மனம் எனும் மாய தேவதை! பாகம் 6 - "நான்" அற்ற நொடிகள்




பாகம் 6 : "நான்" அற்ற நொடிகள்

"1729"


    ந்த நம்பரை பற்றி தெரியுமா? கணித மாணவர்களுக்கு நன்கு தெரிந்த எண் இது. இதற்கு பெயர் ராமானுஜம் - ஹார்ட்லி எண். ஏன் அந்த பெயர்?

ஒரு முறை கணித மேதை ராமனுஜம் உடல்நிலை சரி இல்லாதபோது அவரை பார்க்க அவர் நண்பர் ஹார்ட்லி என்பவர் சென்று இருந்தார். (அவரும் ஒரு கணித மேதை தான்) அப்போது, தான் வந்த டாக்சியின் நம்பரே தனக்கு பிடிக்கவில்லை என்றும் ராசியே இல்லை என்றும் ரொம்ப 'டல்' நம்பர் அது என்றும் குறிபிட்டார்.

அதை கேட்ட ராமானுஜம் உடனே மறுத்து இது ஒரு விசேஷமான நம்பர் என்றார்.

"இரண்டு கியூப் நம்பர்களை இருவேறு வழிமுறையில் கூட்டினால் ஒரே விடை வர கூடிய எண்களில் மிக சிறிய எண் இது தான்" என்றார்.

அவர் சொன்ன அந்த இரண்டு வழிமுறை :

1729 = 1³ + 12³ மற்றும் 9³ + 10³ இது தான்.

இப்படி இரண்டு வழிமுறைகளில் கியூப் எண்களை ஒரே விடை வர கூடிய வகையில் கூட்டும் படி நிறைய எண்கள் உண்டு. ஆனால் அதில் மிக சிறியது இந்த 1729 தான்.

ராமானுஜன் இதை சொன்னபோது அவர் என்ன சொன்னார் எதை சொன்னார் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிக்க ஹார்ட்லி எனும் கணித மேதைக்கே சில வாரம் பிடித்தது என்கிறார்கள். இப்படிப்பட்ட ஓரு விஷயத்தை அந்த நம்பரை பார்த்த மட்டில் ராமனுஜனால் சொல்ல முடிந்தது எப்படி? இதை தர்க்க ரீதியாக யோசித்து காரண காரிய அறிவை பயன்படுத்தி சொல்ல சாத்தியமே இல்லை.

ஐன்ஸ்டைன் சாதாரண மனித மூளைக்கு அப்பாற்பட்டு பல உண்மைகளை வீட்டு அறைகளில் உட்கார்ந்து கொண்டே சொன்னார் என்று சொன்னேனல்லவா அவரைப் போல இன்னோரு வி்சித்திர மனிதன் தான் இந்த ராமானுஜன். காரணம் இவர் கண்டு சொன்ன கணித உண்மைகள் சாதாரன மனித மூளையின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஐன்ஸ்டைனின் சார்பியலை இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருப்பதை போலத் தான் இவர் விட்டு விட்டு போன பல கணக்குகளை இன்னும் அறிஞர்கள் எடுத்து வைத்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். பல விஷயங்கள் இன்றளவும் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. 

போன பாகத்தில் நான் சொன்ன சில எடுத்துக் காட்டுகள் மற்றும் இந்த ராமானுஜன் இவர்களை எல்லாம் பார்த்து 'அப்போ எதையும் யோசிக்காம இருந்தா பல உண்மை அறியலாம் போல' என நினைத்தீர்களேயானால் அதை விட முட்டாள்தனம் வேறு இல்லை.

அப்படியென்றால் அதிகம் சிந்திக்காதபோது தான் அதிக உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்ற கருத்துப்படி அதிகம் போதை வஸ்து பயன்படுத்துபவன் அதிக பிரபஞ்ச அறிவை அடைவதாக அல்லவா இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடப்பது இல்லையே.

