நலம் நலமறிய ஆவல் - 06. உடலே ஒரு ஹீலர் தான்

 

   



    டலை ஞானி என்று சொன்னோம். அறிவித்தல் அல்லது எச்சரித்தல், உருவாக்குதல் மற்றும் குணப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய காரியங்களை உடல் ஆற்றுகிறது என்று பார்த்தோம். அதில் மூன்றாவதான குணப்படுத்துதலை இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

நோய் வந்தால் நம்மை குணப்படுத்துவது யார்? மருந்து மாத்திரைகளா? அறுவை சிகிச்சைகளா? உணவு வகைகளா? அலோபதியா? ஹோமியோபதியா? சித்தாவா? ஆயுர்வேதமா? வர்மா, ரெய்கி, அக்யுபஞ்சர் போன்ற தொடு அல்லது தொடா சிகிச்சைகளா? – இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். உண்மையில் மேலே சொன்ன எதுவுமே நம்மை குணப்படுத்துவது இல்லை என்பதுதான் உண்மை! 

ஒரு நோயாளி ரொம்ப ‘கிரிட்டிகல்’ ஆன நிலையில் இருக்கும்போது டாக்டர்கள் இப்படிச் சொல்வதை நம் வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்: ‘எங்களால முடிஞ்சதெ எல்லாம் செஞ்சிட்டோம். இனிமே உங்க இஷ்ட தெய்வத்த வேண்டிக்கிங்க’. முஸ்லிமா இருந்தா அல்லாஹ் காப்பாத்துவான். ஹிந்துவா  இருந்தா இஷ்ட தெய்வம். கிறிஸ்தவரா இருந்தா ஜீசஸ் அல்லது மேரி – இப்படி. இது நமக்குத் தெரியும்தானே?

இங்கே எனக்கொரு கேள்வி எழுகிறது. டாக்டர்கள் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு நோயாளியை கடவுளால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்றால், அந்த நோயாளியின் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போதே அந்தக் கடவுள் காப்பாற்றியிருக்கக் கூடாதா? கடைசி நேரத்தில் காப்பாற்றினால்தான் கடவுளின் மவுசு கூடுமா?! கடவுள் என்ன அவ்வளவு கல்நெஞ்சுக்காரனா? டாக்டர்கள் கைவிட்ட பிறகுதான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவோடு இருப்பவனா?! மருத்துவர்களுக்கும் அந்த மகாசக்திக்கும் இடையில் அப்படி என்ன போட்டியும் பொறாமையும்?! இதில் உள்ள அபத்தம் விளங்குகிறதா?

உண்மையில் நம்மைக் காப்பாற்றுவது நம்முடைய உடல்தான்! உடலை மருத்துவர் என்றோ வைத்தியர் என்றோ சொல்ல முடியாது. ஏனெனில், நோயை குணப்படுத்துவதற்காக வெளியிலிருந்து எதையும் உடல் நமக்குக் கொடுப்பதில்லை. உடலை ஒரு ஹீலர் என்றுதான் சொல்லமுடியும். அப்படித்தான் சொல்லவேண்டும் உண்மையும் அதுதான். உடல்தான்  நம்மை குணப்படுத்துகிறது.

கிறிஸ்தவ மருத்துவமனைகளில் Jesus Heals என்று போட்டிருப்பார்கள். அது உண்மைதான். குருடர்களை, தொழுநோயாளிகளையெல்லாம் கையால் தொட்டே ஜீசஸ் குணப்படுத்தியது வரலாறு. மனிதனை குணப்படுத்தும் தகுதி கடவுளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் கடவுளின் தன்மை என்னவென்றால் அவர் நேரடியாக எதையும் செய்யமாட்டார். யார் மூலமாவது, எதன் மூலமாவதுதான் அவர் செய்வார். அப்படிச் செய்வதுதான் அவரது தொழில்முறை! ஜீசஸையும் அவர் அப்படித்தான் அனுப்பினார். ஜீசஸின் காலம் முடிந்துவிட்டது. இனி ஜீசஸுக்கு எங்கே போவது? எங்கேயும் போகவேண்டாம். நம் உடலுக்கே அந்த ஞானத்தை ஆண்டவன் கொடுத்துள்ளான். நம் உடல்தான் நம்மை குணப்படுத்தும் ஜீசஸ்!

அப்படியானால் எந்த மருந்து மாத்திரைகளும் ஒன்றுமே செய்வதில்லையா?

