மனம் எனும் மாய தேவதை! பாகம் 3 - தொலைந்த தொடர்பு

 

பாகம் 3: தொலைந்த தொடர்பு 



    காடுகளில் சுற்றி திரிந்த ஆதி மனிதன் பல வகையில் இன்றைய மனிதனிடமிருந்து மாறு பட்டடிருந்தான் குறிப்பாக நுண் உணர்வு எனும் விஷயத்தில். 

பண்டைய மனிதன் இன்றைய மனிதன் போல பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்தவன் அல்ல. 24 மணி நேரமும் ஆபத்து சூழ்ந்து எந்நேரமும் எதிரியால் கொடிய விலங்குகளால் கொலை செய்யப்படுகின்ற பேராபத்தில் வாழ்ந்து வந்தவன் அவன். எனவே அவனது உணர்வுகள் மிக கூர்மையாக இருந்தன. குறிப்பாக நுகறும் திறன். எதிரி பல மீட்டர் தள்ளி வரும் போதே அதை வாசனை மூலம் அறிய கூடியவனாக அவன் இருந்தான். சிறு ஓசையையும் விழிப்புணர்வுடன் கவனிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தான். (அன்றைய மனிதனின் காதுகள் நாயின் காதுகள் போல சப்தம் வரும் திசை நோக்கி குவித்து திரும்ப கூடிய வகையில் இருந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இன்றும் நம்மில் சில பேர் காது மடல் ஆட்டும் திறமை கொண்டவர்கள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த பழக்கம் ஒரு பரிணாம மிச்சம் தான்.)

இன்றைய மனிதன் அளவிற்கு தர்க்க அறிவும் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு யோசிக்கும் தொலை நோக்கு பார்வையும் அவனுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் கூரிய பார்வை மற்றும் கேட்கும் திறன் முகறும் திறன் தொடு உணர்வு போன்றவற்றில் மிக சிறந்து விளங்கினான். குறிப்பாக எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழ்பவனாக இருந்தான். படிப்படியாக வளர்ச்சியடைந்து அவன் பாதுகாப்பான வீடு கட்டி கொண்டபோது உயிர் காக்க மோப்ப சக்தியை நம்பும் அவசியம் குறைந்து போனது கால போக்கில் அந்த திறன் அழிந்து போனது.

பயன் படுத்தாமல் விட்ட மூளை என்ன ஆகும் என்று சோதிக்க நீங்கள் பெரிதாக பரிணாம கோட்பாடு எல்லாம் படிக்கத் தேவையில்லை. இன்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட முயற்சி செய்து பார்த்தால் போதும். ஒரு 10... 20 ஆண்டுகளுக்கு முன் நாம் போட்ட மன கணக்கு இன்று ஏன் சாத்தியப்படவில்லை என்று புரியும்.

நமக்கு இயற்கை கொடுக்கும் ஒரு ஆறுதல் என்ன தெரியுமா? 

நம்மால் மறக்கப்பட்ட மறுக்கப்பட்ட எதுவும் முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது தான். ஆனால் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாளாக அதை பயன்படுத்த வில்லை என்பதை பொறுத்து அது புதைக்கப்பட்ட ஆழம் தீர்மானிக்கப்படுகிறது. மீண்டும் அதை தோண்டி எடுக்க அந்த ஆழம் சென்று பார்க்க தயார் என்றால் இன்றும் அதை பெறுவது சாத்தியம் தான். 

உதாரணமாக மறந்து விட்ட மன கணக்கு பயிற்சியை மீட்க சில வாரம் போதும். ஆனால் தூர வருபவனை வாசனை மூலம் அறிய? அது சாத்தியமா?

இப்போது நான் சொல்ல போகும் ஆய்வு ஒரு கற்பனை அல்ல அதை தொடர்ந்து முயன்றால் யார் வேணாலும் அதை சாதிக்க முடியக் கூடிய சாத்திய கூறு தான் அது.

ஆய்வு இது தான்...

ஒரு ரோஜா பூவை எடுத்து கொள்ளுங்கள். அதை மிக விழிப்போடு மன ஒருங்கிணைபோடு முகர்ந்து பாருங்கள். அதன் வாசனையோடு ஒன்றினையுங்கள். இதை தினம் செய்து வாருங்கள் பிறகு சில நாள் கழித்து ரோஜாவை சற்றே தூரம் பிடித்து முகர்ந்து வாசனையை உணருங்கள். இன்னும் சில நாள் இதை தொடர்ந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரித்து கண்ணை மூடி வாசனையை உணர்ந்து பாருங்கள். பின் படி படியாக தூரத்தை அதிகரியுங்கள்.

