ஒரு புகழ்பெற்ற மருத்துவரும் அவரது நண்பரும் ஒருநாள் காரில் போய்க் கொண்டு இருந்தனர். திடீரென்று நண்பருக்கு கடுமையான வயிற்றுவலி. துடித்தார். ஏதாவது மாத்திரை கொடு, நீதான் டாக்டராயிற்றே என்று புலம்ப ஆரம்பித்தார்.
’அடடா, நான் மருந்து ஒன்னும் எடுத்துவரலியே’ என்று முதலில் சொன்ன மருத்துவர், கொஞ்ச நேரம் கழித்து, ‘சரி, ஒரு அற்புதமான வெளிநாட்டு மாத்திரை ஒன்னு இருக்கு. அது ரொம்ப காஸ்ட்லி. கண்ண மூடு, வாயைத்திற, மாத்திரையை நாக்கில் வைக்கிறேன். இருபது வினாடிகள் வைத்திரு. வயித்துவலி போயிடும். அப்புறமா மாத்திரையை நா எடுத்துடுவேன். அதை கழுவிட்டு மறுபடி நான்கூட பயன்படுத்திக்கலாம். சரியா?’ என்று சொல்லிவிட்டு அவர் நாக்கில் சட்டென ஒரு மாத்திரையை வைத்து அழுத்தினார். சரியாக இருபது வினாடிகள். என்ன அற்புதம்! வயிற்று வலி போயே விட்டது!
நண்பருக்கு ரொம்ப சந்தோஷம். ’நீ உண்மையிலேயே அற்புதமான மருத்துவன் தான்டா’ என்று நண்பரைப் புகழ்ந்தார். அந்த அற்புத மாத்திரையைப் பார்க்க ஆசைப்பட்டார்.
‘பாக்கணுமா? இரு, காட்றேன்’ என்று சொல்லி ஜேபியிலிருந்து மாத்திரையை எடுத்தார் மருத்துவர். அது அவரது சட்டை பட்டன்!
சட்டை பட்டனைத்தான் சத்தான மாத்திரை என்று பொய்சொல்லி அவர் நாக்கில் வைத்துக் கொஞ்சநேரம் அழுத்திவிட்டு மீண்டும் எடுத்துக்கொண்டார் அந்த மருத்துவர். ஆனால் உண்மையான மாத்திரை என்ன செய்யுமோ அதை அந்த பட்டனும் செய்தது! இதற்கு மருத்துவ உலகில் ’ப்ளேசிபோ இஃபக்ட்’ (Placebo Effect) என்று பெயர்.
மோஸ்லீ பரிசோதனை
டாக்டர் மோஸ்லீ என்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஒரு பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சையில் ப்ளேசிபோ இஃபக்ட்-டுக்கெல்லாம் வேலை கிடையாது என்று அவருக்குத் தெரியும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையை அவர் செய்ய இருந்தார். அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து அவற்றில் இரண்டு குழுக்களுக்கு உண்மையாகவே அறுவை சிகிச்சை செய்தார். மூன்றாவது குழுவில் இருந்த நோயாளிகளுக்கு மற்றவர்களைப் போலவே மயக்க மருந்து (லோகல் அனஸ்தீஸியா) கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர்களுக்கு உண்மையில் அவர் ஆபரேஷன் எதுவும் செய்யவில்லை. முட்டியின்மீது மூன்று இடங்களில் லேசாக வெட்டி வைத்தார். முறையான ஆபரேஷனுக்கு முன் அப்படிச் செய்வது வழக்கம்தான். அது ஒரு முன்னேற்பாட்டு ’இன்சிஷன்’ (வெட்டு) மட்டுமே.
அதன் பின் உண்மையாகவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களிடம் பேசுவது போலவே அவர்களிடம் பேசினார். நாற்பது நிமிடங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து முடித்துவிட்ட மாதிரி, அவர் போட்ட லேசான இன்சிஷன்களை அவரே தைத்தும் விட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா ’போஸ்ட்-ஆபரேட்டிவ்’ கவனிப்புகளும், மரியாதைகளும் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டன.
விளைவுகள் ஆனந்த அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தன. ஆம். உண்மையிலேயே மூட்டு ஆபரேஷன் செய்யப்பட்டவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அவர்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி நடந்து போனார்கள், கூடைப்பந்து விளையாடினார்கள். அறுவை சிகிச்சைக்கு முன்னர் செய்ய முடியாததையெல்லாம் இப்போது செய்தார்கள்.