ஏன் செய்வதில்லை? நிறைய செய்கின்றன. ஆனால் எல்லாமே தீமைகள்தான்! இதுபற்றி விபரமாகப் பிறகு பார்க்க இருக்கிறோம். ஒரு திரைப்படத்தில் நோயாளிக்குப் போடவேண்டிய ஊசியை ஒரு பைத்தியம் டாக்டருக்குப் போட்டுவிடும். அந்த பைத்தியம் வேறு யாருமல்ல, நாம்தான்! நமக்கு ஏற்பட்ட பிரச்சனையை நம்முடைய உடல் படாத பாடுபட்டு தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அம்முயற்சிகளையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக, நம் உடலின் எதிர்ப்பு சக்தியையெல்லாம் காலி செய்யும் விதமாக நாம்தான் மாத்திரைகளையும் டானிக்குகளையும் இன்னபிறவையும் உள்ளே செலுத்தி குணமாகும் காலத்தை தள்ளிப் போடுகிறோம், அல்லது குணமாகாமலே இருக்க ஏற்பாடுகளை செய்துகொள்கிறோம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? எல்லாருக்கும் தெரிந்த, தும்மல், இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இதை நான் இப்போது விளக்க இருக்கிறேன். போகலாமா?

தும்மல்

தும்மல் என்றால் என்னவென்று தெரியுமா? தும்மல் என்றால் என்னவென்று தெரியுமோ தெரியாதோ, தும்மினால் என்ன சொல்லவேண்டும் என்று நமக்குத் தெரியும்! தும்மலின் பின்னால் நல்ல நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் உண்டு. எல்லாக் கலாச்சாரத்திலும்.

உதாரணமாக கிரேக்க கலாச்சாரத்தில் தும்மலானது இறைவனிடமிருந்து கிடைக்கும் நல்ல செய்திக்கான ஒரு குறிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. தன் கணவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று தெரியாத ஒடிசியுஸின் மனைவி பெனிலொப்பி, அவன் உயிரோடு திரும்பி வருவானானால் எதிரிகளை நிச்சயம் வீழ்த்துவான் என்று கூறுகிறாள். அதுகேட்ட அவளது மகன் தும்முவான். அதை கடவுளர் கொடுக்கும் நன்மாராயமாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு அவள் நன்றி செலுத்துவதாக ஹோமரின் ’ஒடிசி’ காவியத்தில் வருகிறது! கிரேக்கர்களும், சீனர்களும், ஜப்பானியர்களும், ஐரோப்பியர்களும், ஏன் இந்தியர்களும்கூட தும்மலை  நன்மாராயமாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள்.

தும்மினால் ‘இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்’ என்று சொல்லும் பழக்கம் மேற்கில் உண்டு. இந்திய மரபிலும் தும்மினால் தீர்க்காயுஸ், சதாயுஸ் என்று சொல்லும் பழக்கம் உண்டு. முஸ்லிம்கள் தும்மினால் ’அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்வார்கள். அதைக் கேட்பவர்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ (உங்களுக்கு இறைவனின் அருள் உண்டாகட்டும்) என்று சொல்லவேண்டும். ஏன் அப்படிச் சொல்லவேண்டும் என்று நான் ஒருமுறை கேட்டேன். தும்மும்போது ஒரு வினாடி, அல்லது ஒரு மில்லி வினாடிக்கு இதயம் நின்றுவிடுமாம். அதாவது அந்த மில்லி விநாடியில் நாம் உயிரோடு இல்லை. அடுத்த கணமே இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுவதால், நமக்கு மறுபடியும் இறைவன் உயிர் கொடுத்துவிடுகிறான், எனவே எல்லாப் புகழும் அவனுக்கே என்று சொல்லவேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டது!

தும்முவது கெட்ட சகுனம் என்றும் நாம் நினைப்பதுண்டு. ஒருவர் சீரியஸாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் தும்மிவிட்டால் அவ்வளவுதான்! ‘சனியன், தும்மிட்டான், விடிஞ்ச மாதிரிதான்’ என்று சொல்லும் வழக்கமும் நம்மிடம் உண்டு.

தும்மினால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு. இதுபற்றி திருவள்ளுவரே ஒரு குறளில்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

கூறுகிறார்! முதலில் கணவன் அல்லது காதலன் தும்மியவுடன் காதலி அல்லது மனைவி  - இருவருமே ஒருவராக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – வாழ்த்துகிறாள். பிறகு, யாரை நினைத்துத் தும்மினீர்கள் என்று அழ ஆரம்பித்துவிட்டாள் என்கிறது குறள்!

நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் இருக்கட்டும். ஒரு நாளைக்கு ஐம்பது தடவைகள் தொடர்ந்து தும்மல் வந்துகொண்டே இருந்தால் நாம் என்ன செய்வோம்? தும்மலை அடக்க நாமாகவே நமக்குச் சொல்லப்படும் பாட்டி வைத்தியம் எதையாவது ஏற்றுக்கொள்வோம். அல்லது டாக்டரைப் பார்ப்போம். அடுக்குத் தும்மலை ஒரு சாதனையாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. டோனா க்ரிஃபித்ஸ் என்ற பெண்மணி தொடர்ந்து 978 நாள்களுக்குத் ஆயிரக்கணக்கில் தும்மோ தும்மென்று தும்மி ‘ரெகார்டு’ உருவாக்கினார்! 

தும்மலுக்கு டாக்டரைப் பார்த்தால் அவர் ஏதாவது ’ஆண்ட்டிஹிஸ்டமைன்’ மாத்திரையைக் கொடுத்து குறைந்தது ஆறு மாதங்களுக்காவது சாப்பிட வேண்டும் என்பார்! 

சரி, தும்மல் வந்தால், அல்லது தொடர்ந்து வந்தால் நாம் ஏன் பாட்டி வைத்தியமோ, வேறு மருந்துகளோ எடுத்துக்கொள்கிறோம்? ஏன் டாக்டரைப் பார்க்கிறோம்? ஏனென்றால் தும்மலை ஒரு நோயாகவும், பல வருங்காலப் பிரச்சனகளுக்கான பிள்ளையார் சுழியாகவும் நினைக்கிறோம். ஆனால் உண்மை என்ன? தும்மல் ஏன் வருகிறது?

தும்மல் என்பது ஒரு நோய் நிவாரண வேலை. ஆமாம். நோய் வராமல் இருக்க நம் நுரையீரல் செய்யும் ’எமர்ஜன்ஸி எக்சிட் புஷ்’ தான் தும்மல். தூசி, மிளகாய்த்தூளின் நெடி, ஹோமப்புகை, ஆசிட், ப்ளீச்சிங் பவுடர், கடுமையான செண்ட், பெயிண்ட், கற்பூரம், ஊதுபத்தி போன்ற ’ஸ்ட்ராங்’கான வாசனைகளை நுகர நேர்ந்தால் தும்மல் ஏற்படும். ஏன்?

நமது நாசித்துவாரத்தினுள் கண்ணுக்குத் தெரியாத முடியிழைகள் உள்ளன. நாம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குப் புலப்படாத தூசிகள் இருந்தால் அவற்றை உள்ளே அனுமதிக்காமல் வாசலிலேயே ’தடா’ சட்டம் போட்டு நிறுத்தி வைப்பதுதான் அவற்றின் வேலை. அதையும் மீறி எதிரிகள், அந்நியர்கள் உள்ளே நுழைய முயற்சித்தால் மூக்கின் உள்ளே இருக்கும் ஒரு சவ்வுப்படலமானது ஒருவித திரவத்தைச் சுரந்து அதை மீறி கோட்டைக்குள் போகமுடியாதபடி அவர்களை ‘அரெஸ்ட்’ செய்யும்.

அதையும் மீறி எதிரிகள் நுரையீரலுக்குள் நுழைந்துவிட்டால் நுரையீரல், தொண்டை, வாய் எல்லாமாக ஒன்று சேர்ந்து அந்த தூசியை பெரும் சப்தத்துடன் வெளியே தூக்கி எறியும். அந்நியர்களை வெளியேற்றும் நுரையீரலின் அந்த பகீரதப் பிரயத்தனத்துக்குப் பெயர்தான் தும்மல்!

தும்மல் வெளிவரும் வேகம் என்ன தெரியுமா? 180-லிருந்து 220 கிமீ வேகமாம்! இவ்வளவு வேகத்தில் ஒரு கார் செல்ல வேண்டுமெனில் அதற்கு எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் தேவைப்படும்! அவ்வளவு எரிபொருளைச் செலவு செய்துதான் நுரையீரலும் தும்மல் மூலம் தூசை வெளியேற்றுகிறது! ஒரு தும்மலுக்காக அவ்வளவு சக்தியை உடல் செலவு செய்கிறதென்றால் அது எவ்வளவு முக்கியமான வேலையாக இருக்கும்? எந்த அந்நியப் பொருளும் உடலுக்குள் ஊடுருவ உடல் அனுமதிக்காது. 

