Showing posts with label தூக்கம் எங்கே போனது?. Show all posts
Showing posts with label தூக்கம் எங்கே போனது?. Show all posts

மரபு மருத்துவம்: 10. தூக்கம் எங்கே போனது?

 


ற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக, மீதமான பழைய உணவு குளிர்பதனப் பெட்டிக்குள்ளும், பிறகு நம் இரைப்பைக்குள்ளும்தான் அடிக்கடி தஞ்சமடைகிறது. ஆழ்ந்து யோசித்தால், மீந்த உணவுப் பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கழனிப் பானையாக நம் இரைப்பை மாறியிருப்பதை உணரலாம். 

அமுதெனினும் வேண்டாம்

நோய் நம்மை நெருங்காமல் இருக்க, ‘முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது சித்த மருத்துவர் தேரையரின் கூற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாக கூறப்படும் ‘திரிகடுகம்’ எனும் நூலும், பழைய உணவை சாப்பிடாமல், நாள்தோறும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

பணிச் சுமை, நேரமின்மை, அவசர வாழ்க்கை என செயற்கை காரணங்களுக்காக நேற்றைய உணவை பத்திரமாகப் பாதுகாத்து இன்று சாப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பழக்கம் தொடரும்போது வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, தோல் நோய், வாந்தி என பல்வேறு நோய்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுதுளி பெருவெள்ளமாய், நஞ்சானது நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாளடைவில் பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும். 

மாறுபடும் இயற்கைத் தன்மை

‘நேற்றைய உணவை இன்று சூடேற்றித்தானே சாப்பிடுகிறோம், அதில் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடுகின்றன, வேறு என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என்பதே பெரும்பாலோரின் கேள்வி. ஆனால், பாதிப்பு உறுதியாக இருக்கிறது என்பதே இதற்கு பதில்.

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நோய் தீர்க்கும் குணம் உண்டு. ஒரு உணவுப் பொருளின் சுவை, தன்மை, ஆயுட்காலம், சமைக்கப்படும் முறை, செரிமானத்துக்கு பின், அதில் உண்டாகும் மாறுபாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, அதன் நோய் போக்கும் தன்மை அமையும்.

அதிகமாகச் சூடேற்றி அல்லது குளிர்மைப்படுத்தி, ஒரு உணவுப் பொருளை அதன் இயற்கை தன்மையிலிருந்து மாற்றும்போது, அதன் நோய் தீர்க்கும் பண்பும் மாறுபட்டு, நோய் உண்டாக்கும் காரணியாகிவிடும். அரிசியை அதிகக் கொதியில் சமைக்கும்போது குழைந்தோ, நசிந்தோ இயற்கை குணத்திலிருந்து மாறுபடுகிறது. அதைப்போல, ஒரு உணவை ஒரு முறை சமைத்து மறுநாள் சூடேற்றும்போது, உணவின் இயற்கைத் தன்மை மாறுபடும். அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழிந்துவிடுமா என்றால், அதுவும் இல்லை. 

பதப்படுத்தப்பட்ட உணவு

இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் காரணமாக காலையில் சமைத்த சில வகை உணவு, அடுத்த வேளையே கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதை மறுநாள்வரை வைத்திருந்து சாப்பிடுவது உகந்ததல்ல. குளிர்பதன வசதி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை (Canned and Tinned foods) முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தினமும் கிடைக்கும் கீரை, காய்களால் தயாரிக்கப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் நஞ்சு உண்டாவதற்கான சாத்தியம் மிக அதிகம். ‘சில நிமிடங்களில் ரெடி’ என விளம்பரப்படுத்தப்படும் சிற்றுண்டி வகைகளையும், அடைக்கப்பட்ட ‘ரெடிமேட்’ சூப் ரகங்களையும் சாப்பிடும்போது உடலில் அடிக்கடி விஷ உணவு அறிகுறிகள் உண்டாவது கவனத்துக்குரியது. 

விபரீதமாகும் பழைய அசைவம்

சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.

மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் (Mycotoxins), பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம்.

பழைய மீன் குழம்பு சுவையானது என்பதற்காக, ஒருவாரம்வரை வைத்திருந்துப் பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.  


