Showing posts with label பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!. Show all posts
Showing posts with label பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!. Show all posts

பிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

பிடிவாதக் குழந்தைகள்... 
வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்!

'நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்பது அந்தக் காலப் பிரசாரம். அதற்குப் பிறகு, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று அது சுருங்கியது. ஆனால், அரசு கூறுகிறதோ இல்லையோ, பொதுவாகவே இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடி, பள்ளியில் இடம் கிடைக்கப் போராடும் அவலம், கல்லூரிக் கட்டணங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், திருமணச் செலவுகள்... என்று குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு செலவழிக்க வேண்டிய தொகையின் கூட்டல் பூதாகரமாக எழுந்து நிற்பதால், 'நமக்கு ஒரு பிள்ளை போதும்’ என்று ஏக மனதாகத் திட்டமிட்டுவிடுகிறார்கள் பல தம்பதியர். ஆனால், அந்த 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ இருக்கிறதே... அதை வளர்ப்பதற்குள்ளாகவே விழி பிதுங்கிவிடுகிறது பலருக்கு. அதிஅற்புதமான ஐ.க்யூ., அருமையான கற்பனைத்திறன், புத்திசாலித்தனம்... இவற்றுடன் அளவு கடந்த சேட்டை, அதிமேதாவித்தனம், எடுத்ததற்கெல்லாம் கோபம், பிடிவாதம் என்ற கலவையாகத்தான் இருக்கிறது இன்றைய சுட்டிகளின் சாம்ராஜ்யம்.

எதற்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கும், அடம்பிடிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலாகவே உருவாகி இருக்கிறது. அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டியது பெற்றோர்கள்தான். ஒரே குழந்தையாக இருப்பதால் விட்டுக்கொடுத்தல், பகிர்தல் எதுவுமே இல்லாமல் வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்காக சில வழிமுறைகளைச் சொல்கிறார் மூத்த உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.

''ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சரியா, தவறா என்பது தனிமனிதரைப் பொருத்த விஷயம். ஆனால், அது குழந்தைகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்பதற்கான வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளன. பல வன்முறைச் சம்பவங்களில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது, இதுபோல பால்யத்தில் தனிமை, பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காமல்போதல் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனால், ஒரு குழந்தை என்றாலும் அதைத் தனிமையில்விடாமல் அரவணைத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.

எந்தக் குழந்தையும் பிறந்து, வளர்ந்து வரும்போதே 'நான் மட்டும்தான்... எனக்கு மட்டும்தான்’ என்று சொல்வது இல்லை. 'தான் மட்டும்’ என்ற அந்த மனோபாவத்தைக் குழந்தைக்கு ஊட்டுவதும் பெற்றோர்கள்தான். என்ன வாங்கி வந்தாலும், 'இது எல்லாமே உனக்குத்தாண்டா செல்லம்’ என்று சொல்லிச் சொல்லியே, அப்படி ஒரு மனோபாவத்தைச் சிறுவயது முதலே வளர்த்துவிடுகிறோம். எனவே, குழந்தைகளிடம் நமது அணுகுமுறை கவனமாக இருக்கவேண்டும்.

இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில், தங்களுடைய 'இல்லாமையை’ சமரசம் செய்வதற்காகவே, குழந்தை என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, பக்கத்து வீட்டில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிவிட்டால், அதைவிடக் கொஞ்சம் விலை உயர்ந்ததாக தன் பிள்ளைக்கு வாங்கித் தருவது நிகழ்கிறது. இதனால் குழந்தைக்கு அந்தப் பொருளின் மதிப்பே தெரியாமல் போய்விடும். இது எல்லாமேதான், பூமராங் போல பின்னாளில் அவர்களையே நோக்கித் திரும்பி வருகிறது.

குழந்தைகள் எதையாவது கேட்டு அடம்பிடிக்கும்போது, மிகக் கடுமையாக எதிர்க்கவும் கூடாது. அதேசமயம், 'என்கிட்ட காசே இல்ல'' என்று அன்னக்காவடி போலப் புலம்பவும் கூடாது. 'ஏன் அந்தப் பொருள் அப்போதைக்கு வேண்டாம்’ என்பதை யதார்த்தமாக எடுத்துச் சொல்லி, வேறு ஏதாவது பொருளை வாங்கித் தரலாம். என்னதான் அழுது அடம்பிடித்தாலும், அதற்கு இடம்கொடுக்காமல் உறுதியாக இருந்து பழகிவிட்டால், பிறகு, உங்களிடம் 'பாச்சா பலிக்காது’ என்று தெரிந்து, அவர்களே வழிக்கு வருவார்கள். பிள்ளைகளிடம் கோபப்படுவதோ, எரிச்சல்படுவதோ இல்லாமல், உண்மையான அக்கறையோடு செய்ய வேண்டும். இதற்கு நிறையப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை.

ஒற்றைக் குழந்தையாக இருக்கும்போது, அதற்கு பிரைவேட் - ஹோம் டியூஷன் என்றெல்லாம் ஏற்பாடு செய்யக் கூடாது. குழுவினரோடு பழகுவதுபோல, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு அனுப்பவேண்டும். விளையாட்டுகளிலும், பாஸ்கெட் பால், ஃபுட்பால் போன்ற குழு விளையாட்டுகளில் சேர்த்துவிடவேண்டும். பாட்டு, நடன வகுப்புகளுக்குப் போகும்போது, மற்றவர்களுடன் கலந்து பழகவும், சூழ்நிலையை அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும் குழந்தை பழகும்' என்றவரிடம், ''வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், டிவி என்று நவீன 'காட்ஜெட்ஸ்’ உடன் வளரும் குழந்தைக்கு மனதளவில் உண்டாகும் பாதிப்புகள் என்ன? அதை எப்படிச் சரிசெய்வது?'' என்று கேட்டோம்.