இப்போது சொல்லுங்கள் நம் எதிர்ப்பு சக்தியாகிய தும்மல் நோயா? நிவாரணமா? உள்ளேயிருந்து தூசி போன்ற அந்நியப்பொருள்கள் உடலுக்குள் நுழைந்துவிடாமலும், உள்ளே நுழைந்துவிட்ட அந்நிய சமாச்சாரங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதும்தான் தும்மல் செய்யும் வேலையாகும். இந்த தும்மலை வரவிடாமல் தடுக்க மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டே இருந்தால் என்னாகும்? நுரையீரலுக்குள் நுழைந்த தூசி வெளிவருவதை நாமே தடுத்துவிடுகிறோம் என்று அர்த்தம். நம் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறோமென்று அர்த்தம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் உடல் என்ன செய்யும்?

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று நொந்துகொண்டு சளி என்ற ஒன்றை உருவாக்கும்! கொஞ்சம் கொழகொழவென்றும் வழவழவென்றும் இருக்கும் அந்த சமாச்சாரம் நுரையீரலுக்குள் புகுந்த தூசியை அங்குமிங்கும் அசைய விடாமல் சிறைப்பிடித்துக் கொள்ளும். சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட பூச்சி மாதிரி, தூசியை சிறைப்பிடித்திருக்கும் சளியை வெளித்தள்ள இருமலை ஏற்படுத்தும்.

நாம் இப்போது என்ன செய்கிறோம்? சளியைப் போக்கவும், இருமலைப் போக்கவும் ‘இருமலே, போய்வா எனச் சொல்லும் க்ளைகொடின் அருந்துங்கள்’ என்று பாட்டு பாடிக்கொண்டே இருமல் டானிக்குகளை காலி செய்து இருமலை அடக்கி சளி உடலை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்கிறோம்! (பொதுவாக எல்லா வீடுகளிலும் பெனட்ரில் எனப்படும் இருமல் டானிக் இருக்கும். எங்களூரில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தோசைக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி என்று எதுவும் இல்லையென்றால் பெனட்ரிலை ஊற்றிக்கொண்டு சாப்பிடுவார்)!

மருந்து மாத்திரைகள், டானிக்குகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் இருமல் எப்போது நிற்கும்? நெஞ்சுக்குள் தேங்கிய சளி முழுவதும் வெளியேற்றப்படும்வரை இருமல் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை நாளில் சளி வெளியேறும் என்பது ஆளுக்கு ஆள் மாறும். எவ்வளவு சளி உள்ளே இருக்கிறது என்பதைப் பொருத்தது அது. உங்கள் ஏ.டி.எம். கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது எப்படி அடுத்தவருக்குத் தெரியாதோ அதேபோல உங்களுக்கு எவ்வளவு சளி இருக்கிறது என்பதும் அடுத்தவருக்குத் தெரியாது என்கிறார் ஹீலர் உமர்! குறிப்பாக மருத்துவர்களுக்குத் தெரியவே தெரியாது என்று நான் சேர்த்துக்கொள்வேன்!

சளியையும் இருமலையும் நிறுத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறோம். அப்போது என்னாகும்? உடல் பேஜாராகிவிடும். என்னடா, நம்ம ஆளே நமக்கு வில்லனாக இருக்கிறானே என்று நொந்து போய் கடைசி முயற்சியாக உடலில் தேங்கியுள்ள தேவையற்ற சளி, தூசி போன்ற கழிவுகளையெல்லாம் வெளியேற்ற ஒரு உபாயம் செய்யும். அது என்ன? எல்லா எழவுகளையும் வெப்பமாக மாற்றி வெளியேற்ற ஆரம்பிக்கும்!

நம் உடலின் இயல்பான இயக்கத்திற்குத் தேவையான சூடு 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். ஆனால் இப்போது வெளியேற்ற வேண்டிய கழிவுகளெல்லாம் வெப்பமாக உருமாற்றம் பெற்றுவிட்டதால் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். அது உடல் பூராவும் சீராகப் பரவும். இந்த அவசியமான வெப்ப அதிகரிப்பைத்தான் நாம் ஜுரம், காய்ச்சல் என்றெல்லாம் சொல்கிறோம்!

