Showing posts with label மரபு மருத்துவம். Show all posts
Showing posts with label மரபு மருத்துவம். Show all posts

மரபு மருத்துவம்: 18. நோய்களை விரட்டும் மூலிகைக் குடிநீர்

   


கேரளப் பாரம்பரியம் என்றவுடன் புட்டு - கடலைக்கறி, சிவப்பான மட்டையரிசி, மீன் உணவு போன்றவற்றுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் மூலிகைக் குடிநீர். கேரளத்தில் பெரும்பாலான வீடுகளிலும் உணவகங்களிலும் மிதமான சூட்டில் கொடுக்கப்படும் குடிநீரில், பல வகை மூலிகைகள் கலந்திருப்பது, ஆரோக்கியத்துக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நீர் மூலம் பரவும் பல நோய்களுக்கு மூலிகைக் குடிநீர் முட்டுக்கட்டையும் போடுகிறது.

தாகச் சமணி, தாக முக்தி என்ற பெயர்களில், குடிநீரில் சேர்க்க வேண்டிய மூலிகைக் கலவைகள் அங்கே சாதாரணமாகக் கிடைக்கின்றன. அந்த மூலிகைகள் அனைத்தும் தமிழகத்திலும் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி நாமும் நோய்களைத் தடுக்கலாம். அந்த மூலிகைக் குடிநீர் வகைகள் என்ன?

பதிமுகம் (சாயமரம்) குடிநீர்

கேரளத்தின் சில இடங்களில் தரப்படும் குடிநீர் வெளிர் ரோஜா நிறத்தில் இருப்பதைப் பார்க்கலாம். பதிமுகச் சக்கைகளை நீரில் கொதிக்க வைத்துக் கொடுப்பதே, இந்த நிறத்துக்கும் மணத்துக்கும் காரணம். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வெள்ளைப்படுதலையும் இது குறைக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரத்தப்போக்கைத் தடுப்பதற்காகப் பதிமுகம் பயன்படுத்தப்படுகிறது. உடலின் வெப்பத்தைக் குறைத்துப் பசியையும் தூண்டுகிறது.

இதில் ‘Jugloneஎனும் வேதிப்பொருள் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது; ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. வீக்கமுறுக்கி செய்கையைக் கொண்டிருப்பதால், தாய்லாந்து நாட்டு மக்கள் இதை மூட்டுவாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

கேன்சர்க்கு ‘லட்சுமி தரு’

கேரளத்தில் பயன்படுத்தப்படும் சில வகை குடிநீர் பொடிகளில் லட்சுமி தருவின் இலைகள் ஐம்பது சதவீதம் சேர்க்கப்படுகின்றன. Simarouba glauca என்ற தாவரவியல் பெயர் கொண்ட லட்சுமி தரு, ‘சொர்க்க மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குப் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வலி நிவாரணி, கிருமிநாசினி, புழுக்கொல்லி, பசித்தீ தூண்டி, காய்ச்சல் அகற்றி எனப் பன்முகப் பண்புகள் லட்சுமி தரு தாவரத்துக்கு உண்டு. இதிலுள்ள Ailanthinone, Glaucarbinone வேதிப்பொருட்கள் பல நோய்களைக் குணப்படுத்துவதற்குக் காரணமாக உள்ளன.

சர்வசுகந்தி

சர்வசுகந்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்துச் சிலர் அருந்துகின்றனர். இதன் தாவரவியல் பெயர் Pimenta dioica. சிறந்த எதிர்-ஆக்ஸிகரண (ஆன்ட்டி ஆக்சிடன்ட்) பொருளாகச் செயல்படுகிறது. இலைகளிலுள்ள வாசனை எண்ணெய் காரணமாக, நீரை அருந்தும்போது நல்ல வாசனையுடன் இருக்கிறது. சில பகுதியினர் உணவிலும் இந்த இலைகளைச் சேர்க்கின்றனர்.

தாகமுக்தி குடிநீர்

வெட்டிவேர், பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம், மல்லி ஆகிய மூலிகைகள் தாகமுக்தி குடிநீர் கலவையில் சேர்கின்றன. ஒரு தேக்கரண்டிப் பொடியை, ஐந்து லிட்டர் நீரில் கலந்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். நன்னாரி கலந்திருப்பதால் இந்த நீரை அருந்தும்போது, நன்னாரி சர்பத் போன்ற மணமும் சுவையும் கொண்டிருக்கும்.

நெடுந்தூரப் பயணத்தின்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கும், தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளுக்கும் தாகமுக்தி குடிநீரைப் பயன்படுத்தலாம். 

தாகச் சமணி குடிநீர்

லட்சுமி தரு இலை, பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்ற மூலிகைகளின் தொகுப்பே தாகச் சமணி குடிநீர். இது உடலில் தேங்கிய கழிவை அகற்றி, ரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது. வெட்டிவேர், ஏலம், நன்னாரி, சீரகம் ஆகியவற்றால் பித்தம் சார்ந்த நோய்களும் குறைகின்றன.

