நலம் நலமறிய ஆவல் - 11. மருத்துவ உலகின் மனசாட்சி

 

   

    

 இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள், மேற்கோள்கள் எல்லாம் Dissenting Diagnosis: Voices of Conscience from the Medical Profession நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.


    
    வர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் தன் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. எதிரே சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்று திடீரென்று நிற்கவும், இவருடைய கார் ட்ரக்கின் மீது லேசாக மோதி நின்றது. அந்த லேசான மோதலில், காரின் ஸ்டீயரிங் அவருடைய வயிற்றிலும் நெஞ்சுப் பகுதியிலும் குத்தியது. ஆனால், அவருக்கு அப்போது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. காரை ஓட்டிக்கொண்டே வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால், கொஞ்ச நேரம் கழித்து கடுமையான வியர்வையும் நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனே பக்கத்து நகரத்திலிருந்த ஒரு மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ஆன்ஜியோக்ராஃபி செய்யப்பட்டு, உடனே ஆன்ஜியோப்ளாஸ்டியும் (கையில் செருகப்பட்ட ஊசி மூலமாக இதய அடைப்பை நீக்குதல்) செய்யப்பட்டது.

    மறுநாள், தன் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக நோயாளி சொன்னார். ஆனால் அதுபற்றி ஐ.சி.யு.வில் இருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று பகல் அங்கு அவரைப் பார்க்க வந்த அவர் நண்பர் ஒருவரிடம் விஷயம் சொல்லப்பட்டது. அவர் ஒரு ஜெனரல் சர்ஜன். உடனே அவர் அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடம் நண்பருக்கு நடந்த விபத்து பற்றியும், அவர் நெஞ்சில் கார் ஸ்டீயரிங் அடித்தது பற்றியும் சொல்லிவிட்டு, உடனே அடிவயிற்றை ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ (Sonography) செய்து அந்த அறிக்கையை சீனியர் டாக்டரிடம் காட்டும்படியும் சொல்லிவிட்டுச் சென்றார்.

    அவர் சென்ற மூன்றாவது நாள், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த ஆயுர்வேத மருத்துவ நண்பர் மிகவும் சீரியஸாக இருப்பதாகவும், அவரது ரத்த அழுத்தம் நார்மலுக்கு மிகவும் கீழே இறங்கிவிட்டதாகவும், அவரது நாடித்துடிப்பு விகிதமும் ரொம்ப அதிகமாக இருப்பதாகவும், அவரது அடிவயிறு பெருத்து வீங்கியிருப்பதாகவும் செய்தி சொன்னது அது.

    உடனே மருத்துவமனைக்கு விரைந்த ஜென்ரல் சர்ஜன், தன் நண்பரின் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனார். மூன்று நாளாகியும் அவர் கேட்டுக் கொண்டபடி ஸ்கேன் எதுவும் எடுக்கப்படவில்லை! ஏன் எடுக்கவில்லை என்று கோபமாக அவர் அங்கிருந்த இதயவியல் மருத்துவரிடம் கேட்டபோது, ‘அதெல்லாம் ஆன்ஜியோக்ராஃபி செய்ததன் பின்விளைவுகள்’ என்று சாதாரணமாக அந்த ‘இதய நிபுணர்’ சொன்னார். ஆனால், நம் சர்ஜன் நண்பர் அவருடன் மிகவும் கடுமையாகப் பேசிய பிறகு வேண்டா வெறுப்பாக ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    நோயாளியின் அடிவயிற்றில் இரண்டு லிட்டர் ரத்தம் தேங்கியிருந்தது ஸ்கேன் ரிபோர்ட்டில் தெரியவந்தது. உடனே, அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும், ஆயுர்வேத டாக்டர் பிழைக்கவில்லை. அதுமட்டுமா? அவர் குடும்பத்துக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு ‘பில்’ கொடுத்தது மருத்துவமனை!

    கடுப்பாகிப்போன சர்ஜன் நண்பர், மருத்துவமனை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். எல்லாம் சரியாக நடந்ததாகவே அவர்கள் ‘பேப்பர்’களைக் காட்டினார்கள்! மருத்துவமனை மீது வழக்குத் தொடுக்க, இறந்தவரின் மனைவி விரும்பவில்லை. அந்த மனநிலையில் அப்போது யார்தான் இருப்பார்கள்? கடைசியில், எட்டு லட்சமாக இருந்த பில் தொகை பேச்சுவார்த்தைகள் மூலம் நான்கு லட்சமாகக் குறைந்தது, அவ்வளவுதான்!

    ஒரு மனிதனின் உயிரையும் கொடுத்து, அவன் உடலை மீண்டும் பெறுவதற்குப் பெரும் தொகையையும் கொடுக்கவேண்டி இருப்பதைவிட பெரிய மானிட சோகம் வேறு எதுவும் உண்டா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி இறந்துவிட்டாரென்றால், அவர் குடும்பத்தாரிடம் ஒரு பைசாவும் கேட்கக்கூடாது என்று இந்த உலகில் எந்த அரசாவது அறிவித்துள்ளதா? அப்படி ஒரு அதிசயம் நடக்காதா என்று என் மனம் ஏங்குகிறது!

    எந்த மருத்துவத் துறையானாலும் மனசாட்சி உள்ள மனிதர்கள் சிலராவது இருக்கத்தான் செய்வார்கள். அலோபதியும் அதற்கு விதிவிலக்கல்ல. டாக்டர் ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களின் கருத்துகளை ஏற்கெனவே பார்த்தோம். அந்த வரிசையில் இப்போது மேலும் இரண்டு பேர்.


    அலோபதி டாக்டர்களான டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் ஷுக்லா ஆகிய இருவரும், மேலே விவரித்த மாதிரியான பல நிகழ்வுகளை ஒரு நூலில் பதிவு செய்திருக்கின்றனர். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் – இந்த முக்கோணம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது, எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகிறது என்பதை தங்களுக்குத் தெரிந்த நேர்மையான, துணிச்சலான டாக்டர்களிடம் நேர்காணல்கள் செய்து, அதை ஒரு நூலாக இருவரும் வெளியிட்டனர். Dissenting Diagnosis என்ற அந்த நூலைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். ‘‘Voices of Conscience from the Medical Profession” என்று அதற்கு உப தலைப்பும் உண்டு. ஆரோக்கியம் பற்றி எழுத்தில் உருவான சத்யமேவ ஜயதே என்று அந்த நூலைச் சொல்லலாம்.

    மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடக்கும் பரிசோதனைகளில் இருக்கும் குளறுபடிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். மருத்துவமனைகள், மருந்துக் கம்பனிகள், மருத்துவர்கள் என்ற முக்கோணம் செய்யும் கோணல்களை இங்கே கொஞ்சம் பார்க்க இருக்கிறோம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள், மேற்கோள்கள் எல்லாம் மேலே சொன்ன நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

    மருத்துவ உலகம் முழுக்க முழுக்க வணிகமயமாகிவிட்டது. ஆயிரத்தில் ஒருவர்கூட மனித உயிருக்கு மதிப்பு கொடுப்பதில்லை. ஒரு பக்கம் தீவிரவாதிகள், ஜாதி, மத வெறியர்களின் வன்முறை என்றால், இன்னொரு பக்கம் வணிகமயமாகிவிட்ட மருத்துவ உலகின் நுட்பமான, அதிநவீன தொழில்நுட்பக் கொலைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன, அன்றாடமும். அதைப் புரிந்துகொள்வது நம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம் உயிருக்கும் நல்லது என்பதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில முக்கியமான தகவல்களையும் நிகழ்வுகளையும் இங்கே பகிர விரும்புகிறேன்.

