மரபு மருத்துவம்: 04. மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்


 

ண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப் பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன முழுநேர மயக்கத்துடன்!

இதற்கான காரணத்தை ஆராய, மருத்துவ வல்லுநர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை; நாம் சாப்பிடும் உணவு முறையை முறைப்படுத்தினாலே போதுமானது. தவறான வாழ்க்கை முறையால் உண்டாகும் மிக முக்கியமான தொந்தரவுகளில் மலக்கட்டுக்கு முதல் இடம் கொடுக்கலாம். 

மலக்கட்டு காரணங்கள்

முதிர்ந்த வயதில், குடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் ஏற்பட்டுவந்த மலக்கட்டு பிரச்சினை, தற்போது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. காலம் தவறிய உணவு, அதிக அளவு உணவு, குறை உணவு, துரித உணவு எனப்படும் குப்பை உணவு, மசாலா சேர்த்த உணவு போன்றவை மலக்கட்டை உருவாக்குவதற்கான முக்கியமான காரணிகள்.

இயற்கை அளித்த வரப்பிரசாதங்களான காய், கனிகளைத் தவிர்ப்பது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது, அதிகமாக அசைவ உணவைச் சாப்பிடுவது போன்றவை அடுத்த வரிசை காரணங்கள்.

புகைப்பிடித்தல், மது, காபி, டீ, குளிர்பானங்களை அதிகமாக அருந்துதல், உறக்கமின்மை, வேலைப்பளுவின் காரணமாகப் போதுமான அளவுக்கு நீர் பருக மறப்பது போன்ற காரணங்கள், மலக்கட்டை உண்டாக்குவது உறுதி. 


டீ காப்பி என்பது பலரால் விரும்பி குடிக்கப்படும் ஒரு உற்சாக பானமாக திகழ்ந்து வருகிறது. அனைவரும் இதனை வீட்டிலேயே தயாரித்து குடும்பமாக பருகி வருகிறோம். அதில் இருக்கும் சாதகங்களை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிலிருக்கும் பாதகங்களை நாம் அறிந்திருக்கவில்லை. அதனை பற்றி அலசுவதே இந்த ஆடியோ 👆பதிவின் நோக்கம்.

மன அழுத்தமும் காரணம்

மன அழுத்தத்துக்கும் நோய்களின் உருவாக்கத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது ஆராய்ந்து வெளியிடப்பட்ட உண்மை. மலக்கட்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

செரிமானத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம், மன அழுத்தத்திடம் மனதைப் பறிகொடுத்துப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு உண்டாக வழி செய்கிறது.

நாட்பட்ட மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது, ஒருவருடைய குடலில் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கிறது. திருமண நிகழ்ச்சி, தேர்வு, அதிகப் பணி சுமை இருக்கும் நேரத்தில், மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மன அழுத்தத்துக்கும் மலக்கட்டுக்கும் உள்ள தொடர்பை அறுக்க, வழக்கறிஞரிடம் செல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையின் அழகை ரசித்து, மனசை உற்சாகமாக்க, தெளிவான சிந்தனை இருந்தால் போதும். 

மதுவும் மலக்கட்டும்

நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் உடைய திறமைசாலிகளுடன், மலக்கட்டும் கைகோத்துக் கொண்டு வீர நடைபோடுவதில் ஆச்சரியமில்லை. ஆல்கஹாலானது, மலத்தில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி வறட்சியாக்கி, குடல் அசைவுகளைத் தடுத்து, மலக்கட்டை உண்டாக்கிவிடுவதில் பலே கில்லாடி! 

சித்த மருத்துவம்

திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) அரை தேக்கரண்டி அளவு, தினமும் இரவு வெந்நீரில் கலந்து அருந்தலாம். திரிபலா சூரணம், மலக்கட்டை நீக்குவது மட்டுமன்றி, உடலில் தேங்கிய நச்சுகளையும் (Toxins) வெளியேற்றும் சிறப்புடையது.

