திப்பேன். சரியாகப்பட்டால் எடுத்துக்கொள்வேன்.

விஞ்ஞானத்தின் ஒட்டுமொத்த வரலாறும் ஒதுக்கித்தள்ள வேண்டியதல்ல. ஆனால், விஞ்ஞானப்பூர்வமானது என்று சொல்லிவிட்டாலே, அது பக்தியோடு நம்பிச் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில், கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ரால் பற்றியும், கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு பற்றியும், விஞ்ஞானம் எத்தனை பொய்களைச் சொல்லிக் ‘கொழுத்துக்’ கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லிவிடுவது என் கடமை. அதனால்தான் இப்படி கொஞ்சம் கொழுப்பெடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்!

கொழுப்பா கொலஸ்ட்ராலா

கொழுப்பு என்பது தமிழ்ச்சொல். கொலஸ்ட்ரால் என்பது அதைக் குறிக்க மருத்துவ உலகில் உலா வரும் ஆங்கிலச் சொல் என்று நினைத்தால் அது தவறாகும். கொழுப்பு வேறு, கொலஸ்ட்ரால் வேறு. ஆனால், இருவரும் சக பயணிகள். ஒரே குடையின் கீழ் வரும் நண்பர்கள். அந்தக் குடையின் பெயர் லிபிட் (Lipid).

அக்குடையின் கீழ் கொழுப்பு, கொலஸ்ட்ரால், எண்ணெய், ட்ரைகிளிசரைடு எனப்படும் சமாசாரம், மெழுகு மாதிரியான பொருள்கள், ஸ்டிரால்கள் (Sterols) எனப்படும் பொருள்கள் எல்லாம் வரும். அவை பற்றியெல்லாம் இங்கே தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மிகச்சரியாகச் சொல்வதானால், இவை அனைத்தையும் ‘லிபிட்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாம் சொல்வதில்லை. (நமக்குத்தான் தெரியாதே)! கொலஸ்ட்ராலும் நம்மைப் பொறுத்தவரை ஒருவகையான fat-தான்.

கொலஸ்ட்ராலுக்கு இணையான தமிழ்ச்சொல் இதுவரை கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் உள்ள fat என்பதைக் ’கொழுப்பு’ என்று தமிழ்ப்படுத்தலாம். கொழுப்பு (Fat), கொலஸ்ட்ரால் (Cholesterol) இரண்டின் வேலைகளும் வேறு வேறு. கொலஸ்ட்ரால் என்பது ‘ஃபேட்’டைவிட சிக்கலானது. பலவிதமான வேதிப்பொருள்களால் ஆனது.

பொதுவாக, நாம் இந்த உணவில் அவ்வளவு கொழுப்பு உள்ளது; அந்த உணவில் இவ்வளவு கொழுப்பு உள்ளது என்று பேசும்போது, உடலுக்குத் தேவைப்படும் ‘கலோரி’ எனப்படும் எரிசக்தியைத்தான் குறிப்பிடுகிறோம். உதாரணமாக பர்கர், பீட்ஸா போன்ற ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்களில் குறைந்தது 50 கிராம் கொழுப்பு இருக்கும். அதிலிருந்து 450 கிராம் கலோரி கிடைக்கும். ஆனால், கொலஸ்ட்ராலை பொறுத்தவரை விஷயமே வேறு.


அதற்காக, கொலஸ்ட்ராலினால் அபாயம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடவும் கூடாது. அதிகமான கொலஸ்ட்ராலினாலும் செறிவூட்டப்பட்ட கொழுப்பினாலும் (Saturated Fat) ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படவும், இதயத்தில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. (இதில் எந்த அளவுக்கு உண்மையுள்ளது என்று பின்னர் பார்க்கலாம்).

சாதாரணமாக நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருள்களில் இருந்தும் ஒரு கிராமுக்கு மேல் கொலஸ்ட்ரால் கிடைப்பதில்லை! அவ்வளவு குறைந்த அளவு கொலஸ்ட்ராலிலிருந்து நமக்கான எரிசக்தியான கலோரிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. இது கொலஸ்ட்ராலுக்கும் கொழுப்புக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசமாகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுப்பொருள்கள் என்று நாம் பிரித்துப் பேசினாலும், எல்லா உணவுப் பொருள்களிலும் கொழுப்புச் சத்து இருக்கத்தான் செய்கிறது. இறைச்சிக் கறி, வெண்ணெய், நெய் போன்றவற்றில்தான் கொழுப்புச் சத்து இருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமே தவிர, எல்லா உணவுப் பண்டங்களிலும் கொழுப்புச் சத்து இருக்கவே செய்கிறது.

கொலஸ்ட்ராலுக்கும் கொழுப்புக்கும் இடையிலுள்ள ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே நீரில் கரையாது. லிபிட்கள் அனைத்துமே நீரில் கரையாத்தன்மை கொண்டவைதான். இது நமக்கு மிக முக்கியமான தகவல். ஏன் என்று பிறகு சொல்கிறேன்.


கொலஸ்ட்ராலை நம் உடல்தான் தயாரிக்கிறது! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? ஆம். நம் கல்லீரல்தான் கொலஸ்ட்ரால் எனப்படும் வேதிக்கூட்டுப் பொருளை உருவாக்கும் தொழிற்சாலை! நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களை உருவாக்குவதற்கும், அவற்றை இணைப்பதற்கும், அவற்றுக்கான பாதுகாப்புக் கோட்டையை உருவாக்குவதற்கும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது! எனவே, உணவுப் பண்டங்களிலிருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் எல்லாம் ‘ஓசி’யாகக் கிடைக்கும் ‘எக்ஸ்ட்ரா’தான்! உணவுப் பண்டங்களிலிலிருந்து கிடைக்கும் கொலஸ்ட்ராலை ‘டயட்டரி கொலஸ்ட்ரால்’ (Dietary Cholesterol) என்று கூறுவார்கள். இனி கொலஸ்ட்ரால் பற்றிய சில பொய்களைப் பார்க்கலாம்.

பொய் 1 - அதிகக் கொழுப்புள்ள உணவுப்பொருள்கள் இதய நோயை உண்டாக்கும்.

அதிகமாக உண்ணுதல், மிகக்குறைவாக உண்ணுதல், மிருகக் கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக உண்ணுதல், புகைப்பிடித்தல், கார்களிலிருந்து வெளியாகும் புகை, மனஇறுக்கம், அதிக உடல் எடை, உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லாமல் இருத்தல், உட்கார்ந்து கொண்டே இருத்தல் – இப்படி, மாரடைப்பு (இதய நோய்) ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏன், குறட்டை விடுவதுகூட ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது! அடப்பாவிகளா, நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நீங்கள் புலம்புவது என் காதில் விழுகிறது! என்ன செய்வது, நானும் உங்கள் ஜாதிதான்!

மேற்கண்ட லிஸ்ட்டில் ஒன்றுதான், மிருகக் கொழுப்புள்ள உணவுகளை உண்பதால் மாரடைப்பு வருகிறது என்ற கருத்து. இந்தக் கருத்து தவறானது என்பதை இரண்டு வரைபடங்களை வைத்து டென்மார்க் டாக்டரான உஃபெ ராவன்ஸ்கோவ், The Cholesterol Myths என்ற தன் நூலில் விளக்குகிறார். எந்தெந்த ஊரில் எவ்வளவு கொழுப்புணவு சாப்பிட்டார்கள்; அதனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதைப் பற்றிய வரைபடம் ஒன்று.

இன்னொரு படம், டாக்டர் ராவன்ஸ்கோவ் தயார் செய்தது. எந்தெந்த ஊரில் எவ்வளவு வரி வசூல் செய்திருக்கிறார்கள், அந்தந்த ஊரில் எத்தனை பேர் மாரடைப்பால் இறந்துள்ளார்கள் என்ற படம்! எனவே, ஒரு ஊரில் குறிப்பிட்ட பணத்துக்கு மேல் வரிவசூலிக்கவே இல்லையென்றால், அங்கே வாழும் மனிதர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு சாத்தியமே இல்லை என்று கிண்டலாக முடிக்கிறார்! ஏற்கெனவே எடுத்துவிவிட்ட முடிவுகளெல்லாம் சரி என்று காட்டத்தானே வரைபடங்களெல்லாம்!

சிகரெட்டில் உள்ள நிகோடின் காரணமாக, தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் கைவிரல்கள் மஞ்சளாகிப்போவது இயற்கை. இவ்வாறு மஞ்சள் விரல்கள் கொண்டவர்களுக்கு மாரடைப்பு வருவதாக அமெரிக்காவில் செய்யப்பட்ட கருப்பு ஆராய்ச்சிகள் கூறின!

கைவிரல்களின் மஞ்சள் நிறத்தைச் சுரண்டி எடுத்துவிட்டால் மாரடைப்பு வராமல் போகுமா என்று கேட்கிறார் டாக்டர் ராவன்ஸ்கோவ்! மஞ்சள் பற்றிய அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள் பச்சைப் பொய் என்பதை நிரூபிக்கும் கேள்வி! மறுபடியும் வள்ளுவர்தான் ஞாபகம் வருகிறார். நோய் நாடி என்பது முதல் கட்டம். நோய் முதல் நாடி என்பதுதான் அடுத்த கட்டம். அடுத்த கட்டத்துக்கே போக விரும்பாத நாடு அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவை உதாரண நாடாக நாம் எடுத்துக்கொண்டால், பாசக்கயிறைப் பற்றிப் பிடித்துக் கொண்டதாகத்தான் அர்த்தம். ஆஹா, அமெரிக்கா வல்லரசா, கொல்லரசா என்று பட்டிமன்றமே நடத்தலாம்போல் இருக்கிறதே!

டாக்டர் கீஸின் ஆராய்ச்சிகளின் முடிவு

மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் ஃபிசியாலஜி ஹைஜீன் பரிசோதனைச்சாலையின் இயக்குநராக இருந்த டாக்டர் கீஸ் (Dr Keys), ஓர் ஆராய்ச்சி செய்தார். நெதர்லாந்து, ஃபின்லாந்து, யுகோஸ்லாவியா, ஜப்பான், கிரீஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகளிலும் 40 முதல் 59 வயது வரை இருந்த பதினாறு பேரிடம் அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஐந்து ஆண்டுகள் அந்த ஆராய்ச்சி நடைபெற்றது. எத்தனை பேர் மாரடைப்பால் இறந்தனர், அதற்கான காரணங்கள் என்ன என்றெல்லாம் ஆராயப்பட்டது. கடைசியில், கீஸ் அந்த முடிவுக்கு வந்தார். அதாவது, அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்டவர்கள் மாரடைப்புக்கு ஆளாயினர். கொழுப்புச்சத்து அற்ற உணவு வகைகளை உண்டவர்களுக்கு மாரடைப்பு ரொம்ப அரிதாகவே வந்தது. எனவே, மாரடைப்புக்கான காரணம் மிருகக் கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதுதான் என்ற முடிவுக்கு வந்தார்.

