எந்த ஒரு மோசமான சூழலிலும் சாதகமான சில அம்சங்கள் இருக்கவே செய்யும். அந்த
அம்சங்களை விடாமுயற்சியுடன் பலப்படுத்த ஆரம்பித்தால் எந்த ஒரு மோசமான சூழலையும்
தோற்கடித்து முன்னேற மனிதர்களால் முடியும்.
ஆனால், தன்னம்பிக்கை இல்லாமல் இளைஞர்கள் இழக்கிற வாய்ப்புகள்தான்
எத்தனை! தன்னம்பிக்கையோடு இருங்கள் என்பதை அவர்களுக்கு அடிக்கடி எடுத்துச்சொல்ல
வேண்டியிருக்கிறது.
எல்லா மனிதர்களும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகத் தங்களை
வளர்த்துக்கொள்வதில்லை. அவர்களின் தன்னம்பிக்கையையும் வாழ்க்கை பற்றிய
கண்ணோட்டத்தையும் வளர்த்துக்கொள்ள வெளியிலிருந்தும் அவர்களுக்கு உதவி
தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவி தரும் தொடராகத்தான் ‘மனசு போல வாழ்க்கை’ வெளியானது. ‘தி இந்து’ நாளிதழில் தொடர்ந்து எழுதுகிறவர் டாக்டர்.ஆர்.
கார்த்திகேயன். ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் அவர்
எழுதிய இந்தத் தொடர், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மனதும் அதன் எண்ணங்களும் மனிதர்களின் வாழ்க்கைப் போக்கை எப்படியெல்லாம் தீர்மானிக்கின்றன?, நல்ல எண்ணங்களும் தன்னம்பிக்கையான சிந்தனைகளும் எப்படி பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும்... எடுத்துக்கூறியுள்ளார். இதனைப் படிக்கிற வாசகருக்கு வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தை இது கூடுதல் ஆக்கும்.
ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத்
தேடித்தான்!
படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண
ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...
இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?
மன அமைப்பு
நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய
வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப்
பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.
உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக்
கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி.
திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம்
நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.
மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள்.
அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப்
போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.
என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.
சுடுதண்ணீர் சிகிச்சை
ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி
பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த
மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான
பலனையும் அடைவர்.
அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும்
எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை
தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின்
அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.
நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என்
தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத
மகத்தான மாறுதல் அது.
ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.
‘பிளேஸ்போ எஃபெக்ட்’ (Placebo effect) பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட 👇முகவரிக்குச் செல்லுங்கள்.
https://reghahealthcare.blogspot.com/2016/02/placebo-effect.html
பெரும் கண்டுபிடிப்பு
நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல்
வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி
அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர்
அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும்
நெருப்பில் நடக்கிறார்கள்.
கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை
நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே
சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை
விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.
மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.
இரண்டும் நிஜங்கள்
பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை
முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர்
மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம்
செயலாகிய சாதனைகள் தான்.
இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய
நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி
ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான்
வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.
“எங்க
குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு
தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி”. “நம்ம நாட்டுல இதுவே
ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்”. “தலை கீழா நின்னு
தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”
இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை
பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும்
வலுப்படும்.
“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.
எண்ணமே வாழ்வு
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும்
விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும்
இதையே வலியுறுத்துகின்றன.
“என்
வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது?” என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை
அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு
கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும்
ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!
எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில்
தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை
யோசிக்கிறீர்களா?
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள்
எண்ணங்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப்
பாடல் வரியில் சொல்லிவிட்டார்: “பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர்
எண்ணங்களே!”
நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது
எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.
10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார்.
சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து, எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில். இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.
பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர
வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித்
தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய
கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?
எல்லாம் மனசு தான்.
இரண்டு எண்ணங்கள்
விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:
காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை
பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன்
அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை.
அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”
இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”
வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில்
வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!
எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.
செயலின் விதை
“ஏன்
இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம்
என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப்
படித்தேன்:
கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி
சொல்லுங்கள்?”
பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள்
குத்தும்!”
அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும்
இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!
சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?
ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.
எண்ணமே ஆதாரம்
“ஏன்
முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை?” “ஏன்
இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன்
இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில்
செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க
முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சண்டை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச்
சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின்
செயல்களின் காரணங்கள் புரியும்.
எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர்
குலைய விடுகிறோம்.
அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும்
அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம்
எளிமை படுத்தலாம் வாங்க...!
ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும்
வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில்
புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத்
தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம்.
“சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம்
ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”
அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு
கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப்
பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து
இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”
எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள்
உறவை தீர்மானிக்கும்.
ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
“நீங்கள்
உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை
நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?
“அப்படியா
ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள்.
எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.
உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது.
கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.
ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான்
என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக்
சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு
பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே
ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.
ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும்
வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன்
தேவைப்படுகிறது.
“உங்கள்
அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு
ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா?” என்று
எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.
அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய
முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான்
மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.
ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில்
நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின்
மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.
மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை
தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள்
அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம்
கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப்
பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.
“உங்கள்
குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக்
கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில்
அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம்
நமக்குச் சுலபமாக வரும்.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின்
பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான
அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.
அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப்
படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை
எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.
அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை
வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.
இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம்
போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை
போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!
இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை
உடனடியாகச் செயல்படும். முன் மூளை சற்று நேரமெடுக்கும்.
நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம்
செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு
அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த
பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.
உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம்
குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய
நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “நான் அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை..!” என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.
ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள்
மனைவியின் பின் மூளையைத் தாக்க, “எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று
கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க
முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான்
புதுசா என்ன?” என்று
சமாதானமாகிறார்.
ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.
அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற
நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற
பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும்
பயிற்சியும் தேவைப்படுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன
கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே
சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக
விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?
வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும்
கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை
துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை
துன்புறுத்துகின்றன.
நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும்.
மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!
இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!
நேர்மறை எண்ணம் எது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதே போல எதிர்மறை எண்ணம் வருகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
மிக எளிய வழி ஒன்று உள்ளது. எண்ணத்தைக் கண்காணிப்பதைவிட
உணர்ச்சியைக் கண்காணிப்பது சுலபம். நேர்மறை உணர்வுகள் நேர்மறை எண்ணங்களின் விளைவு.
எதிர்மறை உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களின் விளைவு.