''அது, அந்த சாதனங்களைக் குழந்தைகள் எந்த அளவுக்கு உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. எந்த ஒரு விஷயமுமே அளவோடு இருக்கும்போது தீங்கு தராது. அளவுக்கு அதிகமாகி அதில் மூழ்கும்போது, அவர்கள் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். தங்களின் தனி உலகத்தில்தான் மட்டுமே பயணிப்பார்கள். இதைத் தடுக்க, கம்ப்யூட்டர், டி.வி, வீடியோ கேம்ஸ் எல்லாவற்றுக்குமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிட வேண்டும். ''நீ சமத்தா படிச்சு முடிச்சேன்னா, இன்னிக்கு போனஸா ஒரு மணி நேரம் நீ கேம்ஸ் விளையாடலாம்’ என்று சொன்னால், குழந்தை படிக்கவும் செய்யும். விளையாட்டில் கட்டுப்பாடும் வரும். இது போல நேர எல்லையை வகுத்து, அதன்படி சீராகப் பராமரித்தாலே போதும்; அவர்களே அந்த ஒழுங்குக்கு வந்து விடுவார்கள். அதிக நேரம் அதில் உட்கார்ந்தால் என்ன ஆகும் என்று சொல்லி, அதன் விளைவுகளையும் அவசியம் புரியவைக்க வேண்டும்'' என்றார்.

''ஒற்றைக் குழந்தை வைத்துள்ள பெற்றோர்களுக்கு டிப்ஸ்...!''

3 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி குழந்தைகள் சிறப்பு நிபுணர் ஜனனி ஷங்கர் பேசியபோது, அவருடைய விரலும் பெற்றோர்களை நோக்கித்தான் நீண்டது.

''பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் சூழலில், குழந்தைக்காகக் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். இரண்டு பேருமே பிஸி என்றால், ஒருவர் இல்லாதபோது இன்னொருவர் வீட்டில் இருப்பது போல மாற்றிக்கொள்ளலாம். சனிக்கிழமை ஒருவர் இருந்தால், ஞாயிற்றுக்கிழமை இன்னொருவர் இருக்கலாம். ஒருவர் ஆபீஸ் போனால், மற்றவர் வீட்டில் இருந்து பணி செய்யலாம். இது போன்ற திட்டமிடலில் ஆரம்பித்து, எல்லாவற்றிலுமே குழந்தையை முதன்மைப்படுத்திச் செய்யவேண்டும்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும் யாராவது பெரியவர்களை உடன் வைத்துக்கொள்வது நல்லது. நம் அப்பா, அம்மா, மாமியார் போன்ற சொந்தங்களிடம் விட்டுச் செல்லும்போது குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களும் வரும். சுத்தமான, ஆரோக்கியமான உணவும் கிடைக்கும்.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டிப்பாக கிரெச்சில் விடக் கூடாது. 3 - 4 வயதுக்குள் தான் ஒரு குழந்தையிடம் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு உருவாகிறது. அதற்கு முன்பே காப்பகத்தில் விடும்போது, மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில், எல்லா வகையான நோய்த்தொற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்தது, 3 வயது வரையிலுமாவது குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது அதன் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. கிரச்சில் உள்ள கேர்டேக்கர்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நமக்குத் தெரியாது. அது அப்படியே குழந்தைக்கு வரலாம். பெற்றோர் இல்லாத தனிமை, கோபம் எல்லாம் சேர்ந்து, குழந்தைக்கு மனதினுள் புதைந்த கோபமாக இருக்கும். அது வளர்ந்து பெரிதாகும்போது, அந்தக் கோபம் வெடிக்கும். 

''என் ஃப்ரெண்ட் ஆகாஷ் அம்மா எல்லாம் எப்படி அவனைப் பார்த்துக்கிட்டாங்க? 

நீ என்னைப் பார்த்துகிட்டியா?''

என்று ஒப்பிடச் சொல்லும்.

குழந்தையும் நன்றாக வளரவேண்டும், சம்பாதிக்கவும் வேண்டும் என்றால், சிற்சில சமரசங்களைச் செய்துகொண்டு, உறவினர்களையே வீட்டில் வைத்துக்கொள்ளலாமே! இல்லையெனில், உடல்ரீதியாக, மனரீதியாகப் பாதிக்கப்பட்டு, போதிய ஊட்டச்சத்தும் இல்லாமல் போகும். குழந்தையின் எதிர்காலம் ஆரோக்கியமான அமையவேண்டுமென்றால், அதற்குத் தேவை பணத்தைத் தாண்டி, உங்கள் அருகாமையும் அன்பான அரவணைப்பும்தான்!''

- பிரேமா நாராயணன்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ர.சதானந்த்

நன்றி - vikatan.com


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

Accumulation of waste / toxins in our body is disease
Elimination of waste / toxins is cure

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

திருக்குறள் (அறிவுடைமை #0423)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை: 

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.


Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com