    டாக்டர் அருண் காத்ரே, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் பணியாற்றிவரும் ஒரு கைனகாலஜிஸ்ட் (மகளிர் நல மருத்துவர்). டாக்டர் அபய் ஷுக்லா, பொதுமக்கள் ஆரோக்கியத் துறையில் உள்ளவர். ‘சாத்தி’ என்ற அமைப்பின் உதவியோடு (Support for Advocacy and Training to Health Initiatives), 78 மனசாட்சியுள்ள நேர்மையான டாக்டர்களைப் பேட்டி கண்டு அவர்களது வாக்குமூலங்களையும், அனுபவங்களையும் அந்த நூலில் பதிவு செய்துள்ளனர். ஹிந்தியில் ‘சாத்தி’ என்றால் ‘நண்பன்’ என்றுதான் அர்த்தம்!
 
    மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, நாசிக், புனே, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல டாக்டர்கள், துணிச்சலாகப் பேட்டி கொடுத்துள்ளனர். சரி, அவர்கள் நேர்மையானவர்கள், மருத்துவ ஒழுக்கம் தவறாதவர்கள் என்று எப்படித் தெரியும்? ரொம்ப சிம்பிள். நீங்கள் நேர்மையானவராக இருக்கும்பட்சம், உங்கள் நண்பர்களில் யார் நேர்மையானவர் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அப்படித்தான். தங்களின் நெருங்கிய, நேர்மையான நண்பர்களை அந்த இருவரும் முதலில் பேட்டி எடுத்தனர். பின், அவர்கள் மூலமாக மற்றவர்கள். ஒரு நேர்மைச் சங்கிலித் தொடர்போல. அதில் ‘சாத்தி’யின் பங்கும் உண்டு. இது ‘சாத்தி’யம்தானே?

    ஆனால், அதிலும் சில பிரச்னைகள் இருந்தன. சிலர் உண்மையைச் சொல்ல விரும்பினர். ஆனால், அதனால் அவர்களுக்குப் பிரச்னைகள் வரும் என்ற நிலை இருந்தது. உதாரணமாக, அதில் 66 பேர் தனிப்பட்ட முறையில் ‘ப்ராக்டீஸ்’ செய்பவர்கள். பலர் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள். தான் யார், பணிபுரியும் மருத்துவமனையின் பெயர் முதலிய விவரங்களையெல்லாம் சொன்னால், அவர்கள் சோற்றில் மண் விழுந்துவிடலாம்! எனவே, அவர்களில் 37 டாக்டர்கள் மட்டுமே தங்கள் பெயர்களை வெளியிட அனுமதி கொடுத்தனர். ஆனால், தங்கள் பேட்டிகளைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அனைவருமே எழுத்தில் அனுமதி கொடுத்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

    உதாரணமாக, அவர்கள் அனைவரிடமும் ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டன.
    1. தனியார் மருத்துவமனைகள் / நிறுவனங்கள் செயல்படும் விதம் உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?
    2. இல்லைனெனில், எந்தெந்த விஷயங்களில் தரம் குறைந்துபோயுள்ளது? எங்கேயெல்லாம் பிரச்னைகள் எழுந்துள்ளன?
    3. உங்கள் அனுபவங்களில் இருந்து, மருத்துவத் துறையின் முறைகேடான செயல்கள் தொடர்பான சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா?
    4. நோயாளிகளுக்குப் பிரச்னையையும் துன்பத்தையும் ஏற்படுத்திய மருத்துவத் துறையின் முட்டாள்தனமான செயல்பாடுகள் பற்றி உங்கள் அனுபவம் சார்ந்த உதாரணங்கள் கொடுக்க முடியுமா?
    5. மருத்துவச் சேவைக்காக அநியாயமாக, கொடுப்பவர் தகுதிக்கு மேல் மிக அதிகமாகப் பணம் பிடுங்கப்பட்டது பற்றிச் சொல்ல முடியுமா?
    6. மருத்துவத் துறையில் மல்ட்டி-ஸ்பெஷாலிடி மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?
    7. மருத்துவமனைகளின் இயக்கத்தில் இன்சூரன்ஸின் பங்கு என்ன?
    8. மருத்துவமனைகள் இயங்குவதன் பின்னணியில், மருந்துக் கம்பனிகளின் தாக்கம் என்ன?
    9. நிகழ்கால நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
    இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் கொடுத்த பதில்களையும், அவர்களது அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளனர்.

    பிணத்தின் ஒரு பாதத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு அட்டையைக் காட்டும் புத்தகத்தின் முகப்பு வரைபடம் என்னென்னவோ சொல்கிறது. 

    பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர் சொன்ன அனுபவம்தான் மேலே விவரிக்கப்பட்டது. அதனால்தான், பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.

    ‘‘மருத்துவத் துறையில் நேர்மையை நாம் கைவிட்டுவிட்டோம். அது வியாபாரமாகிவிட்டது… முன்பெல்லாம், மாத்திரைகளல்லாத வெறும் ‘ப்ளேசிபோ’க்களைக் கொடுத்துக்கூட குணப்படுத்திக் கொண்டிருந்தோம். மக்களும் குணமடந்தனர். காரணம், அப்போதெல்லாம் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒன்று இருந்தது… கொஞ்ச நேரம் நோயாளியோடு நான் அன்பாகவும் அரவணைப்போடும் பேசிக்கொண்டிருந்தாலே, அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதை என்னால் காண முடிந்தது… மருந்துகள் மட்டும் உதவுவதில்லை. டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு மிக முக்கியமானது… இப்போதெல்லாம் நாங்கள் மனிதர்களுக்கு வைத்தியம் செய்வதில்லை. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் அறிக்கைகள் ஆகியவற்றுக்குத்தான் வைத்தியம் செய்துகொண்டிருக்கிறோம்… மருத்துவப் படிப்பின் பயிற்சியில்கூட, நாங்கள் ஒரு மனிதனை முழுமையாகப் பார்ப்பதே இல்லை. உறுப்பு உறுப்பாகத்தான் பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்

(ப்ளேசிபோ விளைவு (Placebo effect) Vs நோசிபோ விளைவு (Nocebo effect) பற்றி தெரிந்துகொள்ள இங்கு 👇 செல்லவும்



    இப்படிச் சொன்னவர், பேட்டி எடுக்கப்பட்ட முதல் டாக்டர். மும்பையில் இருக்கும் மூத்த சர்க்கரை நோய் நிபுணர், டாக்டர் விஜய் அஜ்கோன்கர். மருத்துவ உலகின் மனசாட்சிபோல, சில முக்கியமான விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இருக்க வேண்டிய அன்னியோன்யமான உறவு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, அலோபதியின் அடிப்படைத் தவறே மனிதனை முழுமையாகப் பார்க்க அது மறுப்பதுதான். அடிப்படைத் தத்துவம், பயன்பாடு இரண்டிலும் உள்ள முக்கியக் குறைபாடுகளை அவர் அடையாளப்படுத்தியுள்ளதாக நான் உணர்கிறேன்.