ஏழு நாடுகளை ஆராய்ந்து அப்படி ஒரு முடிவுக்கு வந்த அவர், ஒரே நாட்டுக்குள்ளேயே இரண்டு வேறு வேறு பகுதிகளில் இருந்த மக்களுக்கு ஏன் அப்படியொரு விளைவு ஏற்படவில்லை என்பது பற்றிப் பேசவில்லை.

ஃபின்லாந்தின் கரேலியா என்ற பகுதியில் 817 பேரும், துர்க்கு என்ற பகுதியில் 860 பேரும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆராய்ச்சியும் ஐந்து ஆண்டுகள் நடந்தது. கரேலியாவில் 42 பேருக்கும், துர்க்குவில் 15 பேருக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த ஐந்து ஆண்டுகளில், கரேலியாவில் மாரடைப்பால் 16 பேர் இறந்தனர். ஆனால், துர்க்குவில் நான்கு பேர்தான் அப்படி இறந்தனர்.

அந்தக் கண்டுபிடிப்பில் ஒரு விஷேஷம் இருந்தது. கீஸின் ஆராய்ச்சி தவறானது என்பதை அதுதான் நிரூபித்தது. அது என்ன? கரேலியாவிலும் துர்க்குவிலும் வாழ்நிலை ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. இரண்டு பகுதியிலும் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் அனைவருமே மிருகக் கொழுப்புள்ள உணவைத்தான் உட்கொண்டார்கள், புகைப்பிடித்தார்கள். அவர்களுடைய உயரம், எடையெல்லாம் கூட கிட்டத்தட்ட சமமாகவே இருந்தன! ஆனாலும், ஒரு பகுதியில் அதிகமானவர்களும், இன்னொரு பகுதியில் மிகமிகக் குறைவானவர்களும் மாரடைப்பால் இறந்துள்ளனர்!

ஒரு நாட்டுக்குள்ளேயே ஒரே மாதிரியான உணவுப் பழக்கமும், வாழ்முறையும் கொண்டவர்களுக்கு மத்தியில் எப்படி அந்தக் கொழுப்பால் ஓரவஞ்சனை காட்ட முடிந்தது என்று டாக்டர் கீஸுக்கு விளங்கவே இல்லை! அந்தச் சோதனையின் முடிவுகளால், கொலஸ்ட்ரால் இல்லாமலே அவருக்கே ‘ஹார்ட் அட்டாக்’ வந்துவிடும்போல் இருந்தது!

முதல் உலகப் போருக்குப் பிறகான காலத்திலிருந்து 1980-கள் வரை, மிருகக் கொழுப்புள்ள உணவைச் சாப்பிடும் மக்கள் குறைந்துபோயினர். ஆனால், பல நாடுகளில் மாரடைப்பால் காலமாகும் மனிதர்கள் அதிகமாயினர்! கொழுப்புக்கும் இறப்புக்கும் தொடர்பில்லை என்ற உண்மை திரும்பத் திரும்ப பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகிக் கொண்டே போனது.

சம்பூருகளும் மசாய்களும்

பேரா. ஜார்ஜ் மன் (George Mann) என்பவர் (மண் அல்ல) கென்ய நாட்டு மேய்ப்பர்களாக இருந்த சம்பூரு, மசாய் என்ற இரண்டு பழங்குடியினத்தவரிடம் ஓர் ஆராய்ச்சி செய்தார். என்ன ஆராய்ச்சி? கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை உட்கொண்டால் மாரடைப்பு வரும் என்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்கான அதே ஆராய்ச்சிதான். அதன் முடிவு என்ன?

சம்பூருகள், மசாய்கள் ஆகியோரின் அன்றாட உணவு என்ன தெரியுமா? நுரை தள்ளும் பால், மிருக ரத்தம், மிருக இறைச்சி. இந்த மூன்று மட்டும்தான். மூன்று வேளையும். அல்லது அதற்கும் மேல். எங்களூரில் ஒரு அண்ணன் இருக்கிறார். அவர் ஒருமுறை வேடிக்கையாகச் சொன்னார். “நாங்களும் வெஜிடேரியன்தான். காய் கறிகளையெல்லாம் நாங்கள் ஆடுகளுக்குப் போட்டுவிடுவோம். அவற்றை அந்த ஆடுகள் சாப்பிட்டுவிடும். பிறகு அந்த ஆட்டை நாங்கள் சாப்பிட்டுவிடுவோம்” என்றார்! சம்பூருகளும் மசாய்களும் அதைத்தான் செய்தனர்!

சரி ஆராய்ச்சியின் முடிவு என்ன? ஒரு மசாய்க்குக்கூட மாரடைப்பு வரவில்லை! அதுமட்டுமல்ல, அவர்களது கொலஸ்ட்ரால் அளவும் மிகமிகக் குறைவாக இருந்தது! இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கியமான மனிதர்களுக்கு இருக்கும் கொழுப்பு அளவிலேயே மிகமிகக் குறைந்த அளவு கொழுப்பு அவர்களுக்குத்தான் இருந்தது! கொழுப்பு அதிகமானால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் என்று அவர்களிடம் டாக்டர் ஜார்ஜ் மன் சொல்லியிருந்தால், அதைக்கேட்டு வயிறு வலிக்கச் சிரித்து அவர்கள் செத்திருக்கும் வாய்ப்புண்டு!

டாக்டர் மல்ஹோத்ராவின் ஆராய்ச்சி

மும்பையின் டாக்டர் எஸ்.எல்.மல்ஹோத்ரா என்பவர், இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த பத்து லட்சம் ஊழியர்களைப் பரிசோதித்தார். அவருடைய ஐந்தாண்டு கால ஆராய்ச்சியில், 679 பேர் மாரடைப்பால் இறந்துபோனதைக் கண்டுபிடித்தார். சென்னையில் பரிசோதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் 135 பேரும், பஞ்சாபில் பரிசோதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் 20 பேரும் அதிகக் கொழுப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனது தெரியவந்தது.

அதில் விசேஷம் என்னவெனில், மிக மோசமானது சைவக் கொழுப்பா, அசைவக் கொழுப்பா என்ற பட்டிமன்றக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல இருந்தது ஆராய்ச்சியின் முடிவு! சென்னைக்காரர்கள் சாப்பிட்டது பெரும்பாலும் சைவ உணவுதான். அதில் இருந்த கொழுப்புதான் அவர்களுக்குள் சென்றது. சென்னைக்காரர்களைவிட 10 முதல் 20 மடங்கு அதிகமாக மிருகக் கொழுப்பு உணவை பஞ்சாபியர்கள் உட்கொண்டனர். அதுமட்டுமல்ல, சென்னையில் செத்தவர்கள் பஞ்சாபியர்களைவிட வயதில் சராசரியாக 12 வயது இளையவர்களாக இருந்தார்கள்!

டாக்டர் பெர்னார்டு ஃபோரட்டின் ஆராய்ச்சி

ஃப்ரான்ஸ் நாட்டு டாக்டர் பெர்னார்டு ஃபோரட் (Dr Bernard Forette), பாரிஸ் நகரில் ஓர் ஆராய்ச்சி செய்தார். கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாக இருந்த வயதான பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்றும், கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்த பெண்களின் இறப்பு விகிதம், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தவர்களைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது என்றும் அவரது ஆராய்ச்சி காட்டியது! எனவே, வயதான பெண்கள் தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வேண்டாம் என்று டாக்டர் பெர்னார்டு எச்சரித்தார்!

இயற்கையின் அதிசயம்

மனித உடலுக்கு மிகமிக அவசியமான கொலஸ்ட்ரால் என்ற சமாசாரம், அல்லும் பகலும் நம் உடலில் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அதை உருவாக்குவது லிவர் எனப்படும் கல்லீரல் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். இதல்லாமல், நாம் சாப்பிடும் சில உணவுப் பொருள்களிலும் கொஞ்சம் கொலஸ்ட்ரால் இருக்கத்தான் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் அதிகமாகச் சாப்பிட்டால், இயற்கையாக உருவாகும் கொழுப்பு குறைந்து கொண்டேபோகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் எடுத்துக்கொள்ளும் அளவு குறைவாக இருக்குமானால், இயற்கையாக உருவாகும் கொழுப்பின் அளவு அதிகமாகிறது. இதுதான் இயற்கை நம் உடலில் நிகழ்த்தும் அதிசயம்.

கொழுப்பு இன்னும் நிறைய உள்ளது. பார்க்கலாம்…



‘‘யப்படாதீங்க டாக்டர், எனக்கு கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்

இப்படி, டாக்டர் ரவன்ஸ்கோவிடம் (Uffe Ravnskov) சொன்னவர் ஒரு வழக்கறிஞர். அவர் சொன்னது உண்மை. அவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகத்தான் இருந்தது. 400-க்கும் மேல்! ‘‘எங்கப்பாவுக்கு இன்னும் அதிகமாக இருந்தது. அவர் 79 வயதுவரை நன்றாக வாழ்ந்தார். என் பெரியப்பாவுக்கு அப்பாவைவிட அதிகமாக இருந்தது. அவருக்கு குடும்ப ரீதியாக மிக அதிக கொலஸ்ட்ரால் இருந்தது (Familial Hypercholesterolemia). ஆனால், அவரும் ரொம்ப ஆரோக்கியமாக 83 வயதுவரை வாழ்ந்தார்” என்று முடித்தார்.

அவர் சொன்னது உண்மைதான். ரவன்ஸ்கோவின் நோயாளிக்கு அப்போது வயது 53. அவரது சகோதரருக்கு 61. அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவர்களுக்கு இதயம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கான எந்த மருந்து மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவும் இல்லை!

கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழக மருத்துவமனையின் டாக்டர் ஹென்றி ஷனோஃப் (Henry Shanoff) செய்த ஆராய்ச்சியின்படி, ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்குக் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் மறு அட்டாக் வருகிறது என்று கண்டுபிடித்தார். அதை வைத்துப் பார்க்கும்போது, அட்டாக் வந்தவர்களின் கொலஸ்ட்ரால் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிறது.

ரஷ்யாவில் நடந்த இன்னொரு பரிசோதனையில், இன்னும் குழப்பமான முடிவுகள் கிடைத்தன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த ரஷ்யன் அகாடமி ஆஃப் மெடிகல் சயின்ஸஸின் டாக்டர் டிமிட்ரி ஷஸ்தோவ் நடத்திய பரிசோதனையில், கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தவர்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

அதிக கொலஸ்ட்ரால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து. ஆனால் கனடியர்களுக்கும், ஸ்டாக்ஹோமர்களுக்கும் அப்படியில்லை. குறைவான கொலஸ்ட்ரால் அளவு ரஷ்யர்களுக்கு ஆபத்தாக இருந்துள்ளது. அதிகமான கொலஸ்ட்ரால் ஆண்களுக்கு ஆபத்து. ஆனால், பெண்களுக்கு அது தீமை செய்யவில்லை. ஆரோக்கியமானவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து. ஆனால், இதய நோயாளிகளுக்கு கொலஸ்ட்ராலால் ஆபத்தில்லை. முப்பது வயதுடையவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தானதாகவும், நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு அப்படி இல்லாமலும் போகிறது!