பதற்றமும் உற்சாகமும்
மேடைப் பேச்சுக்குத் தயார் செய்கிறார் ஓர் இளைஞர். அவர்
மனம் படபடப்பாக இருக்கிறது. “என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா
கேவலமாயிடும்” என்ற எண்ணம் பின்னணியில் படபடப்பை இயக்குகிறது.
அதே மேடைப் பேச்சுக்கு இன்னோர் இளைஞரும் தயார் செய்கிறார்.
அவர் மனம் உற்சாகமாக இருக்கிறது. “கடைசியில் அந்த ஜோக்கைச் சொல்லி ஒரு பெரிய
அப்ளாஸ் வாங்கணும்” என்று எண்ணுகிறார். அந்த எண்ணம் அவருக்கு உற்சாகம் தருகிறது.
“ஏற்கெனவே
ஒரு தோல்வியை அடைந்திருந்தால் எதிர்மறை எண்ணம் தானே வரும்? நிறைய
ஜெயித்தால் நேர்மறை எண்ணம் தானாக வரும்” என்று நீங்கள் வாதிடலாம்.
அப்படியானால் எண்ணங்களும் உணர்வுகளும் நம் செயல்களின்
விளைவுகளா?
இது பாதி நிஜம்.
எண்ணம் - உணர்வு - செயல்
எண்ணம் - உணர்வு - செயல் மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக்
கூடியவை. “என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றம் என்ற உணர்வைக்
கொடுக்கிறது. பதற்றம் என்ற உணர்வு வாய் குழறுதல் என்ற செயலை நிகழ்த்துகிறது.
அதே போல வாய் குழறும் போது பதற்றம் வரும். பதற்றம் வந்தால் ‘நம்மால்
முடியாது’ என்ற எண்ணம் வருகிறது. இதே போல நேர்மறையாகவும் நடக்கலாம். “என்னால்
முடியும்” என்ற எண்ணம் நிதானம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. நிதானம்
கணீரென்ற குரலில் பேச வைக்கும்.
அதே போலக் கணீரென்று பேசும் போது நிதானம் வரும். நிதானம்
நம்மால் முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இந்த எண்ணம் - உணர்வு - செயல் என
ஒரு வளையம் போலச் சுற்றிச் சுற்றி வருவதுதான் நம் வாழ்க்கையில் அனைத்தையும்
நிகழ்த்துகிறது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இந்த மூன்று விஷயங்களையும் அலசுங்கள். எது அதிகம் பாதித்தது என்று யோசியுங்கள். பெரும்பாலும் எண்ணம்தான் பிரதான காரணமாக இருக்கும்.
எண்ணத்தின் உருவாக்கமே
உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் முதலில் யாரோ ஒருவர்
தன் உள்ளத்தில் உருவாக்கியதே. நாடுகள், எல்லைகள், கட்சிகள், கட்டிடங்கள், கொள்கைகள், பதவிகள், சாதிகள், குற்றங்கள் என அனைத்தும் யார் எண்ணத்திலோ தோன்றியவை தான்.
நம் செயல்கள் அனைத்துக்கும் நம் எண்ணங்கள் தான் காரணம்
என்று ஒப்புக்கொள்வதில் நம்மில் பலருக்குச் சிக்கல் இருக்கிறது. நம் முடிவுகளும்
செயல்களும் தானே வாழ்க்கை?
அப்படியானால் நம் வாழ்க்கையைப் பெரிதும் நிர்ணயிப்பது நம்
எண்ணங்கள் தானே?
“என்
வாழ்க்கை இப்படி இருக்க என் எண்ணங்கள் தான் காரணமா?” என்று நம்ப முடியாமல்
கேட்பவர்களுக்கு என் பதில்: ஆம்.
எண்ணம் போலத் தான் எல்லாம் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி என்றால் தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்றா எண்ணுகிறார்கள்? அவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் தோல்வியின் விளைவுகள் பற்றி அதிகம் யோசித்திருப்பார்கள். வெற்றி பற்றி யோசிப்பதை விடத் தோல்வி அடையக்கூடாது என்று அதிகம் யோசித்திருப்பார்கள். நம் மனம் எந்த மன நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ற நிகழ்வுகள்தான் நம்மைத் தொடரும்.
அப்பாவும் மகனும்
ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். அப்பாவுக்குத் தன்
மகனின் திறமை மேல் நம்பிக்கை இல்லை. பொறுப்பில்லாதவன் என்ற எண்ணம். நண்பரிடம்
குறைபடுகிறார். “ஒரு வேலையைக் கூடச் சரியா செய்ய மாட்டான்!” கடைக்குப் போகும் வேலை
வருகிறது. “நீங்க வேணா பாருங்க, எப்படி சொதப்புவான்னு” என்று மகனின் முன்பாகவே சொல்லி நூறு
ரூபாய் கொடுத்துச் சில பொருட்கள் வாங்கி வரச்சொல்கிறார்.
அப்பாவின் எண்ணமும் மனப்பான்மையும் மகனின் தன்னம்பிக்கையைக்
குறைக்கிறது. பயம் வருகிறது.
சொதப்பக்கூடாது என்ற எண்ணம் வலுவடைகிறது. எரிச்சலும் வருகிறது. பயந்தது போலவே
மீதம் தரப்பட்ட சில்லறையில் ஒரு ரூபாயைக் குறைத்து வாங்கி வருகிறான்.
எண்ணிப்பார்த்த அப்பா தன் நண்பரிடம், “நான் சொன்னேன்ல சொதப்புவான்னு. சரியாத்தானே சொன்னேன்.
பாருங்க ஒரு சில்லறையைக்கூட சரியா எண்ணி வாங்க முடியலை! இவன் எல்லாம் என்ன பண்ணப்
போறானோ?”
இப்பொழுது அப்பாவுக்கு இருக்கிற தன் மகன் பற்றிய எண்ணம் சான்றோடு ஊர்ஜிதப்படுகிறது. மகனும் அதை மெல்ல நம்ப ஆரம்பிக்கிறான். “சரி தான். எனக்கு சாமர்த்தியம் குறைவு தான்!”
பெரும் பிரச்சினை
முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள் நாம் நம்பும்
விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப்போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால்
அபிப்பிராயங்களாய் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம்.
நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது.
ஆங்கிலத்தில் Self-Fulfilling Prophecy என்று ஒன்று உண்டு. அதை
விரிவாக விவாதிப்பதற்குள் உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சினை எது என்று
யோசியுங்கள். அது பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது Pattern (முறை)
தெரிகிறதா என்று பாருங்கள்.
உங்கள் வாழ்வைத் திருப்பிப் போடும் விசையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள்!
“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் Self
fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு
ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.
“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா
முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன்
தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை
என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன்
கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”
நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப்படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது. எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.
