Showing posts with label Placebo. Show all posts
Showing posts with label Placebo. Show all posts

ப்ளேசிபோ விளைவு (Placebo effect) Vs நோசிபோ விளைவு (Nocebo effect)




ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) 





“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!.... 
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே 
முயற்சிகள் புரிவேன்….” 

- மகாகவி பாரதியார் 

    டைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

    இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.

ப்ளேசிபோ என்றால் என்ன? 

    ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!

    பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

    இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

    இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.

    தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.

    வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது. 

ஆனால் நடந்தது என்ன?

    இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.

    இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!

    வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!

    சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

    ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.

    விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!

    பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

    இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.

    மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.

    கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன. உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கை மாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!

    ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். "வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.

    எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

    ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும்போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.

    ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது! ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!

   நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்

    இப்போது புரிகிறதா எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இவ்வளவு வாடிக்கையாளர்கள் என்று? எல்லாம் ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) இன் மகிமைதான்.
 

இந்த பதிவை வாசிக்க இங்கு 👇 செல்லவும் 

    
ஒரு குட்டிக் கதை...
 
    ஒரு விமானப் பயணத்தின்போது, 60 வயது முதியவர் ஒருவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் மனைவி பதறிப் போனார். செய்வதறியாது தவித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு மத்தியில், ஒருவர் எழுந்தார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக் கொண்டு முதியவருக்கு அருகில் சென்றார். சோதித்துப் பார்த்து விட்டு தன்னிடம் இதற்கு மருந்து கையிலேயே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுத்தினார். குப்பியிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துக்கொடுத்து உடனே தண்ணீர் இல்லாமல் விழுங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். முதியவரும் பதறியபடி அதை விழுங்கினார். பத்து நிமிடத்தில் அவருக்குக் குப்பென்று வியர்த்தது. நெஞ்சு வழி நின்றிருந்தது. அந்த மருத்துவருக்கு அவர் நன்றி சொல்ல, எல்லோரும் கரவொலி எழுப்பினர். அந்த முதியவரின் மனைவி மருத்துவரிடம் வந்து தனியாக நன்றி கூறினார். அந்த மாத்திரைக்கு ஏதேனும் பணம் தர வேண்டுமா என்று வினவினார்.

    புன்முறுவலுடன் மருத்துவர், “அதெல்லாம் வேண்டாம். இது சாதாரண வைட்டமின் மாத்திரைதான். நெஞ்சு வலி மாத்திரை எல்லாம் இல்லை” என்று கூற முதியவரின் மனைவிக்கு அதிர்ச்சி.

    பெரும்பாலோனருக்கு இவ்வகை அபாயத்தின் போது நம்பிக்கை ஏற்பட்டாலே போதும், பாதி வியாதி ஓடிவிடும். நோய் பாதி என்றாலும், மீதி பாதிப்பிற்கு பதற்றமும், பயமும்தான் காரணம். உங்கள் கணவருக்கும் அதே பிரச்னைதான். நான் செய்தது முதலுதவி போலதான். ஊருக்குச் சென்றவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று முடித்தார் மருத்துவர். 

    இந்தக் கதையின் நம்பகத்தன்மை, மருத்துவ தர்க்கம் படி இது சரியா, இப்படி எல்லாம் நடக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. ஆபத்தின் போது பதற்றமும் பயமும் வேண்டாம் என்ற செய்தியைச் சொல்ல மட்டுமே இந்தக் கதை பேசப்படுகிறது. சரி, இங்கே எதற்கு இந்தக் கதை?

    அந்த முதியவருக்கு அளிக்கப்பட்ட அந்தச் சாதாரண வைட்டமின் மாத்திரை ஒரு பிளாசிபோ போலதான். ஒரு நோய்க்கான மாத்திரையாக அளிக்கப்படும் இது உண்மையில் அந்த நோய்க்குத் தொடர்புடையதே அல்ல. நோயாளியின் மனத்திருப்தி, நாம் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நமக்கு எந்த பாதிப்பும் இனி வராது என்ற நம்பிக்கையை விதைக்க மட்டுமே இது பயன்படுகிறது. பிளாசிபோ மாத்திரைகள் மட்டுமில்லை, டானிக் மருந்துகள் கூட இருக்கின்றன. இவ்வகை பிளாசிபோ மருந்துகளால் ஏற்படும் இந்த வகை பாசிட்டிவ் தாக்கத்தைத் தான் பிளாசிபோ எஃபக்ட் (Placebo Effect) என்கிறார்கள். இதன் மூலம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

இந்த முறை வெற்றியா?

    பொதுவாக, “டாக்டர் நைட் தூக்கமே வர்றதில்லை. ஏதாவது மாத்திரை குடுங்களேன்” என்று மருத்துவரிடமே நச்சரிப்பவர்களுக்கு, மருத்துவர்கள் ஒரு சில சமயம் பரிந்துரைப்பது பிளாசிபோ வகை மாத்திரைகளைத்தான். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் இதில் எந்த வகை மருந்தும் கலந்திருக்க மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும் வராது. அவர்களும் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நிச்சயம் தூக்கம் வந்துவிடும் என்று படுப்பதால்  தூக்கமும் வந்து விடும். உங்கள் மூளை ’இது சரியான மருத்துவம், உன்னை நீ சரி செய்துகொள்’ என்று உடலுக்குக் கட்டளையிட்டு விட்டால் போதும், உங்கள் உடல் தானாகவே சரி ஆகிவிடும். இதனாலே பிளாசிபோ வகை மருத்துவ முறை உளவியல் சார்ந்ததாகி விடுகிறது. இந்தக் கட்டுரை பிளாசிபோ வகை மருத்துவத்தைக் குறித்து விளக்க மட்டுமே.

    நன்றி - விகடன்

  

நோசிபோ எபெக்ட் (Nocebo effect) 

.


மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. வியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனது

 – டேவ் லினிகர்

    னோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

    18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்கு “நான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் ‘நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். 

    கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள். 

    இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

    அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம் ‘நீ சீக்கிரமே சாகப் போகிறாய்’ என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார். 

    டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்‌ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்‌ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.

    வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறுநாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்‌ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்கு ‘செட்-அப்’ செய்து போட்டிருந்தார் டாக்டர்.

    இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.

    இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.

    இதய நோய் வந்துவிட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!

    சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரை “வழி அனுப்பி” வைத்தது.

    இப்படி “நாள் குறித்துஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.

    இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.

    டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.


இந்த புத்தகத்தை வாசிக்க 👇


    ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மை – மனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!

நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்