காரணம் மனம் சஞ்சலம் அற்ற கீற்றாக.. காற்று வீசாத இடத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்கு சுடர் போல அசைவற்று ஒருங்கிணைந்து இருப்பதற்கும்..... ஒருவன் யோசிக்கவே முயற்சிக்காமல் சோம்பேறியாக இருப்பது அல்லது யோசிக்கவே முடியாத ஒரு நிலையில் மனம் மயங்கிய நிலையில் அல்லது போதை நிலையில் இருப்பதற்கும் வித்யாசம் உண்டு.

ஒரு விதை பார்க்க கல் போல தான் இருக்கும் ஆனால் கல்லும் விதையும் ஒன்று அல்ல. ஒரு விதை தனக்குள் உயிரையும் ஏகப்பட்ட சாத்தியங்களையும் மேலும் லட்ச கணக்கான மரங்களையும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு. எனவே நாம் பார்த்த சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால் பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் அறிந்த ஒரு மாபெரும் தகவல் பெட்டகம் உள்ளது அதில் பிரபஞ்சத்தின் அணைத்து பதிவுகளும் உள்ளன. நாம் குறிப்பிட்ட முறையில் முயன்றால் அந்த பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடியும். 

பிரபஞ்ச மகா அறிவு ஒரு பண்பலை அலைவரிசை போல நம்மை சூழ்ந்து இருக்கிறது என்றால் சரியாக பயன் படுத்த தெரிந்தால் நமது மூளை தான் ரேடியோ ரிசிவர்.

அந்த ரேடியோவை டியூன் பண்ண தெரிந்தவர்ளை தான் நாம் ஞானிகள் அல்லது விஞ்ஞானிகள் என்கிறோம். இவர்களை போன்றவர்களை பார்க்கும் போது அவர்களை சுற்றி இருந்தவர்கள் ஆச்சரயத்தில் மூழ்கி போய் 'இதை எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீங்க' என்று கேட்டிருக்க மாட்டார்களா?

இந்த கேள்விக்கு ஐஸ்டைன் சொன்ன பதில்

"நான் மற்றவர்களை விட எந்த விதத்திலும் அதிகம் புத்திசாலியாக இருப்பதாய் நினைக்க வில்லை ஆனால் மற்றவர்களை விட நான் அதிகம் ஆர்வம் கொண்டு இருக்கின்றேன் அது தான் ஒரே வித்தியாசம்" என்றார். 

ராமனுஜரிடம் நீங்கள் எப்படி இந்த விடைகளை கண்டு பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு விசித்திரமான பதிலை சொன்னார். 

"நான் கண்ணை மூடினால் நான் வணங்கும் அம்மன் கை தோன்றுகிறது. அது விடையை எழுதுகிறது அதை தான் நான் பார்த்து சொல்கிறேன்" என்றார்.

ராமானுஜன் அதிகம் ஆழமாக யோசித்து போட்ட கணக்கை விட ஓய்வாக இருக்கும்போது போட்ட கணக்குகள் தான் அதிகம்.

இப்படி பிரபஞ்சத்துக்கும் மனித மனதிற்கும் ஒரு தொடர்பு நூல் கயிறு இருப்பதை வரலாறு முழுதும் உள்ள அறிஞர்கள் வாழ்வில் பார்க்கலாம்.

நீங்கள் 'வான்கோ' என்ற ஓவியரை பற்றி கேள்வி பட்டிருக்கலாம். அவரது ஓவியங்களில் மரங்கள் மிக உயரமாக வானத்தை முட்டுவதை போல இருக்கும். குறிப்பாக நட்சத்திரங்களை வரையும் போது அவர் வானில் சுருள் சுருள் வடிவில் மட்டுமே வரைந்தார்.

"நட்சத்திரங்கள் என்ன சுருள் வடிவிலா இருக்கிறது? வானத்தை பாருங்கள் அது சில்லறையை இறைத்தத்து போல அல்லவா இருக்கிறது பிறகு ஏன் எப்போ பார்த்தாலும் இப்படியே வரைகிறீர்கள்?" என்று பல பேர் அவரை கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை என் மனதிற்கு நட்சத்திரதிரத்திற்கு இந்த வடிவம் தான் சரி என்று தோன்றுகிறது" என்றார்.