நடக்காது என்பார் நடந்துவிடும்
“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.
‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக்
கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில்
அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள்
சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல
வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.
இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன்
மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே
தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று
தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின்
கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.
ஊத்திக்கொள்பவர்கள்
தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு
காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில்
இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து
பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.
அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச்
சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை
துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.
பட்டியலிடுங்கள்
நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம்
ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால்
உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக
பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள்
எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள்
எண்ணங்களைச் சொல்லுவார்கள்.
உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக
விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன்
உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.
வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா?
வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?
முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.
ஒரு நாளில் 35 ஆயிரம்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’
என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று
கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம்
எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.
ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?
சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு
நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும்
வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம்
எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும்
யோசிக்கிறோமாம்!
ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ
கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில்
தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன
என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!
கடந்த பதிவில் “எதை வேண்டாம்னு நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும்!” என்று
நான் எழுதியது பல பெற்றோர்களைக் கலக்கத்தில் தள்ளியது தெரிகிறது. பொதுவாக,
நாம் அனைவருமே நல்ல
நோக்கத்தோடுதான் பேசுகிறோம். ஆனால், அச்சம் பல எதிர்மறை எண்ணங்களை வரவழைத்துவிடுகிறது. இது
மனதின் இயல்பு. இதற்குக் குற்ற
உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.
நல்ல உள்நோக்கத்தை, நேர்மறை எண்ணங்களில், நல்ல சொற்களில் எப்படி தெரிவிப்பது என்பதுதான் சூட்சுமம். அதற்கு முன்பாக, நல்ல உள் நோக்கத்துடன் ‘எதை வேண்டும்’ என்று எண்ணுகிறோமோ,
அது எப்படி நடக்கிறது என்பதை நம் மூளையின் செயல்பாட்டை
வைத்துப் புரிந்து கொள்வோம்.
மூளையின் பயணம்
நாம் பேசும் மொழியைப் படங்களாய்த்தான் நம் மூளை
உள்வாங்கிக்கொள்ளும். எழுத்துக்களாய் அல்ல.
“நான் சென்ற முறை சிக்கிம் போனபோது ஒரு சிலிர்ப்பான அனுபவம்
நிகழ்ந்தது. குறுகிய சாலையில் எங்கள் வண்டி போகிறது. நானும் ஓட்டுநரும்தான். ஒரு
புறம் திரும்பினால் பள்ளத்தாக்கு. இன்னொரு புறம் மலை மேடுகள். இடையில் ஆபத்தான
முறையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
இருட்டிக்கொண்டு மழை வேறு வரும் போலத் தெரிகிறது. ஆனால்,
வழியெங்கும் பல நிறங்கள் கலந்த மலர்க் கூட்டங்கள் மனதைக்
கொள்ளை கொண்டன. இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்த போதே திடீரென
எதிரில் ஒரு லாரி வேகமாக வந்தது...”
இப்போது உங்கள் மனத்தில் என்ன காட்சிகள் வந்தன?
நான் சென்ற வண்டி எது? எந்த நிறத்தில் பூக்களைப் பார்த்தீர்கள்?
எந்தப் பக்கம் பள்ளத்தாக்கு? எந்தப் பக்கம் மலைமேடு? எதிரில் வந்த லாரி எப்படி இருந்தது? என் ஓட்டுநர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேனா அல்லது பின்
சீட்டில் இருந்தேனா? எதிரில் வந்த லாரி என்ன செய்திருக்கும்?
இவை அனைத்துக்கும் உங்கள் மூளை தானாக விடையைத் தேடி நிரப்பிக்கொள்ளும். நிஜத்தில் உங்கள் மூளை உங்களை சிக்கிம் பயணத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அச்சு வரிகள் நினைவில் இருக்காது. ஆனால் ஒரு மலைப் பிரதேசக் காட்சியை உங்கள் மூளை வடிவமைத்துக்கொள்ளும்.
நிஜத்தின் பாவனை
நிஜமாகவே நான் சிக்கிம் போனேனோ அல்லது கதை விடுகிறேனோ,
எதுவாக இருந்தாலும் உங்கள் மூளை தரும் உங்கள் அனுபவம்
நிஜம். அதை விபத்து என்றோ சாகஸம் என்றோ நீங்கள் கூடுதலாகக் கற்பனை செய்யும்போது
உங்கள் உணர்வுநிலையும் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்தும்.
காணாததை இப்படிக் காட்சிப்படுத்தி,
அதற்கு ஏற்ப
எண்ணங்களையும் உணர்வுகளையும் உருவாக்கி, அதை நிஜம் போலப் பாவிப்பது நம் மன இயல்பு. அதனால்தான்
இத்தனை கற்பனை சந்தோஷங்களும், கற்பனை பயங்களும்!
இதில் ஒன்று முக்கியமானது. நீங்கள் காட்சிப்படுத்துவது
நிஜமா, பொய்யா, நேர்மறையா, எதிர்மறையா என்றெல்லாம் மூளை கவலைப்படாது. அது செய்ய
வேண்டிய வேலையைச் செய்யும்.
கிறக்கத்தின் காரணம்
அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரின் பின்னாலிருந்து நம்பியார்
தாக்க வந்தால் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு, “வாத்தியாரே.. பின்னால பாரு!” என்று கத்துவது இதனால்தான்.
அதே போல மல்லிகா ஷெராவத்தைப் பார்த்துக்
கிறங்குவதும் இதனால்தான். படத்திலிருப்பதையும் தாண்டி,
உங்கள் கற்பனைகள் உங்களை
உணர்ச்சிவசப்பட வைக்கும்.
உங்களுக்குப் பிடித்த கோதுமை அல்வாவை அவசர அவசரமாய்
விழுங்குகையில் ஒருவர் ஓடி வந்து, “சர்க்கரைப் பாகில் ஒரு பல்லி விழுந்துடுச்சாம். சமையல்காரர்
சொல்லிட்டிருந்ததை இப்பத்தான் கேட்டேன்!” என்கிறார்.
இப்போது உங்களால் தொடர்ந்து அல்வாவை ரசிக்க முடியுமா?
பல்லி விழுந்த காட்சி மனதில் வரும். அதன் விஷம் உங்களைத்
தாக்கி நீங்கள் வாந்தி எடுப்பதாகக் காட்சி வரும். பிறகு நிஜத்தில் வாந்தி வரும்
உணர்வு வரும்.
கற்பனையின் கத்தல்
பொய்யா, நிஜமா என்று மூளை கேள்வி கேட்காது. கொடுத்த காட்சிக்கு ஏற்ற
உணர்வுகளையும் உடல் நிலை மாற்றங்களையும் உடனே கொண்டு வரும்.
