மரபு மருத்துவம்: 08. இயற்கை தரும் அற்புத அழகு



வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கரும்புகையும், ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளும், ரசாயன நுண்துகள்களும் முகத்தின் இயற்கைப் பொலிவைப் பெருமளவில் குறைத்துவருவதால், முகத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஃபேஷியல் இந்தக் காலத்தில் தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது இயற்கை பூச்சுகளைக் கொண்டு செய்யப்படுவதா அல்லது செயற்கை கிரீம்களின் உதவியுடன் செய்யப்படுவதா என்பதுதான் கேள்வியே. 

செயற்கை ஃபேஷியல்

‘எங்கள் கிரீம்களில் பழச்சாறு நிரம்பி இருக்கிறது’ என்று செயற்கை கிரீம் நிறுவனங்களே விளம்பரப்படுத்துவதற்கு இயற்கையின் துணையை நாடும்போது, பயனாளிகளான நாம் இயற்கையை நேரடியாகத் தேர்வு செய்வதுதானே சிறந்தது. ‘இயற்கையான நிறத்தை மாற்றி, செயற்கை சிவப்பழகைத் தருவோம்’ என்று நடைமுறையில் சாத்தியமற்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அதே கிரீம்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி மூச்சே விடுவதில்லை. செயற்கைக் கலவைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும்போது தோல் சுருக்கம், நிற மாறுபாடு, கருந்திட்டுக்கள் போன்றவை உண்டாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிரீம்களில் இருக்கும் ரசாயனக் கலவைகளுக்கு, இயற்கை தந்த கொடையான நம் சருமத்தை எதற்காகப் பலி கொடுக்க வேண்டும்? இயற்கை முகப்பூச்சுகளை நாடுவோம்: 

பப்பாளி

செலவில்லா ஃபேஷியலைப் பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும். 

வெள்ளரி

வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். 

கற்றாழை

முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. வணிகச் சந்தையில் உலாவரும் ஆன்டி-ஏஜிங்’ கிரீம்களில் கற்றாழைக்கு இலவச அனுமதி உண்டு. முகச்சவரம் செய்து முடித்த பிறகு ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களுக்குப் பதிலாக, ‘தேங்காய் எண்ணெய் - கற்றாழைக் கலவையை’ (After shave mix) தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாகக் குணமடையும்; முகமும் பிரகாசமடையும்.

எண்ணெய்ப் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்துச் சிறுவர்களின் இயற்கை ஒப்பனைப் பொருள் குளுகுளு கற்றாழைதான்! 

சந்தனம்

சந்தனச் சாந்தை நெற்றியில் தடவும் (‘தொய்யில் எழுதுதல்’) வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது என்னும் செய்தியைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை மிஞ்ச, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் முடியாது. பாக்டீரியாவை அழிக்கும் தன்மையுடைய சந்தனத்தை நீருடன் கலந்து முகப்பருக்களில் தடவிவந்தால், விரைவில் குணம் கிடைக்கும். தோலுக்கு அடியில் உள்ள ரத்தத் தந்துகிகளில் செயல்புரிந்து தோலை மென்மையாக்குகிறது சந்தனம். 

தக்காளி


முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. விளம்பரங்களில் வரும் ஆறு வாரச் சிவப்பழகைத் தர முடியாவிட்டாலும், வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.

சத்தான உணவு

செயற்கை முகச்சாயங்களும் பியூட்டி பார்லர்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே கிளியோபட்ரா போன்ற பேரழகிகளை நமக்குப் பரிசளித்தது, இயற்கையின் கிளைகளான பழங்களும், காய்கறிகளும், உற்சாக வாழ்க்கை முறையுமே!

நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகுக் குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்துப் பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி. அத்துடன் செயற்கைப் பொருட்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வாழ்க்கையோடு இயற்கையை இணைத்துக்கொண்டு பொலிவோடு பயணிப்போம்! 