அறுவை சிகிச்சை செய்த மாதிரி காட்டப்பட்ட மூன்றாவது குழுவில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களைப் போலவே குணமடைந்தார்கள்! அவர்களும் நடந்தார்கள், கூடைப்பந்து ஆடினார்கள், தங்கள் பேரக் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்!
அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவே இல்லை என்ற உண்மை சொல்லப்படாமலே அவர்களுடைய நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளாக கவனிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மூட்டில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை! அதன் பிறகு அவர்களுக்கு உண்மை சொல்லப்பட்டது. அப்போதும் அவர்களுக்கு எதுவும் மாற்றம் ஏற்படவில்லை!
”எனது அறுவை சிகிச்சை அனுபவமானது தேவையே இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. மனிதர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நம்பிக்கை மட்டுமே. அறுவை சிகிச்சைகூட ஒரு ப்ளேசிபோ இஃபக்ட்-தான் என்பது உறுதியாகிவிட்டது” என்றார் டாக்டர் மோஸ்லீ! இந்த நிகழ்ச்சியை டாக்டர் வெய்ன் டயர் தனது ’Stop the Excuses, Excusus Begone' போன்ற நூல்களில் குறிப்பிடுகிறார்!
இந்த ப்ளேசிபோ இஃபக்டுகள் சொல்லும் செய்தி என்ன? விஷயம் மருந்தில் இல்லை. மனதில்தான் உள்ளது. மருந்து கிடைத்துவிட்டது என்று மனம் நம்பிவிட்டால், உடலைக் குணப்படுத்தும். அந்த எண்ணம் ஒன்றே போதுமானது. மனதின் இந்த அற்புத ஆற்றலைப் பற்றித்தான்
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்று வள்ளுவரும் அழகாகச் சொன்னார். இதைவிட சிறப்பாக உலகில் வேறுமொழியில் நோய் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.
மருத்துவ உலகின் தந்தை என்று கொண்டாடப்படும் ஹிப்போக்ரேடஸ் கூட வள்ளுவனுக்கு நிகரில்லை. ஆனால் வள்ளுவன் சொன்னதை அவரும் கொஞ்சம் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது மேலே உள்ள மேற்கோளைப் பார்த்தால் புரியும். நோய் வந்த மனிதனுடைய ’காரக்டர்’, குண நலன்கள் என்ன என்று பார்ப்பது அவசியம் என்பதை அவர் சுட்டுகிறார். ’நோய் முதல் நாடி’ என்று வள்ளுவன் குறிப்பிடும் ரகசியத்தை நோக்கி அவரும் நகர்ந்திருக்கிறார். அது என்ன ரகசியம்?
அதுதான் மனம் என்னும் ரகசியம்! ஆம். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத உடல். உடல் என்பது கண்ணுக்குத் தெரியும் மனம் என்றுகூடச் சொல்லலாம். ஓஷோ அப்படித்தான் சொன்னார். ஆமாம். மனம் என்பது எங்கோ மூளைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையில் மனம் என்ற ஒன்று உடல் முழுக்க வியாபித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். நம் நகக் கண்களில் கூட மனம் இருக்கிறது!
உண்மையில் மனம் என்பதும் உடல் என்பதும் ரயில்பெட்டிகள் மாதிரி தனித்தனியாக இல்லை. இதோ இங்கே உடல் முடிகிறது, இதோ இங்கேதான் மனம் ஆரம்பிக்கிறது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் கண்ணுக்குத் தெரியாத சக்தியால் நாம் ஆக்கப்பட்டிருக்கும்போது, உடலென்ன, மனமென்ன? எல்லாம் ஒன்றுதான். அல்லது ஒன்றுக்குள் ஒன்றுதான்.
எப்படி என்கிறீர்களா? நான் சொல்லவில்லை. விஞ்ஞானம் சொல்கிறது. நம் மூளைக்குள் ஒரு கருத்து தோன்றுமானால் உடனே ’நியூரோபெப்டைட்ஸ்’ என்ற ஒரு சமாச்சாரம் சுரக்கும். நியூரோபெப்டைடுகள் மூலமாகத்தான் மூளையில் உள்ள இரண்டு உயிரணுக்கள் பேசிக்கொள்கின்றன! நமக்கு தமிழ் மாதிரி அணுக்களுக்கு நியூரோபெப்டைடுகள். அணுக்களுக்கு மத்தியில் அணு அணுவாக நடக்கும் காதலும், கோபமும், காமமும் – எல்லாமும் இந்த நியூரோபெப்டைடுகள் மூலம்தான்.