தனிக் கடுக்காய் பொடி, மலைக் கிராமங்களில் முக்கிய மலமிளக்கி மருந்தாகப் பயன்பட்டு வருவது. மேலும் நிலவாகைச் சூரணம், ஏலாதி சூரணம், பொன்னாவாரைப் போன்ற சித்த மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

செரிமானத்தைத் தூண்டக்கூடிய சீரகம், மிளகு, இஞ்சி, ஓமம், பெருங்காயம் ஆகிய பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், கேரட், பூசணி, உருளை, முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டு மலக்கட்டைத் தடுக்கலாம். தினசரி நடைப்பயிற்சி செய்வதால், குடல் பகுதிகள் நன்றாகச் செயல்பட்டு மலத்தைச் சிரமமின்றி வெளியேற்றும். அப்படியும் மலம் சரியாக வெளியேறாதபோது, துணியை நீரில் நனைத்து வயிற்றுப் பகுதியில் போடலாம். 

விளக்கெண்ணெய் மகத்துவம்

தசவாயுக்களில் ஒன்றான அபானவாயு (கீழ்நோக்கிச் செலுத்தப்படும் வாயு) பாதிக்கப்படுவதால், மலக்கட்டு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். ஆமணக்கு எண்ணெய்க்கு, மலமிளக்கி செய்கையைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, அபான வாயுவைக் கட்டுப்படுத்தும் திறனையும் இருப்பதால், வாரம் ஒருமுறை அரை தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து உட்கொள்ளலாம். மலக்கட்டு இருக்கும்போது, அடிவயிற்றின் மீது விளக்கெண்ணெயைத் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கிப் போட்டால் குணமாகும். எருவாயின் உட்புறத்தில் விளக்கெண்ணெயைத் தடவ, மலம் இளகி வெளிப்படும். 

இளக்கும் கீரைகள்

பொதுவாகவே அனைத்துக் கீரை வகைகளும் மலத்தை இளக்கி வெளியேற்றும் சக்தி கொண்டவை என்பதால், தினசரி உணவில் கீரை வகைகளுக்குத் தாராளமாக அழைப்பு விடுக்கலாம்! கீரைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பது மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் உள்ளன. 

நார்ச்சத்துப் பழங்கள்

பழ வகைகளில் பப்பாளி, வாழை (3.1 கிராம் நார்ச்சத்து), கொய்யாப் பழம் (5.4 கிராம் நார்ச்சத்து), ஆப்பிள் (4.4 கிராம் நார்ச்சத்து), பேரிக்காய் (5 6 கிராம் நார்ச்சத்து) போன்ற இயற்கை அமுதங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். உலர் திராட்சைகள், உலர் அத்தி ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, இரண்டு வேளை சாப்பிட்டால் மலத்தை இளக்கும். ஆளிவிதை (Flax seeds) பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்வது மட்டுமன்றி, அதை வெளியேற்றத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் மிகவும் முக்கியம்.

நீண்ட நாட்களாகத் தொடரும் மலக்கட்டு பிரச்சினையைச் சரிசெய்யாவிட்டால் அது தோல் நோய்கள்மூலம்இதய நோய்புற்று நோய் என வேறு பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும். எனவேஅடித்தளத்தை வலுப்படுத்தாமல்மலத்தைச் சரியாக வெளியேற்றி உடலை உற்சாகப்படுத்துவோம்!

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 03. காலை நேரம் நம் கையில் இருக்கிறதா?

   


யாருடைய ஒத்துழைப்பும் இன்றித் தினமும் அதிகாலையில் உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்துகொண்டிருந்த மனித உடலின் உட்கடிகாரம் (Biological clock) இன்றைக்குப் பழுதடைந்து கிடக்கிறது. அன்றைய ‘டைம்-பீஸ்’ தொடங்கி இன்றைய செல்போன் அலாரம்வரை சூரிய உதயத்துக்கு முன் மனிதர்களை எழுப்பச் சப்தத்துடன் முயற்சித்துத் தோற்றுப் போகின்றன. கடைசியில் அலாரங்கள் மெளனித்துவிடுன்றன!

அதிகாலையிலேயே விழித்து நலமுடன் வாழ்ந்துவந்த நம் முன்னோரின் பழக்கத்தைக் கைவிட்டு, பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்துக் கொடுத்துவிட்டோம். அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய்களைப் போக்கும் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது.

வைகறை யாமம் துயிலெழுந்து’ எனத் தொடங்கும் ஆசாரக்கோவை பாடலும், ‘வைகறை துயிலெழு’ என்ற ஆத்திச்சூடியும் அதிகாலையில் விழிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இரவை பகலாக மாற்றி பின்னர் அதிகாலையில் உறக்கத்தைத் தழுவத் துடிக்கும் இன்றைய நவீன சமுதாயத்துக்கு ஆரம்பத்தில் இது சற்றே கடினமாக இருந்தாலும், பழகிவிட்டால் கிடைக்கும் பலன்களோ ஏராளம். 