அழகூட்டும் இயற்கைப் பொருட்கள்

    • முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
    • சித்த மருந்தான திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, முகம் கழுவிவந்தால் கிருமிகள் அழியும்.
    • தேனீக்களின் கடின உழைப்பால் உருவான தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் செய்கையும் இனிப்பான தேனுக்கு உண்டு.
    • அவ்வப்போது தயிரைக் கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தீவிரம் குறையும்.
    • அரிசி மாவை முகத்தில் தடவ 'பளிச்’ வெண்மை முகத்துக்குக் கிடைக்கும். ஜப்பானியக் கலைஞர்கள் தங்கள் சருமத்தை மென்மையாக்க அரிசி மாவையே பயன்படுத்துகின்றனர்.
    • நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தை மசித்துப் பாலோடு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் வசீகரம் பெறும்.
    • அதேபோல, மற்றொரு சித்த மருந்தான சங்கு பற்பத்தைப் பன்னீரில் குழைத்து முகப்பருக்களின் மேல் தடவலாம்.

மரபு மருத்துவம்: 07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

 


வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல மனம் மட்டும் போதுமா? நறுமண உடலும் தேவை என்பது ‘கார்பரேட்’ கலாச்சாரத்தில் கட்டாயம்! எனவே வியர்வை நாற்றத்தைத் தடுக்க, தோலுக்கு மென்மையைக் கொடுக்க, உடல் அரிப்பைக் குறைக்க, பிஞ்சுக் குழந்தைகளுக்கு, வளர்ந்த குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித் தனி சோப்புக் கட்டிகள் இப்போது மிடுக்காக வணிகச் சந்தையில் வலம் வருகின்றன.

இது மட்டுமில்லாமல் சோப்புகளின் தூரத்து உறவினர்களான பாடி வாஷ், ஃபேஷ் வாஷ், பாடி லோஷன், மாய்ச்சரைஸர், கிளன்சர் போன்றவைக்கும் இப்போது இளைஞர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவற்றின் அதிரடி வருகைக்கு முன், நம்முடைய தோலுக்குப் பளபளப்பையும் வளத்தையும் தந்து, நறுமணம் மூலம் மனதுக்கு இதம் கொடுத்துவந்தவை மரபு மூலிகைக் கலவைகளே! எந்தவித ரசாயனத்தின் பங்களிப்பும் இன்றி அவற்றிலிருந்து மனதை அள்ளும் வாசனை உருவாவது இயற்கையின் சிறப்பு. 

தோல் நோய்களைத் தவிர்க்க…

குழந்தைகள் முதல் முதியோர்வரை தோல் நலத்தை மேம்படுத்துவதில் மூலிகைக் குளியல் பொடி வகைகள் நிச்சயமான பலனைத் தரக்கூடியவை. அக்காலத்தில் குழந்தைகளுக்குப் பயத்த மாவு, இளைஞர்களுக்குச் சந்தனத் தூளோடு ரோஜா, செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கலந்து உலர வைத்த குளியல் பொடி, பெண்களுக்கு மஞ்சள் பொடி, அனைவருக்கும் ‘நலங்கு மாவு’ கலவை என செயற்கைக் கலப்படம் இல்லாத குளியல் பொடி வகைகள் பரிந்துரைக்கப்பட்டன.

இன்றோ, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, சோப்பு வணிகத்தால் மூலிகைக் குளியல் பொடி வகைகளின் பயன்பாடு முடக்கப்பட்டுவிட்டது. முற்றிலும் மூலிகைப் பொடிகளை மறந்து, சோப்புக் கலாச்சாரத்துக்குப் பழகிப் போய்விட்டோம் நாம். இந்தப் பின்னணியில் அவ்வப்போது மூலிகைக் குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல விதமான தோல் நோய்களைத் தவிர்க்க முடிவதோடு, தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும். 

இயற்கையான ‘ஸ்கிரப்’ 

பழங்காலம் முதல் மக்களின் முதன்மைக் குளியல் கலவையாக ‘நலங்கு மா’ பயன்பட்டு வருகிறது. பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு ஆகிய மூலிகைகளின் தொகுப்பே நலங்கு மா. இவற்றைத் தனித்தனியே உலர்த்திப் பொடி செய்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

இதை நீரில் குழைத்துக் குளிப்பதால் நாள் முழுக்க மணம் கமழும் நறுமணம் உண்டாகும். தோலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். இதையே குளிக்கும்போது நீர் சேர்க்காமல், உலர்ந்த பொடியாகவே ஒரு முறை உடலில் தேய்த்து ‘ஸ்கிரப்’பாகப் பயன்படுத்த, மேனியில் அடைப்பட்ட துவாரங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, உடல் புத்துணர்ச்சி பெறும்.

