Showing posts with label 03. இரண்டு ஆனால் ஒன்று. Show all posts
Showing posts with label 03. இரண்டு ஆனால் ஒன்று. Show all posts

நலம் நலமறிய ஆவல் - 03. இரண்டு ஆனால் ஒன்று

 

   




    ம் வாழ்க்கையை நாம்  ரொம்பத்தான் சிதறடித்து வைத்திருக்கிறோம். ஒரு சில வினாடிகள்கூட நம்மால் கவனத்தை ஒரு விஷயத்தின்மீது,  ஒரே ஒரு விஷயத்தின்மீது தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து அலை மோதுகின்றன. அந்த மோதல்களில் மூழ்கி நாம் நிகழ்காலத்தை, இக்கணத்தை மறந்துவிடுகிறோம். இன்றை விட்டுவிட்டு, நாளையைப் பிடிக்க நாம் முயற்சி செய்கிறோம். இது சாத்தியமே இல்லை. ஏன்?

நேற்று ஒரு தலைவலி வந்தால், அது நேற்றோடு முடிந்து விட்டது. இன்று நமக்கிருப்பது தலைவலி பற்றிய நினைப்பு மட்டுமே. நேற்று என்பது இன்றின் நிஜமல்ல. நம் நினைவுகள்தான் நேற்றை உருவாக்குகின்றன. அல்லது, நம் நினைவுகளில்தான் நேற்று உயிர் வாழ்கிறது. எதிர்காலமும் இதைப் போன்றதுதான். அது இன்னும் வரவே இல்லை. ஆனால் அதைப் பற்றிய கற்பனையில் நாம் இந்தக் கணத்தை விட்டுவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு அடிபட்டுவிட்டால் அது வெகு விரைவில் குணமாகிவிடும். அடிபட்டுவிட்டால் மட்டுமல்ல. குழந்தைகளுக்கு உடலில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அது விரைவிலேயே சரியாகிவிடும். ஏன் தெரியுமா? ஏனென்றால் ‘ஐயோ எதிர் வீட்டுக் குழந்தைக்கு இப்படித்தானே குளிர் ஜுரம் வந்தது, பக்கத்து வீட்டுப் பாப்பாவுக்கு போன மாதம் இதே மாதிரிதானே வலிப்பு வந்தது, அது இறந்து போனதே, நாமும் அதுபோல செத்துவிடுவோமோ என்றெல்லாம் அது யோசிப்பதில்லை. ஏனெனில் அதற்கு அப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாது! குழந்தைகள் நிகழ்காலத்தில் மட்டும், இந்தக் கணத்தில் மட்டும் வாழும் இயற்கை ஞானிகள். கடந்தகாலமோ, எதிர்காலமோ அவர்களுக்குக் கிடையாது.

நாம் எதிர்பாராமல் கீழே விழ நேர்ந்தால் என்ன செய்வோம்? அதைத் தடுக்க செய்ய வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்வோம். ஆனால் ஒரு குழந்தை கீழே விழ நேர்ந்தால் அது அந்த நிகழ்வோடு ஒத்துழைக்கும் என்கிறார் ஓஷோ! அதாவது நிகழ்கணத்தில் என்ன நடந்தாலும் அதோடு குழந்தை ஒத்துழைத்துப் போகும் என்கிறார். அதனால்தான் அது விரைவிலேயே குணமடைகிறது என்பது ஒரு திறந்த பிரபஞ்ச ரகசியம்!


கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல், நாமும் நிகழ்காலத்தில், நிகழ்காலத்தோடு மட்டுமே வாழ்வோமானால், கால ஓட்டத்தில் நமக்கு உடலில் ஏற்படும் மாறுதல்கள்கூட ஏற்படாமல் போகும் வாய்ப்பு உண்டு என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா. இதை நிரூபிக்க அவர் ஒரு அருமையான உதாரணம் தருகிறார்.

மனநலக் காப்பகத்தில் நடந்தது என்ன?

முப்பத்தைந்து வயதான சிலர் மனநலக் காப்பகத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார்கள். இருபது ஆண்டுகள் சிகிச்சைக்குப்பிறகு அவர்கள் குணமடைந்து வெளியே சென்றபோது முப்பத்தைந்து வயதில் காப்பகத்தில் சேர்ந்தபோது அவர்கள் உடல்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதமே ஐம்பத்தைந்து வயதிலும் இருந்தன!