அப்படியானால் காய்ச்சல் நல்லதா? ரொம்ப நல்லது. இதெல்லாம் தெரிவதற்கு முன்பே நான் காய்ச்சலைக் காதலித்தவனாக இருந்திருக்கிறேன்! ஆமாம். எனக்குக் காய்ச்சல் வந்தால் ரொம்பப் பிடிக்கும். எதிலும் ஒரு நிதானம் வந்துவிடும். ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதாக இருந்தால்கூட கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தத்துவ ஞானியைப் போல குடிக்க நேரிடும்! ஒருமுறை எனக்கு வந்த காய்ச்சல் பற்றி ‘காய்ச்சல்’ என்ற தலைப்பில் ஒரு கதையே எழுதியிருக்கிறேன்!

போகட்டும். உண்மையான காய்ச்சல் பற்றிய நிஜத்துக்கு வருவோம். ’தேவைப்படும்போது உடலில் ஜுரம் ஏற்படவில்லையென்றால் நம் உடலில் எதிர்ப்பு சக்தியே இல்லை என்று பொருள்’ என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான். (இவர் ஸ்டான்லியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, பின்பு எம்.டி. படிப்பும் முடித்துவிட்டு, எட்டு ஆண்டுகள் ஆங்கில மருத்துவராகப் பணியாற்றி, ஆங்கில மருத்துவம் ஒரு குப்பை என்ற முடிவுக்கு வந்து ஒரே ஒரு ஊசி அல்லது ஒரு விரல் கொண்டு நோய் தீர்க்கும் சைனீஸ் க்ளாசிக் அக்யுபங்சர் முறையை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர். இந்திய அக்யுபங்சரின் தந்தை என்றும் இவர் சொல்லப்படுகிறார். பின்னர் அதையும் தாண்டி, விரலால் தொடுவதுகூடத் தேவையில்லை என்றா முடிவுக்கு வந்து ’இறைவழி மருத்துவம்’ என்ற ஒன்றை இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்).

ஜுரம் வந்தால் பல நோய்களும் போய்விடும். ஜுரமே வரவில்லை என்றால் ஏகப்பட்ட நோய்களுக்கு உடல் ஆளாகும் என்கிறார் இறைவழி மருத்துவர் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான். ஜுரத்தைத் தணிப்பதன் மூலம் வெப்ப சக்தியை, எதிர்ப்பு சக்தியை வீணடித்துவிடுகிறது “உண்மையை அறிய வக்கில்லாத மடத்தனமான ஆங்கில மருத்துவம்” என்று கொதிக்கிறார் அவர்!

தும்மலில் தொடங்கி காய்ச்சல் வரை பார்த்தோம். உடலின் குணப்படுத்தும் தன்மைக்கு இது ஒரு ’சாம்பிள்’ தான். எல்லாவற்றையும் சொல்ல பல நூல்கள் எழுதவேண்டி வரும். உடல் நம்மை குணமாக்கவே எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை நாம் மேலும் மேலும் ரணமாக்கவே முயன்றுகொண்டிருக்கிறோம்!

வாந்தி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏன் வருகிறது? ரொம்ப ’சிம்பிள்’. உள்ளே போன சரக்கு சரியில்லை என்று அர்த்தம். இரைப்பைக்கு மேலேயே கெட்டுப்போன அந்த உணவு இருந்தால் அது வாந்தியாக வெளியே வரும். இரைப்பைக்குக் கீழே தள்ளிவிட்டால் அது செரிக்கப்படாமல் பேதியாக வெளியேறும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். வாந்தியையும் பேதியையும் நிறுத்துவதற்கு நாம் முயற்சி செய்துகொண்டே இருந்தால் உடல் என்னதான் செய்யும் பாவம்!

உடலில் தோன்றும் வலிகளும் இப்படித்தான். உதாரணமாக வயிற்றில் வலிக்கிறது என்றால் பிரச்சனை வயிற்றில் இல்லை. வேறு எங்கோ உள்ளது. எந்தப் பகுதி பலவீனமாக உள்ளதோ அங்கே வலி தோன்றும். ஆனால் மருத்துவர்களிடம் சென்றால் வயிற்று வலி போகத்தான் மருந்து கொடுப்பார்கள். வயிற்றுவலியும் அடங்கிவிடலாம். ஆனால் அது எதனால் ஏற்பட்டதோ அந்த காரணி அப்படியே இருக்கும். ’நோய் முதல் நாடி’ என்று வள்ளுவன் சொன்னதை மீண்டும் நினைவு கூறலாம். விளைவுதான் அடக்கிவைக்கப்படுகிறது. ஆனால் பிரச்சனை அப்படியேதான் இருக்கும். பிரச்சனையை உடலிடமே விட்டுவிட்டால் அது தீர்த்திருக்கும். உடலில் ஏற்படும் வலிகள் யாவும் பிரச்சனை தீர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே தவிர வேறில்லை.