ஆஹா, அற்புதமான கண்டுபிடிப்புகள். பல நாடுகளில் நடந்த பல பரிசோதனைகளுக்குப் பிறகு, மேற்கண்ட முடிவுகளுக்குத்தான் மருத்துவர்களால் வரமுடிந்தது!

இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், அதிக அளவில் ஒருவர் உடலில் கொலஸ்ட்ரால் இருக்குமானால், அதனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று சொல்லிவிட முடியாது. ஹை கொலஸ்ட்ராலுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் நேரடியான ஒன்றுக்கொன்று தொடர்புள்ள முடிச்சு எதுவும் இல்லை. அதிகபட்சமாக என்ன சொல்லலாம் என்றால், அதிகமான கொலஸ்ட்ரால் தன்னளவில் அபாயகரமானதில்லை. ஆனால், வேறு ஏதாவது பிரச்னைகளை அது ஏற்படுத்தலாம்!

நல்ல கொழுப்பு - கெட்ட கொழுப்பு


கொலஸ்ட்ரால் என்பது ஒரு வித்தியாசமான மாலிக்யூல். அதை லிபிட் (lipid) என்றும் ஃபேட் (fat) என்றும் கூறுகிறார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். கொலஸ்ட்ரால் நீரில் கரையாத தன்மை கொண்டது. அதன் காரணமாகவே, நம் உடலில் உள்ள உயிரணுக்களெல்லாம், தங்களுக்கான பாதுகாப்புக் கோட்டைச் சுவர்களை எழுப்ப கொலஸ்ட்ராலை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தச் சுவர்கள் ‘வாட்டர் ப்ரூஃப்’ ஆக இருந்தால்தான், நரம்புகளும் உயிரணுக்களும் மரபணுக்களும் பிரச்னை ஏதுமில்லாமல் செயல்பட முடியும். ஆகவேதான், மூளையிலும் நரம்பு மண்டலத்தின் முக்கியப் பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நம் உடலைக் காப்பது இந்த கொலஸ்ட்ரால் கோட்டைதான் என்று சொன்னால் அது மிகை இல்லை. கொலஸ்ட்ராலை ‘உயிர் கொடுப்பான்’ (Life Giver) என்று வர்ணிக்கிறார் டாக்டர் பி.எம். ஹெக்டே!

நீரில் கரையாத தன்மையைக் கொண்டிருப்பதால், ரத்தத்துக்குள் கொலஸ்ட்ரால் சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய்யும் தண்ணீரும்போல, ரத்தத்தில் கலக்காமல் கொலஸ்ட்ரால் மிதந்து கொண்டே செல்லும். நீரில் கரையக்கூடிய தன்மைகொண்ட லிப்போ புரோட்டீன்கள் எனப்படும் சமாசாரங்கள்தான், கொலஸ்ட்ராலை உடல் முழுக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப்போல எடுத்துச் சென்று கொண்டிருக்கும்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தைப் பொறுத்து, எச்.டி.எல். (HDL - High Density Lipoprotein) என்றோ, எல்.டி.எல். (LDL - Low Density Lipoprotein) என்றோ புதிய பெயர்களைப் பெறுகின்றன. எச்.டி.எல். நல்ல கொலஸ்ட்ரால் என்றும், எல்.டி.எல். கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அறியப்படுகிறது. ஏன்? கொஞ்சம் இருங்கள் பார்க்கலாம்.

எச்.டி.எல்.லின் முக்கியப் பணி, வெளிப்பக்கமாக இருக்கும் திசுக்களிலில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலை கொண்டு செல்வது. அங்கே அது பித்தநீரோடு வெளித்தள்ளப்படுகிறது.

எச்.டி.எல். செய்யும் வேலைக்கு நேர்மாறானதை எல்.டி.எல். செய்கிறது. நம் உடலில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உருவாக்கப்படும் கல்லீரலில் இருந்து உடலின் பல பாகங்களுக்கும், இதயத்தின் சுவர்கள்வரை கொலஸ்ட்ராலை எல்.டி.எல். கொண்டு செல்கிறது. உயிரணுக்களுக்குக் கொலஸ்ட்ரால் தேவைப்படும் போதெல்லாம், இந்த எல்.டி.எல்.தான் அவற்றுக்கு கொலஸ்ட்ராலை ‘சப்ளை’ செய்கிறது.

60 - 80 விழுக்காடு கொலஸ்ட்ராலை எல்.டி.எல்.தான் உடல் முழுக்கக் கொண்டு சென்று கொடுக்கிறது. 15 - 20 விழுக்காடு கொலஸ்ட்ரால்தான் எச்.டி.எல். மூலம் கல்லீரலுக்கு வந்து சேர்கிறது. பின்னே ஏன் எல்.டி.எல்.கெட்டகொலஸ்ட்ரால் என்றும், எச்.டி.எல்.நல்லகொலஸ்ட்ரால் என்றும் பெயர் வாங்கியது?

எச்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ,

எல்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிட அதிகமாக இருந்தாலோ,

ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் / வாய்ப்பு அதிகம் என்றும்,

எச்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிட அதிகமாக இருந்தாலோ,

எல்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ,

இந்த வாய்ப்பு குறைவு என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மாரடைப்பை ஏற்படுத்தும் உள்ளார்ந்த சாத்தியக்கூறைக் கொண்டதால், எல்.டி.எல்.லை கெட்டது என்றும், எச்.டி.எல்.லை நல்லது என்றும் சொல்லிவிட்டார்கள். பாவம், அதிகமாக வேலை செய்பவனுக்குக் கெட்ட பெயர்!

ஒடிந்து விழுந்து விடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்குச் சில பெண்கள் ஒல்லிக்குச்சியாக இருப்பார்கள். நம்ம எல்.டி.எல்.லும் அந்த ரகம்தான். உடலெங்கும் கொலஸ்ட்ராலை எடுத்துச் செல்லும்போது, அதன் தடிமன் குறைவின் காரணமாக, வழியிலேயே உடைந்துபோகும் வாய்ப்பு உள்ளது. அப்படி உடைந்துபோகும்போது, ‘கப்பல் கவிழ்ந்து’ ரத்தத்தில் கொலஸ்ட்ரால் விழுந்துவிடும். கொலஸ்ட்ரால் அதன் கரையாத் தன்மையால் ரத்த ஓட்டத்தில் கலந்துகொள்ளாமல், விழுந்த இடத்திலேயே குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து கொள்ளும். அதனால், சீரான ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக் குழாய்களின் இடைவெளி குறையும்.

இதைத்தான், ரத்தக் குழாய் அடைப்பு என்று நாம் புரிந்துகொள்கிறோம். இதேபோல தமனிகள், சிரைகள் போன்ற இதயக் குழாய்களின் வழியாக  கொலஸ்ட்ராலை எல்.டி.எல். எடுத்துச் செல்லும்போது இப்படி ஆகிவிட்டால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகிறது. இப்படி வழியிலேயே உடைந்துபோய் கொலஸ்ட்ராலை கீழே போட்டுவிடுவதால், எல்.டி.எல். ‘கெட்ட’ கொலஸ்ட்ரால். உடையாமல் கொண்டுபோவதால், எச்.டி.எல். ‘நல்ல’ கொலஸ்ட்ரால்!

நல்லவன் கெட்டவன் கெட்டவன் நல்லவன்

பல சமயங்களில், நல்லவனே கெட்டவனாகவும்; கெட்டவனே நல்லவனாகவும் அவதாரங்கள் எடுப்பதுண்டு. ஏனெனில், ‘ரிஸ்க் ஃபேக்டர்’ என்பது ஒரு சாத்தியக்கூறுதானே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட காரணியல்ல! அதனால்தான், ‘அட்டாக்வருபவர்களுக்கெல்லாம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியவில்லை! நல்ல கொலஸ்ட்ரால் அதிமாக இருந்தவர்கள் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த வரலாறும் ஆராய்ச்சியில் உண்டு!

பொய் 2 - அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள், ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகப்படுத்துகின்றன.

ஒட்டகங்களும் பசுக்களும் கொலஸ்ட்ராலும்

கென்யா நாட்டின் சம்பூரு மசாய் ஆகிய பழங்குடியின மேய்ப்பர்கள், மூன்று வேளையும் பால், ரத்தம், மிருகக்கொழுப்பு ஆகியவற்றை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டாலும், அவர்களது கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது, உதாரணமாக, 170 ml/dL தான் இருந்தது.

சோமாலியாவில் இருந்த மேய்ப்பர்கள், தங்கள் ஒட்டகங்களின் பாலைத் தவிர வேறெதுவும் குடிப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒன்றரை ‘கேலன்’ பால் என்பது அவர்களுக்கு ‘நார்மல்’! ஒரு பவுண்டு வெண்ணெய்யில் உள்ள கொழுப்புக்குச் சமம் அது! ஏனெனில், பசும் பாலைவிட ஒட்டகப் பாலில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. என்றாலும், அவர்களது சராசரி கொலஸ்ட்ரால் அளவு சுமார் 150 ml/dL தான். இது, நகர வாழ்க்கை வாழும் மக்களின் கொழுப்பைவிட ரொம்பக் குறைவு!

கொலஸ்ட்ராலும் தேங்காயும்


தேங்காயில், மிருகக் கொழுப்பைவிட அதிகமாகச் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருப்பதாக நம்பப்பட்டது. நியூஸிலாந்தைச் சேர்ந்த டாக்டர் அயன் ப்ரியரும் (Dr. Ian Prior) அவரது குழுவும், டொகேலா (Tokelau), புகாபுகா (Pukapuka) ஆகிய தீவுகளில் வாழ்ந்த மனிதர்களிடம் ஓர் ஆராய்ச்சியைச் செய்தார்கள். அத்தீவில் வாழ்ந்தவர்களின் பிரதான உணவு தேங்காய்தான். தேங்காய்த் தோசை, தேங்காய் இட்லி, தேங்காய்ச் சோறு, தேங்காய்ப் பொடி – இப்படி! அவர்களின் எல்லா உணவு வகைகளிலும் தேங்காய் இருக்கும். அது மட்டுமல்லாமல், மீன்களையும் கோழிகளையும்கூட அவர்கள் விரும்பி உண்டனர். கோழிகளுக்கும் தேங்காய்தான் பிடித்தமான ‘கொத்து’க் கறி!

அத்தீவின் தேங்காய் மக்களின் தோலுக்குக் கீழே சிரிஞ்சை செலுத்தி கொழுப்பைக் கொஞ்சம் உறிஞ்சி, ஒரு மருத்துவர் குழு ஆராய்ச்சி செய்தது! அதிகமான கொழுப்பு உணவால் எவ்வகையான பாதிப்புகளுக்கு - முக்கியமாக, இதயப் பாதிப்புக்கு - உள்ளாகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் ஆராய்ச்சியின் பிரதான நோக்கம்! அப்படி உறிஞ்சி எடுக்கப்பட்ட கொழுப்பின் அளவு, மேற்கத்திய உலகில் வாழ்ந்த நவநாகரிக மக்களிடம் இருந்த கொழுப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் ஆராய்ச்சிக்குப் பலம் சேர்ப்பதாக இருந்தது அந்தக் கண்டுபிடிப்பு.