அது எப்படி சாத்தியமானது? ரொம்ப ’சிம்பிள்’. ஐயோ, நமக்கு வயதாகிவிட்டதே என்று அவர்கள் எப்போதும் ‘ஃபீல்’ பண்ணியதே இல்லை! ஏனென்றால் வயதானதோ, காலம் சென்று கொண்டிருந்ததோ அவர்களுக்குத் தெரியாது! அவர்களைப் பொறுத்தவரை மனநலக் காப்பகத்தில் சேர்ந்தபோது காலம் நின்றுவிட்டது! ஒரு குழந்தையைப் போல அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்.


இன்றில், இப்பொழுதில், இந்தக் கணத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வாழ்வதில் மிகப்பெரிய நன்மை உள்ளது. இன்னும் சொல்லப்போனால் எல்லா ஞானிகளும் நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான். எக்ஹார்ட் டாலி என்ற ஞானி 'இப்பொழுது' The Power of Now என்று ஒரு நூலே எழுதினார். மனக்கிடங்கில் கிடக்கும் குப்பைகளைக்கிளறி, கடந்தகாலம் என்ற அச்ச உலகில் வாழ்பவர்களும், கற்பனை என்ற அச்சத்தில் உருவாக்கப்படும் எதிர்காலத்தில் வாழ்பவர்களும் உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் ஆளாகி வாழ்நாளைக் குறைத்துக் கொள்பவர்கள். சித்தர்களெல்லாம் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று படித்திருக்கிறோம். அதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் நிகழ்காலத்தில், இன்றில், இப்பொழுதில் வாழ்ந்ததுதான்.

திராட்சைப் பழங்கள் இனிப்பாக உள்ளன

ஒரு கதை சொன்னால் உங்களுக்குப் புரிந்துவிடும். இந்தக் கதையை நான் என் நூலொன்றில் ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஆனாலும் இங்கே அதை திரும்பச் சொல்வதில் பயனுண்டு. அதனால் சொல்கிறேன்.

ஒரு ஞானி இறந்து கொண்டிருந்தார். சீடர்களெல்லாம் அருகில் அமர்ந்து அவர் சொல்லப் போகும் கடைசிச் செய்தியைக் குறித்துக்கொள்ள ஆவலாக இருந்தனர். அவரது பிரதான சீடன் ஒருவன் வெளியூரில் இருந்தான். தன் அம்மாவின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது என்பதை ஆதிசங்கரர் உணர்ந்து கொண்ட மாதிரி, தன் குருநாதரின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அவருக்குப் பிடித்த திராட்சைப் பழங்களை வாங்கிக்கொண்டு விரைவாக வந்து அவருக்குக் கொடுத்தான்.

அவரும் புன்னகைத்துக் கொண்டே அதை வாங்கி ஒவ்வொரு பழமாகச் சுவைக்க ஆரம்பித்தார். கடைசிச் செய்திக்காகக் காத்துக் கொண்டிருந்த சீடர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஒருவன் தயங்கித் தயங்கி, ‘குருவே நீங்கள் எங்களைவிட்டு நிரந்தரமாகப் பிரியப்போகின்ற இக்கணத்தில் எமக்காக தாங்கள் கூறும் செய்தி என்ன?’ என்று பவ்யமாகக் கேட்டே விட்டான்.

புன்னகைத்துக்கொண்டே குரு பதில் சொன்னார்: “திராட்சைப் பழங்கள் நல்ல இனிப்பாக உள்ளன”!

நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்ததனால் தனக்கிருந்த நோயையும் மீறி ஒரு மனிதன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்த ஓர் உண்மை நிகழ்ச்சிபற்றித் தனது Unconditional Life என்ற நூலில் மன-உடல் மருத்துவர் தீபக் சோப்ரா கூறுகிறார்.


நமக்கு எந்த ஒரு நோயும் உண்டாவதற்கு முன்னர் அது ஒரு வலையைத் தாண்டித்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் தீபக் சோப்ரா. அந்த வலையின் பெயர்தான் மனம்!

உதாரணமாக, உயரமான இடங்கள் என்றால் எனக்கு பயம். மேலேயிருந்து கீழே எட்டிப்பார்க்கும் போதே வைரமுத்து சொல்வதுபோல வயிற்றுக்கும், தொண்டைக்கும் வயிற்றுக்குள்ளும் மட்டுமல்ல, என் கால்களுக்குள்ளும்கூட உருவமில்லாத உருண்டைகள் உருளும், ஜிவ்வென்று ஏதோ செய்யும். வலுக்கட்டாயமாக என்னை உயரத்தில் ஏற்றிவிட்டால் என்ன ஆகும்? ஒரு பயந்தாங்கொள்ளிக்கு என்னென்ன ஆகுமோ அதெல்லாம் ஆகும். இதயத்துடிப்பு வேகமாகும். வியர்த்துக்கொட்டும். நடுக்கம் வரும். மயக்கமே வந்து நான் விழுந்து விடலாம்.

