மனம் எனும் மாய தேவதை! பாகம் 8 - நீர் இல்லாத கிணறு



 

பாகம் 8 : நீர் இல்லாத கிணறு

        மது எண்ணங்களின் வேலை என்ன? நமது எண்ணங்களின் வலிமை என்ன? நமது சிந்தனைகளுக்கும் நமது செயல்பாட்டிற்கும் நமது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? 

இது போன்ற பல விஷயங்களை மிக ஆழமாக சிந்தித்து ஆராய்ந்தார் ஜேம்ஸ் ஆலன் என்கிற தத்துவ ஆய்வாளர்.

ஜேம்ஸ் ஆலன் தனது 15 ஆவது வயதில் பள்ளியை விட்டு சென்றார். ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையை குறித்து குறிப்பாக மனித சிந்தனையை குறித்து மிக ஆழமாக சிந்தித்தார். ஓரு பொருளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு அதை தொடர்ந்து ஆறாயும் ஒரு விஞ்ஞானி போல ஜேம்ஸ் ஆலன் எடுத்து மிக தீவிரமாக ஆராய்ந்த பொருள் மனித மனம். இதன் விளைவாக மனித மனம் பற்றிய பல அரிய உண்மைகளை உலகிற்கு கண்டு சொன்னார் ஆலன்.

அவரது முதல் புத்தகமான "ஏழ்மையில் இருந்து வளமைக்கு" (From Poverty to Power) அவரது வித்யாசமான ஆழமான சிந்தனைகளை உலகிற்கு காட்டியது.

ஆலன் நிறைய புத்தகங்களை வெளியிட்டவர் ஆனால் அவரது 3 ஆவது புத்தகமான "As a Man Thinketh" இன்று வரை பதிப்புகளில் சாதனை படைத்த புத்தகம்.

மனித மனம் பற்றிய மிக ஆழமான பல உண்மைகளை எடுத்து சொன்ன ஒரு புத்தகம். பைபிள் வாசகமான "மனிதன் சந்தித்ததை போல அவன் இருக்கின்றான்" (As a man thinketh in his heart, so is he) என்கிற வாசகத்தில் இருந்து தனது புத்தகத்துக்கு "As a man thinketh" என்ற பெயரை வைத்து இருந்தார்.

அந்த புத்தகத்தில் அவர் மனித மனதை சரியாக பயன்படுத்துவது எப்படி? சரியாக சிந்திக்கும் முறைகள் என்பது என்ன? நமது எண்ணங்களை கையாள்வதன் மூலம் நமது வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது எப்படி போன்ற பல விஷயங்களை எடுத்து சொன்னார். 

நம்மூரில் இருந்து ஒருவர் அதை படித்து பார்த்து மிக ரசித்து ஆழ்ந்தார். அடடே இவைகள் வாழ்க்கையையே மாற்றும் சிந்தனைகள் ஆயிற்றே என்று ஆச்சர்யப்பட்டார். நல்ல அறிஞர்களில் தேச பாகுபாடு பார்க்க கூடாது என்று எண்ணம் கொண்டார். இவைகளை நமது நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதன் விளைவாக நிறைய புத்தகங்களை எழுதினார். அந்த மனிதரின் பெயர் M. S உதய மூர்த்தி. (இப்போது அவர் இவ்வுலகில் இல்லை )

அவரது, 

"எண்ணங்கள்" 

"மனம் பிராத்தனை மந்திரம்" 

"சாதனைக்கோர் பாதை" 

"நெஞ்சமே அஞ்சாதே நீ"

"உலகால் அறிய படாத ரகசியம்"

"உயர் மனிதன் உண்டாக்கும் எண்ணங்கள்"

"ஆத்ம தரிசனம்"

"தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்"

"உன்னால் முடியும்"

போன்ற பல புத்தகங்களில் உள்ளீடாக இருப்பது ஜேம்ஸ் ஆலன் அவர்களின் கருத்துகள் தான்.

இயக்குனர் பாலசந்தர் "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்த போது "உன்னால் முடியும்" எனும் தலைப்பில் புத்தகம் எழுதி இளைஞர்களிடையே எழுச்சியை உண்டு பண்ணி இருந்த உதய மூர்த்தி அவர்களின் பெயரை தான் கதாநாயகனின் பெயராக வைத்தார்.

ஜேம்ஸ் ஆலன் கருத்துகளை பகிர்ந்து கொள்ள MS உதயமூர்த்தி அவர்கள் விரும்பியது போல MS உதயமூர்த்தியின் கருத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவரது மற்றும் ஆலன் அவர்களது மனம் குறித்த சில சிந்தனைகள் மிக ஆழமானவை. ஒரு வரி கருத்து கூட நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைத்து புரிதலை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணமாக அவரது ஒரு கருத்தில் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை மாறாக அவனை அடையாளம் காட்டுகின்றன" என்கிறார்.

