மனம் எனும் மாய தேவதை! பாகம் 5 - தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்

 




பாகம் 5 : தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்


    ல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய கோட்பாடுகள் மிக பெரிய அதிசயங்களை ஆச்சர்யங்களை உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் ஐன்ஸ்டைன் பற்றி நாம் இன்று வரை கண்டு பிடிக்காத மிக பெரிய ஆச்சர்யம் ஒன்று உண்டு. அது அவர் அந்த உண்மைகளை எல்லாம் எப்படி கண்டுபிடித்தார் என்பது.

அதாவது 'வெளியை வளைக்க... சுருட்ட முடியும்...' 'காலத்தில் பயணிக்க முடியும். காலத்தை ஆளுக்கு தகுந்தாற்போல மாற்ற முடியும்....,' 'பொருளும் ஆற்றலும் ஒண்ணுதான்...' 'வெளியும் காலமும் ஒன்னு தான்.....'

இது போன்ற உண்மைகள் சாதாரண காரண காரிய தர்க்க அறிவால் ஆழ்ந்து சிந்தித்து கண்டு பிடிக்கப்பட்டதல்ல. அப்படி கண்டு பிடிக்க சாத்தியமும் அல்ல. ஐன்ஸ்டைன் கண்டு சொன்ன உண்மைகள் இருக்கே அது பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கடினமான ஆராய்ச்சிக்கு பின் குறைந்தது இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிதிருக்கப்பட வேண்டிய உண்மைகள்.

ஆனால் அதை அவர் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் பென்சிலை வைத்து கொண்டு முந்தைய நூற்றாண்டிலேயே கண்டு பிடித்தார். இதை உங்களால் எந்த லாஜிக்கில் அடக்க முடியும் சொல்லுங்கள்?

ஐன்ஸ்டைன் தனது வாழ்நாளில் எந்த ஆய்வு கூடத்திலும் சென்று ஆய்வு செய்து உண்மைகள் சொன்னவர் அல்ல. மாறாக பிரபஞ்ச மகா உண்மைகளை முதலில் சொல்லிவிட்டு அப்புறமாக அதை ஆய்வு செய்து சரி பார்த்து கொண்டவர்.

உதாரணமாக சூரியனுக்கு பின்னால் உள்ள நட்சத்திர மண்டல ஒளி சூரியனின் ஈர்ப்பால் வளைந்து நதி நடுவே உள்ள பாறையை சுற்றி வளைத்து வரும் நீர் போல நம்மை வந்து சேரும் என்ற ஆய்வை அவர் செய்து பார்த்ததற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் அந்த உண்மையை அறிவித்து இருந்தார்.

இது எப்படி சாத்தியம்?

ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை கண்டு பிடிப்பது லாஜிக்காக இருக்கிறது. ஆனால் ஒருவன் உண்மையை முதலில் சொல்லிவிட்டு பிறகு ஆய்வு செய்து சரி பார்ப்பது என்ன லாஜிக்?

ஐன்ஸ்டைன் இதை வாழ்நாள் முழுதும் செய்தார். அவருக்கு பின் இன்றைய தேதி வரை அவரது கோட்பாடுகள் பல நூறு முறை பல பேரால் சோதிக்கப்பட்டு உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதை எல்லாம் ஒருவர் வீட்டு அறைக்குள் உட்கார்ந்து சொல்ல முடிந்தது எப்படி?

ஒரு மிக பெரிய உண்மை....

பிரபஞ்ச மகா அறிவை உட்கிரகிக்கும் பேராற்றல் மனித மூளைக்கு உண்டு. இது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமே நடந்த அனுபவமல்ல. ரொம்ப ஆச்சர்யமான ஒரு உண்மை என்ன வென்றால் உலகில் முக்கால் வாசி கண்டுபிடிப்புகள் இப்படி யோசித்து அறியும் அறிவை தாண்டி வேறு விதத்தில் கண்டு பிடிக்கப்பட்டது தான்.

அம்மையார் மேரி கியூரி அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பாருங்கள்....

ஒரு நாள் இரவு மேரி கியூரி நீண்ட நேரம் காகிதங்களை புரட்டியபடி முழித்து இருந்தார். ஒரு விடை தெரியாத கணக்கு ஒன்று நீண்ட நேரமாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் அந்த ஆய்விற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அயற்சியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார். காலை எழுந்தபோது காத்திருந்தது அதிர்ச்சி. அவரது அணைத்து கணக்குகளும் விடை தீர்க்கப்பட்டிருந்தன.

யார் இதை செய்தது என்று அதிர்ச்சியோடு ஜன்னல்களை சரி பார்த்தார் எல்லாமே பூட்டப்பட்டிருந்தன. அப்படியே யாரும் உள்ளே வந்தாலும் மேரி கியுரியாலேயே தீர்க்க முடியாத அந்த பிரச்னையை தீர்த்து இருக்க வாய்ப்பில்லை. பிறகு நிதானமாக அந்த பேப்பர்களை ஆராய்ந்து பார்த்த கியூரி ஒரு உண்மையை கண்டு பிடித்தார்.

அதாவது அந்த கையெழுத்து... அது வேறு யாருமல்ல கியுரியின் கையெழுத்து தான். பிறகு தான் மெல்ல மெல்ல அவருக்கு நியாபகத்தில் வந்திருக்கிறது தான் தூங்கிய பின் தூக்கத்தில் எழுந்தது... அரை குறை தூக்கத்திலேயே நடந்து சென்று அந்த கணக்கை எழுதியது எல்லாம் படிப்படியாக நினைவுக்கு வந்தது. தான் மிகுந்த ஆற்றலோடு தர்க்க பூர்வமாக யோசித்தபோது கிடைக்காத விடை அரைகுறை தூக்கத்தில் எப்படி கிடைக்க முடியும் என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார் கியூரி.