    என் மாமனார் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனை வாசலில் காத்திருந்தோம். வெளியே வந்த டாக்டரிடம், அவருக்கு என்ன பிரச்னை என்று நான் கேட்டேன். ‘ஹீ இஸ் சிக்’ என்று ஒரு காப்பியம் எழுதக்கூடிய அளவுக்கு விளக்கமான விவரங்களைக் கூறிவிட்டு, ஒரு கணம்கூட நிற்காமல், என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், அந்த இளம் புது மருத்துவர் சென்றார்! என் ‘குட்டியாப்பா’ கதையில்கூட இந்நிகழ்ச்சியை நான் குறிப்பிட்டிருந்தேன்.

    அலோபதி மருத்துவத்தின் மூலமாக வரும் எல்லாப் பிரச்னைகளுக்குமே இந்த இரண்டுதான் காரணம். படித்துவிட்டோம் என்ற திமிர். நோயாளிகளை நோக்கிய ஒரு அலட்சியம். லட்சம் லட்சமாகக் கொடுத்து வாங்கிய படிப்பு. கோடி கோடியாகச் சம்பாதித்தால்தான் கணக்கு சரியாகும். அந்தக் கணக்கை நோக்கித்தான் பெரும்பாலான டாக்டர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும், அதை நாம் வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வேதம் ஓதுவதெல்லாம் ‘டிகிரி’ வாங்கிய சாத்தான்கள் என்பதுதான் பிரச்னையே!

    ‘‘ஒரு நோயாளி இரண்டாம் மருத்துவரைப் பார்க்கும்போது, முதல் மருத்துவர் கொடுத்த அதே மருந்தைத்தான் இரண்டாம் மருத்துவரும் கொடுப்பார். ஆனால், கம்பெனியை மாற்றிவிடுவார்! அவர் வேறு ஏதோ புதியதைக் கொடுப்பது மாதிரியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்!... சக மனிதர்களின் நோயைப் பயன்படுத்தி பணம் பண்ணுவது நமது நோக்கமே அல்ல. ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. செத்துவிடுவார் என்று நன்றாகத் தெரிந்தும், எழுபது எண்பது வயதுடைய முதியவரை ஐ.சி.யு.வில் வென்ட்டிலேட்டர்களில் வைத்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? வேண்டாமே, அந்த முதிய நோயாளி வீட்டுக்குப் போய் தன் குடும்பத்தினர் சூழ நிம்மதியாக உயிர் விடட்டுமே, விட்டுவிடுங்களேன்… இன்றைக்கு சாகப்போகிறவரை நாளைவரை உயிர் வாழவைப்பதன் நோக்கம் என்ன? பொருளாதார ரீதியில் அவருக்குப் பிரச்னை கொடுக்கலாம், குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்பதைத் தவிர?...” என்று கேட்கும் டாக்டர் அஜ்கோன்கர், நம் மரியாதைக்கு உரியவராகிறார்.

    குடிப்பதற்கான சமாசாரங்களை டாக்டர்களுக்கு மருந்துக் கம்பெனிகள் இலவசமாக வாங்கிக் கொடுத்து, தம் கம்பெனி மருந்துகளையே அவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர்! ‘கிக்’ ஏற்றப்பட்ட டாக்டர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளால் மக்களுக்கு என்னாகுமோ என்று நினைத்தால் ‘பக் பக்’ என்று மனம் அடித்துகொள்கிறது!

    ஒரு நீதிபதிக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், அதற்காக சில மருத்துவப் பரிசோதனைகளையெல்லாம் செய்து சான்றிதழையும் அவர் காட்டவேண்டி இருந்தது. அதற்காக அவர் ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் அரசு நியமித்த மருத்துவர் என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும். ஆனால், நீதிபதி புதிய பதவியை வகிக்கத் தகுதி இல்லாதவர் என்றும், அவருடைய ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த மருத்துவர் சொன்னார்.

    உண்மையிலேயே நீதிபதிக்கு ரத்தம் கொதித்தது! வேறு ஒரு மருத்துவரிடம் காட்டிய நீதிபதி, தன் ரத்த அழுத்தம் நார்மலாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். ஏன் இப்படி தவறாகச் சொல்கிறாய் என்று அந்த அரசு மருத்துவரைக் கேட்டபோது, சரியான அறிக்கையைக் கொடுப்பதானால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்டிருக்கிறார்! வென்றது நீதிமானா புத்திமானா என்று பட்டிமன்றம் நடத்தலாம்! இந்த நிகழ்ச்சியையும் டாக்டர் அஜ்கோன்கர்தான் குறிப்பிடுகிறார்.

இன்னும் இருக்கிறது, பார்க்கலாம்.




நோயறிதலில் நடக்கும் தவறுகள்

    சிறுவயதில் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடுவோம். அதற்கேற்றவாறு சட்டி, பானை, அடுப்பெல்லாம் வைத்து விளையாடுவோம். எல்லாமே குழந்தைகளைப் போலவே குட்டி குட்டியாக இருக்கும். அதே மாதிரி நமது ரத்தத்திலும் குட்டித் தட்டுகள் உண்டு. நம் ரத்தத்தில் உள்ள அநேக சமாசாரங்களில் ப்ளேட்லெட் என்பதும் ஒன்று. ப்ளேட் என்றால் தட்டு அல்லவா? தட்டு மாதிரி இருப்பதால் அவற்றுக்கு அந்தப் பெயரோ என்னவோ. ப்ளேட்லெட்டுகள் குட்டி ரத்தத்தட்டுகள். தட்டணுக்கள் என்றும் அவை சொல்லப்படுகின்றன. சரி, அவற்றைப் பற்றி இங்கு ஏன் பேசுகிறேன்? உங்களுக்காகத்தான், ஐ மீன், நமக்காகத்தான்.

    இந்தக் குறுந்தட்டுகள் ரத்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தால் அது ‘நார்மல்’ என்று சொல்லப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதரின் ரத்தத்தில் இத்தனை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டும் என்று ஒரு அலோபதி கணக்கு உண்டு. அதை வைத்துத்தான் நாம் ஆரோக்கியமானவரா இல்லையா என்பதை அது முடிவு செய்யும்! நம்மை நோயாளியாக்கும் கணக்கு என்றுகூட அதைச் சொல்லலாம்.

    எத்தனை ப்ளேட்லெட்டுகள் இருந்தால் நாம் ஆரோக்கியமானவர் என்ற கணக்குக்குள் போவதற்கு முன், இந்தச் சராசரிகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். நமக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும், எவ்வளவு ரத்தம் இருக்க வேண்டும், ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும், ரத்தத்துக்குள் இருக்கும் சமாசாரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும், நாடித்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், புரோட்டின், விட்டமின், கால்சியம், கார்போஹைட்ரேட், அயன் போன்ற சத்துகளெல்லாம் உணவில் எந்த அளவில் இருக்க வேண்டும் – இப்படி சராசரிக் கணக்கு நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் வியாபிக்கிறது. எது சராசரி அளவு, எது அளவு மீறல், எது சராசரியைவிடக் குறைவு என்றெல்லாம் கணக்குகள் உள்ளன. ஒரு சின்ன அட்டவணை தருகிறேன் பாருங்கள்.

நார்மல் பற்றிய அட்டவணை

    
    இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு என்றெல்லாம் போகும்போது, இந்த அட்டவணையில் மாற்றங்களும் இருக்கும்! 


