‘ஸ்டார்ட் மீசிக்!’ என்று கவுண்டமணி உற்சாகமாகப் பூமிதிக்குத் தயாராகும் காட்சி உலகத் தமிழர் அனைவரும் அறிந்த காமெடி. காந்தக் கண் அழகியின் சந்தனப்பூச்சுடன் பூமிதிக்குத் தயாராக நிற்கையில், நெருப்பு குண்டம் செக்கச்செவேல் எனத் தெரியும். ‘ஆ! நெருப்புடோவ்!’ என்று அலறியபடி ஓடுவார் கவுண்டர்.
நகைச்சுவை இருக்கட்டும். நெருப்பின் மீது நடப்பவர்களுக்கு ஏன் தீக்காயங்கள் ஏற்படுவது இல்லை? கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாக அம்மன் பண்டிகைகளில் பூமிதித் திருவிழாவில் நெருப்பின் மேல் நடப்பார்கள். சில ஊர்களில் கால்நடைகளும் இதைச் செய்யும். ‘பக்தியோடு செய்தால் தீக்காயம் ஆகாது’ என்பார்கள்.
ஒரு சிறு தீக்குச்சி நெருப்புப்பட்டாலே தோல் வெந்துவிடுகிறது. அது எப்படி 10 அடிகள் நடந்தும், அடுத்த நாள் இயல்பாக வேலைக்குச் செல்ல முடிகிறது? இதுபோலத்தான் அலகுகள் குத்தி தேர் இழுத்தல் போன்றவையும். மலேஷியா போன்ற நாடுகளில் சீனர்கள்கூட நாக்கில் வேல் குத்திக்கொண்டு, முதுகில் அலகு குத்தி தேர் இழுப்பதைப் பார்க்க முடிகிறது.
பக்தியினால் மட்டும்தான் சாத்தியமா இந்தச் செயல்கள்? ஆண்டனி ராப்பின்ஸ் எனும் சுய முன்னேற்ற ஆசான் அமெரிக்காவில் மிகப் பிரபலம். அவர் நிகழ்ச்சிகளில் தவறாது உள்ள அம்சம், தீமிதித் திருவிழா. முதல் நாள் இரவில் அமெரிக்க மேளங்கள் முழங்க, பயிற்சிக்கு வந்த அனைவரையும் நெருப்பின் மீது நடக்கவைப்பார். ‘அனைத்துப் பயங்களையும் வெல்லலாம். யார் வேண்டுமானாலும் எந்தச் செயற்கரிய செயலையும் செய்யலாம்’ என்பார். ‘நியூரோ லிங்க்யூஸ்டிக் புரோகிராமிங்’ மூலம் அனைவரையும் நெருப்பில் நடக்கவைப்பார்; உடைந்த கண்ணாடித் துண்டுகள் மீது நடக்கவைப்பார். காயங்கள் இல்லாமல் செய்து முடிக்கையில், பங்கேற்பாளர்கள் தன்னம்பிக்கை பெற்று, தங்கள் வாழ்வியல் பயங்களை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.
சரி, இதை அறிவியல் என்றால் அனைவரும் செய்ய வேண்டுமே... முடியுமா? முடியும், முடியாது என்பது ஒவ்வொருவர் மனம் சார்ந்த விஷயம். மனம், உடலை இந்த அளவுக்குப் பாதிக்குமா? அலோபதி மருத்துவர்கள், ‘இந்த வலி குறிப்பிட்ட காலத்தில் சரியாக வேண்டும். ஆனால், இது நோயாளிக்கு நோயாளி மாறுபடும். சிலர், உடனே குணமாவர். சிலருக்கு, நீண்ட காலம் பிடிக்கும்’ என்று சொல்வார்கள். இதற்கு, உளவியல் காரணங்களும் உண்டு. ‘இது மிகவும் வீரியமான மருந்து’ என்று சொல்லி, பாதுகாப்பான நீரை ஊசியில் செலுத்தும்போது, அதைப் பெருமருந்தாக ஏற்றுக்கொண்டு பலர் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு ‘பிளேஸ்போ எஃபெக்ட்’ (Placebo effect) என்று பெயர்.
‘பிளேஸ்போ எஃபெக்ட்’ (Placebo effect) பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட 👇முகவரிக்குச் செல்லுங்கள்.
https://reghahealthcare.blogspot.com/2016/02/placebo-effect.html
உடலுக்கு ரசாயன மருந்து அளிக்கப்படாமலேயே,
உடலில் மாற்றத்தை உணர முடிகிறது என்றால்,
அங்குதான் மனதின் மாய வேலையை உணர வேண்டும். எந்த
மருத்துவமும் இல்லாமல் ஒரு வியாதி சரியாவதை, ‘ஸ்பான்டேனியஸ் ரெமிசன்’ (Spontaneous remission)
என்று சொல்வார்கள். மனதின் பாதிப்புகள் பெரும்பாலான
நேரங்களில் உடல் உபாதைகள் மூலமாகத்தான் வெளிப்படும். பண்டைய மருத்துவமுறைகள் அனைத்தும் உடலையும் மனதையும் பிரித்து வைத்தியம்
பார்க்கவில்லை. இயற்கையின் ஓர் அங்கமாக நம் உயிர், அதன் வெளிப்பாடு உடலிலும் மனதிலும் எப்படி நிகழும்,
எந்த நோய்க்கு என்ன உடல்கூறு, என்ன மனப் பாதிப்பு என அறிந்து, முழுமையான ஆரோக்கியத்துக்கு வழிசெய்தார்கள். கிரேக்க
வைத்தியம் முதல், நம் சித்த மருத்துவம் வரை நோயாளி உடன் பேசி,
அவர் ஆளுமை மற்றும்
வாழ்க்கைமுறையை தெரிந்துகொள்ளுதல் அத்தியாவசியமாக இருந்தது.
சீனத்தில் முன்பு ஒரு வழக்கம் இருந்தது. குடும்ப டாக்டர் போல வீட்டுக்கு ஒருவர் இருப்பார். அவர் மருத்துவர், துறவி, ஆலோசகர், தற்காப்புக்கலை நிபுணர் எனப் பல்துறை வித்தகராக ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுபவராக இருப்பார். அவருக்கு, மாதாமாதம் கட்டணம் கட்ட வேண்டும். வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், அந்த மாதம் அவருக்கு கட்டணம் கட். எல்லோரும் நல்லா இருக்கத்தான் அவருக்கு ஃபீஸ். அதனால், அவர் கடமை ஆரோக்கியத்தைப் பேணுவது. நோயைக் குணப்படுத்துவது அல்ல. இரண்டும் ஒன்றுபோலத் தோன்றினாலும், எதிரெதிர் நிலைப்பாடுகள் கொண்டவை.
இந்த நூற்றாண்டில் எல்லா மருத்துவமும் உடல் நோக்கி நீள்கிறது. ஒரு பௌதீகப் பொருளாக உடலைக் கையாளும்போது, பல முக்கியத் தகவல்கள் விட்டுப்போக வாய்ப்பு உள்ளது. டாக்டர் ஏ.ஆர்.கே தன் 210-ம் நம்பர் நோயாளிக்கு எண்டோஸ்கோப்பி எடுக்கும் முன்னர், ‘அவர் ஆறு மாதம் முன் மனைவியை இழந்தவர்; வேலை பறிபோகும் சூழலில் உள்ளார்; அடிப்படையில் பதற்றமான ஆசாமி; வாழ்க்கையின் மாற்றங்களைச் சுலபமாக ஏற்காதவர்...’ போன்ற உளவியல் தகவல்கள், அவர் சிகிச்சைக்கு அவசியமானவை. இது அனைத்து உடல் நோய்களுக்கும் பொருந்தும். மனப் பாதிப்புகளால் ஏற்படும் உடல் பாதிப்புகளை இன்று, சைக்கோசொமாட்டிக் மெடிசின் (Psychosomatic Medicine) என வகைப்படுத்தி, அதில் அல்சர், மைக்ரேன், எக்சீமா என்று சிலதைச் சொல்கிறார்கள். ஆனால், எல்லா உடல் நோய்களிலும் சில உளக்காரணங்கள் உண்டு என்பதுதான் நிஜம். இதை 100 ஆண்டுகளுக்கு முன் உணர்த்தியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். அவரின் ‘அன்னா ஓ’ என்ற கேஸ் மிகப் பிரபலம். தன் குரு, ஜோசஃப் ப்ரூயர் சிகிச்சை அளித்துவந்த அன்னாவை, ஃப்ராய்ட் புரிந்துகொண்ட விதம்தான் உளப்பகுப்பாய்வியல் எனும் துறை தோன்ற வழிசெய்தது.
ஒவ்வொரு நோய்க்கும் ஓர் உளவியல் காரணம் உண்டு என்றால்,
அதைப் புரிந்துகொள்ளுதல்
எவ்வளவு அவசியம்?
மாரடைப்பு யாருக்கு வரும்; வயிற்றுப்புண்ணை வரவைக்கும் எண்ணங்கள் எவை;
புற்றுநோய் உள்ளவர்களை ஆராய்ந்தால் அவர்களுக்கு உள்ள பொது
அம்சங்கள் என்னென்ன; குடும்ப அமைப்பு நோயைப் பாதிக்குமா; இவற்றில் எவ்வளவு அறிவியல் உள்ளது என்றெல்லாம் விவாதிப்போமா?
