மனம் எனும் மாய தேவதை! பாகம் 4 - விழிப்புணர்வு, தியானம்

 



பாகம் 4 : விழிப்புணர்வு, தியானம்

    றவைகளை உற்று கவனித்து பாருங்கள். குறிப்பாக தரையில் அமர்ந்து இரையை உண்ணும்போது அவைகள் மிகுந்த விழிப்போடு இருப்பதை காண முடியும். அவைகளின் விழிப்போடு மனிதன் போட்டி போட முடியாது என்பதை காணலாம். தான் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து ஓர் கற்பனை வட்டம் அவை வரைந்து வைத்து கொள்கின்றன. அந்த வட்டத்தை யாரேனும் நெருங்கும் வரை தான் அவை அமர்ந்து இருக்கும். அந்த எல்லையை தொட்டதும் அவை பறந்து விடுகின்றன.

சரி ஒரு பறவைக்கு உயிர் வாழ விழிப்புணர்வு தேவைப்படலாம். ஆனால் மனிதனுக்கு எதுக்கு அந்தளவு விழிப்புணர்வு? அவன் கொஞ்சம் மந்தமாக இருந்தால் தான் என்ன?

வாழ்க்கையில் வாழ்க்கையை மிக தெளிவாக மயக்கம் மற்றும் மாயை இல்லாமல் வாழ்வதற்கும்... இருப்பதை இருப்பது போல பார்ப்பதற்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

உலகில் உள்ள எல்லா மதங்களிலும் ஆழ்ந்து பார்த்தால் இந்த விழிப்புணர்வு தான் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. (கட்டுரை ஆன்மீக கட்டுரையாக மாறிவிடுமோ என்று பயப்படாதீர்கள். இது அறிவியல் கட்டுரை தான்)

விழிப்பு கொண்ட மனிதன் தான் உலகை தெளிவாக பார்க்கிறான். விழிப்போடு இருக்கும் மனிதன் தான் வாழ்வை முழுமையாக வாழ்கிறான். விழிவுணர்வு கொண்ட மனிதன் தான் மாயையில் சிக்காமல் தப்பிக்கிறான். அந்த விழிப்பை கொடுக்கும் யுக்திக்கு பெயர் தான் "தியானம்."

ஒரு ஜென் குருவை ஒருவர் அணுகி "நான் தியானம் செய்வது எப்படி என்பதை கற்க வந்திருக்கின்றேன் எனக்கு தியானம் சொல்லி தருவீர்களா" என்கிறான்.

அதற்க்கு அந்த குரு "அப்போ நீ வேற ஆளை தான் பார்க்கணும் காரணம் நாங்க இங்க ஏதோ ஒன்றை எப்படி செய்வது என்று சொல்லித் தரவில்லை மாறாக எதையும் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை தான் கற்று கொடுகின்றோம்" என்றார்.

தியானம் என்பதை பற்றி ஒரு அடிப்படை விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பொருள் அல்லது கருத்து மீது கவனத்தை குவிப்பது "Meditation" அல்ல. அது "Concentration''. எதையோ ஒன்றை பற்றியே சிந்திப்பது தியானம் அல்ல அது "Thinking". 

தியானம் என்பது செயல் அல்ல அது ஒரு நிலை. ஏதும் செய்யாது அனைத்தையும் உள்வாங்கும் விழிப்பு நிலை. அந்த நிலையில் நாம் நம்மை வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உட்கார்ந்து கொண்டு செய்வது தான் தியானம் என்பது தவறான கருத்து. தியானம் என்ற நிலையில் நாம் நடக்கலாம் குளிக்கலாம் படலாம் ஆடலாம். எந்த செயலையும் நமது முழு விழிப்போடு நிகழ் காலத்தில் இருந்து செய்தால் அது தான் தியானம்.

இந்த தியானம் ஏன் முக்கியம்?