ஆனால், அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 1966-ல் ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்றில், டொகேலா தீவில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டன. இதையடுத்து, அத்தீவில் இருந்த மக்கள் அங்கு இருக்க முடியாமல் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே நகர வாழ்க்கையின் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டனர். வேறு வழி? அதனால், செறிவூட்டப்பட்ட கொழுப்புச் சத்துகளால் டொகேலா தீவில் கிடைத்துக் கொண்டிருந்த கலோரிகளில் பாதிதான் நியூஸிலாந்தில் அவர்களுக்குக் கிடைத்தது.

ஆனாலும், நியூஸிலாந்துக்குச் சென்ற டொகேலா தீவு மக்களின் கொல்ஸ்ட்ரால் அளவு, தீவில் இருந்ததைவிட பத்து விழுக்காடு அதிகரித்திருந்தது! 1950-களில் நடந்த ஃப்ராமிங்காம் (Framingham) ஆராய்ச்சியில், ஆயிரம் பேர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் உண்ட உணவுக்கும், அவர்கள் ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவானது!

கொலஸ்ட்ரால் என்ற வெள்ளையான, சுவையற்ற, மணமற்ற அந்தப் பொருள்தான் மனித உடலின் ஆதார சுருதி. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, அதற்காக விற்கப்படுகின்ற மருந்து மாத்திரைகள் எல்லாமே, இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணத்தை வேண்டுமானல் மாற்றலாமே தவிர, இறப்புத் தேதியை மாற்றாது. வேண்டுமானால், தேதியை கொஞ்சம் முற்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஹெக்டே!


கொலஸ்ட்ரால் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம், கற்பனையானதொரு அச்சத்தை நிரூபிக்கவே செய்யப்பட்டன என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. மனிதகுலத்துக்கான சாபம் அது என்று டாக்டர் ஹெக்டே சொல்வதைப் பற்றி தீவிரமாக நாம் யோசிக்க வேண்டி உள்ளது. அவர் மேலும் சொல்கிறார்:

‘‘தேங்காய் எண்ணெய்யில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு (Fat) கொஞ்சம் உள்ளது. ஆனால் அது மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியது. சிலவகையான புற்றுநோய்களில் இருந்து தேங்காய் எண்ணெய் நம்மைக் காப்பாற்றும் தன்மை கொண்டது. உடலில் கேன்ஸரை உருவாக்கும் ‘ரவுடி’ உயிரணுவை மேற்கொண்டு வளராமல் தடுப்பது தேங்காய் எண்ணெய்”.

‘‘தேங்காய் எண்ணெய்யையும் தேங்காயையும் அன்றாடம் பயன்படுத்துகின்ற, உடலில் தேய்த்துக் குளிக்கின்ற கேரளப் பெண்களின் தலையில் பொடுகை நான் கண்டதில்லை. அதுமட்டுமல்ல. தேங்காயில் மானோலாரியேட் (Monolaureate) என்ற ஒரு பொருள் உள்ளது. இந்த உலகிலேயே, மானோலாரியேட் இருக்கும் இன்னொரு இடம் தாய்ப்பால்தான். எனவே, தேங்காயும் தேங்காய் எண்ணெய்யும் மோசமானதென்று சொன்னால், தாய்ப்பாலும் மோசமானதே”! என்று சொல்லிச் சிரிக்கிறார் ஹெக்டே.

மு.ஆ. அப்பனும் தேங்காயும்


தேங்காயைப் பற்றியும் தேங்காய்ப்பாலைப் பற்றியும் டாக்டர் ஹெக்டே இவ்வளவு சொன்ன பிறகு, எனக்கு இயற்கை உணவு நிபுணர் மு.ஆ. அப்பனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தேங்காய்க்கான மரியாதையாக எண்ணி அந்த நிகழ்ச்சியை இங்கே நான் பதிவிடுகிறேன்.

அப்பன் அவர்கள் இருபது வயது இளைஞராக இருந்தபோது, அவருக்கு தொழுநோய் வந்தது. காட்சிக்கும் அனுபவத்துக்கும், இந்த உலகில் தொழுநோயைவிட மோசமான நோய் ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முழு உடலும் அழுகிப்போகும். துர்நாற்றம் வீசும். தோல் முழுக்க, செந்நிறத்தில் உணர்ச்சியற்ற பற்றுக்கள் தோன்றும். ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில், எம்.ஆர். ராதாவின் career best performance நினைவுக்கு வருகிறதா?

அப்பன் அவர்கள், ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘டாப்சோன்’ (Dapsone) போன்ற ஆங்கில மருந்து மாத்திரைகளை எட்டு ஆண்டுகள் எடுத்துவந்தார். அதன் விளைவாக, அவரது தொழுநோய் இன்னும் தீவிரமானது! நம்பிக்கையற்றுப்போன ஒரு நிலையில், ஒரு சித்தராக இருந்த அவரது மூத்த சகோதரர் ராமகிருஷ்ணனிடமிருந்து, எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப்போடச் சொல்லியும் இயற்கை உணவுக்கு மாறச் சொல்லியும் உத்தரவு வந்தது.

இயற்கை உஷ்ணமான வெய்யில் பட்டு விளைந்த, சமையல் நெருப்பு படாத, இயற்கை உணவுகள். பழங்கள், காய்கறிகள், சிறு தானிய வகைகள். முக்கியமாகத் தேங்காய். மூன்று வேளையும். அல்லது, பசிக்கும்போதெல்லாம். அரை மூடி - ஒரு மூடி என்று தேங்காயைத் துருவி அவர் மென்று சாப்பிட்டார். அதோடு, பழங்கள் இன்னபிற. ரொம்பக் கஷ்டம்தான். அடிக்கடி பசிக்கும். ஏனெனில், சமைத்த உணவுகளைப்போல் ஃபுல் மீல்ஸ் கொடுத்து வயிறை ‘பேக்’ பண்ணுவது சாத்தியமில்லை. பசித்தபோதெல்லாம் தேங்காய்த் துருவல் அல்லது பழங்கள்தான். ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மாதிரி, மூன்றே மாதங்களில் தொழுநோய் முற்றிலுமாகக் குணமானது!

இந்த உண்மையான உலக அதிசயம், முக்கியமாகத் தேங்காயினால் நடந்துள்ளது. இந்த உலக வரலாற்றில், தொழுநோயை தேங்காய்தான் குணப்படுத்தியுள்ளது என்று நான் சொன்னால் அது மிகையல்ல.


இயற்கை உணவின் அதிசயம், ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்’ என்று அப்பன் ஒரு நூலும் எழுதியுள்ளார் (தினமணி டாட் காமில், மருத்துவப் பகுதியில், இயற்கை உணவை அடிப்படையாகக் கொண்ட ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ என்ற தொடரை திரு. மு.ஆ. அப்பன் எழுதியுள்ளார்). சமைக்கப்படாத, இயற்கையான உணவின் உன்னதத்துக்குச் சான்றாக, வாழும் அதிசயமாக அப்பன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முழுக்க முழுக்க சமைக்காத உணவுகளுக்கு நம்மால் மாற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இயற்கையான உணவின் மகத்துவத்தை அவர் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நம்மால் நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தேங்காயின், இளநீரின், வழுக்கையின், தேங்காய்ப்பாலின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட எண்பது வயதாகும் அப்பன் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டு, மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

டாக்டர் ரவன்ஸ்கோவின் முட்டைப் பரிசோதனை

நாம் உண்ணும் உணவுப் பண்டங்களிலேயே, முட்டையில்தான் மிகமிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் உள்ளது என்று கூறப்படுகிறது. மாரடைப்பு வந்தவர்கள், ஒருமுறை ஆன்ஜியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் கூறும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று, முட்டை சாப்பிட வேண்டாம் என்பது. இல்லை, அதெல்லாம் முடியாது, சிக்கன் இல்லாமல்கூட நான் இருந்துவிடுவேன்; ஆனால், அதன் பிள்ளையான முட்டை இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று கூறுபவர்களுக்கு, டாக்டர்கள் தரும் கருணை அனுமதி, மஞ்சள் கரு வேண்டாம்; வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான்! மஞ்சளில் மிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறதாம்!

அப்படியானால், அதிகமாக முட்டை சாப்பிடுபவர்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடவேண்டும், அல்லவா? இதைப்பற்றி ஒரு நிச்சயமான முடிவுக்கு வர, டாக்டர் ரவன்ஸ்கோவ் தன்னை வைத்தே ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். ஒரு வாரத்துக்கு முட்டைகளை அதிகமாக எடுத்துக்கொண்டார். முட்டைகளைச் சாப்பிடுவதற்கு முன், தனது கொலஸ்ட்ரால் அளவு என்ன என்பதையும், ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட்ட பிறகு கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருந்தது என்பதையும் குறித்துக்கொண்டார்.

முதல் நாள் ஒரேயொரு முட்டை சாப்பிட்டார். அப்போது அவரது கொலஸ்ட்ரால் அளவு 278 mg/dl இருந்தது. இரண்டாவது நாள் நான்கு முட்டைகள், மூன்றாவது நாள் ஆறு முட்டைகள் சாப்பிட்டார்! ஆனால், மூன்று நாட்களும் கொலஸ்ட்ரால் அளவு இம்மிகூடக் கூடவில்லை. நான்காவது நாளிலிலிருந்து எட்டாவது நாள்வரை, ஒவ்வொரு நாளும் எட்டு முட்டைகளைக் கபளீகரம் செய்தார்! முட்டைகளின் அளவு அதிகமாக அதிகமாக, உடலில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவு குறைந்துகொண்டே போனது! எட்டாவது நாள், அவரது ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு 246 mg/dl என்ற அளவுக்குக் குறைந்துபோனது!

எவ்வளவுக்கெவ்வளவு கொலஸ்ட்ரால் உள்ள உணவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது உடல் இயற்கையாகவே உருவாக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்துக்கொள்கிறது. ஏனெனில், நமது தேவையைப் பொறுத்து, நமக்கான கொலஸ்ட்ராலை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

இன்னும் நிறையக் கொழுப்பு உள்ளது…




பொய் 3 – அதிக கொலஸ்ட்ரால் இதயத்தின்    தமனிகளை அடைக்கிறது.

ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்போது, அது இதயக் குழாய்களில் போய்த் தங்கிக்கொண்டு அடைத்துக்கொள்கிறது. அதனால், இதயத்தின் வேலை சீர்கெட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்களால் சந்தேகத்துக்கு இடமின்றி, விவாதங்களுக்கு அப்பாற்பட்டு நம்பப்படுகிறது.

ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கொலஸ்ட்ரால் மாலிக்யூல்கள், இதயக் குழாய்களின் அறைகளில் போய் தங்கிக்கொண்டு, ரத்தம் சீராகச் செல்வதைத் தடுக்கும் என்பது உண்மையானால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்குத்தானே இப்பிரச்னை ஏற்பட வேண்டும்? அதுதானே நியாயம்? ஆனால் அப்படித்தான் நடக்கிறதா?

1936-ல், நியூயார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாண்டே, ஸ்பெர்ரி (Lande and Sperry) என்ற இரண்டு நோய்க்குறியியல் பேராசிரியர்கள், இதுபற்றி ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சியின் முடிவில், ரத்தத்தில் இருக்கும் அதிகக் கொலஸ்ட்ரால் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்தது!