நலங்கு மா கலவையைக் கொண்டு குளித்துவந்தால், தனியாகச் செயற்கை நறுமணப் பூச்சுக்கு அவசியம் இருக்காது. பெண்கள் பயன்படுத்தும்போது ‘நலங்கு மா’ கலவையில் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் தோன்றும் முடி வளர்ச்சி அகற்றப்படும். 

கிருமிநாசினி சந்தனம்

கிச்சிலிக் கிழங்கு, நல்ல வாசனையைத் தரக்கூடியது. தோலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. கோரைக் கிழங்குப் பொடி சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை நீக்கும். வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் குணமும் இதற்கு அதிகம். பாசிப்பயறு தூளை உடலில் தேய்த்துக் குளிக்க, உடல் குளிர்ச்சி அடையும். கார்போகரிசியைப் பால் விட்டு அரைத்து, தேய்த்துக் குளிக்க படர்தாமரை போன்ற தோல் நோய்களின் தீவிரம் குறையும். காளாஞ்சகப்படை (Psoriasis) எனும் தோல் நோய்க்கு, கார்போக அரிசியிலிருந்து செய்யப்படும் வெளிமருந்து பயன்படுகிறது.

தேமல், அரிப்பு போன்றவற்றை அழிக்கும் தன்மை சந்தனத் தூளுக்கு இருக்கிறது. கிருமிநாசினி (Anti-microbial) குணம் சந்தனத்துக்கு இருப்பதால், தோலில் உள்ள நுண்கிருமிகள் அனைத்தும் மடியும். உடலில் அதிகரித்த பித்தத்தை வெட்டிவேர் தணிக்கும். உடலில் தோன்றும் சிறு கொப்பளங்கள், கட்டிகளை வெட்டிவேர் குறைக்கும். வியர்க்குருவுக்கு வெட்டிவேர் பொடி சிறந்தது. மனம் மயக்கும் மணத்தைத் தரும் விலாமிச்சை வேரும் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. 

காயம் ஆற்றும் துவர்ப்பு

நலங்கு மா கலவையில், கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, உலர்ந்த ரோஜா இதழ்கள், வேப்பிலை, ஆவாரம்பூ, வெந்தயம், ஏலரிசி, அகிற்கட்டை ஆகியவற்றைத் தேவைக்கேற்பச் சேர்த்தும் பயன்படுத்தலாம். அகில், சந்தனச் சாந்தை சங்க கால மக்கள் குளியல் கலவையாகப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை ஈன்ற தாய்மார்களின் உடலமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகத் திரும்ப, கேரளத்தின் சில பகுதிகளில் குளியல் பொடி வகைகளை மட்டுமே உபயோகிக்கின்றனர்.

நெல்லிப் பொடி, கடுக்காய்ப் பொடி போன்ற துவர்ப்புப் பொருட்களை கிராம மக்கள் குளியலுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். துவர்ப்புச் சுவையுள்ள பொடி வகைகள், புண்களை விரைவில் குணப்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல். சித்த மருத்துவத்தில் உள்ள திரிபலா சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றையும் குளியல் பொடியாக மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காய் உணவாக மட்டும் இல்லாமல், குளிக்கும் நாராகவும் நெடுங்காலமாகப் பயன்பட்டு வருகிறது. முற்றி உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப் பகுதிக்குள் மூலிகைப் பொடி வகைகளை வைத்து, மேற்புறத்தில் தேய்த்துக் குளிக்க, தோல் பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, தோலும் பொலிவடையும்.