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் (சூரிய உதயத்துக்கு முன்) தூக்கத்திலிருந்து எழுவதால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும். தினமும் கண்விழிக்கும் நேரத்தை, பிரம்ம முகூர்த்தமான விடியற்காலையில் தொடங்கினால், அந்த நாள் முழுவதுமே சிறப்பாக அமையும். 

புத்தி யதற்குப் பொருந்து தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் பித்தொழியும்

தாலவழி வாதவித்தந் தந்தநிலை மன்னுமதி

காலைவிழிப் பின்குணத்தைக் காண் 

என விடியற்காலையில் விழிப்பதன் நன்மைகளை விளக்கும் சித்தர் தேரையரின் பாடல், பல்வேறு அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறது.

காலையில் அதிகச் சப்தமின்றிக் காணப்படும் சூழலும், இனிமையான காற்றும், ரம்மியமான இயற்கையின் அழகு உறக்கம் கலையும் விந்தையும் மனதுக்கு ஆத்மச் சந்தோஷத்தைத் தரும். இதனால் குழப்பங்கள் இல்லாத தெளிவான மனநிலை உண்டாகும். புத்திக்குத் தெளிவை உணர்த்தும் சுத்தமான நரம்பின் துவாரத்தில் இருக்கும் நீர், கலக்கமில்லாமல் பரிசுத்தமாக இருக்கும் என்று சித்த மருத்துவ உடலியலைத் தேரையர் விளக்குகிறார். உரோதர நரம்பு (Vagus nerve) என்னும் பத்தாவது கபால நரம்பின் செயல்பாட்டை (Tenth Cranial nerve) அன்றே அவர் சுட்டிக்காட்டி இருப்பதாகக் கொள்ளலாம். உரோதர நரம்பானது, நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்பதற்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

நிலவின் தன்மையால் அதிகாலையில் பூமி குளிர்ந்திருக்கும். வளர்சிதை மாற்றங்கள், பல்வேறு செயல்பாடுகள் காரணமாக உடலில் அதிகரித்த பித்தம் இதன்மூலம் குறையும். உடலுக்கு ஆதாரமாக விளங்கும் வாத, பித்த, கபமாகிய உயிர்தாதுகள் தங்களுடைய நிலையிலிருந்து மாறும்போது நோய் உண்டாகும் என்கிறது சித்த மருத்துவத் தத்துவம். அதிகாலையில் விழிப்பதால், வாத, பித்த, கபமாகிய மூன்று உயிர்தாதுகளும் திடமாக நிலைபெற்று, நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது தேரையரின் வலியுறுத்தல்.

ஆராய்ச்சி முடிவு சொல்லும் உண்மை

அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண்ணங்கள், எளிதாகத் திருப்தியடையும் மனப்பான்மை, வாழ்வின் மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிகாலையில் எழுந்து படித்த குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிடுகிறது. இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்களுக்கு ‘சோர்வுற்ற மனநிலை’ (Depression) எனும் மனநோய் வருவதற்கான சாத்தியம், அதிகாலையில் துயில் எழுபவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் என ‘The Psychiatry and Clinical Neurosciencesஎனும் நூலில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 டெலிகிராம் முகவரிக்குச் செல்லுங்கள்.


அசதியைத் தவிர்க்க

சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுவதால், நம் அன்றாட பணிகளைக் கவனிக்கக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். உடற்பயிற்சிகள் செய்யத் தகுந்த காலமாகக் காலை வேளை அமைவதால், உடல் உறுப்புகளும் உற்சாகம் பெறும். சூரிய நமஸ்காரம் போன்ற யோகப் பயிற்சிகள் செய்ய அதிகாலை வேளையே சிறந்தது. மேலும் உடலுக்குச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் உண்டாகும்.

தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் விழிக்கும் முறையைப் பின்பற்றிவந்தால், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். அதிகாலையில் எழுவதற்கு, இரவு ஒன்பது முதல் பத்து மணிக்குள் உறங்கச் செல்வதும் அவசியம்.