அப்படியானால் மலைமீது ட்ரெக்கிங் செய்பவர்களெல்லாம் எப்படிச் செய்கிறார்கள்? ஹிலரி, டென்சிங் எல்லாம் எப்படி சிகரம் தொட்டார்கள்? அவர்களுக்கு அது சந்தோஷம் கொடுக்கும் அனுபவம். மலையேறுவதனால் அவர்களது உடம்பில் இண்டெர்ஃபெரான், இண்டர்ல்யூகின் போன்ற வேதிப்பொருள்கள் உண்டாகி அவர்களுடைய ’இம்யூன் சிஸ்டம்’ இன்னும் கொஞ்சம் உறுதிப்படும்! நிகழ்ச்சி ஒன்றுதான். ஆனால் அது ஏற்படுத்தும் விளவு வேறு வேறு! எப்படி?

ஒரு விஷயத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், ஒருவிஷயத்தையொட்டி நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதுதான் காரணம். அதாவது நமது மனம்தான் காரணம். நாம் பயப்படும்போது இல்லாத ஒரு எதிர்காலத்தை நிகழ்காலமாக்குகிறோம். அதுதான் நடக்கிறது. 

சொர்க்கத்தையும் நரகத்தையும் மனம்தான் உருவாக்குகிறது என்ற உலகப் புகழ்பெற்ற மில்டனின் மேற்கோளில் வரும் வரிகளைப் பேசுவது யார் தெரியுமா? சாத்தான்! அதுவும் ஆண்டவனால் நரகத்துக்குள் தூக்கி எறியப்பட்ட பிறகு! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி, நரகில் எறியப்பட்ட பிறகு மனம் பற்றிய ஞானம் பிறக்கிறது சாத்தானுக்கு! ’நரகமானால் என்ன, இது மிகச்சிறந்த இடம், இங்கே கடவுளின் தொல்லை நமக்கிருக்காது! இங்கே போட்டிக்கு அவர் வரமாட்டார்! இங்கிருந்து நம்மை அவர் வேறு எங்கும் தூக்கி எறியமாட்டார்! சொர்க்கத்தில் அடிமையாக வாழ்வதைவிட, நரகத்தில் அதற்கு ராஜாவாக இருப்பது மேல்’! என்றெல்லாம் சாத்தான் தன் தோழர்களுக்கு வசனம் பேசி சமாதானப்படுத்துவான்! நம்மில் பலரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்! நமக்குத் தெரியாமலே!

நாற்பதாண்டு ஆரோக்கியத்தின் கதை

”எந்த நோயையும் குணப்படுத்தும் சக்தி வெளியில் இல்லை” என்று சொல்லும் தீபக் சோப்ரா குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு வருவோம்.

ஹெரால்டுக்கு எழுபத்தைந்து வயது. தீபக் சோப்ராவிடம் அவரை அவரது மகள் கவலையோடு அழைத்துக் கொண்டு வருகிறார். ஆனால் ஹெரால்டு எந்தக் கவலையும் பட்ட மாதிரி தெரியவில்லை. அவருடைய கடந்தகால ரத்தபரிசோதனை அறிக்கைகளைப் படித்துப்பார்த்த தீபக்சோப்ராவுக்கு திகீரென்றது. அவருடைய BUN அளவு, அதாவது ரத்தம், யூரியா, நைட்ரஜன் அளவு, 90-ல் இருந்தது. சாதாரணமாக, 10-ல்தான் இருக்க வேண்டும்! அது 90-ல் இருந்தால் எந்தெந்த உறுப்புகளெல்லாம் பாதிக்கப்படும் என்று ஒரு லிஸ்ட்டைத் தருகிறார் சோப்ரா. முக்கியமாக சிறுநீரகம் பாதிக்கப்படும். பின் கண்கள், நுரையீரல் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

“ஆனால் இது ஒன்றும் புது பிரச்சனையல்லவே” என்றார் ஹெரால்டு.

“அப்படியா? இந்தப் பிரச்சனை இருப்பது உங்களுக்கு முதலில் எப்போது தெரியவந்தது?”  என்றார் சோப்ரா.

“நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார் ஹெரால்டு.