உடலுக்கு நன்மை தரும் எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளும்போது, எண்ணெய்ப் பசையை முழுமையாக நீக்க சோப்பைவிட, குளியல் பொடிகளே உதவும். ஆனால் சோப்புகளின் வருகைக்குப் பின்னர், எண்ணெய்க் குளியல் முறை வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம். மூலிகைக் கலவைகளைக் கொண்டு குளிப்பதால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஜவ்வாது மலைவாசிகள்.

சோப்புகளை மாற்றாதீர்

குழந்தைகளுக்குப் பல வித ‘பேபி சோப்’களைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்ளும் நாம் பாசிப் பயறு, கடலை மாவு, நலங்கு மாவு போன்றவற்றை மையாக அரைத்து நீரில் நன்றாகக் குழைத்துப் பயன்படுத்தினால், மூலிகை வாசனையோடு குழந்தையின் இயற்கை வாசமும் சேர்ந்து அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கும். பாசிப்பயறைத் தேங்காய்ப் பாலோடு சேர்த்து குழந்தைகளுக்கு லேசாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவதால் அவர்களின் தோல் பொலிவடையும். குழந்தைகளுக்கு அவ்வப்போது உண்டாகும் தோல் நோய்கள் தலை காட்டாது.

அடிக்கடி சோப்புக் கட்டிகளை மாற்றுவது பலரின் வழக்கம். இப்படி சோப்புகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், தோலின் சமநிலை பாதிப்படையும். அதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட மூலிகைக் கலவைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். ‘மண’ மாற்றத்தை உணர்வீர்கள்!

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! 

மரபு மருத்துவம்: 06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்



வாரத்துக்கு ரெண்டு தடவத் தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சுக் குளிங்க, பெரும்பாலான நோய்கள் அண்டாது என்று சொன்னால், பெரும்பாலானவர்கள், “தீபாவளிக்குத் தேய்ச்சு குளிக்கிறோமே, அதைத்தானே சொல்றீங்க என்று கேட்பார்கள். எண்ணெய் குளியல் என்றாலே, “அது தீபத் திருநாளன்று மட்டும் என்று மக்களின் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது.

ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லும் ‘சனி நீராடுஎன்றாலும் சரி, நமது பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளி என்றாலும் சரி, இரண்டும் தரும் பலன் ஒன்றுதான். உடல்நலனை உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்தவே அப்படிச் செய்யச் சொல்கிறார்கள். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வலியுறுத்தப்பட்டு, நம் முன்னோர்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.

ஆனால், குளிப்பதே பிரச்சினையாக உள்ள இன்றைக்கு எண்ணெய்க் குளியல் எல்லாம் எப்படி முடியும் என்று கேள்வி கேட்கிறோம். வேறு வழியில்லை, நவீன வாழ்க்கை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் எண்ணெய்க் குளியல் அவசியம். 

குளியல் முறை

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். அத்துடன், ‘எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்எனும் பிணியணுகா விதி பாடல், எண்ணெய் தேய்த்த நாளன்று குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ‘சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்என்ற சித்தர் தேரையரின் வரிகள், நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெயிட்டுத் தலை முழுக வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது. 

தீரும் நோய்கள்

சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம்.

செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும், மனதை அமைதிப்படுத்தும்.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை கம்மல், ரத்தக் குறைவு போன்ற நோய்கள் ஓட்டம் எடுக்கும்.

சளி, இருமல், பீனிசம் (சைனஸ்) போன்ற கப நோய்களைப் போக்கச் சுக்குத் தைலத்தால் தலை முழுகலாம்.

அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும்.

உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், குருதி ஓட்டம் சீரடையும், உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பல வாத நோய்கள் குணமடையும். நவீன மனிதர்கள் அதிகம் அவதிப்படும் மன அழுத்தம் குறையும். 

தவிர்க்க வேண்டியவை

எண்ணெய்க் குளியல் நாளன்று அசைவ உணவு வகைகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்து முழுகிய நாளன்று, உடல் சற்றுப் பலமிழந்து காணப்படுவது இயற்கையே. எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும்.