சுவிட்ச் போட்டால் பாடும் ரேடியோ போல நமது மனம் 24 மணி நேரமும் சிந்தனை எனும் சிதறலை ஒலி பரப்பிக்கொண்டே இருக்கிறது. சூரியனில் ஒரே ஒரு வினாடிக்கு உண்டாகும் மொத்த ஆற்றலை கொண்டு பூமிக்கு பல நூறு ஆண்டுகளுக்கு ஆற்றலை வழங்க முடியும் என்கிறார்கள். ஆனால் சூரியனின் ஒரு விநாடி ஆற்றலில் பல லட்சத்தில் ஒரு சதவீதம் தான் பூமிக்கு கிடைக்கிறது.

அதை போல மனம் அசாத்திய ஆற்றலை உள்ளடக்கிய ஒரு ஆற்றல் பெட்டகம். ஆனால் இதன் ஆற்றலை தொடர்ச்சியான சிந்தனை சிதறல்களால் வீணடிக்கப்படுவதால் அதன் ஆற்றலை நாம் முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. அதை கொஞ்ச நேரம் அணைத்து வைக்க முடிந்தால் அளப்பரிய ஆற்றலை அது சேமிக்கிறது.

ஒரு வெள்ளை காகிதத்தை வெயிலில் காட்டினால் அது பற்றி எரிவது இல்லை ஆனால் சிதறும் கதிர்கள் ஒரு லென்ஸ் மூலம் குவிக்க பட்டால், பேப்பரை எரிக்கும் ஆற்றல் கொள்கிறது. இதே போல தான் சிதறி கிடக்கும் மனதை தியானம் மூலம் ஒன்றிணைக்க முடிந்தால் அது அளப்பரிய ஆற்றல் கொண்டதாகிறது.

24 மணி நேரத்தில் நீங்கள் மனதிற்கு 5 நிமிடம் ஒய்வு கொடுத்தால் போதும். மீதி 23 மணி நேரம் 55 நிமிடங்கள் அது மிக தரம் உள்ளதாக மாற்றுகிறது. அந்த தியானம் ஒரு நிதானத்தை கொடுக்கிறது.

சரி அந்த தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?

நீங்கள் நடக்கும்போது உங்களுக்குள் என்ன சிந்தனை ஓடுகிறது என்று கவனித்து இருக்கிறீர்களா. அப்போது உலகத்தின் எல்லா சிந்தனையும் ஓடும் ஆனால் "நடக்கிறோம்" என்ற சிந்தனை மட்டும் ஓடாது. குளிக்கும் போது "குளிக்கின்றோம்" என்ற சிந்தனை தவிர மற்ற எல்லா சிந்தனையும் ஓடும்.

நாம் எதை செய்தாலும் அதை செய்கிறோம் என்ற உணர்வோடு முழுமையாக ஒன்றி விழிப்போடு நிகழ்காலதில் இருந்து செய்தால் அது தான் தியானம்.

நடக்கும்போது நடக்கிறோம் என்று கவனித்தபடி ஒவொரு அடி எடுத்து வைத்து நடந்தால் அது தான் தியானம்.

புத்தர் ஒரு முறை முகத்தருகே பறந்த ஈ ஒன்றை கையால் விரட்டினார். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் விரட்டினார். இதை கவனித்த சீடர் இரண்டாம் முறை ஏன் ஈ இல்லாமலே விரட்டினீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு புத்தர் முதல் முறை கவனம் இல்லாமல் அனிச்சை செயலாக விரட்டி விட்டேன் அதான் இரண்டாம் முறை கவனத்தோடு விரட்டினேன் என்றார். ஆதாவது ஒரு ஈ யை விரட்டினால் கூட அதை கவனத்தோடு முழு விழிப்பாக விரட்ட வேண்டும் என்று சீடர்களுக்கு வற்புறுத்தினார்.

இந்த நடக்கும் தியானம் எல்லாம் சரிபட்டு வராது உட்கார்ந்து கொண்டு செய்யும் தியானம் தான் செய்ய முடியும். ஆனால் உட்கார்ந்தாவே மனம் தாறு மாறாக ஓட ஆரம்பிக்கிறதே அதை அடக்குவது எப்படி என்று கேட்டால். மனதை அடக்க ஒரு சூத்திரம் சொல்கிறார்கள் பெரியோர்கள்.

"மனம் அது அடக்க நினைத்தால் ஆடும்.. உற்று கவனித்தால் அடங்கும்"

இதான் சூத்திரம்.