இந்த ஆய்வை அவசரப்படாமல் மிக நிதானமாக பொறுமையாக படிப்படியாக செய்து வந்தால் மிக ஆச்சர்யப்படும்படி சில மாதங்கள் கழித்து பல மீட்டர் தள்ளி எங்காவது ரோஜா பூ இருந்தால் அதன் நுண்ணிய வாசனையை உங்களால் உணர முடியும்.

இந்த பயிற்சி கேட்கும் திறனுக்கும் பொருந்தும் என்கிறார்கள். இந்த வகை பயிற்சியை நேரில் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் எங்கே பார்க்க முடியும் தெரியுமா?

சின்ன சின்ன பொருட்களை சரியாக குறி பார்த்து சுடும் துப்பாக்கி வீரர்களிடம். அவர்கள் சுட்டு பழக முதலில் வானத்தில் பெரிய பொருளை தூக்கி வீசி சுடுவார்கள். பிறகு தினம் பயிற்சி தொடர தொடர பொருளின் அளவை படி படியாக சின்னதாக்கி கொண்டே வருவார்கள். ஒரு கட்டத்தில் மிக நுண்ணிய பொருளை சுடும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். இன்றைய தேதிக்கு வானத்தில் வீச பட்ட 'வாஷர்' ஐ அதன் மையத்தில் உள்ள ஓட்டையில் இரு முறை சுடும் வல்லமை கொண்டவர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.

மனிதனின் மூளையில் ஒளிந்துள்ள ஆற்றல் மனித கற்பனைக்கும் அப்பாற் பட்டது. இதில் நாம் தேடி பெற வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதை பெற்றவர்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பார்ப்பதை காண முடிகிறது.

இந்த சம்பவம் ஒரு நிஜ சம்பவம்...

ஒரு அப்பாவும் மகனும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது மகன் அப்பாவை நோக்கி "அப்பா நான் பிறந்தது எப்போ?" என்கிறான்.

அப்பா அவன் பிறந்த தேதியை சொல்கிறார். அதற்கு அவன் "டைம் சொல்லுப்பா" என்கிறான்.

அப்பா அவன் பிறந்த நேரம் சொல்கிறார். அதற்கு அவன் "நிமிஷம் எவ்ளோ சொல்லுப்பா" என்கிறான். 

அப்பா அவன் பிறந்த நேரம் மணி மற்றும் நிமிஷம் என்ன என்பதை சொல்கிறார்.

அதை கேட்ட அந்த சிறுவன் மிக சில வினாடிகள் யோசித்து விட்டு... "அப்போ நான் பிறந்து மொத்தம் இத்தனை ஆயிரம் வினாடிகள் ஆகிறதா பா" என்று ஒரு நீண்ட நம்பரை சொல்கிறான். 

அப்பா அப்போதைக்கு விட்டுவிட்டாலும் அவன் சொன்னதை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் வீட்டிற்கு சென்றதும் உட்கார்ந்து பொறுமையாக அவன் பிறந்த நேரத்தை வைத்து அவன் கேள்வி கேட்ட நேரம் வரையில் உள்ள வினாடிகள் எத்தனை என்பதை கணக்கு போட்டு பார்க்கிறார். அதிர்ச்சி அடைகிறார். விடை அந்த சிறுவன் சொன்ன எண்ணுடன் ஒத்து போனது.

உலகம் எங்கும் இப்படிப்பட்ட கணித சூரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் டிஸ்கவரியில் "Stanly's Super Human" என்ற நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அதில் மேலே சொன்ன அசாத்திய சுடும் திறமை கொண்டவர்களை காட்டி இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.

அந்த நிகழ்ச்சியில் இதுவரை வாழ்நாளில் நடந்த எந்த சம்பவத்தையும் மறகாதவர். (10 வருடத்திற்கு முன் ஏதோ ஒரு தேதி சொன்னால் அன்று மதியம் 3 மணிக்கு வானம் ரொம்ப மேக மூட்டமாக இருந்தது என்கிற அளவு சொல்லுவார்)

உலகின் எவ்ளோ பெரிய கணக்கையும் வினாடிக்கு குறைவான நேரத்தில் போட கூடியவர்.

விசித்திர மனிதர்களின் பெரிய பட்டியலே இருக்கிறது.