பிற்காலத்தில் கேலக்சியின் வடிவம் சுருள் தான் என்பதை நாம் கண்டு பிடித்தோம். ஆனால் அந்த உண்மையை அந்த ஓவியரின் மூளை எப்படி உள்வாங்கியது?

அவர் தனது கடைசி காலத்தில் நமது சூரியனை வரைந்தார். அதற்காக தினம் சூரியனை மணிக்கணக்கில் உற்று பார்ப்பார். அவரது நண்பர் அவரிடம் "இதை ஏன் தினம் உற்று பார்த்துகிட்டு இருக்கீங்க ஒரு நாள் பார்த்தது தானே அடுத்த நாளும் இருக்க போகுது" என்று கேட்டதற்கு அவர்..

"அடுத்த நாளா.... நீங்க வேற ஒரு கணத்தில் இருக்கும் இது அடுத்த கணத்திலேயே இருப்பது இல்லை தெரியுமா... இது கணத்திற்கு கணம் மாறி கொண்டே இருக்கிறது இதன் தன்மை என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அதனால் தான் தினம் தினம் இதை உற்று பார்த்து கொண்டு இருக்கின்றேன்" என்றார்.

பாதி படம் வரைந்த போதே சூரியனை தொடர்ந்து பார்த்து வந்ததால் அவர் பார்வை பறி போனது. மிகுந்த ஆச்சர்ய பட தக்க வகையில் மீதி படத்தை பார்வை இல்லாமலே வரைந்து முடித்தார் வான்கோ. நிச்சயமாக சூரியனை நமது மூளை உள்வாங்கியது போல அவர் மூளை உள்வாங்கி இருக்க வில்லை. அது வேற தளத்தில் சூரியனை உள்வாங்கி கொண்டிருந்தது. அதனால் தான் மீதி ஓவியத்தை வரைய அவருக்கு கண்களின் உதவி தேவை பட்டிருக்கவில்லை.

"கண்ணை வித்து ஓவியம் வாங்கின கதையா" என்று ஒரு பழ மொழியே உண்டு. இவர் வாங்க வில்லை... வரைந்தே இருக்கிறார். 

சரி ...'மனித மனதை பிரபஞ்ச அறிவுடன் இணைக்க இவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு ஏதும் வழிமுறை உண்டா? நாம் முயன்றால் அதை செய்ய முடியுமா?'

இந்நேரத்திற்கு இந்த கேள்வி தான் உங்களுக்குள் நிச்சயமாக ஓட தொடங்கி இருக்கும் அல்லவா..?

முடியும் என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.

இது போன்ற கண்டுபிடிப்புகள் மனித மனதில் உதித்த தருணங்களை எல்லாம் உற்று கவனித்த அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார்.

அதாவது ஒரு விஷயத்தை பற்றி மிக மிக ஆழமாக யோசித்து விட்டு பிறகு அதை பற்றி யோசிக்காமல் விட்டு விடுகிறபோது இந்த உண்மைகள் தோன்றுகின்றன என்றார் அவர்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஏதாவது பெயர் நினைவு வராமல் தவித்து இருக்கிறீர்களா? அப்போது மிக கடினப்பட்டு முயன்ற போதும் நினைவுக்கு அந்த பெயர் வராமல் போகும். பிறகு சீ போ என்று விட்டு விட்டு வேறு வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அந்த பெயர் திடீர் என்று நியாபகத்திற்கு வரும்.

அது தற்செயலாக வந்தது அல்ல. முன்பு நீங்க கொடுத்த அழுத்தம் இவ்ளோ நேரம் உள்ளுக்குள்ளே வேலை செய்து கொண்டிருந்துள்ளது.