ஒரு அமைதியான இடத்தில உட்கார்ந்து கொள்ளுங்கள். தண்டு வடம் நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். பிறகு கண்ணை மூடுங்கள். ஒரு பிஸியான சாலையில் ஓரத்தில் நின்று கொன்டு நீங்கள் அந்த சாலையில் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கும் ட்ராபிக்கை கவனித்தால் எப்படி இருக்கும்? அப்படி கண்ணை மூடி மனதிற்குள் வரும் எண்ணங்களின் ட்ராப்பிக்கை உற்று கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையோடு. இது எனது எண்ணம் அல்ல என்று வேறு யாரோ 3 ஆவது மனிதனின் எண்ணத்தை கவனிப்பதை போல கவனிக்க வேண்டும். அப்போது நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் எது வந்தாலும் அதனுடன் நாம் எந்த வகையிலும் ஒட்டி கொள்ள கூடாது. தள்ளி நின்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் என்ன ஆகும்?

கவனிக்க கவனிக்க வேகமாக இயங்கி கொண்டிருத மனம் மெதுவாக வேகம் குறையும். தொடர்ந்து உற்று பார்க்க மேலும் வேகம் குறையும் பிறகு நிமிடத்திற்கு 100 எண்ணம் இருந்தால் அது நிமிடத்திற்கு 50 ஆக குறையும். இன்னும் விடாமல் உற்று கவனித்தபடியே இருந்தால் அங்கொன்று இங்கொன்றாக எண்ணம் ஒரு மெல்லிய இழை போல வந்து போகும். பிறகு ஒரு கட்டத்தில் அந்த இழை கூட அறுந்து போய்... எண்ணம் அற்ற வெறும் விழிப்பு நிலையில் சில கணம் இருப்போம். அப்படி இரண்டு வினாடி இருக்க முடிந்தால் அதுவே பெரிய மாறுதல் என்கிறார்கள் பெரியவர்கள்.

அப்படி தியானத்திற்கு பழகிய மனதை கொண்டு செய்யப்படும் எந்த வேலையும் தரத்தில் உயர்ந்து இருக்கும் என்கிறார்கள்.

மனதில் என்ன ஓடுகிறது என்பதை எப்போதுமே உற்று கவனித்தபடி இருப்பது ஒரு நல்ல பயிற்சி என்கிறார் புத்தர்.

ஒரு புத்தர் கதை.....


பொதுவாக புத்தர் ஒரு மிக சிறந்த ஆசான். புரியாத விஷயத்தை எளிமையாக புரியவைப்பதில் வல்லவர். ஒரு முறை மனதை அடக்குவதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். சீடர்களுக்கு புரிந்தபாடில்லை. 

"அய்யா மனதை எப்படி அய்யா அடக்குவது" என்கிறான் ஒரு சீடன்.

புத்தர் அவனுக்கு பதில் அளிக்காமல் "அது இருக்கட்டும் நீ ஏன் உன் கால் கட்டை விரலை ஆட்டிக் கிட்டே இருக்க ஆட்டாம பாடம் கேட்க மாட்டியா" என்கிறார்.

பிறகு மேலும் 5 நிமிடம் வேறு கதை பேசிவிட்டு பின் அந்த சீடனை பார்த்து "ஆ..மாம்..... இப்ப ஏன் நீ உன் கால் கட்டை விரலை ஆட்டாமல் இருக்க" என்று கேட்கிறார்.

"என்ன குரு... இது ஒரு விஷயம்னு இதை எடுத்து வச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க... முதல்ல நான் கவனிக்காத காரணத்தால் கால் கட்டை விரல் ஆடியது... அப்புறம் நீங்க அதை சுட்டி காட்டியதால் நான் அதை உற்று கவனித்தேன். அதனால் அது இப்போ ஆட வில்லை" என்றான்.

புத்தர் சிரித்து விட்டு "மனம் ஆடாமல் நிறுத்துவதற்கும் இதான் வழி" என்றார்.

பாகம் 4 - விழிப்புணர்வு, தியானம் பதிவை காணொளி வடிவில் காண 👇




இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண















No comments:

Post a Comment