மனம் ஒரு மர்ம தேசம். நம்பிக்கையும் நல்லெண்ணங்களும்
சுகத்தை அளிக்கவல்லன. உடைந்த உணர்வுகளும், உறவுகளும் நோய்களைத் தோற்றுவிப்பவை. மனம் மாறுகையில்
வாழ்க்கை மாறும். மனதை மாற்றும் மந்திரச்சாவி யாரிடம் உள்ளது?
சந்தேகமே வேண்டாம்.
நம்மிடம் மட்டும்தான் உள்ளது. மாற்றுவோம் வாருங்கள்!
வலிதான் கடவுள், மனிதனுக்குத் தந்த மிகப் பெரிய வரம். ஆனால், அதை அனுபவிப்பவர்கள் அனைவரும் அதை சாபமாகத்தான்
பார்க்கிறார்கள்.
ஏதோ ஒன்று உள்ளே சரி இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிதான்
வலி. முள் காலில் ஏறியதை வலி சொல்லாவிட்டால், காலையே இழக்க நேரிடலாம். மூளையில் கட்டி என்றாலும் தீராத
வலிதான் ஸ்கேன் எடுக்கவைக்கிறது. அது பல்வலியோ, பார்வைக் குறைபாடோ, எலும்பு முறிவோ எதுவானாலும் வலி உணர்த்தியதால்,
அதைப் பரிசோதிக்கிறோம்; அதன் தீவிரம் அறிகிறோம். உடலில் எங்காவது வலியை உணர
முடியவில்லையா அல்லது சுரணைக் குறைவாக இருக்கிறதா என்பதைத்தான் மருத்துவர்கள்
சுரண்டிப்பார்த்து, தட்டிப்பார்த்து பரிசோதிக்கிறார்கள். வலி என்ற ஒன்று இல்லாமல்
இருந்திருந்தால், நாம் காரணம் புரியாமலேயே நோய்க்கும் மரணத்துக்கும்
இரையாகியிருப்போம்.
வலிக்கிறதா? முதலில் உடலுக்கு நன்றி கூறுங்கள்... அதைப் படைத்த மகா
சக்திக்கு. இறைவனோ அல்லது இயற்கையோ எதற்கு நன்றி கூறுகிறீர்கள் என்பது உங்கள்
நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், நிச்சயம் நன்றி சொல்லுங்கள். வலி வந்தால்தான் வழி
பிறக்கும்.
கணவன்-மனைவி சண்டை என்றால், இருவரில் ஒருவராவது வலியில் அவதிப்படுவது இயல்பு. ‘பேசிப் பேசி தலைவலி வந்ததுதான் மிச்சம்’ என்பார்கள். பாஸுடன் மீட்டிங் முடிந்தவுடன்,
‘செம டென்ஷன்’ என்று தலையைப் பிடித்தவாறு காபிக்கும் சிகரெட்டுக்கும் ஓட
வைப்பதும் வலிதானே? நல்ல படம் என்று நம்பிப் போனால், அந்த ஆக்ஷன் ஹீரோ வில்லன்களை டார்ச்சர் செய்வதைவிட நம்மை
டார்ச்சர் செய்தால், தலை மட்டுமா வலிக்கும்? அடித்துப் போட்டதுபோல உடல் எல்லாம் வலிக்கும். பெரிய வேலை
வரும்போது, பதற்றத்தில்
தோள்பட்டை எல்லாம் முறுக்குக்கம்பியால் கட்டப்பட்டதைப் போன்ற வலியில் இறுக்கமாக
உணர்வீர்கள்.
அமெரிக்காவில் வாழ்ந்த ஓர் இத்தாலியக் குடியிருப்பில் மாரடைப்பே இல்லை என்று தெரியவந்தது. அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். உடல்கூறுகள், உணவுப்பழக்கங்கள், வேலைத்தன்மை என பலவற்றை ஆராய்ந்தார்கள். முடிவு என்ன? அதிகக் கொழுப்பான உணவுதான் உண்கிறார்கள், பெரிய உடற்பயிற்சி இல்லை என முடிவுகள் காட்டின. வியத்தகு காரணம் என்று எதுவுமே புலப்படவில்லை. பின் சமூக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் செய்த நீண்ட ஆய்வுகளில் உண்மை தெரியவந்தது. அவர்கள் கூட்டுக் குடும்பங்களாக வசிக்கின்றனர். தங்கள் மொழியிலேயே பேசுகின்றனர். வேலையின்போது பேச்சும் சிரிப்பும் நிச்சயம் இருக்கும். கூட்டு விருந்து உண்டு.
மால்கம் கிளாட்வெல் அழகாகச் சொல்கிறார், ‘இது அவர்கள் கலாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்திருக்கும்
வாழ்வியலால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.’ வலி வருவதற்கும், வளர்வதற்கும் விலகுவதற்கும், மனநிலை ஒரு மிகப் பெரிய காரணம். இதைக் கண்டுபிடிக்க இத்தாலியர்கள் வரை போவானேன்?
நம் வீட்டு நிலவரத்தைப் பேசினாலே நிஜம் வெளிவருமே!
ஓர் இரவு நேரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்,
ஞாயிறு என்று வைத்துக்கொள்வோமே. இல்லத்தரசி கேட்கிறார்,
‘என்ன சமைக்கிறதுன்னே தெரியலை.
போரடிக்குது. சோர்வா இருக்கு. என்ன பண்ணலாம் ராத்திரி சாப்பிடுறதுக்கு?’
அந்த நேரம் பார்த்து அழைப்பு மணி அடிக்கும். திறந்தால்,
ஊரில் இருந்து அம்மையாரின் உறவுகள். இப்போது,
இல்லத்தரசியிடமிருந்து ஓர் அபூர்வக் குதூகலமும் உற்சாகமும்
பீறிட்டுக் கிளம்பும். நல விசாரிப்புகள் முடிந்து, சாப்பாட்டு விஷயம் சுமுகமாக முடியும். இருந்தவற்றைக்கொண்டு
சுடச்சுட விருந்து உணவுத் தட்டுக்கு வரும். சிரிப்பும், குடும்ப வம்பும், அரட்டையுமாக நள்ளிரவு வரை பேச்சு நீளும்! ‘யாருக்கோ இங்கே உடம்பெல்லாம் வலின்னு சொன்னாங்களே’ எனக்
கேட்கத் தோன்றும். ஆனால், சம்சார சாகரத்தின் ஆழ அகலங்கள் நமக்குத் தெரியாதா என்ன! சொந்தம்
தரும் சுகமும் பாதுகாப்பும் மனநிறைவும் வலியைப் போக்கச்செய்யும் அல்லது மறக்கச்
செய்யும்.
வலி நிவாரணத்துக்கு ஆயிரம் மருந்துகள் உள்ளன. ஆனால்,
அவற்றில் சிறந்தவை அன்பு, கவனம், அரவணைப்பு மற்றும் நம்பிக்கைமொழி. வலியை சுகமாக மாற்றும்
வழிகள் இவைதான்!
வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலைவிட மனம்தான் பிரதான காரணம்
அல்லது சிக்கல் மனதில் தொடங்கி உடலில் முடிகிறது என்று சொல்லலாம். சிந்தனையால்,
ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ
வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம்கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்;
சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்;
வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை
இழக்கலாம்.
மன அளவிலான வியாதித் தடுப்பை ‘சைக்கோ இம்யூனிட்டி’ எனச் சொல்கின்றனர். மனைவியை இழந்தவர்கள் பலர் மிக விரைவில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பார்க்கிறோம். அதே நேரம் மிகவும் நோய்வாய்ப்பட்ட தாய், தன் பிள்ளைகளுக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடுவதையும் பார்க்கிறோம். உயிரைக் காக்க நினைப்பதும் துறக்க நினைப்பதும், நம் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல; வாழ்க்கையையே பாதிக்கும். ‘கில்லி’யிலும் ‘துப்பாக்கி’ படத்திலும், இளைய தளபதி க்ளைமாக்ஸில் கையை, காலை உதறி உயிர் பெற்று எதிரியைத் தாக்குவதும் இந்த சைக்கோ இம்யூனிட்டியால்தானோ!
‘எல்லா டெஸ்ட்டும் செய்தாகிவிட்டது. எல்லாம் நல்லா இருக்குன்னுதான் ரிசல்ட்
வருது. ஆனா, வலி கொஞ்சம்கூட குறையலை’ என்று யாராவது சொன்னால், அந்த வலிக்கு ஆதாரம் மனப்பிரச்னை எனப் புரிந்துகொள்ளுங்கள். பலர் டாக்டர் மேல் டாக்டர்களாகப் போய்ப் பார்ப்பார்கள்.
அவர்களாகவே, ‘ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா டாக்டர்?’ என்றும் கேட்பார்கள். வலி சரியாகவில்லை என்றால்,
வேறு டாக்டரைப் பார்க்கப் போவார்கள். இதை ‘டாக்டர் ஷாப்பிங்’ என்று சொல்வோம். எந்த டாக்டரிடமும் திருப்திப்பட
மாட்டார்கள். ‘அவர் சரியாகப் பார்க்கலை’ என்று
குற்றம் சொல்வார்கள். தங்கள் வலி யாராலும் சரிசெய்ய முடியாதது என்று பெருமைப்படும்
அளவுக்கு வலிப்பற்று கொண்டிருப்பார்கள். மருத்துவர்களும் அவரவர் இலாகாவான நரம்பு
மண்டலம், கண்,
பல் எனப் பார்த்து ஓய்ந்துபோய் ‘ஆக்சுவலி... யூ ஆர் ஆல்ரைட்!’ என்பார்கள். நம் ‘வலி’யவர்
அதற்குள் அடுத்த டாக்டரின் அட்ரஸ் விசாரித்துக்கொண்டிருப்பார்!