எனவே நாம் எந்த வேலை செய்தாலும் எந்த துறையாக இருந்தாலும் அது சம்பந்தமான உண்மைகளை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க ஆலன் நமக்கு ஒரு வழிமுறையை சொல்லி தருகிறார்.

நீங்கள் எந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்களோ அதை பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தொடர்ந்து மிக அழுத்தமாக அந்த சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு மேல் அதை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிற எல்லை வரை நீங்கள் அதை பற்றி பல கோணங்களில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். உங்கள் முயற்சியின் எல்லைக்கு அதை கொண்டு போக வேண்டும்.

பிறகு... திடீரென்று அதை பற்றி மறந்து விட வேண்டும். ஆம் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் வேறு வேலை பார்க்க வேண்டும். திடீரென்று அந்த உண்மை உங்களுக்குள் உதிக்கும் என்கிறார் ஆலன். 

எனவே நாம் பார்த்த விஞானிகள் உண்மை அறிய முயலாமல் வெறும் ஓய்வில் இருந்தவர்கள் அல்ல. அதை அறியும் ஆவலை அதன் எல்லைவரை கொண்டவர்கள். அந்த உண்மை மேல் தீரா தாகம் மற்றும் முடிவில்லா காதல் கொண்டவர்கள்.

இப்போது இந்த விஷயத்தை வேறு வகையில் சொல்கிறேன். அதாவது எந்த ஒரு மனிதனுக்கும் "நான்" என்கிற உணர்வு நிலை இருக்கும். அந்த நான் என்கிற உணர்வு தான் நம்மை எப்போதும் இயக்கி கொண்டு இருக்கும் ஒரு உள் உந்துதல். பல ராஜ்யங்களை சண்டையிட்டு வெல்வது முதல் பக்கத்து வீட்டு காரனை விட நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறாமை வரை உள்ளீடாக இருப்பது அந்த நான் தான். அந்த நான் ஐ தவறானது என்றும் சொல்லி விட முடியாது இந்த உலகில் நாம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள.. நாம் இயங்க அந்த "நான்" மிக தேவையாக உள்ளது.

மனிதன் மிக மிக சில கணங்களில் தான் அந்த 'நான்' அற்ற நிலையிலும் இருக்கின்றான்.

அந்த சில கணங்களில் மட்டும் தான் அந்த பிரபஞ்ச உண்மைகள் இவன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த நேரத்தில் மனிதன் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறான்.

நமது நாட்டின் வேதங்களை இயற்றிவர்கள் யார் என்று பெயர்கள் உள்ளது. அதை கவனித்து பார்த்தால் அதை இயற்றியவர்கள் என்று குறிப்பிடாமல் அதை 'கண்டவர்கள்' என்று பொருள் படும் படி பதிவு செய்து இருக்கிறார்கள். காரணம் அந்த வேத அறிவு தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி உண்மைகளை தன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டது என்றும் அந்த அறிவிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் நம்பினார்கள்.

நீங்கள் கோவில்களில் எல்லாம் சென்றால் அங்கே டியூப் லைட் வாங்கி போட்டவர் பெயர் 'உபயம்' என்று பெரிய கொட்டை எழுத்தில் இருப்பதையும் ஆனால் அதே கோவிலில் அசாத்தியமான சிற்பங்களை செதுக்கிய கலைஞன் தனது பெயரை எங்கேயும் போட்டு கொள்ளாததையும் பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய கண்டுபிடிப்புகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டவை தான் என்பதன் ரகசியம் இது தான்.

ஆர்கிமிடிஸ் நிச்சயம் அந்த ஊரில் ஒரு நல்ல மதிப்பு மிக்க ஆளாக தான் இருந்து இருப்பார். அவர் தெருவில் துணி இல்லாமல் தண்ணீர் தொட்டியில் இருந்து எழுந்து ஓடினார் என்பது இயல்பான நிகழ்வு அல்ல. சாதாரண நிலையில் அவர் நிச்சயம் அந்த காரியத்தை செய்து இருக்க வாய்ப்பில்லை. அந்த கணத்தில் அவர் 'தான் ஆர்கிமிடிஸ்' என்ற உணர்வு நிலையில் இல்லை என்பது தான் உண்மை.