‘தலை உரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டாள்என்கிறது ஆசாரக்கோவை. அதாவது தலைக்குத் தேய்த்த எண்ணெயை உடலின் மற்றப் பகுதிகளில் தடவுவதால், தலையிலிருக்கும் அழுக்கு, உடலோடு ஒட்டி பல சரும நோய்களை உண்டாக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறது. அதனால் தலை, உடலுக்குத் தனித்தனியே எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாத திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டுமென்றால், எண்ணெயோடு நீர் அல்லது பசு நெய் சேர்த்துக் குளிக்கலாம். அதேபோலத் தினமும் நீராடும்போது, தலையையும் சேர்த்து முழுகாமல், கழுத்துக்குக் கீழ் மட்டும் குளிப்பது நிச்சயம் நல்லதல்ல! முழுமையாகக் குளிப்பதே குளியல். 

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?


 


விதவிதமான ‘டூத்-பிரஷ்களும், வண்ண வண்ண ‘டூத்-பேஸ்ட்களும்’ பயன்படுத்தப்பட்டாலும் இன்றைய தலைமுறைக்கு 30 வயதிலேயே பற்கள் ஆட்டம் காண்பதும், சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகள் பற்களில் குடியிருப்பதும், பல் கூச்சம் அதிகமாவதும் ஏன்?

பற்பசைகளும், பிரஷ்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே நம் முப்பாட்டன்களும் பாட்டிகளும் பற்களை நன்றாக பராமரித்தது எப்படி? அவர்கள் நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தது மட்டுமன்றி, பற்களுக்கும் நூறு வயதில் ‘ஹாப்பி பர்த்-டே’ கொண்டாடியது எப்படி? இதற்கான விடைகளை அறிய சித்த மருத்துவ பல் பராமரிப்பு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

குச்சி வகைகள்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியும் ‘ஆலப் போல் வேலப் போல், ஆலம் விழுதைப் போல்’ என்ற கவிஞர் வாலியின் வரிகளும், ஆலம் விழுது மற்றும் கருவேல மர குச்சிகளின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.

‘வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்கு பல் துலங்கும் நாயுருவி கண்டால் வசீகரமாங் காண்எனும் பதார்த்த குண சிந்தாமணி பாடல், வேல மரக் குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகிக் கல்லுக்கு நிகராகத் திடமாகும் எனவும், வேப்பங் குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் என்றும் வலியுறுத்துகிறது.

பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

சுவையும் பலனும்

துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்களும் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல், பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் ‘செல்-போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக் கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.

வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ‘ஸ்கர்வி’ (Scurvey) நோயில் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் டூத்-பிரஷ்களையோ, குச்சிகளையோ பயன்படுத்தாமல் வேப்பங் கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும். 

இயற்கை பற்பொடிகள்

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம்.

லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும்.

திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.

கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும். 

வாயை கொப்பளிப்போம்

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் வாயை நீரால் நன்றாகக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். தினமும் நல்லெண்ணெயால் வாய் கொப்பளித்து வந்தால் பற்களின் நலனுடன் சேர்த்து, உடல்நலமும் சிறப்படையும். ஆலம் பாலில் வாய் கொப்பளிக்க அசைகின்ற பல்லும் இறுகும் என்பதை ‘ஆலம்பால் மேக மறுதசையும் பல்லிறுகும்’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் உணர்த்துகிறது. ஓமத் தீநீரால் வாய் கொப்பளிக்க, பற்களிலுள்ள கிருமிகள் மடியும்.

காலை எழுந்ததும் சிகரெட்டைத் தேடும் நவீன மனிதனின் மனம், வேப்பங் குச்சியையும் வேலமர குச்சியையும் தேடத் தொடங்கிவிட்டால், சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, பற்களும் ஆரோக்கியமடையும். டூத்-பிரஷ்களையும், டூத்-பேஸ்ட்களையும் அன்றாட வழக்கத்திலிருந்து முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது இயற்கையின் செல்வங்களான குச்சிகளையும், பற்பொடிகளையும் பயன்படுத்த முயற்சிப்போம். நம் ஆரோக்கியத்தை இயற்கையும் எதிர்பார்க்கிறது.