    ஒரு அட்டவணைப்படி மனிதனால் வாழமுடியுமா? அது சாத்தியம்தானா?

    120/80-ல் ரத்த அழுத்தத்தை வைத்துக்கொண்டு ஒருவர் ஒலிம்பிக்ஸில் ஓடிவர முடியுமா? காதல் வசப்படும்போது, காதலியோடு கண்ணால் பேசும்போது, கட்டியணைக்கும்போது – இந்த மாதிரியான எசகுபிசகான சூழ்நிலைகளிலெல்லாம் 120/80-ல் நம் ரத்த அழுத்தத்தை வைத்திருக்க முடியுமா?! அப்படி வைத்திருப்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்தால், காதலிக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படாதா?! ஒரு பெண் குழந்தையை ஒருவன் பாலியல் வன்முறை செய்வதைப் பார்க்க நேர்ந்தாலோ, அப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டாலோ ரௌத்ரம் பழகியவர்களின் தார்மிகமான கோப நிலையில் 120/80 எங்கே போகும்? கடன் கொடுத்தவன் கண்ணில் படாமல் அவனது ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு நாம் ஓடி ஒளியும்போது, நமக்கும் ரத்த அழுத்தம் அப்படியே இருக்குமா? கபாலி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக, மலேசியாவில் அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை விட்டானே ஒரு ரசிக முட்டாள், அவனது ரத்த அழுத்தம் குதிக்கும்போது எந்த நிலையில் இருந்திருக்கும்?

    இவ்வளவு வேண்டாம். எல்லாவற்றுக்கும் நானே பதில் சொல்லிவிடுகிறேன். நாம் சாப்பிடும்போது, பட்டினி கிடக்கும்போது, தூங்கும்போது, கவலைப்படும்போது, சிந்தனை செய்யும்போது, தியானம் செய்யும்போது - இப்படி வாழ்வின் பல நிலைகளிலும் நமக்குப் பலவிதமான ரத்த அழுத்தம் இருக்கும். காந்திக்குக்கூட 200/140 தான் பெரும்பாலும் இருந்ததாகவும், அதுவே அவருக்கு நார்மலாக இருந்ததையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.

    மாற்றமே அடையாத ஒரு யந்திரமாக மனிதன் இருக்கும் பட்சத்தில்தான் இந்தச் சராசரிகள் சாத்தியம். மனிதன் மனிதனாக இருக்கும்வரை இந்தச் சராசரிக் கணக்குக்குள் வரவே முடியாது.

    சரி, இந்தச் சராசரிக் கணக்கை யார், எப்போது, எப்படிக் கண்டுபிடித்தார்கள்? யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் உடல் உஷ்ணம் ஏன் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டும் என்று ஒரு டாக்டரிடம் கேட்டுப்பாருங்கள். அவராலும் விளக்க முடியாது. அவருக்கு அப்படித்தான் சொல்லப்பட்டது.

    உடலில் பிரச்னை இல்லாதபோது எந்த டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டுமோ அந்த ஹீட்டில் உடல் இருக்கும். அது 98.6-ஆக இருக்கலாம் அல்லது வேறு எதாவதாகக்கூட இருக்கலாம். ஆனால், உடலில் சளி போன்ற கழிவுகள் அதிகமாகத் தேங்கிவிடும்போது, உஷ்ணத்தை ஏற்படுத்தி உடலில் இருந்து அந்தக் கழிவுகளை நீக்கும் இயற்கையான வைத்தியத்துக்குப் பெயர்தான் காய்ச்சல்! அப்போது உடலின் உஷ்ணநிலை இயல்பான உஷ்ணநிலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். மாத்திரை மருந்து சாப்பிட்டு உஷ்ணத்தை நாம் குறைப்போமானால், கழிவுகள் வெளியேறாமல் வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும்.

    ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் கணக்கைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்தில் 1,50,000-லிருந்து 4,50,000 வரை ப்ளேட்லெட்டுகள் இருக்க வேண்டுமாம்! பொதுவாக, ஏதாவது ஜுரம், குறிப்பாக வைரல் ஃபீவர், வரும்போது ப்ளேட்லெட்டுகளின் அளவு கணிசமாகக் குறையும் என்று சொல்லப்படுகிறது. (இதுவும் அஞ்சுவதற்குரிய விஷயமே இல்லை என்பதை பின்னால் பார்க்கலாம்). ஆனால் ப்ளேட்லெட்டுகளை கணக்கிட்டு, ‘உங்களுக்கு 1.5 லட்சம்தான் இருக்கிறது. ஆனால் 2 லட்சம் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, ஆள் வசதியான ஆளாக இருந்தால், அவருக்கு ‘சலைன் ட்ரிப்’ ஏற்றி, ஐ.சி.யு.வில் படுக்கவைத்து 25,000-லிருந்து 30,000 வரை பிடுங்கிய பிறகுதான் வெளியே விடுவார்கள்’ என்கிறார் ஒரு டாக்டர்.

    புதிதாகப் பிறந்த குழந்தைகள் பலருக்கு மஞ்சள் காமாலை வருவது சாதாரணமானதுதான். ஆனால், பல மருத்துவமனைகளில் அதையே காரணம் காட்டி, உங்கள் குழந்தைக்கு 10 mg ’பிலிரூபின்’ உள்ளது. ஒரு ‘பிலிரூபி’னுக்கு மேல் இருந்தால் அது கெடுதியாகும் என்று சொல்லி, தெளிவாக ‘பிரின்ட்’ செய்யப்பட்ட ‘ரிப்போர்ட்’டை காட்டுவார்கள். ஆனால், அந்தக் கணக்கு வளர்ந்தவர்களுக்குரியது. குழந்தைகளுக்கு 14 முதல் 16 வரை ‘பிலிரூபின்’ என்ற ஒரு சமாசாரம் உடலில் இருக்கலாம். அதற்கு மேல் போனால்தான் பிரச்னை (என்று சொல்லப்படுகிறது). ஆனால், வளர்ந்தவர்களுக்கான அறிக்கையைக் காண்பித்து குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார் அதே டாக்டர் (அதே பக்கம்). நமது ரத்தத்தில் உள்ள வயசான சிவப்பணுக்களை உடலை விட்டு நீக்கும்போது உருவாகக்கூடிய ஒன்றுதான் ‘பிலிரூபின்’. உடலுக்குள் கணந்தோறும் லட்சக்கணக்கான சமாசாரங்கள் உருவாகும். அவற்றின் பெயர்களையும் அளவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஆனால் புரியாத, ‘விஞ்ஞானப்பூர்வமான’ பெயர்களைச் சொன்னால்தானே நம்மை பயமுறுத்த முடியும்?

தேவையற்ற பரிசோதனைகள்

    உங்களுக்கு மலேரியா வந்துவிட்டது என்று ‘லேப் ரிப்போர்ட்’டை வைத்து டாக்டர் சொல்லுவார். அதற்கான மருந்து மாத்திரைகளையும் கொடுப்பார். ஆனால், நோயாளியாக்கப்பட்டவருக்கு எந்தக் குணமும் ஏற்படாது. அதன்பிறகு அவருக்கு இன்னொரு ‘டெஸ்ட்’ எடுக்கப்படும். அதன் விளைவாக, அவருக்கு வந்தது ‘மலேரியா’ அல்ல, ‘டைஃபாய்டு’ என்று சொல்வார்கள்! கேட்கின்ற கமிஷனை கொடுத்துவிட்டால், டாக்டர்கள் விரும்புகின்ற அறிக்கைகள் கிடைக்கும் என்கிறார் சட்டீஸ்கர் நகரின் ஷாஹித் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர் ஜனா!
 