தேவையின்போது மட்டும்

வாரம் ஒரு முறையாவது உணவகங்களில் சாப்பிடப் பழகிவிட்ட மேல்தட்டுக் குடும்பங்கள், சுகாதாரமான மற்றும் நம்பகமான உணவகங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இருக்கும்போது மட்டும் உணவகங்களை நாடிச் செல்வது உசிதம். பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே போதுமான அளவு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. வீட்டிலேயே சமைக்கப்படும் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்கின்றன, அவற்றின் பயன்கள் என்ன என்பதை உணர்ந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றன உளவியல் ஆய்வுகள். இதுவே நமது உணவுக் கலாசாரத்தின் பெருமை. அதை விடுத்து உணவகங்களில் சாப்பிடும் உணவில் என்ன கூறுகள் சேர்கின்றன என்பது தெரியாமல், வயிற்றுக்குள் அனுப்புவது திருப்திகரமான, முழுமையான உணவாக மாறாது.

நோய்களின் தொடக்கப் புள்ளி

சமைத்து பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து பின்பு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவு, வயிற்றில் ஆமத்தை உண்டாக்கி பலவித நோய்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது சித்த மருத்துவம். பழைய உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது, செரிமான ஆற்றல் பாதிக்கப்படும். உணவைச் செரிப்பதற்கு தேவையான செரிமான அக்கினி (Digestive fire), கெட்டுப் போன உணவில் விஷமாக்கினியாக மாறாமல் இருக்க, தினமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.

நசிந்த பழைய உணவை உட்கொள்ளும்போது, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால் விஷ உணவின் அறிகுறிகளான (Food poisoning) வாந்தி, சுரம், பேதி, மயக்கம் போன்றவை உண்டாகும். 

சேமிப்புக் கிடங்கு அல்ல

அறிவியல் வளர்ச்சியான குளிர்பதனப் பெட்டியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதையே உணவின் சேமிப்புக் கிடங்காக நெடு நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை.

சாப்பிடத் தகுந்த ஒரே பழைய உணவு எதுவென்றால், இரவில் சாதத்தோடு நீர் சேர்த்து, மறுநாள் காலையில் நலம் பயக்கும் பாக்டீரியாவுடன் உண்ணத் தயாராக இருக்கும் ‘நீராகாரம்’ மட்டுமே. தேவைக்குப் போக மீந்த உணவை குளிர் பதனப் பெட்டியில் அடைத்து வைக்காமல், பசியால் வாடுபவர்களுக்கு அன்றே தானம் செய்யலாம். அதிகளவில் மீந்த உணவைப் பெற்றுக்கொள்ள நிறைய தொண்டு நிறுவனங்களும் உள்ளன. 

ஆயுட்கால நிர்ணயம்

கம்பு, சோளம், நெல் வகைகள் போன்ற மூலப்பொருட்களை பதனப்படுத்தும் முறைகள் நம் பாரம்பரியத்தில் அதிகம். ஆனால் சமைக்கப்பட்ட உணவை நீண்ட நாட்கள் பதனப்படுத்திப் பயன்படுத்துவது, நமது பாரம்பரிய உணவு முறைக்கு எதிரானதே. நாம் சாப்பிடும் உணவின் ஆயுட்காலத்தை தரநிர்ணயம் செய்தால், உணவு நமது ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்யும். வயிற்றின் மென்தசைகளுக்கும், அதன் செரிமானச் சுரப்புகளுக்கும் கெட்டுப் போன கழிவு உணவுக்குப் பதிலாக, புதிதாகச் சமைத்த உணவைப் பரிசளித்தால் உடல்நலமும் புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறும்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 09. தூக்கம் எங்கே போனது?

 



சைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டுஇரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது. 

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறைகளும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி. 

இரவின் கொடை ‘மெலடோனின்

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன. 

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன. 

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம். 

சிகிச்சை

    • அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.
    • சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
    • பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ளலாம்.
    • திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
    • அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.
    • மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.
    • எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.
    • மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
    • மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.
    • தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும். 

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!