அதன்பிறகு, கனடாவைச் சேர்ந்த டாக்டர் ஜெ.ஸி. பேட்டர்சன் (Dr J.C. Paterson), போர்களில் நீண்டகாலம் பங்கேற்று மருத்துவமனைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 800 பேரைத் தன் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார். அவ்வப்போது அவர்களது ரத்த மாதிரிகளை ஆராய்ந்தார். அவர்களில் இறந்தவர்களுக்குப் பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்டது. அவர்களது ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

இதே போன்ற பரிசோதனையை, ஆக்ராவில் இருந்த டாக்டர் மதுர் என்பவரும் அவரது சகாக்களும் செய்தனர். இருபது நோயாளிகளின் ரத்தத்தை அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்னும், இறந்து 16 மணி நேரம் கழித்தும் எடுத்துப் பரிசோதித்தனர். பின்னர், திடீர் விபத்தில் இறந்துபோன இருநூறு பேர்களின் ரத்தத்திலும் அப்பரிசோதனையைச் செய்தனர். ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும், இதயக் குழாய் அடைப்புக்கும் தொடர்பில்லை என்று டாக்டர் பேட்டர்சன் வந்த முடிவுக்கே அவர்களும் வந்தனர். போலந்து, கௌதமாலா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் இது உறுதியானது.

பொய் 4 – கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் வாழ்நாள் அதிகமாகும்.

மிருகக் கொழுப்பு உள்ள உணவை வருஷக்கணக்கில் போட்டு மாட்டியிருந்தாலும், உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதையும், கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தாலும் மாரடைப்பு வரும் என்பதையும் விஞ்ஞானபூர்வமான பல பரிசோதனைகள் நிரூபித்தன. உண்மை இப்படி இருக்க, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது கொழுப்புச் சத்துக் குறைவான உணவை உட்கொள்வதன் மூலமோ மாரடைப்பு வராமல் தடுக்க முடியுமா? வாழ்நாளை அதிகரிக்க முடியுமா? முடியாது என்பதுதான் விஞ்ஞானம் நிரூபித்துச் சொன்ன பதில்!

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் வரக்கூடிய ஆபத்துகளைவிட, அளவைக் குறைத்தால் அதிக ஆபத்துகள் ஏற்படும் என்கிறார் டாக்டர் ரவன்ஸ்கோவ்! ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தால் என்னாகும் என்று மிகத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், புகைப் பிடித்தலை நிறுத்துதல், அதிக எடையைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், வேலையை மாற்றிக்கொள்ளுதல் அல்லது வேலையை விட்டுவிடுதல், காதலித்தல், விவாகரத்து செய்தல் (திருமணத்துக்குப் பிறகுதான்), ரொம்ப சூடா இருக்குன்னு ஏழைகளின் ஊட்டிகளை நோக்கி இடம்பெயர்தல் போன்ற எந்தக் காரியமும் செய்யாமல், பழைய வாழ்க்கை முறையையே கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்ததால் குறிப்பிட்ட விளைவு ஏற்பட்டதா அல்லது கொடைக்கானல் குளிரை காதலியை வைத்துச் சமாளிக்க முயன்று முடியாமல் கோபித்துக் கொண்டதால் அப்படியொரு விளைவு ஏற்பட்டதா என்று துல்லியமாகச் சொல்ல முடியும் என்றும் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்!

குறிப்பிட்ட வகை ‘டயட்’ நம்மைக் காப்பாற்றுமா?

லண்டனில் இது பற்றிய ஒரு ஆராய்ச்சி நடந்தது. லண்டனில் நான்கு மருத்துவமனைகளில், மாரடைப்பு வந்து சேர்க்கப்பட்டிருந்த 400 பேருக்கு மிருகக் கொழுப்புக்குப் பதிலாக சோயா மொச்சை எண்ணெய் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. சோயா எண்ணெய் கொடுக்கப்பட்டவர்களுக்கும், கொடுக்கப்படாதவர்களுக்கும் இதய வால்வுகளில் அடைப்பு ஏற்படத்தான் செய்தது! இன்னும் சொல்லப்போனால், சோயா எண்ணெய் சாப்பிட்டவர்களின் இதயங்களின் பெருந்தமனிகளில் மற்றவர்களைவிட அதிகமாகக் கொலஸ்ட்ரால் இருந்தது!

இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமாக இறப்பு ஏற்படுவது குறைந்துபோனது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அடைப்பு ஏன் ஏற்படுகிறது, அது ஏன் குறையவில்லை என்று மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் தெரியவில்லை. எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்வதுதான் இம்மாதிரியான அடைப்புகளில் இருந்து மீள வழி என்று சொல்ல முடியவில்லை. இன்னின்ன மாதிரியான ’டயட்’ எடுத்துக்கொண்டால் பிரச்னை வராமல் வாழலாம் என்று சொல்ல முடியவில்லை. ‘டயட்’டுக்கும் உடலில் ஏற்படும் பிரச்னைக்கும் நேரடியான தொடர்பு ஏதுமில்லை என்பதைத்தான் பல ஆண்டுகளாகச் செய்யப்பட்ட பரிசோதனைகள் காட்டின.

அதோடு, பரிசோதனைகளெல்லாம் பெரும்பாலும் முதியவர்களிடம்தான் செய்யப்பட்டன. அவர்களில் பலர் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமைகளாக இருந்தனர். அவர்களின் இதய நோய்கள், அவர்களின் கெட்டப் பழக்கங்களினாலேயே ஏற்பட்டிருந்தன. உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டதால், பெரிய நன்மையோ தீமையோ ஏற்படவில்லை.

விதவிதமான பரிசோதனைகளும் விநோத விளைவுகளும்

1967-ல், அமெரிக்காவில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதுவும் ஏழாண்டுகளுக்கு. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க அமெரிக்க அரசின் ஆதரவோடு தேசிய இதய, நுரையீரல் மற்றும் ரத்த இன்ஸ்டிடியூட் நடத்திய மெகா பரிசோதனை அது. சிகாகோ பேரா. ஜெரமியா ஸ்டாம்லர் (Prof Jeremiah Stamler) தலைமையில் அது நடத்தப்பட்டது. ‘த க்ரோனரி ட்ரக் ப்ராஜெக்ட்’ (The Coronary Drug Project) என்று அதற்குப் பெயர்.

53 மருத்துவமனைகளில் இருந்து நாற்பது முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட 8000 பேர் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நிகோடினிக் ஆஸிட்கள், க்ளோஃபைப்ரேட்டுகள், தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்கள் வராமல் அவை அவர்களைக் காப்பாற்றும் என்று நம்பப்பட்டது. ஆனால், 18 மாதங்கள் அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்டதற்குப் பின் நடந்தது என்ன?


மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, நோயாளிகளில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்ட ஆரம்பித்தது! அதுமட்டுமல்ல. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டது. இன்னும் ஒருபடி மேலே போய், பெண்களைப்போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர ஆரம்பித்தன! ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தத்துவத்தை அம்மாத்திரைகள் நிரூபித்தன! அதோடு விட்டதா என்றால் இல்லை. கேன்ஸரும் அவர்களுக்கு வர ஆரம்பித்தது! க்ளோஃபைப்ரேட் கொடுக்கப்பட்ட பலர் செத்தே போனார்கள்!

திங்கள்கிழமை வந்த தலைவலிக்கு எடுத்துக்கொண்ட மாத்திரை வெள்ளிக்கிழமை வரப்போகும் தலைவலியைக் குணப்படுத்தும் என்று சொல்வது மாதிரி அப்பரிசோதனைகள் இருந்தன என்கிறார் டாக்டர் ரவன்ஸ்கோவ்!

பொய் 5 – ஸ்டாடின்கள் மனிதகுலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் பொதுப்பெயர் ஸ்டாடின் (Statin). இந்தப் பெயரை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளேன். நம் உடல் தயாரிக்கும் முக்கியமான பொருள்களின் அளவைக் குறைப்பது இதன் வேலை. நமது உடல் நமக்காகத் தயாரிக்கும் முக்கியப் பொருள்களில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதன் அளவைக் குறைக்க ஸ்டாடின்கள் பயன்படுத்தப்பட்டன.

1980-களில்தான், ஸ்டாடின்கள் மருந்துக் கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்டாடின்களுக்கு முந்தைய மருந்துகள், கொலஸ்ட்ரால் அளவை 15 முதல் 20 விழுக்காடுவரைதான் குறைத்தன. ஆனால் ஸ்டாடின்கள், 30 முதல் 40 விழுக்காடுவரை குறைத்தன என்று சொல்லப்பட்டது. ஆரோக்கியமான மனிதர்களுக்கும், இதய நோய் இருந்தவர்களுக்கும் செய்யப்பட்ட பல பரிசோதனைகளுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்தார்கள்.

ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்டாடின் மாத்திரை எடுத்துக்கொண்டால், 93 அல்லது 94 விழுக்காட்டினர் நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் மாரடைப்பு வந்து இறக்காமல் இருக்கும் சாத்தியம் உண்டு. மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், 92 விழுக்காட்டினருக்கு அந்தச் சாத்தியம் உண்டு! மாத்திரை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்தில் குணமாகும், எடுக்காவிட்டால் ஏழு நாட்களில் குணமாகும் என்ற திரைப்பட வசனத்தை நினைவுபடுத்துகின்றன ஸ்டாடின் பரிசோதனைகள்!

இதுமட்டுமல்ல. ஆரோக்கியமானவர்களுக்கு ஸ்டாடின் கொடுத்தால், அது எந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படுகிறதோ அதே பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதும் கண்டறிந்த முடிவுகளில் ஒன்று! நமது தசைகளும் கல்லீரலும் ஸ்டாடின்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. நினைவாற்றல் இழப்பும் ஸ்டான்களால் ஏற்படும் முக்கியப் பக்கவிளைவுகளில் ஒன்றாகும்.

டாக்டர் டுவான் க்ராவ்லினுக்கு நடந்தது என்ன?


டாக்டர் டுவான் எட்கார் க்ராவ்லின் (Duane Graveline), ஒரு நாசா (NASA) விண்வெளி வீரரும், விண்வெளி மருத்துவ ஆராய்ச்சியாளருமாவார். ‘Lipitor, Thief of Memory’ என்ற தனது நூலில் தனக்கு நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். அவருக்கு அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருந்ததால், லிபிட்டர் என்னும் ஸ்டாடின் கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரை எடுத்துக்கொண்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் அவர் தன் வீட்டுப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தார். ‘ஏங்க, இப்படி சுத்திகிட்டிருக்கீங்க? உங்களுக்கு என்னாச்சு? நம்ம காருக்குள்ள வாங்க’ என்று அவர் மனைவி அழைத்தார். ஆனால், மனைவியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை! ரொம்ப கஷ்டப்பட்டு, வற்புறுத்தித்தான் அவரை காருக்குள் அழைத்துச் செல்ல முடிந்தது! அதோடு கதை முடிந்ததா என்றால் இல்லை.