கதிரவன் உதித்த பின் எழுவதால் உடலுக்கு அசதியும், சோம்பலும், மயக்கமும் ஏற்படும். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் பகலுறக்கமும் உண்டாகும். எனவே, நம் மரபணுக்களில் பதிந்திருக்கும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மீட்டெடுத்து உற்சாகமான சமூகத்தை உருவாக்குவோம்! 

காலை கண் விழித்தால் கிடைக்கும் பலன்கள்

    • நள்ளிரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணிக்கு உறங்கிவிட்டு, அதிகாலையில் கண்விழிக்க முயற்சி செய்தால் கண் எரிச்சல், தலைபாரம், சுறுசுறுப்பின்மை போன்றவை உண்டாகும். வயதைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேர இரவு உறக்கத்துக்குப் பிறகு, அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
    • தினமும் அதிகாலையில் எழுந்து மலம், சலம் கழிக்கும் பழக்கத்தை முறைப்படுத்திக்கொண்டால், ‘அபான வாயுவின்’ செயல்பாடு சீரடைந்து உடல் உபாதைகள் வராமல் தடுக்கப்படும்.
    • அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், தேவையான அளவுக்கு இளம் வெயிலை உடல் கிரகித்துக்கொள்ளும்.
    • காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி, பீனிசம் (சைனசைடிஸ்) போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளுக்குத் தொடக்கம் முதலே விடியற்காலையில் எழும் பழக்கத்தைப் பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பிற்காலத்திலும் மேம்படும்.
    • பேசாத குழந்தைகளை விரைவாகப் பேச வைக்க, அதிகாலையில் பயிற்சி கொடுப்பது கிராமங்களில் நடைமுறையிலுள்ள மரபு வைத்தியம்.
    • நினைவாற்றலை அதிகரிக்க மருந்துகளைத் தேடி அலைவதற்குப் பதிலாகத் தினசரி அதிகாலையில் கண் விழித்தால் போதும். மூளை அணுக்கள் சுறுசுறுப்படையும், நினைவுத் திறன் அதிகரிக்கும்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 02. வலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’

  



டல் வலி லேசாகத் தோன்றியதுமே, வலி நிவாரணி மருந்துகளைத் தேடிப் பெரும்பாலோரின் மனம் அல்லாடத் தொடங்கிவிடுகிறது” என்கிறது ஓர் ஆய்வு. இதுவரை தடை செய்யப்பட்ட எத்தனை வலிநிவாரணி மாத்திரைகள், நம் உடலுக்குள் நீச்சலடித்துப் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? சாதாரண உடல் வலிக்கும் சிறிய வீக்கங்களுக்கும் வலிநிவாரணி (Analgesic), வீக்கமுறுக்கி (Anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொண்டு சுய மருத்துவர்களாக மாறிவிட்ட ‘மாடர்ன்’ மக்கள், முன்னோர் பின்பற்றிய ‘ஒற்றடம்’ எனும் சிறந்த சிகிச்சையை மறந்ததன் விளைவாக, பல்வேறு பக்கவிளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது நிதர்சனம்.

ஒற்றட முறைகளைப் பற்றி சித்தர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். சித்தர்களின் ஒற்றட முறைகளும், வழக்கத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றட முறைகளும் எண்ணிலடங்காதவை.

வாத நோய்கள் தீர

கடுமையான உடல் உழைப்பு, சிறிதும் உடல் உழைப்பின்மை (Sedentary Lifestyle) போன்ற காரணிகளால் உண்டாகும் உடல் வலி மற்றும் இடுப்பு பொருத்து வலி, கழுத்து வலி ஆகியவற்றுக்கு ஒற்றட முறைகள் நல்ல பலன் கொடுக்கும். மருத்துவ எண்ணெய்களான வாத நாராயணன் தைலம், குந்திரிக தைலம், பிண்டத் தைலம் ஆகியவற்றை வலியுள்ள இடங்களில் பூசி, அதன் மேல் ஆமணக்கு, நொச்சி, தழுதாழை போன்ற இலைகளைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.

ஓமம், முடக்கறுத்தான் இலையைக் கொண்டு செய்யப்படும் ஒற்றடம் வாத நோயாளிகளுக்கு உகந்தது. பிரம்மி இலை ஒற்றடம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

ஒற்றடம் கொடுப்பதால் உண்டாகும் வெப்பத்தால், குருதிக்குழல் விரிவாக்கம் (Vasodilation) நடைபெற்று, தடைபட்ட ரத்த ஓட்டம் அதிகரித்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்கிய நச்சுப்பொருட்களும் விரைவாக வெளியேற்றப்படுகின்றன.

கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும்

மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சைத் துண்டு ஆகியவற்றை ஒரு துணியில் முடிந்துகொண்டு, சூடேறிய நல்லெண்ணெயில் மூழ்கவிட்டு, சூடு குறைந்த பின் அடிபட்ட வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்க, வலியின் தாக்கம் படிப்படியாகக் குறையும். இன்றும் மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் உடல் வேதனையைக் குறைக்க, வண்ண வண்ண மாத்திரைகளைத் தேடாமல், உப்பைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கும் மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். நோயின்றி வாழ, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொண்டு, ஒற்றடம் கொடுப்பதற்கு மட்டும் உப்பின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

பழங்காலத்தில் போர்களின்போது, வீரர்களுக்குக் காயங்களால் ஏற்பட்ட வீக்கங்கள் மற்றும் வேதனையைக் குணமாக்க, ஒற்றட முறைகள் அதிக அளவில் முதலுதவி சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

வெந்நீர் ஒற்றடம்

கம்பளித்துணி அல்லது காடாத்துணியை கொதிக்கும் வெந்நீரில் நனைத்து, பின் நீரைப் பிழிந்துவிட்டு, வலியுள்ள இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கவும் இம்முறையைப் பயன்படுத்தலாம். பொதுவாக வெந்நீர் ஒற்றடம் கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும் சிறந்தது. அதற்காக, எலும்பு முறிவால் உண்டான வீக்கத்தை ஒற்றட முறைகளால் சரி செய்துவிடலாம் என்பது அறியாமை. பொதுவாக ஒரு வீக்கமோ, கட்டியோ நீண்ட நாட்கள் தொடரும்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் முக்கியம். 

கபநோய்கள் மறைய

மார்புச் சளி, இருமல் போன்ற கபநோய்கள் நீங்க, நெஞ்சுப் பகுதியில் கற்பூராதி தைலத்தைத் தடவி, செங்கற்பொடி அல்லது சுண்ணாம்பு காரைத்தூள் (அ) கோதுமைத் தவிடு ஆகியவற்றால் ஒற்றடம் கொடுக்க நோய் குணமாகும். நெஞ்சில் கட்டிய கோழையை வெளியேற்ற, அரிசித் தவிடு ஒற்றடமும் கற்பூரவல்லி இலை ஒற்றடமும் உதவும். 

முள் தைத்த காயத்துக்கு

முட்கள் அல்லது கூரிய கற்கள் பாதங்களில் குத்துவதால் உண்டாகும் காயத்துக்கு, குத்திய பொருளை நீக்கிய பின், காயம்பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவி, எருமை சாணத்தைச் சூடேற்றித் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்க விரைவில் காயம் காணாமல் போகும் என்கிறார்கள் கிராம மக்கள்.  ‘உப்பு நல்லெண்ணெய்’ ஒற்றடமும் இதற்குப் பயன் அளிக்கும்.

சில நோய்களுக்கு

வயிற்று வலி குறைய, ஆமணக்கு விதையால் ஒற்றடம் கொடுப்பது நல்லது. சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுவலியைப் போக்க ஆமணக்கு இலை, வெற்றிலையை வதக்கி வயிற்றுப் பகுதியில் ஒற்றடம் கொடுக்கலாம்.

உடலைத் தேற்றுவதற்காக முட்டையைச் சாப்பிட்ட பின், அதன் ஓட்டை தூக்கி எறியாமல், ஓட்டை கருக்கிய சாம்பலைக்கொண்டு ஒற்றடம் கொடுக்க வாத, கப நோய்கள், சில வகையான காய்ச்சல்களும் நீங்கும்.

புளி, பூண்டு, உப்பு சேர்ந்த ஒற்றடக் கலவை மூட்டு வலிகளுக்குச் சிறந்தது.

மணலை லேசாக வறுத்து, துணியில் முடிந்து இசிவுகளுக்கும் வலிகளுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம்.

புளியங்கொட்டையில் சிறிது நீர் விட்டு அரைத்துப் பசைபோலச் செய்து, துணியில் முடித்து ஒற்றடம் கொடுக்க ரத்தக் கட்டுகள் மறையும்.