நமக்குள் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் மந்திர வாக்கியம் இது. ஒரு உதாரணத்திற்காக கிராமத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்த ஒருவன் நகரத்திற்கு மேல் படிப்பிற்கு சென்ற மாணவன் அங்கே பல தீய பழக்கத்திற்கு ஆளாகிறான் என்று வைத்து கொள்வோம். "ஏன் இப்படி கெட்டு போய்ட்ட" என்று கேட்டால் "நான் என்ன பண்றது நான் சேர்ந்த நண்பர்களும் இப்போ இருக்கும் சூழ்நிலைகளும் அப்படி" என்று சொல்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அது சுத்த பொய் என்கிறார் ஆலன்.

"தான் விரும்பாத வரை... தான் இடம் கொடுக்காத வரை எப்படிப்பட்ட சூழ்நிலையும் ஒரு மனிதனை கெடுக்க முடியாது" என்கிறார் ஆலன். சூழ்நிலை தான் மனிதனை உண்டாக்குகிறது என்று நாம் கேள்வி பட்டிருப்போம். அதை மிக உறுதியாக மறுக்கிறார் ஆலன். 

"சூழ்நிலையால் மனிதனை உண்டாக்க முடியாது ஆனால் அவனுக்குள் இருக்கும் நிஜ மனிதன் என்ன என்பதை அடையாளம் காட்ட முடியும்" என்கிறார். ஒருவன் நகரத்திற்கு வந்து கெட்டவன் ஆகிவிட்டான் என்றால் அவனுக்குள் கெட்டவன் ஏற்கனவே இருந்து இருக்கின்றான் என்கிறார். அப்படி இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்கிறார்.

இதே கருத்தை புத்தர் பல இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றார். தண்ணீர் இல்லாத கிணற்றில் நீங்கள் எத்தனை முறை இறைத்தாலும் வெறும் காலி பாத்திரம் தான் திரும்பி வரும் நீர் வராது என்கிறார்.

ஒரு முறை ஒரு கிராமத்தின் வழியாக கடந்து செல்கிறார் புத்தர். வழக்கமாக தானம் கேட்டு வாங்கி சாப்பிடுவது தான் அவர் வழக்கம். அந்த ஊரிலும் அப்படி கேட்கிறார். அப்போது அவர் மேல் கடுப்பான ஒருவர் "கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு பிச்சை எடுத்து சாப்பிடற வெக்கமா இல்ல தூ" என்று முகத்தில் உமிழ்கிறார்.

புத்தர் அதற்கு எந்த மறுவினையும் ஆற்றாமல் மிக சாந்தமாக "வேறு ஏதும் தர வேண்டி இருந்தால் சீக்கிரம் தாருங்கள் அய்யா நான் அடுத்த கிராமத்திற்கு செல்ல வேண்டும்" என்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அவர் சீடர் ஒருவர் கொஞ்சம் நேரம் கழித்து அவரிடம் "எப்படி குருவே இவ்ளோ பொறுமையா இருக்கீங்க? அவன் காரி துப்பறான் உங்களுக்கு கோபமே வரலையா?" என்று கேட்கிறான்.

அதற்கு புத்தர், "அந்த மனிதன் மிக கால தாமதமாக வந்து விட்டான்" என்கிறார்.

"இதில் பொறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர் செய்ததற்கு மறுவினை ஆற்ற எனக்குள் அங்கே யாருமே இல்லை என்பது தான் உண்மை. வெறும் சூனியத்தில் எச்சில் துப்பினால் அது எப்படி கடந்து போய் கீழே விழுமோ அப்படி அவன் துப்பியது என்னை கடந்து சென்று விட்டது. சூழ்நிலைக்கு மறுமொழி ஆற்றும் ஒருவன் எனக்குள்ளிருந்து அழிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அந்த மனிதன் என்னை கோபப்படுத்த மிக தாமதமாக வந்து விட்டான்" என்றார்.

"நீர் இல்லாத வெற்று கினற்றில் எத்தனை முறை இறைத்தாலும் நீர் எடுக்க முடியாது... உள்ளுக்குள் கோபம் என்ற ஒன்று முற்றிலும் அழிந்து போன ஒருவனை எந்த சூழ்நிலையும் கோபப்படுத்த முடியாது" என்கிறார் புத்தர்.

புத்தர் சொன்ன மிக சக்தி வாய்ந்த வாசகம் ஒன்று உண்டு. 

"உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சல் மூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான்"

நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.

ஜேம்ஸ் ஆலனின் "சூழ்நிலைகள் மனிதனை உண்டாக்குவது இல்லை, அடையாளம் காட்டுகின்றன" என்ற வாசகம் நமக்குள் தலைகீழ் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. சூழ்நிலை தன்னை மாற்றி விடுமோ என்று அஞ்சும் நபர்கள் ஆலனின் கருத்தை நம்புவார்கள் எனில் சூழ்நிலை நமது கையில் தான் உள்ளது. எனவே அதற்கு அஞ்ச வேண்டிய தேவை இல்லை என்று தன்னம்பிக்கை கொள்ளலாம்.

தொடர்ந்து சிந்திப்போம்...

பாகம் 8 - நீர் இல்லாத கிணறு பதிவை காணொளி வடிவில் காண 👇





இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண














No comments:

Post a Comment