    ‘ஒன்று அல்லது இரண்டு லேப் ரிபோர்ட்டுகள் மட்டுமே வைத்திருக்கும் நோயாளிகள் மிகக் குறைவானவர்களே. நான் அன்றாடம் பார்க்கும் பலரிடத்தில், ஒவ்வொருவரும் தேவையில்லாத பல அறிக்கைகளைக் கொத்துக்கொத்தாக வைத்திருக்கின்றனர்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சீனியர் சர்ஜனான டாக்டர் அர்ஜுன் ராஜகோபாலன்.
 
    ஒரு ஜுரம் வந்த ஐந்து நாட்களுக்கு முன் ஆய்வுக்கூடப் பரிசோதனை செய்தால், அது என்ன ஜுரம் என்று தெரியாது. ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அது டைஃபாய்டு என்றோ, டெங்கு என்றோ தெரியும் (இதுபற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்). ஆனால், ஜுரம் வந்தவருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ‘டெஸ்ட்’ எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் ஒரு பெருநகர நோய்க்குறி வல்லுநர். இவர்கள் நோய்க்குறி வல்லுநர்கள் மட்டுமல்ல. பரிசோதிக்காமலே நோய்க்குறிகளை வாஷ் பேசினிலோ சிங்க்-கிலோ எறிந்துவிடும் குறி-எறி வல்லுனர்களாகவும் உள்ளனர்!

    ஒரு பெண் குழந்தை உண்டானால், அவளுக்குத் தேவையே இல்லாமல் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கைக்கான ‘ஹீமோக்ரம் டெஸ்ட்’, சிறுநீரகம், கல்லீரல் போன்றவை ஒழுங்காக இயங்குகிறதா என்று அறியும் டெஸ்ட்டுகளெல்லாம் எடுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் ஒரு கைனகாலஜிஸ்ட்.

    மனச்சிதைவு கொண்டவர்களைக்கூட மனநல மருத்துவர்கள் விட்டுவைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு தலைவலி வரத்தான் செய்யும். அது அவர்களைப் பொருத்தவரை சாதாரணமானதே. ஆனால், அதற்குக்கூட எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார், கொல்கத்தாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான டாக்டர் சுமித் தாஸ்.
 
தேவையற்ற அறுவை சிகிச்சைகளும் மருந்துகளும்

    ஒரு படத்தில் கார்த்திக் நடித்திருப்பார். அதில் வீட்டு வாடகை கேட்க வரும் வீட்டுக்காரர், அறையில் இருக்கும் ஒரு கட்டிலில் உட்காருவார். உடனே கட்டில் விழுந்து உடைந்துவிடும். அதைப்பார்க்கும் நாயகன், ‘சார் இது கட்டில் இல்லை, கட்டில் மாதிரி’ என்று சொல்வார். அதைப்போல இப்போதெல்லாம் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மாதிரிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஹெர்னியா’ (குடலிறக்கம்) இல்லாத ஒருவருக்கு, ஆய்வுக்கூட பரிசோதனை அறிக்கைகளின்படி ‘ஹெர்னியா’ என்று சொல்லி, அவருக்கு ‘அனஸ்தீஸியா’வும் கொடுத்து, சில தையல்களை மட்டும் போட்டுவிட்டு, ‘ஹெர்னியா ஆபரேஷன்’ செய்த மாதிரி காண்பித்து, அதற்குரிய ‘பில்’லை வாங்கிவிடுகிறார்கள் என்கிறார் ஒரு டாக்டர்.

    இன்னொருவருக்கு முதுகுத்தண்டில் ஒரு தட்டு நழுவிவிட்டது என்று சொல்லி, ஆபரேஷன் செய்த மாதிரி காண்பித்து, ஆபரேஷனுக்கான முழு சார்ஜையும் வாங்கிகொண்டார்கள் ஒரு பெருநகரில்.
ஒவ்வொரு நாளும் வயதான இரண்டு அல்லது மூன்று பேரை நான் பார்க்கிறேன். அவர்களின் பிரச்னையெல்லாம் அவர்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி தேவைப்படுவதுதான். ஆனால், அவர்களுக்கு அநியாயமாக ‘காடராட்க் ஆபரேஷன்’ செய்யப்பட்டு 40,000 ரூபாய்கள் வரை பெறப்படுகிறது என்று குமுறுகிறார் ஒரு கண் மருத்துவர்.

    எங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் லேசர் சிகிச்சை பற்றி சொல்லித் தரப்படுவதில்லை. ஆனால், நாங்கள் அதை நோயாளிகளை வைத்து பரிசோதித்துக் கற்றுக்கொள்கிறோம். தவறுகள் நடக்கும்தான். ஒரு லேசர் யந்திரத்தை வாங்கிவிட்டால், போட்ட முதலை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான் அங்கே வேலை செய்கிறது. அவசியமே இல்லாவிட்டாலும், நோயாளிகளை யந்திரத்துக்குள் அனுப்புவது நடக்கத்தான் செய்கிறது என்கிறார் இன்னொருவர்.

    ஒரு நாலு வயதுப் பெண் குழந்தைக்கு கண்கள் அடிக்கடி சிவந்துபோயின. அக்குழந்தையின் அம்மா, மகளை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஸ்டீராய்டு சொட்டுகளை போடச் சொன்னார். ஒரு ஆண்டு ஆகியும் அதே சொட்டுகள்தான் பலமுறை பயன்படுத்தப்பட்டன. ஆனால், நீண்ட காலத்துக்கு ஸ்டீராய்டு சொட்டுகள் கொடுத்தால், கண்களில் ‘காடராக்ட்’ ஏற்பட வாய்ப்புண்டு. அந்தச் சின்னப்பெண்ணை என்னிடம் அழைத்து வந்தார்கள். கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்று. அந்த நான்கு வயதுக் குழந்தைக்கு நான் ‘காடராக்ட்’ அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது என்கிறார் ஒரு கண் மருத்துவர்.

பணத்தின் பின்னால்

    ஒரு ஆட்டோவில் ஏறி இந்த மருத்துவமனைக்குப் போ என்று சொன்னால், அவன் வேறு ஒரு மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிறான். ஏன்? அந்த மருத்துவமனை அவனுக்கு ஏற்கெனவே அதற்கான ‘டிப்ஸ்’ கொடுத்துள்ளது என்கிறார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த கைனகாலஜிஸ்ட் டாக்டர் சுபாஷ் பாட்டில்.

    ஒரு பல்லை எக்ஸ்ரே எடுத்தால் போதும் என்ற நிலையில், ஏன் பத்து பற்களுக்கு எக்ஸ்ரே எடுக்கிறார்கள்? அப்போதுதான் 50 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார் ஒரு டாக்டர்!.

    ‘விருப்பமில்லாமல் போருக்குத் தள்ளப்பட்ட ஒரு ராணுவ வீரன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டே முன்னேறுவதுபோல, தனியார் மருத்துவத் துறைக்குள் நுழையும் ஒவ்வொரு டாக்டரும், தன் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த சர்ஜன் டாக்டர் சஞ்சய் நக்ரால்.
 
