‘ஆட்டுக்கால் சைவமா?’ என்று
ஏற்காடு மலைவாசிகளிடம் கேட்டால், ‘ஆமாம்’ என்று நிச்சயமாகப் பதில் அளிக்கின்றனர்.
சேர்வராயன் மலையில் ‘ஆட்டுக்கால்’ என்றும், கொல்லி
மலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால்
கிழங்கு’ என்றும் ஒரு தாவரத்தின்
கிழங்கு அழைக்கப்படுகிறது. இந்த கிழங்கை சூப் வைத்து சாப்பிட்டால், ஆட்டுக்கால்
சூப் போன்ற சுவையுடன் இருக்கும், எனவே இது ‘சைவ ஆட்டுக்கால்’
என்று அழைக்கப்படுகிறது. Polypodiaceae தாவரக்
குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் Drynaria Quercifolia. இது
மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகை தகரை, பெரணித் தாவரம்.
பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியதுபோலக் காணப்படும்
கிழங்குகள், கிலோவுக்கு முன்னூறு முதல் முன்னூற்றைம்பது ரூபாய்வரை
விற்கப்படுகின்றன. சாக்குத் துணியில் சிறிது மணலை இட்டு வைத்துக் கிழங்கை
மூடிவைத்தால் ஆறு மாதம்வரை இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சிறப்பு.
எளிய உபாதைகளுக்கு மருந்து
கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்றவர்களுக்கு
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பற்றி தெரிந்திருக்கும். ஆட்டுக்கால் சூப்பின்
வாசனையுடன், சூடாக ஆவி பறக்க பறக்க மணக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு
சூப்பை அந்த மலைகளின் குளிரில் அமர்ந்தபடி சாப்பிட அருமையாக இருக்கும். இந்த
முடவாட்டுக்கால் கிழங்கு, சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான
உபாதைகள், மலச்சிக்கல் போன்றவை குணமாகும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலிக்கும் சிறந்த
தீர்வாக இருக்கிறது. எலும்பு
அடர்த்திக் குறைவு (Osteopenia) பிரச்சினையைத்
தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கமுறுக்கி, கிருமிநாசினி, உரமாக்கி போன்ற செய்கைகள் இதற்கு உண்டு.
“சின்ன வயசுல இருந்தே இந்தக் கிழங்க அடிக்கடி சாப்பிட்டு வர்றோம், எனக்கு எழுபது வயசு ஆகுது காய்ச்சலு, வலினு ஆஸ்பத்திரிக்கே நான் போனதில்ல” எனச் சிலாகிக்கிறார் சேர்வராயன் மலை முதியவர் ஒருவர். உடல் வலி, மூட்டு வலிக்கு அப்பகுதி மக்கள் உடனடியாகப் பயன்படுத்தும் மருந்து இந்தச் சைவ ஆட்டுக்கால்தான்.
உணவாக
கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாயில்
அடக்கிக்கொண்டால் நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு. தோல்
பகுதியை நீக்கிவிட்டு, கிழங்கைப் பயன்படுத்துவதே கிழங்குக்கான சுத்தி முறை.
முடவன் ஆட்டுக்காலின் தோலை நீக்கிவிட்டு, கிழங்கைப்
பசைபோல அரைத்துக்கொண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து, சீரகம், சிறு
வெங்காயம், மிளகு, பூண்டு அரைத்துக் கலந்து சூப் செய்து குடிக்கலாம். சைவ
ஆட்டுக்கால் சூப் நோய்களை நீக்குவது மட்டுமன்றி, மிகவும்
சுவையானதும்கூட.
சூப் மட்டுமின்றி சட்னி, துவையல்
என உணவாக முடவன் ஆட்டுக்கால் கிழங்கைப் பயன்படுத்தி வந்தால் நவநாகரிக நோய்கள்
நெருங்காது என உறுதியளிக்கின்றனர் மலைவாசிகள்.
அடுத்த முறை மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லும்போது, முடவன் ஆட்டுக்கால் சூப்பைக் குடிக்க மறக்காதீர்கள்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்முறையை விளக்குகிறார்
மேட்டூரை சேர்ந்த ஃபிஸியோதெரபிஸ்ட் விஜயா.
தேவையான பொருள்கள்
முடவாட்டுக்கால் கிழங்கு - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
அரைக்க
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 7 முதல் 10 பல்
கசகசா- 2 சிட்டிகை
தேங்காய் - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - சின்னது 1
மிளகு - 1 டிஸ்பூன்
செய்முறை
* அரைக்கக் கூறியுள்ளவற்றை அரைத்து தனியே எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
* முடவாட்டுக்கால் கிழங்கின் மேற்பகுதியில் இருக்கும் தோலை
நீக்கி எடுத்துவிட வேண்டும். பின்பு கிழங்கினை சின்னச் சின்னதாக நறுக்கி எடுத்து
வைக்கவும்.
* அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில்
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைத்து
வைத்தவற்றை சேர்த்து, இதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். இதனுடன்
கிழங்கினை சேர்த்து வதக்கி, ஒரு லிட்டர் அளவிற்கான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* 20 முதல் 30 நிமிடங்களில் கிழங்கு நன்கு வெந்து, மசாலா
சேர்ந்து சூப் மணமணக்கும். இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பருகவும்.
தொடரும்...