இன்னும் பலர் பல வலி நிவாரண மாத்திரை,
களிம்பு,
சொட்டு மருந்து,
வாசனைத்திரவியம் எனப்
புதுவிதப் போதைகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ‘ரெண்டு மாத்திரை போட்டுட்டு ஒரு மணி நேரம் படுத்தாத்தான்
சரியாகும்’ என எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த வலி நிவாரண மாத்திரைகள்
மருத்துவர் சிபாரிசில் ஒரு குறுகிய காலத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ள
வேண்டிவை என்ற உண்மையை மறைத்து, ஒரு மாபெரும் மருந்துச் சந்தை இயங்கி வருகிறது. இதனால்தான்
நாம் விரும்பும் கிரிக்கெட் வீரர் வலி நிவாரண மருந்துக்கு ‘பிராண்டு அம்பாசிடர்’ ஆகி நம்மையும் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.
மனம், வலியை வரவழைப்பதிலும் போக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. ‘அந்த குருஜி ஆசிரமத்துக்கு போய் ஒரு வார யோகப் பயிற்சி கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாயிடும்’ என்று எம்.எல்.எம் ரேஞ்சில் மார்க்கெட்டிங் பண்ணும் மாமி சொல்வதில் பொய் ஒன்றும் இருக்காது. ஒரு வாரப் பயிற்சியில் நிச்சயம் பெரும் மாற்றம் வரும். ஆனால் யோகக்கலை மட்டும் அதற்குக் காரணம் இல்லை.
ஒரு வாரம் வேலைக்கும் வீட்டுப் பொறுப்புகளுக்கும் விடுப்பு. எங்கும் அமைதி, சுத்தம்; அனைவரும் பெரும்பாலும் மௌனம்; பார்த்துக்கொண்டாலும் பரவசத்துடன் மந்திர வார்த்தைகள்தான் பிரயோகம்; ஒவ்வொரு வேளையும் சத்தான உணவு; தன்னைப் பற்றி நினைக்க நிம்மதியான இடம்; பிரத்யேக நேரம்; வலிகள் வலுவிழந்து சுகம் மேலிடும். ஆனால், எத்தனை நாட்களுக்கு? திரும்பி வந்தால், அதே வாழ்க்கை; அதே ஓட்டம்; பாஸ் கொடுமை; வாழ்க்கை இணையின் இம்சை; பிள்ளைகளின் நச்சரிப்புகள்; தொலைக்காட்சி இரைச்சல்கள் தொடரும் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். கற்ற யோகாவை செய்ய விருப்பம்தான், ஆனாலும் நேரம் இல்லை. வலிகள் மீண்டும் இன்னும் வலிமையாகத் தாக்கத் தொடங்கும்.
இது ஆசிரமப் பயிற்சிகள் மீது உள்ள குறை அல்ல;
நம் எதிர்பார்ப்புகள் செய்யும் பிழைகள். அதிரடி டயட்டில்
வயிற்றைக் குறைக்க நினைப்பதுபோல வாழ்நாள் வலிக்கு ஒரு வாரப் பயிற்சியை சிகிச்சையாக
நினைப்பது... எதையும் தொடர்ந்து செய்ய முடிந்தால் மட்டுமே மாற்றம் நிலைக்கும். நம்
அன்றாட வாழ்க்கையில் உள்ள வாழ்வியல் அம்சங்கள்தான் வலிக்குப் பிரதான காரணம்.
வலியின் செய்தி என்ன? ‘என்னைக் கவனி’ என்பதுதானே? கேட்பாரற்றுக்கிடப்பதுபோல நினைக்கையில்தான் வலிகள் பெருகும். ‘பெண்களில் வேலைக்குச் செல்பவர்களைக் காட்டிலும்,
வேலைக்குச்
செல்லாதவர்களுக்கே வலிகள் அதிகம்’ என
உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோலத்தான் பகலைவிட, இரவில் வலிகள் தீவிரமாகத் தோன்றும்!
சொற்களால் பேச முடியாத சந்தர்ப்பங்களில் நாம் வலிகளால்
பேசிக்கொள்கிறோம். அலெக்சிதைமியா (Alexithymia)
என்ற ஒரு நோயில் வலியால் அவதிப்படும் மனிதர்களால் தங்கள்
வாழ்க்கையின் எந்தப் பிரச்னையைப் பற்றியும் வெளியே பேச சிரமப்படுவார்கள். ‘எனக்கு
எந்த பிரச்னையும் இல்லை’ என்று சொல்வார்கள். மனசு சரியில்லை என்றால்,
‘தலைவலி’. வேலை செய்ய மனம் இல்லை
என்றால், ‘உடல் வலி’. இப்படித்தான் சொல்ல ஆரம்பிப்போம். வலிகள் மூலம் தொடர்புகொள்வோம்.
முதலில் பிரச்னைகளுக்குப் பிந்தி வரும் வலி, நாள் செல்லச் செல்ல பிரச்னைகளுக்கு முந்தி வரும்.
அன்பும் கவனமும் சலுகைகளும் போகும் அபாயத்தால்,
வலியை ஆழ்மனதில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள்
பலர். ‘நான்
நன்றாக இருக்கிறேன் என்று நினைத்துவிடாதே. எனக்கு தீராத வலி உள்ளது’ என்பது
உறவுகளுக்குச் சொல்லும் ஒரு முக்கிய செய்தி.
நன்றாக இருந்தால் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காத கணவன்,
மனைவி வலியில்
துடிப்பதைக் கண்டால் பூரண கவனத்துடனும் கரிசனத்துடனும் உரையாடுவான். கரிசனத்தையும்
அன்பையும் நேரத்தையும் அள்ளி வழங்குவான். வலிக்குத் தரும் மதிப்பை,
வலியில்லாத நேரத்தில்
அந்த மனிதருக்கு அளியுங்கள். ‘அன்பும் கவனமும் பெற இந்த வலிகள் அவசியம் இல்லை’ எனப்
புரியவையுங்கள். சொல்லாத பிரச்னைகளையும் வாய்விட்டுப் பேசக் கேளுங்கள். ‘எதையும் பேசித் தீர்க்கலாம்’ என்பதை நம்புங்கள்;
நம்பவையுங்கள். மனம்
சுகப்படும்போது உடலும் சுகப்படும்.
மாறுவது மனம். மனம் மாறும். உடல் மாறும். வலி தீரும். நம்புங்கள்... வலி தீருவதற்கு மனமாற்றம்தான் மாமருந்து!
“எவ்வளவு வலி தெரியுமா?’ எனக்
கேட்போம். ஆனால், வலியை அளக்க முடியாது என்பதுதான் உண்மை. ரத்த அழுத்தம்போல, உடல்
வெப்பம்போல துல்லியமாகச் சொல்ல முடியாத விஷயம் வலி.
‘உயிர் போற வலி’ என வலி தாங்காமல் கதறினால், அதிக
வலி என்று நம்புகிறோம். அதே வலிகொண்ட இன்னொருவர் கண்ணை மூடித் தாங்கியவாறு பல்லைக்
கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், அதை மிதமான வலியாகக் கருதுகிறோம்.
இங்கு வலியின் நிஜத்தன்மையைவிட, வலிதாங்கும் மனவலிமை, அவரின்
உணச்சிவசப்படும் தன்மை, மொழித்திறன், உடன் இருப்போருடன் உள்ள உறவுமுறை எனப் பல விஷயங்கள் உள்ளன.
இதனால்தான், வலியை அளவிடுவதில் பல சிக்கல்கள்!
யாரும் பார்க்காமல் இருக்கும்போது கீழே விழும் குழந்தை வலியைத் தாங்கி அழுகையை அடக்கிச் செல்லும். தாயோ அல்லது தாங்குபவரோ யாராவது இருந்தால், பெரிதாக அழுது கூச்சல் போடும். சிலர் வலிக்குது என்று ஒரு வார்த்தையில் சொல்வதை, ‘மண்டைக்குள்ள ஒரு சுத்தியைவெச்சுத் தட்டற மாதிரி அப்படி ஒரு வலி..!’ என்று தத்ரூபமாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். படம் பார்க்கும்போது தெரியாத வலி, இடைவேளையில் அதிகமாகத் தெரியும். விரும்பாதவர் வருகையில், சாதாரண வலி பூதாகரமாக வடிவெடுக்கும். வலியை அளப்பது கடினம். ஆனால், இந்த வலிதான் நமக்கு அடிப்படை உளவியல் தத்துவத்தை உணர்த்துகிறது.
ஒருவரின் வலியை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. ஒருவர்
துக்கத்தை மற்றொருவர் துக்கத்துடன் ஒப்பிட்டு ‘இது அதைவிட அதிகம்’ என்று கணிக்க
முடியாது. வாழ்வின் துயர்களை நம்மால் அளவிடவோ, ஒப்பிடவோ, வரையறுக்கவோ
முடியாது. எல்லாம் தனிநபர் அனுபவங்கள். எதையும் உண்மை, பொய் என்றோ குறைவு, அதிகம்
என்றோ மதிப்பிட முடியாது.
இதனால்தான் நம்மால் மற்றவர் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள
முடிவது இல்லை. 50 ஆயிரம் ரூபாய் வங்கிப் பணத்தை கையாடல்செய்த வங்கி ஊழியர், அவமானம்
தாங்காமல் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்துகொள்கிறார். பல லட்சம் கோடி ரூபாய்
ஊழலில் சிக்கிய அரசியல்வாதி நிதானம் இழக்காமல் தொலைக்காட்சியில் பேட்டி
கொடுக்கிறார். செய்த குற்றத்துக்கும் குற்ற உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா என்ன...