    ஒரு சாதாரண சலைன் பாட்டிலைத் திருடும் டாக்டர்கள்கூட இருக்கிறார்கள் என்கிறார் இன்னொருவர்! ஆனால், குழந்தைக்குத் தாய்ப்பால் தேவையில்லை, கொடுக்க வேண்டாம், தான் எழுதிக்கொடுக்கும் பால் ‘பாக்கட்’டையே பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் டாக்டர்கள் இருப்பது வணிகமயமாக்கட்ட சேவையின் உச்சகட்டம் என்று சொல்லலாம்!

    உங்களுக்கு கேன்சர் உடல் முழுவதும் பரவிவிட்டது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட ஒரு நோயாளி, தனியார் மருத்துவமனையை அணுகுகிறார். அங்கே இனிக்க இனிக்க அவரிடம் பேசி, அவருக்கு தேவையில்லாத, நிச்சயம் பலன்கொடுக்காத ஒரு ஆபரேஷனை செய்து பணம் மட்டும் சம்பாதிக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் டெல்லி AIIMS-ல் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் எல்.ஆர். மர்மு.

    இன்னும் உள்ளது…


    ரு சோப்பு வாங்க வேண்டுமென்றால், நமக்குப் பிடித்த சோப்பையே நாம் வாங்குவோம். எதை வாங்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்வோம். ஆனால், மருந்து விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது. நம்முடைய பணத்தில் நாம் எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்கிறார்.

காசு, பணம், துட்டு, மணி மணி

    Dissenting Diagnosis என்ற நூலில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தைத்தான் மேலே கொடுத்துள்ளேன். ஆனால் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! நமக்கான பொறுப்பை ஒரு மருத்துவர் எடுத்துக்கொள்ளும்போது அவர் எவ்வளவு பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும்! ஆனால், இந்த உலகில் பொறுப்புணர்வும் மனிதாபிமானமும் உள்ள மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதைத்தான் அந்த நூல் காட்டுகிறது. டாக்டர்களெல்லாம் மருந்துக் கம்பெனிகளின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்று டெல்லியைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் கொசைன் சொல்வது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
    ஒரு மாநாட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி ஒரு மருந்துக் கம்பெனி என்னை வெளிநாட்டுக்கு அழைத்தது. ஆனால் நான் செல்லவில்லை. அவர்கள் தரும் மருந்துகள் எதையும் நான் நோயாளிகளுக்கு எழுதிக்கொடுக்கவில்லை என்று தெரிந்ததும் என்னிடம் வருவதை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுசித்ரா.

    தங்கள் மருத்துவமனைகளின் வருமானத்தைப் பெருக்க உதவும் டாக்டர்களை மட்டுமே கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்கின்றன. அங்கே ஒரு நோயாளியிடம் 1,50,000 ரூபாய் வசூலிக்கப்பட்டால், அதில் 15,000 மட்டுமே டாக்டருக்குக் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார் புனேயைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் குப்தா.

    ஒரு பெரிய மருத்துவமனையில் நிகழ்ந்த மாரடைப்பு சிகிச்சையில் ஒரு நோயாளி இறந்துபோனார். ‘மருத்துவத் துறையில இதெல்லாம் சகஜமப்பா’ என்பதுபோல எளிமையான அந்த சிகிச்சைக்காக, 16 லட்ச ரூபாய் ‘பில்’ இறந்தவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது! ஆனால், நோயாளியின் உறவினர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே, ‘ரமணா’ படத்தில் வரும் காட்சிபோல, அந்த மருத்துவமனை அந்த நோயாளியின் உடலைக் கொடுக்காமல் மறைத்துவிட்டது! கடைசியில், ஒரு டி.எஸ்.பி. நண்பர் வந்து சோதனை செய்யவேண்டி இருந்தது என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர்.
 

    ‘மும்பையில் இருக்கும் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் எனக்கொரு எளிமையான ஆன்ஜியோப்ளாஸ்டி செய்யப்பட்டது. காலையில் 10 மணிக்கு சேர்க்கப்பட்ட எனக்கு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது. நாலு லட்ச ரூபாய் ‘பில்’ கட்டச் சொல்லி சொன்னார்கள். அதுவும் நான்கு மணி நேரத்தில். செக், ட்ராஃப்ட் எதுவும் வாங்கமாட்டார்களாம். ரொக்கப்பணம் மட்டும்தான்! எப்படியோ சமாளித்து பணத்தை நான் கட்டினேன். எல்லோராலும் இப்படிச் செய்ய முடியுமா என்ன’ என்று அங்கலாய்க்கிறார், டாக்டர் ராஜேந்த்ர மலோஸ்.

    ‘இங்கே இருக்கும் டாக்டர்களில் 90 சதவீதம் பேர் அலோபதி டாக்டர்களே அல்ல. எல்லோருமே ஹோமியோபதி அல்லது ஆயுர்வேத டாக்டர்கள்தான். ஆனால், அலோபதி டாக்டர்களாக அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் தொடர்பும் செல்வாக்கும் உள்ளது. என்னை எப்படியாவது இந்தத் துறையிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

    ‘நான் ஒரு நோயாளியிடம் 40 ரூபாய்கள் மட்டுமே வாங்குகிறேன். ஒரு நாளைக்கு 150 நோயாளிகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்த டாக்டர்களோடு எனக்குப் பிரச்னைதான். தேவையில்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எழுதிக்கொடுத்த சீட்டுகளைக் கொண்டு வந்து நோயாளிகள் என்னிடம் காட்டுவார்கள். நான் அவற்றையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போங்கள், உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பிவிடுவேன். எனவே, என்னால் அந்த டாக்டர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 முதல் 30,000 வரை இழப்பு ஏற்படுகிறது. அதனால்தான் அவர்கள் என்னைத் தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    அச்சமூட்டும் நிஜம் இதுதான். ஆனால் நான் விடப்போவதில்லை. என்னைப்போல இன்னொரு டாக்டர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவர் அடங்கிப் போய்விடலாம். ஆனால் அவரை நான் குறைசொல்லமாட்டேன்’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு டாக்டர்.

    என் க்ளினிக்குக்கு ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். அக்குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சும்மா வயிற்றில் காற்று இருந்தது. அவ்வளவுதான். எந்த மருந்தும் அதற்குத் தேவையில்லை என்று நான் சொன்னேன். அன்று மாலை எனக்கு வேறொரு டாக்டரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் ஒரு குழந்தையை அனுப்புவதாகவும், அது ரொம்ப சீரியஸான நிலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் நான் பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிய அதே குழந்தைதான் அது!

    அந்தக் குழந்தைக்குக் குடல்கள் திருகிக்கொண்டு இருந்ததாக ஸ்கேன் அறிக்கை சொன்னது. ஆனால், உண்மையில் அக்குழந்தைக்கு அப்படி எதுவும் இல்லை. அது சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருந்தது. ஒரு நாள் குழந்தையை என் க்ளினிக்கில் சேர்த்துவைத்து மறுநாள் வீட்டுக்கு அனுப்பினேன். குழந்தைக்குப் பெற்றோரே அவர்கள் இஷ்டத்துக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்’ என்று கூறுகிறார் மஹாராஷ்ட்ரா டாக்டர் ராஜீவ் தமன்கர்.

நார்மல் டெலிவரியா? அப்படீன்னா?