வலி ஏற்படும்போது வலியைப் பொறுத்துக் கொண்டால் போதும். விரைவில் வலியும் போய்விடும், அது எதனால் ஏற்பட்டதோ அந்த காரணியும் சரிசெய்யப்பட்டிருக்கும். பொறுத்துக்கொள்ள முடியாத வலி ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கலாம். உண்மையிலேயே தாங்க முடியாத வலி ஏற்பட்டால் உடனே நாம் உணர்வற்ற நிலைக்குப் போய்விடுவோம். உணர்வு இருக்கிறது என்றால் ஏற்பட்ட வலி பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான் என்று அர்த்தம். 

வலி ஏற்பட்டால் அதைப் போக்க இன்னொன்று செய்யலாம். நான் செய்யும் முறை இதுதான். என் குருநாதர் மூலம் நான் கற்றுக்கொண்டது இது . பல நூறு தடவைகள் செய்து பார்த்து வெற்றி பெற்றது. எங்கேயாவது உடலில் வலி ஏற்பட்டால், உடலை அசைக்காமல் நேராக அமர்ந்துகொண்டு, அல்லது நேராக படுத்துக்கொண்டு, அந்த வலியையே கவனிக்கவேண்டும்.

ஐயோ, இப்படி வலிக்கிதே என்று புலம்பிக்கொண்டல்ல. ஒரு திரைப்படம் பார்ப்பதைப்போல, கவலை, அச்சம், புலம்பல் ஏதுமில்லாமல் அடிபட்ட ஒருவரின் காயத்தைக் கீறி எப்படி ஒரு டாக்டர் உணர்ச்சிவசப்படாமல் தையல் போடுவாரோ அதைப்போல. யாருக்கோ வலிப்பதைப் போலவும், அதை நீங்கள் பார்ப்பதைப் போலவும் உங்கள் வலியை நீங்களே பார்க்க வேண்டும்.

இது கொஞ்சம் கடினமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம். அதனால் என்ன? வலி போனால் சரிதானே? இப்படி வலியையே ஒரு பத்து நிமிடம் கவனித்துக்கொண்டே இருந்தால் வலி கணிசமாகக் குறைந்துவிடும் அல்லது சுத்தமாகப் போய்விடும். இரண்டாம் முறை முயற்சி செய்யும்போது பத்து நிமிடம் ஐந்தாகக் குறையும். இப்படியே பழக்கமாகிவிட்டால் வலிக்கிறதே என்று நினைத்தவுடன் வலி போகும்! செய்துதான் பாருங்களேன். ஒரு பைசாகூட செலவில்லாத குணமாக்கும் கலை இது!

உங்கள் சிறுநீரை பரிசோதனை செய்து அதில் 200 ’சுகர்’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் ஒரு சர்க்கரை வியாதிக்காரர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தமா? அல்லது உடம்பில் இருந்த தேவையில்லாத கெட்ட சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டது என்று அர்த்தமா? இரண்டாவதுதான். ’வாழ்க சிறுநீரகம்’ என்று கோஷம்தான் போடவேண்டும். சிறுநீரில் சர்க்கரை இருப்பதாக பரிசோதனைகள் சொன்னால் உங்கள் கிட்னி நன்றாக வேலை செய்வதற்காக இறைவனுக்கும் கிட்னிக்கும் நன்றி சொல்லவேண்டும்! அதை விட்டுவிட்டு, ஐயையோ ’டயபட்டிஸ்’ வந்துவிட்டது என்று அச்சப்படக்கூடாது. (டயபடிஸ் பற்றி தனியாக பார்க்க இருக்கிறோம்).

உடல் செய்யும் குணப்படுத்தும் காரியங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த உலகமே ஒருபக்கம் போனால் நீ எதிர்ப்பக்கம் போகிறாயா? அப்படியானால் இந்த உலகம் காலம்காலமாகச் சென்று கொண்டிருக்கும் திசை தப்பு என்று சொல்கிறாயா? உனக்கு என்ன கொழுப்பு என்று கேட்கத் தோன்றுகிறதா?

அப்படியானால் கொழுப்பைப் பற்றி அடுத்து பார்த்துவிடலாமே!

தொடரும்...

No comments:

Post a Comment