அல்லது குற்ற உணர்வும் அவமானமும் இந்த அளவுக்கு இருந்தால்தான் தற்கொலை செய்ய
வேண்டும் என்ற அளவீடு ஏதாவது உண்டா என்ன? மனிதத் துயரை மீட்டர் வைத்து அளக்க
முடியாது. அதனால், பிறர் செய்யும் பல விஷயங்கள் நமக்குப்
பைத்தியக்காரத்தனமாகத் தெரிகின்றன!
‘பாலுக்குச் சர்க்கரை இல்லை’ என்பதும் ‘கூழுக்கு உப்பு இல்லை’ என்பதும் சமமான பிரச்னையா என்று கேட்கலாம். அது யாருக்கு நேர்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம்.

வீடற்று சாலையில் உறங்கும் எண்ணற்ற மனிதர்களுக்கு வாகனங்கள் காலருகே சென்றாலும் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. ஆனால், தூக்க மாத்திரை இல்லாவிட்டால் தூங்க முடியாத பல பெரிய மனிதர்கள் ராட்சத சொகுசுப் படுக்கையில் புரண்டு புரண்டு தவிக்கிறார்கள். யார் பிரச்னை பெரிது என்று எவ்வளவு பட்டிமன்றம் வைத்தாலும் முடிவுகட்ட முடியாது.
நாம் நம் பிரச்னை மீதும் பிறர் பிரச்னை மீதும்
வைத்திருக்கும் எண்ணங்கள் யாவும் நம் அபிப்பிராயங்கள்தான். இவற்றில் உண்மை அறிய
முயற்சிப்பதைவிட ‘இவை எல்லாம் நம் மனதின் இப்போதைய செயல்பாடுகள்’ என்று புரிந்தாலே
தெளிவு பிறக்கும்.
ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் மெள்ள மெள்ள நிஜங்கள் ஆகும் அபாயங்கள் உண்டு.
ராணுவப் பயிற்சி பற்றி உரையாற்றிய மேஜர் சியாச்சினில் நம் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வீடியோ படத்தைக் காண்பித்தார். ஓர் ஆண்டு தீவிரப் பயிற்சிக்குப் பின், அவர்கள் அங்கே அனுப்பப்படுகின்றனர். மைனஸ் 25 டிகிரி குளிரில் சிறப்பு உடைகள் அணிந்து, பனிப்பாறைகள் மேல் நடந்து, இலக்குகளை அடைய வேண்டும். துப்பாக்கிகள் முதல் அடுப்பு வரை அனைத்தையும் சுமந்து செல்ல வேண்டும். பனிக்கட்டிகளை அடுப்பில் சூடேற்றினால்தான் குடிக்கவே தண்ணீர் கிடைக்கும். கையுறை கழன்று விழுந்துவிட்டால் கை விரைத்து, ரத்தம் உறையும். கையை வெட்டி எறிந்தால்தான் உயிர் பிழைக்க முடியும். மற்ற மனிதத் தொடர்பு என்றால், அது எதிரியாகத்தான் இருக்கும். இதற்குள் மூளை வெடித்து, சிகிச்சை இல்லாமல் இறக்கும் வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் வரை பத்திரப்படுத்த வேண்டும். குடும்பத்தில் யாராவது இறந்திருந்தாலும் அந்தச் செய்தி உடனே தெரிவிக்கப்பட மாட்டாது.
வாழ்வா, சாவா, நோவா
என்று தெரியாத வாழ்க்கையில் எத்தனை வலிகள்... எத்தனைத் துயர்கள்... இந்தத் தியாகங்களுக்காக அவர்களுக்கு என்று என்ன தனி
மரியாதையை நாம் கொடுக்கிறோம்? இறந்தால்தான் மாலையும் மதிப்பும் மரியாதையும். ஆனால், இத்தனை
இடர் நிறைந்த வாழ்விலும் சற்றும் நம்பிக்கை குறையாமல் போராடுகிறார்கள் என்றால்
அந்த மனவலிமை எப்படி வந்தது?
வயிற்று வலி, தேர்வில் தோல்வி, வீட்டில் சண்டை என்று தற்கொலை வரை
செல்வோருக்கு ஏன் இந்த மன வலிமை இல்லை... சின்ன விஷயத்துக்குச் சிதைந்து
போவோர்க்கும், மலைபோன்ற துயர் இருந்தும், நிலை
குலையாமல் இருப்போருக்கும் என்ன வேறுபாடு? எல்லாம்
மனம்தான்.
வாழ்க்கையில் வருவதற்கு ஒரு வாசல்; போவதற்கு பல வாசல்கள். வருவது நம் வசம் இல்லை. வாழ்வதும் வீழ்வதும் நம் வசமே. நம் மனம் மாறினால், வாழ்வு நம் வசமாகும்!
நாம் வாழும் உலகம் ஒன்றுதான். ஆனால், நாம் காணும் உலகங்கள் வேறு வேறு. ஒரு குடும்பம், தி.நகரின் அங்காடித் தெருவில் நடந்து செல்கிறது என வைத்துக்கொள்வோம். குடும்பத்தின் 70 வயதைக் கடந்த மூத்தவர் யோசிப்பார், ‘எப்படி மாறிப்போச்சு எல்லாம்... ஒரு காலத்தில் மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் நிற்பது இங்க இருந்து பார்த்தால் தெரியும். அந்த தி.நகரா இது?’
40-களில் உள்ள அவர் மகன் இப்படி யோசிப்பார்,
‘நகைக்கடைகளில் என்ன கூட்டம்?
தங்கம் விலை திரும்பவும் ஏறுது. மார்க்கெட் டவுண் ஆகுதுன்னா,
தங்கம் ஏறும். கச்சா எண்ணெய் விலையும் குறையுது.
அமெரிக்காவிலும் ரெசஷன் வரப்போறதா சொல்றாங்க... என்ன ஆகப்போகுதோ?’
‘பழைய ஃபேஷன் எல்லாம் திரும்ப வருது. வாணிஸ்ரீ போடற மாதிரி
நீள ரவிக்கை, ஹம்ப்
வச்ச ஹேர் ஸ்டைல், பாவாடை தாவணி... என்ன ஒண்ணு, புடவை எல்லாம் இப்ப பண்டிகைக்குக் கட்டற மாதிரி ஆகிடுச்சு.
சொன்னாலும் சல்வார்தான் செளகரியம்!’ அவர் மனைவியின் எண்ணம் இப்படி ஓடும்.
வேண்டாவெறுப்பாக வந்திருக்கும் மகளின் மனக்குரல் இது,
‘ஐயோ! இப்படிக் கூட்டத்துல
நடக்கவிட்டுட்டாங்களே. எல்லாத்தையும் ஆன்லைன்லயே வாங்கலாம். சொன்னா,
கேட்க மாட்டாங்க.’
தி.நகர் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பார்க்கிறார்கள். நாம்
கண்ணில்படுவதைப் பார்ப்பது இல்லை. பார்க்க நினைப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான், மற்றவர்கள் பார்ப்பதை நம்மால் பார்க்க முடிவது இல்லை.
இதைத்தான் ‘சப்ஜெக்ட்டிவ் ரியாலிட்டி’ என்று சொல்கிறோம். ‘அவரவர்
எதார்த்தம்’ என்று இதைச் சொல்லலாம்.
‘ஹிந்து’
பேப்பர் படிக்கும் பல மேல்தட்டு நகரவாசிகளுக்கு சாய்நாத்தைத் தெரியாது. ஒரு லட்சம்
விவசாயிகள் தற்கொலைகள் பற்றி தொடர்ந்து விரிவான கட்டுரைகளை நடுப்பக்கத்தில்
எழுதியவரை ஏன் தெரியவில்லை? காரணம், அவர்கள் பார்க்க மறுக்கும் நிஜங்களைச் சொல்பவராயிற்றே!
ஆழ்ந்து யோசித்தால், நம் எண்ணங்களும் உணர்வுகளும்தான் நம் பார்வைகளைத்
தீர்மானிக்கின்றன. நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நாம் பார்ப்பவை எல்லாம் குதூகலமாகத் தென்படும். நாம்
துவண்டு இருக்கும்போது, நாம் பார்ப்பதில் எல்லாம் இருள் மண்டிக்கிடக்கும்.
ஒரு சின்ன ஜோக்கைப் படித்துவிட்டு, விழுந்து விழுந்து சிரிக்கும் பிள்ளையைப் பார்த்துக் கேட்கிறார் அவன் அப்பா, “எதுக்கு இப்படிப் பைத்தியம் மாதிரி சிரிக்கிறே?” அவருக்குத் தெரியாத நகைச்சுவை அவனுக்குத் தெரியக் காரணம், நகைச்சுவை என்பதே வெளியே இல்லை; அவரவர் மனங்களில் உள்ளது. இதை கண்ணதாசன் ‘அவன்தான் மனிதன்’ படப் பாடல் மூலமாக, அழகாகச் சொல்கிறார்.
எல்லாமே நம் மனதில் தோன்றுபவை என்றால்,
சுற்றுப்புறம் நம்மை பாதிக்கவே செய்யாதா?
செய்யும். ஆனால், எவ்வளவு பாதிக்கும், எப்படிப் பாதிக்கும் என்பதை உள்மனம்தான் முடிவு செய்யும்.
மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்து, பிறர் உதவி இன்றி வாழ்க்கையில் போராடி வென்ற இருவர்
இருவிதமான கற்பிதங்களைக் கொள்ளலாம்.