அவரைப் பரிசோதித்த நரம்பியல் நிபுணருக்கு, அவரது நினைவாற்றல் இழப்புக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. எல்லாம் ‘நார்மலா’கத்தான் இருந்தது, மறதியைத் தவிர. அடுத்தமுறை, வழக்கமான ‘செக்அப்’பின்போது மீண்டும் நாசா டாக்டர்கள் அவருக்கு லிபிட்டர் கொடுத்தார்கள். அடுத்த ஆறு வாரங்கள் கழித்து மீண்டும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது டாக்டர் க்ராவ்லினுக்கு. இந்த முறை, 12 மணி நேரங்களுக்கு மறதி நீடித்திருந்தது.

இந்த முறை, உயர்நிலைப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகான எதுவுமே அவருக்கு நினைவில் வரவில்லை! அவருடைய கல்லூரி வாழ்க்கை, திருமணம், நான்கு குழந்தைகள், நாசாவில் டாக்டரானது, ரிடையர் ஆனது, எட்டு புத்தகங்கள் எழுதியது - எதுவுமே நினைவில் இல்லை! எங்கே செல்லும் இந்தப் பாதை என்று நம்ம ‘சேது’ மாதிரி ஆகிப்போனார்!

கடைசியில், லிபிட்டர் ஸ்டாடின்தான் தன்னுடைய வில்லன் என்று அவரே கண்டுபிடித்தார். அதன்பிறகுதான், அந்த ஸ்டாடினின் சாத்தானிய வேலைகள் பற்றி மேலே சொன்ன புத்தகத்தை எழுதினார்!

அவர் அப்படி எழுதிய பிறகு தங்களுக்கும் அப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்ததாக ஸ்டாடின் எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

ஸ்டாடினும் பாலிநியூரோபதியும்

மூளையின் வெளிப்பக்க நரம்புகள் பாதிக்கப்படுவதற்குப் பெயர் பாலிநியூரோபதி. ஒருவருக்கு அது வந்துவிட்டால், பாதங்களில் தொடங்கி உடல் முழுக்க பல பாகங்களும் கடுமையாக வலிக்க ஆரம்பிக்கும். எரியும். தொடு உணர்ச்சி முழுமையாக அற்றுப்போகலாம். தசைகளுக்குப் பலவீனம் ஏற்படும். நடக்க முடியாமல் போகலாம்.

டென்மார்க்கில் டாக்டர் டேவிட் என்பவர் தலைமையில் நடந்த பரிசோதனையில், ஆயிரக்கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டனர். ஸ்டாட்டின் எடுத்துக் கொண்டவர்களுக்கு, எடுத்துக் கொள்ளாதவர்களைவிட 16 மடங்கு அதிகமாக பாலிநியூரோபதி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

கேன்ஸரை உருவாக்கும் ஸ்டாட்டின்

எல்லாவற்றுக்கும் மேலாக, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கப்படும் ஸ்டாட்டின்கள் கேன்ஸரை உருவாக்குகின்றன என்று கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக் குழு கூறியது!

ஓர் எச்சரிக்கை

ஒரு மருந்தை ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டுமென்றால், அதற்குப் பல கோடிகள் செலவாகும். அத்தகைய செலவுகளை ஏற்றுக்கொள்ள மருந்துக் கம்பெனிகள் தயாராக இருந்தன / இருக்கின்றன. ஏன்? செலவு செய்ததைவிடப் பல மடங்கு அதிகமாக அம்மருந்துகளை விற்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், மேய்ப்பனுடைய வேலையைச் செய்யும் ஓநாய்களை எப்படி நம்பமுடியும் என்று கேட்கிறார் டாக்டர் உஃபே ரவன்ஸ்கோவ்!

கொழுப்பு - சில உண்மைகள்

    • கொழுப்பு என்று அறியப்படும் கொலஸ்ட்ரால், உடலுக்கு மிகவும் அவசியமானது. நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருப்பது இந்த கொலஸ்ட்ரால்தான்.
    • நாம் சாப்பிடுவதால் உண்டாகும் கொழுப்பைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு கொலஸ்ட்ராலை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது. 90 விழுக்காடு கொலஸ்ட்ராலை லிவரே (கல்லீரல்) உருவாக்கிக்கொள்கிறது. பத்து விழுக்காடு கொலஸ்ட்ராலைத்தான் உணவு கொடுக்கிறது.
    • கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவை நாம் சாப்பிடும்போது குறைவாகவும், கொழுப்புச்சத்து குறைவான உணவை நாம் சாப்பிடும்போது அதிகமாகவும் கொலஸ்ட்ராலை உடல் உற்பத்தி செய்துகொள்கிறது!
    • உடலில் உண்டாகியிருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்காக நாம் சாப்பிடும் மாத்திரை மருந்துகளால் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைகிறது. நம் வாழ்நாளும் குறைந்துபோகிறது. முக்கியமாக நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
    • ஸ்டாடின்கள் (Statins) எனப்படும் அவ்வகை மருந்துகள் கேன்சரை ஏற்படுத்தவல்லவை.
    • உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு ரொம்பவும் குறைந்துபோய்விட்டால், உங்களுக்கு வன்முறை உணர்வும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
    • கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள வயதானவர்கள், குறைவாக உள்ள வயதானவர்களைவிட அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள்.
    • உங்கள் உணவில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவுக்கும், உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பில்லை. முன்னது, பின்னதை பாதிப்பதில்லை.
    • ரத்தத்தில் அதிகக் கொலஸ்ட்ரால் இருக்குமானால், அதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது இதயத்தின் தமனிகளையும் நாளங்களையும் அடைத்துவிடும் என்பது விஞ்ஞானத்தின் தவறான கருத்தாகும். நமக்கு வயதாகும்போது, நமது இதயத்தின் நாளங்கள், தமனிகள், அதைச் சுற்றியுள்ள தசைகள் / நார்களெல்லாம் நெகிழ்வுத்தன்மை குறைந்து விறைப்பாகிவிடும். அந்த நிலையில், இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தம் கொண்டுசெல்லும் ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் கொழுப்பு, கால்சியம் போன்றவை தங்குவதற்கு வசதியாகிவிடும்.
    • ‘நீங்கள் சாப்பிடும் பொருளால் உங்களுக்குப் பிரச்னை வருவதில்லை. உங்களை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதோ அதனால்தான் பிரச்னை வருகிறது’ என்று அழகாகச் சொன்னார் டாக்டர் பி.எம். ஹெக்டே. நம்மை எது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது? அச்சம்.
    • பி.பி., கொலஸ்ட்ரால், சுகர் போன்றவை பற்றிய கற்பனையும் அச்சமும்தான் நமது பிரச்னை. மருத்துவமனைகளும் டாக்டர்களும் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம், உச்ச வியாபாரமாக இருக்கும் அச்ச வியாபாரம்தான். படித்தவர்களும் படிக்காதவர்களும் லட்சம் லட்சமாகக் கொடுத்து அச்சத்தை வாங்கி மனத்தில் போட்டுக்கொள்வதுதான் பிரச்னை.

கொலஸ்ட்ராலைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். மீண்டும் சந்திக்கலாம். அடுத்த முக்கிய அச்சப்பொருளைப் பற்றிய தகவல்களுடன்…

தொடரும்...



நலம் நலமறிய ஆவல் - 06. உடலே ஒரு ஹீலர் தான்

 

   



    டலை ஞானி என்று சொன்னோம். அறிவித்தல் அல்லது எச்சரித்தல், உருவாக்குதல் மற்றும் குணப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய காரியங்களை உடல் ஆற்றுகிறது என்று பார்த்தோம். அதில் மூன்றாவதான குணப்படுத்துதலை இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

நோய் வந்தால் நம்மை குணப்படுத்துவது யார்? மருந்து மாத்திரைகளா? அறுவை சிகிச்சைகளா? உணவு வகைகளா? அலோபதியா? ஹோமியோபதியா? சித்தாவா? ஆயுர்வேதமா? வர்மா, ரெய்கி, அக்யுபஞ்சர் போன்ற தொடு அல்லது தொடா சிகிச்சைகளா? – இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். உண்மையில் மேலே சொன்ன எதுவுமே நம்மை குணப்படுத்துவது இல்லை என்பதுதான் உண்மை! 

ஒரு நோயாளி ரொம்ப ‘கிரிட்டிகல்’ ஆன நிலையில் இருக்கும்போது டாக்டர்கள் இப்படிச் சொல்வதை நம் வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்: ‘எங்களால முடிஞ்சதெ எல்லாம் செஞ்சிட்டோம். இனிமே உங்க இஷ்ட தெய்வத்த வேண்டிக்கிங்க’. முஸ்லிமா இருந்தா அல்லாஹ் காப்பாத்துவான். ஹிந்துவா  இருந்தா இஷ்ட தெய்வம். கிறிஸ்தவரா இருந்தா ஜீசஸ் அல்லது மேரி – இப்படி. இது நமக்குத் தெரியும்தானே?

இங்கே எனக்கொரு கேள்வி எழுகிறது. டாக்டர்கள் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு நோயாளியை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்றால், அந்த நோயாளியின் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே அந்தக் கடவுள் காப்பாற்றியிருக்கக் கூடாதா? கடைசி நேரத்தில் காப்பாற்றினால்தான் கடவுளின் மவுசு கூடுமா?! கடவுள் என்ன அவ்வளவு கல்நெஞ்சுக்காரனா? டாக்டர்கள் கைவிட்ட பிறகுதான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவோடு இருப்பவனா?! மருத்துவர்களுக்கும் அந்த மகாசக்திக்கும் இடையில் அப்படி என்ன போட்டியும் பொறாமையும்?! இதில் உள்ள அபத்தம் விளங்குகிறதா?

உண்மையில் நம்மைக் காப்பாற்றுவது நம்முடைய உடல்தான்! உடலை மருத்துவர் என்றோ வைத்தியர் என்றோ சொல்ல முடியாது. ஏனெனில், நோயை குணப்படுத்துவதற்காக வெளியிலிருந்து எதையும் உடல் நமக்குக் கொடுப்பதில்லை. உடலை ஒரு ஹீலர் என்றுதான் சொல்லமுடியும். அப்படித்தான் சொல்லவேண்டும் உண்மையும் அதுதான். உடல்தான்  நம்மை குணப்படுத்துகிறது.

கிறிஸ்தவ மருத்துவமனைகளில் Jesus Heals என்று போட்டிருப்பார்கள். அது உண்மைதான். குருடர்களை, தொழுநோயாளிகளையெல்லாம் கையால் தொட்டே ஜீசஸ் குணப்படுத்தியது வரலாறு. மனிதனை குணப்படுத்தும் தகுதி கடவுளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் கடவுளின் தன்மை என்னவென்றால் அவர் நேரடியாக எதையும் செய்யமாட்டார். யார் மூலமாவது, எதன் மூலமாவதுதான் அவர் செய்வார். அப்படிச் செய்வதுதான் அவரது தொழில்முறை! ஜீசஸையும் அவர் அப்படித்தான் அனுப்பினார். ஜீசஸின் காலம் முடிந்துவிட்டது. இனி ஜீசஸுக்கு எங்கே போவது? எங்கேயும் போகவேண்டாம். நம் உடலுக்கே அந்த ஞானத்தை ஆண்டவன் கொடுத்துள்ளான். நம் உடல்தான் நம்மை குணப்படுத்தும் ஜீசஸ்!