பல் வலிக்கு எளிய மருந்துகள்

    • பழுத்த கத்திரிக்காயைப் பல இடங்களில் ஊசியால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி பல் வலிக்குக் கொடுக்கலாம்.
    • கொய்யா இலைகளை வாயிலிட்டு மென்று சாப்பிடலாம்.
    • சுக்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கிப் பற்களில் கடித்து சாப்பிடலாம். நந்தியா வட்டை வேரை மெல்லலாம்.
    • மருதம் பட்டை பொடியால் பல் துலக்கலாம். லவங்கத் தைலத்துக்கு உணர்ச்சி போக்கும் (Anaesthetic) தன்மை இருப்பதால், அதை பஞ்சில் நனைத்து பற்களில் வலி ஏற்படும்போதும், ஆரம்ப நிலையில் உள்ள சொத்தைப் பற்களுக்கும் வைக்கலாம். 

பயன்படுத்தக் கூடாதவை:

செங்கல் தூள், மண், கரி, சாம்பல், கிருமிகள் தாக்கிய குச்சிகள் ஆகியவற்றை பல் துலக்க பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 04. மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்


 

ண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப் பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன முழுநேர மயக்கத்துடன்!

இதற்கான காரணத்தை ஆராய, மருத்துவ வல்லுநர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை; நாம் சாப்பிடும் உணவு முறையை முறைப்படுத்தினாலே போதுமானது. தவறான வாழ்க்கை முறையால் உண்டாகும் மிக முக்கியமான தொந்தரவுகளில் மலக்கட்டுக்கு முதல் இடம் கொடுக்கலாம். 

மலக்கட்டு காரணங்கள்

முதிர்ந்த வயதில், குடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் ஏற்பட்டுவந்த மலக்கட்டு பிரச்சினை, தற்போது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. காலம் தவறிய உணவு, அதிக அளவு உணவு, குறை உணவு, துரித உணவு எனப்படும் குப்பை உணவு, மசாலா சேர்த்த உணவு போன்றவை மலக்கட்டை உருவாக்குவதற்கான முக்கியமான காரணிகள்.

இயற்கை அளித்த வரப்பிரசாதங்களான காய், கனிகளைத் தவிர்ப்பது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது, அதிகமாக அசைவ உணவைச் சாப்பிடுவது போன்றவை அடுத்த வரிசை காரணங்கள்.

புகைப்பிடித்தல், மது, காபி, டீ, குளிர்பானங்களை அதிகமாக அருந்துதல், உறக்கமின்மை, வேலைப்பளுவின் காரணமாகப் போதுமான அளவுக்கு நீர் பருக மறப்பது போன்ற காரணங்கள், மலக்கட்டை உண்டாக்குவது உறுதி. 


டீ காப்பி என்பது பலரால் விரும்பி குடிக்கப்படும் ஒரு உற்சாக பானமாக திகழ்ந்து வருகிறது. அனைவரும் இதனை வீட்டிலேயே தயாரித்து குடும்பமாக பருகி வருகிறோம். அதில் இருக்கும் சாதகங்களை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிலிருக்கும் பாதகங்களை நாம் அறிந்திருக்கவில்லை. அதனை பற்றி அலசுவதே இந்த ஆடியோ 👆பதிவின் நோக்கம்.

மன அழுத்தமும் காரணம்

மன அழுத்தத்துக்கும் நோய்களின் உருவாக்கத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது ஆராய்ந்து வெளியிடப்பட்ட உண்மை. மலக்கட்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

செரிமானத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம், மன அழுத்தத்திடம் மனதைப் பறிகொடுத்துப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு உண்டாக வழி செய்கிறது.

நாட்பட்ட மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது, ஒருவருடைய குடலில் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கிறது. திருமண நிகழ்ச்சி, தேர்வு, அதிகப் பணி சுமை இருக்கும் நேரத்தில், மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தத்துக்கும் மலக்கட்டுக்கும் உள்ள தொடர்பை அறுக்க, வழக்கறிஞரிடம் செல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையின் அழகை ரசித்து, மனசை உற்சாகமாக்க, தெளிவான சிந்தனை இருந்தால் போதும். 