“பிறர் உதவி இன்றி நான் கஷ்டப்பட்டது போல யாரும் படக்
கூடாது. அதனால், எல்லோருக்கும் உதவ வேண்டும்!”
“எதுக்கு உதவி? நான் எப்படி சொந்த முயற்சியில் மேலே வந்தேனோ அதுபோல போராடி
வரட்டும்!”
ஒரே சூழ்நிலை, வேறு வேறான கற்பிதங்களை உருவாக்கும். இதனால்தான் ஒரே கல்வி
எல்லோரிடமும் ஒரேவிதமான கற்பிதங்களை ஏற்படுத்த முடிவது இல்லை.
‘புகைபிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு’ எனும் செய்தி தெரிந்தும் புகைப்பவர்கள் புகைப்பது எதனால்? புகைப்பவரிடம் கேளுங்கள். அழகாகக் காரணம் சொல்வார்கள்.
“எங்க அத்தை 45 வயசுல புற்றுநோயால் இறந்துட்டாங்க. அவங்க
என்ன சிகரெட்டா பிடிச்சாங்க? எங்க தாத்தா 90 வயசு வரைக்கும் இருந்தார். அவருக்கு இல்லாத
பழக்கம் இல்லை. நோய் வரும்னா எப்படி வேண்டும் என்றாலும் வரும். டாக்டருங்க
சொல்றாங்களே... அவங்களே ஸ்மோக் பண்றதில்லையா?”
இப்படி எவ்வளவு கேட்டிருக்கிறோம். எண்ணமும் செயலும்
தீவிரமாகிவிட்டால், அதற்கு ஏதுவான காரணங்களை மனம் தயாரித்துக்கொள்ளும்.
காரணங்களை வெளியில் தேடாமல் உள்ளே தேடுவோம். மனதின் சூட்சும செயல்பாடுகள் அறிவோம்.
நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்பவை நம் எண்ணங்கள்.
ஆரோக்கியம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி, நிறைவு எல்லாம் மனம் செய்யும் விளைவுகள். மனம் மாறினால்,
நம் வாழ்வு மாறிடும்!
ஒரு பெரும் விருட்சத்தின் மூலம், சிறு விதை. நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துக்கும் ஏதோ ஓர்
எண்ணம்தான் காரணமாக இருக்கும். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும்
ஆராய்ந்தால், சில அடிப்படை எண்ணங்கள்தான் அனைத்தையும்
தீர்மானித்திருக்கும். நம்
எண்ணங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமான உண்மைகளாக இருக்காது. பல விஷயங்கள்,
அபிப்பிராயங்களாகத்தான் இருக்கும். ஆனால்,
அவை நம் வாழ்க்கையையே புரட்டிப்போடுபவையாக இருக்கும்.
“15 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஃப்ளாட்டை யாராவது 20 லட்ச ரூபா கொடுத்து
வாங்குவாங்களானு கோட்டூர்புரம் ஃப்ளாட்டை வேண்டாம்னு சொன்னேன்,
இப்போ, கேளம்பாக்கத்துக்கு போய் 70 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குற
மாதிரி ஆகிருச்சு.”
“டெல்லிப் பொண்ணுதான் முதல்ல வந்த வரன். மாடர்ன் டிரஸ்
போட்டோவைப் பாத்தவுடனேயே நம்ம குடும்பத்துக்கு சரிப்படாதுன்னு நிராகரிச்சேன்.
கல்லிடைக்குறிச்சி பொண்ணு, தெரிஞ்ச இடம்னு நம்பிக்கையா முடிச்சோம். டைவர்ஸ்ல
முடியும்னு யாரு கண்டா?”
வாழ்க்கை நம் விருப்பத்துக்கு எதிராகச் செல்வதாக நாம்
நினைக்கிறோம். ஆனால், அதற்குக் காரணம் காலாவதியாகிவிட்ட நம் அபிப்பிராயங்களும்
எண்ணங்களும்தான். 50 ஆண்டுகளாக 500
பேருக்கு மேல் வேலை செய்தும், 100 கோடி ரூபாயைத் தொடாத நிறுவனங்களுக்கு மத்தியில்,
ஐந்து வருடத்துக்குள் 50 பேருக்கும் குறைவான பணியாளர்களுடன்
5,000 கோடி ரூபாயை ஈட்டும் நிறுவனங்கள் உருவாகும் என யாராவது நினைத்துப்
பார்த்திருப்பார்களா? இரும்பை உருக்கிச் சம்பாதிக்க முடியாததை, இன்று பேருந்துக் கட்டணப் பதிவுசெய்யும் நிறுவனமும் வாடகை
கார் பதிவு நிறுவனமும் சம்பாதிக்கின்றன.

முன்பு மேனேஜராக 40 வயதைக் கடந்திருக்க வேண்டும். இன்று, பலர் 40-ல் ஓய்வுபெறுவதை லட்சியமாகச் சொல்கிறார்கள். 30 வயதில் எம்.டி, சி.ஈ.ஓ என ஆகிறார்கள். இப்படிப் பல நம்பிக்கைகள் நாம் வாழும் காலத்திலேயே நீர்த்துப்போவதைப் பார்க்கிறோம். இருந்தும் பல அபிப்பிராயங்களைவிடாமல் பிடித்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி இறுகிப்போன எண்ணங்கள்தான் பல ஏமாற்றங்களுக்குக் காரணம். அபிப்பிராயங்கள் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? இருக்கலாம். ஆனால், அவற்றை அடிக்கடி சோதனை செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நாம் பார்க்கும் வேலையும் நம் சூழலும் பல எண்ணங்களை உறுதிப்படுத்தும். அது இயல்புதான். போலீஸ்காரர்கள் எதையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். எங்களைப் போன்ற சைக்காலஜிஸ்ட்டுகள் ‘இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்றால்..?’ என்று ஆரம்பிப்பார்கள். விஞ்ஞானிகளும் நீதிபதிகளும் எல்லாவற்றுக்கும் சாட்சிகள் கேட்பார்கள். குவாலிட்டி ஆசாமிகள் சுலபமாகத் தவறுகள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், இவை நம் எண்ணங்களை முழுவதுமாக மாற்றிவிடாது. அடிப்படை எண்ணங்கள் நம்முடையவைதான். அதனால்தான் ஒரே தொழிலில் உள்ள இருவர் இரு வேறு சிந்தனைகளுடன் செயல்பட முடிகிறது.
நாம் தொடந்து சிந்திக்கும் எண்ணங்கள்தான் ஒரு கதைபோல
ஆழ்மனதில் பதிகிறது. இதை, ‘டிரான்சாக்ஷனல் அனாலிசிஸ் ஸ்க்ரிப்ட் (Transactional Analysis Script)’
என்பார்கள். இந்த ஸ்க்ரிப்ட்தான் நம் வாழ்க்கையை வழி
நடத்திச்செல்கிறது. இந்த உள் மனக் கதை ஓட்டத்துக்கு ஏற்றபடி நம் எண்ணங்கள்,
உணர்வுகள்,
செயல்கள் அனைத்தும் இயங்க
ஆரம்பிக்கும்.
என் நண்பர் ஒருவருக்கு எங்கு வேலைக்குச் சென்றாலும்
முதலாளியிடம் மோசமான உறவு இருக்கும். அவர் ஸ்கிரிப்ட் அப்படி. முதலாளிகளிடம்
கோளாறு இல்லை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் புது வேலைக்குச் செல்லும்போது,
‘இங்கு முதலாளியுடன் எந்த பிரச்னையும்
கூடாது!’ எனச் சபதம் எடுத்துக்கொண்டுதான் செல்வார். இவர் எடுக்கும் எதிர்மறை
சபதமே, அவர் ஸ்க்ரிப்ட்டின் எதிரொலிதான். எது நடக்கக் கூடாது என்று நினைத்துப்போகிறோமோ அது
நிச்சயம் நடக்கும். அதுதான் கவர்ச்சி விதி.
ஆசையோடு திருமணம் செய்வதற்கும், விவாகரத்து ஆகக் கூடாது என்ற நினைப்போடு செய்யும்
திருமணத்துக்கும் வேறுபாடு உள்ளது அல்லவா? இதை கிரிக்கெட்டில் அடிக்கடி பார்ப்போம். ஜெயிக்க வேண்டிய
மேட்சை ‘தோற்கக் கூடாது’ என்ற எண்ணத்துடன் மிக ஜாக்கிரதையாக விளையாடித்
தோற்போம். எண்ணங்களின் வலிமை அறிய பல ஆய்வுகளை நடத்தி உள்ளனர் உளவியலாளர்கள்.
விளையாட்டு உளவியலில் ‘காக்னிடிவ் சைக்காலஜி’ எனப்படும் சிந்தனை சார்ந்த
உளவியலை அதிகம் பயன்படுத்துவார்கள்.
களம் இறங்கி பேட்ஸ்மேன் சந்திக்கும் முதல் பந்து. சென்ற
பந்தில் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் அபாயகரமாக ஓடிவருகிறார். அயல்நாட்டு
பார்வையாளர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாக, ஆரவாரமாகக் கூச்சலிடுகிறார்கள். பின்னால்,
கெட்ட வார்த்தை சொல்லி விக்கெட் கீப்பர் ஸ்லெட்ஜிங்
செய்கிறான். எதிரில் மட்டை பிடித்துள்ள தோழன் ‘இந்த ஓவர் மட்டும் பார்த்து ஆடு!’