அப்படியானால் எந்த மருந்து மாத்திரைகளும் ஒன்றுமே செய்வதில்லையா?

ஏன் செய்வதில்லை? நிறைய செய்கின்றன. ஆனால் எல்லாமே தீமைகள்தான்! இதுபற்றி விபரமாகப் பிறகு பார்க்க இருக்கிறோம். ஒரு திரைப்படத்தில் நோயாளிக்குப் போடவேண்டிய ஊசியை ஒரு பைத்தியம் டாக்டருக்குப் போட்டுவிடும். அந்த பைத்தியம் வேறு யாருமல்ல, நாம்தான்! நமக்கு ஏற்பட்ட பிரச்சனையை நம்முடைய உடல் படாத பாடுபட்டு தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அம்முயற்சிகளையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக, நம் உடலின் எதிர்ப்பு சக்தியையெல்லாம் காலி செய்யும் விதமாக நாம்தான் மாத்திரைகளையும் டானிக்குகளையும் இன்னபிறவையும் உள்ளே செலுத்தி குணமாகும் காலத்தை தள்ளிப் போடுகிறோம், அல்லது குணமாகாமலே இருக்க ஏற்பாடுகளை செய்துகொள்கிறோம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? எல்லாருக்கும் தெரிந்த, தும்மல், இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இதை நான் இப்போது விளக்க இருக்கிறேன். போகலாமா?

தும்மல்

தும்மல் என்றால் என்னவென்று தெரியுமா? தும்மல் என்றால் என்னவென்று தெரியுமோ தெரியாதோ, தும்மினால் என்ன சொல்லவேண்டும் என்று நமக்குத் தெரியும்! தும்மலின் பின்னால் நல்ல நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் உண்டு. எல்லாக் கலாச்சாரத்திலும்.

உதாரணமாக கிரேக்க கலாச்சாரத்தில் தும்மலானது இறைவனிடமிருந்து கிடைக்கும் நல்ல செய்திக்கான ஒரு குறிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. தன் கணவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று தெரியாத ஒடிசியுஸின் மனைவி பெனிலொப்பி, அவன் உயிரோடு திரும்பி வருவானானால் எதிரிகளை நிச்சயம் வீழ்த்துவான் என்று கூறுகிறாள். அதுகேட்ட அவளது மகன் தும்முவான். அதை கடவுளர் கொடுக்கும் நன்மாராயமாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு அவள் நன்றி செலுத்துவதாக ஹோமரின் ’ஒடிசி’ காவியத்தில் வருகிறது! கிரேக்கர்களும், சீனர்களும், ஜப்பானியர்களும், ஐரோப்பியர்களும், ஏன் இந்தியர்களும்கூட தும்மலை  நன்மாராயமாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள்.

தும்மினால் ‘இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்’ என்று சொல்லும் பழக்கம் மேற்கில் உண்டு. இந்திய மரபிலும் தும்மினால் தீர்க்காயுஸ், சதாயுஸ் என்று சொல்லும் பழக்கம் உண்டு. முஸ்லிம்கள் தும்மினால் ’அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்வார்கள். அதைக் கேட்பவர்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ (உங்களுக்கு இறைவனின் அருள் உண்டாகட்டும்) என்று சொல்லவேண்டும். ஏன் அப்படிச் சொல்லவேண்டும் என்று நான் ஒருமுறை கேட்டேன். தும்மும்போது ஒரு வினாடி, அல்லது ஒரு மில்லி வினாடிக்கு இதயம் நின்றுவிடுமாம். அதாவது அந்த மில்லி விநாடியில் நாம் உயிரோடு இல்லை. அடுத்த கணமே இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுவதால், நமக்கு மறுபடியும் இறைவன் உயிர் கொடுத்துவிடுகிறான், எனவே எல்லாப் புகழும் அவனுக்கே என்று சொல்லவேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டது!

தும்முவது கெட்ட சகுனம் என்றும் நாம் நினைப்பதுண்டு. ஒருவர் சீரியஸாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் தும்மிவிட்டால் அவ்வளவுதான்! ‘சனியன், தும்மிட்டான், விடிஞ்ச மாதிரிதான்’ என்று சொல்லும் வழக்கமும் நம்மிடம் உண்டு.

தும்மினால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. இதுபற்றி திருவள்ளுவரே ஒரு குறளில்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

கூறுகிறார்! முதலில் கணவன் அல்லது காதலன் தும்மியவுடன் காதலி அல்லது மனைவி  - இருவருமே ஒருவராக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – வாழ்த்துகிறாள். பிறகு, யாரை நினைத்துத் தும்மினீர்கள் என்று அழ ஆரம்பித்துவிட்டாள் என்கிறது குறள்!

நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் இருக்கட்டும். ஒரு நாளைக்கு ஐம்பது தடவைகள் தொடர்ந்து தும்மல் வந்துகொண்டே இருந்தால் நாம் என்ன செய்வோம்? தும்மலை அடக்க நாமாகவே நமக்குச் சொல்லப்படும் பாட்டி வைத்தியம் எதையாவது ஏற்றுக்கொள்வோம். அல்லது டாக்டரைப் பார்ப்போம். அடுக்குத் தும்மலை ஒரு சாதனையாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. டோனா க்ரிஃபித்ஸ் என்ற பெண்மணி தொடர்ந்து 978 நாள்களுக்குத் ஆயிரக்கணக்கில் தும்மோ தும்மென்று தும்மி ‘ரெகார்டு’ உருவாக்கினார்! 

தும்மலுக்கு டாக்டரைப் பார்த்தால் அவர் ஏதாவது ’ஆண்ட்டிஹிஸ்டமைன்’ மாத்திரையைக் கொடுத்து குறைந்தது ஆறு மாதங்களுக்காவது சாப்பிட வேண்டும் என்பார்! 

சரி, தும்மல் வந்தால், அல்லது தொடர்ந்து வந்தால் நாம் ஏன் பாட்டி வைத்தியமோ, வேறு மருந்துகளோ எடுத்துக்கொள்கிறோம்? ஏன் டாக்டரைப் பார்க்கிறோம்? ஏனென்றால் தும்மலை ஒரு நோயாகவும், பல வருங்காலப் பிரச்சனகளுக்கான பிள்ளையார் சுழியாகவும் நினைக்கிறோம். ஆனால் உண்மை என்ன? தும்மல் ஏன் வருகிறது?

தும்மல் என்பது ஒரு நோய் நிவாரண வேலை. ஆமாம். நோய் வராமல் இருக்க நம் நுரையீரல் செய்யும் ’எமர்ஜன்ஸி எக்சிட் புஷ்’ தான் தும்மல். தூசி, மிளகாய்த்தூளின் நெடி, ஹோமப்புகை, ஆசிட், ப்ளீச்சிங் பவுடர், கடுமையான செண்ட், பெயிண்ட், கற்பூரம், ஊதுபத்தி போன்ற ’ஸ்ட்ராங்’கான வாசனைகளை நுகர நேர்ந்தால் தும்மல் ஏற்படும். ஏன்?

நமது நாசித்துவாரத்தினுள் கண்ணுக்குத் தெரியாத முடியிழைகள் உள்ளன. நாம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குப் புலப்படாத தூசிகள் இருந்தால் அவற்றை உள்ளே அனுமதிக்காமல் வாசலிலேயே ’தடா’ சட்டம் போட்டு நிறுத்தி வைப்பதுதான் அவற்றின் வேலை. அதையும் மீறி எதிரிகள், அந்நியர்கள் உள்ளே நுழைய முயற்சித்தால் மூக்கின் உள்ளே இருக்கும் ஒரு சவ்வுப்படலமானது ஒருவித திரவத்தைச் சுரந்து அதை மீறி கோட்டைக்குள் போகமுடியாதபடி அவர்களை ‘அரெஸ்ட்’ செய்யும்.

அதையும் மீறி எதிரிகள் நுரையீரலுக்குள் நுழைந்துவிட்டால் நுரையீரல், தொண்டை, வாய் எல்லாமாக ஒன்று சேர்ந்து அந்த தூசியை பெரும் சப்தத்துடன் வெளியே தூக்கி எறியும். அந்நியர்களை வெளியேற்றும் நுரையீரலின் அந்த பகீரதப் பிரயத்தனத்துக்குப் பெயர்தான் தும்மல்!

தும்மல் வெளிவரும் வேகம் என்ன தெரியுமா? 180-லிருந்து 220 கிமீ வேகமாம்! இவ்வளவு வேகத்தில் ஒரு கார் செல்ல வேண்டுமெனில் அதற்கு எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் தேவைப்படும்! அவ்வளவு எரிபொருளைச் செலவு செய்துதான் நுரையீரலும் தும்மல் மூலம் தூசை வெளியேற்றுகிறது! ஒரு தும்மலுக்காக அவ்வளவு சக்தியை உடல் செலவு செய்கிறதென்றால் அது எவ்வளவு முக்கியமான வேலையாக இருக்கும்? எந்த அந்நியப் பொருளும் உடலுக்குள் ஊடுருவ உடல் அனுமதிக்காது. 

இப்போது சொல்லுங்கள் நம் எதிர்ப்பு சக்தியாகிய தும்மல் நோயா? நிவாரணமா? உள்ளேயிருந்து தூசி போன்ற அந்நியப்பொருள்கள் உடலுக்குள் நுழைந்துவிடாமலும், உள்ளே நுழைந்துவிட்ட அந்நிய சமாச்சாரங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதும்தான் தும்மல் செய்யும் வேலையாகும். இந்த தும்மலை வரவிடாமல் தடுக்க மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டே இருந்தால் என்னாகும்? நுரையீரலுக்குள் நுழைந்த தூசி வெளிவருவதை நாமே தடுத்துவிடுகிறோம் என்று அர்த்தம். நம் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறோமென்று அர்த்தம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் உடல் என்ன செய்யும்?

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்துகொண்டு சளி என்ற ஒன்றை உருவாக்கும்! கொஞ்சம் கொழகொழவென்றும் வழவழவென்றும் இருக்கும் அந்த சமாச்சாரம் நுரையீரலுக்குள் புகுந்த தூசியை அங்குமிங்கும் அசைய விடாமல் சிறைப்பிடித்துக் கொள்ளும். சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட பூச்சி மாதிரி, தூசியை சிறைப்பிடித்திருக்கும் சளியை வெளித்தள்ள இருமலை ஏற்படுத்தும்.

நாம் இப்போது என்ன செய்கிறோம்? சளியைப் போக்கவும், இருமலைப் போக்கவும் ‘இருமலே, போய்வா எனச் சொல்லும் க்ளைகொடின் அருந்துங்கள்’ என்று பாட்டு பாடிக்கொண்டே இருமல் டானிக்குகளை காலி செய்து இருமலை அடக்கி சளி உடலை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்கிறோம்! (பொதுவாக எல்லா வீடுகளிலும் பெனட்ரில் எனப்படும் இருமல் டானிக் இருக்கும். எங்களூரில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தோசைக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி என்று எதுவும் இல்லையென்றால் பெனட்ரிலை ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்)!