இதேபோலத்தான் கண்ணாடி டம்ளரைக் குழந்தை எடுத்துப்
போகும்போது, அது கீழே போடுவதை மனம் கற்பனை செய்யும். உடைந்து கையில்
குத்துவதைக் கற்பனை செய்யும். உங்கள் கத்தலில் பதற்றப்பட்டு குழந்தை டம்ளரைக் கீழே
போடும்.
இதேபோலத்தான் எல்லா உறவுகளிலும். “அவன் அப்படி இருக்கக்
கூடாது” என்று எண்ணுகையில் அவனை நம் எண்ணத்துக்கு ஏற்ப மாற்ற
ஆரம்பித்துவிடுகிறோம்.
வன்முறையின் ஆதாரமே இதுதான். “அவன் நம்மைத் தாக்கக் கூடாது!” என்ற எண்ணம்தான் நம்மைத் தற்காப்புத் தாக்குதலுக்குத் தயார் செய்கிறது. அதன் முனைப்பை எதிராளி உணர்ந்ததும் அவனும் தற்காப்புக்குத் தயாராக, அதை ஆரம்பமாக நினைத்துக் கொண்டு, “பயந்த மாதிரியே நடக்குது” என்று முதல் அடியை (தற்காப்பாக நினைத்து) கொடுக்க... பின் யுத்த மயம் தான். இருவரும் எதிராளி தான் யுத்தம் துவங்கியதாக நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மறையின் சப்ளை
சரி, டம்ளரைக் கீழே போடாமல் குழந்தை போவதற்கு எப்படிச் சொல்லலாம்?
“பாப்பா.. ஒரு கையைக் கீழே கொடுத்து டம்ளரைப் பத்திரமா
எடுத்திட்டுப் போ! ஆ... அப்படித்தான் சபாஷ்!” என்றால் அதைக் குழந்தை
நன்றாகக் கற்கும்.
ஆனால், இதைச் சொல்லத் தெளிவான மனமும்,
நேர்மறையான கற்பனை வளமும்,
உற்சாகமும்,
நம்பிக்கையும் அதிக
அளவில் தொடர்ந்து மனதுக்குத் தேவைப்படுகிறது.
தினசரி அவ்வளவு எண்ணங்களை நாம் சப்ளை செய்கிறோமா? அத்தகைய அளவில், நேர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வர என்ன செய்யலாம்?
ஒரு அன்பர் என்னிடம் கேட்டார். “நல்லது நினைச்சா நல்லது நடக்கும்னு எங்களுக்கும் தெரியும். ஆனா எதைப் பாத்தாலும் நல்லதே தோண மாட்டேங்குதே? டி.வியைப் போட்டா டென்ஷன், பேப்பரை விரிச்சா பகீர்னு செய்தி, ஆபீஸ் போனா டார்ச்சர், ரோடுல போனாகூட நல்லதா என்ன நடக்குது? எப்படி நேர்மறையா யோசிக்கறது? சொல்லுங்க!” என்று கொந்தளித்தார். “உலகம் இப்படி இருக்கையில் நான் மட்டும் வேறெப்படி இருக்க முடியும்” என்பதுதான் சாரம்.
வெளிச்சூழலும் அனுபவமும்
உண்மைதான். தொலைக்காட்சித் தொடரில் வன்மம். பத்திரிகைகள்
வன்முறைகள் அனைத்தையும் படம் பிடித்து நம் கைக்குக் கொடுக்கின்றன. வீடு,
அலுவலகம் என்று எங்கு
சென்றாலும் மனிதர்கள் பற்றிய சுவாரஸ்யக் கதைகள் அனைத்தும் எதிர்மறை
எண்ணங்களில்தான் முடிகின்றன. சாலை,
அரசியல், நாடு, பூமி என்று எதை யோசித்தாலும் நம்பிக்கையைத் தரும் எண்ணங்கள்
மிகக்குறைவுதான் மறுப்பதற்கில்லை.
வெளிச்சூழல் நம் எண்ணங்களைப் பாதிக்கும் என்பது உண்மை. நம்
அனுபவங்கள் நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் வெளிச்சூழல்களையும்
அது தரும் அனுபவங்களையும் நம் மனதுக்கேற்ப திரித்துக்கொள்பவை நம் எண்ணங்கள்.
அதனால்தான் ஒரே சூழலில் வளரும் இருவர் வெவ்வேறு விதமாக வாழ்கிறார்கள். காரணம்,
அவர்கள் வாழ்க்கையைத் தங்கள் எண்ணத்துக்கேற்ப புரிந்து
கொள்கிறார்கள். அதற்கேற்ப வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள்.
தள்ளி இருத்தல்
எண்ணங்கள்தான் அனுபவங்களை நினைவுகளாக்கி,
அபிப்பிராயங்களாய் மாற்றி காலம் முழுவதும் கூட்டிச்
செல்கின்றன. சாதி, மதம், மொழி,
இனம், தொழில், ஊர் என எல்லாவற்றைப் பற்றியும் நாம் அபிப்பிராயம் வைக்கக்
காரணம் நம் முதல் அனுபவத்துக்குப் பிறகு நமக்குத் தோன்றும் எண்ணங்கள்தான்.
ஒரு அனுபவத்திலிருந்து வரும் கற்றலை மட்டும்
எடுத்துக்கொண்டு, அந்த அனுபவத்தை விருப்பு - வெறுப்பு இல்லாமல் நோக்கும் பக்குவம்தான்
வாழ்க்கையை மேல் நிலைக்கு இட்டுச்செல்லும். இதற்கு அனுபவம் தரும் எதிர்மறை
எண்ணங்கள் மற்றும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
இதற்கு முதல் வழி எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடிய
விஷயங்களிலிருந்து தள்ளி இருத்தல். இது முழுத் தீர்வு அல்ல. வெளிக் காரணங்களை
முழுமையாகத் தள்ளிவிட முடியாது. ஆனால், நம் சூழலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்மறை
எண்ணங்களிலிருந்து தள்ளியிருக்க முடியும்.
யார் ரிமோட்?
தொலைக்காட்சி ரிமோட்டை நீங்கள் இயக்குவதாக நம்பிக்
கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ரிமோட்தான் உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள்
எப்போது சாப்பிட வேண்டும், எங்கு உட்கார வேண்டும், எப்போது பேச வேண்டும். என்னென்ன பார்க்க வேண்டும் என்பதைத்
தொலைக்காட்சி மற்றும் மொபைல் தான் முடிவு செய்கிறது. இந்தப் போதையைக் கையாள
மிதமிஞ்சிய சுயக் கட்டுப்பாடு தேவை.
ஒரு தட்டு நிறைய முந்திரிப் பருப்பை எதிரில் வைத்துக்கொண்டு
இரண்டே இரண்டு பருப்பைச் சாப்பிட்டுவிட்டு நிறுத்த முடியுமா?