என எச்சரித்து இருக்கிறான். பந்து சீறி வருகிறது முகத்துக்கு நேரே... சொல்லுங்கள்
என்ன நடக்கும்?
இவை எல்லாமும் வெளிப்புற உண்மைகள். ஆட்டக்காரனின் உள் மன
உரையாடல்தான் அவன் அவுட் ஆகப்போகிறானா அல்லது சிக்ஸர் அடிக்கப்போகிறானா எனத்
தீர்மானிக்கும். இப்படித்தான், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எண்ணங்கள் செயல்களைத்
தீர்மானிக்கின்றன.
மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்பே, மனம் மாறினால் வாழ்க்கை மாறும் என்பதுதான். மெய்ஞானம் முதல் விஞ்ஞானம் வரை கண்டு சொன்ன உண்மை. மனம்
மாறுமா? மாற்றித்தான்
பார்ப்போமே... வாருங்கள்!
நம் கவலைகள் பலவற்றுக்கு யாரையாவது காரணம் சொல்வோம். ‘அந்த ஒருவரால்,
அல்லது சிலரால்தான் எல்லா
பிரச்னையும்’ என்போம். ‘அவர்கள்
மாறினால் எல்லாம் சரியாகும்’ என்று சத்தியம் செய்வோம். பிறர் மாற எல்லா
முயற்சிகளையும் எடுக்கிறோம்.
என் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பலர் தவறாமல் கேட்கும் கேள்வி, ‘இதை எல்லாம் முதலில் எங்க பாஸுக்குச் சொல்லித்தர முடியுமா’, ‘இதைவைத்து என் மனைவியின் குணத்தை மாற்ற முடியுமா?’, ‘என் குழந்தைகள் இதை எல்லாம் புரிஞ்சுப்பாங்களா? அவங்களுக்கு எப்படி புரியவைப்பது?’ நாம் எல்லாருமே பிறரை மாற்ற வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கடவுள் முதல் கடைக்காரர் வரை எல்லோரிடமும் இதைத்தான் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா உறவுப் பிரச்னைகளுக்கும் காரணம் நம் எதிர்பார்ப்புகள்தான்.
சென்ற வருடம் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது, தெரிந்தவர் ஒருவர் தொலைபேசியில் அவசரமாக அழைத்தார். ‘பொண்ணுக்கு மார்க் குறைஞ்சுபோய் வீட்டில் ஒரே ரகளை. கையை வெட்டிக்கிட்டு, ஆஸ்பத்திரியில சேர்த்து, இப்பத்தான் டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்குப் போயிட்டிருக்கோம். உங்களை உடனே பார்க்கணும்’ என்று மூச்சிரைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் குடும்பமே வந்தது. ப்ளஸ் டூ எழுதிய பெண் துள்ளிக்கொண்டு வந்தாள். பின் வந்த அம்மா கையில் கட்டு. மகள் மதிப்பெண் குறைவாக வாங்கியதில் மானம் போய்விட்டதாம். கையை அறுத்துக்கொண்டது மகள் அல்ல தாய்.
இதையும் மிஞ்சிவிட்டார் இன்னொரு தந்தை. ‘அவளுக்கு நீங்க டீம் ஒர்க், மோட்டிவேஷன், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் எல்லாம் சொல்லித்தரணும். அக்காடமிக்ஸ் தவிர, நாலு கிளாஸ் போறா. ஆனா, இன்னமும் அவளை காம்ப்பிடேட்டிவாக நான் எதிர்பார்க்கிறேன்...’ என்று அடுக்கியவரிடம், ‘பெண்ணுக்கு என்ன வயது?’ என்று கேட்டேன். ‘எட்டு’ என்றார்.
தற்கொலைகள் முதல் ஆணவக் கொலைகள் வரை அனைத்துக்கும்
எதிர்பார்ப்புகள்தான் காரணம். துருப்பிடித்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டுதான்
இத்தனை சேதாரங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஏன் இவ்வளவு தங்க நகைகள் போட்டு,
சக்திக்கு மீறிய ஆடம்பரத் திருமணங்கள் செய்கிறோம்?
‘இவை ஊராரின் எதிர்பார்ப்புகள்’ எனச்
சொல்வோம். ஆனால், இவை நம் எதிர்பார்ப்புகளே. படிப்பு,
வேலை,
கல்யாணம்,
குடும்பம் பற்றிய எல்லா
எதிர்பார்ப்புகளும் நம்முடையவை. பிறர் பாதிப்புகள் இருந்தாலும் இறுதி முடிவு
நம்முடையவைதான். எது நியாயமான
எதிர்பார்ப்பு, எது
அதீதமான அல்லது தவறான எதிர்பார்ப்பு என்பதை நிர்ணயம் செய்வதில்தான் சிக்கல்
உள்ளது. அதனால்தான், பிறர் எதிர்பார்ப்புகள் மிகையாகவும் நம் எதிர்பார்ப்புகள்
இயல்பாகவும் தெரிகின்றன. எவ்வளவு அன்பு இருந்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக
அதிகமாக அவை நிச்சயம் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.
பரஸ்பர எதிர்பார்ப்புகள் கணக்குப் பார்த்து,
பேரங்களைப் பேசச் செய்யும். ‘நான் இவ்வளவு செய்தேன்;
நீ என்ன செய்தாய்?’ என்று கேட்க வைக்கும். எல்லா ஏமாற்றங்களுக்கும் எதிராளியைக்
குற்றவாளியாக்கும். ‘எவ்வளவு செஞ்சு என்ன ஆச்சு? எல்லாம் என் தலை எழுத்து’ எனத் தன்னைத் தியாகியாக நினைத்து,
தத்துவம் பேசவைக்கும். மற்றவர்களிடம் இருந்து பெறுவதைக்
குறைத்து மதிப்பிடுவதும், அவர்கள் செய்யாததைப் பூதாகரமாகப் பார்ப்பதும்தான்
பிரச்னைகள். இப்படித்தான் நம்
எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு செய்திகளைத் தேடித் தேடிச்
சேகரித்து, ‘நம் நம்பிக்கைகள்தான் உலகளாவிய உண்மைகள்’ என வாதாடுவோம்.
ஒவ்வொரு சிக்கலான உறவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும், அதை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் எப்படி உணர்கிறீர்கள்
என்பதையும், அதேபோல
அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகிறீர்களா என்பதையும்
எழுதுங்கள்.
பிறகு, உங்கள் எதிர்பார்ப்புகளில் எத்தனை விஷயங்களைக்
குறைத்துக்கொள்ளலாம் எனப் பட்டியலிடுங்கள். அதேபோல, அவர்கள் நிறைவேற்றாமல் போகும்போது, அதை எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியும் என்று பாருங்கள்.
எதிர்பார்ப்புகளே இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா? என்று யோசியுங்கள். பிறந்த குழந்தையின் மேல் தாய்கொள்ளும் அன்பு அது. ‘நீ எப்படி இருந்தாலும் நான் தரும் அன்பு இதுதான். நான் உனக்குச் செய்வது இதைத்தான்’ என்ற நிலை அது. உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது, எதிராளியின் எதிர்பார்ப்பும் குறைந்துபோயிருக்கும். எதிராளியின் மனதை மாற்றும் சூட்சுமம் உங்கள் மனம் மாறுவதில்தான் உள்ளது!
நாம் உபயோகிக்கும் மொழி, பிறரின் மனநிலையை, உறவுகளை எப்படி எல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் எத்தனை தவறான அர்த்தங்களை
உற்பத்தி செய்கின்றன என நீங்கள் அறிவீர்களா?
‘உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது!’,
‘உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’,
‘இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு
எங்கேயாவது போய், பிச்சை எடுக்கலாம்!’, ‘என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே
பார்த்திருக்க மாட்டே!’, ‘ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது!’, ‘நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்;
எதுவும் நடக்கலை!’
இவை அனைத்தும் அதீத வாக்கியங்கள். ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்ல, அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தியோ குறைத்தோ சொல்கிறோம். இது, எதிராளியின் புரிதலைச் சிக்கலாக்குகிறது. எதிராளியையும் இப்படி ஓர் அதீத வாக்கியத்தைச் சொல்லவைக்கிறது. பின், ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு இருவரையும் தள்ளி, இடைவெளியைப் பெரிதாக்குகிறது. அது பேச்சுவார்த்தையைக்கூட நிறுத்தவைக்கும்.
உணர்ச்சிவசப்பட
வைப்பதுதான் மூளையின் எளிதான வேலை. அதுவும் பயம், கோபம் இரண்டையும் வரவழைப்பது அதற்கு மிகச் சுலபம்.
முதுகுத்தண்டின் மேல் பாகத்துடன் இணைந்துள்ள பகுதி, புராதன மிருக மூளை. மிருகத்தின் வேலை உயிர் காத்தல்,
உணவு சேகரித்தல் இரண்டும்தான். அதனால்,
போட்டியும் சண்டையும் ஓட்டமும் அன்றாடத் தேவைகள். அதற்கு
ஏற்ற அமைப்புதான் பின் மூளையான மிருக மூளை. பரிணாம வளர்ச்சியில் மூளையின்
மடிப்புகள் வளர்ந்து, முன்னுக்குத் தள்ளி மிகச் சமீப காலமாக (சில பல்லாயிரம் ஆண்டுகளாக)
ஏற்பட்டதுதான் மனித மூளை. பகுத்தறிவு, தர்க்கம், பேசும் திறன், நகைச்சுவை, நிர்வாகம் என அனைத்தும் இந்த முன் மூளையில்தான்
இயக்கப்படுகின்றன.
