ஆரோக்கியத்தைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஆரோக்கியத்தை எங்குமே வாங்க முடியாது. ஏனெனில் அது விற்பனைக்கான பொருளே அல்ல. அது நம்மிடம்தான் உள்ளது. நம் தவறான வாழ்முறைகளால் நாம்தான் அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் கழிவறை முழுக்கத் தங்கமாக இருந்தாலும், ஆரோக்கியமில்லாவிட்டால் நம் வாழ்வே ஒரு கழிவாகிவிடும். சுத்தம் சோறு போடும். ஆரோக்கியம் அனைத்தும் தரும். உடலையும் மனதையும் ஆரோக்கியாமாக வைத்திருந்தால் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மருந்துகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் வேலை இல்லாமல் போய்விடும். அந்த பொற்காலம் நம் கையிலும் வாயிலும்தான் உள்ளது. என் அனுபவத்திலிருந்து உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த ’நலம், நலமறிய ஆவல்’.
பல ஞானிகள், மருத்துவர்கள், ஹீலர்கள், நண்பர்கள், புத்தகங்கள் மற்றும் ஆடியோ வீடியோக்கள் மூலமாகக் கிடைத்த தகவல்களை யெல்லாம் நான் இதில் பயன்படுத்தியிருக்கிறேன். அவ்வவ்போது அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன். குறிப்பாக அலோபதி மற்றும் மாற்று மருத்துவத்துறை சாந்த டாக்டர்கள் ஃபசுலுர் ரஹ்மான், தீபக் சோப்ரா, பி.எம்.ஹெக்டே, மு.அ.அப்பன், சிவராமன், ஹீலர்கள் உமர், சாதிக் மன்சூர், பாஸ்கர், வசீர் சுல்தான், எங்கல்ஸ் ராஜா – இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்பட்டியலில் உள்ளவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
டாக்டர் பி.எம்.ஹெக்டே எனக்கு நேரடியாக மின்னஞ்சல் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அவ்வபோது தோன்றிய சந்தேகங்களை ஹீலர் உமர், சாதிக் மன்சூர் போன்றோர் நிவர்த்தி செய்தனர்.
அனைவருக்கும் என் நன்றிகள்.
நமது வாழ்முறைத் தவறுகளினால் நமக்கு நோய் வருகிறது. வாழ்முறையை சரி செய்துகொண்டு, ஓய்வெடுத்துக் கொண்டேமெனில் எல்லா நோய்களையும் தீர்க்கின்ற வேலையை நமது உடலே செய்துகொள்கிறது. வேண்டுமெனில் பாரம்பரியமான வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் செய்துகொள்ளலாம். எந்த நோயையும் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை என்பதுதான் இந்தத் தொடரின் சாராம்சம். அந்த உண்மையின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு மருத்துவமனைக்கோ, கோர்ட், கச்சேரி என்று அலைந்து கொள்ளாமல் இருந்தால் அதுவே மாபெரும் சாதனையாகும் என்று நான் அடிக்கடி என் தியான வகுப்புக்கு வருபவர்களிடம் சொல்வதுண்டு. அதன் விரிவாகத்தான் இந்தத் தொடர். அடிப்படையையும் ஆதாரங்களையும் உங்கள் முன் வைத்துள்ளேன். வளமுடன் வாழ்வதற்காக.
அன்புடன்
நாகூர் ரூமி
No comments:
Post a Comment