மருந்து மாத்திரைகள், டானிக்குகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் இருமல் எப்போது நிற்கும்? நெஞ்சுக்குள் தேங்கிய சளி முழுவதும் வெளியேற்றப்படும்வரை இருமல் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை நாளில் சளி வெளியேறும் என்பது ஆளுக்கு ஆள் மாறும். எவ்வளவு சளி உள்ளே இருக்கிறது என்பதைப் பொருத்தது அது. உங்கள் ஏ.டி.எம். கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது எப்படி அடுத்தவருக்குத் தெரியாதோ அதேபோல உங்களுக்கு எவ்வளவு சளி இருக்கிறது என்பதும் அடுத்தவருக்குத் தெரியாது என்கிறார் ஹீலர் உமர்! குறிப்பாக மருத்துவர்களுக்குத் தெரியவே தெரியாது என்று நான் சேர்த்துக்கொள்வேன்!

சளியையும் இருமலையும் நிறுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறோம். அப்போது என்னாகும்? உடல் பேஜாராகிவிடும். என்னடா, நம்ம ஆளே நமக்கு வில்லனாக இருக்கிறானே என்று நொந்து போய் கடைசி முயற்சியாக உடலில் தேங்கியுள்ள தேவையற்ற சளி, தூசி போன்ற கழிவுகளையெல்லாம் வெளியேற்ற ஒரு உபாயம் செய்யும். அது என்ன? எல்லா எழவுகளையும் வெப்பமாக மாற்றி வெளியேற்ற ஆரம்பிக்கும்!

நம் உடலின் இயல்பான இயக்கத்திற்குத் தேவையான சூடு 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். ஆனால் இப்போது வெளியேற்ற வேண்டிய கழிவுகளெல்லாம் வெப்பமாக உருமாற்றம் பெற்றுவிட்டதால் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். அது உடல் பூராவும் சீராகப் பரவும். இந்த அவசியமான வெப்ப அதிகரிப்பைத்தான் நாம் ஜுரம், காய்ச்சல் என்றெல்லாம் சொல்கிறோம்!

அப்படியானால் காய்ச்சல் நல்லதா? ரொம்ப நல்லது. இதெல்லாம் தெரிவதற்கு முன்பே நான் காய்ச்சலைக் காதலித்தவனாக இருந்திருக்கிறேன்! ஆமாம். எனக்குக் காய்ச்சல் வந்தால் ரொம்பப் பிடிக்கும். எதிலும் ஒரு நிதானம் வந்துவிடும். ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதாக இருந்தால்கூட கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தத்துவ ஞானியைப் போல குடிக்க நேரிடும்! ஒருமுறை எனக்கு வந்த காய்ச்சல் பற்றி ‘காய்ச்சல்’ என்ற தலைப்பில் ஒரு கதையே எழுதியிருக்கிறேன்!

போகட்டும். உண்மையான காய்ச்சல் பற்றிய நிஜத்துக்கு வருவோம். ’தேவைப்படும்போது உடலில் ஜுரம் ஏற்படவில்லையென்றால் நம் உடலில் எதிர்ப்பு சக்தியே இல்லை என்று பொருள்’ என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான். (இவர் ஸ்டான்லியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, பின்பு எம்.டி. படிப்பும் முடித்துவிட்டு, எட்டு ஆண்டுகள் ஆங்கில மருத்துவராகப் பணியாற்றி, ஆங்கில மருத்துவம் ஒரு குப்பை என்ற முடிவுக்கு வந்து ஒரே ஒரு ஊசி அல்லது ஒரு விரல் கொண்டு நோய் தீர்க்கும் சைனீஸ் க்ளாசிக் அக்யுபங்சர் முறையை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர். இந்திய அக்யுபங்சரின் தந்தை என்றும் இவர் சொல்லப்படுகிறார். பின்னர் அதையும் தாண்டி, விரலால் தொடுவதுகூடத் தேவையில்லை என்றா முடிவுக்கு வந்து ’இறைவழி மருத்துவம்’ என்ற ஒன்றை இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்).

ஜுரம் வந்தால் பல நோய்களும் போய்விடும். ஜுரமே வரவில்லை என்றால் ஏகப்பட்ட நோய்களுக்கு உடல் ஆளாகும் என்கிறார் இறைவழி மருத்துவர் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான். ஜுரத்தைத் தணிப்பதன் மூலம் வெப்ப சக்தியை, எதிர்ப்பு சக்தியை வீணடித்துவிடுகிறது “உண்மையை அறிய வக்கில்லாத மடத்தனமான ஆங்கில மருத்துவம்” என்று கொதிக்கிறார் அவர்!

தும்மலில் தொடங்கி காய்ச்சல் வரை பார்த்தோம். உடலின் குணப்படுத்தும் தன்மைக்கு இது ஒரு ’சாம்பிள்’ தான். எல்லாவற்றையும் சொல்ல பல நூல்கள் எழுதவேண்டி வரும். உடல் நம்மை குணமாக்கவே எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை நாம் மேலும் மேலும் ரணமாக்கவே முயன்றுகொண்டிருக்கிறோம்!

வாந்தி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏன் வருகிறது? ரொம்ப ’சிம்பிள்’. உள்ளே போன சரக்கு சரியில்லை என்று அர்த்தம். இரைப்பைக்கு மேலேயே கெட்டுப்போன அந்த உணவு இருந்தால் அது வாந்தியாக வெளியே வரும். இரைப்பைக்குக் கீழே தள்ளிவிட்டால் அது செரிக்கப்படாமல் பேதியாக வெளியேறும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். வாந்தியையும் பேதியையும் நிறுத்துவதற்கு நாம் முயற்சி செய்துகொண்டே இருந்தால் உடல் என்னதான் செய்யும் பாவம்!

உடலில் தோன்றும் வலிகளும் இப்படித்தான். உதாரணமாக வயிற்றில் வலிக்கிறது என்றால் பிரச்சனை வயிற்றில் இல்லை. வேறு எங்கோ உள்ளது. எந்தப் பகுதி பலவீனமாக உள்ளதோ அங்கே வலி தோன்றும். ஆனால் மருத்துவர்களிடம் சென்றால் வயிற்று வலி போகத்தான் மருந்து கொடுப்பார்கள். வயிற்றுவலியும் அடங்கிவிடலாம். ஆனால் அது எதனால் ஏற்பட்டதோ அந்த காரணி அப்படியே இருக்கும். ’நோய் முதல் நாடி’ என்று வள்ளுவன் சொன்னதை மீண்டும் நினைவு கூறலாம். விளைவுதான் அடக்கிவைக்கப்படுகிறது. ஆனால் பிரச்சனை அப்படியேதான் இருக்கும். பிரச்சனையை உடலிடமே விட்டுவிட்டால் அது தீர்த்திருக்கும். உடலில் ஏற்படும் வலிகள் யாவும் பிரச்சனை தீர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே தவிர வேறில்லை.

வலி ஏற்படும்போது வலியைப் பொறுத்துக் கொண்டால் போதும். விரைவில் வலியும் போய்விடும், அது எதனால் ஏற்பட்டதோ அந்த காரணியும் சரிசெய்யப்பட்டிருக்கும். பொறுத்துக்கொள்ள முடியாத வலி ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கலாம். உண்மையிலேயே தாங்க முடியாத வலி ஏற்பட்டால் உடனே நாம் உணர்வற்ற நிலைக்குப் போய்விடுவோம். உணர்வு இருக்கிறது என்றால் ஏற்பட்ட வலி பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான் என்று அர்த்தம். 

வலி ஏற்பட்டால் அதைப் போக்க இன்னொன்று செய்யலாம். நான் செய்யும் முறை இதுதான். என் குருநாதர் மூலம் நான் கற்றுக்கொண்டது இது . பல நூறு தடவைகள் செய்து பார்த்து வெற்றி பெற்றது. எங்கேயாவது உடலில் வலி ஏற்பட்டால், உடலை அசைக்காமல் நேராக அமர்ந்துகொண்டு, அல்லது நேராக படுத்துக்கொண்டு, அந்த வலியையே கவனிக்கவேண்டும்.

ஐயோ, இப்படி வலிக்கிதே என்று புலம்பிக்கொண்டல்ல. ஒரு திரைப்படம் பார்ப்பதைப்போல, கவலை, அச்சம், புலம்பல் ஏதுமில்லாமல் அடிபட்ட ஒருவரின் காயத்தைக் கீறி எப்படி ஒரு டாக்டர் உணர்ச்சிவசப்படாமல் தையல் போடுவாரோ அதைப்போல. யாருக்கோ வலிப்பதைப் போலவும், அதை நீங்கள் பார்ப்பதைப் போலவும் உங்கள் வலியை நீங்களே பார்க்க வேண்டும்.

இது கொஞ்சம் கடினமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம். அதனால் என்ன? வலி போனால் சரிதானே? இப்படி வலியையே ஒரு பத்து நிமிடம் கவனித்துக்கொண்டே இருந்தால் வலி கணிசமாகக் குறைந்துவிடும் அல்லது சுத்தமாகப் போய்விடும். இரண்டாம் முறை முயற்சி செய்யும்போது பத்து நிமிடம் ஐந்தாகக் குறையும். இப்படியே பழக்கமாகிவிட்டால் வலிக்கிறதே என்று நினைத்தவுடன் வலி போகும்! செய்துதான் பாருங்களேன். ஒரு பைசாகூட செலவில்லாத குணமாக்கும் கலை இது!

உங்கள் சிறுநீரை பரிசோதனை செய்து அதில் 200 ’சுகர்’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் ஒரு சர்க்கரை வியாதிக்காரர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தமா? அல்லது உடம்பில் இருந்த தேவையில்லாத கெட்ட சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டது என்று அர்த்தமா? இரண்டாவதுதான். ’வாழ்க சிறுநீரகம்’ என்று கோஷம்தான் போடவேண்டும். சிறுநீரில் சர்க்கரை இருப்பதாக பரிசோதனைகள் சொன்னால் உங்கள் கிட்னி நன்றாக வேலை செய்வதற்காக இறைவனுக்கும் கிட்னிக்கும் நன்றி சொல்லவேண்டும்! அதை விட்டுவிட்டு, ஐயையோ ’டயபட்டிஸ்’ வந்துவிட்டது என்று அச்சப்படக்கூடாது. (டயபடிஸ் பற்றி தனியாக பார்க்க இருக்கிறோம்).

உடல் செய்யும் குணப்படுத்தும் காரியங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த உலகமே ஒருபக்கம் போனால் நீ எதிர்ப்பக்கம் போகிறாயா? அப்படியானால் இந்த உலகம் காலம்காலமாகச் சென்று கொண்டிருக்கும் திசை தப்பு என்று சொல்கிறாயா? உனக்கு என்ன கொழுப்பு என்று கேட்கத் தோன்றுகிறதா?

அப்படியானால் கொழுப்பைப் பற்றி அடுத்து பார்த்துவிடலாமே!

தொடரும்...