    மகப்பேறு மருத்துவர்கள் பலருக்கு ‘நார்மல் டெலிவரி’ என்றால் என்னவென்றே தெரியவில்லை! ‘நார்மல் டெலிவரி’ என்றவுடன் பயந்து, அவர்கள் ‘அப்நார்மலாக’ ஆகிவிடுகிறார்கள்! உடனே ‘சிசேரியன் செய்ய வேண்டும்’ என்று சொல்லி தப்பித்துவிடுகிறர்கள். அவர்களைப் பொறுத்தவரை, வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்படுதான் ‘நார்மல்’!

    ஒரு பெண், குழந்தை உண்டாவது சந்தோஷமான இயற்கையான நிகழ்வுதானே? ஒரு நோய் வந்தால்தானே டாக்டரைப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், குழந்தை உண்டாவது ஆரோக்கியமான நிகழ்வுதானே? அதற்கு ஏன் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ஹீலர் உமர், ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள்! இந்த நியாயமான கேள்வி நமக்கு எப்போதாவது உரைத்திருக்கிறதா?
 
    இல்லை, குழந்தை வளர்ச்சிக்கான மருந்து மாத்திரைகள், ஊசிகள் கொடுப்பார்களல்லவா? அப்போதுதானே குழந்தை கொழுகொழுவென வளரும் என்று நாம் சொல்லலாம். ஆனால் நம் கொழுகொழு முன்னோர்களெல்லாம் கைனகாலஜிஸ்ட்டுகளின் தொடர்ந்த கவனிப்பில் உருவானவர்களா? கைனகாலஜிஸ்ட் சமுதாயம் உருவாவதற்கு முன்னர் உருவான குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவில்லையா? வள்ளுவன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்களெல்லாம் அப்படிப் பிறந்தவர்களா என்ன?

    குழந்தை உண்டாவது எப்படி இயற்கையானதோ, அதேபோல குழந்தை வளர்வதும், பிறப்பதும் இயற்கையானதுதான். இன்றைக்கு ஹீலர்களின் புண்ணியத்தால் நூற்றுக்கணக்கான நார்மல் டெலிவரிகள் நடந்தேறியுள்ளன. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட பல தாய்மார்கள் உருவாகியுள்ளனர். ‘அப்பா’ என்ற சமீபத்தைய திரைப்படத்தில்கூட இவ்விஷயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


    ஆனால் இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடந்துகொண்டுள்ளது. இதற்கு வேண்டிய தெளிவும் தைரியமும் இன்னும் நம்மிடம் வரவில்லை. குழந்தைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது, மறுபிறப்பைப் போன்றது என்று சொல்லி அச்சமூட்டவும், அச்சப்படவுமே நாம் விரும்புகிறோம். ஒனக்கென்ன, நீ ஆம்பள, ஈஸியா சொல்லிட்டுப் போயிடுவ, எங்களுக்கல்லவா அந்தக் கஷ்டம் தெரியும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் ‘நார்மல் டெலிவரி’, அதுவும் ‘ஹோம் டெலிவரி’ செய்துகொண்ட பெண்களிடம் பேசிப்பார்த்தால் உண்மை தெரியும். ஏனெனில், மருத்துவமனைகளில் உண்மை சொல்லப்படுவதே இல்லை. பணம் நிறைய பிடுங்குவதற்கான அச்சமூட்டும் செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன.

    எனக்குத் தெரிந்த ஹீலர் நண்பர் ஒருவரின் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தை வெளியில் வந்து பாதியில் நின்றுகொண்டிருந்தபோது அந்தத் தாய்க்கு மயக்கம் வந்து நினைவிழந்தார். என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். ஒன்றுமே செய்யவில்லை, குழந்தையை வெளியே தள்ளும் அளவு அவருக்கு சக்தி இல்லாததால், அதுவரை அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தேவையான சக்தியைத் திரட்டிக் கொண்டிருந்தது அவரது உடல். ஒரு கால் மணி நேரம் கழித்து அவருக்கு மீண்டும் நினைவு வந்தது. பிறகு குழந்தையும் நல்லபடியாகப் பிறந்தது என்று வெகு சாதாரணமாகக் கூறினார்.

    அதே சூழ்நிலை மருத்துவமனையில் ஏற்பட்டிருந்தால் பிரச்னை பெரிதாக்கப்பட்டு, வாழ்வா சாவா என்று சொல்லப்பட்டு, ரொம்பக் கஷ்டப்பட்டுக் காப்பாத்தினோம் என்று சொல்லி நிறைய பணம் பிடுங்கப்பட்டிருக்கும். இயற்கையான விஷயங்களுக்கு இயற்கையே பொறுப்பேற்றுக் கொள்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டி உள்ளது. எனினும், இக்காலத்தில் ‘நார்மல் டெலிவரி’ செய்ய விரும்பும் பெண்கள் மிக அரிதாகவே இருக்கின்றனர்.

    ‘கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒரு எம்.டி. டாக்டர் என்னிடம் பேசினார். அவர் ஒரு பணக்கார தனியார் மருத்துவமனையில் படித்து எம்.டி. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு அனுபவமும் கிடையாது. ஒரு பணக்காரப் பெண், அவர் வேலை பார்த்த பெரிய மருத்துவமனைக்கு வந்து கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் செய்து அனுப்பியிருக்கிறார். ஆனால், சில வாரங்கள் கழித்து, உதிரப்போக்கு அதிகமாக இருக்கிறது, வயிற்று வலியும் உள்ளது என்று அவர் திரும்பி வந்திருக்கிறார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது கர்ப்பப் பைக்குள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது தெரிய வந்தது. சரியாக ‘அபார்ஷன்’ செய்யப்படவில்லை.

    ‘இது நடப்பதுதான் என்று சொல்லி, செய்ய வேண்டியதைச் செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்தப் புது எம்.டி. மருத்துவர், அந்தப் பெண்ணுக்கு ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் நிறைய கொடுத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்! மேலும் மேலும் ஆன்ட்டிபயாடிக்ஸ்!

    ‘கடைசியில் ‘செப்டிக்’ ஆகி, ஜுரம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு எல்லாம் அபாயகரமான நிலைக்குச் சென்றுவிட்டது. கர்ப்பப்பையை நீக்கிவிட வேண்டும் என்ற நிலை வந்த பிறகுதான், அந்த எம்.டி.யிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

    ‘கொஞ்சம் முன்னாடியே என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு, ‘இப்போதுதான் சொல்கிறேனல்லவா?’ என்று பதில் வந்தது! அனுபவம் இல்லை என்பதோடு, திமிரும் சேர்ந்துகொண்டிருந்தது.

    நாங்களெல்லாம் ஒரு பிரச்னை வந்தால் உடனே எங்களது சீனியர்களை கலந்து ஆலோசிப்போம். இப்போதெல்லாம் சீனியாரிட்டிக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது’ என்று தன் அனுபவத்தை விவரிக்கிறார் ஒரு பெரு நகர மகப்பேறு மருத்துவர்.

சுமந்தா முகர்ஜிக்கு நடந்தது என்ன?