இப்போதும் அதிர்ச்சி அடைந்தது டாக்டர் தீபக்சோப்ராதான். நாற்பது ஆண்டுகளாக ஒருவர் தன் ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகியவற்றை 90ல் வைத்துக்கொண்டு உயிர் வாழமுடியுமா? தீபக்சோப்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஹெரால்டு சொன்னது உண்மை.

இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஹெரால்டுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோதுதான் அந்த விஷயம் தெரியவந்தது. அவருடைய BUN அளவு அப்போதே 90-ஐ எட்டியிருந்தது. லீவு தருகிறோம், உடனே போய்விடு, இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் நீ உயிரோடு இருப்பாய் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷாமாக இருந்த ஹெரால்டு, ஐந்து ஆண்டுகள் கழித்தபின், அதே ராணுவ மருத்துவரைப் பார்த்து மீண்டும் அவருடைய கருத்தைக் கேட்கலாம் என்று சென்றிருக்கிறார். இடையில் நோய்க்கான எந்த அறிகுறியையும் அவரது உடல் காண்பிக்கவில்லை. ஆனால் ராணுவமுகாம் மருத்துவர் இறந்துவிட்ட தகவல் கிடைத்துத் திரும்பியிருக்கிறார்!

ஐம்பது ஐய்ம்பத்தைந்து வயதிருக்கும்போது மறுபடியும் ஒரு கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்த்திருக்கிறார். அவரைப் பரிசோதித்து அதிர்ந்து போன அந்த ஸ்பெஷலிஸ்ட், ’நீங்கள் இன்னும் மிகக்குறைந்த காலமே உயிரோடு இருக்கும் வாய்ப்பு உள்ளது’ என்று சொல்லிவிட்டு, டயாலிசிஸ் செய்யும்படி சிபாரிசு செய்திருக்கிறார்.

அதற்குப் பிறகும் வழக்கம்போல பத்தாண்டுகள் ஜாலியாக இருந்து விட்டு, அதன் பிறகு ஒரு நாள் அந்த கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அவரும் உயிருடன் இல்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது!

மூன்றாவதாக ஒரு கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்க்கச் சென்றிருக்கிறார். உடனே உங்கள் கிட்னியை மாற்ற வேண்டுமென்று அவர் கருத்து சொல்லியிருக்கிறார். அதன் காரணமாக மிகவும் பயந்து போன அவருடைய மகள், கொஞ்சநாள் கழித்து மறுபடியும் அந்த கிட்னி ஸ்பெஷலிஸ்ட்டைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவரும் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது! கடைசியாக தீபக் சோப்ராவை பார்க்க அப்பாவும் மகளும் வந்திருந்தனர்!

“மூன்று டாக்டர்கள் இறந்திருக்கின்றனர். இனி டாக்டர்களை நான் பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு நல்லது” என்று சொல்லியிருக்கிறார் ஹெரால்டு! தீபக் சோப்ரா உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்!

ஆனால் இங்கே நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது. ஒரு விஷயத்தை நாம் நம் மனதில் எப்படி போட்டுக் கொள்கிறோம் என்பதுதான் அது. நைட்ரஜன் கழிவுகள் உடலைவிட்டு வெளியேறாமல் ரத்தத்தில் சேர்ந்துகொண்டே இருந்தால் என்னாகும் என்றுதான் டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அது பொதுவான உண்மை. அதாவது ஒருவருக்கு உண்மையாக இருப்பது இன்னொருவருக்கும் உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை! ஆமாம். விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீன்கூட இப்படித்தான் சொன்னார். உண்மையென்பது பொய்தான். ஆனால் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லப்படுவதால் அது உண்மைபோல் தோன்றுகிறது என்றார் அவர். இதைத்தான் இந்தியமரபு ’மாயை’ என்ற தத்துவக் கோட்பாட்டின் மூலம் சொல்ல விழைகிறது.

பொதுவான உண்மைகளை, அல்லது பொய்களை முழு மனதோடு, எந்த உறுத்தலும் இல்லாமல் ஹெரால்டு அலட்சியம் செய்ததன் மூலம் தனக்கான உண்மையை தானே உருவாக்கிக் கொண்டார். ஆமாம். டாக்டர் சொன்ன அச்சமூட்டும் உண்மைகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று மட்டுமே அவர் யோசித்திருக்கிறார். கடந்த காலத்தையும், ஐந்து ஆண்டுகள்தான் இனி உயிர் வாழப் போகிறீர்கள் என்ற அச்சமூட்டும் எதிர்காலத்தையும் பற்றிய உண்மைகளை அவர் கணக்கில் வைக்கவே இல்லை!