ஆனால் இது மூளைக்கு மட்டும் சொந்தமான பிரத்தியேகமான சமாச்சாரமல்ல. நம் நகத்தை நாம் வெட்டிவிட்டால் மீண்டும் வளர்வதற்கும், நகம் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது, அந்த இடத்தில் அது மீண்டும் வளர வேண்டுமென்ற செய்தியைச் சொல்வதற்கும் பயன்படும் மொழி நியூரோபெப்டைடுதான்! ஆக, உடல்தான் மனம், மனம்தான் உடல் என்றோ, உடல் முழுக்க மனதின் ஆதிக்கம் உள்ளதென்றோ இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.
அது சரி. இதனால் என்ன என்கிறீர்களா? இன்பங்களின் பொக்கிஷப் பெட்டியின் சாவியும் மனம்தான். துன்பங்களில் பாண்டோராப் பெட்டியைத் திறக்கும் சாவியும் மனம்தான்! அதுதான் பிரச்சனையே. பிரச்சனை நமக்குத்தான். மருத்துவர்களுக்கோ, மருந்துக் கம்பனிகளுக்கோ அல்ல. நம்முடைய அச்சம்தான் அவர்களின் மூலதனம். ஏனெனில் பயந்துவிட்டால் போதும், அவர்கள் சொல்வது உண்மைதான் என்று நம்பும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். அச்சம் என்பது மரணத்தையும் கொடுக்கும். வீரன் ஒருமுறைதான் சாகிறான். பயந்தாங்கொள்ளிகளே ஆயிரம் முறைகள் சாகிறார்கள் என்று ஷேக்ஸ்பியர் சொன்னதும் நமக்காகத்தான். அச்சம் அவ்வளவு கொடூரமானதா? ஆமாம். எப்படி? இதோ இப்படித்தான்.
ஒரு ஊருக்குக் காலரா வந்தது. அந்த ஊரில் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவர் காலராவைக் கூப்பிட்டு, “ஏய், இந்த ஊருக்கெல்லாம் வரக்கூடாது. இங்கே நான் இம்மக்களுக்குக் காவலாக இருக்கிறேன். போய்விடு” என்று உத்தரவிட்டார்.
”இல்லை ஐயா, ஆண்டவனின் உத்தரவின்பேரில்தான் நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னது காலரா.
“அப்படியா, சரி. ஆனால் மூன்று பேருக்கு மேல் நீ சாகடிக்கக்கூடாது. இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டால் உன்னை உள்ளே அனுமதிப்பேன். இல்லையேல் கடவுளிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று மிரட்டினார். காலராவும் அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்து ஊருக்குள் நுழைந்தது.
முதல் நாள் மூன்று பேர் காலராவில் இறந்தார்கள். ஆனால் இரண்டாவது நாள் இருபது பேரும், மூன்றாவது நாள் ஐம்பது பேரும் இறந்துபோனார்கள். கடுப்பாகிப் போனார் ஞானி. மூன்றாவது நாளின் முடிவில் காலராவை அழைத்து, ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டார்.
“ஐயா, நான் ஒன்றும் செய்யவில்லை. நான் மூன்று பேரை மட்டும்தான் கொன்றேன்” என்றது காலரா.
“அப்படியானால் மற்றவர்களெல்லாம் எப்படி இறந்தார்கள்?” என்று அதட்டினார் ஞானி.
“ஐயா, அவர்களெல்லாம் பயத்திலேயே இறந்து போனார்கள்” என்று சொன்னது காலரா!
ஜிகா வைரஸ் வந்துவிட்டது, ஜிகுஜிகு வைரஸ் வந்துவிட்டது என்று கூப்பாடு போடப்படும் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடந்துகொண்டிருப்பது இந்த அச்ச வியாபாரம்தான். அச்சத்தால், ஒரு தவறான நம்பிக்கையால் அமெரிக்காவில் நடந்த ஒரு மோசமான நிகழ்ச்சியையும் பார்த்துவிடலாம் வாருங்கள்.
நோசிபோ இஃபக்ட்
ஒரு நம்பிக்கை உயிரணுக்களின் அமைப்பையே மாற்றுகிறது என்பது ஒரு விஞ்ஞான உண்மை. நல்ல நம்பிக்கைகளைத்தான் மருத்துவத்துறை ’ப்ளேசிபோ இஃபக்ட்’ என்று கூறுகிறது. மோசமான, தவறான, உயிர்குடிக்கும் கருத்துக்களையும் உங்களுக்குள் ஒருவர் திணிக்கலாம் அல்லவா? அப்படித் திணிக்கப்பட்ட கருத்துக்கள் செய்யும் வேலையை ’நோசிபோ இஃபக்ட்’ (Nocebo Effect) என்று கூறுகிறார்கள். சாம் லோண்டேயின் கதை அப்படி ஒரு நோசிபோ பற்றியதுதான்.
அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் சாம் லோண்டே என்றொருவர் இருந்தார். ஷூ விற்கும் வேலையைச் செய்துவந்த அவர் வயதாகிவிட்டதால் வேலையிவிட்டு ஓய்விலிருந்தார். அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்திருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார்கள். க்ளிஃப்டன் மெடர் என்ற தலைமை மருத்துவர்தான் அவரைப்பரிசோதித்து அப்படிச் சொன்னார். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தால் உயிர் பிழைக்க முடியாது என்றே கருதப்பட்டது. என்றாலும் சாமின் அனுமதியின்பேரில் அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. மருத்துவர்கள் நம்பியது போலவே, சாமும் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்ட சில வாரங்களில் இறந்து போனார்.
ஆனால் விஷயம் அங்கே முடிந்துவிடவில்லை. அதற்குப் பிறகுதான் ஆரம்பமே ஆகிறது! சாமின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் அந்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அப்படி என்ன அதிர்ச்சி? டாக்டர்கள் அஞ்சியதுபோல அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் எதுவும் இல்லை என்பதுதான் அது! அவரது கல்லீரலில் இரண்டு புள்ளிகளும், நுரையீரலில் ஒரு புள்ளியும் இருந்தது. அவ்வளவுதான். உணவுக்குழாய் புற்றுநோய் எதுவுமே அவருக்கு இல்லை!
அப்படியானால் சாம் எதனால் இறந்தார்? டாக்டர்கள் கொடுத்த ஒரு தவறான நம்பிக்கையால்! அவருக்குள் திணிக்கப்பட்ட ஒரு தவறான கருத்தால்! இதை மரபணு உயிரியல் மருத்துவரான ப்ரூஸ் லிப்டன் Destructive Interference என்று வர்ணிக்கிறார். சாமின் உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்ததாக டாக்டர்கள் நினைத்தார்கள். அந்த தவறான நம்பிக்கையை அவருக்கும் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அது அவரது உயிரையே குடித்தது!
“அவரது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக நான் நினைத்தேன். அவரும் அப்படித்தான் நினைத்தார். என்னைச் சுற்றியிருந்த டாக்டர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். நாங்களெல்லாம் நம்பிக்கையை அவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டோமோ?” என்று மனசாட்சி உறுத்த டாக்டர் மெடர் ஒரு பேட்டியில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை தன் நூலில் குறிப்பிடும் டாக்டர் ப்ரூஸ், மருத்துவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்களால் ஒரு நம்பிக்கையை நீக்கவும் முடியும். அது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார். எவ்வளவு உண்மை!
நம்பிக்கை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகளையும் உதாரணங்களையும் நான் படித்துள்ளேன். என் வாழ்க்கையிலும் பல உதாரணங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் சாம் லோண்டேயின் வாழ்க்கையில் நடந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியூட்டிய ஒரு நிகழ்ச்சி. நம்பிக்கை ஒருவனை வாழவும் வைக்கும், கொல்லவும் செய்யும் என்பதற்கு இதைவிடச் சிறந்த, அதாவது இதைவிட மோசமான உதாரணத்தை நான் இதுவரை பார்க்கவில்லை.
சில்வியாவின் இதயத்துக்கு என்னானது?
சில்வியா என்ற ஒரு பெண்ணுக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு திடீரென்று ’பீர்’ குடிக்க வேண்டும், ’சிக்கன் நக்கட்ஸ்’ சாப்பிட வேண்டும், வேகவேகமாக ’பைக்’ ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்றெல்லாம் அடங்காத ஆசை வந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கு இதயமும், நுரையீரலும் தானம் செய்தவரின் குடும்பத்துக்குச் சென்று விசாரித்திருக்கிறார். அவருக்கு அவற்றை தானமாகக் கொடுத்த செத்துப் போன அந்த பதினெட்டு வயது இளைஞர் ஒரு மோட்டர் சைக்கிள் பைத்தியம் என்றும், அவருக்கு ’பீர்’ குடிக்கும் பழக்கமும், ’சிக்கன் நக்கட்ஸ்’ சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வமும் இருந்தது தெரிய வந்தது! தான் எழுதிய A Change of Heart என்ற நூலில் சில்வியாவே இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்
ஆஹா, மனதுக்குத்தான் எத்தனை சக்தி! இன்னும் பார்க்கலாம்.
தொடரும்...
இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண
No comments:
Post a Comment