அது போலத்தான் அளவாக
டி.வி மற்றும் மொபைலை பார்ப்பது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாலும் முடியாது.
“டி.வியில் மொபைலில் சில நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பேன்!” என்று யாராவது
உத்தரவாதம் தர முடியுமா?
எதிர்மறை எண்ணங்களைத் துறந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் கட்டுப்படுத்த முடியாத அந்தப் போதையைக் கைவிடுவதுதான் புத்திசாலித்தனம். டி.வி மற்றும் மொபைலைத் துறந்தால் எதிர்மறை எண்ணங்களின் ஒரு மிகப்பெரிய ஊற்றிலிருந்து தப்பிக்கிறீர்கள். உங்கள் உறவுகளுடனான நேரத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.
குறை மனிதர்கள்
அடுத்த வழி, எல்லாவற்றையும் குறைகூறும் மனிதர்களின் தாக்கத்திலிருந்து
தள்ளி இருங்கள். பல நேரங்களில் குறைகூறும் மனிதர்களின் கூற்றுகளில் நியாயம்
இருக்கும். மறுப்பதற்கில்லை. ஆனால் தீர்வைப் பேசாமல்,
அதற்கு ஒரு துரும்பையும்
கிள்ளிப் போடாமல் உலகத்தைக் குறை கூறிக்கொண்டிருப்பது ஒரு வகை மனோ விகாரம்.
அந்த மனிதர்களிடம் தள்ளியிருங்கள். அவர்களின் எண்ணங்களையும்
உணர்வுகளையும் பஞ்சு போல உறிஞ்சிக்கொள்ளாதீர்கள். காந்தியும் காரல் மார்க்ஸும்
பார்க்காத குறைகளையா நாம் உலகத்தில் பார்த்துவிடப் போகிறோம்?
அதற்குப் பதிலாக ஏதாவது சிறிய அளவிலாவது ஏதாவது உருப்படியான
செயலைச் செய்து பார்க்கலாம். அதுதான் வழி.
வெறும் குறைகூறுதல் வாழ்வின் நம்பிக்கையைப்
போக்கடித்துவிடும். உங்கள் நண்பர் “எதுவுமே சரியில்லை....” என்று ஆரம்பித்தால்,
“நாம் என்ன செய்யலாம்”
என்று பேச ஆரம்பியுங்கள். “எதுவும் முடியாது...” என்று பதில் வந்தால் அந்த
உரையாடலை அங்கேயே ரத்து செய்துவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.
நல்ல செயல்கள்
கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்தால் சுற்றியுள்ள
எல்லாவற்றிலும் குறை தெரியும். அதில், நம்பிக்கை இழந்து தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைவிட
மிகச் சிறிய நல்ல செயல்கள் புரியுங்கள். அது உங்கள் நம்பிக்கையையும் சுய
மதிப்பையும் கூட்டும்.
“பூமிக்கு ஆபத்து. பூகம்பமும் சுனாமியும் சகஜமாகப் போய்க்
கொண்டிருக்கிறது.” “சரி, சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நீங்கள் உங்கள் அளவில் என்ன
செய்யலாம் என்று யோசியுங்கள்!”
“திரைப்படங்களில் வன்முறை பெருகிவிட்டது” “நல்ல படங்களை
தியேட்டரில் பார்த்து ஆதரவளிக்கலாமே நாம்!”
“அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சுரண்டுகிறார்கள்.” “அடுத்த
தேர்தலில் மாற்று அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு ஊழல்வாதிகளைத் தோற்கடியுங்கள்!
அல்லது நீங்களே ஒரு மாற்றாக மாறுங்கள்!”
“இந்த ஆபீஸ் வேலைக்கே ஆகாது. நாம தெரியாம வந்து
மாட்டிக்கிட்டோம்!” “வேறு வேலை கிடைக்கும்வரை, இங்கு சிறப்பாக எப்படிப் பணியாற்றுவது என்று யோசியுங்கள்.”
உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து
தள்ளி இருங்கள். ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்யலாம் என்று மட்டும் யோசியுங்கள்.
மூன்று வழிகள்
பிரபல தத்துவ எழுத்தாளர் எக்கார்ட் டாலே பிரச்சினைகளைச்
சந்திக்க மூன்று வழிகள் சொல்கிறார்:
- பிரச்சினையிலிருந்து தப்பி ஓடு.
- பிரச்சினையை மாற்றப் பார்.
- பிரச்சினையை ஏற்றுக்கொள்!
வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது. மூன்றில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திப் பாருங்கள்.
எந்தப் பிரச்சினையையும் எக்கார்ட் டாலே சொன்னது போல, மூன்று
வழிகளில் கையாளலாம். பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே
ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத்
தவிர எதைச் செய்தாலும் பலன் இல்லை.
நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். கவலையைத் தவிர கோபம், பயம், சுயப் பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம், சந்தேகம் என்று எந்தவிதமான எதிர்மறை உணர்வுகள் வந்தாலும்
அவை பிரச்சினையை இம்மி அளவு கூட மாற்றப்போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய
பிம்பம் தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான் எழுதியிருந்த கருத்தைப்
பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர் எக்கார்ட் டாலே சொன்ன வழிகளைப் பின்பற்றியதாய்
கூறினார்.
“டி.வி
பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை. அதனால், ‘அதிகம்
டி.வி பார்ப்பது’ என்பது நம்
வீட்டில் இருக்கும் பிரச்சினை என்பதை முதலில் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
தொலைக்காட்சியில் வருகிற நெடுந்தொடர்களை அதிகம் பார்க்க
வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு சீரியல்கள் மட்டும் தான்
பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு
என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது
டி.வியிலிருந்து மெல்ல விலகச் செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய வைக்கும்”
எனச் அபாரமாய் சொன்னார் அந்த வாசகர்.
நிஜமான பக்குவம்
இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு
இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான தீர்வாகுமா? எது
நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க வழி கிடையாதா?”
சுயக் கட்டுப்பாடுதான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு
வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது தான் நிஜமான
பக்குவம். ஆன்மிகம் கற்றுத்தருவதும் இதைத் தான். ஆனால், எடுத்தவுடனே
அந்த நிலையை அடைவது கடினம். அதனால் தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த
மார்க்கமும் சொல்வதில்லை. படிப்படியாகத் தான் பழக்குவார்கள். அது போலத்தான்
இதுவும்.
சூழலைத் தேர்வு செய்தல்
மது குடிப்பதை விட்டுவிட நினைப்பவர்கள் முதலில் அதைக்
குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப நிலைக் கட்டுப்பாடு.
முடிந்தவரை இதைச் செய்வதில் தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச்
சுற்றியிருப்பவர்களின் பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து மீள
அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.
ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய் இருக்கலாம். உங்கள் குடும்ப
மனிதர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது அவ்வளவு
எளிதானதல்ல. உங்கள் படிப்பு, தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு செய்வதும் அல்லது
விலகிச் செல்லுதலும் கடினமானவை தான்.
கிடைத்ததை விரும்பு
பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம்
செய்வதும் அடுத்த வழி முறை.
எக்ஸ்னோரா
அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது வீட்டுக்குக் குடியேறியபோது
சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக்கேடாய் இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல
சுற்றுப்புறத்தில் என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த
வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்” என்று அப்போது நினைத்துக் கொண்டாராம். அந்தச் சிந்தனை
விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா அமைப்பு.
“விரும்பியது
கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு பிரபலமான வாசகம். காதலித்தவர்
வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக் காதலிப்பதில் என்ன தடை?
ஏற்றால்தான் மாற்றம்
துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக்கொள்ளுதல்’ ஏற்பட்டால்
தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை ஏற்றுக்கொள்ளுதல் தான் அதை
மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.
“ஆங்கிலம்
பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில் அந்த
உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நமக்குக் கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும்
ஆங்கிலம் வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம் நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி
ஏற்றுக்கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக் கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு
யோசிக்க முடியும்.
ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத எதிர்மறை
எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள். பிரச்சினையின் நிதர்சனத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல் வெற்றி பெற்றால்
மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும் மாறுதலுக்கு
உட்படுத்துங்கள். இந்தத் தொடர் முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு
இல்லாமல் செய்வது தான் பக்குவம்.
பூதக்கண்ணாடி எண்ணங்கள்
ஒரு செய்கையை விட அந்தச் செய்கை தொடர்பான எண்ணம் தான்
உங்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.
காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை. அவளே
மனைவியான பின் காத்திருந்தால் கால் வலிக்கிறது.
யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து ருசியே
மாறுகிறது.
பொய் சொல்லி வாங்கிப்போனார் என்று தெரிந்ததும் கொடுத்த நூறு
ரூபாய் பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.
நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில்
பெருமைப்படுகிறோம்.
பெரிய மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை செய்தால்
பெருமையாக உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம். மனச்சிதைவு வந்தால் மூன்றாம்
மனிதருக்கு அறியாமல் சிகிச்சை தருவோம்.
பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும் சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன. அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல் காணாமல் போயிருக்கும்!
சிந்தனைச் சீர்கேடுகள்தான் நம் வாழ்க்கையைச் சிதைக்கிறது
என்று புரிகிறது. சிந்தனைகளைச் சீர்படுத்தினால் அது துக்க நோயைக்
குணப்படுத்தும் என்று ஏரோன் பெக் எனும் உளவியல் நிபுணர்
அறிவியல்பூர்வமாக 1970-களில் நிரூபித்தார். சிந்தனையின் திரிபுகள் (Cognitive Distortions) பற்றி மிக விரிவான பங்களிப்பு செய்தவர் இவர்.
சிந்தனையின் திரிபுகள்
துக்க நோய் மட்டுமின்றி தற்கொலை நடத்தைகள்,
உறவுச்சிக்கல்கள், உண்ணும் குறைபாடுகள், பாலியல் குறைகள், போதை அடிமைத்தனத்தின் நிலைகள் என்று பல விஷயங்களுக்கு ஏரோன்
பெக் முறைகளை இன்றும் உளவியலாளர்கள் சிந்தனை நடத்தை சிகிச்சை (Cognitive
Behaviour Therapy) மூலமாகக் கையாள்கிறார்கள். எந்தக் குறையும் இல்லை என்று
நினைக்கும் நம்மில் பலரின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் பெக்கின் வழிமுறைகள்
பெரிதும் உதவும்.
சிந்தனையின் திரிபுகள் நம் எல்லோருக்கும் உண்டு. பிரச்சினைகளின்போது வந்து போகும். சிலருக்கு அது உறைந்து போய் மிகவும் சகஜமாக எதிர்மறையாக யோசிக்க வைக்கும். அவை, தவறான முடிவுகளையும் உறவுச் சிக்கல்களயும் ஏற்படுத்தும்.
கறுப்பு-வெள்ளை சிந்தனை
தர்க்கரீதியில் பிழையானவை எனச் சற்று யோசித்தால்
சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். இருந்தும் அதற்குள் அது உணர்வுகளில் கலந்து
உறவுகளைப் பாதித்திருக்கும்.
நம் வீடுகளில் நடக்கும் சிறு சிறு சண்டைகளில் எழும்
உரையாடல்களை வைத்தே அனைத்துவிதமான சிந்தனைத் திரிபுகளையும் கண்டு கொள்ளலாம்.
“ஒண்ணு அவங்க அம்மா சொல்றதைக் கேக்கணும். இல்ல நான் சொல்றதை
கேக்கணும். ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணச்சொல்லுங்க..!”
இதை Dichotomous Reasoning என்று சொல்கிறார் பெக். அதாவது கறுப்பு, வெள்ளை வாதம். “ஒண்ணு அது. இல்லாட்டி இது” என்று ஏதாவது ஒரு துருவத்தைத் தேர்வு செய்ய யோசிப்பது. நிஜ வாழ்க்கையில் இப்படிக் கறுப்பு-வெள்ளை சிந்தனை உதவாது. பழுப்பு வண்ணச் சிந்தனைகள் நிறைய தேவைப்படுகின்றன. அம்மாவும் வேண்டும். மனைவியும் வேண்டும். முதலீடும் செய்யணும். சிக்கனமாகவும் இருக்கணும். சுதந்திரமும் கொடுக்கணும் பிள்ளைகளுக்கு. பொறுப்பும் கட்டுப்பாடும் வளர்க்கணும். இப்படியாக, இரண்டும் கலந்த வாழ்வுதான் நம்முடையது. ஏதாவது ஒன்றுதான் என்று தட்டையாக முடிவு எடுக்க வைக்கும் சிந்தனை தான் மிக மிக ஆபத்தானது.
இதுவும் அதுவும்
இந்தச் சிந்தனைக்கு இன்னொரு பெயரும் உண்டு. All
or none thinking. “நான் சொன்னதைக் கேட்டா எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால்
எதுவும் கிடைக்காது!”
தலைமுறைகளாகப் பேசிக்கொள்ளாத குடும்பங்கள் நமக்கெல்லாம்
தெரியும். அடிப்படையில் இது போன்ற ஒரு சின்னச் சிந்தனைத் திரிபுதான்
இருந்திருக்கும். அது ஒரு தீவிரமான முடிவை எடுக்க வைத்திருக்கும். காரணம் கூடத்
தெரியாமல் பெரிய பகையைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். “இது அல்லது அது என்பதற்குப் பதில் இதுவும் அதுவும்”
என்று யோசிக்க இடம் கொடுத்தால் பிரச்சினை அடுத்த கட்டத் தீர்வை நோக்கி நகரும்!