மேரி கியூரி ஆழ்ந்த தூக்கத்தில் கணக்கை பூர்த்தி செய்ததும். ஐன்ஸ்டைன் வீட்டு அறையில் உட்கார்ந்து கொண்டு பிரபஞ்ச அறிவியல்களை புட்டு புட்டு வைத்ததும் ராமானுஜன் சாதாரண மனித அறிவிற்கு அப்பார்பட்ட கணக்குகளை உலகிற்கு வழங்கியதும் இப்படித்தான்.

மனிதனை அந்த மாதிரி சிந்தனை அற்ற... 'தான்' அற்ற நிலையில் வைக்கும் செயலுக்கு பெயர் தான் தியானம்.

மேல் சொன்ன விஷயங்களை பற்றி அறிவியல் மிக குறைவாகத்தான் சிந்தித்து இருக்கிறது. இதை அதிகம் பேசியது ஆன்மிகம் தான்.

ஐஸ்டைனின் கோட்பாடுகளில் அக்கறை கொண்ட அறிவியல் அவை வெளி வந்த மூலம் என்ன என்பதை ஆராய்வதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் உலகில் உள்ள எல்லா ஆன்மீக கோட்பாடுகளும் இந்த 'நான்' என்பது அழிந்தால் தனக்குள் வேறு ஏதோ ஒன்று பாய்ந்தோடும் என்ற கருத்தை வலியுறுத்துவதை பார்க்கலாம்.

"குழந்தை போல இருப்பவர்களுக்கு தான் பரலோக ராஜ்ஜியம் சாத்தியம்" என்கிறார் இயேசு. அவர் சொன்ன 'குழந்தை போல' என்பதற்கு பொருள் 'நான்' என்கிற ஈகோ அழிந்த நிலை தான். குழந்தைகளுக்கு தான் ஈகோ இருப்பதில்லை.

தன்னை உணர்தல் என்பதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பவர்களிடம் "நான் யார் என்பதை உற்று கவனி" என்ற ஒரு வரி உபதேசத்தை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தார் ரமணர்.

அந்த நான் அற்ற நிலையில் தான் ஞானம் வருவதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். ஞானம் வருகிறதோ இல்லையோ ஆனால் உலகின் மிக பெரிய அறிவியல் கருத்துக்கள் பிறந்தது விஞ்ஞானிகள் தாங்கள் "நான்" அற்ற நிலையில் இருந்த போது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகை புரட்டும் மிக பெரிய விஞ்ஞானத்தை விட்டு விட்டு இப்போது நமது கட்டுரை வாழ்வை புரட்டும் அன்றாட வாழ்க்கை பக்கம் திரும்புகிறது... அதாவது முதல் பாகத்தில் நான் சொன்ன மூளை மற்றும் மனம். இதில் மூளை பற்றிய அலசலை முடித்துவிட்டு இப்போது கொஞ்சம் மனம் பற்றி பேசப்போகிறது.

நாம் நமது வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ விரும்புகிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறோம். புகழ் அடைய நினைக்கின்றனர். சாதிக்க நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் நமது மூளையின் அற்புத ஆற்றலை மிக சரியாக தான் நாம் பயன் படுத்துகிறோமா?

பிரபஞ்ச உண்மைகளை மூளை உட்கிரகிக்க சிந்தனை அற்ற ...'நான்' அற்ற நிலை உதவியது போல இதற்க்கு உதவ வழி முறை ஏதும் உள்ளதா? அப்படி பயன்படுத்தி வாழ்கையை செழுமையாக வாழ்ந்தவர்கள் இருக்கிறார்களா?

அடுத்த வரும் பாகங்களில் தொடர்ந்து சிந்திப்போம்...





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














No comments:

Post a Comment