    அவர் பெயர் சுமந்தா முகர்ஜி. இருபது வயது இளைஞர். எலக்ரிகல் இன்ஜினீயரிங் மாணவர். தன் ‘பைக்’கில் ட்யூஷன் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கொல்கத்தா நகரப் பேருந்து ஒன்று இடித்துக் காயமடைந்தார். அங்கு நின்றுகொண்டிருந்த சில மனிதநேயமுள்ள மக்கள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 65,000 ரூபாய்க்கு மெடிகல் பாலிஸியும் சுமந்தா வைத்திருந்தார். உணர்வோடு இருந்த அவர், அந்த பாலிஸியையும் எடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் காட்டியுள்ளார். சிகிச்சையைத் தொடங்கும்படியும், பணம் எப்படியும் கிடைத்துவிடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ஆரம்பகட்டமாக 15,000 ரூபாய் கொடுத்தால்தான் சிகிச்சை செய்யமுடியும் என்று மருத்துவமனை அதிகாரிகள் சொல்லினர். கூடச் சென்றவர்கள் சேர்ந்து 2000 ரூபாய் திரட்டிக் கொடுத்துள்ளனர். ஆனாலும், நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளாமல், கொடுத்துக் கொண்டிருந்த சிகிச்சையையும் நிறுத்தினர். வேறு வழியில்லாமல், சுமந்தாவை ஏழெட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துபோனார்.

    எமர்ஜென்ஸி ட்ரீட்மென்ட் கொடுக்க மறுத்த அந்த மருத்துவமனை மீது ‘நேஷனல் கன்ஸியூமர் டிஸ்பியூட்ஸ் ரெட்ரஸல் கமிஷன்’ மூலமாக சுமந்தாவின் தந்தை ஒரு வழக்கு தொடர்ந்தார். சுமந்தாவின் குடும்பத்துக்கு அந்த மருத்துவமனை பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

    எத்தனை லட்சம் வந்தாலும், சுமந்தாவின் உயிர் போனது போனதுதானே? எனினும், நஷ்ட ஈட்டிலிருந்து தப்பிப்பதற்காகவாவது இனிமேல் அந்த மாதிரி மருத்துவமனைகள் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளலாம்.

தேகமா வேகமா?

    இது நடந்தது மும்பையில். அங்கே ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மிக வேகமாக அறுவை சிகிச்சை செய்வதற்குப் பெயர் போனவர். மனித உடலை வேகவேகமாக அறுத்து, வேலையை முடிப்பதில் அவர் நிபுணர். வாயு வேகம், மனோ வேகம் மாதிரி அவருக்குக் கத்தி வேகம்.

    ஒரு நோயாளிக்குக் கிட்னியில் கல் இருந்தது. அதற்கான அறுவை சிகிச்சையை அவர் செய்யவேண்டி இருந்தது. தோலைக் கிழித்து உள்ளே சென்று கிட்னியில் இருந்த கல்லை நீக்கிவிட்டு, கத்தியை வெளியில் எடுத்து மீண்டும் தோலைத் தைப்பதற்கும் சேர்த்து பத்து நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அவர் சங்கல்பம் செய்துகொண்டார்! மனித உயிருக்கு செய்யப்படும் அவமரியாதைகளின் உச்சம் என்று அதைச் சொல்ல வேண்டும். யார் உடலை வைத்து யார் விளையாடுவது?

    ஆபரேஷனும் தொடங்கியது. விரைந்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கிட்னியோடு தொடர்புகொண்ட ஒரு முக்கியமான தமனியை அவர் அறுத்துவிட்டார். அது இல்லாமல் கிட்னி வேலை செய்யாதுபோலும். தப்பு செய்துவிட்டோமே என்று தெரிந்ததும், வேறு வழியின்றி கிட்னியில் இருந்த கல்லோடு சேர்த்து கிட்னியையும் அவர் நீக்கிவிட்டார்!

    அதுமட்டுமின்றி, தான் செய்த குற்றத்தை மறைத்து, அந்தக் கல்லினால் கிட்னி பாழாகி இருந்ததாகவும், கிட்னியை எடுத்திருக்காவிட்டால் நோயாளி இறந்திருப்பார் என்றும் அவரது உறவினர்களிடம் மனசாட்சியே இல்லாமல் பொய்களை அள்ளிவிட்டார். நோயாளியின் உயிரைக் காப்பாற்றியதற்காக நோயாளியின் உறவினர்கள் அவரை பெரிதும் பாராட்டினார்கள்!
 

    அமெரிக்கன் பீன்ஸ் அரை கிலோ வாங்கி வந்து, அதிலுள்ள விதைகளையெல்லாம் எடுத்துவிட்டு, சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொண்டு, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து காஸ் அடுப்பில் ‘சிம்’மில் வைத்து சூடு பண்ணி, மிக்ஸியில் போட்டுக் கூழ் மாதிரி அரைத்து, அது ஆறியவுடன் அப்படியே குடித்துவிட வேண்டும். முழுதும் குடிக்க முடியாவிட்டால் முடிந்த அளவு குடிக்கலாம். குடித்து முடித்த இரண்டு மணி நேரத்துக்குள் மூன்று லிட்டர் தண்ணீரை விட்டு விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் காலையில் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் டீ, காபி என்று வேறெதுவும் சாப்பிடக்கூடாது. மூன்று மணி நேரம் கழித்து, பசி எடுத்தால், வழக்கம்போல சாப்பிட்டுக்கொள்ளலாம். இந்த இடைவெளியில் சிறுநீர் வந்தால், அதை ஒரு கோப்பையில் பிடித்துப் பார்த்தால், அதில் சிறுநீரகக் கற்கள் வெளியில் வந்திருப்பது தெரியும். சிலருக்குக் கொஞ்சம் வலியோ சிறுநீர் வெளிவரும் பாதையில் சிறு புண்களோ ஏற்படலாம். ஆனால், இரண்டு நாள் கழித்து நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால், நிச்சயமாக எல்லா சிறுநீரகக் கற்களும் வெளியேற்றப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.
 
    இப்படியெல்லாம் எளிமையான வழிகள் இருக்கும்போது, பணத்தையும் கொடுத்து பிணமாக வேண்டிய அவசியம் நமக்கென்ன இருக்கிறது?

    தவறான அறுவை சிகிச்சைகள், வேண்டுமென்றே பணம் பிடுங்குதல், சிகிச்சை செய்யாததால் ஏற்பட்ட இறப்புகள் என மருத்துவ உலகம் செய்து கொண்டிருக்கும் எல்லா அயோக்கியத்தனங்களையும் ஆதாரத்துடன் அந்த நூல் எடுத்துக் காட்டியுள்ளது. மருத்துவ உலகின் மனசாட்சியாக செயல்பட்டுள்ளது அந்த நூல் என்றே சொல்லலாம். அதிலிருந்து கொஞ்சம் மட்டும் இதுவரை நாம் பார்த்தோம்.

    கிருமிகளால் நோய்களும் மரணமும் உண்டாகின்றன என்று மருத்துவ உலகம் கூப்பாடு போட்டுக்கொண்டுள்ளது. உண்மையான நோய்க் கிருமிகள் மேலே சொன்ன மாதிரியான மருத்துவமனைகளும், மருந்துகளும், அவற்றை சிபாரிசு செய்யும் மருத்துவர்களும்தான். நோயை உண்டாக்குவதாகச் சொல்லப்படும் கிருமிகள் உண்மையில் நோயை உண்டாக்குவதே இல்லை! கிருமிகள்தான் உண்மையில் நமது நோய்களை குணப்படுத்துகின்றன! கிருமிகளைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை.

    எப்படி என்று பார்க்கத்தானே போகிறோம்?


தொடரும்...



No comments:

Post a Comment