ஃபாசில்கள் எனப்படும் படிவங்களை ஆராயும் ஒரு ஆய்வாளர் அவர். டைனோசர்களுக்கும் முந்திய கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மீனின் படிவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் அவர். பிரச்சனை என்ன வென்றால் அந்த படிவம் அவருக்கு முழுதாக கிடைக்கவில்லை பல துண்டுகளாக கிடைத்தது. அதில் தலை எது வால் எது வயிறு எது என்று புரியவில்லை. புதிர் எழுத்து போல மாற்றி மாற்றி பொறுத்தி பார்த்தார் ம்ஹூம் வடிவம் பொறுந்தி வரவில்லை. சரி என்று விட்டு விட்டு தூங்கி விட்டார்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு அதிசயம் அவர் கனவில் அந்த மீன் முழு உடலமைபோடு வந்தது. உடனே எழுந்தவர் ஒரு காகிதத்தில் தான் கனவில் பார்த்த உருவத்தை வரைந்து கொண்டார். பிறகு சாவகாசமாக அடுத்த முறை அந்த படத்தில் உள்ளது போல அந்த மீன் படிவத்தை பொறுத்தி பார்த்தார். மீன் பொறுந்தி விட்டது .ஆஹா மகிழ்ச்சி என மகிழ்ந்தார்.

ஆனால் அதன் பின் ஒரு விஷயம் அவரை உறுத்தியது மிகவும் குழப்பியது. அதாவது அந்த மீன் தனது கனவில் வருவதற்கு என்ன லாஜிக் இருக்கிறது. தான் இது வரை பத்திரிக்கையிலோ அல்லது வேறு எங்காவதோ அந்த உருவத்தை பார்த்திருந்தால் அது மனதில் பதிந்து கனவில் வர வாய்பிருக்குறது அப்படி தானே? ஆனால் அந்த மீன் வாழ்ந்ததோ டைனோசருக்கும் முன்பே. அதன் வடிவத்தை கண்டுபிடித்த முதல் மனிதனே நாம் தான் அப்படி இருக்கும்போது இது எனது கனவில் வந்தது எப்படி என்று குழம்பி போனார்.

பிறகு ஒரு கருத்தை சொன்னார். அதாவது "பிரபஞ்ச அறிவு என்று ஒன்று இருக்கிறது அதற்கு எல்லாமே தெரியும். மனித மூளையால் அந்த பிரபஞ்ச அறிவை தொடர்பு கொள்ள முடியும்."

நீங்கள் தையல் மிஷினை கண்டு பிடித்தவர் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதை கண்டுபிடிக்கும் போது ஒரு சிக்கல் இருந்தது. துணிக்கு உள்ளே வெளியே போயிட்டு வரும்படி எப்படி வடிவமைப்பது என்று புரியவில்லை. நீண்ட யோசணைக்கு பின் தூங்க போனார். கனவில் ஒரு காட்சி அவரை காட்டு வாசிகள் கடத்தி சென்றார்கள். அவர்கள் வைத்திருந்த ஈட்டியில் மிக வித்தியாசமாக முனையில் ஓட்டை இருந்தது. பொறி தட்டியது போல எழுந்தவர் ஊசியில் முனையில் ஓட்டையை வைத்து மிஷினை சோதித்து பார்த்தார்... வெற்றி.

"யூரேக்கா" என்று தண்ணி தொட்டியில் இருந்து உடலில் துணி இல்லாமல் கத்தி கொண்டு ஓடிய ஆர்கிமிடிஸ் பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். மன்னன் தனது கிரீடத்தில் கலந்துள்ள தங்க கலப்பை கிரீடத்தை சிதைக்காமல் கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தார். அதை குறித்து இரவு பகலாக மண்டையை போட்டு உடைத்தபோதெல்லாம் விடையை ஆர்கிமிடிஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக எந்த சிந்தனையும் இல்லாமல் ஓய்வாக தண்ணீர் தொட்டியில் மூழ்கியபோது தனது எடைக்கு ஏற்றார் போல தண்ணீர் தொட்டியை விட்டு வெளியே வழிந்து ஊற்றியதை பார்த்தபோது தான் திடீர் என்று அவர் உண்மையை கண்டு பிடித்தார்.

எக்ஸ்ரே வை கண்டு பிடித்த ராண்டஜன் வேறு எதையோ கண்டுபிடிக்கப் போய் தற்செயலாக எக்ஸ்ரே வை கண்டு பிடித்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டு பிடித்தபோது எந்த அறிவியல் சிந்தனையும் இல்லாமல் கீழே விழும் ஆப்பிளை மரத்தடியில் உட்கார்ந்து ஆசாமி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார் என்பதை நினைத்து பாருங்கள்.

மிக தீவிரமாக தர்க்க அறிவோடு காரண காரியத்தை ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை விட மனிதன் சிந்தனை ஏதும் இல்லாத நேரத்தில் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் தான் அதிகம். இது நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் தெரிந்த அறிவு ஒன்று இருக்கிறது. மனித மூளையால் அதை தொடர்பு கொள்ள முடியும். குறிப்பிட்ட வகை சிந்தனை போக்கை கையாள்வது மூலம் அந்த பிரமாண்ட அறிவு பெட்டகத்தில் இருந்து உண்மைகளை நம்மால் இழுத்து வர முடியும்.

அது என்ன தொழில் நுட்பம்? என்ன மாதிரி செயல்பாடுகள் மூலமாக இந்த மனித அறிவை அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள செய்ய முடியும்?






இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














No comments:

Post a Comment