பயன்படும் பொருட்கள்

வாத நாராயணன் இலை, வேப்பிலை, எருக்க இலை, துளசி இலை, துத்தி இலை, புளிய இலை போன்ற மூலிகைகளையும் பயன்படுத்தலாம். ஒற்றடத்துக்குத் தேவையான சூட்டை நீண்ட நேரம் நிலைக்கச் செய்யும் பொருட்களான அரிசி தவிடு, உப்பு, கொள்ளு மாவு, ஓமம், நெல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இலைகளை வதக்க ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம். 

ஒற்றட ‘பேக்

மேலே குறிப்பிட்ட மூலிகைகளை உலரவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் வதக்கி, துணியில் முடிந்து பயன்படுத்தும் வகையில் ரெடிமேடாக, சில ஒற்றட ‘பேக்’குகளைத் தயார் செய்துகொள்ளலாம் (Dry packs). அல்லது இலைகளைப் பச்சையாக, அவ்வப்போதுத் தாவரங்களிலிருந்து எடுத்து, துண்டு துண்டாக நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி, பின் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்கப் பயன்படுத்தலாம்.

உடலில் ஏற்படும் வலியானது, செயற்கையான ‘சிந்தடிக்’ மருந்துகளால் குறையாமல் போகலாம். ஆனால், அன்பு உறவுகள் அளிக்கும் இதமான இயற்கை ஒற்றடத்தால் நிச்சயம் குறையும் என்பது உளவியல் உண்மை.

ஒற்றடம்: கவனிக்க வேண்டியவை

    • லேசான தலைவலிகளுக்கு, நம் உள்ளங்கையைக் கொண்டு (உள்ளங்கை ஒற்றடம்) நெற்றி மற்றும் தலைப் பகுதியில் தடவும்போது உண்டாகும் இதமான வெப்பமும் நிச்சயம் நிவாரணம் அளிக்கும்.
    • ரத்தக்கட்டுகள் குறையவும், வலியின் தீவிரம் குறையவும், மூட்டுகளின் இயக்கங்கள் சிறப்படையவும் ஒற்றட முறைகளைப் பின்பற்றலாம்.
    • நாட்பட்ட புண்கள், உணர்ச்சியற்ற தோல் பகுதி, புற்று கட்டி ஆகியவற்றில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
    • அதிகமான சூட்டில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒற்றடச் சூட்டின் காரணமாகத் தோலில் ஏதேனும் பாதிப்பு உண்டானால், அவ்விடத்தில் தடவத் தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வு.
    • சித்த மருத்துவத்தில் உள்ள குங்கிலிய வெண்ணெய் எனும் களிம்பையும் பயன்படுத்தலாம்.
    • ஒற்றட முறைகள் மற்றும் ஒற்றடத்துக்குப் பயன்படும் மூலிகைகள் பற்றி அறிந்துகொள்ள அருகிலுள்ள அரசு அல்லது பதிவு பெற்ற சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை அணுகலாம்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 01. நல்லது செய்யும் ‘ஆவி’

 



மிழ் சினிமாவில் பேய்கள் ஆட்சி செலுத்தும் காலம் இது. இந்த நிலையில் ஆவி பிடித்தல் என்று சொன்னால், உடனடியாக எந்த ஆவியைப் பிடிக்க வேண்டும்? அது நல்ல ஆவியா, கெட்ட ஆவியா என்பது போன்ற கேள்விகள் எழலாம். மருத்துவரீதியில் ‘ஆவி பிடிப்பதுஎன்னும் சிகிச்சை முறை, நிச்சயம் உடலுக்கு நல்லதே செய்யும். கிட்டத்தட்ட செலவில்லாத, வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய, உடல்நல சிகிச்சை இது. 

ஏழைகளின் மருந்து

அதிலும் குறிப்பாக வியர்வையின் சுவை உப்பா, இனிப்பா என்று தெரியாத, உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத ‘ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்’ அத்தியாவசியமான சிகிச்சை. முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு ஆவி பிடித்து, அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீரை, வியர்வையின் மூலம் வெளியேற்றி குணம் பெறலாம். வேது பிடித்து நோய்களை விரட்டும் முறை, இன்றைக்கும் கிராம மக்களிடையே இருக்கிறது.