பிரச்னை என்னவென்றால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உள்ள மிருக மூளையின் செயல்பாடுதான் முதலில் அனிச்சையாக வேலை செய்யும். அதனால்தான், உணர்ச்சிவசப்படுதல் முதலில் ஏற்படும். அது முற்றிலும் தணிந்த பிறகுதான், அறிவார்ந்த சிந்தனை சீராகச் செயல்பட ஆரம்பிக்கும்.
எத்தனை முறை நாமே ஒரு வாக்குவாதத்தில் தவறாகச் சொன்ன ஒரு
வார்த்தைக்காகப் பின்னர் வருந்தியிருக்கிறோம்? உணர்ச்சிகள் அதிகரிக்கும்போது,
தீவிரச் சொற்களை அதிகம்
உபயோகிப்போம். ஒவ்வோர் அதீத
வாக்கியத்தையும் அது சொல்ல நினைக்கிற செய்தியுடன் இணைத்துப் பார்த்தால்,
இந்தத் திரிபு நிலை புரியும்.
‘உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது.’ (உன் கருத்து வேறு;
என் கருத்து வேறு.)
‘உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’ (உன்னுடன் பேசி, உனக்குப் புரியவைப்பது சிரமமாக உள்ளது.)
‘இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதுக்கு எங்கேயாவது போய் பிச்சை
எடுக்கலாம்.’ (நான் என் வாழ்க்கையை வாழும் விதம் திருப்தியாக இல்லை.)
‘என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே
பாத்திருக்க மாட்டே.’ (ஒரு தகப்பனாக நான் வேதனை கொள்கிறேன்.)
‘ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது.’ (எனக்குத் தேவையான
மரியாதையை நீ சில நேரங்களில் அளிக்கத் தவறுகிறாய்.)
‘நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்;
எதுவும் நடக்கலை.’ (என் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.)
ஓர் அலுவல் மொழியில் சிந்திக்கவோ, பேசவோ முடியாதுதான். யோசித்துப்பாருங்கள். ஒருவர் உங்கள்
காலை, கனத்த
காலணிகொண்ட கடோத்கஜக் காலால் தவறி மிதித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். என்ன
வார்த்தைகள் வாயில் இருந்து வரும்? ‘யோவ்
அறிவில்லை? இப்படி
ஷூ காலை வெச்சு மிதிக்கிறியே. கண்ணு தெரியலை?’ என்று கேட்காவிட்டாலும் குறைந்தபட்சம் மனதுக்குள் ஒரு கெட்ட
வார்த்தையை உதிர்ப்போம்தானே. சிக்கலில் உள்ளபோது அதீத வார்த்தைகளை
உபயோகிக்காமல் இருப்பதுதான் நிஜமான அறிவு. இதனால், பல உணர்ச்சிகள் தவிர்க்கப்படும்;
பல உறவுகள்
பாதுகாக்கப்படும்.
சுலபமாகச் சொன்னால், உணர்ச்சி வசப்படுகையில் பேச்சைக் குறைப்பது நல்லது. ஒன்றைச்
சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ள மாதிரி சொல்லப்பாருங்கள்.
‘நான் எல்லாத்தையும் செஞ்சு பாத்துட்டேன். அவன் ஒரு
இன்ச்கூட நகரலை!’ என்ற வாக்கியத்தில் உள்ள மிகைகளைப் பாருங்கள். ஆரோன் பெக்
என்ற உளவியலாளர் இதை ‘மிகையாக்கம் மற்றும் குறைவாக்கம் (Maximizations
and Minimizations) ’ என்பார்.
குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளில் இந்த மிகைகள்,
உறவுகளைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
‘வார்த்தையில் என்ன இருக்கிறது?’ என நினைக்காதீர்கள். தகாத சொல்,
சேதாரம் விளைவிக்கும்.
சரியான சொல், சண்டையை முடிக்கும். அமங்கலச் சொற்களுக்கும் பலன் உண்டு. மந்திரச்
சொற்களுக்கும் பலன் உண்டு. மனம் தரும் சொற்கள் உங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல;
உங்கள் உறவுகளின்
வாழ்க்கையைக்கூட மாற்றக்கூடியவை!
நம் எண்ணங்கள் என்பவை உள்மன விவாதங்களே. ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும்
இந்த விவாதங்கள் பலமாக நடக்கும். இவையே நம் செயல்களுக்குக் காரணங்களையும் புதிய
அர்த்தங்களையும் கொடுக்கவல்லவை. நடக்கும் காரியத்தை எதிர்பார்ப்பதும்,
நடந்தவற்றில் இருந்து
பாடம் கற்பதும் இந்த எண்ணங்களை வைத்துத்தான்.
‘நான் காத்திருக்கும்போது மட்டும் எனக்கு பஸ் வராது’,
‘நான் சொன்னா யார் கேட்பா?’,
‘நம்ம ராசி, எல்லாமே ஏறுமாறாத்தான் அமையும்’... இப்படி,
நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பெண்ணுக்குக் கல்யாணம் எனப் பத்திரிகை கொடுக்க வருகிறார்
ஒருவர். ‘பையன் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டர்’ என்று சொல்கிறார். உடனே,
நம் மனம் விவாதத்தைத் தொடங்கிவிடும். ‘நான் வேலைக்குச்
சேர்ந்தப்ப, இவன்
ஜஸ்ட் டெம்பரரி கிளார்க். ஐஸ்ஹவுஸ் அருகே ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தான். இனி
இவனும் அமெரிக்கா போய் செட்டில் ஆயிடுவான். நாம மட்டும் இப்படியே இருக்கோம்.
எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். ஹூம்!’
இப்படி, ஒவ்வொரு நிகழ்வுக்கும் நமக்குள் ஒரு டயலாக் ஓடும். அந்த
எண்ண ஓட்டம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வின் சகல
முடிவுகளும் இருக்கும். குறிப்பாக, நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லாததும் இந்த
எண்ணங்களினால்தான். இந்த எண்ணங்களைத்
தொடர்ந்து கண்காணித்தல், உங்கள் மனநலத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும்.
வாழ்க்கையின் சந்தோஷத்துக்கு இரு காரணங்கள்தான் உள்ளன. உங்கள் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பது ஒன்று. அவற்றை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பது இரண்டு. இதில், மகிழ்ச்சியை நிர்ணயிப்பதற்கு முதல் காரணம் 10 சதவிகிதம். இரண்டாவது 90 சதவிகிதம்.
இல்லாததை நினைத்து மருகுவதைவிட கிடைத்ததை மகிழ்வோடு
ஏற்றுக்கொள்வதுதான் ஒரு முதிர்ந்த மனதின் வெளிப்பாடு. நமக்கு நம் வாழ்வில் இல்லாதது அனைத்தும் தெளிவாக,
வரிசையாகத் தெரியும். ‘நான் குள்ளம்’,
‘என் நிறம் சற்று கறுப்பு’,
‘எனக்கு ஆங்கிலம் வராது’,
‘என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை’,
‘என் வாழ்க்கைத்துணையால் நிம்மதி
இல்லை’, ‘என் வேலையில் உயர்வு இல்லை’, ‘என் பிள்ளைகள் மதிப்பது இல்லை’, ‘உடல் உபாதைகள் என்னைப் படுத்துகின்றன’,
‘என் வாழ்க்கை முழுத் தோல்வி’...
இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகிறோம். ஆனால்,
கிடைத்தவற்றுக்கு நன்றி சொன்னோமா...
அதனால் மகிழ்கிறோமா...
இன்றும் உயிரோடு வாழ்தலே மிகப்பெரிய கொடை என்று உணர்ந்து நன்றி சொன்னோமா?
கிடைத்ததை நினைக்காத மனம்,
இல்லாததை நேரம் தவறாமல்
நினைக்கும்.
உடலில் ஒரு பாகம் பழுதடையும்போது, அது சீராக இயங்கினாலே போதும் என ஒவ்வொரு விநாடியும் துடிக்கிறோம், இல்லையா? அது சரியான மறுநாளே, அதை மறந்துவிடுகிறோம். சரியாக இயங்கும் அங்கங்களுக்கு நன்றி செலுத்த மாட்டோம். ஆனால், அவை பழுதுபட்டால் அதன் மீது முழுக் கவனம் செலுத்துவோம். இதுதான் மனதின் செயல்பாடு.
மகன் படிக்கவில்லை என்றால், புலம்புவோம், வேண்டுவோம், பிரார்த்திப்போம், சண்டை போடுவோம். ஆனால், அவன் முதல் இடம் பிடித்தால், அந்தச் சந்தோஷம் சிறிது நேரம்தான். பின் மனம் அடுத்த கவலையை
நோக்கி நகர்ந்துவிடும். ‘இவ்வளவு மார்க் வாங்கியிருந்தாலும் ஸீட் கிடைக்கணுமே?’,
‘வெளியூர் காலேஜ்னா சாப்பாடு
கஷ்டம்!’... இப்போது புரிகிறதா, நம் நிஜமான எதிரி எது என்று? புறக் காரணங்களைத் தேடித்தேடிக் குற்றம் சொல்வோர் ஒன்றை
மறந்துவிடுகின்றனர். புறக் காரணங்களை பரிசீலனை செய்யும் எண்ணங்களும் அது எடுக்கும்
முடிவுகளும்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.
‘எனக்கு ஓவியம் கற்றுக்கொடுக்க யாரும் இல்லை.
இருந்திருந்தால் நானும் ஓவியராகியிருப்பேன்’ என்று சொல்பவர்கள் உண்டு. கைகள்
இல்லாமல் காலால் ஓவியம் வரைபவர்கள் உண்டு. எது உந்து சக்தி என்று நீங்களே
முடிவு செய்துகொள்ளுங்கள்!