மதுவும் மலக்கட்டும்

நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் உடைய திறமைசாலிகளுடன், மலக்கட்டும் கைகோத்துக் கொண்டு வீர நடைபோடுவதில் ஆச்சரியமில்லை. ஆல்கஹாலானது, மலத்தில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி வறட்சியாக்கி, குடல் அசைவுகளைத் தடுத்து, மலக்கட்டை உண்டாக்கிவிடுவதில் பலே கில்லாடி! 

சித்த மருத்துவம்

திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) அரை தேக்கரண்டி அளவு, தினமும் இரவு வெந்நீரில் கலந்து அருந்தலாம். திரிபலா சூரணம், மலக்கட்டை நீக்குவது மட்டுமன்றி, உடலில் தேங்கிய நச்சுகளையும் (Toxins) வெளியேற்றும் சிறப்புடையது.

தனிக் கடுக்காய் பொடி, மலைக் கிராமங்களில் முக்கிய மலமிளக்கி மருந்தாகப் பயன்பட்டு வருவது. மேலும் நிலவாகைச் சூரணம், ஏலாதி சூரணம், பொன்னாவாரைப் போன்ற சித்த மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

செரிமானத்தைத் தூண்டக்கூடிய சீரகம், மிளகு, இஞ்சி, ஓமம், பெருங்காயம் ஆகிய பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், கேரட், பூசணி, உருளை, முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டு மலக்கட்டைத் தடுக்கலாம். தினசரி நடைப்பயிற்சி செய்வதால், குடல் பகுதிகள் நன்றாகச் செயல்பட்டு மலத்தைச் சிரமமின்றி வெளியேற்றும். அப்படியும் மலம் சரியாக வெளியேறாதபோது, துணியை நீரில் நனைத்து வயிற்றுப் பகுதியில் போடலாம். 

விளக்கெண்ணெய் மகத்துவம்

தசவாயுக்களில் ஒன்றான அபானவாயு (கீழ்நோக்கிச் செலுத்தப்படும் வாயு) பாதிக்கப்படுவதால், மலக்கட்டு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். ஆமணக்கு எண்ணெய்க்கு, மலமிளக்கி செய்கையைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, அபான வாயுவைக் கட்டுப்படுத்தும் திறனையும் இருப்பதால், வாரம் ஒருமுறை அரை தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து உட்கொள்ளலாம். மலக்கட்டு இருக்கும்போது, அடிவயிற்றின் மீது விளக்கெண்ணெயைத் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கிப் போட்டால் குணமாகும். எருவாயின் உட்புறத்தில் விளக்கெண்ணெயைத் தடவ, மலம் இளகி வெளிப்படும். 

இளக்கும் கீரைகள்

பொதுவாகவே அனைத்துக் கீரை வகைகளும் மலத்தை இளக்கி வெளியேற்றும் சக்தி கொண்டவை என்பதால், தினசரி உணவில் கீரை வகைகளுக்குத் தாராளமாக அழைப்பு விடுக்கலாம்! கீரைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பது மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் உள்ளன. 

நார்ச்சத்துப் பழங்கள்

பழ வகைகளில் பப்பாளி, வாழை (3.1 கிராம் நார்ச்சத்து), கொய்யாப் பழம் (5.4 கிராம் நார்ச்சத்து), ஆப்பிள் (4.4 கிராம் நார்ச்சத்து), பேரிக்காய் (5 6 கிராம் நார்ச்சத்து) போன்ற இயற்கை அமுதங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். உலர் திராட்சைகள், உலர் அத்தி ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, இரண்டு வேளை சாப்பிட்டால் மலத்தை இளக்கும். ஆளிவிதை (Flax seeds) பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்வது மட்டுமன்றி, அதை வெளியேற்றத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் மிகவும் முக்கியம்.

நீண்ட நாட்களாகத் தொடரும் மலக்கட்டு பிரச்சினையைச் சரிசெய்யாவிட்டால் அது தோல் நோய்கள்மூலம்இதய நோய்புற்று நோய் என வேறு பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும். எனவேஅடித்தளத்தை வலுப்படுத்தாமல்மலத்தைச் சரியாக வெளியேற்றி உடலை உற்சாகப்படுத்துவோம்!

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!