பொதுவாக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களும், குளிர்காலத்தில் மாதம் இரண்டு முறை, வெயில் காலத்தில் மாதம் ஒரு முறை சுத்தமான நீரில் வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

“இருமல், தும்மலுக்குப் போய் யாராவது பயப்படுவாங்களா? துளசி இல, ரெண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பப் பூவ சுடுதண்ணில போட்டு, கம்பளில உடம்பு முழுசாப் போத்தி, ஆவி புடிச்சி பாரு, இருமலும் தும்மலும் தெறிச்சி ஓடிடும்!” என்று இயற்கை மருத்துவக் குறிப்புகளை சட் சட்டென்று அன்றைய தாய்மார்கள் வழங்கிவந்தார்கள். ஆனால் இன்றைக்கு, சாதாரண இருமலுக்கும் தும்மலுக்கும்கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ‘ஆன்ட்டிபயாடிக்’ மருந்துகளைத் தேடி, பலரும் மருந்தகங்களில் தஞ்சமடைவதைப் பார்க்கிறோம்.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வேது முறைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர சில எளிய குறிப்புகள்... 

கப நோய்களுக்கு

உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல் தொல்லைப்படுத்தும்போது கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடித்தால் மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி உலா வரும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுபவர்கள், இந்த முறையை தாராளமாகப் பின்பற்றலாம்.

மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ‘வாலடைல் ஆயில்’ (Volatile oil), சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும் (Expectorant action) செயலைச் செய்கின்றன.

தலையில் நீர்க்கோத்துக் கொண்டு தலை பாரத்தையும், வலியையும் கொடுக்கும் நீர்க்கோவை நோயைப் போக்க எலுமிச்சை விதையையும், மஞ்சள் பொடியையும் நீரில் கலந்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலை பாரம் நீங்கும்.

சித்தர்களின் சூத்திரம்

யமக வெண்பாவில்வேது பிடிக்கும் முறை பற்றி சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். ‘அரிசனை நொச்சிவெடி யட்டறல் செங்கல்லே’ என்ற வரி வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் சாம்பிராணிக்கு ‘கிருமிநாசினி’ (Anti-microbial) பண்பும், வீக்கமுறுக்கி (Anti-inflammatory) தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வேது பிடிக்கும் நீரில் செங்கல் சேர்த்துப் பயன்படுத்துவதால், நீரின் சூடு நீண்ட நேரம் நிலைத்திருப்பது மட்டுமன்றி, பல வகையான நீர்ப் பிணிகள் நீங்கும்.

தைல மர வேது

தைல மர இலைகளைச் சேர்த்துச் செய்யப்படும் வேது முறையால், நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் அழியும். தைல மர இலைகளுக்கு, தசை இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால் (Anti-spasmodic action), சுவாசப் பாதையில் உண்டான இறுக்கம் தளர்வடையும். இதில் உள்ள ‘சினியோல்’ (Cineole) எனும் வேதிப்பொருளுக்குக் கோழையை அகற்றும் தன்மை உண்டு.

வாத நோய்களை விரட்ட

உடல் வலி, தொல்லை தரும் வாயு நீங்க, அலமாரி டப்பாக்களில் குவிந்து கிடக்கும் வலி நிவாரணி மருந்துகளை ‘படக்’ என்று எடுத்து விழுங்காமல், சூடேற்றிய நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, நிறைய உப்பு சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை உடலில் படுமாறு செய்யலாம். வாத நோய்கள் நீங்க ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து, அந்த ஆவியை முகரலாம்.

உடல் முழுவதும் வியர்வை பிடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகும்.

சருமம் மிளிர

ஆவி பிடிப்பதன் மூலம், தோலில் உள்ள அடைபட்ட துவாரங்கள் திறக்கப்பட்டு, கழிவு வெளியேறி உடலின் வெப்பநிலை சீரடையும். கழிவு நீக்கப்படுவதால், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மிதமான வெந்நீரில் ரோஜா இதழ்களையும், சந்தன பொடியையும் கலந்து வேது பிடித்துவர முகப்பருவின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, முகம் பொலிவடையும். தலை, முகம் மட்டுமன்றி, உடல் முழுவதும் வியர்வை பிடிப்பதால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தம் அகன்று, தேகம் புத்துயிர்ப் பெறும். 

வேது பிடிக்கக்கூடாதவர்கள்

வறண்ட தேகம் கொண்டவர்கள், சொரியாஸிஸ், கரப்பான், படை போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த மிகைஅழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், காமாலை நோய்க்கு ஆட்பட்டவர்கள் வேது பிடிக்கக்கூடாது. பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் வேது பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!