இரும்பு ஸ்பேனரை வளைக்கக் கூடியவர்..

உடலில் இரும்பை வைத்தால் ஒட்டி கொள்ளக் கூடியவர்..

மின்சாரத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டிப் பிடிப்பவர்..

பனிக்கட்டியில் வெறும் உடம்பில் ஜாலியாக படுத்து கிடப்பவர்..

ஊசியை புல்லட் போல எறிந்து ஜன்னல் கண்ணாடியை உடைப்பவர்..

மிக வேகமாக மின்னல் வேகத்தில் பேசுபவர்..

மிக சத்தமாக பேசுபவர்..

தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் ஒய்வு இல்லாமல் ஓடக் கூடியவர்..

ரப்பர் போல வளைந்து பெட்டிக்குள் அடங்கக் கூடியவர்..

உடலில் கூர்மையான பொருளால் எங்கே துளைத்தாலும் வலியை தாங்கக் கூடியவர்..

ஆணியை மண்டையை வைத்தே அடிக்கக் கூடியவர்..

இப்படி விசித்திர மனிதர்களின் பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒருவர் பற்றி இப்போது சொல்கிறேன்.

அவர் முற்றிலும் கண் தெரியாதவர். ஏன் கண் என்கிற உறுப்பே உடலில் இல்லாதவர். ஆனால் நல்ல ட்ராபிக்கில் கூட அழகாக சைக்கிள் ஓட்டி வர கூடியவர். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது கண் தெரியாதவர்கள் இப்படி அதிக திறமையோடு இருப்பதை தான்... எங்கும் பார்க்கலாமே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவரிடம் ஒரு மிக ஆச்சர்ய சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. சைக்கிள் ஓட்டி வரும் போது வாயில் நாக்கால் டிக் டிக் என்று (குதிரை ஓட்ட கொடுக்கும் ஒலி போல) சொடுக்கி கொண்டே வருகிறார். எதற்கு அந்த சப்தம் என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.

அவரை ஒரு ஹாலில் கொண்டு போய் வரிசையாக பேணா, புத்தகம், டிவி என்று பொருட்களை வைத்து விட்டு அவரை அருகில் விட்டால் அந்த அந்த பொருளின் அருகில் நின்று டக் டக் என்று நாக்கை தட்டுகிறார். பிறகு தனக்கு முன்னால் இருப்பது பேணா இது புத்தகம் இது டிவி என்கிறார்.

இன்னோரு ஆச்சர்யம் மிக சப்தமாக இருக்கும் டிராபிக் ரோட்டில் இவர் எழுப்பும் மெல்லிய ஒலி பக்கத்தில் இருப்பவருக்கே கேட்காது ஆனால் அந்த ஒலி மூலம் ரோட்டில் எங்கே கம்பம் உள்ளது எங்கே கார் உள்ளது எங்கே மனிதன் நடக்கிறான் என்று சரியாக சொல்லுகிறார். இது எப்படி இருக்கு?

அப்போ மனித மூளையில் வௌவாலுக்கு சவால் விடும் படி மீயொலி திறமையும் கூட ஒளிந்து இருக்கிறதா?

கண் தெரியாதவர்கள் சிலர் பொருளை கைகளால் தடவி பார்த்து பொருளின் நிறத்தை சொல்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களை எந்த லாஜிக்கில் அடைப்பது?

மனித மூளையில் மீயொலி திறன் ஒளிந்து இருக்கிறது என்றால் இருட்டில் பார்க்கும் பாம்பின் அக சிவப்பு கண்களை பெற கூடிய திறனும் கூட ஒளிந்து இருக்குமா?

முதல் பாகத்தில் நாம் பார்த்த படி சுனாமி மற்றும் பூகம்பத்தை உணரும் திறன்?

தூர இடத்தில்... வேற இடத்தில்... உள்ள மனம் நினைப்பதை உணரும் டெலிபதியும் எதிர்காலத்தில் நடப்பதை உணரும் E.S.P திறனும் மூளையின் சித்து வேலைகள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது.

இவற்றை எல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது. அதாவது மனிதனின் மூளையில் ஒளிந்துள்ள ஆற்றல் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

இதில் நாம் தேடி பெற வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அதைப் பெற்றவர்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பார்ப்பதை காண முடிகிறது. அந்த சமாச்சாரத்தில் தான் ஆன்மீக சாரமும் அடங்கி இருக்கிறது. அதன் பெயர் விழிப்புணர்வு.

அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














No comments:

Post a Comment