“அவனை என்னால் நம்ப முடியாதுப்பா. கண்டிப்பா மறுபடியும்
உன்னைக் கழுத்தறுப்பான்!”
வைத்த நம்பிக்கைக்கு ஒரே ஒரு முறை குந்தகம்
விளைவித்ததுக்குக் காலம் பூராவும் ‘கழுத்தறுப்பவன்’ என்று பட்டம் தருவது அதீதப்
பொதுமைப்படுத்துதல். Over Generalization.
இது நம் மனதின் இயல்பு. கவனமாக இல்லாவிட்டால் இது மிக
இயல்பாக நம் எல்லோருக்கும் வந்துவிடும். ஒரு முறை ஒரு ஓட்டலில் காபி சரியில்லை
என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்றுதான் முடிவு கட்டுவோம். 30 முறை போய்ப்
புள்ளியியல் ரீதியாகத் தர்க்க ஆராய்ச்சி செய்து மனம் முடிவு செய்யாது. உடனடியாக
ஒரு பொது முடிவு எடுக்கத் துடிக்கும் மனம். ஒரே ஒரு அனுபவத்தை வைத்துப் பெரிய
அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். மனைவின்னாலே இப்படித்தான். இந்த ஊர்க்காரரிடம்
ஜாக்கிரதையாக இரு. அந்தச் சாதிக்காரர் ரொம்ப கெட்டி. இந்தத் தொழில்னா இப்படித்தான்
இருக்கும். ஃபாரின் போனா இப்படித் தான் இருப்பாங்க. பணம் வந்தா இப்படித்தான்
ஆவாங்க என்று பல பொது முடிவுகள் நம்மிடம் உண்டு.
இந்த எண்ணங்கள் போதிய அனுபவத்தில் வந்தவையா என்று ஆராய வேண்டும். பல அபிப்பிராயங்கள் கால ஓட்டத்தில் மாறும். மாற்று எண்ணங்களும் மாற்று அனுபவங்களும் ஏற்படும்போது பல பொதுமைப்படுத்தல்கள் காணாமல் போகும். ஆனால், மனதின் ஓட்டத்தில் இப்படிப்பட்ட வேகமான முடிவுகளை இந்தத் திரிபுகள் நம்மை எடுக்க வைக்கின்றன.
உணர்வுகளின் தாக்கம்
ஒரு பொதுமைப்படுத்தலில் உணர்வுகளின் பங்கு மிக அதிகம். மனம்
காயப்பட்டால் தர்க்கம் செய்யாமல் ஒரு அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளும். அதனால்தான்
உணர்வுகளின் ஆதிக்கம் இல்லாமல் இந்தச் சிந்தனைகளை ஆராய்தல் அவசியம். முதல்
முறையாக, மும்பை செல்கையில் உங்களின் பெட்டி காணாமல் போனால்,
மும்பை மீதோ,
மும்பை எக்ஸ்பிரஸ் மீதோ
தவறான அபிப்பிராயம் கொள்ளத் தேவையில்லை. இது எந்த ரயிலிலும் நிகழலாம்.
நாம் பத்திரமாக பெட்டியைக் கொண்டு சென்றோமா என்பதுதான்
கேள்வி. அதை விட்டுவிட்டு மும்பை மீது வெறுப்பு கொள்ளுதல் பயன் தராது. ஆனால்,
மனதில் உள்ள விரக்தி மும்பைக்காரர்கள் மேல் கோபமாகவும்
அவர்களைத் திருடர்களாகப் பார்க்கும் மனோபாவத்தையும் ஏற்படுத்தும்.
இன்னும் இதுபோன்ற நிறைய சிந்தனைத் திரிபுகள் உள்ளன,
ஒவ்வொன்றாய் நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கலாம்.
யோசியுங்களேன்! நம்மிடம் உள்ள தவறான சிந்தனைகள் பெரும்பாலும் ஒரு சில அனுபவங்களால் ஏற்பட்டவை தாம். அவற்றைக் காலம் தாழ்த்தி உணர்வுகளின் தாக்கம் இல்லாமல் ஆராய்ந்தால் அவை காலாவதியான கருத்துகள் என நமக்கே தெரியும்!
வாசகர்களின் கடிதங்கள் “எங்க வீட்டில நடக்கறதை அப்படியே
கேமராவில பார்த்துட்டு நீங்க எழுதுன மாதிரி இருக்கு!” என்கின்றன. வீட்டுக்கு வீடு
வாசப்படி!
எல்லாரும் செய்வதைத்தான் எழுதியிருந்தேன். “இதெல்லாம் தெரிந்ததால் நீங்க ரொம்பத் தெளிவாக யோசிப்பீங்க இல்ல டாக்டர்?” என்று அப்பாவியாய் கேட்டார் சிகிச்சைக்கு வந்தவர்.
டாக்டருக்கும் மருத்துவம்
நான் எடுத்த பல தவறான முடிவுகளுக்கும் சிந்தனைத்
திரிபுகள்தான் காரணம். ஒரு சுவாரஸ்யமான தொடர் எழுதும் அளவு என்னிடம் அத்தகைய
சம்பவங்கள் குவிந்து உள்ளன. அவரிடம் பதமாக விளக்கினேன். “உங்க லாஜிக் படி
பார்த்தால் இதய நோய் நிபுணருக்கு மாரடைப்பே வரக் கூடாது.
கார் மெக்கானிக் விபத்தே செய்யக் கூடாது. வக்கீலுக்குச்
சட்டச் சிக்கலே இருக்கக் கூடாது. இதெல்லாம் சாத்தியமா? இல்லை தானே.. அது போலத்தான் சைக்காலஜிஸ்ட் எப்பவுமே
தெளிவாகவே சிந்திக்கணும்னு எதிர்பார்க்கிறது!.”
ஒரு விஷயத்தின் இயக்கத்தைத் தெரிந்துகொள்வது என்பது அதை முழுவதுமாக மாற்றி அமைக்கும் சக்தியை உடனே தந்துவிடாது. ஆனால், இந்தப் புரிதலோடு படிப்படியாக முயன்றால் ஓரளவு மாற்றங்கள் கொண்டுவரலாம். உண்மை தெரிந்ததால் எல்லாம் சரியாகிவிடும் என்றால் பூமியில் முக்கால் வாசி பிரச்சினைகள் தீர்ந்து போயிருக்கும்!
வளரும் பட்டியல்
சிந்தனைத் திரிபுகள் வேறு என்னென்ன உள்ளன?