மூலிகைப் பொட்டணங்கள் (கிழி):

டீத்தூள் பொட்டலத்தைப் பாலில் இட்டுக் குடிக்கும் ‘டிப் டீ’ போல, மூலிகைப் பொட்டலத்தைச் சூடான நீரில் போட்டு ‘மூலிகை நீராக’ பயன்படுத்தும் வகையில் மூலிகைப் பொட்டலங்களும் கிடைக்கின்றன.

குடிக்கும் நீரில் சில மூலிகைகளைக் கலந்து நோய்களை நீக்கும் முறை தமிழகத்திலும் பல காலமாக வழக்கில் இருக்கிறது. சீரக நீர், வெந்தய நீர், நெல்லி நீர், தேற்றான் கொட்டை நீர் என அடுக்கிக்கொண்டே போகலாம். 

சீரகக் குடிநீர் (அ) ஊறல் நீர்

சிறிது சீரகத்தை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைக் குடிக்கலாம் அல்லது சீரகத்தை முதல் நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த ஊறல் குடிநீரை அருந்தலாம். சீரகத்திலுள்ள ‘Thymolஎனும் வேதிப்பொருள் செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி நல்ல பசியை உண்டாக்குகிறது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்குச் சீரக நீர், பக்க விளைவில்லா மருந்து. அசைவ உணவு சாப்பிடும்போது சீரக நீரைப் பயன்படுத்தினால் மந்தம், உப்புசம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன் கூடுதல் பலனாக இரும்புச் சத்தையும் சீரகம் அளிக்கிறது. 

வெந்தய ஊறல் நீர்

வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து அருந்த, பித்தம் சார்ந்த நோய்கள் குறையும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப் பாதை தாபிதம், வயிற்றுப் புண், மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொந்தரவுகளுக்கு வெந்தய ஊறல் நீர் பயன்படுத்தலாம். வெந்தயத்தில் உள்ள 4 - hydroxyisoluecine எனும் அமினோ அமிலம், கணைய செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை முறைப்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இதை அருந்தலாம். 

நெல்லி ஊறல் நீர்

நெல்லிக்காய் ஊறல் நீர் தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு கலக்கவும். கடைசியாக அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பானமாக குடிக்கவும். நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் நெல்லிக்காய் நீரை குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நெல்லிக்காயில் அமினோ அமிலம் ஏராளமாக காணப்படுகிறது. இதன் உதவியுடன் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது. இதுவே நெல்லிக்காய் நீர் எடையைக் குறைக்கும் பானமாகக் கருதப்படுவதற்குக் காரணம்.

உங்களுக்கு பருக்கள் அல்லது சுருக்கங்கள் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நெல்லிக்காய் நீரை குடிக்கவும். மேலும், நெல்லிக்காய் வலுவான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற பயன்படுத்தப்படுகிறது. 

தேற்றான் கொட்டை ஊறல் நீர்

நீரை தூய்மைப்படுத்தும் சக்தி தேற்றாங்கொட்டைக்கு உண்டு. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று தேற்றாங்கொட்டையைப் போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் அந்த நீரானது சுத்தமாகிவிடும்.

தேற்றான் கொட்டை உடல் சூடு, வயிற்றுக் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் முதலான பிரச்னைகளை சரி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. புண்களையும், காயங்களையும் ஆற்றும் தன்மை உடையது தேற்றாங்கொட்டை. மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பலவீனமானவர்களுக்கு பலத்தை அளிக்கக்கூடிய சக்தி இந்தக் கொட்டைகளுக்கு உள்ளது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது. இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள். இதனாலேயே ‘தேறாதவனையும் தேற்றும் தேறாமரம்’ என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

எப்படிக் குடிப்பது?

மேற்குறிப்பிட்ட மூலிகைக் கலவைகளை மழை மற்றும் குளிர் காலங்களில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடிக்கலாம் (கொதிநீர்). அதையே வெயில் காலத்தில், மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் மண் பானைகளில் நீரைச் சேமித்து, குளிர்ந்த நீராகவும் பயன்படுத்தலாம்.

உணவகங்களிலும் வீடுகளிலும் கொதிக்க வைத்து ஆறிய மூலிகை நீரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், நீர் மூலம் பரவும் நோய்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடலாம். அன்றாடம் குடிக்கும் குடிநீரோடு மூலிகைகளைச் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, புதிது புதிதாக வரும் விநோத வைரஸ்களையும் விரட்டி அடிக்கலாம்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.

11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

12. மருந்தாகும் நாட்டுக்கோழி!

13. மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’

14. நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு

15. சாயம் வெளுக்கும் சமையல்!

17. உண்ட பிறகு குறுநடை கொள்வோம்



நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!