உங்கள் மனம் உள்ளே போடும் இரைச்சலால் நீங்கள் வெளியில் உள்ள
அமைதியை அனுபவிக்கத் தவறுகிறீர்கள். உங்களுக்குள் ஒலிக்கும் குரல்,
உங்களை அன்பாக நடத்தினால்
நீங்கள் பிறரை அன்பாக நடத்துவீர்கள். உங்கள் உள் மன எண்ணங்கள் நேர்மறையாக
இருந்தால் வாழ்க்கை நம்பிக்கையோடு நகரும்.
உங்களால் உங்கள் புற உலகை மாற்றுவது சாத்தியம் இல்லை;
உங்கள் அக உலகை மாற்றுவது சாத்தியம்;
அவசியம். உங்கள் அக உலகம் மாறினால், உங்கள் புற உலகம் தானாக மாறும்.
வன்முறை பெருகிவிட்டது. டி.வியில், பத்திரிகைகளில், அக்கம் பக்கத்தில் எங்கும் வன்முறை பற்றிய செய்திகள்தான்
நிரம்பி வழிகின்றன. கொலை, தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என எல்லா செய்திகளிலும்
வன்முறை தான் ஓங்கி நிற்கின்றன. அரசியல் செய்திகளில்கூட சொற்களால் கருத்துக்களால்
மோதல்கள்தான் வியாபித்து இருக்கின்றன.
வெளி உலகத்தை விட்டுத்தள்ளுங்கள். நம் பணியிடம்,
நம் குடும்பம், நம் சுற்றம் என்று எடுத்துக்கொண்டாலே இங்கு எத்தனை
ஆக்கிரமிப்பு, வன்முறை,
வலி, சேதாரம். உடல் சார்ந்த வன்முறையைவிட மனம் சார்ந்த வன்முறை
ஏராளம். குடும்ப உறவுகளில்தான் எத்தனை வன்முறை? உடலில் ஒரு கீறல் இல்லாமல் எத்தனை வலிகள் தருகிறோம்?
பெறுகிறோம்? எண்ணங்களும் சொற்களும் போதுமே! வன்முறைக்குக் கத்தியும்
துப்பாக்கியும் வேண்டுமா என்ன? சொற்களே போதும்.
“இத்தனை செஞ்சிருக்கேன்... என்ன செஞ்சீங்க எனக்குன்னு
கேக்கறான்?”, “அவன் உறவுக்காரங்களை முன்னாடி நிற்கவெச்சிட்டு மரியாதைக்குக்கூட நம்ம ஆட்களை
முன்னாடி வாங்கன்னு கூப்பிடலை!”, “வீட்டுக்குப் போனப்ப முகம் கொடுத்துக்கூட பேசலை” - இப்படி
நிராகரிப்புகள், ஓரவஞ்சனைகள்,
அவமானங்கள், அத்துமீறல்கள் என அனைத்தையும் ஆராய்ந்தால்,
யாரோ சிலரின் வன்முறை தெரியும்.
வன்முறைக்குப் பதில் என்ன? வன்முறைதான். “அதுக்கப்புறம் அவன்கூட பேசறதையே
நிறுத்திட்டேன்”, “நானும் நல்லா திருப்பிக் கொடுத்திட்டேன்”,
“அவளைப் பத்தி புட்டுப்புட்டு
வெச்சிட்டேன்!”, “என்ன ஆனாலும் இனி கிட்டக்கூட போக மாட்டேன்.”
‘பழிக்குப் பழி’ சினிமாவில்தான் உள்ளதா என்ன? நம் வீடுகளில் காணாத பழி உண்டா? ஆனால், அத்தனை மென்மையாக நாசூக்காகச் செய்கிறோம். எப்படிச் செய்தாலும் வன்முறை அருவருப்பானது... ஆபத்தானது. அது உடல் சார்ந்து இருந்தாலும் உள்ளம் சார்ந்து இருந்தாலும். வன்முறை கொண்ட மனம் தனக்குத் தெரிந்த ஆயுதத்தை எடுத்துக்கொள்கிறது. சிந்தனைக் கூர்மையும் சொல்திறனும் இல்லாதவன் ஓங்கி அறைகிறான். அவனுக்கு உடல் பலம்தான் ஆயுதம். புத்திசாலி அறிவால் செயல்படுகிறான்.
மொட்டைக்கடுதாசி, உள்குத்து அரசியல், போட்டுக்கொடுத்தல் எல்லாமே வன்முறைதான். நளினமான ஆங்கிலத்தில் வரும் அழகான மின்னஞ்சல்களில் இவற்றை நாம் அலுவல்களில் பார்த்ததது இல்லையா என்ன? ஒரு சொல்கூட சொல்லாமல் தீவிர வன்முறையை நிகழ்த்த முடியும். இன்றைய தகவல் சார்ந்த உலகில் ஒரு செய்தியைத் திரித்தும், மறைத்தும், காலம் தப்பியும் வெளியிடுவதிலும் வன்முறையை நிகழ்த்த முடியும்.
அடிப்படையில் வன்முறையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அமைதிகொள்ள இயலாத மனம்தான் வன்முறையை நம்புகிறது. அமைதி இல்லாதது மட்டும் இன்றி அன்பும் குறையும்போது, அங்கு ஒரு பற்றாக்குறை உருவாகிறது. அலைபாயும் மனம் எதையாவது செய்து அமைதிகொள்ள நினைக்கிறது. கிளர்ச்சி அடைந்த மனம் வெளி உலகக் கிளர்ச்சியையும் கலகத்தையும் பெரிதுபடுத்திப் பார்க்கும். “என்கிட்டயே அப்படி நடந்தா நான் யார்னு காட்ட வேண்டாம்?” என்று அகந்தைகொள்ளும். பழிஉணர்ச்சி மூலம் கணக்கைச் சரிசெய்ய உளவியல் ஆட்டங்களில் ஈடுபடும். எண்ணத்தில் உள்ள குரோதமும் ஆக்கிரமிப்பு உணர்வும், சொல்லில் மற்றும் செயலில் வெளிப்படத் துவங்கும்.
பின், இது சங்கிலித்தொடராய் மனிதர்கள் இடையில்,
மக்கள் கூட்டங்கள் இடையில், தேசங்கள் இடையில் தொடரும். பின், இவை இறுகிப்போன எண்ணங்களாய் மாறும். இப்படி,
குடும்பப் பகையால், சாதிச் சண்டையால், தேசங்களுக்கிடையே நடந்த போரால் பாதிக்கப்பட்டு வன்முறைக்கு
இரையானவர்கள் எத்தனை எத்தனை பேர்?
வன்முறையின் விலை மிகமிக அதிகம். நம் வாழ்க்கையையே
விழுங்கும் அளவு கொடுமையானது. தூக்கத்தின் மதிப்பு உணர்ந்தவர்கள் தூக்கம் வராது
தவிப்பவர்கள்தான். அதேபோல அமைதியின் மதிப்பை உணர்ந்தவர்கள் அமைதியை
இழந்தவர்கள்தான். ஒரு முறை நீதிமன்றம், சிறைச்சாலை, மனநலக் காப்பகம், அநாதை ஆசிரமம், மருத்துவமனையால் பாதிக்கப்பட்டோரிடம் பேசிப்பாருங்கள்.
வன்முறையின் சேதாரங்கள் புரியும்.
வன்முறையைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
முதலில், வன்முறை என்பது வெளியில் இல்லை. அது நம் மனங்களில் உள்ளது
என்று புரிந்துகொள்ளுங்கள். வெளி
உலகு உங்களை என்றும் வன்முறைக்குத் தள்ளாது. நீங்கள்தான் அதை வடிகட்டிப்
பெற்றுக்கொள்கிறீர்கள் எனப் புரிந்துகொள்ளுங்கள். வன்முறை நிறைந்த படத்தையும்,
கதையையும்,
செய்திகளையும்,
சீரியல்களையும்
விரும்பிப் பார்க்கக் கட்டாயப்படுத்துவது யார்?
பின்னால் வந்து இடித்த கார் டிரைவர் மீது பேய் கோபம்
வருகிறது. அந்த காரை ஓட்டியது உங்கள் மகன் என்று தெரிந்தால்,
அந்தக் கோபம் மாயமாய் மறைகிறதே, எப்படி அது? மன்னித்தலும் மறத்தலும்தான் வன்முறையான மனதுக்கு
சிகிச்சைகள். உங்களையும் மன்னியுங்கள். பிறரையும் மன்னியுங்கள். எல்லோரும் தவறு
செய்யக்கூடியவர்கள். திருந்தக் கூடியவர்களும்கூட. உங்களைப் போலவே. அமைதிகொண்ட
மனதில் அன்பு சுரக்கும். அன்பு தவறுகளைப் பார்க்காது. உறவுகளைப் பார்க்கும்.
தன்னையும் பிறரையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பிறரையும் அன்பு வழிக்கு மாற்ற
முயற்சிக்கும்.
ஒரு புன்னகையும், அணைப்பும் சாதிக்காததை உங்கள் கடும் வார்த்தைகளும்
செயல்களும் சாதிக்காது. மன்னித்தலும் மறத்தலும்தான் மனதை மாற்றும் மாமருந்துகள்!
How to Download this Sir
ReplyDeleteAfter completing the series I will provide link to download. For that you have to wait for few days.
DeleteGood lesson
ReplyDeleteThank you
DeleteGood learning sir
ReplyDelete