இன்னொரு நூலில் தீபக் சோப்ரா நோய்கள் பற்றி அற்புதமான ஒரு உண்மையைச் சொல்கிறார். நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் என்ன என்பதை அது அழகாக விளக்குகிறது. அதோடு, நம் ஆரோக்கிய வாழ்வுக்கு அது, ’லைஃப் ப்வாய்’ சோப்பைப் போல அல்லாமல், உண்மையிலேயே வழி சொல்கிறது. எனவே அதை நாம் இப்போது பார்த்துவிடலாம்.

எல்லா நோய்களும் உடலில் தோன்றிய பின்னர் மனதிலும் தோன்றிவிடுகிறது. உதாரணமாக ஒரு காய்ச்சல் வந்துவிட்டால் உடம்புச்சூடு அதிகரித்துவிடுகிறது. உடல் தகிப்பு, நடுக்கம், வாய்க்கசப்பு ஆகியவற்றை வைத்து காய்ச்சல் வந்துவிட்டதை உணர்ந்து கொள்கிறோம். நமக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்ற நினைப்பின் மூலம் அந்தக் காய்ச்சல் நம் மனதுக்குக்குப் போகிறது. இப்போது காய்ச்சல் உடலிலும் மனதிலும் இருக்கிறது.

சிலேட்டைத் துடைப்பது மாதிரி உடம்பிலிருந்து காய்ச்சலை நாம் துடைத்து எடுக்க முடியாது. ஆனால் மனதிலிருந்து அதை அப்படி துடைத்தெடுப்பது சாத்தியம். காய்ச்சலை வைத்துக் கொண்டே காய்ச்சல் இல்லாமலிருந்தால் எப்படி நடந்து கொள்வோமோ அப்படி நடந்துகொள்ள முடியும்.

காய்ச்சலை வைத்துக்கொண்டே வேண்டுமென்றே வேறு ஒரு காரியத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம் காய்ச்சலை முற்றிலுமாக நம்மால் மறக்க முடியும். இது தானகவேகூட நிகழலாம். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த பாடல் காட்சியோ, அல்லது திரைப்படமோ டிவியில் ஓடினால் நீங்கள் உங்கள் காய்ச்சலை மறந்து அதில் லயிக்க முடியும். அல்லவா? அந்த நேரத்தில் கவனித்தீர்களென்றால், இருமல், சளி, உடல் சூட்டை உணர்தல் போன்ற காய்ச்சலின் உப தொல்லைகள் எதுவுமே ஏற்பட்டிருக்காது. அல்லது அதை முற்றிலுமாக நீங்கள் மறந்து போயிருப்பீர்கள். அதேபோன்ற காரியத்தை வேண்டுமென்றே நீங்கள் செய்வதைத்தான் ‘மறக்கின்ற ஞானம்’ என்று என் குரு குறிப்பிட்டார். அதற்காக காய்ச்சல் வந்தால் டிவி பாருங்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஏற்கனவே இருக்கும் 24 மணி நேர டிவி-சீரியல் காய்ச்சல் போதாதா!

மனதிலிருந்து ஒரு நோயை முழுமையாகத் துடைத்து எடுத்து விட்டால், அது உடலில் Sustain ஆகாது, அதனால் நிலைத்திருக்க முடியாது என்று கூறுகிறார் தீபக் சோப்ரா. அந்த மறக்கின்ற ஞானத்தைத்தான் ஹெரால்டு பயன்படுத்தி இருக்கிறார். இன்னொரு முறையில் சொல்வதானால், அவர் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழவில்லை. நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு ஏற்பட வேண்டிய பிரச்சனைகள் எதுவுமே அத்தனை ஆண்டுகளாகியும் அவருக்கு ஏற்படவே இல்லை!

நிகழ்காலத்தில் வாழ்வது ஆரோக்கியமாக வாழ்வதன் ரகசியங்களில் ஒன்று என்றே சொல்லலாம். எந்த எண்ணத்தை, எந்த உணர்ச்சியை வேண்டுமானாலும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு நமக்கு உரிமையும், அதற்கான சுதந்திரமும் இருக்கிறது. ஆனால் நாம் ஏற்றுக் கொள்ளும் அந்த எண்ணமே, அந்த உணர்ச்சியே நமக்கான உண்மையாகப் பரிணமிக்கிறது.

எனவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய எண்ணம் அல்லது உணர்ச்சி நமக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பதை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்மை செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தீமை செய்யக் கூடியதை, அதைச் சொல்பவர் எவ்வளவு படித்தவராக, தகுதிகள் மிக்கவராகவும் இருந்தாலும், நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

என் இதயத்தில் ஸ்டெத் வைத்துப் பரிசோதித்த இதயநோய் நிபுணர் மூன்று நாள்கள்தான் என்னால் உயிரோடு இருக்க முடியும் என்றும், உடனே மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். அவர் ஒரு நல்ல, அனுபவம் மிக்க மருத்துவர்தான். ஆனாலும் அவர் அச்சமூட்டும் ஜாதியைச் சேர்ந்தவர். அவர் சொன்னதை நான் காதில் மட்டும்தான் போட்டுக் கொண்டேன். மனதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் சொல்லி இன்றோடு நான்காண்டுகளுக்கும் மேலாகிவிட்டன! அவர் சொன்னதை நம்பும் அளவுக்கு நான் அச்சப்பட்டவனாக இருந்திருந்தால் இந்நேரம் என் எலும்புகள்கூட மண்ணறையில் இருந்திருக்காது!

உங்களுக்குள் கோடிக்கணக்கான தகவல்கள் சேர்ந்திருக்கலாம். ஆனால் அவைகளெல்லாம் உண்மையாகப் போகின்றனவா, பொய்யாகப் போகின்றனவா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், அவைகளின் அர்த்தம் நீங்கள்தான். அச்சம், கோபம், பொறாமை, கவலை, குழப்பம் போன்ற உணர்ச்சிகளால் ஆக்கப்பட்ட சிறையைச் செய்தது நீங்கள்தான். நீங்களே செய்த சிறையில் நீங்களே போய் உட்கார்ந்துகொண்டு உங்களை நீங்களே பூட்டிக்கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு என் நிகழ்காலம் சரியில்லை, எனக்கு ராசியில்லை, எனக்கு நல்லதே நடக்காது, எனக்கு எதிர்காலமில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டும், நம்பிக் கொண்டும் இருக்கிறீர்கள்!  நாம் விரும்பினால் நம்மால் ஆரோக்கியமாக, வெற்றியோடு வாழ முடியும் ஹெரால்டைப் போல. சிந்தித்துப் பாருங்கள்.


ஒரு கிழவரை ஒரு மிருகக் காட்சி சாலைக்கு கூட்டிட்டுப் போய் சிரிக்கும் ஹயானா என்ற மிருகத்தைக் காட்டினார்களாம். அந்த மிருகத்தை அதுவரை அவர் பார்த்ததே இல்லை. அவருக்கு அது ரொம்ப வினோதமாக இருந்தது. அந்த மிருகத்தின் தனித்தன்மைகள் பற்றி அங்கிருந்த ஒருவன் விளக்கிச் சொல்லிக்கொண்டே போனான்.

இந்த சிரிக்கும் ஹயானா ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடும், வாரத்துக்கு ஒரு முறைதான் குளிக்கும், வருஷத்துக்கு ஒரு முறைதான் தன் இணையோடு சேரும் என்றான் அந்தக் காவலாளி.

அது கேட்ட அந்தக் கிழவர் அவனிடம், “ஏனப்பா, வருஷத்துக்கு ஒரு முறைதான்  இணையோடு சேரும் என்கிறாயே, பின்னே எப்படி வருஷம் பூரா இது சிரிச்சிக்கிட்டே இருக்கு?” என்றார்!

அவர் கடந்த காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தார்! நாமும் அப்படி இருக்க வேண்டுமா? யோசியுங்கள்.

உங்கள் நம்பிக்கையே  உங்கள் எண்ணமாகிறது

உங்கள் எண்ணமே உங்கள் வார்த்தையாகிறது

உங்கள் வார்த்தையே உங்கள் செயலாகிறது

உங்கள் செயலே உங்கள்  பழக்கமாகிறது

உங்கள் பழக்கமே உங்கள் மதிப்பீடாகிறது

உங்கள் மதிப்பீடுதான் உங்கள் விதியாகிறது

என்றார் மகாத்மா காந்தி.

மகாத்மா சொன்னதோடு நான் ஒன்று சேர்த்துக்கொள்கிறேன். உங்கள் மதிப்பீடு, உங்களைப் பற்றி நீங்கள் நினைக்கும் எண்ணமே உங்கள் வியாதியாகிறது அல்லது ஆரோக்கியமாகிறது! 

தொடரும்...