பெக் ஆரம்பித்து
வைத்த பட்டியல் இன்று வளர்ந்து கொண்டே வருகிறது. அவருக்குப் பிறகு வந்த ரால்ஃப்
டொபலி, நசீம் நிக்கோலஸ் தலெப் போன்றவர்கள் தங்கள் புத்தகங்கள் மூலம் Cognitive
Psychology யின்
சாரத்தை எடுத்து நிஜ வாழ்க்கையில் பல சிந்தனைத் திரிபுகளைப்
பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.
நான் சொல்வதைவிட நீங்களாகவும் இத்தகைய திரிபுகளை நிறைய கண்டுபிடிப்பீர்கள்.
வடிகட்டல் சிந்தனை
பெக்
முதலில் சொன்ன சில கிளாசிக்கல் திரிபுகள் பற்றி முதலில் பார்க்கலாம்.
1. ‘வடிகட்டி யோசித்தல்’ (Filtering)
நாம் அனைவரும் தவறாமல் செய்வது. நம் தவறான
நம்பிக்கைகளுக்கும், எதிர்மறைச் சிந்தனைக்கும் ஏற்றவாறு புற நிகழ்வுகளில் உள்ள
நேர்மறை விஷயங்களை வடித்து வெளியே தள்ளிவிட்டு யோசிப்பது.
“அவனுக்கு அவன் அண்ணன் எவ்வளவோ மேல். குடிச்சாக் கூட
இவ்வளவு மோசமா பேசமாட்டான். இவன் பணங்காசு கொடுத்துட்டா போதுமா?
புள்ளைங்கள நல்லா பாத்துக்கறான். அதுக்காக இவனோட எல்லா
டார்ச்சரையும் ஏத்துக்கணுமா? இவன் எல்லாம் ஒரு மனுசன்?”
தன் மகளை மருமகன் திட்டிவிட்டார். அதை ஒருவர் எப்படி
வெளிப்படுத்துகிறார் பாருங்கள். மருமகனின் குடிகார அண்ணனே பரவாயில்லை என்ற
அளவுக்குப் போகிறது. குடும்பத்தைச் சரியாகப் பராமரிக்கிறார்,
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்பதையெல்லாம் வடித்து
விட்டுப் பேசுவது இதுதான். இது தான் வடிகட்டி யோசிப்பது. அந்த அண்ணன் வீட்டுக்குப்
பைசா தர மாட்டான். பெண்டாட்டி காசையும் எடுத்துட்டுப் போய்க் குடிப்பவன். ஊமையாக
வீட்டில் இருப்பவன் ஆனால், வெளியே ரகளை செய்வான் என்பதெல்லாம் தெரியும். ஆனால்,
இந்தச் சண்டையில் அவை எல்லாமும் வடிகட்டப்படும். “அண்ணனே
தேவலாமே!” என்று பேச வைக்கும்!
நல்லவற்றைப் பார்க்கும், ஆனால், ஒப்புக்கொள்ளும் மனம் வராது. அவற்றை வடிகட்டி விட்டுப் பிரச்சினைகளைத் தேடி ஓட வைக்கும் சிந்தனைத் திரிபுதான் வடிகட்டல் முறை.
ஒரு பிரச்சினையை அளவுக்கு மீறி பூதாகரமாகக் காண்பிப்பது. Magnification
என்று பெயர்.
“அவன் பட்ட கஷ்டம் இந்த உலகத்துல ஒருத்தரும் பட்டிருக்க
முடியாது!”
என்னமோ, எல்லாருடைய கஷ்டங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் ஒன்று
உள்ளதைப் போலவும், அதில், இத்தனை சதவீதம் கஷ்டங்கள் அனுபவித்து முதல் இடத்தைப்
பிடித்தவர் அவன் தான் என்பது போலவும் அவ்வளவு ஆணித்தரமாகப் பேசுவார்கள். இதுதான் பூதாகரப்படுத்துவது.
“நான் அவளைக் காதலிச்ச மாதிரி யாருமே லவ் பண்ணியிருக்க
முடியாது!” என்பதும் இது போன்றதுதான். அப்படிப் பார்த்தால் எதையும் பேச முடியாதே
என்று தோன்றுகிறதா? வாஸ்தவம்தான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் பூதாகரப்படுத்தும் சிந்தனை
எதிராளியின் புரிதலைச் சிக்கல் படுத்தும். இதில் எவ்வளவு உண்மை என்று யோசிக்காமல்
அதை, அப்படியே ஏற்று அதன் அடிப்படையில் நடக்கும்போது உறவுச்
சிக்கல்கள் ஏற்படும்.
“உங்கிட்ட எந்த மனுசனாவது பேச முடியுமா?”
என்று கோபப்படுகிறான் கணவன்.
சொல்ல நினைத்த பொருள் இதுதான்: “உன்னுடன் பேசி இதை எப்படிப்
புரிய வைக்க முடியுமென்று தெரியவில்லை!”
அதற்கு மனைவி சொல்வாள்: “யார் பேசச் சொன்னாங்க?
போங்களேன் எங்காவது முடிஞ்சா!”
பொருள் இதுதான்: “நான் உங்களை என்ன சொல்லிக் கட்டுப்படுத்தி
விட்டேன்?”
ஆனால், சிந்தனைத் திரிபால் அதீத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுச்
சண்டை இப்படிப் போகும்:
“போக்கிடம் இல்லேன்னு சொல்லிக் காமிக்கறயா?
இப்படிச் சொல்லிக் காமிக்கறவ கிட்டக் கேவலமா வாழ்றதுக்கு
நாண்டுட்டு சாகலாம்!”
“நீங்க ஏன் சாகணும்?, இப்படித் தினம் தினம் மல்லு கட்டறதுக்கு நானே சாகிறேன்!”
சின்னச் சிந்தனை மீறல்கள் பயத்தாலும் கோபத்தாலும் வார்த்தைகளைத் தடிக்க வைத்துப் பெரிய சண்டையில் கொண்டு போய் விடும்.
வார்த்தைகள்தான்
சொல்ல வரும் விஷயத்தைப் பூதாகரப்படுத்தாமல்,
எதிராளியைக்
கலவரப்படுத்தாமல் உணர்ச்சிவசப்படாமல் உங்கள் நிலையைச் சாதாரணமாகச் சொல்ல
முடிந்தால் பாதிப் பிரச்சினைகள் சரியாகும்.
நல்ல விஷயத்தைச் சற்று அதிகரித்துச் சொல்வதால் பெரிய பாதகம்
இல்லை. ஆனால், மோசமான மன நிலையில், எதிர்மறை சிந்தனையில், பூதாகரப்படுத்துதல் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்!
உங்களிடம் உள்ள சிந்தனைத் திரிபுகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் பேசும் வார்த்தைகளை வைத்துத்தான்!
தொடரும்...
I read the article completely , Its eye awakeing article . Thank you so much for sharing.
ReplyDelete